VNE 45(5)

அந்த உணர்வுகளை தள்ளி நிறுத்தியவன், அவளை புன்னகையோடு பார்த்தான். இப்போது இந்த உணர்வுகளை வளர விட்டால், அது சரி வராது என்று எண்ணிக் கொண்டான்.

“தள்ளி நில்லு ஷ்யாம்…” என்று அவள் தள்ளி நிறுத்த முயல,

“ம்ம்ம்… ஓகே மிசஸ் ஷ்யாம்….” என்றவன், அவளது கன்னத்தில் முத்தமிட்டு, “இது மிசஸ் ஷ்யாம்ன்னு நீ சொன்னதுக்கு…” என்று கூற, அவள் ஒரு கன்னத்தை பற்றிக் கொண்டு அவனைப் பார்த்து முறைக்க, அவனோ, அவள் புறம் மீண்டும் குனிந்தவன்,

“இது காலைலருந்து என்னை திட்டினதுக்கு…” என்று இன்னொரு கன்னத்தை நறுக்கென்று கடித்து வைக்க, அவள் கத்த முயன்று அடக்கிக் கொண்டாள்.

கடித்த இடத்தை பற்றியபடியிருந்த அவளது கையை விலக்கி, மீண்டும் அதே இடத்தில் முத்தமிட்டு, “இது, எவ்வளவு கோபமா இருந்தாலும் எனக்காக பார்க்கற என்னோட ஸ்வீட்டிக்கு…” என்று கூற, அவனை முறைத்தாள்.

“போதும்… இதுக்கெல்லாம் மயங்கற ஆள் நானில்லை…” என்று இறுக்கமாக கூறிவிட்டு போக முயல,

“வேறேதுக்குடி மயங்குவ?” என்று சிரித்தான் ஷ்யாம்.
“ம்ம்ம்ம்…” என்று கடுப்பாக அவனிடம் துண்டைக் கொடுத்தவள், “நீ வா… நான் போறேன்…” என்றவள், கார்த்திக்கின் இரவு உடை ஒன்றையும் கொடுக்க,

“சொல்ல மாட்ட?” என்று அவன் கேட்க,

“நீ என்னடா கேட்டகரி? ஒருத்தனை அப்படி போட்டு அடிச்சுட்டு, இப்ப என்னை கிஸ் பண்ணிட்டு இருக்க? உன்னால எப்படி இப்படி மாற முடியுது?” என்று ஆற்றாமையோடு கேட்க, அவளை மொத்தமாக தன்னுடைய கைகளுக்குள் கொண்டு வந்தவன், அவளது முகத்தைப் பற்றி, உதட்டோரத்தில் மென்மையாக முத்தமிட்டவன்,

“எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் நீ கூட இருந்தா அப்படியே காணாம போய்டறேன் மஹா…” என்றவனை ஆழமாக பார்த்தாள்.

அவனிடம் ஒன்ற முடியவில்லை. அவனுக்கு தான் ஆறுதலாக இருக்கலாம். ஆனால் அவனது நெருக்கம் அவளுக்கு முள்ளாக உறுத்தியது. விட்டு விலக சொன்னது.

“சரி… சீக்கிரமா சாப்பிட வா…” என்றபடி அவனை விலக்கிவிட்டு வெளியேறினாள்.

டிபனை உண்ணும் போது கூட வார்த்தைகள் அதிகமாக இல்லை. எல்லாரும் இரவு உணவை முன்னரே முடித்திருக்க, இவன் தான் கடைசி. ஜோதிதான் அவ்வப்போது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார். திருமணம் நிச்சயமானதிற்கு பின் பெண் வீட்டில் தங்குவதை எல்லாம் இரண்டு வீட்டிலுமே பெரிதாக நினைத்துக் கொள்ளவில்லை.

முன்னமே பழக்கம் என்பதோடு, இப்போதைக்கு ஷ்யாமை தனியாக விட வேண்டாம் என்று கார்த்திக் கறாராக கூறியிருந்தான்.

அதோடு கூடவே அமர்ந்துகொண்டு தங்கையை ஏவிக் கொண்டே இருக்க, அவள் தமையனை முறைத்தபடியே செய்ய, ஷ்யாம் தான் சிரித்தபடியே உண்டான்.

உணவை முடித்தவன், “கார்த்திக் கொஞ்ச நேரம் மொட்டை மாடில இருக்கேன்… முடிஞ்சா எனக்கு பெட்ஷீட் தலைகாணி மட்டும் தாயேன்… அங்கேயே படுத்துக்கறேன்…” எனவும்,

“ஏன்? ரூம்ல ஏசில படுக்கலாமே?”

“இல்ல மச்சான்… எனக்கு பிடிக்கும்…” என்றவன், மஹாவை பார்த்து புருவத்தை உயர்த்தி சிரிக்க,

“நைட் முழுக்க ஆந்தையாட்டம் முழிச்சுட்டு இருக்கவன் எங்க படுத்தா என்ன கார்த்திண்ணா?” என்று இடித்தாள் மஹா.

சிரித்த கார்த்திக், “ஓகே… நானும் அங்கேயே படுத்துக்கறேன்… கொஞ்சம் வெய்ட் பண்ணு ஷ்யாம்… அங்க ஷிப்ட் பண்றேன்…” என்றவன் அவனறை நோக்கி போக, ஷ்யாம் மொட்டை மாடியை தஞ்சமடைந்தான்.

கார்த்திக் வலுகட்டாயமாக அவனது தனிமையை தவிர்ப்பது புரிந்தது. தனித்து விடக் கூடாது என்று அவன் எண்ணுவது புரிந்தது.

சிலுசிலுவென வீசிய காற்று அவனது மனதை குளிர வைக்கவில்லை. காய்ந்த நிலவும் அவனை குளிர வைக்கவில்லை. கடற்காற்று குளிர்ந்தது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மொட்டை மாடியில் படுப்பது அவனுக்கு பிடித்த ஒன்று!

அவன் முன்பு காய்ச்சிய பாலை நீட்டினாள் மஹா.

புன்னகைத்தான்!

வாங்கியவன், அந்த தனிமையை அனுபவித்துக் கொண்டு, பாலை அருந்தியபடி, “கேக்க வந்ததை கேளு…” என்று கூற,

“நீ நிஜமா மனுஷனா ஷ்யாம்?” அவனை பார்த்தபடி கேட்க, அவன் யோசித்தான்.

“என்ன?” என்று கேட்க,

“ஒரு மனுஷன் செய்யக் கூடிய காரியத்தையா அந்த விஜிக்கு நீ செஞ்ச?”

அவனது மனதை கேட்டுப் பார்த்தான். தவறே இல்லை என்றது.

“விஜி செய்த காரியத்துக்கு அவனுக்கான தண்டனை…” என்று அவன் முடிக்க பார்க்க,

“நீ யார் அவனுக்கு தண்டனை கொடுக்க?”

“நான் கொடுக்காம வேற யார் கொடுப்பாங்க?”

“அதை பார்த்துக்க சட்டமும், போலீசும் இருக்கு… நீ இப்படி பண்ணலாமா?

“என்ன அப்படி பண்ணிட்டேன்?” என்று ஒன்றுமே இல்லாதது போல கேட்டு வைக்க,

“நீ பண்ணது ஒண்ணுமே இல்லையா ஷ்யாம்?” அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“இல்லை… அவன் பண்ண காரியத்துக்கு முன்னாடி நான் பண்ணினது ஒண்ணுமே இல்லை…” என்று அழுத்தமாக கூறினான்.

“இவ்வளவு மிருகத்தனம் ஊறிப் போய் இருக்க மனுஷனையா நான் காதலிச்சேன்?” என்றவள், தலையைப் பிடித்துக் கொண்டாள்.

காற்று பலமாக வீசியது.

“வேற வழி இல்ல… நீ இந்த மிருகத்தை சகிச்சு தான் ஆகணும்…” என்றவனின் குரலில் கடுமை ஏறியிருந்தது. மனதுக்குள் அதிர்வு.

“இது கோழைத்தனம்… அவனை அப்படி ரோட்டுல அடிச்சு இருக்காங்க… எப்படி ஷ்யாம் இப்படி பண்ண?”

அவள் கேட்டாலும் அவன் ஏதும் பதில் கூறவில்லை. மௌனமாகவே சுவரின் மேல் சாய்ந்து இருந்தான்.

“சொல்லுடா…”

“அவன் என்னை அசிங்கப்படுத்தினது உனக்கு தப்பா தெரியல… அவனை அடிச்சது தப்பா தெரியுது?” என்று கேட்க,

“நாம அசிங்கப்பட்டுடோம்ன்னு நாமளா நினைச்சா தான் அது அசிங்கம்… மார்பிங்ன்னு சொல்லிட்டு தூக்கி போட்டுட்டு போயிட்டே இரு… அவனை வீட்ல வெச்சுக் கூட அடிச்சு இருக்கலாம்… ஆனா இப்படி பண்ணி, அவனுக்கும் உனக்கும் என்னடா வித்தியாசம்?” என்று கேட்க,

“வித்தியாசமே இல்ல… சொல்லப் போனா அவனை விட நான் இன்னும் ரொம்ப மோசம் தான்… அந்த பயம் அவனுக்கு இல்லாம போச்சு… காரணம் நீ…” என்று கோபமாக கூற,

“நானா? என்ன சொல்ற நீ?” என்று கேட்டாள்.

“உன்னை தான் அவன் ட்ரம்ப் கார்டா யூஸ் பண்றான்… எனக்கு மஹாவ விட்டுக் கொடுத்து இருந்தா இப்படி பண்ணிருக்க மாட்டேன்னு சொல்றான்… அவனுக்கு உன்னை தூக்கி கொடுக்க சொல்றியா?” என்று கேட்க,

“லூசா நீ?”

“நீங்க விட்டுக் கொடுத்து இருந்தா அவங்க இன்னைக்கு மகாவேங்கட லக்ஷ்மி விஜய் யாம்… எனக்கு அப்படியே கொன்னு போட்றனும் போல இருந்துது…” என்று பல்லைக் கடிக்க, அவளுக்கு ஷாக்கடித்தது போலிருந்தது.

வெறித்துப் பார்த்தாள்.

ஆக அடிப்படை அவள் தானா?

விஜய் ஏதோ உளறுகிறான் என்று நினைத்துக் கொண்டு பெரிதாக அதை எடுக்கவில்லை. அதோடு ஷ்யாமின் கோபத்திற்கும் காரணம் அவள்! ஆக அத்தனைக்கும் அடிப்படை அவள்!

“கடவுளே…” தன்னையும் அறியாமல் கூறிவிட்டு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

அதோடு தான் குத்திப் பேசவே நினைக்கவில்லையே… அவளையும் அறியாமல் கூறிய ஒன்று… அதற்கு இத்தனை பெரிய விளைவா?

“சரி… அந்த விஜி எங்க?”

“நம்ம ஹாஸ்பிட்டல் தான் அட்மிட் பண்ணிருக்காங்க…” என்றவுடன் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“ஏன்?”

“ம்ம்ம்… நம்ம ஆளுங்க அடிச்சாங்க… நம்ம ஆம்புலன்ஸ்லையே அள்ளியும் போட்டுட்டு வந்துட்டாங்க….” என்று நிறுத்தியவனை நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அதிர்ந்து பார்த்தாள்.

“ஷ்யாம்ம்ம்ம்…” அவளது அதிர்வு எவ்வளவு என்றெல்லாம் கூறவே முடியாது.

“இப்ப ஐசியு ல இருக்கான்… அடி கொஞ்சம் அதிகம்… அவனை அப்படியே வெஜிடபிள் ஆக்கிடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்…” என்றவனை கைகள் நடுங்க உச்சபட்ச அதிர்ச்சியில் பார்த்தாள்.

“இது தப்பு ஷ்யாம்…” அவளது குரல் பிசிறடித்தது.

“தப்பை தப்பா செய்யாம சரியா செஞ்சா அது தப்பே கிடையாது ஸ்வீட் ஹார்ட்…” என்றவனை வெறித்துப் பார்த்தாள்.

“இது கோழைத்தனம்… மனுஷத் தன்மையே இல்லாத ஒரு வேலை… பேசாம கொன்னுட்டு போயிடலாமே…” என்று கொதிக்க,

“கொன்னுட்டா ஒரு நிமிஷ வேதனை மட்டும் தான்…”

“வேண்டாம் ஷ்யாம்… இது ரொம்ப தப்பு… தயவு செஞ்சு வேண்டாம்… நம்ம சந்ததி இந்த பாவத்தை சுமக்க வேண்டாம்…” என்றவளை,

“பாவம் பரிதாபம்ன்னு பார்க்கற மூட்ல நான் இல்லடி… சர்வைவல் ஆப் தி ஃபிட்டஸ்ட்… நீ சர்வைவ் ஆகணும்ன்னா ஃபிட்டா இருக்கணும்…” என்றவனை அதிர்வோடு பார்த்தாள்.