VNE 53 (cont)

VNE 53 (cont)

அடுத்த நாள் காலையிலேயே சமையலறை இரண்டு பட்டது. மகேந்திரனை தள்ளி நிறுத்திவிட்டு, தான் களத்தில் குதித்து இருந்தாள் மஹா.

“ஏய் மஹா…. மகேந்திரன் பார்த்துக்குவான்… ஒழுங்கா நீ கிளம்பு…” என்று மாடியிலிருந்து ஷ்யாம் கத்த,

“வந்துட்டேன்… இன்னொரு பைவ் மினிட்ஸ்…” பதிலுக்கு கத்தினாள் மஹா.

“என்னமோ செய்… சொன்னா எதையுமே கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணி வெச்சுட்டு இரு…” என்றவன், அவசரமாக அலுவலக அறையை நோக்கிப் போனான். கொழுகட்டையை பிடித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் இது பட, தோளைக் குலுக்கிக் கொண்டு அவள் தன்னுடைய வேலையை தொடர்ந்தாள்.

அவளுக்கு சமையலில் எப்போதுமே ஆர்வமுண்டு. பைரவியும் பெண்ணுக்கு எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று சமையல் பழக்கி இருந்தார்.

முந்தைய தினம் அவனை ரொம்பவுமே கோபப்படுத்தியாகி விட்டதே என்ற சிறு குற்ற உணர்வு. அப்போது வரைக்குமே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டுதானிருந்தான்.

ஆனால் அதற்காக அவனோடு இழைய முடியாது. ஆனால் அவனை அப்படியே பார்க்கவும் பிடிக்கவில்லை. அவன் வீட்டில் இருந்தால் அவள் சிரித்துக் கொண்டுதானிருப்பாள் என்ற அளவில் அவளை வம்பிழுத்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பவனை இப்படி பார்க்க அவளுக்கு மனம் பிசைந்தது.

அவனிடம் எப்போதும் போல பேச வேண்டும் என்று ஆசைப்பட்டவள், அவனுக்காக சமைக்க முடிவு செய்திருந்தாள்.

காபியை கலந்தவள், எடுத்துக் கொண்டு அவனது அலுவலக அறையை நோக்கிப் போனாள்.

அடுக்கி வைத்திருந்த கோப்புகளில் ஏதோவொன்றை அவசரமாக தேடிக் கொண்டிருந்தான்.

காபியோடு வந்தவளை பார்த்தவன், “டேபிள்ல வெச்சுட்டு போ மஹா…” என்று கூற, வைத்தவளுக்கு அவன் குடிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது.

முதன் முறையாக அவனுக்காக காபி போட்டவள், இருவருமாக அமர்ந்து குடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இரண்டு கோப்பைகளையும் எடுத்து வந்திருந்தாள். அவன் குடித்து விட்டு கூறும் ஒரு வார்தைக்காகத்தான் வந்தாள். ஆனால் அவனோ அதை சற்றும் கண்டுகொள்ளாமல் வைத்து விட்டு போ என்றதும் அவளுக்குள் இருந்த ஆசை அத்தனையும் வடிந்தது.

தன்னுடைய கோப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், சோபாவில் விஸ்ராந்தையாக அமர்ந்து கொண்டு கையில் பேப்பரையும் எடுத்துக் கொண்டாள். காபி வித் எக்ஸ்ப்ரெஸ் என்று முன்னெல்லாம் கிண்டல் செய்வாள். இப்போது காபி வித் பிசினஸ் லைன் என்று தான் கூற வேண்டும்.

ஆம்! ஷ்யாம் முதலில் கண் விழிப்பது, அதில் மட்டும் தான். ஒரு வரி விடாமல் மனப்பாடம் செய்து விடுபவனை ஏலியனை போலத்தான் பார்த்தாள். ஆனால் இப்போது அந்த பெண் புலியே பிசினஸ் லைனை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டதே! என்ன சோகம்!

அவள் காபி குடித்து முடிக்கும் வரை அவன் வரவே இல்லை. அடுப்பில் வைத்த கொழுக்கட்டை நினைவுக்கு வர, சமையலறைக்கு சென்று அடுப்பை சிம்மில் வைத்தவள், மகேந்தரனிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, ஷ்யாமை நோக்கி போனாள்.

அலுவலக அறையிலேயே அமர்ந்தபடி, செல்பேசியில் யாரிடமோ ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தான் அவன்.

காபி ஏடு கட்டி ஆறிப் போயிருந்தது.

ஷ்யாம் அவளை கண்டாலும், எந்த பிரதிபலிப்பும் இல்லை.

சற்று நேரம் பேசிவிட்டு வைத்தவன், நெற்றியை சுருக்கிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தான்.

“என்ன ஷ்யாம் பிரச்சனையா?” என்று இவள் கேட்க,

“ம்ம்ம்… என்ன கேட்ட?” என்று தடுமாறியவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

அவனுக்கு இது போன்ற தடுமாற்றங்கள் குறைவு. எதுவாக இருந்தாலும் தெளிவாக இருப்பான். ஆனால் அவனே ஒரு மாதிரியாக இருக்கிறான் என்றால்?

“பிரச்சனையான்னு கேட்டேன்…” என்றவளிடம்,

“ம்ம்ம்ம்… அப்படியொண்ணும் இல்ல… சின்ன விஷயம் தான்… ஆனா என்ன பண்றதுன்னு தெரியல…” என்றவனை வியப்பாக பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியவில்லையா?

“என்னன்னு சொல்லேன்… என்னால எதாவது சொல்யுஷன் சொல்ல முடியுமான்னு பார்க்கறேன்…” என்று கேட்க, அவன் சிரித்தான்.

“ஏய் நீயெல்லாம் இன்னும் குழந்தை… போய் செரிலாக் சாப்பிடு செல்லம்…” என்று சிரித்தாலும் அந்த சிரிப்பு அவனது கண்ணை எட்டவில்லை.

“ரொம்ப பண்ணாத… சொல்லு…” என்று கேட்க,

“இன்னைக்கு சென்ட்ரல் மினிஸ்டர் விட்டல் ராவ் சென்னை வர்றார்…” என்று கூற,

“சரி… அதனால?”

“அவர் கிட்ட கணக்கு காட்டனும்…”

“ஓ… அந்த ஆளையும் வளைச்சு போட்டு வெச்சுருக்கன்னு சொல்லு…” என்று கிண்டலாக கூற,

“ம்ம்ம்… இன்னைக்கு மொத்தமாக கணக்கை முடிக்கணும் மஹா. அடுத்த செட் ஃப்ரெஷா ஆரம்பிப்போம், இதுதான் வழக்கம்… ஆனா போன செட்டோட கணக்கு இருந்த பைல் எங்கன்னு தெரியல…” என்று கூற, உள்ளுக்குள் அதிர்ந்தாள்.

இது சிங்கத்தின் வாயில் தலையை கொடுத்த கதை ஆயிற்றே!

“என்ன சொல்ற ஷ்யாம்?” என்று அதிர்ந்து கேட்க,

“ம்ம்ம்… அதை விஜி தான் பார்த்துட்டு இருந்தான்…” என்று கூற, அவனை வெறித்துப் பார்த்தாள் மஹா.

“சாஃப்ட் காபி இல்லையா? வேற பேக் அப் எதுவும்?”

“சிஸ்டம்ல எப்படி இவன் போட்டு வெச்சு இருக்கான்னே தெரியல… ஆனா கண்டிப்பா அதுல பேக் அப் இருக்கும்… எங்க இருக்குன்னு தான் தெரியல…” என்று கூற,

என்ன பதில் பேசுவது என்று அவளுக்கு புரியவில்லை .

“விஜிக்கு நினைவு திரும்பிடுச்சு….” மெல்லிய குரலில் கூறியவளை எந்த பதிலும் கூறாமல் பார்த்தான்.

“ம்ம்ம்… தெரியும்…” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“எப்ப தெரியும்?”

“அவன் எப்ப முழுசா மெமரி ரீகைன் பண்ணானோ அப்பவே தெரியும்… அவனோட சின்ன சின்ன ஆக்ஷன்ஸ் கூட எனக்கு அத்துப்படி மஹா… நீ ஏமாறுவ… நான் மாட்டேன்… அதுக்கப்புறம் நாலு நாள் கழிச்சு தான் உனக்கு தெரியும்…” என்றவனை கண்களை விரித்துப் பார்த்தாள்.

“நான் என்ன பேசினேன்னு நீ கேட்கவே மாட்டியா ஷ்யாம்?” அவனது முகத்தை எதிர்பார்ப்போடு பார்க்க,

“எனக்கு தெரியாம பார்க்கனும்ன்னு நீ நினைச்ச மஹா… அதை நான் எப்படி கேட்பேன்… ப்ச்… அது உன்னோட டீப் பர்சனல்…” என்று அவன் முடிக்க, அவள் கோபமாக,

“என்ன பெரிய பர்சனல்? உன்கிட்ட சொல்ல முடியாததுன்னு எனக்கு எதுவும் இல்ல…” அவசரமாக அவள் கூறிய வார்த்தைகளே அவளுக்கு எதிராக போய்விட, அவளை ஆழ்ந்து பார்த்தான்.

“ஆஹான்… அப்படியா?” என்றவனின் தொனியிலேயே அவனிடம் தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்து கொண்டவள், உதட்டை கடித்துக் கொண்டு தலை குனிந்து கொண்டாள்.

“ஈவன் ஹஸ்பன்ட் அன்ட் வைஃப்பா இருந்தாலுமே அவங்களுக்குன்னு தனிப்பட்ட ஸ்பேஸ் இருக்கு… அந்த ஸ்பேஸ்ல அவங்க அனுமதி இல்லாம ஊடுருவ கூடாதுன்னு நினைக்கறேன் மஹா.” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள். அது எத்தனையோ கேள்விக்கான பதில் தான். ஆனால் அதை எப்படி ஏற்பது என்று தான் அவளுக்கு புரியவில்லை.

அவளை பொறுத்தவரை கணவன் மனைவி உறவென்பது அனைத்துக்கும் அப்பாற்ப்பட்டது. இருவருக்குமிடையில் மறைத்து வைக்க ஒன்றுமே இல்லையென்ற அளவில் ஒன்றி போக வேண்டிய உறவு, உணர்வாலும், உறவாலும், உயிராலும் கூட!

அவளது எண்ணம் அப்படியாகப்பட்டதாக இருப்பதால் தான் அவளால் அவன் இன்னொரு பெண்ணில் லயித்து இருந்ததை ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதும்.

அந்த ஒரு விஷயத்தை தவிர, அவளுடைய கணவன், அவளது உயிர்! அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அவளுக்கு!

“நான் அப்படி நினைக்கல… அன்னைக்கு நான் உன்னை பர்பசா தவிர்க்கவும் நினைக்கல… சம்ஹவ் ஹேப்பன்ட்… அவ்வளவுதான்… ஆனா அவனுக்கு மெமரி ரீகைன் ஆனது எனக்கு அப்ப தெரியாது… நிறைய விஷயம் பேசினான்… எனக்கு தெரிஞ்சவரைக்கும் அவன் இனிமே முதுகுல குத்தற வேலை செய்ய மாட்டான்… நேருக்கு நேராத்தான் நிற்பான்…” என்று உறுதியாக கூற, அவளை கேலியாக பார்த்து சிரித்தான்.

“ஒரு நாள் பேசினதுல உனக்கு யாரோ ஒருத்தன் மேல நம்பிக்கை வந்துருச்சா மஹா?” என்று குத்தலாக கேட்க,

“எனக்கு தெரிஞ்சவரைக்கும் சொன்னேன் ஷ்யாம்… அதை நீ எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்…” என்றவள், எழுந்து கொள்ள,

“நான் எப்படி எடுத்துகிட்டாலும் உனக்கு கவலை இல்ல… அப்படித்தானே?” என்று உணர்வற்ற முகத்தோடு கேட்க,

“ப்ச்… உன்கிட்ட எப்படி பேசறதுன்னே தெரியல ஷ்யாம்…” என்றவளுக்கு சலிப்பாக இருந்தது.

“பெருநெருப்பை காத்து அணைக்க முடியாது மஹா… இன்னும் தூண்டி விடும்… ஆனா சிறு நெருப்பை காத்து சுலபமா அணைச்சுடும்…” என்று கூற, அறையை விட்டு வெளியேற எத்தனித்தவள், நின்று அவனை திரும்பி பார்த்தாள்.

அவனது முகத்தில் எந்த உணர்வுமில்லை. முந்தைய நாளின் அவமானம் மட்டுமே மீதமிருந்தது.

“நீ என்ன சொல்ல வர்றன்னு எனக்கு புரியல…”

“லவ்… ஜஸ்ட் லவ் அன்ட் லவ் ஒன்லி…”

“அப்படீன்னா உன்னை நான் லவ் பண்ணலைன்னு சொல்ல வர்ற இல்லையா?”

“அப்படி நான் சொல்லவே இல்லை… நீயாத்தான் சொல்ற… நான் ஜஸ்ட் ஒரு பழமொழியை சொன்னேன்…” என்று தோளை குலுக்கியவனை வெறித்துப் பார்த்தாள்.

அவளுக்கு பதில் கூறி தன்னை புரிய வைக்க விருப்பமில்லை. அவனுக்கும் அதே!

செல்பேசி அழைத்தது. விட்டல் ராவ் தான் அழைத்திருந்தார்.

சற்று நேரம் அவரிடம் தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தவன், பெரிய புன்னகையோடு பேசியை வைத்தான்.

“ஈவினிங் உனக்கு ஏதாவது வேலை இருக்கா?” என்று கேட்க, அவள்,

“இல்ல… ப்ரீ தான்…” என்று இடம் வலமாக தலையாட்டினாள்.

“ஈவினிங் பார்க் ஹயாட்ல டின்னர் கொடுக்கறாராம்… வர சொன்னார் மஹா…”

“அப்படியா?” என்று யோசித்தவள், “தியேட்டர் டியூட்டில மாட்டினா தான் கஷ்டம் ஷ்யாம்…” என்று கூற,

“இன்னைக்கு ஒரு நாள் எக்ஸ்கியுஸ் வாங்கேன் மஹா… இந்த ஆளை பேசித்தான் சரி கட்டனும்… கணக்குல விஜி என்ன ஓட்டை பண்ணி வெச்சு இருக்கான்னு தெரியல… ஆடிட்டர் டீமோட நம்ம பசங்களும் பார்த்துட்டு இருக்காங்க… அந்த பைல் கிடைக்கலைன்னா நிறைய பிரச்சனை வேற வரும்… அதுக்கு முன்னாடி அந்தாளை கொஞ்சம் மெஸ்மரைஸ் பண்ணி வைக்கணும்…” என்றவனை சின்ன புன்னகையோடு பார்த்தாள்.

“உனக்கு மெஸ்மரைஸ் பண்றது தான் வேலையா?” என்று சிரிக்க,

“ஒரே ஒரு ஆளைத்தவிர யாரை வேணும்னாலும் சரி கட்டிடலாம்…” புருவத்தை உயர்த்தியபடி சிரித்த ஷ்யாமை, உதடுகள் குறும்பாக வளைய புன்னகைத்தவள்,

“ஆஹான்… அப்படியா? யாராம் அந்த அப்பாட்டக்கர்?” என்று கேட்க,

“அதுவா?” என்று விஷமமாக புன்னகைத்தவன், “எனக்கிருக்க ஒரே ஒரு பொண்டாட்டி தான்…” என்று கூற,

“அவ தான் ஆல்ரெடி உன்கிட்ட கவுந்துட்டாளே…” என்று சிரிக்க,

“அப்படியொண்ணும் தெரியல… ரொம்ப வாய் பேசறா… மொத்தமா ஒரு நாள் என்கிட்டே சிக்குவால்ல, அப்ப மொத்தமா பார்பிக்கியு போட போறேன்… என்ன பண்ண போறான்னு பார்க்கறேன்…” என்றவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல், இங்குமங்கும் பார்க்க, சரியாக செல்பேசி அவனை அழைத்து, அவளை காப்பாற்றியது.

இளங்கவி தான் அழைத்திருந்தான்.

“சொல்லுடா…” என்று ஷ்யாம் ஆரம்பிக்க,

“பாஸ்… கணக்கையெல்லாம் ஓரளவு கோரலேட் பண்ணியாச்சு… பெரிய அளவுல தப்பெதுவும் இருக்க மாதிரி தெரியல… இந்த ஆறு மாச பேக் அப் மட்டும் கிடைக்கவே இல்ல… அதுக்கு முன்னாடி இருக்க கணக்குக்கு பேக் அப் இருக்கு… எப்படி இருந்தாலும் ஒரு ஐம்பது லட்சத்துக்கு கணக்கு குறையுது…” என்று சொல்லி முடிக்க, ஊன்றி அதை கேட்டுக் கொண்டவன்,

“சரி கவி… அந்த ஐம்பதை ராவ் கணக்குக்கு மாத்தி எழுதிடு…” என்று சாதரணமாக கூற, இளங்கவி அதிர்ந்தான்.

“பாஸ்… ஐம்பது லக்ஷம்…” என்று அதிர,

“இட்ஸ் ஓகே டா… தப்பு நம்ம பக்கம் இருக்கு… விஜியை மொத்தமா நம்பினது தப்பு… அந்த தப்புக்கு நாம தான் காம்பன்செட் பண்ணனும்… நீ ஐம்பதை ராவ் கணக்குக்குல மாத்து…” என்று வெகு தீவிர குரலில் கூற,

“அந்த ஐம்பதை எப்படி கணக்குல கொண்டு வர்றது பாஸ்… அது இன்னும் பிரச்சனை… அதுவும் மெடிக்கல் காலேஜ்க்காக எய்ட்டி பர்சன்ட்ட ஆல்ரெடி நாம வைட்ல கொண்டு வந்துட்டோம்…” என்று யோசனை கேட்க, அவனுக்கும் அந்த யோசனை இருந்தது.

“முதல்ல இன்னைக்கு ராவ் கணக்கை முடிக்கலாம் கவி… நாளைக்கு ஆடிட்டர்ஸ் மீட்டிங் அரேஞ்ச் பண்ணு… டிஸ்கஸ் பண்ணலாம்…” என்று முடிக்க, இளங்கவி மனமே இல்லாமல்,

“ஓகே பாஸ்…” என்றான்.

“சரி… அவருக்கு என்ன வேணுமோ செஞ்சு கொடு கவி…” என்று கூற,

“எஸ் பாஸ்… அதெல்லாம் ஆல்ரெடி பண்ணிட்டு தான் இருக்கோம்… விஷ்ணு பார்க் ஹயாட்ல இருக்கான்… அவர்…” என்று ஆரம்பித்து ஒரு நடிகையின் பெயரை சொன்னவன், “வேணும்ன்னு கேக்கறார்…” என்று தயங்க,

“அரேஞ்ச் பண்ணிக் கொடு… இதையெல்லாம் என்கிட்டே கேட்டுட்டு தான் செய்வியா கவி?” என்றான் எரிச்சலாக. ஆம் எரிச்சலாகத்தான் இருந்தது, இவர்களுடைய பணத்துக்கு பாதுகாப்பும் வேண்டும், மாதமாதம் வட்டியும் வேண்டும், கறுப்பை வெள்ளையாக்கவும் வேண்டும்… கூடவே ப்ரோக்கராகவும் ஆக்குகிறானே இந்த ராவ் என்ற எரிச்சல் அவனுக்கு.

“ஓகே பாஸ்…” என்று வைத்தான் இளங்கவி.

ஷ்யாமின் முகம் யோசனையாக சுருங்கியது.

இப்போதுள்ள நிலைமையில் ஐம்பதை கணக்கில்லாமல் எடுப்பது என்பது பெரிய ரிஸ்க் ஆக நிறைய வாய்ப்புள்ளதே… அதுவும், கையிலிருக்கும் பணத்தையெல்லாம் மெடிக்கல் காலேஜில் இன்வஸ்ட் செய்த நிலையில், இதில் சற்று பிரச்சனையாகும் வாய்ப்பும் அதிகம்! கறுப்புப் பணமாக டீல் செய்தவரை பெரிய பிரச்சனை இல்லை. இப்போது அதெல்லாம் சாத்தியமில்லை, என்று எண்ணிக் கொண்டான்.

‘ம்ம்ம்… சமாளித்து தானாக வேண்டும்…’ என்று எண்ணிக் கொண்டு, மகாவை நிமிர்ந்து பார்த்தவன்,

“இன்னைக்கு ஃபுல்லா பார்க் ஹயாட்ல தான் இருப்பேன் மஹா… ஈவினிங் நீ வந்தவுடனே ஒரு கால் கொடு… வந்துடறேன்…” என்றவனை ஆழ்ந்து பார்த்தவள்,

“என்ன அரேஞ்ச் பண்ணிக் கொடுக்க சொன்ன?” என்று ஒரு மாதிரியான குரலில் அவள் கேட்க,

“அது எதுக்குடி உனக்கு?” என்றான் எரிச்சலாக!

“தெரியனும்… சொல்லு…” வேறு புறம் திரும்பி நின்று பிடிவாதமாக அவள் கேட்க, அவளது தாடையை தன்னை நோக்கி திருப்பியவன், இறுக்கமாக,

“அவன் கூட இருக்க ஒரு நடிகைய கேட்டான்… அவளை அரேஞ்ச் பண்ணி தர சொன்னேன்… போதுமா?” என்று கூற, மகாவின் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாக தெரிந்தது.

“ச்சீ இதென்ன வேலை?” அசூயையாக முகத்தை திருப்ப,

“இது பிசினஸ்… இங்க இதெல்லாம் சகஜம்… உனக்கு இதை பற்றி தெரியாது… இருக்கற எரிச்சல்ல நீ இன்னும் எண்ணெய் விடாத மஹா…” என்றவனின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

“அந்த மாதிரி ஆள்ன்னு தெரிஞ்சுகிட்டே என்னையும் ஏன் ஷ்யாம் டின்னருக்கு வர சொல்ற?”

“ஏய் இது வேற… அது வேறடி…” என்றவனுக்கு புரியவில்லை. எதனோடு எதை முடிச்சிடுகிறாள் இவள்?

“அந்த மினிஸ்டர் அப்படின்னு தெரிஞ்சே எப்படி என்னையும் அவன் முன்னாடி கூட்டிட்டு போற?” என்று கேட்க,

“நீ என்னோட ஒய்ப்… மிசஸ் ஷ்யாமள பிரசாத்… உனக்குத்தான் அதனோட வால்யு தெரியலை… அவன் முன்னாடி வந்து நின்னு பார்… அப்ப தெரியும்டி… வால்யு….” என்று இறுமார்ப்புடன் சொன்னவன், “ஒரு செக்கன்ட் தப்பா பார்த்தாலும், மினிஸ்டரா இருந்தாலும் என்ன நடக்கும்ன்னு அவங்களுக்கு தெரியும்…” என்று நிறுத்தியவன், “இன்னமும் என்னை பத்தி உனக்கு தெரியல மஹா…” என்று இறுக்கமாக முடிக்க, மௌனமாகினாள்.

சற்று பொறுத்து,

“அப்படீனா நடிகைன்னா எப்படி வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாம்… இல்லையா?” சிறு குரலில் அவள் கேட்டாலும், அதில் கோபம் தெறித்தது.

“அது அவளோட தொழில்… அவ்வளவுதான்… ரொம்ப டீப்பா போகாத…”

“ஆசைப்பட்டு இதை தொழிலா செய்வாங்களா ஷ்யாம்?” அவளது முகத்தில் அத்தனை வெறுமை!

“செய்றாங்க… பணம் கொடுக்கறோம்… அதுக்கு அவங்க சர்விஸ் பண்றாங்க… மேட்டர் ஓவர்… இதை எதுக்கு இவ்வளவு ஆழமா ஆராய்ச்சி பண்ற? முடியாதுன்னு சொல்றவங்களை என்ன ஃபோர்ஸ் பண்ண போறேனா? வர்றாங்க… வேலை பார்க்கறாங்க… காசை வாங்கிட்டு போயிட்டே இருக்க போறாங்க… அவங்களே கூட இவ்வளவு பீல் பண்ணிருக்க மாட்டாங்க…” என்று கேலியாக முடிக்க முயன்றவனை இறுகிப் போன பார்வை பார்த்தாள்.

“யாரோ ஒரு மஹாவையும் இப்படித்தான் நினைச்சியா? எவ்வளவு சுலபமா கஸ்டடி எடுத்த… மஹாவும் உனக்கு டேக் இட் ஃபார் கிராண்டட்டா?” நிதானமாக அவள் கேட்க,

“கன்னம் பழுத்துரும்… என்ன பேச்சு பேசற? தொலைச்சுருவேன்… யாரோட யாரை கம்பேர் பண்ற?” கோபம் கொப்பளிக்க கொதித்தவன்,

“ஈவினிங் ஒழுங்கா ரெடியாகு… இன்னமும் இப்படியே பேசின, எனக்கிருக்க டென்ஷன்ல என்ன நடக்கும்னே சொல்ல முடியாது மஹா… பிசினஸ் மேட்டர்ஸ்ல தலையிடாத…” என்று கட் அன்ட் ரைட்டாக கூறிவிட்டு போக, உண்மையில் அதிர்ந்து தான் போயிருந்தாள், கணவனின் இன்னொரு முகத்தை கண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!