VNE 54 (1)

VNE 54 (1)

54

மருத்துவமனைக்கு வந்தும் மஹாவால் என்னமொருமித்து வேலை பார்க்க முடியவில்லை. காலையில் ஷ்யாமின் கோபத்தை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பாரமாக இருந்தது.

ஒரு புறம் அவனை காயப்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வு… இன்னொரு புறம் அவன் செய்யும் செயல்களை ஒப்புக்கொள்ளவே முடியாத தன்னுடைய மனநிலை. இரண்டுக்குமிடையில் அல்லாடினாள்.

ஷ்யாம் இப்படித்தான் என்று அவள் முழுவதுமாக அறிவாள். ஆனால் தியரிடிகல் அறிவு என்பது வேறு… ப்ராக்டிகல் அறிவு என்பது வேறல்லவா!

திருமணத்திற்கு முன் இருந்தது தியரிட்டிக்கல் அறிவு… எப்படியும் சமாளித்து விடலாம் என்ற தைரியம் அவளுக்கு இருந்தது. ஆனால் உண்மையான வாழ்க்கையை ப்ராக்டிகலாக எதிர்நோக்கும் போது தான் அவனுடைய நடைமுறை வாழ்க்கைக்கும் தன்னுடைய நடைமுறை வாழ்க்கைக்குமான வித்தியாசம் அவளுக்கு புரிய ஆரம்பித்து இருந்தது.

இதைத்தான் கார்த்திக் ஆரம்பத்தில் இவளுக்கும் தீவிரமாக போதித்தது. அப்போது காதல் கண்ணை மறைத்தது. அத்தனை தவறுகளையும் தாண்டி ஷ்யாமை கைப்பிடிக்கவும் சொன்னது… அது ஏதோவொரு குருட்டு நம்பிக்கையாக இப்போது மஹாவுக்கு தோன்ற ஆரம்பித்து இருந்தது.

அவனது எந்த எதிர்பார்ப்பையும் அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. அவனது வாழ்க்கைமுறைக்கும் தன்னுடையதுக்குமான இடைவெளியை எதைக் கொண்டு நிரப்ப? முடியுமா என்ற பெருமூச்சு அவளிடம்!

இத்தனைக்கும் இவர்களது குடும்பமும் சாதாரணமானதும் அல்ல… சினிமா என்பதும் இவர்களுக்கும் புதியதும் அல்ல… ஆனால் சிறு வயது முதலே அதன் தாக்கமே இல்லாமல் பைரவி இருவரையும் வளர்த்திருந்தார். எந்த விழாக்களுக்கும் சென்றதில்லை, அது இவர்களது பட விழாவாகவே ஆயினும் சரி… தடா தான். வளர்ந்த பின் உடன் பிறப்புகள் இருவருக்குமே இந்த துறையில் சுத்தமாக விருப்பமில்லாமல் போய்விட, சற்று தள்ளித்தான் நின்றனர்.

முருகானந்தத்தின் ஆசைக்காக மட்டுமே உள்ளுக்குள் நுழைந்தான் கார்த்திக். அவனால், ஷ்யாமால் இந்த பிரச்சனைக்குள் வந்தாள் மஹா.

மற்றபடி அவளது மனநிலை என்பது சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணின் மனநிலை தான். அப்படித்தான் பைரவியின் வளர்ப்பு இருந்தது. இப்படித்தான் இருக்க வேண்டும்… இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதற்கு நிறைய ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் வைத்திருந்தார் அவர். தன்னையும் அறியாமல் அதில் ஆழ்ந்து விட்டவள் மஹா.

ஆனால் ஷ்யாம் அப்படியல்ல… தானாக வளர்ந்த சுயம்பு. தந்தை அதே துறையில் முன்னோடியாக இருந்தாலும் தனக்கென ஒரு பாதையை பின்பற்றி அதில் பெரும் வெற்றியை ருசி பார்த்து வருபவன். தந்தையின் தொழில் மட்டுமல்லாமல் மருத்துவமனையும், மருத்துவ கல்லூரியும் அவனது கனவு. அந்த கனவையும் எத்தனை இடர்கள் வந்தாலும் செயலாற்றியே தீருவேன் என்ற உறுதியோடு செயல்படுத்திக் கொண்டும் இருப்பவன்.

தான் நினைத்ததை எப்பாடு பட்டாவது சாதிப்பது அவனது குணம்.

அவனை பார்க்கும் வரை எதுவாக இருந்தாலும் வருவதை ஏற்றுக் கொண்டு போனவள் மஹா. ஆனால் அவனது விஷயத்தில் நிறைய இடறியது. அத்தனை இடரையும் தாண்டி அவன் தான் அவளது உயிர் என்றாகி விட்டாலும், அவன் நெருங்கும் போது, அவளையும் அறியாமல் மனம் தள்ளிப் போனது.

முடியவில்லை… அத்தனையும் பார்த்தபிறகு அவனோடு இயல்பாக ஒன்ற முடியவே இல்லை.

வாழ்க்கை தெளிவாக இருக்க, கணவன் மனைவிக்குள் மனம் ஒன்ற வேண்டும்… உடல்கள் உரசிக் கொள்வது வாழ்க்கையல்ல… மனங்கள் ஒன்றி உரசிக்கொண்டு திகட்ட திகட்ட வாழ்வதே வாழ்க்கை… இல்லையென்றால் ஒரு கூரைக்கு கீழ் நீயும் இருக்கிறாய்… நானும் இருக்கிறேன் என்ற நிலை மட்டும் தான்.

இதை இன்னும் எத்தனை நாட்களுக்கு தன்னால் தாள முடியுமென்று அவளுக்கு புரியவில்லை. அவனோடு ஒன்றி வாழ்வது சாத்தியமாகுமா? சத்தியமாக அவளால் அவளுக்கே உறுதிக் கொடுக்க முடியவில்லை.

அத்தனையிலும் நேர் எதிரானவர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது சாத்தியமா?

பயணம் சாத்தியம் இல்லையென்றால் முடிவு தான் என்ன?

ஆனால் ஷ்யாமை விட்டு விலகுவது தன்னால் முடிந்த காரியமா? இல்லை… முடியவே முடியாதே… சண்டை போட்டாலும், சமாதானம் செய்தாலும், கோபப்பட்டாலும், கொள்கை மாறுபாடு இருந்தாலும், அடித்தாலும் பிடித்தாலும் அவன் தன்னுடனே தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது மனது.

அவனது எதிர்பார்ப்புகளை ஈடு செய்யாமல், ஒரு தோழியாக அவனுடன் வாழ்வது சாத்தியமே இல்லாத ஒன்று எனும் போது, என்ன தீர்வை தான் தர முடியும்?

இவ்வளவுக்கும், அவன் தன் மேல் கொண்டிருக்கும் அளவிட முடியாத காதலையும் அறிவாள்… தனிமையை பங்கிட துடிக்கும் அவனது இயல்பான மோகத்தையும் அறிவாள். அது வெகு இயல்பு தான். ஒரு கணவனாக அவன் தன்னிடம் எதிர்பார்ப்பதை தவறென்று கூறி விடவும் முடியாதே… அவளை மட்டுமே நேசித்து, அவளுக்காக என்று யோசித்து, அவளுக்காக தன்னை முற்றிலுமாக விட்டுக் கொடுக்கிறான் என்பதையும் இவள் அறியாதவள் அல்ல!

இத்தனையும் அவளுக்குள் பெரும் குழப்பத்தையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

மனம் தாள முடியாமல் கார்த்திக்கு அழைத்தாள்.

“சொல்லுடா லட்டு…” என்றவனின் பாசமான குரல் காதில் விழ, மனம் கசிந்து கண்கள் கண்ணீரில் மிதந்தது.

“எப்படி இருக்க கார்த்திண்ணா?” என்று கேட்டாள், பார்த்து பல வருடம் ஆகி விட்டதை போன்ற ஒரு உணர்வு, மனதை அழுத்தியது.

“நல்லா இருக்கோம்டா…” என்றவன், இன்னும் சிலபல குடும்ப விஷயங்களை பேச, தன்னை மறந்து அருகில் வந்து அமர்ந்த பிருந்தாவை மேல் பார்வையாக பார்த்துக் கொண்டு  தமையனின் பேச்சில் ஆழ்ந்தாள்.

ஒரு கட்டத்தில் இவள் மெளனமாக,

“ஏன்டா லட்டு… காலைலயே பிரச்சனை போல…” என்று மெதுவாக கேட்டான். சற்று நேரத்திற்கு முன்பு தான் ஷ்யாமிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, மஹாவிடம் தான் கோபப்பட்டதிற்கு வருந்திக் கொண்டிருந்தான்.

“என்னதான் இருந்தாலும் மஹா கிட்ட நான் அப்படி பேசிருக்க கூடாது மச்சான்… அதுக்கு முன்னாடி பிசினஸ் விஷயத்தை வீட்டுக்குள்ள நான் கொண்டே வந்திருக்கக் கூடாது…” என்று வருத்தமாக கூறியவனின் வார்த்தைகள் கார்த்திக்கை பாதித்தது.

“இதெல்லாம் சகஜம் மச்சான்… எங்க அம்மா சொல்லிட்டே இருப்பாங்க… கல்யாணம் செஞ்சா மட்டும் போதாது… அது செட் ஆக முழுசா அஞ்சு வருஷம் பிடிக்கும்ன்னு சொல்லுவாங்க… அந்த வீட்ல பொண்ணுங்க, இது தன்னோட வீடுன்னு கம்ப்ளீட்டா மெர்ஜ் ஆக கண்டிப்பா பத்து வருஷமாகுமாம்… பத்து வருஷம் எங்க? பத்து நாள் எங்க? இன்னும் எவ்வளவோ நாள் இருக்கு மச்சான்…” என்று சமாதானம் கூறினாலும்,

“பத்து வருஷமா? யோவ்… புளிய கரைக்காதய்யா…” என்று சிரித்தவன், “அவளோட கேரக்டர் தெரிஞ்சும் நான் அப்படி பேசிருக்க கூடாது…” என்று மீண்டுமாய் வருந்த,

“அப்படி என்ன மச்சான் சொன்ன?” என்று கார்த்திக் கேட்டான்.

“இன்னைக்கு ஒரு வரவு செலவு பார்க்க வேண்டி இருந்தது கார்த்திக்… நம்ம ராவ் அதுக்காகத்தான் சென்னை வந்து இருக்கார்… வந்த மனுஷன் சும்மா இல்லாம ஏதோ நடிகையை அரேஞ்ச் பண்ணி தர சொல்லி கவி கிட்ட கேட்டுட்டார்…” என்றவுடன்,

“இது எப்பவுமே நடக்கறதுதானே? அந்தாளை எல்லாம் பகைச்சுக்க முடியுமா? கேட்டதை பண்ணி கொடுக்கலைன்னா லூசு மாதிரி ஏதாவது பண்ணி வெப்பான்னு நானும் கேள்விப்பட்டு இருக்கேன்…”

“ஆமான்டா… இவனெல்லாம் மினிஸ்டராகி நாட்டை காப்பாத்தி…” என்றவனுக்கு எரிச்சலாக இருந்தது. “ஒரு நிமிஷம் கூட நிதானத்துல இருக்க மாட்டான்… ஃபுல் தண்ணி…” என்று கூடுதலாக விமர்சிக்க, கார்த்திக் சிரித்தான்.

“யோவ்… அதை நாம பேசவே கூடாது…”

“டேய்… நானெல்லாம் ரொம்ப கண்ட்ரோல்ல தான்டா இருக்கேன்… அதுவும் இப்பல்லாம் பயந்து பயந்து தான் சிகரெட்டே பிடிக்கறேன்… உன் தங்கச்சியை பார்த்தாலே பயமா இருக்கு…” என்றவன், கிட்டத்தட்ட உண்மையை தான் சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த இரண்டுமே அவளுக்கு ஆகாது என்பது அவனுக்கு தெரியும்… ஆனால் அவளாக கட்டுப்படுத்தவில்லை. ஆனால் பார்வையில் அவள் காட்டும் வேறுபாட்டினால் அவற்றை சற்று ஒதுக்கி வைக்க பழகிக் கொண்டிருந்தான்.

“ஆமா நம்பறேன்…” என்று கார்த்திக் சிரிக்க,

“நம்பித்தான் ஆகணும்…” என்றான் ஷ்யாம்.

“சரி… இதுல என்னதான் மச்சான் பிரச்சனை?”

“ம்ம்ம்… நான் பேசிட்டு இருந்ததை உன் தங்கச்சி கேட்டுட்டா… இதெல்லாம் என்ன வேலைன்னு கொதிச்சுடுச்சு…” என்றவனின் குரலில் வருத்தம்.

“உன்னை யார் மச்சான் அவளுக்கு கேக்கற மாதிரி பேச சொன்னது?”

“மஹா இருக்கறதை மறந்துட்டேன்… எப்பவும் போல பேசிட்டேன்டா…”

“இதெல்லாம் நமக்கு சகஜம் மச்சான்… ஆனா அவங்களுக்கு இதெல்லாம் ஷாக்கா தானே இருக்கும்… சரி இன்னைக்கு ஈவினிங் எங்கயாவது கூட்டிட்டு போய் சமாதானக் கொடியை பறக்க விட்டுடு…” என்று அவன் சிரிக்க,

“நீ வேற… விட்டல் டின்னருக்கு இன்வைட் பண்ணிருக்கார்… இந்தம்மா அவன் முன்னாடி என்னை கூட்டிட்டு போவியான்னு வேற ஒரே சண்டை… கண்ணை கட்டுது மச்சான்…” என்றவனுக்கு உண்மையிலேயே அப்படித்தான் இருந்தது.

“அடக் கடவுளே… எதுக்கும் எதுக்கும் இந்த லட்டு முடிச்சு போடுது?” என்று மலைத்தான். அவர்களது சர்க்கிளில் பிசினஸ் காண்டாக்ட்சை வளர்ப்பதில் மனைவியருக்குமான பங்கை பெண்களுக்கு புரிய வைத்துதான் பழக்கம். ஆனால் தங்கள் குடும்பத்தில் பார்ட்டி, டின்னர், மீட்டிங் என்று எதிலுமே வீட்டுப் பெண்களை உள்ளிழுக்காமல் இருந்ததின் தவறை கார்த்திக் இப்போது உணர்ந்தான்.

இடத்திற்கு தகுந்தார் போல தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா என்று தான் தோன்றியது.

“பார்க்கலாம் கார்த்திக்… சொல்லி பார்க்க வேண்டியது… புரியலைன்னா கத்துகிட்ட வித்தை மொத்தத்தையும் இறக்க வேண்டியதுதான்…”

“யோவ் அதென்னய்யா கத்துகிட்ட வித்தை?” என்று கார்த்திக் சிரிக்க,

“வேறென்ன? கால்ல விழறது தான்…” என்று சிரித்துக் கொண்டே!

“ம்ம்ம்ம்… ப்ளான் பண்ணிட்ட…”

“அப்கோர்ஸ்…” என்றவன் இன்னும் சிலதை பேசிவிட்டு வைத்தான்.

ஷ்யாமிடம் பேசிவிட்டு அமர்ந்தவனைத்தான் அழைத்தாள் மஹா. அவள் அழைக்கவில்லை என்றால் கூட கண்டிப்பாக கார்த்திக் அழைத்திருப்பான். கண்டிப்பாக அவளிடம் பேச வேண்டியிருந்தது கார்த்திக்கு!

அதுபோலவே அவன் ஆரம்பிக்கவுமே, மௌனமாகி இருந்தாள் மஹா.

தமையனாக இருந்தாலும் இருவருக்குமிடையிலான விஷயத்தை சொல்ல அவளுக்கு பிடிக்கவில்லை.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல கார்த்திண்ணா…”

“ப்ச்… பரவால்ல ஒண்ணுமில்லாம தான் இருக்கணும் பாப்பா… ஆனா ஒரு விஷயத்தை நீயும் புரிஞ்சுக்கணும்டா…” என்று ஆரம்பிக்க, மஹாவுக்கு சுருக்கென்று இருந்தது. ஷ்யாம் சொல்லாமல் கார்த்திக்கு தெரிய போவதில்லை.

இருவரும் பேசுவதையெல்லாம் கார்த்தியிடம் சொல்வானா?

எரிச்சலாக இருந்தது மஹாவுக்கு. அப்படியென்றால் இருவருக்குமிடையில் பர்சனல் என்ற ஒன்று இல்லையா? கார்த்திக் அவளுடைய தமையன் தான்… ஆனால் இருவரையும் பொறுத்தவரையில் அவனும் மூன்றாம் மனிதன் தானே என்று தோன்றியது.

ஆனால் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் அவன் பேசுவதை கேட்டாள்.

“பிசினஸ்னா ஆயிரம் இருக்கும்டா பாப்பா… மேட்டுல இருக்கறதை எடுத்து பள்ளத்துல போட்டு, பள்ளத்துல இருந்து மேட்டுல போட்டு என்னவெல்லாமோ பண்ண வேண்டியிருக்கும்…” என்று நிதானமாக ஆரம்பிக்க,

“ம்ம்ம்…” என்று வெறுமனே உம் கொட்டினாள்.

“இத்தனை நாள் உன்கிட்ட கேட்டு மச்சான் பிசினஸ் பண்ணலை பாப்பா… அவருக்கு தெரியும்… எங்க என்ன பண்ணனும்ன்னு… உன்னோட கொள்கையை அவர் மேல் திணிக்கனும்ன்னு நினைச்சா புலிய புல்லை திங்க வைக்கிற மாதிரி ஆகிடும்… அது அவர் பிசினசுக்கு நல்லதில்ல… அவர் கீழ விழனும்ன்னு எத்தனையோ பேர் காத்துகிட்டு இருக்காங்க… அதுக்கு நீயே காரணமாகிடாத… இதுதான் ஷ்யாம்ன்னு முழுசா ஏத்துகிட்டு கல்யாணம் பண்றதா இருந்தா பண்ணு… இல்லைன்னா அவரை விட்டுடுன்னு உன்கிட்ட எத்தனை முறை சொல்லிருக்கேன்… ஒரு பொண்ணால சாம்ராஜ்ஜியம் அழிஞ்ச கதையெல்லாம் உனக்கு தெரியுமா?” சரமாரியாக பேசியவன், சற்றே நிறுத்த,

“உன்கிட்ட பேசினாங்களா? என்னை கேக்க சொன்னாங்களா?” இறுக்கமாக அவள் கேட்க,

“ச்சே ச்சே… மச்சான் எதுக்கு அப்படி சொல்ல போறார்? பேச்சுவாக்குல சொல்லிட்டு இருந்தார்… அதுவும் கூட நான் மஹாவை அப்படி பேசிருக்கக் கூடாதுன்னு தான் சொன்னார் பாப்பா… ஷ்யாமை நீ தப்பாவே நினைக்கற… ஆரம்பத்துல நான் வேண்டாம்ன்னு சொன்னப்ப ஷ்யாமுக்காக எல்லாத்தையும் எதிர்த்துட்டு நின்ன அந்த மஹா எங்க பாப்பா?” என்று கேட்க, உண்மையில் அவளும் அந்த மகாவை தான் தேடிக் கொண்டிருந்தாள்.

அந்த மகாவுக்கு தயக்கங்கள் கிடையாது… வருத்தங்கள் கிடையாது… வருவதை இயல்பாக ஏற்றுக் கொண்டு போய்விடுபவள் அவள்… ‘இப் யூ கான்ட் ப்ரிவன்ட் எ ரேப்… ஜஸ்ட் என்ஜாய் இட்…’ என்று சொல்லுமளவு தெளிவாக இருந்த மனது எப்போது இப்படி குழம்ப ஆரம்பித்தது என்று புரியவில்லை. காரணம் ‘ஷ்யாம்’.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!