VNE 56(1)

VNE 56(1)

56

“அவங்களை பத்தி எனக்கு தெரியும்மா… இதெல்லாம் அங்க சகஜம்… நீ தப்பா நினைக்காத…” வெகு சாதாரண குரலில் அவள் கூறியதை கேட்ட பைரவிக்கு, ‘அட லூசுப்பொண்ணே…’ என்று தான் திட்ட தோன்றியது.

யாரோ ஒருத்தி அவன் இடுப்பை பிடித்துக் கொண்டு சிரிக்குமளவு கணவனை விட்டு வைப்பார்களா என்று கேட்க தோன்றியது. அதை கேட்டும் வைத்தார்.

“ஏன்டி எவளோ ஒருத்தி அவர் இடுப்பை பிடிக்கறா… நீயும் கண்டிக்காம உன் புருஷனை தாங்கிப் பிடிக்கற… இதெல்லாம் எங்க போறது?”

மகாவுக்கு உள்ளுக்குள் சூட்டுக் கோலை வைத்து இழுத்தார் போலத்தான் தோன்றியது. ஆனாலும் அவனை விட்டுக் கொடுக்க முடியாது. அதை மறைத்துக் கொண்டு,

“ம்ம்மா… இப்படியெல்லாம் அவங்க முன்னாடி கேட்டு வெச்சுடாத… லூசு மாதிரி…” என்றவளை முறைத்த பைரவி,

“ஆமான்டி… உன்னை பெத்தவ நான் உனக்கு லூசு மாதிரி தான் தெரிவேன்… எனக்கு தோனுச்சு சொல்லிட்டேன்…” என்று புலம்ப,

“ம்மா… போதும்மா விடேன்…” என்று இவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, ஷ்யாமின் கார் உள்ளே நுழையும் சப்தம் கேட்டது.

சிரித்தபடியே உள்ளே வந்த ஷ்யாமையும் கார்த்திக்கையும் பார்த்தவர்கள் தங்களது வாக்குவாதத்தை சட்டென நிறுத்திக் கொண்டனர். மாப்பிள்ளையை கண்டவுடன் தன்னையும் அறியாமல் புன்னகை பூசிக்கொண்டு, மரியாதையாக,

“வாங்க மாப்பிள்ளை…” என்றவரை பார்த்து சின்ன புன்னகையை உதிர்த்தான். இருவருக்குமாக டிபன் தயார் செய்ய பைரவி உள்ளே சென்றுவிட, மஹாவை நெருங்கி அமர்ந்தான் ஷ்யாம். தள்ளி அமர முயன்றவளை விடாமல் அவளது தோளிலும் கைபோட்டுக் கொள்ள, தந்தை முன் என்ன இப்படி செய்கிறான் என்ற அவள் சங்கடத்தில் நெளிய, முருகானந்தம் புன்னகைத்துக் கொண்டார். திருமணமான புதிதில் தானும் இப்படித்தானே என்ற எண்ணம் புன்னகையை தோற்றுவித்து இருந்தது.

மற்றவர் முன் தன்னுடைய உரிமையை நிலைநாட்டும் ஒரு விதமான மனநிலை அது… புது மனத்தம்பதியருக்கே உரித்தான ஒரு ஸ்பெஷல் மனநிலை.

ஆனால் காலையிலேயே தன்னை கடுப்பேற்றி அனுப்பி வைத்த மனைவியை எப்படி கடுப்பேற்றுவது? உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே தான் அவளிடம் பேசாமலே வம்பு செய்து கொண்டிருந்தான். அதோடு எலெக்ஷன் விஷயத்தில் தன்னுடைய கை ஓங்கி இருப்பதில் உண்டான சந்தோஷம், முந்தைய தினம் விட்டல் ராவ் விஷயத்தினாலும் மனம் இலகுவாகி இருந்தது.

ஷ்யாமை பார்த்து கிண்டலாக சிரித்த கார்த்திக், பிருந்தாவும் இன்னமும் உடனிருப்பதை கண்டவன், “ஏய் வாலு… இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க இங்க?” என்று வேண்டுமென்றே அவளை சீண்ட, பிருந்தா முறைத்தாள்.

“நான் எங்க இருந்தா உனக்கு என்னன்னு கேளு பிருந்தா…” முருகானந்தம் எடுத்துக் கொடுக்க,

“மாமா… நான் யார்கிட்டயும் பேசற மாதிரி இல்ல… தேவையில்லாம என்னை யாரும் வம்பிழுக்க வேண்டாம்ன்னு சொல்லி வைங்க…” என்று கடுகடுத்தாள்.

“என்ன இப்படியொரு திடீர் ஞானோதயம்ன்னு கேளுங்கப்பா…” என்று அவனும் முருகானந்தம் வழியாகவே கேட்க,

“என்ன பண்றது? இப்பவாவது எனக்கு ஞானோதயம் வந்துச்சேன்னு சொல்லுங்க மாமா…” பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கூற, இருவரையும் சிரித்தபடி பார்த்து இருந்தனர் மற்ற மூவரும். இருவரின் சுவாரசியமான விளையாட்டை ரசித்து பார்த்தாள் மஹா.

“அதான் ஏன் வந்துச்சுன்னு கேளுங்கப்பா…” மீண்டும் சிரித்த கார்த்திக், அவளை விடாமல் வம்பிழுக்க,

“பேசாம இவங்களை கட் பண்ணி விட்டுட்டு நான் நிம்மதியா வேலை பார்க்க போறேன்னு சொல்லுங்க மாமா…”

“அட… சூப்பர்… எப்ப பண்ண போறான்னு கேளுங்கப்பா…” சிரித்துக் கொண்டே கூற, முருகானந்தம் இடைமறித்தார்.

அவருக்கு உண்மையிலேயே கோபம் வந்தது. காதலிக்கிறேன் என்பானாம். ஆனால் திருமணம் செய்ய முடியாது என்பானாம். மகனது காதலை உடனடியாக அங்கீகரித்து ஒப்புக்கொண்டதன் பலனா இது? அந்த சிறு பெண்ணையும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறானே என்ற கோபத்தில்,

“டேய் நிறுத்துடா… ஓவரா வம்பு பண்ற… அவங்க அப்பா கல்யாணத்தை பத்தி பேசும் போதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு இருக்க… அப்புறம் எதுக்கு லவ் பண்ணியாம்? இப்பவே மஹா கல்யாணத்துல உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு கேட்காத ஆள் பாக்கி இல்ல… அந்த மனுஷனுக்கு எப்படி இருக்கும்?” கார்த்திக்கை வசமாக பிடித்துக் கொண்டார் முருகானந்தம்.

“அதுக்கு நான் என்னப்பா பண்ண முடியும்? அடுத்த பட வேலையெல்லாம் ஸ்டார்ட் பண்ணியாச்சு… இப்போதைக்கு என்னோட கான்சன்ட்ரேஷன் அதுல தான் இருக்கு… அதோட இந்த ப்ரொடியுசர் கவுன்சில் எலெக்ஷன் வேற… என்னால வேற எதையும் இப்போதைக்கு நினைச்சு கூட பார்க்க முடியாது…” என்று கார்த்திக் முடிக்க,

“யோவ்… கல்யாணம் பண்ணா எலெக்ஷன்ல நிக்க கூடாதுன்னு யாருய்யா சொன்னான்? இது ஒரு பக்கம்… அது ஒரு பக்கம்… அவ்வளவுதான்…” என்று ஷ்யாம் சிரிக்க,

“கான்சன்ட்ரேஷன் மிஸ் ஆகும் மச்சான்…” என்றவனிடம்,

“ஆஹா… அடடா… அடடா… இந்த அறிவு எனக்கில்லாம போச்சே…” என்றான் சிரித்தபடி, ஓரக்கண்ணால் அருகில் அமர்ந்திருந்த மஹாவை பார்த்தபடி.

“அப்படீங்கற?” என்று கிண்டலாக கார்த்திக் கேட்க,

“ஆமாங்கறேன்…” என்று சிரித்தான் ஷ்யாம்.

“மஹா… இந்த மாப்ள சாரை என்னன்னு கேளு…” என்று சிரிக்க, அவள் அவனையும் முறைத்தாள்.

“என்ன லட்டு… இந்த பக்கமும் அனல் வீசுது?” என்று கேலியாக கேட்ட கார்த்திக்கை,

“நான் உன்கிட்ட பேசற மாதிரி இல்ல…” இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவள், ஷ்யாமின் கையை எடுத்து விட்டு தள்ளி அமர முயல, அவன் இன்னமும் அவளை பக்கவாட்டில் கழுத்தோடு இறுக்கிப் பிடித்துக் கொண்டு,

“ஏன் லட்டு? உன் உடன்பிறப்பு மேல என்ன கோபம்?” என்று சிரித்தான். அவனுக்கு மகாவிடம் கோபத்தை இழுத்துப் பிடித்து வைக்கவேல்லாம் தெரியாது. தேவையும் இல்லை என்று தான் நினைத்தான். காலையில் அவள் கேட்ட கேள்வி அவனை அப்போது சுருக்கென்று தான் குத்தியது. ஆனால் சற்று நிதானித்து நினைத்து பார்க்கும் போது அவள் கடந்து கொண்டிருக்கும் குழப்பமான மனநிலையை தான் மட்டுமே சரி செய்ய முடியும் என்று தோன்றியது.

தன்னுடைய வார்த்தைகளே கண்டிப்பாக பூமராங் ஆகும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ள நிலையில், அவள் கண்ட படங்களின் குழப்பம் இன்னமும் தீராத நிலையில், அவளது வார்த்தைகளை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது.

ஆனால் என்னதான் தனக்குத் தானே சமாளிபிகேஷன் கொடுத்துக் கொண்டாலும், அனைத்தையும் மீறிய ஒரு வலி, நெஞ்சை அடைத்தது தான் உண்மை.

“யாருக்குமே நான் தேவைப்படலை… ஒருத்தருக்குமே என் மேல அக்கறையும் இல்ல… நான் எதுக்காக இருக்கணும்ன்னே தெரியல…” கண்களில் நீரோடு கூறியவளை கேள்வியாக பார்த்தான் கார்த்திக். அதிர்ந்தான் ஷ்யாம்.

“என்னடா இப்படி சொல்ற?” அருகில் அமர்ந்த கார்த்திக் தோளை அணைத்துக் கொண்டு கேட்க,

“இன்னைக்கு மனு தாக்கல் பண்றன்னு என்கிட்டே சொன்னியா கார்த்திண்ணா?” கண்களை துடைத்துக் கொண்டு மஹா கேட்க, கார்த்திக் நாக்கைக் கடித்து கொண்டான்.

“ஷ்யாம் சொல்லிருப்பாப்லன்னு நினைச்சேன் லட்டு…” என்று கூற,

“நீ சொன்னியா? நீ இன்னைக்கு மனு தாக்கல் பண்ண போற விஷயமே பிருந்தா சொல்லித்தான் எனக்கு தெரியும்… கல்யாணத்துக்கு முன்னாடி என் கிட்ட எல்லாத்தையும் டிஸ்கஸ் பண்ணுவல்ல… இப்ப ஏன் ஒரு இன்பர்மேஷன் கூட சொல்லலை?” என்று தழுதழுத்த குரலில் கேட்க,

“டேய்… நான் உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் நினைக்கலையே… அரேஞ்ச்மென்ட்ஸ் முழுக்க பார்க்கறது ஷ்யாம் தான்… பேருக்கு தான்டா நான் நிக்கறேன்… அங்க இருக்கறது உன் வீட்டுக்காரர் நேம் தான்… மச்சான் சொல்லி இருப்பாப்லன்னு நெனச்சேன் மஹா… உன்னை அவாய்ட் பண்ணனும்ன்னு நினைப்பேனா?” என்று கேட்டவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. என்னதான் இருந்தாலும் ஷ்யாம் சொல்வான் என்று தான் நினைத்திருக்கக் கூடாது தான். அது தன்னுடைய தவறு தான் என்று எண்ணிக் கொண்டுதான் கூறினான்.

“அவங்க சொல்லலை… அவங்களுக்கும் நான் தேவையில்லை… உங்க யாருக்கும் நான் தேவையில்லாம போயிட்டேன்ல…” என்றவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. சின்ன விஷயம் தான். ஆனால் கமு, கபி வேலை செய்து கொண்டிருந்தது. அதாவது கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின்! அந்த நேரத்தில் அந்த பெண்களின் மனநிலை.

அவளது வார்த்தைகள் ஷ்யாமுடைய மனதை தைத்தது.

“என்னடி லூசு மாதிரி பெரிய வார்த்தையெல்லாம் பேசற? அதுவும் அண்ணாவ வெச்சுகிட்டே… பேக்கு… இந்த தடவை விட்டுடு மஹா… ஏதோ தப்பு பண்ணிட்டாங்க… இனிமே இப்படி பண்ணா நாம மம்மி கிட்ட சொல்லிடலாம்…” பிருந்தா அவளை சமாதானம் செய்ய முயல,

“நீ ஈசியா சொல்லிடுவ பிருந்தா… முதல்ல பட வேலையெல்லாம் ஆரம்பிக்கறப்ப என்கிட்ட எவ்வளவு டிஸ்கஸ் பண்ணான்னு உனக்கு தெரியும்ல… இப்ப கல்யாணம் ஆகி போய்ட்டா எதையும் சொல்லக் கூட கூடாதுல்ல… நெக்ஸ்ட் பில்ம் ஆரம்பிக்கறான்… எலெக்ஷனுக்கு மனு தாக்கல் பண்ணிருக்கான்… ஆனா எனக்கு ஒண்ணுமே தெரியல… எல்லாருமா சேர்ந்து என்னை தலை முழுகிட்டீங்கல்ல…” என்று மீண்டும் அழ,

“அட அறிவுக் கொழுந்தே… படம் ப்ரடக்ஷன் மட்டும் தான் நான்… எல்லா கண்ட்ரோலும் மச்சான் தான்… அவர் உன்கிட்ட சொல்லலையா? இன்பாக்ட் ஷ்யாமோட மச்சான் படம்ன்னு தான் அட்ரெஸ் பண்றாங்க… ஒரே நாள்ல லக்ஷ்மில்லாம் மாறிப்போச்சு மஹா… ” சந்தோஷமாக கூறினாலும் உண்மையில் உள்ளுக்குள் வியப்பாக இருந்தது. இதை கூட மனைவியிடம் அவன் சொல்லவில்லையா என!

அவன் சொல்வான், தான் சொல்ல தேவையிருக்காது என்று சாதரணமாகத்தான் நினைத்திருந்தான். ஆனால் அடிப்படையே ஆட்டம் காண்கிறதே இங்கு!

திரும்பி அவனை பார்த்தவள், “இவங்க எதையுமே என்கிட்டே சொல்லலை… நான் தான் தேவையே இல்லல்ல…” என்று மீண்டும் வெறுமையாக கூற,

“நான் எல்லாத்தையும் சொல்ற அளவுக்கு, ஷேர் பண்ணிக்கற அளவுக்கு, என்கிட்ட பேசறியா மஹா?” என்று கேட்டான் ஷ்யாம், உள்ளுக்குள் பரவிய வலியோடு.

இத்தனை பேரின் முன்பும் அதை கேட்க அவனுக்கும் ஒரு மாதிரியாக தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது என்றும் புரியவில்லை.

“ஏன்? உங்க கிட்ட பேசாம வேற யார்கிட்ட அந்த வீட்ல பேசப் போறேன்? நாலு சுவர் மட்டும் தான் இருக்கு…”என்றவளுக்கு தொண்டை அடைத்தது.

“ஆமா… ஜஸ்ட் ஃபோர் வால்ஸ் அண்ட் எ ரூஃப்… வி ஆர் லிவிங் அண்டர் ஒன் ரூஃப்… அவ்வளவுதான மஹா…” என்று அவன் கேட்டு விட, கார்த்திக்கும் பிருந்தாவும் அதிர்ந்து பார்த்தனர்.

முருகானந்தத்திற்கு அவன் கூறியது சட்டென புரியவில்லை. ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. ஒரு கூரையின் கீழ் வாழ்கிறோம். அவ்வளவுதான் என்பதை என்ன அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை.

அவளது அழுகையும், வெடிப்பும் அவளிடம் எதுவும் சொல்லாமல் இருந்ததற்கானது மட்டுமல்ல என்று கார்த்திக்கு புரிந்தது.

“சரி… நேத்து உன்கிட்ட ஒரு ஹேப்பியான விஷயத்தை ஷேர் பண்ணனும்ன்னு நினைச்சு அத்தனை தடவை கால் பண்ணேன்… எடுக்கலை… ஐ நோ யூ வேர் பிசி இன் ஹாஸ்பிடல்… ஆனா வீட்டுக்கு வந்தப்புறமும் கூட சொன்னேன்… ஆனா அதையும் இதையும் பேசி சண்டை போட்டதுதான் மிச்சம்… இட் வாஸ் ரியலி எ பிக் நியுஸ்… ரொம்ப நாள் எதிர்பார்த்துட்டு இருந்தது… இன்னும் யார்கிட்டயும் நான் ஷேர் பண்ணலை… அது என்னன்னு தெரிஞ்சுக்கவாச்சும் ட்ரை பண்ணியா?” என்று நிதானமாக அவன் கேட்க, இப்போது அவளுக்குள் முரண்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!