VNE 56(2)

VNE 56(2)

தான் செய்ததும் தவறோ? அவன் கூறினான் தான்… ஆனால் அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் தான் நினைத்ததை மட்டும் பேசுவது என்ன முறை? தன்னை தானே கேட்டுக் கொண்டவள், அவனை பரிதாபமாக பார்த்து,

“சரி… இப்ப சொல்லுங்க…” என்று தகைந்து வர,

“நீ நினைச்சப்ப எல்லாம் சொல்ல முடியாது… எனக்கா மூட் வரும் போது தான் சொல்ல முடியும்…” அவன் கோபமாகவெல்லாம் சொல்லவில்லை. ஆனால் குரலில் சிறு வேதனை அவனையும் அறியாமல் தொனித்தது. யாரும் கண்டுகொள்ளாத அந்த உணர்வை கார்த்திக் கண்டுகொண்டான். ஆனால் கணவன் மனைவிக்கிடையில் அவன் செல்ல முடியாது. அப்படியேவும் விட முடியாதே என்று சங்கடமாக பார்த்தான். அருகிலேயே முருகானந்தம் வேறு, சற்று கலக்கமாக அமர்ந்திருந்தார்.

“சரி…கேக்காதது என்னோட தப்புதான்… சொல்லுங்க… ப்ளீஸ்…” என்று கீழறங்கி வந்தவளை பார்க்காமல்,

“யூ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட் மீ… அண்ட் அட்டைம்ஸ் ரொம்ப அண்டர்எஸ்டிமேட் பண்ற… இப்ப இங்க உக்கார்ந்து யாருக்குமே உன் மேல அக்கறை இல்லைன்னு எதுக்காக அழனும்? சோ யூ வான்ட் டூ கன்வே தட் ஐ ஆம் அரகன்ட்… ரைட்?”

“நான் எப்ப அப்படி சொன்னேன்?” தான் அவ்வாறு சொன்னோமா என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவள் கூறியதன் கிளை அர்த்தம் அதுதான் என்பது அவளுக்கே புரியவில்லை.

“அப்படீன்னா நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்? கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படி வேணும்னாலும் பேசலாம்… ஆனா இப்ப நீ இப்படி பேசினா, நான் உன்னை நல்லா வெச்சுக்கலைன்னு தான் நினைப்பாங்க… அது உனக்கு இன்னும் புரியல…” அவளது சிறுபிள்ளை தனத்தை, சட்டென பேசிவிட்டு யோசிக்கும் சுபாவத்தை புரிந்தவர்களுக்கு அவள் செய்தது சாதரணமாக தோன்றலாம். ஆனால் எந்த நேரத்திலும் அது சரியாக இருக்காதே. அதை மென்மையாக சொல்லியும் புரிய வைக்க முடியாது. சற்று தடாலடியாக அடித்தால் மட்டுமே அவள் வழிக்கு வருவாள் என்பது அவனது கணக்கு.

அவனது சாடலில் தலைகுனிந்தவள்,

“சாரி…” என்றவள் சட்டென எழுந்து கொண்டாள்.

உணர்வுகள் அனைத்தையும் அடக்கி வைக்க பழக சொல்கிறான். ஆனால் அவளால் அது முடியாத காரியம். மனதில் வைத்துக் கொள்ள தெரியாது… சட்டென பேசி விடுவது அவளது குணம், உடன் பிறந்தது. அடக்க அடக்க அவள் எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடலாம் என்று தான் தோன்றியது.

அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தான். ஒரு விதமான இறுக்கத்தோடு தான் இருந்தாள்.

“மேடம்ஜி என்ன எழுந்துட்டீங்க?” என்றவன் அவளது கையை பிடித்து அமர வைக்க முயல,

“நான் கிளம்பனும்…” என்று முறைத்தபடி கூறினாள்.

“என்னை விட்டுட்டு ஓடறதுலையே குறியா இருடி…” என்று சிரித்தவன், அவளை இழுத்து தன்னருகே அமர வைத்தான்.பல்லைக் கடித்துக் கொண்டே அருகில் அமர்ந்தவளை சிறு சிரிப்போடு பார்த்தான்.

பிருந்தாவை நோக்கி குனிந்த கார்த்திக், “ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க, அவள் ஆமென்று தலையசைத்தாள். ‘என்ன?’ என்று பார்வையால் அவன் கேட்க, அவன் புறம் குனிந்த பிருந்தா,

“நீங்க மனு தாக்கல் பண்ணது டிவி நியுஸ்ல வந்துச்சு…” என்று நிறுத்த,

“ம்ம்ம்… சரி?”

“அதுல இந்த சௌஜன்யா ஷ்யாம் அண்ணனோட இடுப்பை பிடிச்சுட்டு சிரிக்கற மாதிரி காட்டிட்டாங்க…” என்று மென்று விழுங்கவும்,

“இடுப்பை பிடிச்சாளா?” என்று யோசித்தான். எப்படி யோசித்தாலும் அந்த சம்பவம் நினைவுக்கு வர மறுத்தது. அதாவது அது பெரிய சம்பவமாகவே அவனோ, ஷ்யாமோ நினைக்கவே இல்லை. அவளாக வந்தாள், ஷ்யாம் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருக்க, எதையோ அவன் காதில் கிசுகிசுத்தாள். அதை கேட்டவன், சாதாரணமாக, ‘நாம அப்புறமா இதைப் பத்தி பேசலாம் மா…’ என்று முடித்தான். அதன் பின் யாரோ சற்று நகைச்சுவையாக பேசிவிட, எல்லோரும் வாய்விட்டு சிரித்தது நினைவு இருந்தது. ஆனால் எந்த கேப்பில் அவள் இப்படி செய்திருக்கக் கூடும் என்பது நினைவில்லையே.

கார்த்திக்கு மண்டை குழம்பியது.

நடந்து கொண்டிருந்த அலம்பல்களை சமையலறையிலிருந்து பைரவி பார்த்துக் கொண்டுதானிருந்தார். அவருக்கு என்னவோ இருவரையும் பார்க்கையில் புது மண தம்பதியராகவே தோன்றவில்லை. காதலித்து மணம் செய்து கொண்டவர்கள் இப்படி இருப்பார்கள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

என்னவென்று மஹாவாக கூறினால் தான் உண்டு என தெரியும் அவருக்கு. அவளானால் கணவனை விட்டுத் தர முடியாமல் தங்களிடமே வாதம் செய்து கொண்டிருகிறாள். ஏதாவது பெரிய பிரச்சனை என்றால் என்ன செய்ய முடியும் அவளால் என்று தோன்றி அவரது அடி வயிறு கலங்கியது அதிலும் ஷ்யாம் போன்ற ஒருவனை சமாளிப்பது என்பதை அவரால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.

ஷ்யாமை பொறுத்தவரை நன்றாக பழகும் வரை அவனை போன்ற ஒரு நல்லவனை பார்க்க முடியாது. ஆனால் கொஞ்சம் மாறிவிட்டால் அவனைப் போன்ற மோசமான பிறவியை கண்டிருக்கவே முடியாது என்பது திண்ணம்.

பெண்ணை பெற்ற அந்த தாய்க்கு உள்ளுக்குள் ஏதோ நடுக்கம் ஓடியது.

ஆண்டவா… என் பெண்ணை காப்பாற்று என்று நினைத்துக் கொண்டார். திருமணம் செய்து கொடுக்கும் வரை இது தோன்றவே இல்லை அவருக்கு. ஷ்யாமின் அந்தஸ்து, அவனுக்கான மரியாதை, அவர்களது உயரம் எல்லாமாக கிட்டத்தட்ட பைரவியின் கண்ணை மறைத்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் இப்போது மகளின் நல்வாழ்க்கை தான் முக்கியம் என்று தோன்றியது.

ஆனால் இந்த கவலையெல்லாம் அவருக்கு தேவையே இல்லை என்பதை யார் கூற முடியும்? ஷ்யாமை அடித்து துவைத்துக் கொண்டிருப்பது அவரது மகள் தான் என்பதை அவர் உணர்வாரா?

உணர்ந்தால் மட்டும் அவரால் என்ன செய்து விட முடியும்?

“உங்க அம்மா உனக்கு காபி போட்டு தந்திருப்பாங்களே?” என்று கிண்டலாக ஷ்யாம் கேட்க,

“ஆமா…” சற்று கொதிப்போடு தான் கூறினாள் மஹா. அவள் புறமே திரும்பியிருந்தவனை, ‘ஸ்ஸ்ஸ்’ என்று சப்தமில்லாமல் அழைத்தான் கார்த்திக். இந்த பிரச்சனை குறித்து அவனை உஷார் படுத்தாவிட்டால் கண்டிப்பாக சேதாரம் அதிகமாகி விடுமே! ஆனால் அவன் திரும்பினால் தானே?! அவனது கவனம் முழுவதும் தான் அவனது மனைவி மேலேயே இருக்கிறதே!

“அப்புறம் என்ன கொட்டிகிட்ட?”

“ம்ம்ம்… என்னவோ…”

“அப்படி ஒரு டிஷ்ஷா?” என்று சிரித்தவனை பார்த்து முறைத்தாள் மஹா.

“ம்ம்ம்… ஆமா…”

“சரி… நீ மட்டும் கொட்டிகிட்டா போதுமா? நான் மாமியார் சமையலை ஒரு கை பாக்க வேண்டாமா?” அதே நக்கல் தான் அவனது குரலில்.

அதுவரை மெளனமாக இருவரது சண்டையும் பார்த்துக் கொண்டிருந்த முருகானந்தம்,

“பாப்பா… ஏன்டா மாப்ள கிட்ட இப்படி முறைச்சுக்கற?” என்று கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லப்பா… வேண்டுதல் தான்…” என்று குதர்க்கமாக கூற,

“வேண்டுதலா? எல்லாம் என் நேரம் தான்…” என்று சிரித்தவனை பார்த்த முருகானந்தம்,

“என்ன மாப்ள குட் நியுஸ்? உங்க பொண்டாட்டி கிட்ட மட்டும் தான் சொல்வீங்களா?” என்று சிரிக்க, ஷ்யாம் அர்த்தமாக மஹாவை பார்த்தான்.

புன்னகையோடு, “நம்ம விட்டல் ராவ் இருக்காரில்லையா….” என்று நிறுத்த, முருகானந்தம், “சென்ட்ரல் மினிஸ்டர் தானங்க சொல்றீங்க?” என்று கேட்க, மேலும் கீழுமாக தலையாட்டியவன்,

“ம்ம்ம்… ஆமா… அவரோட ப்ளாக்கை எல்லாம் நாம தான் முக்கால்வாசி வைட்டாக்கி கொடுக்கறோம் மாமா…” என்று கூற,

“நானும் கேள்விபட்டேன்…” என்றார்.

“மெடிக்கல் காலேஜ்ல அத்தனை இன்வஸ்ட்மென்ட்டும் போயிட்டு இருக்கு… மொத்தமா பெரிய அமௌன்ட்ட வெளிய எடுத்துட்டேன்… அதனால கொஞ்சம் பண முடைல இருந்தேன்…” என்று அவன் கூற, அந்த பண முடை எதனால் என்று கார்த்திக்கு புரிந்தது. மொத்தமாக இருபது கோடியை ரன்னிங் பிசினசிலிருந்து எடுப்பது என்பது எவ்வளவு ரிஸ்கியான விஷயம் என்பது அவனுக்கு புரியும். என்னதான் தான் தியேட்டரை எழுதி கொடுத்திருந்தாலும், அந்த தியேட்டர் அவ்வளவு ஒர்த் இல்லை என்பதை காட்டிலும், அது சாலிட் அசெட். லிக்விட் கேஷ் வெளியே போவது என்பது மொத்தமாக தன் மேல் ரிஸ்கை ஏற்றிக் கொள்ளும் விஷயம் என்பதை உணர்ந்தவனுக்கு ஷ்யாமின் அந்த துணிச்சல் மிக மிக பிடித்ததாக இருந்தது. ஆச்சரியமாக இருந்தது. பயமாக பதட்டமாக கூட இருந்தது.

கார்த்திக் பெரிய ரிஸ்க் எல்லாம் எடுத்தது இல்லை. பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்காமல், இருக்கின்ற நகைக் கடையை தான் வைத்து ஓட்டினான். அதன் பின்

துணிச்சலாக அதையும் செய்துவிட்டு, யாரிடமும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டிருந்திருக்கிறானே என்ற ஆச்சரியம் வேறு.

இதுவரை அந்த இருபது கோடி சமாசாரத்தை மகாவிடம் கூறவில்லை என்பதும் திண்ணம். எப்படி இப்படி இருக்கிறான் என்று ஆச்சரியமாக இருந்தது.

இந்த குருட்டு தன்னம்பிக்கை தனக்கு கண்டிப்பாக வர போவதில்லை என்று நினைத்துக் கொண்டான்.

“பெரிய அமௌன்ட்னா டுவன்டி சி தானே மச்சி?” என்று கேட்ட கார்த்திக்கை கண்களால் அடக்கினான்.

“இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி மச்சான்…” என்றவன், “ராவ், அடுத்த செட்டுக்கு பணத்தை இறக்கிட்டார்…” என்று இன்னமும் புன்னகைத்தான். “என்ன… அமௌன்ட் தான் கொஞ்சம் அதிகம்… முதல் கட்டமா ஐநூறை வைட் பண்ணி தர சொல்றார்… அப்புறமா இன்னும் நிறைய பேஸ் வரும்… மொத்தமா ஒரு இரண்டாயிரம் கோடிக்கு அந்த ஆள் கணக்கு போட்டுட்டு இருக்கார்…” என்று கொஞ்சம் கூட அதிராமல் கூற, கேட்டவர்களுக்கு தான் தலை சுற்றியது. முருகானந்தம் பேசவே இல்லை

“மச்சான்…” என்று மென்று முழுங்கியவன், “பார்த்து ஜாக்கிரதை…” என்று கூற,

“ப்ச்… இதை விட பெரிய அமௌன்ட் எல்லாம் நான் ஹேண்டில் பண்ணிருக்கேன்… என்ன ரிஸ்க் ஜாஸ்தி… கணக்கு கரெக்டா இருக்கணும்… நம்ம கணக்கு எப்பவும் பக்கா…” என்றவன், சற்று இடைவெளி விட்டு, “புலி வாலை பிடிச்ச கதை… விட முடியாது… விட்டா புலி நம்மளை அடிச்சுடும்…” என்றவன், வெகு அழுத்தமாக மஹாவை பார்த்தான்.

இது அவளுக்கான பதில்… கட் அன்ட் ரைட்டான பதில்… ஏன் அதை செய்கிறாய், இதை செய்கிறாய் என்று அவள் கேட்டதற்கான பதில். பிடித்த புலியை கண்டிப்பாக விட முடியாது… தீனி போடவில்லை என்றாலும் அது அவனையே அடித்து விடும்.

“இவ்வளவு ரிஸ்க் தேவையா?” என்று கார்த்திக் ஆரம்பிக்கும் போதே,

“ரிஸ்க் எடுக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் மச்சி… இப்ப உன் தங்கச்சியை கட்டி நான் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கேன் பாரு… இதை விட அந்த ரிஸ்க் எல்லாம் கம்மி தான்டா…” என்று சிரிக்க, மஹா அவனை முறைத்தாள்.

“வீட்டுக்கு போகணும்ன்னு ஆசையிருக்கா மச்சான்?” கார்த்திக் சிரிக்க,

“அதை நினைச்சா தான் பக்கு பக்குன்னு இருக்கு…” என்று நெஞ்சை பிடித்துக் கொள்ள, அதற்கும் மேல் தாள முடியாமல் அருகிலிருந்த குஷனை அவனது தலை மேல் மட்டென்று இறக்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!