VNE 59

VNE 59

59

மதியம் முதல் மஹாவை தேடி ஒய்ந்து இருந்தனர். ஸ்ரீராமும் அவனது நண்பர்களும் ஒரு பக்கம், கார்த்திக் ஒரு பக்கம், சிவச்சந்திரனும் அவனது டீம் ஒரு பக்கம், இளங்கவி என்று ஒரு படையே சென்னையை சலித்து எடுத்துக் கொண்டிருந்தது.

“பார்க் ஹாயாட்ல இருந்து போனா மூணு நாலு வழில போகலாம் பாஸ். ராஜ்பவன், கிண்டின்னு அந்த ஏரியா முழுக்க நம்ம ஆளுங்களை விட்டு கவர் பண்ணிட்டு இருக்கோம். ஆனா மேடம் எதாவது வண்டில ஏறியிருந்தா தான் பிரச்சனை. நாம கவர் பண்ண வேண்டிய ஏரியாவோட வாஸ்ட்னஸ் அதிகமாகுது… அவங்க கிட்ட ஏதாவது ஒரு ஜிபிஎஸ் சிக்னல் காட்ற டிவைஸ் இருந்தா போதும். அட்லீஸ்ட் செல்போன், ஸ்விட்ச் ஆப்ல இருந்தா கூட ஏதாவது ட்ரை பண்ணிடலாம்… இப்ப நெக்ஸ்ட் லெக் ஆப் ஆக்ஷன் என்னன்னு நீங்கதான் சொல்லணும்…”

இரவு ஏழு மணி வரை சுற்றியடித்து விட்டு மீண்டும் அதே இடத்திற்கு வந்தவனிடம் சிவச்சந்திரன் கூறியதை கேட்டபோது மனம் இன்னமும் சோர்வடைந்தது.

எதுவும் பேசாமல் காரின் மேல் சாய்ந்து நின்று கொண்டான்.

என்ன செய்வது என்று புரியாமல் நின்ற சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது அவனது வாழ்வில். விஜியின் நம்பிக்கை துரோகத்தின் போது கூட அவன் இந்தளவு கலங்கி நிற்கவில்லை. கோபம் மட்டுமே வந்தது. அவனது அந்தரங்கம் பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்ட போதும் கூட, தாள முடியாத ஆத்திரம் தான் வந்தது. அவனை பழிவாங்க சொன்னது.

ஆனால் எதுவுமே புரியாமல் வெற்றிடத்தில் சுவாசத்திற்கு ஏங்கி நிற்கும் நிலை, அதுவும் இது போல, வந்ததே இல்லை.

‘போயஸ் கார்டன், பெசன்ட் நகர் என்று எங்குமே செல்லவில்லை. பிருந்தாவின் வீட்டுக்கும் போகவில்லை. பிருந்தாவே கார்த்திக்கின் வீட்டில் முருகானந்தத்தை கவனித்துக் கொண்டு இருக்க, இவள் எங்கு செல்ல முடியும்?’ தீவிரமாக சிந்தித்து பார்த்தாலும், எதுவுமே அவனது மூளைக்கு உரைக்கவில்லை.

பைரவி அரை உயிராக நடமாடிக் கொண்டிருந்தார், விஷயத்தை கேள்விப்பட்டது முதல்!

விஷயம் ஹைதராபாத் வரை போய்விட்டது என்பதை கார்த்திக் உறுதி செய்திருந்தான். அவசரமாக இருவருமே கிளம்பியிருந்தார்கள்.

‘வேண்டாம்… தாங்கள் இருவரும் பார்த்துக் கொள்வதாக’ கூறியபோதும் அவனது தந்தை பிடிவாதமாக கிளம்பி விட்டதாக கார்த்திக் தெரிவித்து இருந்தான்.

கார்த்திக்கும் மிகப் பதட்டமாகத்தான் தேடிக் கொண்டிருந்தான்.

ஒற்றை தங்கை. அவளும் நல்லவள் தான். ஷ்யாமும் நல்லவன் தான், அவளுக்கு மட்டும்! அவளை தாண்டி சிந்திக்கவே முடியாமல் இருப்பவனை புரிந்து கொள்ளாமல் இப்படி செய்து விட்டாளே என்று அவனுக்கு வேதனையாக இருந்துது. ஷ்யாம் பக்கம் தவறு சொல்லும்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவனோ அவளை உயிராக நினைத்துக் கொண்டிருக்கிறான்.

தங்கைக்கும் அவளது கணவன் உயிர் தான். ஆனால் சந்தேகம் மிகவும் கொடிய வியாதி, கேன்சரை காட்டிலும் என்பதை இன்னும் அவள் அறியவில்லை.

சௌஜன்யாவை அவள் மறந்து விட்டிருந்தால், கண்டிப்பாக இந்த பிரச்சனை வந்திருக்காது என்பது கார்த்திக்கின் எண்ணம். என்னவாக இருந்தாலும் வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிக முக்கியமல்லவா!

இப்படி நம்பிக்கையில்லாமல் செய்த தங்கையை திட்டிக் கொண்டே இருந்தாலும், அவனால் தாள முடியவில்லை. மஹா அவனுக்கும் உயிர். இத்தனை வருடங்களில் அதிகமாக பிரிந்திருந்தது ஷ்யாமினால் மட்டும் தான். இப்போதும்?

அவளது வேதனையும், பயமும், கோபமும், ஆற்றாமையும் கூட அர்த்தமானது தான். எந்த பெண்ணாலும் கடக்கவியலா நெருப்பாற்றை கடந்து கொண்டிருக்கிறாள், அவனது குட்டி தங்கை. ஆனால் குதிரைக்கு கடிவாளமிட்டதை போல, எந்த பக்கமும் பார்க்க மாட்டேன் என்றல்லவா இப்படி செய்து விட்டாள்.

சோர்ந்து களைத்து ஷ்யாம் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு கார்த்திக் வந்து சேர்ந்த போது முற்றிலுமாக உடைந்து விடும் நிலைமையில் இருந்தான்.

ஷ்யாமுக்கு எத்தனையோ எதிரிகள் உண்டு என்பதை அறிவான். அவனாக செய்து கொண்டது பாதி, தானாக ஆனது மீதி. அவர்களில் யாரேனும் ஒருவருக்கு மகாவை தெரிந்து, எதாவது ஆகிவிட்டால் என்னாவது என்ற நடுக்கம் வேறு உள்ளுக்குள்!

அவனையும் அறியாமல் உடல் நடுங்க, ஷ்யாம் முதுகில் கை வைக்க, அவன் சட்டென திரும்பிப் பார்த்தான், எதிர்பார்போடு!

கார்த்திக்கை வெறுங்கையுடன் கண்டதும், அவனது முகம் மீண்டும் சோர்வில் ஆழ, அருகிலிருந்த சிவச்சந்திரனையும் இளங்கவியையும் விஷ்ணுவையும் பார்த்தான்.

“என்னாச்சு?” என்று மொட்டையாக கார்த்திக் கேட்க,

“நீங்க தான் சர் இனிமே என்ன பண்றதுன்னு சொல்லணும். நம்ம ஆளுங்க முழுசா வண்டில சுத்திட்டு இருக்காங்க. டெக்னிகலா நாம இப்ப வீக்கா இருக்கோம். பாஸ் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்காங்க. சோ நீங்க தான் சொல்லணும்…” சற்று சிறிய குரலில் சிவச்சந்திரன் கூற, கார்த்திக் குழப்பமாக பார்த்தான்.

அவன் மட்டும் என்ன சொல்ல முடியும்?

அவளது தோழிகளின் வீடுகள் அத்தனையும் அலசியாயிற்று. அவள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பிருந்தாவையும் அழைத்துக் கொண்டு போய் பார்த்துவிட்டும் வந்தாயிற்று! எங்கு தான் சென்றிருப்பாள் என்பது தான் தங்கள் முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி.

“எந்த வழியை வேணும்னாலும் யூஸ் பண்ணிக்க சந்த்ரா. ஆனா என் வைப் என் கண் முன்னாடி நிக்கணும். அவ்வளவுதான்…” என்றவன், தன்னுடைய கலக்கத்தை மறைத்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தான்.

“ஓகே பாஸ்… இன்னும் புல் ஸ்விங்ல தேட ஆரம்பிக்கறோம்…” என்ற சிவசந்திரன், “டோன்ட் வொர்ரி பாஸ்… எப்படியும் மேடமை கண்டுபிடிச்சுடலாம்…” என்று தைர்யம் கூற, கசப்பாக புன்னகைத்தான்.

“ஓகே… நீங்க மூணு பேரும் கிளம்புங்க… ஏதாவதுன்னா உடனே எனக்கு சொல்லுங்க…” என்று கூறிவிட்டு, அவர்கள் கிளம்புவதை பார்த்துக் கொண்டிருந்தவன், கார்த்திக்கை பார்த்து,

“என்ன கார்த்திக்?” என்று கேட்க,

“இல்ல… நானாவது மஹாவுக்கு சப்போர்ட்டா இருக்கற மாதிரி இருந்து இருக்கணுமோன்னு தோணுது… அண்ணன் இருப்பேன்ங்கற தைரியம் இருந்துதிருந்தா கண்டிப்பா இப்படி வெளிய போயிருக்க மாட்டால்ல…” என்றவனது கண்களில் கண்ணீர் தேங்கியது!

அதை பார்த்த ஷ்யாமுக்கு மனதுக்குள் அத்தனை வலி!

அவளை அளவில்லாமல் காதலித்தது தான் குற்றமா? அவள் மட்டுமே போதும் என்று இருந்தது குற்றமா? அவள் மட்டும் தான் வேண்டும் என்று இருந்தது குற்றமா?

இந்த காதல் தனக்கு ஏன் வந்துத் தொலைத்தது?

ஒரு ஜீவனை இந்த உலகத்துக்குள் கொண்டு வந்த அந்த நொடியில் தன்னை புதிதாக பிறக்க செய்தாள். பெண்மை என்பது நீ நினைப்பது போல சுலபம் அல்ல என்று புரிய வைத்தாள். வெறும் பத்து நிமிட இன்பம் என்று அவன் நினைத்ததை எல்லாம் அடித்து நொறுக்கி, அவனை புதிய மனிதனாக்கினாள். கற்புக்கும் பியுரிட்டிக்கும் பாடமெடுத்தாள். அவளுக்காக அவனை பதைக்க செய்தாள். உயிர்க்க வைத்தாள். வாழ்க்கையை உயிர்ப்பித்தாள்.

இத்தனையும் அவளறியாமல் அவனுக்குள் அவள் செய்தது. செய்ய வேண்டும் என்று அவள் செய்ததுமல்ல. மாற வேண்டும் என்று இவன் நினைக்கவுமில்லை. அப்படி மாறக் கூடியவனும் அல்ல. காதல் ஒரு ஹம்பக். திருமணம் ஒரு ஏமாற்று வேலை என்று நினைத்தவன். இன்று முழுவதுமாக மாறியிருக்கிறான் என்றால் அது வாலண்டரி ஆக்ஷனாக மாறிவிட்டிருந்தது.

ஆனாலும் இருவரது உறவும் ஒரு நாளில் இடறி விழுந்தது.

இடறி விழுந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தான் போராடுவதில் தான் குற்றத்தை கண்டுபிடித்தாளா?

இத்தனை நாட்களில் எத்தனையோ விதமாய் காயப்படுத்தி பேசியிருக்கிறாள். அவையெல்லாம் இப்போது பெரிய விஷயமாகவே தெரியவில்லை.

‘கூட இருந்து எப்படி வேணும்னாலும் சண்ட போடேண்டி… முடியல மஹா… வந்துடேன்…’ மனதுக்குள் பலவாறாக புலம்ப, கார்த்திக் தலையைப் பிடித்துக் கொண்டு காரை திறந்து வைத்தபடி அமர்ந்து கொண்டான்.

“வீட்டுக்கு போகவே பயமா இருக்கு மச்சான்… எங்கம்மா கேக்கற கேள்விக்கு எல்லாம் என்ன பதில் சொல்றது?” கார்த்திக் கேட்க, ஷ்யாம் வெறுமையாய் அவனை பார்த்தான்.

“சமாளி கார்த்திக். என்ன பண்றது?” என்று உடையக் காத்திருக்கும் குரலில் கூறியவன், “ஓகே கார்த்திக். நீயும் கிளம்பு. ஒரு இடம் விடாம சலிச்சு எடு. எப்படியாச்சும் இந்த நைட் குள்ள கண்டுபிடிக்கணும்…” என்று பிடிவாதமாக கூற, அவன் தலையாட்டிவிட்டு கிளம்பினான்.

அனைவருமாக சென்ற பின் ஷ்யாமும் கிளம்பினான், கலக்கத்தோடு!

ஒவ்வொரு தெருவாக, வீதி வீதியாக, கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போல தேடினான் அவனது மனைவியை!

நினைத்துப் பார்த்திருப்பானா? இப்படி பைத்தியம் போல அவளைத் தேடித் திரிவோம் என்று!

‘கர்மா இஸ் எ பூமராங் ஷ்யாம்…’ என்றோ அவள் கூறியது, அவனது காதில் ஒலித்தது.

ஆம். இது கர்மா தானே!

தனக்கு இதுதான் விதிக்கப்பட்டு இருக்கிறதா?

எத்தனையோ பேரின் மனதை எப்படி வேண்டுமானாலும்  உடைத்திருக்கலாம். அத்தனை பேர் சபித்து இருக்கலாம். ‘அவன் நாசமாத்தான் போய்டுவான்’ என்று இவன் காதுபட சபித்தவர்கள் எத்தனையோ பேர். அத்தனை சாபமும் பலித்து விடுமா என்ன?

‘ஐயோ…!’ தன்னையுமறியாமல் பிரேக்கின் மேல் கால் வைத்திருந்தான்.

மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

அவசரமாக கார்த்திக்கு அழைத்தான்.

“பேசாம போலீஸ் கிட்ட ஹெல்ப் கேக்கலாமா மச்சான்?” என்று இவன் கேட்க,

“ஆனா விஷயம் வெளிய லீக் ஆகிடுமே…” கார்த்திக் கவலைப்பட,

“அதை பத்தி எனக்கு கவலை இல்ல. மஹா வேணும்… அவ்வளவுதான்…” என்று கறாராக கூற,

“ஆனா பெரியவங்க கிட்ட கேட்டுக்கலாம்… வீட்டு விஷயத்தை போலீஸ் வரைக்கும் கொண்டு போகனுமான்னு கேப்பாங்க மச்சான்…” அவர்கள் வீட்டில் எப்படி நடக்கும் என்பதை அவன் அறிவானே!

“கேக்க ஒண்ணுமில்ல. இப்போதைக்கு தலைகீழா குதிக்கக் சொன்னாலும் குதிப்பேன்…” என்றவனின் மனநிலை இப்போது வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான் கார்த்திக்.

“மச்சான்… இப்ப நீ தனியா டிரைவ் பண்ணாத. நானும் வர்றேன்… முதல்ல வீட்டுக்கு போய் கொஞ்சம் சாப்பிட்டுட்டு அப்புறமா சேர்ந்து தேடலாம்…” என்று நிறுத்தி நிதானமாக கூற,

“அவ சாப்பிட்டாளா என்னன்னே தெரியலடா. பசி வேற தாங்க மாட்டா கார்த்திக். அறிவிருக்கவ பண்ற காரியமா இது? என்னை ரெண்டு அரை கூட அறைஞ்சு இருக்கலாமே. எப்படி இப்படி விட்டுட்டு போவா?” கோபமாக இருந்தது. ஆற்றாமையாகவும் இருந்தது. தவறாக நினைத்து விட்டாளே என்பதை தாண்டி அவனது கோபம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.

“கும்பி காஞ்சா குதிரை வைக்கப்போர் மேயுமாம். எங்க அம்மா சொல்வாங்க. வயிறு காஞ்சா தானா வந்துடுவா. இப்ப நீ வீட்டுக்கு வா. மதியமும் சாப்பிடலை… சாப்பிட்டுட்டு தெம்பா தேடலாம்…” அவனுக்கு சமாதானம் கூறினாலும், கார்த்திக்கின் மனதுக்குள்ளும் அதே எண்ணம் தான். பசி தாங்காதவள் எப்படி சமாளிப்பாள் என்பது தான்!

“இல்ல கார்த்திக். மஹாவை பார்க்காம என்னால சாப்பிட முடியாது. நீ போய் சாப்பிடு… நான் கமிஷனர் கிட்ட பேசிட்டு வீட்டுக்கு வர்றேன்…” என்று வைத்து விட்டு, கமிஷனருக்கு அழைத்து விஷயத்தை மேலோட்டமாக விளக்கினான்.

“கண்டிப்பா கண்டுபிடிச்சுடலாம் ஷ்யாம் சர். நீங்க உங்க வைப் போட்டோ ஒன்னு என்னோட வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க… நான் எல்லா ஸ்டேஷனுக்கும் பார்வர்ட் பண்ணிடறேன்…” என்று அவர் கூற,

“ஓகே சர்… நான் அனுப்பறேன். பட் கொஞ்சம் காஷியஸா வெளிய தெரியாம பண்ணுங்க. எல்லாமே ஆப் தி ரெக்கார்ட்டா இருக்கட்டும்…” என்று கேட்க,

“சியூர் சர். கண்டிப்பா… நீங்க இதை சொல்லனுமா?” என்று கூறிவிட்டு அவர் வைக்க, அவனுக்குள் நீண்ட நெடிய பெருமூச்சு.

அவருக்கு போட்டோவையும், அவளது அங்க அடையாளங்களையும் அனுப்பி வைத்து விட்டு பெசன்ட் நகர் வீட்டை நோக்கி போனான்.

*****

வீட்டுக்குள் நுழையும் போதே அசாத்திய மௌனம் நிலவியது. இவனை அனைவருமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர் போல… ஜோதியும் நாதனும் முன்னறையில் அமர்ந்து கொண்டிருந்தனர். கார்த்திக் முன்னமே வந்திருந்தான். ஸ்ரீராம் அவனது நண்பர்களுடன் இன்னமும் அலைந்து கொண்டு தான் இருந்தான். அவ்வப்போது கார்த்திக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தான். சிவச்சந்திரனும் அவனது ஆட்களும் ஊரை சல்லடை போட்டுத் தேடிக் கொண்டு தானிருந்தனர். அத்தனையும் செல்பேசி வாயிலாகவே!

இப்போது போலீஸும் விசாரிக்க ஆரம்பித்து இருந்ததை கமிஷனர் அவ்வப்போது அழைத்து உறுதி செய்து கொண்டிருந்தார்.

எதுவும் பேசாமல் மெளனமாக சோபாவில் அமர, ஜோதி,

“என்ன ஷ்யாம்? என்னாச்சு?” என்று தெலுங்கில் கேட்க, முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டுவிட்டு தாயை பார்த்தான்.

“எனக்கே தெரியலம் மீ… ஒண்ணுமே புரியல…” என்று வேதனையாக தெலுங்கிலேயே கூற, அவர் எழுந்து வந்து மகனை அணைத்துக் கொண்டார்.

“ஒண்ணுமில்ல கண்ணா… சும்மா கோபத்துல போயிருப்பாடா… வந்துடுவா… நான் எத்தனை தடவை உங்க அப்பாவை மிரட்ட அப்படி கிளம்பியிருக்கேன் தெரியுமா? போற வரைக்கும் தான் நம்ம தைரியம்… கொஞ்ச நேரமாச்சுன்னா நம்ம மனசு வீட்டையும் புருஷனையும் தேட ஆரம்பிச்சுடும்… கலங்காத கண்ணா…” என்று கூற,

அவனது முகத்தில் அதீத எதிர்பார்ப்பு!

“நிஜமாவா சொல்ற ம்மீ?” என்று சிறு குழந்தையாக கேட்க, அவனை அள்ளி அணைத்து கொள்ள தோன்றியது ஜோதிக்கு. மகன் இந்தளவு கலங்கி அவர் பார்த்ததே இல்லை.

“நான் என்ன பொய்யா சொல்ல போறேன்?” என்றவர், “இப்ப என்ன பண்றன்னா, நல்ல பிள்ளையா சாப்பிடுவியாம்…” என்று கூற,

“இல்ல ம்மீ… வேணா… எனக்கு சாப்பிடுற மூட் இல்ல…” என்று கூறும் போதே, “சாப்பிடு நானா… உனக்கும் தெம்பு வேணும்ல…” என்று நாதன் கூற, அவரை கலங்கிய கண்களோடு பார்த்தான்.

அவர் நானா என்று அழைக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு!

ரொம்பவும் பாசமாக அவனை அழைக்கும் போது, அவரையும் அறியாமல், அவன் தன்னை அழைக்கும் நானாவை அவனுக்கு திருப்பித் தருவார். அதை எப்போதும் மிகவும் ரசிப்பான் ஷ்யாம். ஆனால் இப்போது அதையெல்லாம் ரசிக்கும் மனோபாவம் இல்லை.

மிக அடர்த்தியான வெறுமை சூழ்ந்திருந்து மனதை!

“கொஞ்சமா சாப்பிடுங்க மாப்பிள்ளை…” பைரவி கூற, முருகானந்தம் வெறுமையான முகத்தோடு அமர்ந்திருந்தார்.

பிருந்தா வீட்டுக்கு போகாமல் அங்கு தான் காத்திருந்தாள். டென்ஷன் அதிகமாகி, மகாவின் தந்தைக்கு மீண்டும் ஏதாவது ஆகிவிட்டாளோ, பாட்டிக்கு ஏதாவது ஒன்றென்றாளோ தான் உடனிருக்க வேண்டும் என்று தந்தையிடம் கூறியிருந்தாள். அவள் தான் அங்கு அவ்வப்போது பார்த்து பார்த்து ஏதாவது குடிக்க செய்து, உண்ண செய்து கொண்டிருந்தாள்.

அவளும் இல்லையென்றால் உண்மையிலேயே பைரவி தவித்துப் போயிருப்பார்.

ஒரு பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கலாம். ஷ்யாமை கலைத்தது அவனது செல்பேசி.

கமிஷனர் தான் அழைத்து இருந்தார்.

“சொல்லுங்க சர்…” என்று இவன் ஆரம்பித்தான் பரபரப்பாக!

“ஷ்யாம் சர்…” என்று தயங்கியபடியே அழைத்தார்.

“சொல்லுங்க சர்…” என்று கேட்டான்.

“அதாவது ஷ்யாம் சர். டோன்ட் பீ சீரியஸ். ஒரு பார்மாலிட்டி தான்…” என்று பீடிகை போட்டவர், வெகுவாக தயங்கியபடி இருக்க,

“என்ன பார்மாலிட்டி?” என்றான், நெற்றியை சுருக்கியபடி.

“கிண்டி ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ஒரு ஆக்சிடென்ட். ஒரு பொண்ணு மேல….” என்று தயங்க, ஷ்யாமுக்கு சகலமும் ஆட ஆரம்பித்தது.

“பொ… பொண்ணு… மேல….” திக்கித் திணறினான். நடுங்கியது. கைப்பேசியை பிடிக்கவே சத்து இல்லாதது போல தோன்றியது.

“நீங்க மென்ஷன் பண்ணி இருக்க அடையாளம் எல்லாம் சூட் ஆகறதா அங்க இருந்து மெசேஜ் வந்திருக்கு…” என்று அவர் கூறும் போதே அவனுக்கு காலின் கீழ் இருந்த நிலம் நழுவ ஆரம்பித்தது. அவனால் பேச முடியவில்லை. பேச்சை தற்காலிக மறந்து விட்டிருந்தான்.

“கொஞ்சம் கிண்டி ரயில்வே ஸ்டேஷன் வர முடியுமா ஷ்யாம் சர். அடையாளம் பார்த்து சொல்லணும்…” என்று கூற, அவனது கைப்பேசி நழுவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!