VNE32

VNE32

32

முருகானந்தம் சுஷ்ருதாவில் அனுமதிக்கப்பட்டு அன்றோடு ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.

அவரது நிலை மேலே கீழே என்று ஊஞ்சலாடி கடைசியாக நிதானமாகி இருந்தது. பெரிய சிக்கல்களுக்கு போகாமல் எக்மோவிலேயே குணமாகிக் கொண்டிருந்தார்.

அதனால் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவக் குழு முடிவு செய்திருந்தது.

பைரவியின் முகத்தில் சற்று நிம்மதி. உடன் ஜோதியும் துணைக்கு இருந்தார். கிருஷ்ணம்மாள் அவ்வப்போது வந்து மகனது தலையை தடவியபடி கண்கலங்கியபடி நின்றிருப்பார். மஹா அவரை சமாதானப்படுத்தி அழைத்து செல்வாள். பிருந்தாதான் அவர் கூடவே இருந்தாள் வீட்டில். அவரை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வருவதும், போவதும் அவளது தினசரி வேலைகளில் ஒன்றாகியிருந்தது.

கார்த்திக்கின் முகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. அவ்வளவு கோபம் அவளுக்கு! இத்தனை வருடமாக பழகிய பழக்கத்தை காதல் என்று வந்தபிறகும் ஒரே நொடியில் தூக்கி எறிந்த அவனது கோபத்தைக் கண்டு அவளுக்கு வெகுவாக எரிச்சலாக இருந்தது. ஆனால் இந்த நிலையில் அவள் காட்டிக் கொள்ளவும் இல்லை. அவனோடு இழையவுமில்லை.

காலை முதலே மகாவுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்து தோற்று பின் கடைசியாக கார்த்திக்கே கால் செய்து மகாவிடம் கொடுக்க சொல்லித்தான் பேசினாள். அதற்கு பின் அவசரமாக அந்த இரவு வேளையில் சுஷ்ருதா வந்தவள், கார்த்திக்கை திரும்பியும் பார்க்காமல் மகாவிடமும் பைரவியிடமும்  மட்டும் பேசிவிட்டு சென்றாள்.

கார்த்திக் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வார்த்தையாவது தன்னிடம் பேசிவிடுவாள் என எதிர்பார்த்தான். அவளாவது தனக்காக பேசுவாள் என்று எண்ணியவனுக்கு பிருந்தாவின் பாராமுகமே பரிசாக கிடைக்க, அவன் இன்னமும் சோர்ந்து போனான்.

 முருகானந்தத்தின் உடல் முழுக்க வயர்களால் கனெக்ட் செய்யப்பட்டு இருந்தது. நெஞ்சு பகுதியிலிருந்து சிறு குழாய் மூலமாக ரத்தம் வெளியேற்றப்பட்டு உள்ளுக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. கழுத்துப் பகுதியில் சிறு துளை வழியாக மருந்துகளும் நீர்ம உணவுகளும் செலுத்தப்பட்டு கொண்டிருந்தன. நிரந்தரமாக இரண்டு டாக்டர்கள் உடன் இருந்து கொண்டே இருக்க, அவ்வப்போது தேவைப்பட்ட மருந்தை செலுத்திக் கொண்டே இருந்தனர். ஆனால் முழுக்க முழுக்க மயக்கத்தில் வைக்கப்பட்டு இருந்தார்.

மொத்தத்தில் அது ராஜவைத்தியம்!

“ஏன் மஹா… அப்பா மயக்கத்திலையே இருக்காங்க?” பயத்தோடு கேட்ட தாய்க்கு,

“வெண்டிலேட்டர்ல இருக்காங்க… அதோட எக்மோல மெஷின்ல கனெக்ட் பண்ணிருக்காங்கல ம்மா… அதனால செடேஷன்ல தான் இருப்பாங்க… இனிமே கொஞ்சம் கொஞ்சமா செடேட் பண்றதை கம்மி பண்ணிடுவாங்க…” என்று முன்னேறிக் கொண்டிருந்த தந்தையின் உடல்நிலையை சுட்டிக் காட்டி கூற,

“பயமா இருக்கு பாப்பா…” என்ற பைரவியின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

“ம்மா… அப்பாவோட கண்டிஷன் முழுசா கண்ட்ரோல் க்கு வந்துடுச்சு… பயப்படாத…” எனவும், பைரவி கண் கலங்கினார்.

“உன் அண்ணன் எப்படியோ ஒன்னு கர்ணம் போட்டுக் கூட பொழச்சுப்பான்… உன்னோட கல்யாணத்தை மட்டும் பார்த்துட்டா போதும்டி… எங்க ரெண்டு பேருக்கும் வேற எதுவுமே வேண்டாம்…” என்று கண்ணீர் விட்டவரின் முதுகை தடவிக் கொடுத்தாள் மஹா.

அருகில் ஜோதி, இருவரையும் பார்த்தபடி இருந்தார். சட்டென்று பேசிவிட மாட்டார் அவர். மிகவும் யோசிப்பார். அதன் பின் தான் பேசுவது, ஆனால் நல்ல கவனிப்பாளர். நாதனும் கார்த்திக்கும் ஏதோ பேசியபடி இருக்க, அவ்வப்போது இளங்கவி தான் அவரிடம் எதையாவது கொடுத்து கையெழுத்து வாங்கியபடி இருந்தான்.

ஐந்து நாட்கள் முன்பு ஷ்யாமை வறுத்தெடுத்து விட்டிருந்தார் ஆத்மநாதன்.

அன்று பெற்றோரை பார்த்தவுடன் முகமெல்லாம் புன்னகை பூக்கத்தான் அவர்களை நோக்கி வந்தான் ஷ்யாம். தாயை பார்த்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் வேலை பளுவிலும், இங்கிருந்த குழப்பத்திலும் ஹைதராபாத் போகும் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. தாயோடு அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தாலும் தந்தையுடன் பேசவே இல்லை. எப்படி இருந்தாலும் அவரது கோபத்தை எதிர்கொண்டுதானாக வேண்டும் என்பது அவனுக்கு தெரியும்.

அடுத்த வாரத்தில் தாயின் பிறந்த நாளுக்கு பரிசு கொடுத்துவிட்டு, ஆசீர்வாதம் வாங்க காலில் விழுந்து விட்டால் தந்தையால் எதுவும் பேச முடியாது என்பது தெரியும். எப்படிப்பட்ட கோபமாக இருந்தாலும் ஷ்யாம் கடைபிடிக்கும் தந்திரம் இதுதான்.

“ப்ளஸ் மீ நானா…” என்று சாஷ்டாங்கமாக விழுந்து விடுவது.

வேறு வழியே இல்லாமல், “நல்லா இருடா கண்ணா…” என்று முடித்து விடுவார்.

தவறிக் கூட அதுபோன்ற சந்தர்ப்பங்களில் வேறு வார்த்தை சொல்லிவிட மாட்டார். எதுவும் சொல்லி அதுவே பலித்து விட்டால்? பெற்றவனே பிள்ளையை சபித்து விட்டது போல இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பார். பிள்ளை என்ன தவறை செய்தாலும், அவன் கெட்டு போக எண்ண முடியுமா என்ன? அப்படியே கெட்டுப் போனாலும் அந்த வேதனை தனக்குத் தானே? தாயை பற்றி கேட்கவே தேவையில்லை. ஒரு வார்த்தை கூட கடுஞ்சொல் சொன்னதில்லை.

அப்படி இருக்கும் போது  தானாக போய் அவரிடம் சிக்கிக் கொள்ள வேண்டுமா என்று தான் தவிர்த்தான்.

அவன் தவிர்க்க, அவருக்கு கோபம் எகிறி விட்டிருந்தது. ஒரு முறை பேசியில் திட்டியிருந்தாலாவது அவரது கோபம் மட்டுப்பட்டிருக்கக் கூடும். அப்படியில்லாமல், காலை முதல் தொலைகாட்சிகளில் வறுத்தெடுக்கப்பட்டு கொண்டிருந்த பிரச்சனையோடு, தனது நண்பருக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்த செய்தியை கேட்டதும் அவரால் அதற்கும் மேல் பொறுமையாக இருக்கவே முடியவில்லை.

ஷ்யாம் மேலிருந்த கோபம் இப்போது பன்மடங்காகி இருந்தது. அவசரமாக கிளம்பி சென்னை வந்திருந்தார் ஆத்மநாதன், உடன் மனைவியையும் அழைத்துக் கொண்டு!

‘இன்னும் எத்தனை பாவங்களை தான் சேர்ப்பானோ தன் மகன்?!’ என்று மனம் துடித்துக் கொண்டிருந்தது ].

“நீயெல்லாம் என்ன பிறவிடா? கொஞ்சம் கூட மனுஷத் தன்மை இல்லாம போச்சா உனக்கு?”

எதுவுமே அறியாமல், கோபம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு முகம் சிவக்க அவர் கேட்க, சுற்றிலும் அவன் பார்வையை சுழற்ற, அங்கிருந்த நர்ஸ்கள் மற்றும் மருத்துவர்களும் கூட இடத்தை சப்தமில்லாமல் காலி செய்திருந்தனர்.

‘ஷப்பா… அடுத்த ரவுன்ட் தந்தையோடு மல்லுக் கட்ட வேண்டுமா? என்ன வாழ்க்கைடா ஏடுகொண்ட்ட்ல வாடா…’ என்று மனதுக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டான். காலை முதல் பேசிக் கொண்டே இருந்ததில் அவனுக்கு தொண்டை கரகரக்கவே ஆரம்பித்து இருந்தது.

“நானா… ரூமுக்கு போய் ஃப்ரீயா பேசலாம்…” மஹாவின் குடும்பம் இருப்பதை கருத்தில் கொண்டு அவன் கூற,

“எதுவா இருந்தாலும் இங்கயே பேசு…” பல்லைக் கடித்துக் கொண்டு அவர் பேச,

“சரி பேசுங்க…” என்று கையைக் கட்டிக் கொண்டான்.

“ச்சே… இப்படி ஒரு மகனை பெத்ததுக்கு ஒரு கல்லை பெத்து இருக்கலாம்…” உச்சகட்ட எரிச்சலில் கோபத்தில் அவர் கூற,

“சூப்பர் ஐடியா நானா… இப்பவும் ஒன்னும் லேட் ஆகலை… ஐ வெல்கம் திஸ் ஐடியா…” என்று சிரிக்காமல் கூறினான்.

அவர் புரியாத பார்வை பார்த்தார். அவர் கோபத்தில் கொதித்து வார்த்தைகளை விட அவனோ அசால்ட்டாக அதை காமெடி ஆக்குகிறானே என்று முறைக்க, மஹா ஒற்றைக் கையால் வாயை மூடிக் கொண்டு ‘க்ளுக்’ கென்று சிரித்தாள். கார்த்தியின் முகத்தில் கூட மெல்லிய புன்னகை.

இவனென்ன ரகம்? அத்தனை கோபத்தையும் ஒற்றை நொடியில் மடை மாற்றுகிறானே என்று தான் யோசித்தான்.

“டேய் மவனே… உன் வேலைய என்கிட்டவே காட்டாத…” என்று ஒற்றைக் கையை நீட்டி எச்சரித்த தந்தையை பார்த்து,

“கூல் நானா… கல் தான் வேணும்ன்னு இல்ல… ஒரு குட்டி தங்கச்சியா இருந்தா கூட போதும்…” மீண்டும் சிரிக்காமல் தந்தையை வம்பிழுக்க,

“மானத்தை வாங்காதடா…” நாதனுக்கே உள்ளுக்குள் வெட்கம் பிடித்துக் கொண்டது போலும். அதையும் பார்த்து, ஆனால் சிரிக்கவே சிரிக்காமல்,

“சரி… உங்க ஆசைய கெடுப்பானேன்? ரெண்டு தங்கச்சிங்களா இருந்தா கூட எனக்கு ஓகே…” விடாமல் வம்பிழுத்த மகனை பார்க்கையில் ஜோதியால் அதற்கும் மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. புன்னகையோடு,

“பாவா… போதும்… இதுக்கும் மேல பேசினா உங்களை டேமேஜ் பண்ணிட்டே தான் இருப்பான்… உங்க மானம் தான் கப்பலேறும்…” எனவும், நாதன் ஷ்யாமை முறைக்க, அதற்கும் மேல் இறுக்கமாக முகத்தை வைத்தபடி,

“நானா… கார்த்திக்கை பாருங்க… தங்கச்சி தங்கச்சின்னு உருகறான்… அவனை பார்த்தா எனக்கு ஆசையா இருக்கு… எனக்கும் ஒரு தங்கச்சி வேணும்…” என்று கூற, கார்த்திக் அவனை ஆச்சரியமாக பார்த்தான். உண்மையில் சிரிப்பு பீறிட்டது. கட்டபஞ்சாயத்து செய்த ஷ்யாமா இவன்?

முருகன் முகம் ஆறுதான்… மனிதன் முகம் நூறுதான்… ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ?

இவனது முகமும் நிறமும் என்ன?

“டேய் உனக்கே எருமைக் கடா வயசாகுது… வர்ற ஆவணி வந்தா முப்பது முடியப் போகுது… தங்கச்சி கேக்கறியா தங்கச்சி…” என்று அதற்கும் மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர் சிரித்து விட,

“தெரியுதில்ல… முப்பதாகுதுன்னு… பாவம் பையன்னு ஒரு கல்யாணம், அட்லீஸ்ட் ஒரே ஒரு கல்யாணமாவது பண்ணி வெச்சீங்களா?” என்பதையும் சிரிக்காமலேயே கேட்கவும், ஜோதி, “அடப்பாவி… நாங்களா உனக்கு பண்ணி வைக்க மாட்டோம்ன்னு சொன்னோம்? அடங்காப்பிடாரியா ஊர் சுத்திட்டு, எங்க மேல பழி போடறியா?” வாய்விட்டு சிரிக்க, பைரவி அழுகையை மறந்துவிட்டு ஷ்யாமின் பேச்சில் மனம் விட்டு சிரித்தார்.

அவன் அறிவான். பெற்றோரை என்ன சொல்லி வீழ்த்த முடியுமென்று! வீழ்த்த நினைப்பது இப்போது பிரச்சனை எதுவும் பெரிதாகாமல் இருக்கத்தானே தவிர மற்ற நேரமாக இருந்தால் அவனது அணுகுமுறை வேறாகத்தான் இருக்கும் என்பதை நாதனும் அறிவார். பெற்றோரின் இப்போதைய வீக்னெஸ் இவனது திருமணம். அதை இழுத்தவுடன், நாதனும் கூட சற்று மென்மையாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மிக இறுக்கமாக இருந்த சூழ்நிலையை ஒரே நொடியில் மாற்றி விட்டவனை உண்மையிலேயே ஆச்சரியமாக பார்த்தான் கார்த்திக். இது அனைவருக்கும் கைவந்து விடாது. ஆனாலும் அவன் மேல் இருந்த கோபத்தை கார்த்தியால் அவ்வளவு எளிதாக விடுவிட முடியவில்லை. முயன்று தன்னை இறுக்கமாக வைத்துக் கொண்டான்.

“டேய் நல்லவனே, நல்லவங்க எல்லாரும் ஒரு கல்யாணம் மட்டும் தான் பண்ணுவாங்க…” என்று ஷ்யாமை கிண்டலடித்த மஹா, “ஆனா நீ தான் எல்லாமே வித்தியாசமா பண்றவனாச்சே… நீ பண்ணுவ… ஒரு அஞ்சாறு…” எனவும், ஆச்சரியமாக பார்ப்பது இப்போது ஆத்மநாதனின் முறையாயிற்று!

முறைத்துக் கொண்டு நிற்பாள் என்று எதிர்பார்த்து வந்தால் அவனை கிண்டலடிக்கும் அளவுக்கு சிநேகிதம் இருக்கும் போலவே என்று எண்ணிக் கொண்டவருக்கு உண்மையில் வியப்பாக இருந்தது.  அதோடு மகனை ஒருமையில் அழைக்க ஒரு ஆளா? அவனை பற்றி அறிந்தவர்கள் அனைவரும் ஒரு அடி தள்ளி நின்றுதான் பேசிப் பார்த்திருக்கிறான். பெரிய ஆட்கள் உட்பட! ஆனால் மகாவோ அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல் என்ன தைர்யம்?! உண்மையில் வியந்தார்.

“ஏன்… ரெண்டு கல்யாணம் பண்ணவங்க எல்லாம் நல்லவங்க இல்லைன்னு ஆகிடுமா மிர்ச்சி… இல்ல மூணு கல்யாணம் பண்ணவங்க எல்லாம் தேச துரோகியா?” எனவும்,

“தெய்வமே… இந்த விளையாட்டுக்கு நான் வரலை… எத்தனையோ பண்ணித் தொலை…” என்று கூறிவிட்டு, ஆத்மநாதனின் புறம் திரும்பி,

“மாமா… நீங்க இவனை திட்ட வந்தீங்க… அதை பண்ணுங்க முதல்ல…” எனவும்,

“என்னது மாமாவா? எப்ப இருந்து?” என்றவனுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. உறவினர்கள் என்பது முன்னமே தெரிந்தது தான். தந்தையும் கூறியிருக்கிறார். ஆனால் மஹா ‘மாமா’ என்றழைக்கும் அளவிலான உறவு என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டான்.

“மாமாவ மாமான்னு கூப்பிடாம சித்தப்பான்னா கூப்பிடுவாங்க?” இது ஆத்மநாதன்.

“சொல்லவே இல்ல…” வடிவேலுவை போல வேண்டுமென்றே கூற,

“ஷ்யாம்… நீ பேச்சை மாத்தாத…” என்ற ஆத்மநாதன், முயன்று தனது கோபத்தை எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு, “நான் எதையும் கேக்க முடியாத மாதிரி, உன்னோட இஷ்டத்துக்கு தான் நீ இதுவரைக்கும் பிசினஸ் பண்ணிருக்க… அப்பல்லாம் உன்கிட்ட எதையாவது கேட்டேனா? ஆனா பொம்பிளை பிள்ளைய கஸ்டடி எடுக்கறது எல்லாம் என்ன பழக்கம்டா? உன்னால எவ்வளவு பிரச்சனை? அதையெல்லாம் கொஞ்சமாவது கண்டுகிட்டியா? இப்ப மாப்பிள்ளைக்கு ஏதாவதுன்னா உன்னால திருப்ப முடியுமா? தங்கச்சிக்கு என்ன பதில் நான் சொல்றது? நீ செய்யறது மட்டும் தான் சரின்னே வாதம் பண்ணாத ஷ்யாம்… கொஞ்சமாவது மனுஷனா மாறு…” ஆத்மநாதன் கோபத்தை இழுத்துப்  பிடித்துக் கொண்டு பேச,

“நானா… ஐ நோ வாட் ஐ ஆம் டூயிங்… ஆனா நீங்க சொல்றதும்  புரியுது… எதுவா இருந்தாலும் நான் ரீஸ்டோர் பண்ணிடுவேன்… ட்ரஸ்ட் மீ நானா…” சற்றும் நிதானம் தவறாமல் அழுத்தமாக அவன் கூறியதை கேட்டவருக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவன் சரி செய்து விடுவான் தான். ஆனால் சேதாரமானவை எல்லாம் திரும்ப மீட்டெடுக்க முடியாத ஒன்றாயிற்றே! பெண் பிள்ளையின் மரியாதையை அல்லவா இவன் அடகு வைத்து விட்டான்.

“எப்படி கண்ணா ரீஸ்டோர் பண்ணுவ? அப்படி பண்ற மாதிரியான காரியமா நீ பண்ணி வெச்சு இருக்க?” பல்லைக் கடித்துக் கொண்டு அவர் கேட்க,

“பண்ணிடுவேன்னா பண்ணிடுவேன்… என்னை நீங்க நம்பனும்….” தீர்மானமாக அவன் கூற,

“உன்னால எப்படி மஹாவோட மரியாதையை மீட்டுக் கொடுக்க முடியும் ஷ்யாம்? அந்த பொண்ணோட பெயர் கெட்டுப் போனது கெட்டு போனதுதான். மாப்பிள்ளை எப்படி நிலைகுலைஞ்சு போயிருந்தா ஹார்ட் அட்டாக் வந்துருக்கும்? இந்த உலகத்துல பணத்தால சாதிக்க முடியாத விஷயமெல்லாமும் இருக்கு… அதை நீ எப்ப புரிஞ்சுக்க போற?”

“மகாவோட அப்பாவுக்கு இப்ப ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு… கண்டிப்பா நல்லாகிடுவாங்க…” எனவும்,

“அப்படீனா மஹா?”

“ஏன் அவளுக்கென்ன?” என்று கேட்டான்.

அவனுக்கு அந்த விஷயம் உண்மையில் புரியவில்லை. அவனுடையவள் அவள். அவளுக்கென்ன குறை என்பதுதான் அவனது எண்ணம். ஆனால் அவள் ஒப்புதல் கூறாமல் அவனாக அதை வெளிப்படுத்தவும் முடியாது. கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். ஆனால் அதை வேறு யாரும் உணராததால் அவளுடைய எதிர்காலம் பெரிய கேள்விக் குறியாக இருந்ததை மட்டுமே உணர்ந்தனர். அதற்கு நாதனும் விதிவிலக்கல்ல… அப்படியிருக்கும் போது ஷ்யாமின் இது போன்ற பதில்கள் தான் அவரை எரிச்சல் படுத்துகின்றன என்பதை அறியாமல் மீண்டும் அதே வார்த்தையை கூறினான்.

“எப்படி ஷ்யாம்? ரொம்ப சுயநலவாதியாகிட்ட…” எனவும் அவன் அமைதியாக, 

“நானா… காலைலருந்து டென்ஷன்… ஐ ம் ரியலி டயர்ட்… இன்னும் யாரும் சாப்பிடவே இல்லை… வாங்க சாப்பிட்டுட்டு தெம்பா இன்னும் என்னை திட்டுங்க…” எனவும், ஜோதி பாவமாக கணவரையும் மகனையும் மாற்றி மாற்றி பார்த்தார்.

“பாவா… ப்ளீஸ்… லெட் அஸ் கிவ் ஹிம் சம் டைம்…”

“அவனை இன்னும் கெடுக்கறதே நீ தான் ஜோதி…”

“இல்ல பாவா… ஷ்யாம் அப்படியே விட்டுடலை… அவனோட எஃபோர்ட்ட போட்டு இருக்கான்…  அண்ணனுக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு… ஒருத்தனையே எல்லாரும் ப்ளேம் பண்றதை விட்டுட்டு அடுத்தது என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்… பழசை பேசிட்டே இருந்தா எதுக்குமே ஒரு தீர்வு கிடைக்காது…” என்று கூறிய ஜோதியை ஆதூரமாக பார்த்தாள் மஹா.

ஷ்யாமின் தாய் அல்லவா! அதை நிருபித்தார்.

“ஆமா மாமா… இப்ப விட்டுடுங்க… பாவம் பசில இருக்கான்… வீட்டுக்கு கூட்டிட்டு போய் நல்லா நாலு அடி போடுங்க… எனக்கும் சேர்த்து வெச்சு நீங்க பென்ட்டை நிமிர்த்துங்க…” எனவும், ஷ்யாமிடம் திரும்பிய ஆத்மநாதன், பெருமையாக,

“பாருல… எங்கூரு பெண்டுக இப்படித்தான்… எத்தனை கஷ்டத்திலும் வயத்தை நினைக்குதுக பார்த்தியால..” எனவும்,

“ஷப்பா ஆரம்பிச்சுட்டாரு…. ஊர் பெருமைய…” என்று முனகியவன், “நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் அது அதைப் பத்தி மட்டும் தான் யோசிக்கும்… ஏதோ அவங்க அப்பா கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்கறதால வாய் அடங்கி இருக்கு… இல்லன்னா இந்நேரம் கேண்டீன் காலியாகி இருக்கும்…” எனவும் அவனை முறைத்தாள்.

“ஆமா… எனக்கு வாங்கிக் கொடுத்து தான் உன்னோட சொத்தே காலியாகிடுச்சு… அல்பமே…” என்று மஹா சிலிர்த்துக் கொண்டு சண்டைக்கு வர,

“அதெல்லாம் நான் அசைச்சுக்க மாட்டேன்… உன் பாசமலர் எதுக்கு இருக்கான்? குதி குதின்னு குதிக்கறான்ல… அவன் கிட்ட வசூல் பண்ண வேண்டியதுதான்… தங்கைகோர் கீதம், என் தங்கச்சி படிச்சவ, என் தங்கை கல்யாணி வரிசைல உன் பாசமலரோட கதைய ஓட்டலாம்… செண்டிமெண்ட்டோ செண்டிமெண்ட்… ஒன்றெண்டு இடத்துல நானே மெல்ட் ஆகிட்டேன்னா பார்த்துக்க…” என்று வேண்டுமென்றே கார்த்திக்கையும் சேர்த்து வம்பிழுக்க, அவன் முறைத்தான். குதிக்காமல் கொஞ்சுவார்களா? அதிலும் தன்னுடைய உணர்வுகள் ஓவர் சென்டிமென்ட்டாமா?

“நீ செஞ்சாலும் செய்வ…” என்றவள், நாதனின் புறம் திரும்பி, “மாமா… கண்டிப்பா எனக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ணனும்…” எனவும், அவர் புரியாமல் பார்த்தவர்,

“எதுக்குடா தங்கம்?” என்று கேட்க ,

“இவனை அடிக்கறதை வீடியோ கால்ல எனக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்றீங்க…” எனவும், அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“என்னம்மா பண்றது? தோளுக்கு மேல வளர்ந்துட்டா தோழன்னு ஆகிடுதே… இப்ப பிள்ளைய கண்டிக்கத் தான் முடியும்… தண்டிக்க முடியாதே…” எனவும், ஷ்யாமை ஆழ்ந்து பார்த்தவள்,

“கண்டிக்கற அளவெல்லாம் அவன் தப்பு செய்யல மாமா… அவனோட பணம்… அவன் வாங்கினான்… அவ்வளவுதான்… என்ன? அவனோட மெத்தட்ஸ் கொஞ்சம் சகிக்க முடியாது… என்ன பண்ணி தொலைக்க? ஆனா என்னை வெச்சு யாரும் ஷ்யாமை பேச வேண்டாம்…” என்றவள், சற்று இடைவெளி விட்டு, “அப்பா விஷயத்துக்கு காரணம் இவன் கிடையாது… மீடியால வேற யாரோ ப்ளே பண்றாங்க… அதையும் கூட சமாளிச்சுடுவான்…” என்று கூறிவிட்டு மீண்டும் ஷ்யாமை பார்த்தவள், “ஐ ட்ரஸ்ட் ஹிம்… எதுன்னாலும் அவன் ரீஸ்டோர் பண்ணிடுவான்…” எனவும், நாதன் வெகுவாக அயர்ந்து விட்டார்.

அவருக்கும் ஜோதிக்கும் நம்பிக்கை இருக்கிறது என்றால் அவனை பெற்றவர்கள அவர்கள்!

ஆனால் மஹாவின் நம்பிக்கை நிச்சயமாக வேறு விதம். ஒரு வேளை இது காதலோ என்று யோசித்தவருக்கு உள்ளுக்குள் ஆயிரம் மொட்டுக்கள் ஒரு நொடியில் மலர்ந்தது போலிருந்தது. அத்தனை சந்தோஷம்… பூரிப்பு! பைரவியும் அதே நிலையிலிருக்க, கார்த்திக் மட்டும் அதிர்ந்து பார்த்தான்.

‘அவன் பணம்… அவன் வாங்கினானா? இவளென்ன புரிந்து தான் பேசுகிறாளா?’ உள்ளுக்குள் கொதித்தவன், ‘அதற்காக அவன் படுத்திய பாட்டையெல்லாம் ஒரே நிமிடத்தில் மறந்து விட்டவளை என்ன செய்ய?’ தங்கையின் வார்த்தை கொடுத்த வலியை அவனால் தாள முடியவில்லை.

மகாவை பெருமையாக சிறு புன்னகையோடு பார்த்தான் ஷ்யாம்.

‘நீ மிஸ்பிஹேவ் பண்ணனும்ன்னு நினைச்சிருந்தா முதல் நாளே பண்ணிருப்ப… ஆனா உன்னோட இன்டஷன் அது இல்லை…’ என்று அன்று அவள் கொண்ட அதே நம்பிக்கை, இன்று வேறு வார்த்தைகளில்!

அவள் கொண்டது தோழமை!

அந்த தோழைமை கொடுத்த நம்பிக்கை அவனுள் விதைத்தது… காதல்… காதல்… மேலும் காதல்!

தாயைத் தவிர, தன்னை நம்பும் ஒரே ஜீவன்!

தாங்கவியலாத காயத்திற்கு காரணமானவனை எங்கனம் இந்தளவு நம்புகிறாள்?

காயமும் அவனே… அதற்கான மருந்தும் அவனே அல்லவா!

தந்தையை ஆழமாக பார்த்தவன்,

“மகாவோட இந்த நம்பிக்கையை நான் எப்படி உடைப்பேன்? அந்தளவு முட்டாளா நான்? கடைசி வரைக்கும் காப்பாத்துவேன் நானா…” என்றவனை,

“ஆமா… அப்பக்கூட சாப்பிட எதுவுமே வாங்கித் தராம பட்டினி தான் போடுவான்…” என்று சிரிக்காமல் கூறிய மகாவை பார்த்து,

“எப்படி பட்டினி போட்டாலும் அடங்கிட போறிய பப்ளிமாஸ்?” எனவும், அவர்களின் சண்டையை பார்த்து சிரித்த ஆத்மநாதன், தன்னை சுதாரித்துக் கொண்டு பைரவியை நோக்கி,

“பாரும்மா… இவனை பார்த்துட்டு உன்கிட்ட ஒரு வார்த்தைக் கூட பேசலை…” என்று அவரிடம் தனது நண்பனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் நாதன்.

*****

“இந்த லூசுக்கு கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? பேரன் பேத்தி எல்லாம் யார் பார்த்து விடுவாங்க?” என்றபடி பைரவிக்கு நேர் எதிராக அமர்ந்த ஷ்யாம், அவரைப் பார்த்து கேட்க,

“அதெல்லாம் நான் பார்க்காம வேற யார் பார்ப்பாங்க ஷ்யாம்?” என்று அவர் சங்கோஜமாக நெளிந்தார், கண்ணீரை துடைத்தபடி.

“அதை மட்டும் நினைங்க… நெகட்டிவா யோசிக்காதீங்க…” என்றவன், “சார் இப்ப ரொம்ப தெளிவா குணமாகிட்டார்… எப்ப வேண்ணா கான்ஷியஸ் வந்துடும்… அப்புறம் எங்க யாரையும் உங்களுக்கு கண் தெரியாது…” என்று கிண்டலடித்தவனை, இதழோரப் புன்னகையோடு வேடிக்கைப் பார்த்தாள்.

கடந்த ஐந்து நாட்களில் முடிந்தளவு ஷ்யாம் அங்கு தான் இருந்தான். பைரவி அழுதால் அவரை சிரிக்க வைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்ற அளவில் இருக்கும் அவனது கிண்டல்கள்.

பெயர் சொல்லி அழைக்க மறுத்தவரை விடாப்பிடியாக, ‘ஷ்யாம்’ என்று அழைக்க வைத்திருந்தான்.

“அப்படி எல்லாம் இல்ல கண்ணா… உங்க குடும்பம் மட்டும் என் கூட அன்னைக்கு இல்லைன்னா நான் என்னவாகி இருப்பேன்னே தெரியல…” என்று மீண்டும் கண்கலங்கியவரை,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… ஒரு ஆர்மியே உங்க பக்கம் இருக்கும் போது நீங்க இப்படி கண் கலங்கலாமா?” என்று சிரிக்காமல் கேட்டவனை புரியாமல் பார்த்தவர்,

“ஆர்மியா? எந்த ஆர்மி? ஓவியா ஆர்மியா? இல்லன்னா அபர்னதி ஆர்மியா?” பைரவியின் பக்கத்தில் அமர்ந்திருந்த கிண்டலாக மஹா கேட்க,

“மகாவேங்கடலக்ஷ்மி அன்ட் கார்த்திக்… இந்த ஆர்மிய விட வேறெந்த ஆர்மி வேணும்? அதுவும் இது ஒன்னே போதுமே…” என்று மஹாவை கைகாட்டியவன், “இதோட சைசுக்கும் வெய்ட்டுக்கும் யாராவது பக்கத்துல வர முடியுமா?” என்று கன்னத்திலோரம் தெறித்த புன்னகையை அதக்கிக் கொண்டு ஷ்யாம் கேட்ட கேள்வியில் பைரவிக்கே சிரிப்பு பீறிட்டது.

கார்த்திக்கும் சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்தான்.

ஆனாலும் இவன் ரொம்பத்தான் மஹாவை கலாய்க்கிறான் என்றாலும் எப்படியோ அதை ரசிக்கும்படி செய்து விடுகிறான் என்று நினைத்துக் கொண்டான்.

இருவருக்குமிடையில் காதல் போலவும் தெரியவில்லை. வெறும் நட்பாகவும் நினைக்க முடியவில்லை. ஆக மொத்தம் இருவருக்குமுள்ள உறவு என்னவென்று அறியாமல் தலையை பியைத்துக் கொண்டது கார்த்திக் மட்டுமல்ல… நாதனும் கூடத்தான்!

“ஆமா… நான் பப்ளிமாஸ் தான்… அதனால என்ன? இன்னும் நான் குண்டாவேன்… இன்னும் நல்லா சாப்பிடுவேன்… அது என் இஷ்டம்… இனிமே என் சைஸை பத்தி பேசின!” என்று ஒற்றை விரலை காட்டி எச்சரித்தவள், “உன் தலைல கல்லைத் தூக்கி போட்டு கொன்னுடுவேன்…” என்று முடிக்க,

“ஐயோ… நீ மிரட்டினதுல நான் பயந்துட்டேனே! என்ன பண்ண?” என்று சிரிக்காமல் கலாயத்தவனை முறைத்தாள்.

“நிஜமாவே உன் தலைல ஒரு நாள் கல்லைத் தூக்கி போட்டு காட்றேன்டா…”

“சரிடி… போட்டுக் காட்டு…” கண்களில் தெறித்த சிரிப்போடு அவன் கிண்டலாகக் கூற,

“டி போடாத…” மீண்டும் ஒற்றை விரலை காட்டி எச்சரித்தவளை பார்த்து சிரித்தவன்,

“நீ டா போட்டா… நானும் டீ போடுவேன்டி…” எனவும்,

“மாமா… இவனைப் பாருங்க…” என்று நாதனிடம் மஹா சரணடைய, அவர், “ஷ்யாம்…” என்று அழைக்க,

“நீங்க கேக்க மாட்டீங்களா? இவளை விட நான் எட்டு வயசு பெரியவன்… ஆனா ஒரு தடவை கூட மரியாதையா கூப்பிட்டது இல்ல…” என்று பைரவியிடம் ஷ்யாம் புகார் கூறினான்.

“மஹா… மரியாதையா கூப்பிடுன்னு எத்தனை தடவை சொல்லிட்டேன்…” என்ற பைரவியை பார்த்து கண்களில் மின்னிய திருட்டு புன்னகையோடு,

“அப்பாவை மாமான்னு சொல்ல வேண்டியது… என்னை வாடா ன்னு சொல்ல வேண்டியது… நீங்க என்னன்னு கேளுங்க…” என்று ஏற்றி விட, மஹா வாய் மேல் கையை வைத்துக் கொண்டாள்.

“உன்னை எப்படா வாடான்னு சொன்னேன்?” என்று கேட்க,

“ஒரு எக்சாம்பிள்க்கு மிரப்பக்கா…” என்று கண்ணை சிமிட்டியவனை, முறைத்தாள்.

“ஏன் மஹா… ஷ்யாம் சொல்றதும் கரெக்ட் தான்… ஒழுங்கா ஷ்யாம் மாமான்னு முறையா கூப்பிடு…” என்று பைரவி கூற, மகா வாயை பிளந்தாள். கார்த்திக் பைரவியை எரிச்சலாக பார்த்தான். ‘இந்த அம்மாவுக்கு ஏன் இந்த வேலை?’ என்ற கடுப்பு!

“ம்மா… எப்ப இருந்து ம்மா இவனோட ஸ்லீப்பர் செல் லான?” என்று கேட்க,

“ஷ்யாம் பாவான்னு சொன்னா கூட ஓகே தான்…” என்று விடாமல் அவளை கலாய்க்க, காமனை எரித்த சிவனாகினாள் மஹா.

“டேய் மகனே… உனக்கு ஷ்யாமே அதிகம்… உன்னை பாவான்னு வேற கூப்பிடனுமா? ரொம்ப பண்ணாதடா…” என்று இடி போல சிரித்த நாதனை பார்த்து, “அப்படி சொல்லுங்க மாமா…” என்று சிரித்தவள்,

கையில் வைத்திருந்த ஹேன்ட் பேகை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி வந்து, அவனது தலையில் நங்கென்று கொட்டிவிட்டு,

“ரொம்ப பேசாத…” என்றவள், “பேசின…” ஹேன்ட் பேகால் இரண்டு சாத்திவிட்டு, “பின்னிடுவேன்…” என்றுக் கூறிக் கொண்டிருக்கும் போதே ஷ்யாமின் அலைபேசி அழைத்தது. அவளது அடிகளை தவிர்த்துக் கொண்டே ‘உஷ்’ என்று ஒற்றை விரலை உதட்டின் மேல் வைத்து காட்டி விட்டு பேசியை காதுக்கு கொடுத்து,

“எஸ் மிஸ்டர் தவான்…” என்று ஆரம்பித்தவனின் முகம், அந்த பக்கமிருந்து என்ன பதில் வந்ததோ கறுத்துக் கொண்டே போனது.

“ஆர் யூ சியூர்?” என்று கேள்வி கேட்டு உறுதி படுத்திக் கொண்டவன், சற்று யோசிக்க, மறுபுறம், “நாளைக்கு மார்னிங்… உங்களோட அத்தனை ஆபிஃஸஸ், ஹாஸ்பிடல்ஸ், வீடுன்னு எல்லா இடத்திலும் ஐடி ரெய்ட் பண்ண ஆரம்பிக்க போறாங்க… எவ்வளவு அமௌன்ட் இருந்தாலும் எப்படியாவது மறைச்சு வைக்க சொல்றாங்க… கூடவே டாக்குமெண்ட்ஸ் எதுவுமே சிக்கிட கூடாதுன்னு நினைக்கறாங்க…” என்று ஹிந்தியில் சொல்லிக் கொண்டிருந்தவர், அந்த மத்திய அமைச்சரின் பெயரையும், இரண்டு முதலமைச்சர்களின் பெயரையும் குறிப்பிட்டு கூற, ஷ்யாமின் நெற்றி யோசனையில் சுருங்கியது. மேலும் சிலவற்றை கேட்டு தெளிந்தவன்,

“ம்ம்ம்… சியூர்… ஐ ல் டேக் கேர் மிஸ்டர் தவான்…” என்று முடித்துவிட்டு வைக்க, அவனது யோசனையான முகத்தைப் பார்த்த மஹா, ‘என்ன’வென புருவத்தை உயர்த்திக் கேட்க, கண்களை மூடித் திறந்தவன், ‘ஒன்றுமில்லை’யென உரைத்தான்.

அவள் ஷ்யாமை நம்பாத பார்வை பார்க்க, மெலிதாக புன்னகைத்தான்.

அந்த புன்னகையில் அவள் கண்டுகொண்ட செய்தி அவளுக்கு உவப்பானதாக இல்லை.

கார்த்திக்கின் கண்களை பார்த்த ஷ்யாம், “தெய்வமே… என் மேல ஆக்ஷன் எடுக்கணும்ன்னு எக்கச்சக்கமா வேலை பார்த்து இருப்பீங்க போல இருக்கே…” என்று சிரித்தபடி கேட்க, முதல் பார்வையில் கார்த்திக் அதிர்ந்தான். ஆனால் உள்ளுக்குள் தைரியம் மிகவும் இருந்தது. காரணம் விஜய். அவன் சொல்லிக் கொடுத்த வழிமுறைகள்.

கார்த்திக் மறுக்கவும் இல்லை. ஒப்புக் கொள்ளவும் இல்லை.

“நாளைக்கு ரெய்ட்டாம் நானா…” என்று நாதனிடம் கூறுவது போல பொதுவாக கூற, கார்த்திக்கின் முகம் பிரகாசமானது. நாதன் அதிர்ந்தார்.

“தட்ஸ் கிரேட்…” என்ற கார்த்திக் யாரையும் பார்க்காமல் எழுந்து போக, மஹா கலக்கமாக பார்த்தாள்.

இந்த நிலையில் கார்த்திக்கை பார்ப்பதா? ஷ்யாமின் புறம் நிற்பதா?

குழப்ப மேகங்கள் சூழ்ந்தது.

அவளது குழம்பிய முகத்தை பார்த்தவன், ‘என்ன’வென புருவத்தை உயர்த்திக் கேட்க, கண்களில் கலக்கத்தோடு, ‘ஒன்றுமில்லை’ யென கண்களால் கூற, விழிகளை மூடித் திறந்தவனின் பார்வை ‘கவலைப் படாதே’ என்றது.

ஷ்யாம்- விஜய்- கார்த்திக்

நடுவில் மஹா!

தனது இரண்டாவது நகர்வை வெற்றிகரமாக கார்த்திக்கை வைத்து நகர்த்தியிருந்தான் விஜய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!