VNE34(2)

VNE34(2)

“எதுக்காக வர சொன்னீங்க ஷ்யாம்?” அவனது கேள்விக்கு பதில் கூறாமல், கார்த்திக் கேட்க,

“ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியாத்தான் கார்த்திக்…” என்று தோளை குலுக்கிக் கொண்டவனை எப்படி நம்புவது என்று புரியாமல் விஜியை பார்த்தான். அவனது பார்வையில் எச்சரிக்கை தெரிந்தது.

விஜியின் பக்கமாக திரும்பி அமர்ந்த ஷ்யாம், “ஏன் டைரி பத்தி ஐடில சொன்ன விஜி?” என்று கேட்க, சற்று அதிர்ந்த விஜி, அதை காட்டிக் கொள்ளாமல், “நான் எதுக்கு பாஸ் சொல்ல போறேன்?” என்று கேட்க,

“விஜி… ஓபனா பேசு… இன்னமும் நீ என்னோட விஜி தான்… நான் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்டா… ஐ நீட் யூ…” என்க,

“நான் ஓபனா தான் இருக்கேன் பாஸ்… எனக்கு எதுவும் தெரியாது…” என்று அழுத்தம் திருத்தமாக கூற, ஷ்யாம் இறுக்கமாகினான்.

“அந்த டைரி பத்தி என்னை தவிர, வெளிய தெரிஞ்ச ஒரே ஆள் நீ மட்டும் தான்…” எனவும் மௌனமாகினான் விஜி!

அவனது மௌனத்தை பார்த்தவன், அவனது அழுத்தத்தை பார்த்து உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டான். அவனது அழுத்தத்தின் இடையில் தெரிந்த பதட்டத்தை ஷ்யாமினால் உணர முடிந்தது.

“என்னோட விஜின்னு நான் உன்னை ரொம்ப நம்பிட்டேன்டா…” என்றவனின் குரலில் சற்றேயான காயம்! நம்பியவன் இப்படி மோசம் செய்து விட்டானே என்ற காயமது!

அப்போதும் விஜய் பேசவில்லை. உள்ளுக்குள் அவனுக்கும் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும், இப்போது லேசான குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டது.

“ஐ டி ரெய்டுக்கு கார்த்திக்கை நீ தூண்டி விட்டு ப்ரெஷர் கொடுக்க வெச்சு இருக்க…” என்று கூறியவனை, கார்த்திக் லேசான அதிர்வோடு பார்க்க, விஜி அப்போதும் அழுத்தமாக அமர்ந்திருந்தான்.

“ப்ச்… இப்பவும் உன்கிட்ட என்னால கோபப்பட முடியல விஜி… ஏன் இப்படி பண்ண?” என்று கேட்க, கையிலிருந்த காலி ஜூஸ் டம்ப்ளரை உருட்டினான் விஜி.

“அவரை ஏன் கேக்கறீங்க ஷ்யாம்… என்னை கேளுங்க…” என்றான் கார்த்திக். அவனது முகத்தில் கோபம் தாண்டவமாடியது.

அவனது புறம் திரும்பிய ஷ்யாம், அமைதியாக, “சொல்லுங்க கார்த்திக்…” எனவும்,

“மகாவை நீங்க கஸ்டடி எடுத்தது எனக்கு பிடிக்கல… அவ்வளவு கெஞ்சினேன்… தயவு செஞ்சு தங்கச்சியை விட்டுடுங்கன்னு… அப்பவும் விடலை… அதுக்கப்புறமும் விடல…” என்று இடைவெளி விட, “ம்ம்ம்…” என்றபடி கேட்டிருந்தான் ஷ்யாம்.

“அப்புறம் மீடியால பர்பசா அவ பேரையும் இழுத்தீங்க…” எனவும், ஷ்யாமின் முகம் லேசாக திடுக்கிட்டான்.

“நான் இழுத்தேனா?” என்று அவன் கேட்க, “நீங்க எப்படி வேணும்னாலும் பூசி மொழுகலாம் ஷ்யாம்… ஆனா நீங்க செய்யாம வேற யார் செய்ய முடியும்? வேற யாருக்கும் இப்படியொரு மட்டமான உள்நோக்கம் இருக்காது…” எனவும், நிமிர்ந்து அமர்ந்து கொண்டவன், விஜய்யை நேராக பார்த்தான்.

அழுத்தமாக, ஆழமாக, கடுமையாக, தீவிரமாக அவன் பார்த்ததை விஜியும் உணர்ந்தான்!

“அதனால தான் பெட்டிஷன் போட்டேன்… ப்ரெஷர் கொடுத்தேன்…” என்று சற்றும் தடுமாற்றம் இல்லாமல் கூற, கார்த்திக்கை பார்த்து புன்னகைத்தான் ஷ்யாம்.

பின் விஜியின் புறம் திரும்பியவன், “மீடியாவுக்கு நியுஸ் லீக் பண்ணது யார் விஜி?” என்று கேட்க, அவன் சற்றும் அசையாமல் அமர்ந்திருந்தான், தரையில் பார்வையை பதித்தபடி!

“நடராஜை சவேரால வெச்சு பார்த்தது யார் விஜி?” என்று மீண்டும் கேட்க, இன்னும் அழுத்தமாக அமர்ந்திருந்தான்.

“அவனுக்கு அஞ்சு லக்ஷம் பணம் கொடுத்தது யார் விஜி?” என்று மீண்டும் ஷ்யாமே கேட்க, அதற்கும் பதிலில்லை.

கார்த்திக்கு எதுவோ புரிவது போலிருந்தது. ஆனால் தெளிவாகவில்லை. குழப்பமாக இருந்தது.

‘விஜி தான் செய்தானா?’ என்ற கேள்வியே அவனுக்குள் பதட்டத்தை உருவாக்கியது. அந்தளவு விஜியை அவன் நம்பினான். தங்கைக்காக அவன் துடித்த துடிப்பைஎல்லாம் பார்த்து இருந்தவன் தானே! பண்பட்ட மனிதன் என்றல்லவா நம்பியிருந்தான். அவன் தங்கையை இப்படி அவமானப்படுத்த முயல்வானா?

“சொல்லு விஜி…” என்று அழுத்தம் திருத்தமாக ஷ்யாம் கேட்க,

சரேலென நிமிர்ந்தவன், “ஆமா… நான்தான் பண்ணேன்… இன்னமும் பண்ணுவேன்…” என்று கோபமாக கூற, அமைதியாகவே பார்த்திருந்த ஷ்யாம்,

“ம்ம்… ஏன் பண்ண?” என்று கேட்க,

“மஹா…” என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறியவனை அதிர்ந்து பார்த்தான் கார்த்திக்.

இவன் என்ன சொல்கிறான்?

“ம்ம்ம்…” இது எதிர்பார்த்த ஒன்று தான் என்பது போல கேட்டுக் கொண்டான் ஷ்யாம்.

“ஆறு மாசமா…அவங்களை மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன் பாஸ்… அது உங்களுக்கும் தெரியும்…” என்று ஷ்யாமை சாட, அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை. ‘ஆறு மாதமாகவா?’ என்று கேட்டுக் கொண்டான் கார்த்திக்.

“நீங்க நினைச்சிருந்தா எனக்கு விட்டுக் கொடுத்திருக்க முடியுமே பாஸ்? அதை ஏன் நீங்க செய்யலை?” கடுமையான குரலில் அவன் குற்றம் சாட்ட, ஷ்யாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

“எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு இருந்துது பாஸ்… லைப்ல செட்டிலாகனும்ன்னு நான் நினைச்சது தப்பா?” என்று கேட்டவனுக்கு என்ன பதில் கூறுவது?

“இல்ல… தாராளமா நீ செட்டில் ஆகலாமே…”

“அப்புறம் ஏன் அவங்களை நீங்க கஸ்டடி எடுத்தீங்க?” என்று அவன் கேட்டதற்கு அவனிடமே சரியான பதில்லையே!

“அதனால என்ன கெட்டுப் போச்சு விஜி?” என்று வெகு இயல்பாக அவன் கேட்க, ஒரு நொடி குழம்பிப் போனான் விஜி. கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கு கோபம் கொந்தளித்தது. இவர்கள் இருவரும் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் நினைத்தால் அடைவதற்கு மஹா என்ன அவ்வளவு மலிவா?

“நீங்க யூஸ் பண்ணி தூக்கி போடறதை எல்லாம் நானும் யூஸ் பண்ணலாம் பாஸ்… ஆனா மஹா அப்படி இல்ல… தேவதையா பார்த்தேன்… அதுவும் உங்களுக்கு தெரியும்…” எனவும் எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ ஷ்யாமுக்கு, கடுமையான குரலில்,

“இதுதான் லிமிட் விஜி… என்னை பத்தி என்ன வேண்ணாலும் பேசு… மகாவை யூஸ் பண்ணேன்னு சொல்றதுக்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?” என்று அத்தனை கடுமையாக கூற,

“நீங்க இதுவரைக்கும் பண்ணதை தானே சொன்னேன் பாஸ்… உங்க பழக்கத்தை தான் சொன்னேன்…” எனவும்,

“என்னோட பர்சனலை பத்தி பேச யாருக்கும் ரைட்ஸ் கிடையாது விஜி… அதே மாதிரி நான் விட்டுக் கொடுத்தா நீ எடுத்துக்க மஹா ஒன்னும் கடையில விக்கற பொருள் இல்ல… அவளுக்கு தெரியும்… எது தப்பு, எது கரெக்ட்ன்னு… அவ கிட்ட ப்ரொபோஸ் பண்ணி அக்செப்ட் பண்ண வெச்சு இருந்து, அதுக்கப்புறம் நான் கஸ்டடி எடுத்து இருந்தா நீ சொல்றதுல அர்த்தம் இருக்கு விஜி… உன்னோட மனசுல இப்படியொரு எண்ணம் இருக்குன்னு கூட அவளுக்கு தெரியாது… இன்ஃபாக்ட் உன்னோட பேர் கூட தெரியாதுடா… அப்புறம் எப்படி முட்டாள்தனமா இப்படியொரு நினைப்பில இருந்திருக்க?” என்று கேட்டவனை,

“இந்த பிரச்சனை நடுவுல வராம இருந்தா நான் அவங்க கிட்ட பேசியிருப்பேன்…” என்று ஹீனமான குரலில் அவன் கூற, கார்த்திக் வெகுண்டு எழுந்தான்.

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க விஜி? என் முன்னாடியே என்னோட சிஸ்டரை பத்தி பேசறீங்க… இப்படியொரு நினைப்பில தான் பழகுனீங்களா?” என்று கேட்கவும்,

“ஏன் கார்த்திக்? மகாவை நான் லவ் பண்றேன்னு சொல்றது தப்பா?” எனவும்,

“தப்புதான்… ரொம்ப தப்புதான்… நீங்க ரெண்டு பேரும் ஏலம் போடற அளவுக்கெல்லாம் என் தங்கச்சி குறைஞ்சு போயிடலை… ஷ்யாம் பணம் அதிகாரம் எல்லாத்தையும் வெச்சுகிட்டு பொறுக்கித்தனம் பண்ணா, நீங்க அவரோட நிழல்ல இருந்துட்டு பொறுக்கித்தனம் பண்ணீங்க… இண்டஸ்ட்ரில இருக்க எல்லாருக்குமே தெரியும், அவருக்கு லெப்ட் ஹேன்ட் நீங்கதான்னு… அப்படி இருக்கற நீங்க எப்படிங்க என் தங்கச்சி மேல ஆசைப்படலாம்?” என்று கார்த்திக் கொந்தளிக்கவும், மெலிதான புன்முறுவலோடு அதை பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

“ஹும்ம்ம்… ஓகே… இந்த விஷயத்தை விடு விஜி…” என்றவன், இளங்கவிக்கு கண்ணை காட்ட, அவன் ஒரு தொகுப்பு ஆவணங்களை ஷ்யாமின் முன் கொண்டு வந்து வைத்துவிட்டு போனான்.

“இதெல்லாம்…” என்று விஜியை பார்த்தவன், “இந்த நாலு வருஷத்துல நீ வாங்கின சொத்துக்களோட டாகுமென்ட்ஸ்…” எனவும், உச்சகட்டமாக அதிர்ந்தான் விஜய்!

“பாஸ்… இது நல்லதில்ல…” என்று மிரட்டலாக கூறியவனை ஆழ்ந்து பார்த்தான்.

“ஆமா விஜி… நல்லதே இல்ல… உன்னோட சம்பளம் எவ்வளவு?” என்று இயல்பாக ஷ்யாம் கேட்க, அதற்கு பதில் கூறாமல் அவனை முறைத்தான்.

“சம்பளம் நல்ல சம்பளம் தான்… ஆனா இத்தனை வாங்கற அளவுக்கு அது அவ்வளவு பெரிய சம்பளம் இல்லையே…” என்று தனது நெற்றியை சுரண்டினான் ஷ்யாம்.

கால் மேல் காலிட்டுக் கொண்டு அவன் அப்போது அமர்ந்திருந்த தோரணை எதிரில் அமர்ந்திருப்பவனை கலக்கியது.

“ஓஓ… பணம் கொடுக்காதவங்க கிட்ட அடிமாட்டு ரேட்டுக்கு மிரட்டி வாங்கினயா? ஒரே கல்லுல ரெண்டு மாங்கா… ரைட்? என்னோட பணம் வசூலான மாதிரியும் ஆச்சு… உனக்கும் சொத்து சேர்த்த மாதிரியாச்சு… வாட் ன் ஐடியா சர்ஜி…” என்று கிண்டலாக கூற,

“ஆனாலும் அவ்வளவு பணத்துக்கு என்ன பண்ண விஜி? ஓஓ… என் பணத்தை உன் பணமா நினைச்சுட்ட… ரைட்?”

“வேண்டாம் பாஸ்… என்னோட இன்னொரு முகத்தை காட்ட வெச்சுடாதீங்க…” வெளிப்படையாக மிரட்டினான் விஜி.

சட்டென எழுந்து கொண்ட ஷ்யாம், முழங்கை வரை மடித்து விடப்பட்டிருந்த முழுக்கை ஷர்ட்டை இன்னமும் இழுத்து விட்டுக் கொண்டு,

“என்னடா காட்டுவ? காட்டு பார்க்கலாம்…” என்று கடுமையாக கூற,

“இப்பவும் சொல்றேன் பாஸ்…. வேண்டாம்… வாழ்நாள் முழுக்க வருத்தப்பட வேண்டியிருக்கும்…” என்றவனை,

“முடிஞ்சா பண்ணுடா…” என்று கூறியவன், “ஆனா உன்னை முடிக்கணும்னு நான் நினைச்சா அதுக்கு ஒரு நிமிஷமாகாது… ஆனாலும் இன்னமும் உன்னை என்னோட விஜின்னே நினைக்கறேன் பாரு… அதை தப்புன்னு நினைக்க வைக்கிறடா…” என்றவனை நேராக பார்த்த விஜி, தானும் எழுந்து கொண்டு,

“வேண்டாம் பாஸ்… நினைக்காதீங்க… மஹா விஷயத்துல நீங்க விளையாண்ட கேமுக்கே நான் இன்னமும் திருப்பி கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு… இன்னமும் என் விஷயத்துல காம்ப்ளிகேட் பண்ணிட்டு போறீங்க…” என்று கையை நீட்டி எச்சரிக்க, முன்னே வந்த விஷ்ணு,

“ரொம்ப தப்பு விஜிண்ணா… பாஸ் முன்னாடி கை நீட்டி பேசறீங்க…” என்றபடி அவனை பளாரென அரைந்தான்.

“விஷ்ணு…” என்றபடி, அவனை தடுத்த ஷ்யாம்,

“நீ திரும்ப திரும்ப மஹாவை இழுக்காத விஜி… உன்னால முடிஞ்சா மஹா கிட்ட ப்ரொபோஸ் பண்ணி ஓகே பண்ணு… உன்னை அப்படியே விட்டுடறேன்…” எனவும்,

“அவங்களை உங்க கண்ட்ரோல்ல வெச்சு இருக்க திமிர்ல பேசறீங்க பாஸ்…” எனவும்,

“நான் யாரையும் கண்ட்ரோல்ல வைக்கல… முடிஞ்சா செஞ்சு காட்டு… அதுக்கு முன்னாடி இந்த டாகுமென்ட்ஸ்ல கையெழுத்து போட்டுட்டு போ…” என்று அந்த தஸ்தாவேஜுகளை அவன் முன் தூக்கி போட்டவன், இளங்கவிக்கு கண்ணைக் காட்ட, முன்னே வந்தவன், பத்திரங்களை திறந்து காட்டினான்.

“என்ன டாக்குமெண்ட்ஸ்?” அழுத்தமான குரலில் விஜி கேட்க,

“தஞ்சாவூர்ல நீங்க வாங்கின வீடு, இடம், தோப்பை தவிர, சென்னைல நீங்க இருக்க வீட்டை மட்டும் விட்டுட்டு மற்ற சொத்துகளை எல்லாம் சுஷ்ருதா ட்ரஸ்ட்க்கு நீங்க எழுதி தரீங்க விஜிண்ணா…” என்று பொறுமையாக இளங்கவி கூற,

“வாட்…” என அதிர்ந்தான் விஜி! கார்த்திக்கும் கூட!

ஷ்யாமின் புறம் திரும்பியவன், “திஸ் இஸ் அட்ராஷியஸ்…” எனவும்,

“நாலு வருஷத்துல நீ பாக்யவதில கை வெச்ச அமௌன்ட் எவ்வளவு தெரியுமா?” என்று கேட்டவன், இளங்கவியை பார்க்க, அவன் அந்த பெரிய அமௌன்ட்டை அமைதியாக கூறினான்.

அதை கேட்ட கார்த்திக்கு தலை சுற்றியது.

இவ்வளவு பணத்தை விஜி கையாடி இருப்பானா என்ற சந்தேகம்… பயம்!

ஆனால் கேட்ட விஜி, அழுத்தமாக நின்றான்.

“இத்தனை நாளா விட்டுட்டு இருந்த நீங்க முட்டாளா பாஸ்?” என்று ஏளனமாக கேட்டவனை ஆழ்ந்து பார்த்தவன்,

“உன்னை என்னோட விஜின்னு நம்பினேன்டா…” என்றவனின் குரலில் நம்பிக்கை துரோகத்தை தாள முடியாத வலி தெரிந்தது.

“கையெழுத்து போட்டு கொடுத்துட்டு போகற வழிய பாரு விஜி…” என்றவன், விஷ்ணுவிடம் திரும்பி, “சைன் வாங்கிட்டு எனக்கு இன்ஃபார்ம் பண்ணு விஷ்ணு…” என்றவனின் முகத்தில் தெரிந்த ரவுத்திரத்தை பார்த்த கார்த்திக்கின் மனதுக்குள் நிலநடுக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!