VNE35(1)

VNE35(1)

35

குழம்பிய மனநிலையில் அமர்ந்திருந்தான் கார்த்திக். அன்று கடைக்கும் செல்லவில்லை. காலையிலிருந்து ஷ்யாமுடன் இருந்ததில் உள்ளுக்குள் பதற்றமாக இருந்தது. மதிய உணவு அவனுடன் தான் கழிந்தது. மற்றவர்களிடம் காட்டும் முகத்தை தன்னிடம் காட்டவில்லை என்பதை உணர்ந்து தான் இருந்தான். தான் எவ்வளவு கீழாக அவனை பேசினாலும் அவன் சற்றும் கவலைப் படாமல் ஒவ்வொன்றுக்கும் தன்னை கூடவே இருத்திக் கொள்கிறான் என்பதை நினைத்து மகிழ்வதா, பயப்படுவதா? அதை காட்டிலும் அவன் கொடுத்த ‘ஷாக்’ கை எந்த வகையில் சேர்ப்பது? அவன் சற்றும் எதிர்பாராதது ஆயிற்றே!

இத்தனை வருடமாக கூடவே இருந்த விஜிக்கே இந்த கதி என்றால்… மற்றவர்களை நினைத்தும் பார்க்க முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டான்.

அதிலும், கையெழுத்துக்காக அவனை மிரட்டி உருட்டியதை நினைத்தால் பகீரென்றது. கடைசியில் வேறு வழியில்லாமல் விஜியும் கையெழுத்திட்ட அந்த நேரத்தை நினைத்தால் இப்போதும் கார்த்திக்கு நடுங்கியது.

ஷ்யாம் மெளனமாக அமர்ந்து அவனை பார்வையிட்டுக் கொண்டுதான் இருந்தான், காக்டெயிலை பருகிக் கொண்டே!

அத்தனை கொடூரம் விஜியின் பார்வையில். உன்னை விட்டு விட மாட்டேன் பார் என்றது அந்த பார்வை!

விஷ்ணுவையும் இளங்கவியையும் அழைத்த ஷ்யாம், “இந்த நிலைமைல விஜி டிரைவ் பண்ண வேண்டாம்… நீங்க ரெண்டு பேரும் கூட போங்கடா… வீட்ல விட்டுட்டு வாங்க…” எனவும், அவனை முறைத்தான் விஜி.

“செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு…” என்று நிறுத்தியவன், “வேண்டாம் பாஸ்… நான் எதுவும் பேச விரும்பலை… இதுக்காக வாழ்நாள் முழுக்க வருத்தப்பட போறீங்க…” என முடித்துவிட்டு போக, அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், கார்த்திக்கை நோக்கி தன் பார்வையை திருப்பினான்.

அதுவரை கார்த்திக் பேஸ்தடித்தது போல அமர்ந்திருந்தான்.

“என்ன கார்த்திக் மச்சான்? ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று சிரிக்க, ‘மச்சானா? இந்த முறைக்கு எல்லாம் குறைச்சலில்லை’ என்று நினைத்துக் கொண்டான்.

“இல்லைங்க… ஒன்னும் இல்லை…” நழுவலாக பதில் கூற,

“அதெல்லாம் கண்டுக்காதீங்க… வேற வழி இல்ல… இப்படிதான் இருந்தாகணும்… ஒன்னும் தெரியாத மாதிரி இருந்தா தலைல மொளகாய் அரைச்சுட்டு போய்டுவாங்க…” வெகு இயல்பாக கூறியவனை விழி விரித்துப் பார்த்தான் கார்த்திக்.

“ஆனா விஜியை ரொம்ப நம்பினேன்… யார் மேல ரொம்ப நம்பிக்கை வைக்கிறமோ அவங்க தான் அத்தனை துரோகத்தையும் பண்ணிட்டு போயிடறாங்க…” என்றவனின் குரலில் அத்தனை வலி.

“ஆமா… நானும் லட்டுவ ரொம்ப நம்பினேன்… ஆனா யாரோ ஒருத்தனுக்காக சப்போர்ட் பண்றா… என்னை டீல்ல விட்டுட்டா…”

“உங்க லட்டு உங்களை சப்போர்ட் பண்ணலைன்னா உங்க மேல பாசம் இல்லைன்னு ஆகிடுமா கார்த்திக்? தப்புன்னா அதை தப்புன்னு மட்டும் தான் அந்த லட்டுக்கு சொல்ல தெரியும்… சரின்னு சொல்லவே சொல்லாது… அது நீங்களா இருந்தாலும் சரி, அந்த யாரோ ஒருத்தனா இருந்தாலும் சரி…” என்று புன்னகை மாறாமல் கூறியவனை இன்னமுமே ஆச்சரியமாக பார்த்தான் கார்த்திக்.

எத்தனை நம்பிக்கை… இந்த நம்பிக்கை தான் கார்த்திக்கை அரட்டியது!

பதில் ஏதும் பேசாமல் ஷ்யாமை பார்த்தவனை, “ஒரு முக்கியமான விஷயம் கார்த்திக்…” என்று அவன் அழைப்பதற்கும், ஷ்யாமின் செல்பேசி சிணுங்கவும் சரியாக இருக்க, பேசியை எடுத்தவன், கார்த்திக்கிடம் திரும்பி,

“உங்க ஆள் நம்பர்ல இருந்து உங்க பாசமலர் லட்டு தான் கால் பண்றா…” என்று புன்னகைக்கவும் கார்த்திக்கு புரை ஏறியது. ‘தன்னுடைய ஆளா? பிருந்தாவா? அது இவனுக்கு எப்படி தெரியும்?’

“சொல்லுடா…” என்று ஆரம்பித்தவனை,

“அண்ணா உன் கூட த்தான் இருக்கானா?” என்று அவள் கேட்க,

“ம்ம்ம் ஆமா…” என்றவன், “உன் அம்மா சொன்னாங்களா?” என்று கேட்க,

“ம்ம்ம் ஆமா… போன் பண்ணேன்… அண்ணாவை நீ கூப்பிட்டதா சொன்னாங்க… ஏன்டா? என்ன விஷயம்?” என்று கேட்க,

“நத்திங்… சும்மா லஞ்சுக்கு கூப்ட்டு இருந்தேன்…” என்றவன், “ஏன் கார்த்திகிட்ட பேசணுமா?” என்று கேட்க,

“இல்ல… பரவால்ல… ஈவினிங் பார்த்துக்கறேன்…” என்றவள், சற்று இடைவெளி விட்டு, “எதுவும் பிரச்சனையா ஷ்யாம்?” என்று கேட்க, அதை கேட்டு மெலிதாக சிரித்தவன்,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல…” என்று கூறியவன், “உன் அண்ணனுக்கு அவன் ஆள் கூட என்னவோ பேசணுமாம்… கொஞ்சம் கொடேன்…” என்று கார்த்திக்கை மாட்டிவிட, மஹா சிரித்தாள். கார்த்திக்கு தான் திக்கென்று இருந்தது.

“டேய்… எனக்கு காது குத்திட்டாங்கடா…” என்றவள், சற்று கிசுகிசுப்பாக, “ரெண்டும் இன்னும் சமாதானமாகல… மூஞ்சை தூக்கி வெச்சுட்டு அலையுதுங்க…” என்று கூற,

“இங்க இருக்க விக்கெட் ரொம்ப வீக்கா இருக்கே… அது கூடவா இந்த சீனை காட்டுது?” என்று கேட்க,

“ஓய்ய்யி… உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என் அண்ணனை வீக் விக்கேட்டுன்னு சொல்வ…” என்று கேட்டவளின் தொனியில் சிரித்தவன்,

“பின்ன… யாரோ என்னவோ சொன்னாங்கன்னு அப்படியே நம்பறான்? அவனுக்கா யோசிக்க தெரியாது? மண்டைல க்ரே மேட்டர்ன்னு ஒன்னு இருக்குமே… அதை யூஸ் பண்ணவே மாட்டானாடி உன் அண்ணன்? அதான் இன்னைக்கு முழுசா இங்கயே இருன்னு இருக்க வெச்சுட்டேன்… ஒரு ரெண்டு வருஷம் கூட இருந்தா பிக் அப் பண்ணிடுவான்…” கார்த்திக்கை பார்த்துக் கொண்டே தான் பேசினான் ஷ்யாம். தன்னை வைத்துக் கொண்டே தன்னை இப்படி பேச தனி தைரியம் வேண்டும் தான் என்று எண்ணிக் கொண்டான் கார்த்திக்.

நேரடியாக கார்த்திக்கை திட்ட முடியாது. இப்படிதான் ஆராயாமல் நம்புவாயா என்று கேட்க முடியாது. என்ன இருந்தாலும் மச்சானாக போகிறவனாயிற்றே! மஹா ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவள் தனக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லாத உறுதி அவனுக்கு.

“தெய்வமே… அவன் ஜ்வல்லரியை டெவலப் பண்ணட்டும்… இந்த கர்மம் எல்லாம் வேண்டவே வேண்டாம்… போதும் சாமி… நீயே கட்டிட்டு அழு…” எனவும்,

“ஏன்டா? என்னாச்சு?” எனவும்,

“இல்ல ஷ்யாம்… நமக்கெல்லாம் இது ஒத்து வராது… வேண்டாம்…”

“என்ன ஒத்து வராது? நான் தான் சொல்லிருக்கேன்ல… கார்த்திக் என்னோட பொறுப்பு மஹா…” எனவும், கார்த்திக் சற்று வியந்து பார்த்தான். இப்படியெல்லாம் ஷ்யாம் கூறுவதை அவனால் நம்ப முடியவில்லை.

“பார்க்கலாம் ஷ்யாம்…” என்றவள், “சரிடா ப்ரேக் முடியப் போகுது…” என்று வைக்க முயல,

“ஏய் லூசு ஒன் மினிட்” என்றவன், “இன்னைக்கு ஈவினிங் ஃப்ரீயா?” என்று கேட்க,

“ஏன்டா ?” என்று கேட்க,

“அவார்ட் பங்க்ஷனுக்கு இன்வைட் வந்திருக்கா?” என்று ஒரு விருது வழங்கும் விழாவை குறிப்பிட்டு இவன் கேட்க,

“ம்ம்ம் ஆமா கார்த்திக் சொல்லிட்டு இருந்தான்…” எனவும்,

“பங்க்ஷனுக்கு வர்றியா?” என்று கேட்க,

“அதெல்லாம் அம்மா விட மாட்டாங்க… இதுக்கெல்லாம் தடா தான்…” என்று சிரிக்க,

“பரவால்ல… சொல்லிட்டு இன்னைக்கு ஈவினிங் வா… அப்படியே அம்மா பர்த்டேக்கு கிஃப்ட் வாங்கனும்ன்னு சொல்லியிருந்தன்ல… அதையும் முடிச்சுடலாம்…” என்று அழைத்தாலும், அவனது குரலில் ஏதோ வேறுபாடு இருப்பதை கண்டுகொண்டாள்.

“ஏன் ஷ்யாம்? வாயிஸ் வேற ஒரு மாதிரியா இருக்கு? டிஸ்டர்ப்ட்டா இருக்கியா?” என்று சற்று இறங்கிய குரலில் கேட்க,

“ம்ம்ம்…” என்றான்.

“என்னடா?”

“ஈவினிங் வா… நேர்ல பேசலாம்…” எனவும்,

“யோசிக்கறேன் பாஸ்…” என்றவள், “ஓகே டா… பை…” என்றபடி வைத்து விட, கார்த்திக்கை புன்னகையோடு பார்த்தான் ஷ்யாம்.

சற்று நேரத்திற்கு முன் ஒருவனை அடித்து கட்டபஞ்சாயத்து செய்து, அடாவடியாக கையெழுத்து வாங்கிய ஷ்யாமா இவன்? வெளியே அத்தனை பேரிடமும் ஒரு முகம்… தங்கையிடம் மட்டும் வேறு முகம்!

விஜியை அடித்து கையெழுத்திட வைத்ததும் இல்லாமல், அப்போதே அதை ரெஜிஸ்டராரை வைத்து பதிவும் செய்தவனை மெளனமாக பார்வையிட்டு கொண்டிருந்த கார்த்திக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

அந்த பதிவாளர் வெளி வராண்டாவில் காத்துக் கொண்டிருந்தார்.

“ஒரு நிமிஷம் கார்த்திக்…” என்றபடி, இளங்கவி வைத்திருந்த டாக்குமெண்ட்சை ஒருமுகமாக கவனத்தை குவித்து முழுவதுமாக பார்வையிட்டான்.

ஒவ்வொரு வரியையும் அவன் ஆழ்ந்து படிப்பதை உணர முடிந்தது.

“ஓகே கவி…” என்று அதில் கையெழுத்திட்டவன், “கார்த்தியோடது ரெடியா?” என்று கேட்க, “ரெடி பாஸ்…” என்று டாக்குமென்ட்டை நீட்டியவனை பார்த்து புன்னகைத்தவன், கார்த்தியை, “வாங்க கார்த்திக் மச்சான்…” என்றழைக்க, இவனுக்கு திடுக்கிட்டது.

இவன் எதற்காக தன்னை அழைக்கிறான் என்ற அதிர்வு!

இவனுக்கும் தனக்கும் கணக்கெல்லாம் முடிந்து விட்டதே… இனியும் என்ன என்ற கேள்வி மருட்டியது!

“ஆக்சுவலா இதை அப்புறமா செஞ்சுக்கலாம்ன்னு தான் விட்டு வெச்சுருந்தேன்… ஆனா இந்த ரெய்ட்ல ட்வென்டி சி சிக்கிருக்கு… அதுக்கு கணக்கை காட்டியேயாகனும்… வேற வழி இல்ல…” என்றவனை, என்னவென்று பார்த்தான் கார்த்திக்.

“அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?”

“ம்ம்ம்…” என்று நெற்றியை சுரண்டியவன், “அது உங்க கிட்ட இருந்து வந்தது… அதை ஆல்ரெடி கணக்குல கொண்டு வந்தாச்சு…” என்று கூற,

“தென் வாட்?” என்று கார்த்திக் கேட்க, ஷ்யாமுக்கு தயக்கமாக இருந்தது. அதுவரை மகாவிடம் கூட இதை சொல்லவில்லை. தான் செய்ததற்கு அவளிடம் செய்தியை கூட தெரிவிக்கவில்லை. இதற்கு அவள் எப்படி எதிர்வினையாற்றுவாள் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை.

“இங்க இருந்து உங்களுக்கு போனதுக்கு கணக்கு கொண்டு வரலை… காலேஜ் லேண்ட் பர்சேஸ்காகன்னு அந்த ட்வென்டி சி யை யூஸ் பண்ணதா சொல்லியாச்சு… அதுக்கு நாம டாக்குமெண்ட்ஸ் சப்மிட் பண்ணியாகணும்…” எனவும்,

“எதை சொல்றீங்க ஷ்யாம்?”

“தியேட்டரை பர்சேஸ் பண்றதுக்காக உங்களுக்கு கொடுத்த ட்வென்டி சி யை சொல்றேன் கார்த்திக்…” என்று இயல்பாக கூற, கார்த்திக் அதிர்ந்தான்.

“என்ன சொல்றீங்க?” அவனுக்கு அது மிகவும் புதிய தகவல்… மிகவும் அதிர்ச்சியும் கூட… அடிப்படையே ஆட்டம் கண்டது அவனுக்கு!

“அப்புறமா பேசிக்கலாம்… இப்ப வேலைய முடிச்சு இவரை அனுப்பி விடலாம்…” என்று பதிவாளரை காட்டி கூறவும் கையை காட்டி அவனை நிறுத்தினான்.

“என்ன சொல்றீங்க? முழுசா சொல்லிட்டு போங்க…” என்று அழுத்தமாக கேட்டான் கார்த்திக். அவனுக்கு இப்போது தெரிந்து கொண்டாக வேண்டும். இவன் தான் தியேட்டரை வாங்கியது என்றால் எதற்காக மகாவை கஸ்டடி எடுக்க வேண்டும்? அதிலும் தியேட்டரை வாங்கினானே தவிர, இன்னமும் ரெஜிஸ்டர் கூட செய்யவில்லையே. எந்த நம்பிக்கையில் இருபது கோடியை கொடுத்தான்?

ஒன்றா இரண்டா? அதிலும் சிறிய தொகையா என்ன?

இருபது கோடியை அசால்ட்டாக கொடுக்க வேண்டும் என்றால் என்ன காரணம்?

அதிலும் அந்த பணத்திற்காக தான் மஹாவை கஸ்டடி எடுத்தான் அல்லவா!

எதற்காக கஸ்டடி எடுத்தான்? எதற்காக இவனே பணத்தையும் கொடுத்தான்?

“அப்புறமா பேசிக்கலாம் கார்த்திக்…” என்று அங்கிருந்து நழுவப் பார்த்தான் ஷ்யாம்.

“இல்ல சொல்லுங்க… நீங்க தான் வாங்கினீங்களா?”

உதட்டை குவித்து ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், கைகளை கட்டிக் கொண்டு,

“ம்ம்ம்… ஆமா…” என்று கூற,

“ஏன்?”

“ஏன்னா? நான் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் கார்த்திக்? நீங்க வித்தீங்க… நான் வாங்கினேன்… அவ்வளவுதான்…” என்று இயல்பு போல முடித்து விட்டு போக,

“அது எப்படி அவ்வளவு ஈசியா சொல்றீங்க ஷ்யாம்? அப்ப அப்படி ஒன்னும் நீங்க ஈசியா இருக்கல… எப்படி இது நடந்ததுன்னு தான் கேட்டேன்…”

“ஏன்னா?! ம்ம்ம்ம்….” என்று நெற்றியை சுரண்டியவன், “உங்க தங்கச்சியை வெச்சு சமாளிக்க முடியல… எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் போல… நாம தான் பணம் கொடுத்தா தான் விடுவோம்ன்னு கெத்தா வேற சொல்லிட்டோமா?! வேற வழியில்லாம நானே கொடுத்து, நானே அந்த பிசாசை அனுப்பி வெச்சுட்டேன்…” என்று சிரிக்காமல் கூறிக் கொண்டு வந்தவன், கடைசியில் அடக்க முடியாமல் சிரித்து விட,

ஆனால் கார்த்தியால் சிரிக்க முடியவில்லை, “இதை நான் நம்ப மாட்டேன்… அதோட அப்படிப்பட்ட ஆளும் கிடையாது நீங்க… ஒரு ரூபாயா இருந்தாலும் அதை கணக்கா வசூல் பண்ணிடுவீங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்… நீங்க இருபது கோடியை சும்மா தூக்கி கொடுத்தீங்கன்னு சொன்னா நான் நம்பனுமா?”

“சும்மா எங்க கொடுத்தேன்? தியேட்டரை வாங்கிட்டு தானே கொடுத்தேன்?”

“இன்னும் நீங்க வாங்கவே இல்ல… நான் பணமே வாங்கலைன்னு சொன்னா கூட நீங்க லீகலா ஒன்னும் பண்ண முடியாதுன்னு உங்களுக்குமே தெரியும்…”

“ம்ம்ம்ம்… எஸ்… ஐ நோ…” என்று மெலிதாக சிரிக்க,

“அப்புறம் எதுக்கு இந்த டிராமா ஷ்யாம்? நான் பார்த்த வரையில எங்கயோ இடிக்குது…”

“எங்கயும் இடிக்கல கார்த்திக் மச்சான்… அதுபாட்டுக்கு தான் இருக்கு…” என்றவன், “இந்த பேச்சை விடுங்க… வேலைய முடிக்கணும்… அதோட தியேட்டரை நான் தான் வாங்கினேன்னு உங்க கூட பொறந்தது கிட்ட நீங்க சொல்லாம இருந்தா போதும்… எங்கண்ணனை ஏமாத்திட்டியான்னு என்னை போட்டு உலுக்கிடும்…”

“நீங்க ஒன்னும் ஏமாத்தின மாதிரி தெரியல… அர்ஜன்ட்டுக்கு நான் சேல்ஸ் பண்ணேன்… ஆக்சுவலா அந்த ப்ராபர்ட்டிக்கு டுவென்டி அதிகம்… பேரம் பேசியிருந்தா நான் குறைச்சு இருப்பேன்… ஆனா அப்படியே கொடுத்து வாங்கினது நிஜமா இடிக்குது…” கார்த்திக் உண்மையை தான் கூறினான். அதிலும் உணர்ந்து தான் கூறினான்.

“இருக்கட்டும்… ஒன்னும் ப்ராப்ளம் இல்ல…” என்று அந்த விஷயத்தை முடிக்க பார்த்தாலும் கார்த்திக் விடுவது போல இல்லை.

“நீங்க முதல்ல சொல்லுங்க…” என்று அவன் பிடிவாதமாக நின்று விட,

“ஆக்சுவலா மஹாவை கொஞ்சம் பயமுறுத்தத்தான் கஸ்டடி எடுத்தேன்… உங்க பண விஷயம் எனக்கு செக்கன்றி தான்…” எனவும், அதிர்ந்து பார்த்தான் கார்த்திக். இது புதிது அல்லவா!

“வாட்….”

“ம்ம்ம்… யாரும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாத மாதிரியும் செஞ்சு பார்த்தேன்… ஆனா மசிவேனான்னு இருந்தா…” எனவும், கார்த்திக் பல்லைக் கடித்தான். தன் தங்கை மசியவில்லை என்று தன்னிடமே கூறுகிறானே என்ற கோபம்.

“என்ன சொல்றீங்க?” என்றவனின் குரலில் சூடு தெறித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!