VNE36(1)

VNE36(1)

36

டக் இன் செய்யப்பட்ட ஸ்கை ப்ளு ஹாஃப் ஹேன்ட் ஷர்ட், டீப் ப்ளு பேன்ட், கண்களை மறைத்த ரேபான், இடக்கையில் ஒரிஸ் டைவர்ஸ், வலது கையில் செம்பு காப்பு, காலில் பளபளத்த ஃபார்மல் ஆலன் எட்மன்ட் என்று அட்டகாசமாக தன்னுடைய ஜாகுவாரிலிருந்து லக்ஷ்மி ஜெம்ஸ் வாசலில் வந்திறங்கினான். விருது நிகழ்ச்சிக்காக முன்னமே தயாராகி விட்டவன், முதலில் பர்சேஸ் முடித்து விடலாமென்று கூற, கார்த்திக் அவனுடைய கடைக்கு வர சொல்லியிருந்தான்.

மிகவும் பாரம்பரியமான கடை. டி நகரில், மூன்று மாடிகளில் மிகவும் ஆடம்பரமாக இருந்தது! மூன்று தலைமுறையை கண்டுவிட்ட நிறுவனம். நகைகளோடு ரத்தினங்களுக்காகவும் பெயர் பெற்றது. கார்த்திக் தான் இப்போது நிர்வகித்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு தளத்தின் சிசிடிவி பதிவுகளையும் பார்வையிட்டபடி சுற்றிலும் பார்வையை பதித்தபடி இருந்தான்.

காரிலிருந்து ஷ்யாம் இறங்கும் போதே உள்ளிருந்து கவனித்து விட்டிருந்தான் கார்த்திக். உடன் மகாவும் இருந்தாள், கூடவே பிருந்தாவும்!

கார்த்திக்கை முறைத்தபடி!

கார்த்திக் சமாதானக் கொடியை பறக்க விட்டாலும், அசைவேனா என்றிருந்தாள்.

முன்னரே, “பிருந்தா… உன்னை நான் அப்படி சொன்னது தப்புதான்… விட்டுடேன்… தெரியாம பேசிட்டேன்…” என்று அவளது காலில் விழாத குறையாகவும் கெஞ்சிப் பார்த்து விட்டான்.

கண்களிலோரம் வழிந்த துளி கண்ணீரை யாருமறியாமல் சுண்டி விட்டவள்,

“என்னை பிரிச்சு பார்த்துட்டீங்கல்ல…” என்று அவனிடம் சிக்காமல் போக, பாவமாக தங்கையை பார்த்தான்.

“ப்ரோ கூச்சமே பார்க்காம கால்ல விழுந்துடு…” என்று சிரிக்கவும், அவளது தலையில் தட்டினான் அவளது தமையன்.

“நீ தான்டி அவளுக்கு ஏத்தி விடற…” எனவும்,

“அடப்பாவிபய மக்கா… என் மேல இப்படியொரு பழியா? ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தலாம்ன்னு பார்த்தேன் பாரு… எனக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்…” என்று அவள் கூறவும்,

“வேணும் வேணும்ன்னு மட்டும் சொல்லு… ஆனா அதை கரெக்ட் பண்ணிடாத…” என்று சலித்துக் கொண்ட தமையனை,

“டேய் அண்ணா… கரெக்ட் பண்ண வேண்டியது நீ தான்டா…” என்று சிரிக்க,

“அதுதான முடியவே மாட்டேங்குது…” என்றுக் கூறிக் கொண்டிருக்கும் போது தான் ஷ்யாம் காரிலிருந்து இறங்கினான்.

வாலட் பார்க்கிங்காக கார் சாவியை கொடுத்துவிட்டு, நிமிர்ந்து லக்ஷ்மி ஜெம்சை பார்த்தான். அவனையும் அறியாமல் புன்னகை பூத்தது. நமக்கு உரிமையான இடம் என்ற எண்ணம் தோன்றும் போது நம்மையும் அறியாமல் வரும் புன்னகை அது.

அவனது அந்த வசீகரத்தில் மஹா மயங்கினாளோ இல்லையோ, கார்த்திக் ஒரு சில நொடிகள் மயங்கி நின்றான் என்பதுதான் உண்மை. வெகு சிலருக்கே அந்த வசீகரம் இயற்கையிலேயே அமையப் பெற்றிருக்கும். Aura  என்ற ஒன்று… அதில் தான் கார்த்திக் மயங்கினானோ?

இங்க கார்த்திக் மயங்கறதுதான் ரொம்ப முக்கியம் என்று சமூகம் கழுவி ஊற்றுவது அடியவளின் காதுகளில் ஒலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் சற்று அதிகமாக சைட்டடித்து விட்ட காரணத்தினால் வேறு வழியில்லாமல் மஹா புறமாக சென்று விடுகிறேன். சமூகம் பொறுத்தருள்க!

“ஹாய் மச்சான்…” என்றபடி கார்த்திக் ஷ்யாமை நோக்கிப் போக, யாருடா அது மச்சான்? என்று மஹாவும் பிருந்தாவும் வாசல் பக்கமாக திரும்ப, அங்கு ஷ்யாமை கண்டதில் அவளது இதயம் லயம் தப்பி துடித்தது.

தந்தைக்கு ஒய்வு தேவை என்பதால் அவரை விட்டுவிட்டு இவர்கள் நேராக கடைக்கு வந்துவிட, அவனும் சேர்ந்து கொள்வதாக தான் திட்டம். ஆனால் அவனது தோற்றமே சொன்னது, வெகு சிரத்தை எடுத்து பக்காவாக வந்திருக்கிறான் என்று!

எதிரிலிருந்த கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள். பழுதொன்றும் கூற முடியாது. ஆனாலும் அப்படியொன்றும் அலங்காரமில்லை. நீட்டான காட்டன் சுடிதார். எப்போதும் போல இறுக்கமாக வாரி பின்னிய தலை. என்ன ஒன்று முகம் எண்ணெய் வழியாமல் இருந்தது. கண்களில் மை. உதட்டுக்கு லேசான பிங்க் லிப் கிளாஸ். இடது கையில் ஃபாஸ்ட் ட்ராக். வலது கையில் மெல்லிய பிரேஸ்லெட். கழுத்தில் மிக மெல்லிய செயின், வைர பென்டன்ட்டுடன். காதில் ஒற்றைக் கல் சாலிடர் வைர கம்மல். மிக எளிமையாக தோன்றியது.

பங்க்ஷன் என்றதற்கும் இவ்வளவு தான் செய்து கொள்ள தோன்றியது. ஆனால் இப்போது அவனது தோற்றத்தை கண்டபோது தான் சற்று சிரத்தை எடுத்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது. அவனுடன் செல்லும் போது அவனளவு இல்லையென்றாலும் சற்றேனும் பார்க்கும்படியாக இருக்க வேண்டாமா என்று கேட்டது அவளது மனம்.

ஆனாலும் அசட்டையாக ஒதுக்கி தள்ளினாள்.

அவனுடனிருக்கும் போதெல்லாம் ஒன்றை மட்டும் கவனித்து இருக்கிறாள். சுற்றி இருக்கும் பெரும்பாலான பெண்களின் கண்கள் அவனை தடவி மீள்வதை! சற்று எரிச்சலாக கூட இருக்கும்… அப்படியென்ன இவனிடம் இருக்கிறது என்று! உற்று பார்த்தாலும் இவளது கண்களுக்கு அவனிடம் ஒன்றுமே தென்படவில்லையே!

இப்போதும் சுற்றிலும் பார்த்தாள். சேல்ஸ் பெண்கள், நகை வாங்க வந்த பெண்கள் என்று முக்கால்வாசி பெண்களின் கண்கள் அவன் மேல்… ஏனோ அனல் மேல் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு… பற்களை நறநறவென கடித்தாள்.

அதோடு கார்த்திக்கின் ‘மச்சான்’ என்ற அழைப்பு வேறு!

முறைத்துக் கொண்டே இருந்தவன் எப்படி இப்படி?

ஒரே பிரியாணி ஆளையே மாற்றி விடுமா என்ன?

தான் பிரியாணியில் மயங்கினால் அதை ஒப்புக்கொள்ள முடியும். ஏனென்றால் ஆல்ரெடி மஹா ஒரு பிரியாணி வெறியை என்பதை சமூகம் அறியும்… ஆனால் கார்த்திக் அப்படியல்லவே… அவன் ஒரு பிரியாணிக்கு மயங்கி விடுபவனா என்ன?

அவளை பார்த்தவனின் கண்களில் மின்னல் வந்துவிட்டு போனாலும் அடுத்த நொடி அவன் சற்று அதிர்வது தெரிந்தது.

மிகவும் இயல்பாக கார்த்திக்கின் தோளில் ஒற்றைக் கையை போட்டுக் கொண்டவன், வலது கையை பாக்கெட்டில் விட்டபடி மகாவை பார்த்தபடியே வந்தான்.

“இப்ப எதை வெச்சு வம்பு வளர்க்க போற மஹா குட்டி?” அருகில் நின்றிருந்த பிருந்தா அவளது காதை கடித்தாள். ஆரம்பத்தில் இருவருக்குமான பிணக்குகளை மனதில் கொண்டு!

“ரொம்ப ஆசைப்படற போல இருக்கே செல்லோ?”

“நானா? நீதான் ஆத்தா குதிச்ச… ஆனாலும் செப்பல் ஷாட் லாம் விட்ட பாரு… அத்தைகிட்ட ஒரு நாள் சொல்லணும்…” என்று மீண்டும் காதை கடித்தவளை முறைத்தாள் மஹா.

“அண்ணியாரே… உங்க குடுமி என் கைல…” எனவும்,

“தெய்வமே… மீ எஸ்கேப்…” என்று அவள் கூறுவதற்கும், ஷ்யாம் அருகில் வருவதற்கும் சரியாக இருக்க, அவனை பார்த்து புன்னகைத்தாள் மஹா.

“கலக்கலா வந்திருக்க? யாரையோ ஹெவியா இம்ப்ரஸ் பண்ண போற போல…” என்று அவள் எப்போதும் போல கலாய்க்க, மற்றவர் அறியாத வண்ணம் முறைத்தபடி அருகில் வந்தான்.

“என்னடி… கிளம்பாம இருக்க?” என்று கேட்க,

“ஏன்டா… கிளம்பி தானே வந்திருக்கேன்…” தன்னுடைகளை பார்வையிட்டபடியே கூற,

“இப்படியேவா வர போற?” அதிர்ந்தான் ஷ்யாம்.

“ஆமா… ஏன் கேக்கற?” அவளுக்கு புரியவில்லை. இவன் என்ன சொல்ல வருகிறான் என்று! சற்று எளிமையான அலங்காரம் தான்… ஆனாலும் தவறென்ன இருக்கிறது?

கார்த்திக்கின் புறம் திரும்பியவன், “என்ன கார்த்திக் மச்சான்? நீங்களாவது சொல்லியிருக்க கூடாதா?” என்று கேட்க, அதுவரை அவனும் கவனிக்கவில்லை. அது போன்ற நிகழ்சிகளுக்கு இந்த அலங்காரம் போதாதல்லவா!

“சாரி மச்சான்… கவனிக்கல…” என்று அவன் நெற்றியை தேய்க்க,

“உங்க ஆளை பார்த்துட்டு, என் ஆளை விட்டுட்டீங்க…” அவனது காதில் கிசுகிசுத்தவனை பார்த்து மெலிதாக வெட்கத்தோடு சிரித்த கார்த்திக்,

“அப்படி இல்ல மச்சான்… யோசிக்கவே இல்ல…” என்று கூற, நடுவே இடையிட்டாள் மஹா.

“ஹலோ… என்ன மச்சான் மச்சான்னு பாசப்பயிரை வளர்த்துட்டு இருக்கீங்க? டேய் அண்ணா… ஒரு பிரியாணிக்காக இப்படி மாறிட்டியேடா…” கலாய்த்தவளை பார்த்து சிரித்த கார்த்திக்,

“ஆமா லட்டு… மட்டன் பிரியாணி செம டேஸ்ட்…” என்று அவளது வயிற்றில் நெருப்பை பற்ற வைத்தான். அவனை முறைத்தவள்,

“போடா போடா… எனக்கு பைரவி பிரியாணி இருக்கு…” என்று வம்படிக்க, ஷ்யாமா அதில் கலந்து கொள்ளாமல் அவளை பார்த்து முறைத்தபடி இருந்தான்.

“லூசு… திங்கறதுலையே இரு…” என்று கடுப்படித்தவன், “பங்க்ஷனுக்கு ஒரு சாரி கட்டி கொஞ்சம் சிம்பிள் ஜ்வெல்ஸ் போட்டு இருக்கலாம்ல… பேக்கு மாதிரி இப்படியா வருவாங்க?” எதைப் பற்றியும் கவலைப் படாமல் அவளை குதறும் மூடுக்கு சென்றிருந்தான் ஷ்யாம். நேரம் வேறு ஓடிக்கொண்டே இருக்க, அவனுக்கு டென்ஷனாக இருந்தது. அவன் லூசு பேக்கு என்றதும், அவளுக்கும் கோபம் மூக்கின் மேல் வந்தமர்ந்து கொள்ள,

“ஆமா நான் லூசுதான்… என்னை எதுக்கு கூட்டிட்டு போற? போ… வேற யாராவது நல்ல்ல்லா அலங்காரம் பண்ணிட்டு வந்தா, அவங்களை கூட்டிட்டு போ…” என்றவள், சற்று தூரத்தில் நின்று கொண்டு ஷ்யாமையே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைக் காட்டி, “அது கூட சாரி கட்டி அழகா இருக்கு… அதையே தள்ளிட்டு போ… பிசாசு…” என்று பொரிய, அவள் காட்டிய பெண்ணை பார்த்தவனுக்கு அவனது கோபம் காணாமல் போக, மெலிதாக சிரித்துக் கொண்டான். பிருந்தாவுக்கும் கார்த்திக்கும் கூட புன்னகை மலர்ந்தது.

“ஃபிகர் நல்லாத்தான் இருக்கு குல்பி…” என்று சிரித்தவன், “ஆனா அவ புருஷன் விடணுமே… நீ வேண்ணா கேட்டு பாரேன்…” என்று கூற, ஒரு கணம் முறைத்தவள், மறு கணம் சிரித்து விட்டாள். அவனது குல்பி என்ற அழைப்பே, அவனது கோபம் குறைந்ததை கூறியது. கோபப்படுவதை போல காட்டிக் கொண்டாலும் அவனது அந்த ‘குல்பி’ என்ற அழைப்பு அவளுக்கு மிகவும் பிடித்தமானது. மனதுக்கு நெருக்கமானது.

இருவரின் வாக்குவாதத்தை பார்த்துக் கொண்டிருந்த மற்ற இருவரும் கூட சிரித்து விட, மூவரையும் பார்த்து,

“என்னை பார்த்தா எப்படி தெரியுது?” என்று இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு மகா கேட்க,

“பக்கா லூசு மாதிரிதான் தெரியுதுடி…” என்ற ஷ்யாமை பார்த்து முறைத்தவள்,

“இப்ப என்னதான்டா சொல்ல வர்ற?”

“ஒழுங்கா போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா…” முடிவாக அவன் கூறிவிட,

“இனிமேல்லாம் போய் மாத்திட்டு வர முடியாது… இப்படியே வர்றதுன்னா வரேன்… இல்லைன்னா வர மாட்டேன்…” என்று முரண்டு பிடிக்க, உதடுகளை குவித்து பெருமூச்சை வெளியேற்றியவன்,

“ப்ளீஸ் மஹா… நம்ம ஸ்டேடஸ்க்கு தகுந்த மாதிரி போகணும்… நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல… அதை காப்பாத்த வேண்டாமா?” என்று அவன் தான் இறங்கி வந்து கேட்க வேண்டியதாயிற்று.

“அதென்ன நம்ம? உனக்குன்னு சொல்லிக்க…” என்று பல்லைக் கடித்தாள் மஹா.

“சரிடி… எனக்கு தான்… என் கூட வந்தா அந்த மரியாதைய நீயும் தான் மெய்ன்டெயின் பண்ணனும்… குட்டிம்மால்ல… ப்ளீஸ் போய் நல்ல சாரி கட்டிட்டு வா மகா…”

“அப்படீன்னா நான் வரலை…நீ மட்டும் போ…” என்று அவள் கழண்டு கொள்ள பார்க்க,

“அடியே…” என்று பல்லைக் கடித்தவன், அவளிடம் எகிறினால் வேலைக்காகாது என்று புரிந்து கொண்டு, “ஃப்லிம்பேர் அவார்ட்ஸ்… முக்கியமான க்ரூப்… நான் அவார்ட் கொடுக்கணும் மகா… ஃபிரன்ட் சீட்ஸ்ல இருப்போம் … மீடியா கவரேஜ் முழுசா இருக்கும்… பாக்கியவதி பைனான்ஸ்க்கும் லக்ஷ்மி பிலிம்ஸ்க்கும் எந்த பிரச்னையும் இல்லைன்னு நாம ப்ரூவ் பண்ணனும்ன்னா அங்க இந்த மாதிரி சில எட்டிகுவைட்ஸ் மெய்ன்டெயின் பண்ணித்தான் ஆகணும்… அப்பத்தான் உன் அண்ணனோட படம் வியாபாரமாகும்… இல்லைன்னா நஷ்டம் எனக்கில்ல… உன் பாசமலருக்கு தான்… இப்ப சொல்லு… வர்றியா வரலையா?”

அவன் கூறியது அத்தனையும் உண்மைதான். ஆனால் அவனது உள்ளகிடக்கை வேறு. தன் காதலியை உலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும்… அதற்கு அவன் மெனக்கெடவே தேவையில்லை. இவனோடு வந்தாலே போதும், தீ பற்றிக் கொள்ளும். அதை நினைத்து தான் ஷ்யாம் இத்தனை பிரயத்தனப் பட, மகாவோ அவன் அனுப்புகின்ற பாலை எல்லாம் சிக்ஸருக்கு அனுப்பி விட்டுக் கொண்டே இருந்தாள்.

“அதுக்கு எதுக்கு நான்? பேசாம இவனையே கூட்டிட்டு போ… உன்னோட எட்டிகுவைட்ஸ் மெய்ன்டெயின் பண்ணு…” என்று சாதரணமாக கூறியவளை, என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தான்.

பொறுமை பறந்து விடும் போல இருந்தது.

“சொன்னா புரிஞ்சுக்கடி… ஒரு சாரி தானே கட்ட சொல்றேன்… சிலிண்டருக்கு உறைய போட்ட மாதிரி இருக்கு இது…” என்று கிட்டத்தட்ட கெஞ்ச, சிலிண்டர் என்று கூறியதற்கு முறைத்தாலும் அவளுக்கும் சற்று சங்கடமாக தான் இருந்தது. அவளும் தான் என்ன செய்வாள்? சும்மாவே சோம்பேறி, சேலையை சுற்ற வேண்டுமா என்று கேட்பவள். சுடிதார் அணிவது என்பது அவளைப் பொறுத்தவரை எளிது. சேலை என்றால் உடம்பில் நான்கு முறை சுற்றி, ஃப்ளீட்ஸ் எடுத்து சொருகி, பின் செய்து என்று ஷப்பா என்று பெருமூச்சு விடுவாள்.

“நீ சொல்றது ஓகே… ஆனா இனிமே வீட்டுக்கு போய் சாரி கட்டி…” என்று இழுத்தவள், “முடியாதுடா…” என்று முடிக்க,

“சரி இங்கயே ஏதாவது ரெடி பண்ண முடிஞ்சா ஒழுங்கா பண்ணிட்டு வருவியா?” அவனுக்கு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“ம்ம்ம்… பாக்கலாம்…” என்று ஒப்புதல் கொடுக்க, வேகமாக யோசித்தான்.

“ப்ரோ ரெடிமேட் ப்ளவுஸ் இருக்குமே…” என்று பிருந்தா ஐடியா கொடுக்க, அவனது முகம் ஒளிர்ந்தது.

“தெய்வமே… வாழ்க…” என்றவன், மஹாவின் புறம் திரும்பி, “என்ன சொல்ற மஹா?” என்று கேட்க, அவள் யோசித்தாள்.

“சாரி எடுத்து…. கட்டி… அப்புறம்…. மேக் அப் பண்ணி…. ஓ மை கடவுளே… மீ பாவம்… நோஓஓ…” என்று வேகமாக இடம் வலமாக தலையாட்டினாள்.

“உன்னையெல்லாம்…. ச்சே…” என்றவன், “ஊர்ல ஆளாளுக்கு அம்பது  பிகரை மெயின்டெயின் பண்றானுங்க… இவ ஒருத்தியை வெச்சுக்கிட்டு நான் படற பாடு இருக்கே…” என்று கார்த்திக்கின் காதில் புலம்ப, அதுவரை சிரித்துக் கொண்டே இருவரையும் பார்வையிட்டு கொண்டிருந்தவன், இப்போது வாய்விட்டு சிரித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!