“ஏன் என்னாச்சு? என்ன மறுபடியும் பிரச்சனை பண்றானா? அவ்வளவு தைரியம் அவனுக்கு இருக்கா?” என்று கேட்க,
“ம்ம்…” என்றவன், அவனிடம் குனிந்து, “அவன் ரொம்ப லவ் பண்ணிருக்கான் போல…” என்று கார்த்தியிடம் மெல்ல சிரித்தபடி கிசுகிசுப்பாக கூற,
“மச்சான்…” என்று பல்லைக் கடித்தான் கார்த்திக். “மகாவுக்கு அவன் பேர் கூட தெரியல…” என்றவன், “நீ எக்கச்சக்கமா அவன் கிட்ட பிடுங்கிட்ட… அந்த கடுப்பா இருக்கும்…” எனவும்,
“எதுவோ ஒன்னு… அவனை ரொம்ப சொரிஞ்சு விட்டு இருக்கேன்… திரும்ப ரியாக்ட் பண்றான்…” என்று கூற,
“ப்ச்… அதெல்லாம் பார்த்துக்கலாம்… நமக்கு ஒண்ணுமில்ல இது… ஆனா இவ கூட இருந்துட்டாளா… பயந்துட்டா…” என்று கிசுகிசுப்பாகவே கூற,
“பாவம் மச்சான்…” என்ற கார்த்திக்கை,
“ஆமா… நான் என்ன இல்லைன்னா சொல்றேன்… ஆனா இதுக்கெல்லாம் இவ்வளவு நடுங்கினா என்னாகறது?” என்று கேட்க,
“யோவ்… உனக்குதான்யா இதெல்லாம் கேஷுவல்… நாங்க எல்லாம் ரொம்ப அமைதியானவங்க…” என்று கூற,
“அதான் தெரியுதே… ஒரு மணி நேரமா மலையிறக்குனேன்.. இப்ப மறுபடியும் மலையேறிட்டா… இன்னும் எத்தனை மணி நேரம் தாஜா பண்ணணுமோ? ஷப்பா…” என்று கிசுகிசுத்தவனை பார்த்து சிரிக்கலாம் என்றால் அத்தனை சீரியசாக நடுங்கிக் கொண்டிருந்த தங்கையை பார்க்கையில் கவலையாக இருந்தது.
அத்தனையும் இருவருக்குமிடையில் மட்டும் கிசுகிசுப்பாகவே நடந்தது.
“நான் உன்கிட்ட முதல்லையே சொன்னேன் மச்சான்… உன்னோட டெம்பர்க்கு என் தங்கச்சி செட் ஆகவே மாட்டான்னேன்… கேட்டியா?” என்று கடித்தவனை பார்த்தவன்,
“அடங்குடா அடங்கு…” என்றவன், மகாவின் புறம் திரும்பி, “நீ ரொம்ப டென்ஷனா இருக்கடி… உள்ள போய் ஏதாவது சாப்பிடு… கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு… எனக்கு கொஞ்சம் பேச வேண்டி இருக்கு… பேசிட்டு வரேன்…” எனவும்,
“அப்படியே நடந்தாலும், ஒன்னுமாகாது… ஏர் பேக்ஸ் ஓபன் ஆகிடும்… அவ்வளவுதான்…”
“இது குருட்டு நம்பிக்கை ஷ்யாம்…”
“இல்லடி… இது மாதிரி எத்தனையோ தடவை… சும்மா ஒன்னும் இந்த இடத்துல நான் ரூல் பண்ணலை… ஹைதராபாத்ல இருந்துட்டு இங்க ஒவ்வொன்னையும் கண்ட்ரோல் பண்ணனும்னா எவ்வளவு க்ராஸ் பண்ணி வந்திருக்கணும்… இதை விட ரிஸ்க்கால்லாம் நடந்துருக்கு மஹா… அடிக்க ஆளை அனுப்பியிருக்காங்க, இந்த மாதிரி காரை தூக்க ட்ரை பண்ணிருக்காங்க, இன்ஃபாக்ட் ஒருத்தன் பிஸ்டலை நீட்டியிருக்கான்… இதுக்கெல்லாம் பயந்தா இந்த தொழிலே செய்ய முடியாது… அவனுங்களுக்கு மேல நான் எத்தனா இருந்தாத்தான் சமாளிக்க முடியும்… ரிஸ்க் எடுப்பேன், ஆனா சேப்டிய விட்டுத் தர மாட்டேன்…” என்று கூறியவனை கார்த்திக் ஆச்சரியப் பார்வை பார்த்தான்.
ஆள் படை என்று பயமுறுத்துகிறான் என்றுதான் நினைத்திருந்தான். அப்படியான பிம்பமும் தான் இதுவரை இருந்து வந்தது. ஆனால் இந்த பிம்பத்தை கொண்டு வர, ஷ்யாமும் எத்தனையோ கடந்து தான் வந்திருக்கிறான் என்பது புரிந்தது. ஆத்மநாதனின் மகன் என்பதற்காக வாழ்க்கை அவனுக்கு பூப் பாதை விரித்து வைத்து விட வில்லை என்பதையும் உணர்ந்தவன், தானும் ஒரு கட்டத்தில் இவனை ஆள் வைத்தாவது அடிக்க முடியுமா என்று யோசித்தது நினைவுக்கு வந்தது.
“பிஸ்டலை நீட்டினான்னு சொல்றியே மச்சான்… நீ என்ன பண்ண?”
“நீட்டினவன் கையை விஷ்ணு உடைச்சுட்டான்…” என்று சிரித்தான்.
“அடப்பாவிகளா…” என்றவன், வாயை மூடிக் கொண்டான். இருவரையும் ஒரு சேர கோபமாக பார்த்து விட்டு,
“இதெல்லாம் அவ்வளவு தேவையா? ஒரு அமைதியான லைப் போதும்ன்னு நினைக்க மாட்டியா?” என்று பாவமாக அவள் கேட்க,
“அமைதியான கடல்ல ஒரு நல்ல மாலுமி உருவாக மாட்டான்… எனக்கு இந்த மாதிரி இன்ட்ரஸ்ட்டா இருக்கணும்… இந்த லைப் எனக்கு பிடிச்சுருக்கு…” என்றவனை முறைத்தாள்.
“வேண்டாம் ஷ்யாம்…”என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“தேளோட இயல்பு கொட்டறது… உன்னோட காதலால அந்த இயல்பை மாத்த நினைச்சா எல்லாரும் அந்த தேளை மிதிச்சு கொன்னுட்டு போய்டுவாங்க…” என்று ஒரு மாதிரியான குரலில் கூற, அவனை உதவியற்ற பார்வை பார்த்தவள்,
“எனக்கு பயமா இருக்கு ஷ்யாம்…” இரண்டு கைகளையும் இறுக்கமாக கோர்த்துக் கொண்டு தலை குனிந்தபடி அவள் கூற, அருகிலிருந்த இருவரையும் பார்த்தபடி, அவளின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான்.
“டோன்ட் வர்ரி மஹா… நீ இந்த அளவுக்கு டென்ஷனாகறது தான் எனக்கு இன்னும் டென்ஷனாகுது… இதெல்லாம் கேஷுவல்… நான் சமாளிப்பேன்…” என்றவனை கோபமாக பார்த்தாள்.
“நீ சமாளிப்ப… ஆனா நான்… உனக்கு ஏதாவதுன்னா…” என்று கூறும் போதே வார்த்தைகள் நடுங்கியது. தலையை மொத்தமாக பற்றிக் கொண்டவள், “செத்துடுவேன்டா…” என்றவளுக்கு அதற்கும் மேல் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டு சப்தமில்லாமல் அழ, அவளது கைகளை பிடித்துக் கொண்டான்.
மஹாவை அழ வைத்தவனை தூக்கி போட்டு மிதிக்குமளவு ஆத்திரம் வந்தது.
“மஹா… ப்ளீஸ்…” தொண்டைக்குள் எதுவோ அடைத்துக் கொண்டது. வார்த்தைகள் வெளிவர மறுத்தது.
“அழ வைக்க போறேன்னு சொல்லியே, என்னை அழ வெச்சுட்டு இருக்கடா…” என்று இன்னமும் கைகளை விலக்காமல் அவள் கேவ,
“இல்லடி…” என்று ஷ்யாம் தவித்தான். அவனது தவிப்பையும் மகளது அழுகையும் கண்ட பைரவி,
“மஹா … என்ன பிரச்சனையா வேண்ணா இருக்கட்டும்… அதை தம்பி பார்த்துக்க மாட்டாரா? இப்படித்தான் அழுவியா? கூட உட்கார்ந்துட்டு வந்த உனக்கே இவ்வளவு டென்ஷனா இருந்தா, வண்டியை ஓட்டிட்டு வந்த பையனுக்கு எவ்வளவு டென்ஷன் இருந்து இருக்கும்? அதை மறந்துட்டு உனக்கு சமாதானம் சொல்றாரு… நீ என்னடான்னா இப்படி அழற? எடுக்க ஆள் இருந்தா தான் பிள்ளை ஏங்கி ஏங்கி அழுகுமாம்…” என்று நறுக்கென்று பேச, மகாவின் அழுகை மட்டுப்பட்டது.
கண்களை துடைத்துக் கொண்டவள், அவனை பார்க்க, அவளை மட்டுமே பார்த்தபடி இருந்தான். அவள் தனக்காக அழவில்லை… தன் உயிருக்காக அழவில்லை… அவனுக்காக அழுகிறாள்… அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் அழுகிறாள்… அவனுக்காக சிந்திய அந்த கண்ணீரை பெற தான் அருகதையானவனா என்ற கேள்வி அவனையும் அறியாமல் எழுந்தது.
இதில் உடலோ, மனமோ கூட சம்பந்தப்படவில்லை… ஆன்மா சம்பந்தப்பட்டது. எந்த பிறவியில் தொட்ட உறவோ? விட்ட உறவோ?
‘நம்பிக்கை, நேர்மை, உறுதி, துணிவு… இதெல்லாம் தான் நீ சொன்ன பியுரிட்டிக்கு டெபனிஷன். நம்ம அம்மா எந்தளவு சுத்தமானவங்கன்னு நம்பறமோ, அதே அளவு நம்மை நம்பி வந்தவங்களும் சுத்தமானவங்கன்னு நம்பிக்கை இருக்கணும்… அவங்களுக்காக உயிர்ல பாதியை எழுதி தர்ற அளவு உறுதி இருக்கணும்… அவங்களும் நமக்கு நேர்மையாத்தான் இருப்பாங்க… அதே அளவு நாமளும் நேர்மையா இருக்கனும்ன்னு நினைக்கணும்… எந்த பிரச்சனை வந்தாலும் சேர்ந்தே பார்க்கற துணிவிருக்கணும்…
இதெல்லாம் தான் ஒரு ரிலேசன்ஷிப்க்கு அடிப்படையான பியுரிட்டியோட டெபனிஷன்… இது இல்லாம நீ சொல்ற அந்த வார்த்தைய பிடிச்சுட்டு தொங்கற, நீ உருவாக்கற பொய் பிம்பத்தை நம்பற எவனும் எனக்கு வேண்டாம்… சமூகம் எனக்கு கொடுக்கற பேரைப் பத்தி எனக்கு கவலை இல்ல… என்னோட ஆன்மா சுத்தமா இருக்கு… அவ்வளவுதான்…’ என்ற மகாவின் வார்த்தைகள் அவனது காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அந்த நம்பிக்கையை தன் மேல் வைத்திருக்கிறாள். நீ இல்லையென்றால் நான் இல்லை என்று கூறுமளவு மலையளவு காதலை ஒருத்தி தன் மேல் வைத்திருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்குள் ஏதோவொரு நெருப்பை தூண்டி விட்டது. அவளுக்காக எதையும் செய்ய துணிந்தது அவனது மனம்.
இதே நம்பிக்கையை தனது கடைசி மூச்சு வரை அவளுக்கு கொடுக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டது.
ஷ்யாமின் செல்பேசி அழைத்தது. சிவச்சந்திரன் தான் அழைத்திருந்தான்.
“பாஸ்… ஈசிஆர்ல ஒரு பப்ல இருக்கார் விஜி சர்…” என்றதும்,
“உன்னோட ஆளுங்க அங்க ரீச்சாக எவ்வளவு நேரமாகும் சந்திரா?” என்று கேட்க,
“ம்ம்ம்… ஒரு பிப்டீன் மினிட்ஸ் ஆகலாம் பாஸ்…” என்று கூறினான் சிவச்சந்திரன்.
*****
மெல்லிய வெளிச்சம் பரவிய சூழல். மென்மையாய் இசை வழிந்து கொண்டிருந்தது. யாரோ ஒருவன் ஸ்டான்ட் அப் காமெடி செய்கிறேன் என்று கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தான், ஆங்கிலத்தில்!
அதற்கும் சிரித்துக் கொண்டிருந்தது அந்த மேல் தட்டு சமூகம்.
இது போன்ற பப்களில் ஸ்டான்ட் அப் காமெடி என்ற பெயரில் நிகழ்சிகளை நடத்துவது வழக்கமாகி விட்டிருந்தது. அவர்களின் அக்பர் காலத்து மொக்கை ஜோக்குகளுக்கு சிரிப்பு வருகிறதோ இல்லையோ, காதில் ரத்தம் வரும் போல இருந்தது விஜிக்கு.
இதில் வேறு இரட்டை அர்த்தங்கள் வேறு… ‘அடேய் ஒரு அர்த்தமே புரியற மாதிரி நீ பேச மாட்ட… இதுல டபுள் மீனிங்ன்னு சொல்லிக்கிறியா?’ என்று கமென்ட்டியிருப்பான் வேறு நாளாக இருந்தால்!
இன்று கொலைவெறி தாண்டவமாடிக் கொண்டிருந்தது.
ஷ்யாமை கொன்று விடும் ஆத்திரத்தில் தான் கூலிப்படையை ஏவி விட்டிருந்தான்.
‘உனக்கு அவ்வளவு இருந்தா… உன்கூட எட்டு வருஷமா இருந்த எனக்கு அதுல பாதியாவது இருக்காதா?’ என்று கேட்டான் அவன் முன் ஷ்யாம் அமர்ந்திருப்பதாக எண்ணிக் கொண்டு!
தனியாகத்தான் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டிருந்தான்.
அந்த தனிமை அவனுக்கு வெறுமையாக இருந்தது.
தன்னிடமிருந்து மகாவை பறித்து விட்டவனை அப்போதே கொன்று விட வேண்டும் போல இருந்தது.
அதிலும் விருது வழங்கும் விழாவில், அவளை தன்னுடைய வருங்கால மனைவியாக அறிவித்து விட்டதாக கேட்டவுடன் அவனது கோபம் பன்மடங்காகி இருந்தது.
அவன் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாகவே தோன்றி விட்டது அவனுக்கு!
அவன் எத்தனை சொத்துக்களை பிடுங்கி இருந்தாலும் அவற்றை மீண்டும் சம்பாதிப்பான். அவனுக்கு அந்த திறமை இருந்தது. அவன் விட்ட இடத்திலேயே மொத்தத்தையும் பிடிப்பான். அவனுக்கு அந்த உறுதி இருந்தது.
ஆனால் மஹா?
தைரியமாக அவளிடம் காதலை முதலில் உரைக்காத தன்னுடைய முட்டாள்தனத்தை என்ன சொல்லி நோவது?
முதலில் தான் காதலை கூறியிருந்தால் அவள் தன்னுடையவள் அல்லவா!
அப்போது ஷ்யாமுக்கு என்ன வேலை இருந்திருக்கக் கூடும்?
ஷ்யாமை அன்று கல்லூரி நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றது ஒன்று தான் தான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறிக்கொண்டு மீண்டும் குடித்தான். நிதானம் போகும் வரை குடித்தான்.
ஷ்யாம் காதலிப்பதா? விஜிக்கு சிரிப்பு வந்தது!
ஷ்யாமின் அத்தனை லீலாவிநோதங்களையும் அறிந்தவன்… உடனிருந்தவன்… அவனுக்கு தெரியும் ஷ்யாமின் இயல்பு…
மகாவோடு நின்று விடுபவனா அவன்?
அவளை பெயருக்கு மனைவியாக ஆக்கிக் கொண்டு, அலங்கார பொம்மையாக வைத்துவிட்டு, அடுத்ததாக பெண்ணை தேடி போய் விடுபவனை நம்பியா இந்த மஹா ஏமாற வேண்டும் என்று அவனது மனம் கிடந்து அடித்துக் கொண்டது.
“மஹா…. மஹா… எனக்கு நீ வேணும் மஹா… எனக்கு நீ மட்டும் போதும் மஹா…. வேற எதுவும் வேணாம்மா… அந்த நாய் உன்னை லவ் பண்றியான்னு கேட்டப்பவே நான் ஆமான்னு சொல்லியிருக்கணும்… தப்பு பண்ணிட்டேனே… தப்பு பண்ணிட்டேனே… உன் கிட்டவும் சொல்ல தெரியல… அவன் கிட்டவும் சொல்ல முடியல… இப்படி ஏமாந்து போயிட்டனே…”
குடிபோதையில் தன்னையும் அறியாமல் உளறிக் கொண்டிருந்தான், முன்னிருந்த மேஜையின் மேல் சாய்ந்தபடி.
பவுன்சர்கள் அவனை கவனித்துக் கொண்டிருந்தனர்.
யாராவது இப்படி அளவுக்கு மீறி குடித்து விட்டு நிதானம் தவறும் போது அவர்களை அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்புவதும் அவர்களது வேலைதான்.
இரண்டு பேராக விஜி முன்பு வந்து நின்றனர்.
“சர்… டு யூ நீட் எனி ஹெல்ப்?” என்று தன்மையாக கேட்க,
“எஸ்… ஐ நீட் மை மஹா… ஐ நீட் மை மஹா ரைட் நவ் …” என்று போதையில் குளறினான்.
“சர்… யூ ஆர் அவுட் ஆஃப் கண்ட்ரோல்…” இன்னொரு ஷாட்டை ஆர்டர் செய்ய போனவனை தடுத்தான் அந்த பவுன்சர்.
“ஐ நோ மை லிமிட்… யு கெட் அவுட் ஆஃப் மை சைட்…” என்றவன், அந்த ஷாட்டையும் வாயில் கவிழ்த்து கொள்ள, நிற்க முடியாமல் திண்டாடினான்.
“சர்… ஐ ல் டேக் யூ டூ தி கார்…” என்று விஜியை வலுகட்டாயமாக இழுத்துக் கொண்டு போனான்.
அந்த ஸ்டான்ட் அப் காமெடி முடிந்து, கப்பிள்சை வைத்து ஏதோ விளையாட்டு ஆரம்பமாகியிருந்தது.
நடக்க முடியாமல் திணறிக் கொண்டே பப்புக்கு வெளியே வந்தான் விஜி.
“சர்… காருக்கு போய்டுவீங்களா? இல்லைன்னா டாக்சி புக் பண்ணட்டா?” என்று கேட்க,
“நான் போய்டுவேன்…” என்றபடி காரை நோக்கிப் போனான்.
“டேக் கேர் சர்…” என்றபடி அந்த பவுன்சர் உள்ளே போக முயல, விஜி காருக்குள் ஏற முயல, படு வேகமாக நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த லாரியொன்று கட்டுபாட்டை இழந்து, விஜியின் காரை நோக்கி வந்தது.
சட்டென சுதாரித்த அந்த பவுன்சர், விஜியை மயிரிழையில் இழுத்து இன்னொரு புறமாக தள்ளி விட, அந்த லாரி விஜியின் காரை அடித்து தூக்கி தெறிக்க விட்டு, நில்லாமல் பறந்தது.
விஜி, போதை மொத்தமும் இறங்கிய நிலையில், அதிர்ந்து பார்த்தான்.
அவனது ஆடி அடையாளம் தெரியாமல் நசுங்கிப் போயிருந்தது!
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss