VNE40(2)

VNE40(2)

அந்த தைர்யம் இவனுக்கு மட்டுமே இருக்கிறது என்றும் மனதுக்குள் பாராட்டிக் கொண்டான்.
“ஏன் முருகு… இன்னும் என்ன யோசிக்கற… பிருந்தா நம்ம புள்ளைடா…” என்று கிருஷ்ணம்மாளும் ஒப்புக்கொள்ள, அனைவரும் யோசனையில் அமர்ந்திருந்த முருகானந்தத்தை பார்த்தனர்.
அனைவரையும் பார்த்தவர், நாதனிடம், “மச்சான்… பிருந்தா அப்பா கிட்ட நீங்க பேசறீங்களா?” என்று கேட்க,
அவரும் தலையாட்டினார்.
முருகானந்தம், “ஏன் கண்ணு… அப்பா ஊர்ல இருக்காங்களா?” என்று அவளிடம் கேட்க, அவள் எச்சிலை கூட்டி விழுங்கியவாறே,
“இருக்காங்க அங்கிள்…” என்று பயந்துக் கொண்டே கூறினாள். விட்டால் அழுதுவிடுவாள் போல!
“அப்படீன்னா இன்னைக்கு சாயந்தரம் வீட்டுக்கு வர்றோம்ன்னு சொல்லிடறியா தங்கம்?” என்ற நாதனை பார்த்து வேகமாக தலையாட்டினாள் பிருந்தா.
அவளது தலையாட்டலை பார்த்து சிரித்த நாதன்,
“என்ன கண்ணு படிச்சுருக்க?” என்று கேட்க, முருகானந்தம் முந்திக் கொண்டு,
“நம்ம மகாவோட ப்ரெண்டு தான் மச்சான்… ரெண்டு பேரும் டாக்டருக்கு தான் படிக்கறாங்க…” என்று கூறவும்,
“அட பரவால்லையே…” என்று சிரித்தார். “நம்ம வீட்ல ரெண்டு டாக்டருங்க இருந்தா சந்தோஷம் தானே?”
“சந்தோஷம் தான் மச்சான்… ஆனா அவங்க அப்பாரு ஒதுக்கணும்ல…” என்ற கேள்வியோடு நிறுத்த, பிருந்தா கலவரமாக விழித்தாள்.
தோளை குலுக்கிக் கொண்ட ஷ்யாமா, “அதெல்லாம் ஒத்துக்க வெச்சரலாம்…” ரொம்பவும் சாதாரணமாகக் கூறினான்.
“டேய்… நாங்க தான் உனக்கு பயப்படுவோம்… ஊர்ல இருக்கவங்க எல்லாம் பயந்துருவாங்களா?” என்று சிரித்தார் நாதன்.
“நானா… பிருந்தா யாரு தெரியுமா?” என்று கேட்டு புருவத்தை உயர்த்தியவன், “நம்ம விஎஸ் தான்…” என்று கூறவும், ஆச்சரியமாக பார்த்தார் நாதன்.
“சுப்பிரமணியம் பொண்ணாம்மா நீ?” எனவும், அவள் மாங்கு மாங்கென்று தலையாட்டினாள்.
விஎஸ் என்பது அவர்களது மருத்துவமனை. சுப்ரமணியத்தை தெரிந்தவர்கள் அனைவரும் விஎஸ் என்று தான் அழைப்பது. அந்த பழக்கத்தில் தான் அவன் கூறினான். வேறு பிரிவினர் என்றாலும் நாதனுக்கு மிகவும் நல்ல நண்பர். நன்கு அறிமுகமானவர் என்பதால் அவருக்கு சந்தோஷம்.
“யோவ் மாப்ள… போய்யா… நீ ரொம்ப கொடுத்து தான் வெச்சுருக்க…” என்று உரிமையாக முருகானந்தத்தின் தோளில் தட்டி அவரது சந்தோஷத்தை வெளிப்படுத்த, முருகானந்தமும் முகம் விகசிக்க புன்னகைத்தார்.
“டேய் கார்த்தி… புள்ளை படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா கல்யாணமா? இல்லன்னா இப்பவே பண்ணி வைக்கணுமா?” என்று அவனது தந்தை வெடியை கொளுத்திப் போட, அவரை அதிர்ந்து பார்த்தனர் இருவருமே!
பிருந்தா வெகுவாக வியர்த்து போனாள்.
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்ப்பா… முதல்ல இந்த ரவுசை மேனேஜ் பண்ணுங்க…” என்று ஷ்யாமை கைகாட்ட,
“அது கஷ்டம் மருமகனே…” என்று சிரித்தார் நாதன்.
“டேய் மச்சான்… கஷ்டமே இல்லாம உன்னோட லவ்வுக்கு ஓகே வாங்கி தந்தா இதுவும் பேசுவ… இன்னமும் பேசுவ…”
“மச்சான்… இன்னைல இருந்து நீ தான் என்னோட தெய்வம்… மத்த எல்லா தெய்வத்தையும் நான் டைவர்ஸ் பண்ணிடறேன்…” எனவும், ஷ்யாம் சிரித்தான்.
“என்ன இது… இவனும் மச்சான், நீயும் மச்சானா? என்னடா முறை இது?” என்று நாதன் சிரித்தபடி கேட்க,
“பழகிடுச்சு நானா…” என்றவன், மகாவை பார்த்து, “ஏய்… போய் பாவாவுக்கு குடிக்க தண்ணி கொண்டு வா…” என்று வேண்டுமென்றே ஏவ, அவள் முறைத்து விட்டு, எழுந்து கிச்சனுக்கு சென்றாள்.
“மச்சான்… ரொம்ப தைர்யமா பேசற போல… அது சரி யார் அது பாவா?” என்று கிண்டலாக கார்த்திக் கேட்க,
“வேற யார்? நான்தான்…” என்றவன் முன் தண்ணீர் சொம்பை நங்கென்று வைத்தாள்.
“பொண்ணுன்னா பொறுமை வேணும்… இப்படி நங்குன்னு சொம்பை வைக்க கூடாது, அமைதி வேணும்… இப்படி காளியாத்தா மாதிரி முறைக்க கூடாது, பயபக்தியா புருஷன் காலை தினமும் தொட்டு கும்பிட்டுட்டு தான் போகணும்… மொத்தத்துல பொண்ணு… பொண்ணு மாதிரி இருக்கணும்…” படையப்பா வசனத்தை அவனுக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டு அவளுக்கு முன் அதே சேட்டையை செய்து கொண்டு ரஜினியை போலவே வசனம் பேச, அதை கேட்டவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
அதிலும் புருஷன் காலை என்று அவனது காலைக் காட்டியவனை மற்ற நேரமாக இருந்தால் மிதித்து இருப்பாள். இப்போது வருங்கால மாமியாரும் மாமனாரும் வேறு இருப்பதால் பொறுத்துக் கொண்டு போக வேண்டியிருந்தது.
ஆனால் அவன் ‘பொண்ணு பொண்ணு மாதிரி இருக்கணும்…’ என்று கையை அவளது முகத்துக்கு முன் ஆட்டியபடி பேச, அவளது கோபம், எவரெஸ்ட்டை தொட்டது.
ஆனால் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் சிரித்து விட, அவளுக்கு வந்த கோபத்தில் அவன் முன் இருந்த சொம்பை எடுத்து அவன் மேலேயே கவிழ்த்தாள்.
நீராபிஷேகம் தான்!
பைரவியும் முருகானந்தமும், “பாப்பா… என்ன பண்ற?” என்று பதற, நாதன் சிரித்து விட்டார்.
ஜோதி அதற்கும் மேல், “இன்னும் ரெண்டு சொம்பு ஊத்திவிடு மஹா… அப்பதான் அடங்குவான்… டேய் பொண்ணு பொண்ணு மாதிரி இருக்கனுமா?” என்று சிரிக்க, முகத்தை துடைத்துக் கொண்டு அவளையே பார்த்தவன்,
“தேங்க்ஸ்டி பொண்டாட்டி… அப்படியே பாவாவுக்கு முதுகும் தேய்ச்சு விட்டுடு…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கண்ணடிக்க, இழுத்துப் பிடித்த மூச்சை முறைத்தபடி வெளியே விட்டாள்.
“என்ன பாப்பா? ஷ்யாம் விளையாட்டாத்தானே பேசறாரு … நீ எதுக்கு இப்படி பண்ண?” என்று பைரவி கோபமாக கேட்க,
“இல்லம்மா…” என்று விழித்தாள். அவன் மேல் கோபத்தில் தண்ணீரை அபிஷேகம் செய்து விட்டாளே தவிர, அதை செய்த பின் தான் எப்போதும் போல யோசித்தாள். இத்தனை பேர் முன்பும் இப்படி செய்தது தவறு என்று பைரவி மண்டையில் அடிக்காத குறையாக அவளை முறைத்தார்.
“அவர் கிட்ட சாரி கேளு…” என்று பைரவி உக்கிரமாக கூறினார். மாமியாரின் முன்பு முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விடுமே என்ற பயம் அவருக்கு. என்னதான் அவர்கள் அதை பெரிதாக எடுக்காதவர்கள் போல காட்டிக் கொண்டாலும் எந்த தாயும் இதை வரவேற்க மாட்டார்.
இதென்ன இந்த பெண்ணுக்கு இப்படியொரு அவசர புத்தி என்று கோபமாக வந்தது.
“ப்ச்… அத்த… இதெல்ல்லாம் ஒரு விஷயமா? இது எதுக்கு சாரி கேக்கணும்?” என்றவன், மஹாவை நோக்கி, “ரிலாக்ஸ் மகா…” என்று புன்னகைத்தான்.
அவன் கூறுவதில் பைரவிக்கு ஒப்புதல் இல்லை. ஆனால் மாப்பிள்ளை இப்படி சொல்லும் போது என்ன சொல்ல?
“ரொம்ப இவளுக்கு செல்லம் கொடுக்காதீங்க…” என்று மகாவை முறைத்தவாறே கூற, அவன் சிரித்தான்.
“விடும்மா… விடும்மா…” என்று கார்த்திக் நடுவில் பஞ்சாயத்துக்கு வந்தான்.
“மஹா… மாப்பிள்ளைய கூட்டிட்டு போய் ட்ரெஸ்ஸ ட்ரையர்ல போட்டுக் கொடு…” என்று கடுப்பாக கூற, ஷ்யாமின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக பிரகாசமானது.
அந்த பிரகாசத்தை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், அவனிடம் கிசுகிசுப்பாக, “மச்சான்… உன்னோட பிளானே இதுவா? இல்ல பைரவி அகஸ்மாத்தா உன்னோட பிளானை நடத்தி வைக்குதா?” என்று யோசனையாக கேட்க,
“பொறாமை பிடித்த உலகமடா இது…” என்று அலுத்துக் கொண்டான்.
“நடத்து நடத்து…” என்று சிரித்தான் கார்த்திக்.
எதுவும் கூறாமல் முறைத்தபடி மொட்டை மாடியை நோக்கி போனாள் மஹா. கையில் எதையோ எடுத்துக் கொண்டு அவள் பின்னால் போனவன், மிகவும் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு,
“ஒய்… உனக்கு ஒழுங்கா வாஷ் பண்ண தெரியுமா?” என்று கேட்க,
இவள் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு,
“ம்ம்ம்… தெரியாதுன்னா என்ன பண்ண போற?” என்று கேட்க,
“நான் சொல்லி தரேன்னு உனக்கு நான் சொல்லிக் கொடுப்பேன்…” என்று கண்ணை சிமிட்ட,
“டேய் ஒரு ஆணியும் நீ புடுங்க வேண்டாம்… சட்டைய மட்டும் கழட்டி கொடுத்துட்டு கீழ போ…” என்று கறாராக கூற,
“என்னடி இப்பவே இப்படி சட்டைய கழட்ட சொல்ற?” என்றவனின் குரலில் குறும்பு வழிந்தது.
“வேண்டாம் என்னை கொலைவெறியாக்காத…” என்று விரலை நீட்டி எச்சரித்தாள்.
“சரி சரி ஓம் ஷாந்தி… ஓம் ஷாந்தி… கழட்டி தரேன்… ஆனா என்னால அப்படியே கவர்ச்சியா கீழ போக முடியாது…” என்று வேண்டுமென்றே அவளிடம் வம்பிழுக்க,
“ரொம்ப முக்கியம்…” என்றவள், ட்ரையரை ஆன் செய்துவிட்டு, “கொடு…” என்று கேட்க,
“என்ன?” என்று விஷமமாக அவளைப் பார்த்தபடி ஷ்யாம் கேட்க,
“சட்டை தான்டா…” எனவும்,
“ஏன்? உன் கை சும்மாதானே இருக்கு?” என்று வம்பிழுக்க,
“டேய் இப்ப தர்றியா? இல்லையா?” முறைத்தபடி கறாராக கேட்க,
“மேடம் ஏன் இவ்வளவு சூடா இருக்கீங்க?” என்ற அவனது கேள்விக்கு, இன்னமும் முறைத்தாள்.
“ம்ம்ம்ம்…” என்று பல்லைக் கடிக்க,
“சூயிங் கம் வேணுமா குல்பி?” என்று அவன் கண்ணை சிமிட்ட, கோபமாக இருந்தாலும் வெட்கத்தில் முகம் சிவந்தது. அதை அவனுக்கு காட்டாமல் திருப்பிக் கொண்டவள்,
“ச்சீ பே…” என்றவள், “இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்ன்னு சொன்னா கேக்கவே மாட்டேங்கற…” கோபம் சற்று குறைந்தாலும் அவளது நிலையிலிருந்து கீழ இறங்கி வரவில்லை.
சட்டையை கழட்டி அவள் கையில் கொடுத்தவன், அவள் டிரையரில் போடும் வரை நிதானித்து விட்டு, அவளை பின்னோடு அணைத்துக் கொண்டான்.
“உன்னை விட்டுட்டு இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்குடி…” என்றவன் அவளது காதில் மென்மையாக முத்தமிட,
“படிக்கறது இப்பதான் படிக்க முடியும்…” அவனது அணைப்பில் வாகாக இருந்தபடியே கூற,
“படிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு…” என்றவனை,
“அப்படியே நான் படிச்சு கிழிச்சுட்டாலும்… இப்பவே புக்கை திறந்தா உன்னோட நினைப்பாவே இருக்கு… இன்னும் மேரேஜுக்கு அப்புறமெல்லாம் கஷ்டம் டா…” கறாராக ஆரம்பித்து சிணுங்கலில் முடித்தாள் மஹா.
அவளது அந்த சிணுங்கல் அவனை ஜிவ்வென்று போதையிலாழ்த்த,
“கள்ளி… சொல்லவே இல்ல…” என்று அவளை இன்னமும் இறுக்கிக் கொள்ள,
“என்ன?” அவனை விலக்கிவிடுவதை போல பாவனை செய்து கொண்டே கேட்க,
“உன் பாவா மேல இவ்வளவு நினைப்பா இருக்குன்னா என்கிட்டே ஒரு தடவை சொல்ல மாட்டியா?” என்று கேட்க,
“ம்ம்ம்.. ரொம்ப முக்கியம்…” என்று கடுப்பானாள் மஹா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!