VNE40(3)

VNE40(3)

இரு வீட்டிலும் ஒப்புக் கொண்டாலும் இருவரும் நேரில் பார்த்து பேச சந்தர்ப்பமே கிடைக்காமல் இருந்தது. இப்போதும் கூட குடும்பமாக பேசத்தான் வந்தார்கள். பார்ப்பது என்று இல்லாமல் பேசியில் கூட வெகு அளவான பேச்சுதான். இருந்த போனை, கார்த்தி உடைத்து விட, அவள் அப்போதிருந்தே பேசி உபயோகிப்பதில்லை. இவளோடு பேச வேண்டும் என்றால் கார்த்திக்கு தான் அழைப்பான் ஷ்யாம். அவனது போனில் எவ்வளவு பேசிவிட முடியும்? அளவாக பேசிவிட்டு வைத்து விடுவான். இவளுக்குத்தான் அது போதாமல் இருந்தது.
ஆனால் இப்போது வரைக்குமே, தன்னிடம் செல்பேசி வாங்கித்தர சொல்ல மாட்டாளா என்று காத்திருந்தான் ஷ்யாம்.
ஆனால் அவள் கேட்கவே இல்லை. கேட்பதாகவும் இல்லை. கேட்டுவிட்டால் அவனோடு பழகிய மற்ற பெண்களுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய் விடுமோ என்ற பயம் உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருந்ததை அவன் அறிய மாட்டான்.
“எனக்கு ரொம்ப முக்கியம் குல்பி…” என்றவன், கழுத்தில் முத்தமிட, சிலிர்த்தது அவளுக்கு. சுற்றிலும் பார்த்தாள். அக்கம் பக்கத்து வீட்டு மொட்டை மாடிகள் எல்லாம் காலியாகத்தான் இருந்தன. ஆனாலும் பயமாக இருந்தது. யாரேனும் பார்த்து விட்டால் என்ற பயம்!
இந்த நிலைமை நீட்டித்தால் யாரேனும் மொட்டை மாடிக்கு வந்து விடும் வாய்ப்புகள் இருப்பதால், அவசரமாக அவனிடமிருந்து விலகினாள்.
“கீழ போ ஷ்யாம்…” என்று அவனை அனுப்ப முயல,
அவளை நிதானமாக நின்று ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்!
“மஹா… டூ யூ லவ் மீ?” என்ற அவனது கேள்விக்கு என்ன பதில் கூற?
“இல்லாம பின்ன?” என்ற பதில் கேள்வி கேட்டாள்.
“அப்புறம் ஏன் என்கிட்ட எதுவும் உரிமையா கேக்க மாட்டேங்கற?” என்று கேட்க, அவள் என்ன கேட்க வேண்டுமென்று நினைக்கிறான்?
“என்ன சொல்லு ஷ்யாம்?” என்று கேட்க,
“செல்போன்…” என்றவன், “என்கிட்ட கேக்கவே கூடாதுன்னு நீ முடிவு பண்ணி வெச்சு இருக்க…”
“முடிவெல்லாம் பண்ணல டா…” என்று அவளது இதழ்கள் பொய் சொன்னாலும் கண்கள் உண்மையை உரைத்து விட,
“என் பொண்டாட்டிக்கு நான் வாங்கிக் கொடுக்கணும்ன்னு நினைக்கறேன் குல்பி…” என்றவனை, தயக்கமாக பார்க்க, அவளிடம் அந்த பார்சலை நீட்டினான் ஷ்யாம்.
வாங்காமல் தரையை பார்த்தபடி நின்றிருந்தாள்.
‘நான் ஐபோன் வாங்கி தருவேனான்னு எத்தனை பேர் வெய்ட் பன்றாளுங்க தெரியுமா? என்னோட ஒர்த் உனக்கு தெரியலடி…’
‘அவங்க என் பின்னாடி வர்றதுக்கு நான் எதையுமே ஸ்பென்ட் பண்ணதில்லை டார்லிங்… என் கூட இருந்ததையே பெரிய விஷயமா நினைச்சு தான் வந்திருக்காங்க… நான் அவங்களுக்காக டைம் ஒதுக்குவேனான்னு காத்துட்டு இருந்திருக்காங்க… தெரியுமா?!’
முன்னர் அவன் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவளது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது!
தானும் அந்த லிஸ்ட்டில் இணைய போகிறேனா?
அவன் மேல் கரை காண முடியாத அளவுக்கு காதல் இருக்கிறதுதான். அதை அந்த கார் சம்பவத்தின் போது ப்ராக்டிகலாக தானே உணர்ந்து ஆயிற்று. ஆனால் இது போன்ற வார்த்தைகள் எப்போதுமே தன்னை வஞ்சிக்குமா என்ன?
சற்று பயமாக கூட இருந்தது மகாவுக்கு!
அவனை தன்னால் காயப்படுத்த முடியாது. அப்படி காயப்படுத்த முயன்றால் காயப்படுவது தானாகத்தான் இருக்க முடியும்.
அவளது யோசனையை பார்த்தவன், அவளது கையை பிடித்து பார்சலை கொடுத்துவிட்டு,
“உனக்கு ஓகே ன்னா வெச்சுக்க… இல்லைன்னா குப்பைல தூக்கி போட்டுடு… ஆனா திரும்ப வாங்கிக்க மாட்டேன்…” என்றவன், அவளிடம் மேற்கொண்டு எதையும் பேசாமல் ஒரு பெரிய துண்டை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டு கீழே போயிருந்தான்.
****
சுற்றிலும் நெருங்கிய சொந்தபந்தம் மட்டும். விழா தாறுமாறாக களைக்கட்டியிருந்தது. வீட்டிற்கு அளவாகத்தான் அழைத்திருந்தார்கள். அதுவே முழுவதுமாக நிறைந்து விட்டது. இதில் இரண்டு மூன்று நிருபர்கள் வேறு விஷயம் கசிந்து படையெடுக்க முயல, ஷ்யாமுடைய பவுன்சர்கள் அவர்களை உள்ளேயே விட வில்லை.
இருவர் பக்கமும் இருந்த கசின்ஸ் இருவரையுமே கலாய்த்து கிண்டலடித்து இன்னமும் ஓயாமல் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
நடு கூடத்தில் இரு புறமும் விளக்கு ஏற்றி வைத்து, நிறைநாழி வைத்து, பூஜை செய்து, அலங்கார சீர் தட்டுக்களை அடுக்கி வைத்திருந்தனர் ஜோதி பக்கத்தினர்.
சம்பந்திமார்கள் எதிர் எதிராக அமர்ந்திருக்க, அவர்களுக்கு பின் மற்றவர்கள் சுற்றி அமர்ந்து இருந்தனர்.
இலக்கின பத்திரிக்கையை எழுத, அவர்களது சமுதாயத்தின் பெரியவர் ஒருவர் தயாராக அமர்ந்திருந்தார்.
கையில் சந்தனத்தை அள்ளிய நாதன், முருகானந்தத்தின் நெற்றியில் பூசினார். அதே போல முருகானந்தமும் சிரித்துக் கொண்டே செய்ய,
“யோவ்… நம்ம நெத்திக்கு ஏத்த மாதிரி பூசுய்யா…” என்று சம்பந்தியாகிவிட்ட நண்பனை கலாய்த்தார்.
“மச்சான்… நம்ம நெத்திக்கு பூசனும்னா நாலு மரத்தை அழிக்கனும்ல…” என்று பதிலுக்கு கிண்டலாக கூற, சுற்றியிருந்தவர்கள் கொல்லென்று சிரித்தனர்.
இருவரும் சிரித்துக் கொண்டே வம்பிழுத்துக் கொண்டே முறைகளை செய்து முடித்தனர்.
“ஸ்ரீமான் ஷ்யாமள பிரசாத்…  சௌபாக்கியவதி மகாவேங்கடலக்ஷ்மி இருவருக்குமான விவாக லக்ன பத்திரிக்கை….” என்று ஆரம்பித்து லக்ன பத்திரிக்கையை வாசித்து முடித்தார் அந்த பெரியவர்.
ஷ்யாமின் முகமும் சரி, மகாவுக்குமே சரி, மகிழ்ச்சியில் முகம் விகசித்தது.
“டேய் மச்சான்… பொண்ணுக்கு ஆட தெரியுமா, பாடத் தெரியுமான்னு தெரியாமையே இந்த பப்ளிமாசை ஓகே பண்ணிட்டேன்டா…” என்று வேண்டுமென்றே அத்தனை கசின்சையும் வைத்துக் கொண்டு மகாவை வம்பிழுத்தான் ஷ்யாம்.
“அப்படியா? மஹா… ஷ்யாமுக்கு உன்னை பிடிக்கலையாம்… நான் வேற நல்ல பையனா பார்க்கறேன்…” என்று கார்த்திக் அவன் பங்குக்கு கலாய்த்தான்.
“ஓஓஓஹோஓஓ…” என்று சுற்றியிருந்த இளவட்டம் கத்தியது.
மகா அனைத்தையும் ரசித்தபடி, அலங்கார பூஷிதையாக நடுக்கூடத்தில் அமர வைக்கப்பட்டு இருந்தாள்.
அரக்கு நிற பட்டு சேலை. இடையை தழுவிய ஒட்டியாணம், வெகு நேர்த்தியான நகைகள்… அழகான பின்னலில் வழிந்த மல்லிகை… அளவான மேக் அப்… சுருக்கமாக வானத்து தேவதையாக, அம்மன் சிலையாக பிருந்தாவோடு வந்து அமர்ந்தவளை வைத்த கண்ணை எடுக்காமல் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
“கொஞ்சம் இந்த பக்கமும் பார்க்கலாம் மாமா…” என்று ஒரு ஆர்வக்கோளாறு கிண்டல் செய்ய,
“மேக்னெட் அந்த பக்கமாவே இழுக்குது மாப்ள…” என்று அவர்களாகவே கிண்டல் செய்து கொள்ள, இவன் வெகுவாக சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தான்.
கலாட்டாவாக போய்க்கொண்டிருக்க, மகாவுக்கு மோதிரம் அணிவிப்பதற்காக அத்தனை பேரின் கலாட்டாவுக்கு இடையில் எழுந்தான் ஷ்யாம்.
அவனுக்காக காதலுடன் தலைகுனிந்து காத்துக் கொண்டிருந்தவளின் முன்பு நின்றவன், அவளது மென்மையான விரல்களை பற்றினான்.
நடுங்கியது அவளுக்கு. ஷ்யாமுக்கும் உள்ளுக்குள் பதட்டமிருந்தாலும், மகாவோடு இணையும் அந்த நாளை எண்ணி ஆர்வத்தோடு காத்திருந்தான்.
அன்று கொடுத்த செல்பேசியை அவள் இன்று தான் உபயோகிக்கத் துவங்கியிருந்தாள். அதுவரை அவளை அவன் அழைக்கவே இல்லை. அவளாக செல்பேசியை ஏற்றுக் கொண்டு அவனுக்கு அழைக்கட்டும் என்ற நல்ல எண்ணம் தான்.
அன்று காலை வரைக்குமே ஒரு மாதிரியாக கனமாகத்தான் இருந்தது அவனுக்கு. செல்பேசியை உபயோகிக்க மாட்டாளா என்ற தவிப்பு இருந்தது உண்மை.
காலை அவளது மெசேஜ் வரும் வரை மட்டுமே!
அவளது வாட்ஸ் அப் செய்தியை பார்த்தவுடன் மனம் இறக்கைக் கட்டி பறந்தது.
அதிலும் அவனது பரிசை பிரித்து புகைப்படம் எடுத்து, அதிலும் தன்னோடு செல்பி எடுத்து அதை அவள் அனுப்பி வைத்திருந்தாள்.
“சோ கியூட் டார்லிங்…” என்று தன்னையும் அறியாமல் அவனது வாய் முனுமுனுத்தது.
இப்போது அதே சந்தோஷத்தோடு அவளுக்கு வைர மோதிரம் அணிவிக்க, அவளது முகம் விகசித்தது, மகிழ்ச்சியில்!
கார்த்திக் அவளிடம் இன்னொரு மோதிரத்தைக் கொடுத்து, ஷ்யாமுக்கு அணிவிக்கும் படி கூற, அவள் நடுங்கும் கரங்களால் அவனது கரத்தை பற்றப் போக, அவளிடம் தன் கரத்தை கொடுக்காமல் போக்கு காட்டினான், சிரித்தபடி!
இங்கும் அங்குமாக போக்கு காட்டியவன், ஒரு வழியாக கொடுக்க, வெட்கப் புன்னகையோடு அவனுக்கு மோதிரத்தை அணிவித்து விட்டாள் மஹா.
கையில் அவன் வாங்கித் தந்த ஐபோனுடன் கண்களில் காதலும் கனவுமாக இரவு படுக்கையில் சாய்ந்தவளை அழைத்தது மெசேஜ் டோன்.
“வான்ட் டூ மீட்… ப்ளீஸ் வெய்ட் அட் காஃபி டே…” என்ற மெசேஜை யார் அனுப்பியது என்று பார்த்தாள். எதுவோ தெரியாத எண்.
அலட்சியமாக தவிர்த்தாள்!
ஷ்யாமுக்கு இருப்பது இரண்டு எண்கள் மட்டுமே… அதிலிருந்து வரவில்லை. யார் என்று தெரியாமல் ஊக்குவிக்கக் கூடாது என்பதால் அதை கண்டுக்கொள்ளவில்லை.
“ப்ளீஸ் டோன்ட் அவாய்ட்… வெரி அர்ஜன்ட்…” என்றது அடுத்த மெசேஜ்…
உதட்டை பிதுக்கினாள் மஹா!
இப்போது அந்த எண்ணிலிருந்து கால் வந்தது.
வெகு தயக்கமாக பார்த்தாள் மஹா.
இதென்ன சங்கடம் என்று யோசித்தாள். யாராக இருக்கக் கூடும் என்று தெரியவில்லை. தெரியாமல் எடுக்கவும் விரும்பவில்லை.
அடித்து ஓய்ந்தது!
“ப்ளீஸ் பிக் அப் தி கால்….” அடுத்த மெசேஜ்.
முடியாது என்று முடிவு செய்து கொண்டாள்.
திரும்ப அழைத்து ஓய்ந்தது அந்த எண்!
இவள் எடுக்கவே இல்லை.
அடுத்து விடாமல் பத்து முறை அழைத்து ஓய்ந்தது. மகாவுக்கு உள்ளுக்குள் பயம் பீடித்துக் கொண்டது. யாரோ கலாட்டா செய்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. ஒருவேளை ஷ்யாமே செய்வானோ விளையாட்டுக்கு… இவளை பயமுறுத்தவென?
வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்ததற்கான நோட்டிபிகேஷன்!
திறந்து பார்த்தாள்.
அந்த எண்ணிலிருந்து ஒரு புகைப்படம் வந்திருந்தது!
புகைப்படத்தை கைகள் நடுங்க டவுன்லோடு செய்தாள்.
கால்களுக்கு கீழே இருந்த பூமி நழுவத் துவங்கியது… 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!