VNE43(2) CV

VNE43(2) CV

கண் முன் அவன் கலங்குவதை பார்த்த பிறகு அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
“ஷ்யாம்…” அனைத்தையும் ஒதுக்கி விட்டு அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு கதறினாள். இந்த நேரத்தில் உடனில்லாமல் வேறு எந்த நேரத்தில் உடனிருப்பது?
ஆனால் உடனிருப்பது என்பது வேறு, பிரச்சனைகளை முழுவதுமாக எதிர்நோக்குவது என்பது வேறு என்பதை அவளும் உணரும் நேரம் வரும் போது உடன் இருக்க முடியுமா?
ஹாலிலிருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்களது பேச்சு சப்தம் கேட்கவில்லை. கேட்கும் தூரமும் இல்லை. ஆனால் எதுவோ பெரிய பிரச்சனை என்று மட்டும் புரிந்தது.
“என்னோட பேரன்ட்சையும் உன்னோட பேரன்ட்சையும் எப்படி ஃபேஸ் பண்ண போறேன் மஹா?” இது போன்றவொரு நிகழ்வை யாரால் எற்றுக் கொள்ள முடியும்? அவள் தான் அவனைக் கட்டிக் கொண்டிருந்தாளே தவிர, அவன் கட்டிக் கொள்ளவில்லை.
அவன் இன்னமும் தன்னுடைய வீடியோவை பார்த்த அதிர்விலிருந்தும், அதை மகாவும் அதை பார்த்த அதிர்விலிருந்தும் வெளி வரவே இல்லை.
இப்போதும் இது கிராபிக்ஸ் என்றோ, மார்பிங் என்றோ சொல்லி அவன் தப்பித்து இருக்க முடியும். ஒரேடியாக மறுத்து இருக்கவும் முடியும். ஆனால் அதை அவன் செய்யவில்லை. செய்யவும் முடியவில்லை. முடியாது. அப்படி பொய் சொல்லி தன்னுடைய காதலை காப்பாற்ற வேண்டும் என்று அவசியமில்லை என்று தோன்றி விட்டிருந்தது.
இந்த நிகழ்வை கடந்தாக வேண்டும். அதற்கு அவளது புரிதல் அவசியம். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இப்படி நடக்க வாய்ப்புள்ள இடம் இது. அப்போதும் இப்படி புரியாமல் நடந்து கொள்வாளா என்று தான் முதலில் தோன்றியது.
ஆனால் காதல் கனிவதற்கான காலத்தை அவளுக்கு தான் கொடுக்கவில்லை என்பதும் எங்கோ ஒரு மூலையில் தோன்றியது. அனைத்தையும் தாண்டி, இரண்டு குடும்பங்கள். அவர்களை தான் பார்த்தாக வேண்டும். இந்த விஷயம் அவர்களுக்கு தெரியாமல் இருக்க போவதில்லை. தெரிந்தால் வாழ்நாள் முழுமைக்குமான அவமானம்!
“உன்னை இன்னொருத்தியோட என்னால பார்க்கவே முடியல… ஏன்னா அந்தளவு…” என்றவள்,  இன்னமும் அவனது மார்போடு ஒன்றிக் கொண்டு, “உன்னை லவ் பண்ணி தொலைச்சுட்டேன்… என்ன பண்ணி தொலைக்கறதுடா?” என்று கதற, அவனது தடைகளை தகர்த்துக் கொண்டு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
கண்களில் கண்ணீர்! துடைத்துக் கொள்ளவும் தோன்றவில்லை. என்ன செய்வது என்று தன்னிடமே கேட்பவளை என்ன செய்வது? கடைசி மூச்சு வரை காதல் செய்ய வேண்டும் என்று மட்டுமே தோன்றியது. அவளது கையை பிடித்துக் கொண்டு கடைசி மூச்சை விட வேண்டும் என்றும் தோன்றியது.
“நீ இல்லைன்னா எனக்கு லைப்ஃபே இல்லடி…” என்றவன், அவளை தன்னோடு இன்னமுமே இறுக்கிக் கொள்ள,
“எனக்கும் தான்” என்றவள், “ஆனா… வேண்டாம் ஷ்யாம்…” என்றவளை தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்தவன்,
“பைத்தியம் மாதிரி பேசாத மஹா…” என்றான்.
“பைத்தியம்னே வெச்சுக்க… வேண்டாம் ஷ்யாம்… உன்னோட வாழ்க்கையும் சரி, என்னோட வாழ்க்கையும் சரி, மொத்தமா ஸ்பாயில் ஆகிடும்…” என்று கூற,
“என்னால ரெண்டு பேருக்கும் தனித்தனி வாழ்க்கைய நினைச்சே பார்க்க முடியலடி… ஆனா நீ பிரிச்சு பார்க்கற…” என்றவனுக்கு கசப்பாக இருந்தது.
“நீ இமோஷனலா திங்க் பண்ற…”
“எஸ்… இப்ப நான் இமோஷனல் இடியட் ஆகிட்டேன்…” முன்னர் அவளை இமோஷனல் இடியட் என்று கூறியவன், இப்போது தன்னை கூறிக் கொண்டான்.
“என்னோட உணர்வுகளை புரிஞ்சுக்க ஷ்யாம்… ப்ளீஸ்…” என்று அவள் கெஞ்ச,
“என்னோடதையும் புரிஞ்சுக்க… இப்ப தான் எனக்கு நீ வேணும்… ஃபிசிக்கலான்னு மட்டும் இல்ல… மென்டலா… இமொஷனலா… ஐ நீட் யூ…”
“நான் இருக்கேன்… உன் கூடவே இருப்பேன்… ஆனா உன்னோட நீ நினைக்கற மாதிரி என்னால இருக்க முடியாது…” என்றவளை கோபமாக பார்த்தான்.
“ஆனா என்ன? எப்பவுமே ஹிப்போக்ரெட்டாவே இருக்காத மஹா… நாம வாழறது ஒரு தடவை… அதை வெளிப்படையா வாழ்ந்துட்டு போய்டலாம்… இதென்ன வேணும் ஆனா வேணாம்ன்னு… நடிக்கற… ரொம்ப நடிக்கறடி…”
“சரி நடிக்கல… வெளிப்படையா சொல்றேன்… ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா அது நரகமாகிடும்…” என்று கூற, அவளை தள்ளி நிறுத்தியவன்,
“என்னை விட்டுட்டு போக எத்தனையோ காரணத்தை தேடிப் பிடிக்கற மஹா…” என்றவனின் கண்களை நேராக பார்த்தவள்,
“உன்னை விட்டுட்டு நான் மட்டும் நிம்மதியா இருக்க முடியுமா?” என்று கேட்டவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“இருக்க முடியாதுல்ல… அதே தான் எனக்கும்… நரகமா இருந்தாலும் பரவால்ல இரு… அதே நரகத்துல நானும் இருக்கேன்…” என்றவனை வாயடைத்துப் போய் பார்த்தாள்.
இது எந்த மாதிரியான காதல் என்று அவளுக்கு புரியவில்லை. நடுங்கியது. தலையை பிடித்துக் கொண்டு டைனிங் டேபிள் நாற்காலியில் சரிந்து அமர்ந்தவளை நிர்கதியான பார்வை பார்த்தான். உள்ளுக்குள் தாங்கொணாத்துயரம் அவனை அலைக்கழித்தது. ஆனாலும் வேறு வழியில்லை. அவளை இப்போது விட்டுக் கொடுக்க முடியாது. விட்டு பிடிக்க நினைத்தால் பிடிக்கவும் முடியாது.
தன்னை மொத்தமாக தொகுத்துக் கொண்டவன், அவளது செல்பேசியை எடுத்து அந்த வாட்ஸ் அப் எண்ணை ஆராய்ந்து கொண்டே, 
“மகா… இதே கல்யாணத்துக்கு அப்புறம், யாராவது என்னை பழிவாங்க, இப்படி பண்ணிருந்தா என்ன பண்ணிருப்ப?” என்று இயல்பாக கேட்பது போல கேட்க, அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.
என்ன சொல்வது என்று புரியாத பார்வை பார்க்க,
“இப்ப நீ நம்ம இன்டிமேட் ரிலேஷன்ஷிப்பை நினைச்சு தானே இவ்வளவு போராடிட்டு இருக்க? சப்போஸ் இஃப் வி ஆர் ஆல்ரெடி இன்டூ இட், வாட் வில் பி யுவர் டெசிஷன்?” நேரடியான கேள்வி. இது போன்ற நேரடியான அவனது தாக்குதல்களை மட்டும் தான் அவளால் சமாளிக்கவே முடிவதில்லை. அப்போதும் என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.
அப்போது என்ன செய்திருக்க முடியும்? தெரியவில்லை அவளுக்கு. எதுவும் சொல்லத் தோன்றாமல் அவனை பார்த்தாள்.
“விட்டுட்டு போயிடுவியான்னு கேக்கறேன்…” பார்வை மொத்தமும் பேசியிலிருக்க, வார்த்தைகள் மட்டும் வெப்பமாக வந்தது.
லேசாக நிமிர்ந்து அவளைப் பார்க்க, இல்லையென்று இடம் வலமாக தலையாட்டினாள்.
“அப்படீன்னா இப்ப மட்டும் விட்டுட்டு போறேன்னு எப்படி மஹா உன்னால சொல்ல முடிஞ்சது?”
அவனது கேள்விக்கு என்ன பதில் கூறுவது?
“ப்ச்… சரி விடு…” என்றவன், அந்த வாட்ஸ்அப்பை ஆராய்ந்து கொண்டிருந்தான்.  
மௌனியானாள்!
“இது யாரோட நம்பர்?” என்று நெற்றியை சுரண்ட, அவளுக்கு விஜய் பற்றிக் கூற சற்று பயமாக இருந்தது.
இவன் என்ன செய்து வைப்பானோ என்ற பயம்!
“அது…” என்று திணறியவள், எச்சிலை கூட்டி விழுங்கி, “அவன் கால் பண்ணான்…” என்று கூற, சரேலென நிமிர்ந்தான்.
“என்ன சொல்ற?” என்று அதிர்ந்தான். கால் செய்தான் என்றால் ப்ளாக்மெயிலா?
“ம்ம்ம் ஆமா…” என்றவள், தடுமாறினாள், அவனது பார்வையில் ஏறிய வெப்பத்தை கண்டு! “ப்ளீஸ் ஷ்யாம்… அப்படி பார்க்காத…” என்றவளுக்கு நெஞ்சம் தடதடத்தது.
“யாரு?” என்றவன், அவளை கூர்மையாக பார்க்க,
எச்சிலை விழுங்கியபடி, “உன்னோட பிஏ… விஜய்…” என்று கூற, அவன் என்னமாதிரி உணர்ந்தான் என்றே புரியவில்லை.
வெறும் கையாடல் தான் செய்தான் என்று நினைத்திருக்க, தன்னுடைய அந்தரங்கத்தை படமெடுக்கும் அளவுக்கு போயிருப்பான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அதிலும் அந்த நேரத்தில் எல்லாம் அவனோடு வெகு சுமூகமாக உறவில் தானே இருந்தான். ஆனாலும் இந்த வேலையை செய்திருக்கிறான் என்றால் இவனெல்லாம் என்ன பிறவி?
இவன் மேலா நம்பிக்கை வைத்தேன்?
இவனையா தன் முகமாக சென்னையில் இருக்க அனுமதித்தேன்?
இவனது செயல்பாடுகள் அனைத்தையும் ஆதரித்தேனே?
இவன் இவ்வளவு கீழிறங்குவானா?
படம் எடுத்ததோடு நிற்காமல், மகாவிடம் காட்டியதும் இல்லாமல், ஊருக்கே அதை வெளிச்சமிட்டு காட்டியதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஆரம்பக்கட்ட அதிர்ச்சி எல்லாம் ஒரு சில நொடிகளுக்கு தான்!
“இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லல மஹா?” கூர்மையாக அவளிடம் கேட்க,
“நீ ரொம்ப கோபப்படுவ ஷ்யாம்…” என்று தயங்கினாள்.
“எனக்கு இப்பத்தான் ரொம்ப கோபம் வருது… இப்படியொரு முட்டாளா இருக்கியே…” என்றவன், அவளிடம் மேலும் தர்க்கம் செய்யாமல் கிளம்ப எத்தனித்தான். டைனிங் ஹாலிலிருந்து வெளி ஹாலுக்கு வந்தவனை நிறுத்தி,
“அவனை எதுவும் பண்ணிடாத ஷ்யாம்…” என்று அவனை தடுத்தாள் மஹா.
“ஏன்டி அவன் என்னை ஊரெல்லாம் அசிங்கப்படுத்தி இருக்கான்… அவனை ஒன்னும் பண்ணாதன்னு சொல்ற?” அதீத கோபத்தில் கொதித்தான் ஷ்யாம்.
பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு மொழி புரியாத படத்தை பார்த்தது போலத்தான் இருந்தது.
“நீ அவனுக்கு ஏதாவது பண்ண, பதிலுக்கு அவன் ஏதாவது பண்ண… ஒரு என்ட் கார்டே இல்லையா இதுக்கு?” என்று மஹா பதிலுக்கு கொதித்தாள்.
“என்ட் கார்ட் தானே… போட்டுடறேன்…” என்றவனின் குரலில் அத்தனை வன்மம், பார்வையில் வெப்பம்!
“ஷ்யாம் ப்ளீஸ்…” எனும் போதே, அவளுடைய செல்பேசி அழைத்தது.
விஜய் தான் அழைத்தான்.
மெளனமாக மகாவை பார்த்தான் ஷ்யாம்.
அவள் தவிப்பாக இவனை பார்க்க, செல்பேசி அழைத்துக் கொண்டே இருந்தது.
ஸ்க்ரீனிலிருந்த பச்சையத்தை இழுத்து விட்டான்.
மகாவின் முகம் திகிலடைந்தது. அந்த விஜய் எதையாவது பேசி வைத்துவிட போகிறான் என்ற பயம் உள்ளுக்குள் கவ்வியது!
“என்ன மஹா… மேரேஜை நிறுத்திட்டியா?” என்று அவன் கேட்க, ஷ்யாம் உக்கிரமாக அதை கேட்டபடி மெளனமாக இருந்தான். ஒருமையில் அவன் பேசுவதை கேட்கும் போது அத்தனை எரிச்சலாக இருந்தது.
“மஹா… இப்ப பேச போறியா? இல்லைன்னா இன்னும் ரெண்டு பிக்ஸ ட்விட்டர்ல அப்லோட் பண்ணட்டா?” என்று சாதாரணமாக கூறிக்கொண்டு போக,
“விஜி…” என்று இவன் அழுத்தமாக அழைக்க, அந்த பக்கத்தில் விஜய் மௌனமாகினான்.
“என்னடா மஹா ன்னு பேர் சொல்ற? தொலைச்சுடுவேன்… யார்ன்னு நினைச்ச? மிசஸ் ஷ்யாமள பிரசாத். அதை ஞாபகத்துல வெச்சுக்க…” என்று நறுக்கியவன், இடைவெளி விட்டு, “அப்லோட் பண்ண போறியா? முடிஞ்சா செய்டா… பார்க்கலாம்…” என்றவனை பயமாக பார்த்தாள் மஹா.
ஒரு கணம் மௌனமானது மறுபுறம்.
“நான் செய்றது இருக்கட்டும் பாஸ்… உங்க கூட இருந்தாளே சௌஜன்யா… ப்ச்… உங்களுக்கு தான் அவ பேர் ஞாபகத்துல இருக்காது இல்லையா… அவ சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டா… அது தெரியுமா உங்களுக்கு?” என்று சிரித்துக் கொண்டே கூற, ஷ்யாம் அதிர்ந்தான்.
“என்ன சொல்ற?” என்று அதே அதிர்வோடு கேட்க,
“எஸ்… அட்டெம்ப்ட்டட்… உங்க ஹாஸ்பிடல்ல தான் இருக்கா… இது கூட தெரியலையா பாஸ்?” என்று கேட்க,
“டேய்… எதுவா இருந்தாலும் உனக்கும் எனக்கும் தானடா… ரொம்ப கேவலமா இருக்கு விஜி, நீ செய்றது…”
“அப்படீனா நீங்க எனக்கு பண்ணினது?” என்று கேட்க,
“நம்பிக்கை துரோகி…” என்று கொதித்தவன், சற்று இடைவெளி விட்டு, “விஜி… யூ ஆர் ஃபினிஷ்ட்… கவுன்ட் யுவர் டேஸ்…” என்று வெப்பமாக கூற,
“கவுன்ட் யுவர் ஹவர்ஸ் பாஸ்… சௌஜன்யா, அவளோட தற்கொலைக்கு காரணம் நீங்க தான்னு மரண வாக்குமூலம் கொடுத்தான்னா உங்க சேப்டர் க்ளோஸ்ட்… அதை அவ செய்வா… ஏன்னா அவளை ட்விட்டர்ல எக்போஸ் பண்ணது நீங்கதான்னு நம்பறா…” என்று அலட்டிக் கொள்ளாமல் கூற, ஷ்யாமின் கோபம் சிகரம் தொட்டது.
“இப்படியொரு துரோகிய நான் பக்கத்துல வெச்சுட்டு இருந்து இருக்கேன்…” என்றவன், “முடிஞ்சா அவளை அப்படியொரு வாக்குமூலம் கொடுக்க வை விஜி… அப்படியே கொடுத்தாலும் அது எனக்கு சாதாரணம்… அது என்னை பாதிக்காது… ஆனா உனக்கு நான் கொடுக்கற பனிஷ்மென்ட் இருக்கு பாரு…” என்று நிறுத்த,
“என்ன பாஸ் பண்ணுவீங்க?” என்று ஏளனமாக கேட்டவன், “மிஞ்சி மிஞ்சி போனா போட்டுத் தள்ளுவீங்க?” என்று அசராமல் கூற,
“நோ விஜி… நாட் அட் ஆல்… உன்னை போட்டுத் தள்ளிட்டா அது ரொம்ப ஈஸி… பொட்டுன்னு போய்டுவ… ஆனா நான் உனக்கு கொடுக்கற பனிஷ்மென்ட் நீ கனவுல கூட நினைக்காத பனிஷ்மென்ட்டா இருக்கும்…”
அழுத்தம் திருத்தமாக கூறியவனின் தொனி மகாவை மட்டுமல்ல… அங்கிருந்த அத்தனை பேரையும் திகிலடைய செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!