VNE44(2)

காரை இன்னுமே பறக்க விட்டான். கோபத்தையெல்லாம் ஆக்சிலேட்டரில் காட்டினான்.
சட்டென அப்படி சொல்லி விட்டாள். ஆனால் மனம் உணர்ந்து அதை சொல்லவில்லை. கோபத்தில் நிதானமிழந்து கூறிய வார்த்தைகள் அவை!
“நீ என்ன சொல்ல வர்ற?” அவள் சுதாரிப்பதற்குள் அவன் கேட்டு விட்டான்.
அவள் கண்கள் கலங்கி மெளனமாக இருக்க,
“குத்தி காட்ற மஹா…” என்று அவன் சீற, அவளுக்கும் எரிச்சலாக இருந்தது.
“நான் எதுக்கு குத்திக் காட்டனும்? இருக்கறதை தானே சொன்னேன்? உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வரணும்?” அவசர கதியில் இவளும் வாயி விட,
“எதுவா இருந்தாலும் நேரா பேசு…” கடும் கோபத்தோடு கூற, என்ன தவறாக பேசி விட்டோம் என்று யோசித்தாள்.
“எதையுமே நான் மறைச்சு வெச்சு பேசனும்ன்னு அவசியமில்ல…” எங்கோ பார்த்துக் கொண்டு இவள் கூற,
“அப்படீன்னா என்ன சொல்ல வர்ற?” கோபத்தையும் தாண்டி அவன் இறுக்கமாக கேட்கவும் தான், பேச்சு திசை மாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். மனதுக்குள் ‘ஐயோவென்று’ இருந்தது.
“ப்ளீஸ் ஷ்யாம்… நான் எதையும் எந்த இன்டென்ஷனோடவும் சொல்லலை… மனசுல இருக்கறதை சொன்னேன்…” சட்டென சரணடைந்து விட்டாலும், அவனது கோபம் தீர்கிற ஒன்றாக இல்லை.
“உனக்கு எந்த இன்டென்ஷனும் இருக்காது மஹா. ஏன்னா உன்னை பைத்தியம் மாதிரி லவ் பண்ணிட்டு இருக்கற நான் உனக்கு பெருசா தெரியல… அவன் சொன்னான்னு கல்யாணத்தை நிறுத்த சொல்ற… அவன் பேசினதையும் என்கிட்டே சொல்லலை… இவ கிட்ட என்னை விட்டுக் கொடுத்துட்டு போற… இப்ப தப்பு தப்பா பேசற… ‘எனக்கு அப்புறம் தான் நீன்னு’… ச்சே என்ன மாதிரியான வோர்ட்ஸ்… நானும் மனுஷன் தான்டி… எனக்கும் சாச்சுரேஷன் பாயின்ட்ன்னு ஒன்னு இருக்கு…” கோபத்தை எல்லாம் ஆக்சிலரேட்டரில் காட்டிக் கொண்டிருந்தான்.
“அவன் சொன்னான்னு நான் கல்யாணத்தை நிறுத்த சொன்னேனா?” அதிர்ந்தாள். அவள் செய்ததற்கு அதுதான் அர்த்தம் என்றாலும், அவளது கவனம் முழுக்க இவன் மேலல்லவா இருந்தது. அதுவும் இல்லாமல் அவள் திருமணத்தை நிறுத்த முயன்ற காரணமே வேறல்லவா… அந்த படங்கள்… வீடியோ… என்று மனதுக்குள் ஓட,
“ஆமா… அவன் தான் கேட்டானே… கல்யாணத்தை நிறுத்திட்டியா மஹான்னு… அந்தளவு தான் என்னை நீ வெச்சு இருக்க… இல்லையா?”
“அவன் சொன்னதை எல்லாம் நான் கன்சிடர் பண்ணவே இல்லடா… என்னால அந்த விஷயத்தை ஜீரணம் பண்ண முடியல… இப்பக் கூட அதை என்னால மறக்க முடியுமான்னு தெரியல…” வேதனையை மனதில் வைத்துக் கொண்டு அவள் கூற, நடந்தவொன்றை மாற்ற முடியாத இயலாமையும், தான் ஏமாற்றப்பட்ட, முதுகில் குத்தப்பட்ட, தன்னோடு இருந்தவனே இந்தளவு குழி பறித்து இருக்கிறானே என்ற ஆத்திரத்தையும், இந்த சூழ்நிலையில் யாரை நம்புவது என்ற அவனது கோபத்தையும், மகாவிடம் காட்ட முடியாமல், ஆக்சிலரேட்டரில் காட்ட, கார் தாறுமாறாக பறந்தது.
“கொஞ்சம் பார்த்து ஓட்டு ஷ்யா…” என்று கூறும் போதே, அவன் திரும்பி அவளை முறைத்த முறைப்பில், அவளுடைய தேகம் நடுங்கியது. எத்தகைய பார்வை அது?
லாவாவின் சூட்டோடும் கொதிப்போடும்… கோபாக்னி கொழுந்து விட்டெறிய, அவன் பார்த்த பார்வையை ஆயுளுக்கும் மறக்க முடியுமோ? உள்ளே தடதடத்தது.
“நான் டிரைவ் பண்றேன்… யூ ஆர் நாட் நார்மல்…” என்று மெல்ல தயங்கியபடி அவள் கூற,
“அந்த ஆணிய நான் புடுங்கிக்கறேன்… நீ வாயை மூடிட்டு இரு…” என்றவனின் வார்த்தைகளில் மனம் இன்னுமே அச்சமடைந்தது.
மஹா பேசிய வார்த்தைகளுக்கான பிரதிபலிப்பு!
அவள் வெடித்த வெடிப்புக்கான பதில் வெடிப்பு
அதே சீற்றத்தோடு தான் சிவச்சந்திரனிடமும் அவன் பேசினான்.
சிவச்சந்திரனிடம் பேசிய உடனே விஷ்ணுவை அழைத்தவன்,
“விஷ்ணு… ஒரு பத்து பேரை கூட்டிட்டு விஜி வீட்டுக்கு போ… அங்க அவன்கிட்ட இருக்க டாக்குமெண்ட்ஸ், பென் டிரைவ்ஸ், சிடி, லேப்டாப், ஹார்ட் டிஸ்க்ன்னு எது இருந்தாலும் அள்ளிப் போட்டுட்டு வா… ஒரு இடத்தையும் பாக்கி வைக்காத…” என்று அவனை ஏவ,
“அவர் தடுத்தா என்ன பாஸ் பண்ண?” என்றதும்,
“அவன் இருந்தான்னா அவனை அப்படியே தூக்கிட்டு போயஸ் கார்டன் ஆஃபீஸுக்கு வந்துடு… அவனை அங்க வெச்சு…” என்று பல்லைக் கடித்தவன், “பார்த்துக்கலாம்…” என்று முடிக்க,
“பாஸ், டாகுமென்ட்ஸ் முக்கியமா அவர் முக்கியமா? ஃபிக்ஸ் த ப்ரையாரிட்டி…” என்றவனின் குரலில் அத்தனை தீவிரம் சேர்ந்து இருந்தது.
“ரெண்டுமே… நாம பேசற நேரத்துல கூட எதையாவது அவன் அப்லோட் பண்ணிட சான்ஸ் இருக்கு விஷ்ணு… சோ அவனும் முக்கியம், அவன் கிட்ட இருக்க விஷயமும் முக்கியம்…” எனவும்,
“ஓகே பாஸ்… அப்படீன்னா அவரோட வீட்டை மட்டும் டார்கெட் பண்ணா அவரை பிடிக்க முடியாது… மோஸ்ட்லி அவர் போற ப்ளேசஸ் அத்தனையும் எனக்கு தெரியும்… எல்லா இடத்துக்கும் ஆளை அனுப்பிடறேன்… கூடவே அவரோட வீட்டையும் செர்ச் பண்ணிடலாம்…” என்று அவன் யோசனை கூற,
“ஓகே… முடிச்சுட்டு எனக்கு கால் பண்ணு…” என்று முடிக்கும் போதே, இளங்கவி ஷ்யாமை அழைத்தான்.
“சொல்லு இளங்கவி…”
“பாஸ்… டெலிகம்யுனிகேஷன் டிபார்ட்மெண்ட்ல பேசிட்டேன்… ட்விட்டர் மேனேஜ்மெண்ட்டுக்கு அவங்க வழியா ப்ரெஷர் போட்டுட்டே இருக்கு… கூகுள் அண்ட் அதர் செர்ச் இஞ்சின் மேனேஜ்மெண்ட்ஸ்க்கும் பிரஷர் பண்ணிட்டு இருக்காங்க… இன்னும் ஒரு ஒன் ஹவர்ல அந்த பிக்ஸ் எல்லாம் டெலீட் பண்ண வெச்சுடலாம்… பியுச்சர்ல அந்த பிக்ஸ் எங்கயுமே இல்லாம பண்ணிடலாம் பாஸ்…” என்று கூற,
“அந்த ஐடிய ஹேக் பண்ண சொன்னேனே கவி…”
“ப்ராசஸ் போயிட்டே இருக்கு பாஸ்… இன்னொரு அரை மணி நேரத்துல அதுவும் முடிஞ்சுடும்…” என்று கூற,
“அந்த ஐடி எந்த ஐபில இருந்து ஆக்டிவேட் ஆகிருக்கு… என்ன கோ ஆர்டினேட்ஸ்ல இருக்குன்னு முதல்ல பார்க்க சொல்லு கவி…”
“ஒரே ஐபில லாக் இன் ஆகி இருந்தா ப்ராப்ளம் இல்ல பாஸ்… வேணும்னே வோர்ல்ட்வைட் அங்கங்க லாக் இன் பண்ணி இருந்தா தான் ப்ராப்ளம்… ஆத்தண்டிகேடட் ஐபிய கண்டுபிடிக்கறது கஷ்டம்…” எனவும்,
“மத்த ஐபி எல்லாத்தையும் விட்டுடு கவி… சென்னை ஐபி மட்டும் தான் நமக்கு முக்கியம்… ரைட்?” என்று முடிக்க,
“ஓகே பாஸ்…” என்று வைக்க, அவனது முகம் யோசனையாகவே இருந்தது.
இந்த பிரச்சனைகளுக்கு நடுவே தான் வேறு அவனை டென்ஷன் செய்ய வேண்டுமா என்ற எண்ணமே அப்போதுதான் மகாவுக்கு வந்தது. அவனது செயல்பாடுகளை முன்னமே கண்டிருக்கிறாள் தான். ஆனால் இந்த அவதாரம் அவளுக்கு மிகவும் புதிது.
அத்தனை பேரையும் வைத்து, அத்தனை நுட்பத்தையும் பயன்படுத்தி, ஒரே இடத்தில் குவிய செய்து கொண்டிருந்தவனை சற்று பயத்தோடு தான் பார்த்தாள்.
இத்தனை விஷயங்களுக்கு இடையில் அவன் கையில் கார் கன்னாபின்னாவென பறந்து கொண்டிருக்கவும் தான் அவளே ஓட்டுவதாக கூறியது.
அவளை முறைத்து கடித்து குதற, கியரிலிருந்த அவனது இடது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அவனது விரல்களோடு அவளுடையதையும் கோர்த்துக் கொள்ள, அவனையும் அறியாமல் மெல்ல ஆசுவாசமானான்.
கோபம் மெல்ல குறைவது போல இருந்தாலும், பழி உணர்ச்சி அவனை பந்தாடிக் கொண்டிருந்தது.
“சாரி ஷ்யாம்… ஐ டிட்டின் மீன் இட்… ஜஸ்ட் டக்குன்னு வந்துடுச்சு…” என்றவளை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. தனது உணர்ச்சிகளை பிரயத்தனப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்பதை அவனது தோற்றத்தைக் கொண்டு ஊகிக்க முடிந்தது.
அவள் எத்தனை கோபத்தில் இருந்தாலும், அவனது அணுகுமுறை இதுவரை நிதானமாகத்தான் இருந்திருக்கிறது. கோபமாகவே இருந்தாலும் கூட அதையும் நிதானமாக காட்டிய ஷ்யாமைத்தான் அவள் அதுவரை அறிந்திருந்தாள்.
ஆனால் அவனது நிதானத்தை செயலிழக்க செய்யும் சக்தி அவளது ஒற்றை சொல்லுக்கும் பார்வைக்கும் உண்டு என்பதை அவளே உணரவில்லை.
“ஷ்யாம்…” என்று மீண்டும் அவனது விரல்களை அழுத்தியபடி அவனை அழைக்க,
 “நீ சொன்ன நரகத்துக்கு டீசர் காட்ற மஹா…” கோபத்தை கைவிட்டாலும், அவனது குரல் அத்தனை வேதனையாக ஒலித்தது.
“ஷ்யாம்…” மறுத்து கூற வந்தவளை,
“நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்ன்னு என்னை நானே தயார் பண்ணிட்டு இருக்கேன்… வேண்டாம்… எந்த எக்ஸ்ப்ளனேஷனும் வேண்டாம்…” என்று புருவம் நெறிபட, இறுக்கமாக கையை காட்டி அவளை நிறுத்தினான்.
அவனது கையை விட்டவள், தலை குனிந்து கொண்டு கைகளை கோர்த்தபடி அமர்ந்து கொண்டாள். கண்கள் கலங்கும் போல இருந்தது. அவனது கோபத்தை தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் வேதனையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அவனது செல்பேசி அழைத்தது. சிவச்சந்திரன் தான் அழைத்தான்.
“சொல்லு சந்த்ரா…” என்றான் அதே இறுக்கத்தோடு!
“பாஸ்… அவர் இருக்க இடத்தை ஃபிக்ஸ் பண்ணியாச்சு…” என்றவனின் குரலில் அத்தனை ஆர்வம்!
“ஆர் யூ சியூர்?” பரபரப்பானான் ஷ்யாம்.
“எஸ் பாஸ்… கோஆர்டினேட்ஸ யார் கிட்ட ஷேர் பண்றதுன்னு சொன்னா நான் பண்ணிடறேன்… ஆனா அவர் மூவிங்ல இருக்கார்…” என்று கூறவும்,
“லொக்காலிட்டிய விஷ்ணு அன்ட் இளங்கவி கிட்ட சொல்லிடு… எங்க மூவிங்ல இருந்தாலும் ஆளுங்களை கூட்டிட்டு போய் ரவுன்ட் அப் பண்ணு… அவன் இன்னும் அரை மணி நேரத்துல என் கண் முன்னாடி இருக்கணும்…” என்று அழுத்தமாக கூறினான்.
“சியூர் பாஸ்…” என்றபடி அவன் வைத்து விட, முன்னைக் காட்டிலும் வேகமெடுத்தவன், அவளை வீட்டில் இறக்கி விட,
“உள்ள வந்துட்டு போ ஷ்யாம்…” என்று முடிப்பதற்குள்ளாக, உச்சபட்ச வேகத்தில் காரை கிளப்பியிருந்தான்.
புழுதி அடங்க வெகு நேரமானது.
இந்த புழுதி அடங்கி விடலாம். மனதுக்குள் இருந்த புழுக்கம்?
அவன் போன திசையை பார்த்தபடியே நின்று விட்டிருந்தாள்.
இத்தனை கோபமும், ரவுத்திரமும், ஆங்காரமும், சீற்றமும், பழியுணர்ச்சியும் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. அவனது வலியும், அவமானமும் புரிந்தது தான். ஆனால் இத்தனை கோபத்தை அவள் தனது வாழ்நாளில் யாரிடமும் பார்த்ததே இல்லை. தன் முன் நீண்டு காத்திருந்த எதிர்காலம் சூனியமாக தெரிந்தது. பயமாக இருந்தது. அவளது இயல்பை அவளுடைய காதல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டிருந்ததை உணர்ந்து இருந்தாள்.
அவளுடைய சுயம் பறிபோனால் அவளால் அந்த வாழ்க்கையில் ஜீவிக்க முடியுமா?
சுயத்தை இழந்து பெற்ற வாழ்க்கை இனிக்குமா?
ஆனால் அவளது அத்தனை குழப்பங்களையும் தாண்டி விஜியை இவன் என்ன செய்வானோ என்ற கவலையும் பயமும் மனதை அழுத்தியது. குறைந்தபட்சம் ஷ்யாம் மனிதனாக இருப்பதை மட்டுமே விரும்பினாள் மஹா. அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு, அது ‘ராட்சசன்’ என்பதை அவள் பெரிதாக அறிந்ததில்லை.
****