VNE46(cv)

VNE46(cv)

46

கைகளை கட்டியபடி இறுக்கமாக ஆபரேஷன் தியேட்டர் முன்பு காத்திருந்தாள் மஹா. உடன் ஷ்யாம். அவளது பிடிவாதத்துக்காக வந்திருந்தான். வருவதில் அவனுக்கு உடன்பாடில்லை. பிடிக்கவும் இல்லை. அத்தனை பெரிய துரோகத்தை செய்தவன் விஜி. அதுவும் அத்தனை திட்டமிட்டு. அவன் திட்டமிட்டு செய்தான் என்றோ, நான் ஏமாந்து விட்டேன் என்றோ சொல்ல முடியுமா? அது தனக்கு அசிங்கம் இல்லையா? ஏமாறும் அளவுக்கு இடம் கொடுத்த தன்னுடைய முட்டாள் தனத்தை அல்லவா சொல்ல வேண்டும்?

அன்று கஞ்சாவை கொடுத்தது வேண்டுமானால் சௌஜன்யாவாக இருக்கலாம். ஆனால் புகைத்தது? தானல்லவா! தனக்கெங்கே அறிவு போயிற்று என்று அவனது மனம் கேள்வியாக எழுப்பிக் கொண்டிருக்க, அந்த எரிச்சலை எல்லாம் காட்டி சுவற்றை எட்டி உதைத்தான்.

இப்படி தன்னை ஏமாற்றியவனை பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவளை என்ன செய்வது?

அவனது கோபத்தையும் எரிச்சலையும் கண்டவள், ஒன்றும் பேசாமல் மெளனமாக இருக்க, அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் வருகைக்காக காத்திருந்தாள்.

காலில் இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருக்க, அதை சரி செய்யும் பொருட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விஜய் அட்மிட் செய்யப்பட்டது முதலே மயக்கத்தில் தான் இருந்தான். சிகிச்சை ஒரு பக்கம் போய் கொண்டிருந்தது. இரவு பத்து மணி வாக்கில் அவனுக்கு லேசாக நினைவு திரும்ப, ஷ்யாமுக்கு அழைத்திருந்தார் சீப் டாக்டர்.

மொட்டை மாடியில் ஷ்யாமோடு, கார்த்தியும் இருக்க, உடன் மஹா!

“பாஸ்… அவருக்கு லேசா கான்ஷியஸ் திரும்புது…” எனவும், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மகாவை பார்த்தான் ஷ்யாம்.

“அப்படியா? அந்த டாக்குமெண்ட்ஸ் எங்க இருக்குன்னு கேட்க முடியுமா?” என்று இவன் கேட்க, நிமிர்ந்து பார்த்த மஹா,

“ஸ்டாப் இட் ஷ்யாம்…” என்று கிட்டத்தட்ட கத்தினாள். அவளது கோபத்தை அவன் சற்று எதிர்பார்க்கவில்லை. அவனை வெஜிடபிள் ஆக்கலாமா என்ற யோசனையை அவள் முன்னிலையில் வைத்ததிலிருந்து மூட் அவுட் ஆகி அமர்ந்தவள் தான், என்னவென்று நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அத்தனை கோபத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது.

அவனுக்கு அந்த டாக்குமெண்ட்ஸ் மிகவும் முக்கியம்… அது அவனது மரியாதை… அவனது வாழ்க்கை… அவனது எல்லாமும் அதுதான்… இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருந்துவிட போகிறது என்று புரியவில்லை. அத்தனை பேரும் அவனிடம் பயந்து இருக்க, அந்த டாகுமென்ட்ஸ் வெளியே வந்தால் அவனது மரியாதையை நினைத்துக் கூட பார்க்க முடியாதே! ஒன்றுக்கே புயலடித்து ஓய்ந்து இருப்பதை போல உணர்ந்தான். எத்தனை அவனிடம் இருக்கிறது என்பது புரியாத நிலையில் என்னவென்று நினைப்பது?

அதனால் தான் அந்த மருத்துவரிடம் அவன் அப்படி கேட்டதும்!

ரௌத்திரமாக அவன் முன்னே எழுந்து நின்றவளை கேள்வியாக பார்த்தான்.

“போனை கொடு…” இறுக்கமான முகத்தோடு, பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள் மஹா.

“என்ன மஹா?”

“நீ கொடுன்னு சொல்றேன்… உன்னோட பைத்தியகாரத்தனத்தை ஏத்துக்க முடியாது ஷ்யாம்…” அவனை வெஜ் ஆக்கவா என்று கேட்டதன் கோபத்தில் கொதித்தவளிடம் போனை கொடுக்க, அதை வாங்கியவள்,

“பேஷன்ட் எப்படி இருக்கார் டாக்டர்?” என்று கேட்டாள்.

கார்த்திக்கு அவளது செய்கை மிகவும் வித்தியாசமாக தெரிந்தது. ஷ்யாமின் இக்கட்டானா நிலை அவனுக்கு தெரியும். கொஞ்சம் இந்த நேரத்தில் சறுக்கி விட்டால் மொத்த வாழ்க்கையும் கேள்விக்குரியதாக, கேலிக்குரியதாக, இன்னும் கேள்விக்குறியாகவும் மாறிவிட நிறைய வாய்ப்பிருப்பதை அவன் அறிவான்.

அதை புரிந்து கொள்ளாமல், அவனுக்காக பரிதாபப்படுகிறாளே இந்த பெண் என்று எரிச்சலாக அவளை பார்த்தான்.

ஆனால் அவள் போராடுவது விஜய்க்காக இல்லை. ஒரு மருத்துவ மாணவியாக, எதிர்கால மருத்துவராக மட்டும் இல்லாமல், எதிர்கால வாழ்க்கையிலாவது ஷ்யாமுடைய பாவத்தின் சுவடுகள் தன்னுடைய வாரிசுகளை அணுகாமல் இருக்க வேண்டுமே என்ற ஆற்றாமையிலும் தான்!

“ஃபைன் மேடம்… ப்ளட் லாஸ் கொஞ்சம் இருக்கு… கால் கைல கொஞ்சம் ப்ராக்ச்சர் ஆகியிருக்கு… டிவைடர் மோதி கீழ விழுந்ததில கொஞ்சம் ஹெட் இஞ்சுரி இருக்கு…” என்று அவர் பட்டியலிட,

“அவரோட மெண்டல் ஹெல்த் எப்படி இருக்கு டாக்டர்?” இறுகிய முகத்தோடு அவள் கேட்க,

“இன்னும் செக் பண்ணி முடிக்கல… முழுசா கான்ஷியஸ் ரீகைன் பண்ணாத்தான் அதை பற்றி சொல்ல முடியும்…” என்றவரிடம்,

“அப்புறம் எப்படி அந்த பேஷன்ட் மெண்டலி இன்ஸ்டேபிள்ன்னு போலீஸ்க்கு ரிப்போட் கொடுத்தீங்க டாக்டர்?” கோபமாக கேட்க, அந்த பக்கத்தில் அந்த மருத்துவர் மௌனமாகினார்.

சற்று நேரத்துக்கு முன் தான் போலீஸிலிருந்து இளங்கவிக்கு கால் செய்திருந்ததாக அவன் கூறியிருந்தான். அதற்கு அவன் விஜி மனரீதியாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனாலேயே அப்படி நடு ரோட்டில் நிதானமிழந்து ஓடியதாகவும் கூறியதாக தெரிவித்திருந்தான்.

“சொல்லுங்க டாக்டர்…” அதீத கோபம் இருந்தாலும், நிதானமாக கேட்டாள் மஹா.

“இல்ல… பாஸ் தான் கொடுக்க சொன்னார்ன்னு இளங்கவி…” என்று இழுக்க,

“இளங்கவி சொன்னா கொடுத்துடுவீங்களா? இல்ல பாஸ் சொன்னா உங்க மனசாட்சியை கழட்டி வெச்சுடுவீங்களா?” வார்த்தையால் விளாசிக் கொண்டிருந்தவளை தன்னையும் அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

“பாஸ் கொடுக்க சொல்லும் போது எப்படி அதை மறுக்க முடியும் மேடம்?” சங்கடமாக அவர் கேட்க,

“சர்… நீங்க டாக்டரா இல்ல அடியாளா? இவர் கொடுக்க சொன்னா, ஒரு டாக்டரா நான் அப்படி செய்ய முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?” அவரை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தாள் மஹா.

“புரியுது மேடம்… ஆனா அவர் சொல்லி…” என்று இழுக்க,

“அவர் சொன்னாலும் நமக்குன்னு மனசாட்சி வேணும் டாக்டர்… பேஷன்ட் யாரா வேண்ணா இருக்கட்டுமே… அவர்க்கும் உங்களுக்கும் எந்தவிதமான பகையும் கிடையாது. அப்படி இருக்கும் போது உங்களை நம்பி தானே இருக்காங்க… உங்களை தான் தெய்வம்ன்னு நம்பி அவங்க உடம்பை உங்க கிட்ட ஒப்படைக்கறாங்க… அப்படி இருக்கும் போது அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்லாதீங்க டாக்டர்… நமக்கு நம்ம மனசாட்சி தான் முக்கியம்…” என்றவளை மிகவும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஓகே மேடம்…” என்று சுரத்தே இல்லாமல் அவர் கூற,

“அந்த பேஷன்ட்டுக்கு இவர் வேற ஏதாவது இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தாரா?” என்று கேட்க,

“டாக்குமெண்ட்ஸ் பத்தி மட்டும் கேக்க சொன்னார் மேடம்…” என்று சரணடைந்து விட,

“வேண்டாம் டாக்டர்… போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரெஸ்ல இருப்பாங்க… தயவு செய்து இப்ப எதுவும் கேக்க வேண்டாம்…” என்று கறாராக கூற, அவர் விழித்தார்.

“என்ன டாக்டர்?” என்று இவள் கேட்க,

“பாஸ் கேட்க சொல்லிருக்காறே…” என்று அவர் தயங்க,

“நோ வே… பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ண கூடாது… முதல்ல குணமாகட்டும்….” என்று முடிக்க,

“அவர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாமா மேடம்?” என்று தயங்கினார் அந்த மருத்துவர். போனை அவனிடம் கொடுத்தாள் மஹா.

மெலிதான புன்னகையோடு வாங்கினான் ஷ்யாம். மஹா அந்த மருத்துவரிடம் பேசிய தொனியையும் அவளது ஆட்டிடியுடை கண்டதால் மட்டுமே வந்த புன்னகை அது. எதிர்காலத்தில் அந்த மருத்துவமனையையும் மருத்துவ கல்லூரியையும் நிர்வகிக்க வேண்டியவளுக்கு இந்த ஆட்டிடியுட் கூட இல்லையென்றால் என்னாவது என்ற கேள்வி எழுந்தாலும் இவளென்ன அவனுக்காக பேசுகிறாள் என்ற எரிச்சலும் மண்டிக் கொண்டிருந்தது.

“சொல்லுங்க டாக்டர்…” என்றவனை,

“பாஸ்… இப்ப நான் என்ன செய்றது?” சங்கடமாக கேட்க,

“மேடம் என்ன சொல்றாங்களோ அதை செய்ங்க டாக்டர்… அவங்க சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்…” என்று முடித்து விட, அந்த மருத்துவர், ‘உப்ப்ப்’ என்று பெருமூச்சை வெளியேற்றி விட்டு வைத்தார்.

போனையே வெறித்துப் பார்த்தவனை முறைத்தவள், கீழே போக எழ,

“இப்ப எதுக்காக அவனுக்கு சப்போர்ட் பண்ற மஹா?” அவனது குரலில் எரிச்சல்.

அவனை முறைத்துப் பார்த்தவள், பதில் கூறாமல் போக,

“பதில் சொல்லிட்டு போ…” என்றான் அதே எரிச்சலோடு.

“நான் என்ன பேசணும், பேசக்கூடாதுன்னு லிஸ்ட் போட்டு கொடுத்துடு ஷ்யாம்… அதை பாலோ பண்ணிக்கறேன்… ஏன்னா நீயும் அதை தான் பண்ற இல்லையா?” பதிலுக்கு கத்தியை போல கிழித்தவள், வெளியே போக முயல,

“மஹா…” பல்லைக் கடித்தான்.

“ஷ்யாம்… ஒரு விஷயத்தை புரிஞ்சுக்க… அந்த போட்டோஸ் வீடியோஸ் பார்த்து ஜென்மத்துக்கும் உன் பக்கமே திரும்ப கூடாது. அவ்வளவு கோபம் வருது… ஆனாலும் நீ காலைல அத்தனை பேச்சு பேசற… ஏன் உன்னை பற்றி மட்டும் தான் நினைப்பியா? மத்தவங்க எல்லாம் உனக்கொரு பொருட்டாக் கூட தெரிய மாட்டேங்கறாங்க இல்ல?”

“நீ என்ன சும்மா இருந்தியா? நான் பேசினது ஓவர்ன்னா நீ பேசினது என்னவாம்?”

“ஏன் நான் என்ன பேசினேன்? இதை கூட பேசாம இருக்க நான் என்ன ஜடமா?”

“அப்படீன்னா நீ நினைச்சதை எல்லாம் பேசுவ… எல்லாத்தையும் கேக்க நான் மட்டும் ஜடமா?”

விடாமல் இருவரும் தர்க்கம் செய்ய, பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கு தலை சுற்றும் போல இருந்தது.

“மஹா… என்ன இது? கொஞ்சம் பொறுமையா பேசுடா…” தங்கையை அடக்க பார்க்க,

“உனக்கு ஒன்னும் தெரியாது கார்த்திண்ணா… இவனை லவ் பண்ணி தொலைச்சுட்டு… நான் எவ்வளவு…” என்றவளுக்கு குரல் அடைத்தது. அதற்கும் மேல் சொல்ல முடியவில்லை. தேய்ந்தது.

“எவ்வளவு?” என்று புருவத்தை உயர்த்தியவன், “பினிஷ் பண்ணுடி…” இறுக்கமாக முடிக்க, அவனது கண்களை பார்த்தாள். அவனும் சளைக்காமல் பார்க்க, அவள் தான் கண்களில் நீரோடு பார்வையை திருப்ப வேண்டியதாக இருந்தது.

அவள் மெளனமாக, அழுகையில் துடித்த உதடுகளை அடக்கியபடி அவனுக்கு முன்பாக மூங்கில் நாற்காலியில் கால்களை கட்டியபடி அமர்ந்திருக்க,

“பினிஷ் பண்ணு மஹா…. ரொம்ப அசிங்கப்பட்டு போய்ட்ட… அதானே நீ சொல்ல வர்ற?” கல்லைப் போன்ற குரலில் அவன் கேட்க,

“நான் அப்படி சொல்லலை…” எங்கோ பார்த்தபடி இதழ்கள் துடிக்க அவள் கூற,

“இல்ல… அப்படித்தான் சொல்ல வர்ற…”

“இல்ல… நான் சொல்லலை…”

“நோ… அப்படித்தான் சொன்ன…”

“ஆமா… அப்படித்தான் சொன்னேன்… அதுக்கென்ன சொல்ற?”

“உனக்கு அவ்வளவு அசிங்கமா இருந்தா விட்ரு மஹா… அவ்வளவு கஷ்டப்பட்டு சகிச்சுட்டு இருக்க வேண்டாம்…” என்றவன், சட்டென எழுந்து நின்று கொண்டான். உள்ளுக்குளே எதுவோ ஒன்று உடைந்து கொண்டிருந்தது.

“என்ன மஹா… கொஞ்சம் பொறுமையா இரேன்… மச்சானே எத்தனையோ பிரச்சனைல இருக்கார்… கூடவே நீயும் இப்படி பேசினா என்ன தான் பண்ணுவாராம்?” கார்த்திக் சற்று பொறுமையாக எடுத்துக் கூற, அவளோ கண்களில் நீரோடு,

“இந்த வார்த்தையை ரெண்டாவது தடவை சொல்ற…” என்று ஷ்யாமை பார்க்காமல் கூறினாள்.

“எதை?” ஷ்யாம் மெளனமாக இருக்க, கார்த்திக் கேட்டான்.

“சகிச்சுட்டு இருக்க வேண்டாம்ன்னு…”

“இதுக்கெல்லாம் அர்த்தம் எடுப்பாங்களா குட்டிம்மா… ஷ்யாம் அதை உணர்ந்தெல்லாம் சொல்லலை….” சமாதானம் செய்ய,

“உனக்கு தெரியாது கார்த்திண்ணா… அவனுக்கு அவன் என்ன பண்றான், என்ன பேசறான்னு நல்லாவே தெரியும்… நான் ஹர்ட் ஆவேன்னு தெரிஞ்சே தான் அவன் பேசறான்…” என்று கூற, ஆச்சரியமாக பார்த்தான் கார்த்திக்.

இது அப்படியே ஷ்யாம் சொன்னது அல்லவா!

‘நான் என்ன செய்கிறேன் என்பதை நானறிவேன்’ என்ற அவனது அணுகுமுறை!

எளிமையான புரிதல் தான்… ஆனாலும் கார்த்திக்கு சற்று தைரியம் வந்திருந்தது. இருவரும் வேறுபாடுகளை களைந்து விடுவார்களோ இல்லையோ, அந்த வேறுபாடுகளை புரிந்து கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவன், அவளுக்கு முன் வந்து அமர்ந்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!