VNE47(1) CV

47

விஜியின் இந்த நிலைக்கு காரணம் அவனாக இருக்குமோ என்ற மகாவின் எண்ணம் ஒரு நொடிக்கும் குறைவாகத்தான். ஆனால் அதை உள்வாங்கிக் கொண்டிருந்தான் ஷ்யாம், அவளது பார்வை மாற்றத்தைக் கொண்டு!

‘ஷ்யாமை அவள் நினைத்தாலும், அவன் அவளிடம் உறுதி கொடுத்து இருக்கிறான். இனியும் விஜி விஷயமாக அவளது மனம் நோகும் படி செய்வதில்லை என்று. அதை நினைவுப் படுத்திக் கொண்டாள்.

அவன் பொய்யாக அவளிடம் கூற மாட்டான். ஒன்றை கூறினால் அது அது மட்டும் தான். அதற்கு வேறு ஏதும் அர்த்தமில்லை. அதை தாண்டி செய்வான் என்று தோன்றவில்லை. செய்யவும் முடியாது.

இவளது எண்ணபோக்கு எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் போது மெளனமாக அவன் முன் வந்து நின்றான்.

“என்னை யார்ன்னு தெரியலையா விஜி?” என்று இறுக்கமாக கேட்டவனை கேள்வியாக பார்த்தான். முகத்தில் குழப்பம்.

இல்லையென்று இடம் வலமாக தலையாட்டினான்.

“நடிச்சன்னா கொன்றுவேன் ராஸ்கல்… என்னடா விளையாடுறியா?” என்றவனுக்கு கண் மண் தெரியாத கோபம் வந்தது. ஆனால் விஜியின் முகத்தில் இன்னமும் குழப்பம் போகவில்லை.

“பாஸ்… கொஞ்சம் பொறுமையா இருங்க… என்னன்னு நாங்க பார்க்கறோம்…”

“இல்ல சாரதி… இவனை பத்தி உங்களுக்கு தெரியாது… இத்தனை வருஷமா என்னையே ஏமாத்திட்டு இருந்த ராஸ்கல் இவன்…”

“பாஸ்… அதெல்லாம் ஓகே… ஆனா இப்ப இவர் இங்க பேஷன்ட்… சோ ப்ளீஸ் எங்களை பார்க்க விடுங்க…” என்று அந்த சாரதி தயவாக கேட்க,

“பாருங்க… ஆனா இவன் மட்டும் இன்னும் நடிச்சான்னா, சமாதி கட்டிடுவேன்…” அத்தனை கோபமாக கூற,

“ஒருத்தன் செயல்பட முடியாத நிலைல இருக்கும் போது அவன் கிட்ட காட்டப்படற வீரம், வீரமே கிடையாது ஷ்யாம்… அது பயந்தாங்கொள்ளித்தனம்… கோழைத்தனம்… வடிகட்டின முட்டாள்தனம்…” கொதித்துக் கொண்டிருந்தவனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மஹா, நிதானமாக மிகச்சிறிய குரலில் கூற,

“ஆமா… நான் பயந்தாங்கொள்ளி, கோழை, முட்டாள்… இன்னும் என்னென்ன சொல்லணும்? அவன் நடிக்கற நடிப்பை நம்பற… நான் சொல்றது உனக்கு முட்டாள்தனமா இருக்குல்ல…” அடிக்குரலில் அவள் மட்டும் கேட்குமாறு கூறினாலும் அது மருத்துவமனை என்பதும், அவசர சிகிச்சை பிரிவு என்பதும் ஒரு நொடி மறந்தவன், அடுத்த நொடி சுதாரித்தான்.

அங்கிருந்த மருத்துவர்களை பார்த்து, தன்னை மீட்டுக் கொண்டவன்,

“இங்க ஆர்கியுமென்ட் வேண்டாம் மஹா…” என்று முடிக்க,

“நான் யாரையும் நம்பலை… என்னால ஆரம்பிச்ச பிரச்சனை… என்னையும் அறியாம அந்த பிரச்சனைல நான் இருந்து இருக்கேன்…”

“அதனால?” இறுக்கமாக அவன் கேட்க,

“இந்தளவு விஜிக்கு ஆக நானும் காரணம்ன்னு நினைக்கும் போது எனக்கு மனசு கஷ்டமா இருக்கு ஷ்யாம்…”

“நீ காரணம் கிடையாது… ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்க… அவன் பண்ண தப்பை உன் பேரை வெச்சு மறைக்க பார்க்கறான்…”

“சரி இருக்கட்டும்… ஆனா இப்ப அவன் பேஷன்ட்… அதுவும் உன்னால இப்படியான ஒரு பேஷன்ட்…”

“உன் அளவுக்கு எனக்கு பெரிய மனசில்ல… அப்பவே அவனை முழுசா முடிக்க சொல்லி இருக்கணும்… பாவம் பார்த்தது தப்புன்னு நீயே நினைக்க வெச்சுடாத…இப்ப நீ பண்றது அரைவேக்காட்டுத்தனம்… அவ்வளவுதான் சொல்ல முடியும்…”

இருவரும் சிறு குரலில் விவாதம் செய்து கொண்டிருக்க, மருத்துவர்கள் விஜியை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.

மகாவுக்கு முழுவதுமாக விஷயம் எதுவும் தெரியவில்லை. ஷ்யாமும் சரி, கார்த்தியும் எதுவும் சொல்லவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் திருமணத்தை நிறுத்த விஜி முயன்றான். அதற்காக அந்த படங்களையும் வீடியோக்களையும் உபயோகித்து, மகாவை டார்கட் செய்தான். அதனால் அவனை ஷ்யாம் கிட்டத்தட்ட சிதைத்து படுக்க வைத்திருக்கிறான். அந்த சம்பவத்திற்கு பின் மகாவிடம் பேசியபோதும் கூட ஷ்யாமோ கார்த்திக்கோ மகாவிடம் எதையும் விளக்கவில்லை. விஜி திட்டமிட்டு போதை மருந்தை கொடுத்திருக்கக் கூடும் என்ற அவர்களது சந்தேகத்தையும் கூட சொல்லவில்லை.

இப்போதுள்ள சூழ்நிலையில், அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவளுக்காக ஆசைப்பட்டவன் விஜி. அவள் பொருட்டு நடந்தது இந்த கலவரம்.

இதை மட்டுமே அறிந்த நிலையில் விஜி மேல் பரிதாபம் ஏற்படுவது இயற்கை. அந்த பரிதாபத்தில் தான் அவள் மன்னிப்பு கேட்க நினைத்தது. அவளால் யாரும் காயப்பட கூடாதே என்ற சிறிய மனிதாபிமானம் மட்டுமே அவளது நிலையில்!

ஆனால் விஜி, ஷ்யாமை வைத்து செய்திருக்க கூடும் என்பதெல்லாம் அவள் அறியாதது. (புரியாதவர்கள் மீண்டும் படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அவள் அறிந்த வரையில் தான் அவளது மனநிலை இருக்கும் அல்லவா. அவள் அறியாத ஒன்றை வைத்து எங்கனம் வாதாடுவது?)

மகாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த நிலையிலும் எகிறுகிறானே என்ற எரிச்சலில்,

“ஷ்யாம்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சிறிய குரலில் அழுத்தமாக அழைக்க, நிமிர்ந்து அவளை பார்த்தவன்,

“இவன் நடிக்கறான்டி…” என்றான், முகத்தில் அத்தனை எரிச்சலை காட்டி!

“இருக்கட்டும்… அவன் நடிக்கறதாவே இருக்கட்டும்… ஆனா உன்னோட கோபத்தை காண்பிக்கற இடம் இது இல்ல… நீ கிளம்பறதுன்னா கிளம்பு… நான் இருந்து பார்த்துட்டு வரேன்…” என்றவளை விஜி புரியாத பார்வை பார்த்தான். அவனுக்கு நடப்பவை எதுவுமே புரியவில்லை. மயக்கத்திலிருந்து எழும் போது எதுவுமே நினைவில்லை என்பது எத்தனை கொடுமையானது?

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் எழுத்துக்கள் அத்தனையும் ஒரே நேரத்தில் மாயமானதை போல இருந்தது. அதோடு எதிரில் இருப்பவனின் கோபம், அதோடு அவன் அறிந்த ஒரே பெயரான ‘மஹா’ வருத்தம் சூழ்ந்த முகம். அந்த முகம் எதிரில் இருந்தவனை சமாதானம் செய்து கொண்டிருந்தது.

“நீ எதையும்….” என்று பல்லைக் கடித்தவன், “ஒரு ஹேரும் புடுங்க வேண்டாம்… நான் எப்ப கிளம்பறேனோ, அப்ப நீயும் கிளம்பியாகனும்… சேவையும் ஆத்த வேண்டாம்… சேமியாவும் ஆத்த வேண்டாம்… இவ பெரிய ப்ளக்கர்… இவ புடுங்குனா தான்….” என்று கோபத்தில் சிறு குரலில் அவளுக்கு மட்டுமாக கேட்குமாறு கன்னாபின்னாவென நல்ல நல்ல வார்த்தைகளாக விட, அதிர்ந்து அவனை பார்த்தாள். அவன் இப்படித்தான் பேசுவான் என்பது தெரியும் தான். ஆனால் பொதுவிடம் என்றாவது பார்க்க வேண்டாமா என்ற எண்ணம் தோன்றினாலும், அவனது கோபம் இன்னும் அதிகமாகிவிட்டால் என்ன செய்வது என்று வாயை மூடிக் கொண்டாள்.

“டாக்டர் நீங்க பேஷண்ட்டை எக்சாமைன் பண்ணுங்க…” என்று மருத்துவரிடம் திரும்பிக் கூற,

“விஜய்… உங்களால எந்தளவுக்கு ரீகலெக்ட் பண்ண முடியுது?” என்று அந்த சாரதி கேட்டார்.

“தெரியல…” என்றான் பாவமாக!

“ஓகே… ஒவ்வொரு பேரா சொல்றேன்… உங்களுக்கு நினைவு வருதா பாருங்க… அதோட என்ன பீல் பண்றீங்கன்னு சொல்லுங்க…” என்ற மருத்துவர், ஷ்யாம் எழுதி தந்த அவனது தாய் தந்தை பெயரில் இருந்து ஆரம்பித்தார்.

“மரகதம்…” என்று அவனது முகத்தை பார்க்க,

“ம்ம்ம்… அம்மா…” என்றான் கண்களை மூடிக் கொண்டு!

“அவங்க சமந்தப்பட்ட ஏதாவது நினைவுக்கு வருதா?”

“ம்ஹூம்… அம்மாங்க்றது தெரியுது… ஆனா அதுக்கு மேல….” என்றவன், அவனது தலையை பிடித்துக் கொண்டான்.

“ஓகே ஓகே ரிலாக்ஸ்… ரொம்ப யோசிக்காதீங்க… தெரிஞ்சதை மட்டும் சொல்லுங்க…” என்றவர், “சுவாமிநாதன்?”

“அப்பா…” என்றவன், “அவரை நினைச்சா ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு…” என்றவனை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்.

“அவருக்கு ஹார்ட் அட்டாக்… ரெக்கவராகி வீட்ல ரெஸ்ட்ல இருக்கார்…” என்று மருத்துவரிடம் சிறிய குரலில் கூற, அவர் கேட்டுக் கொண்டார்.

“ஓகே விஜய்… நல்ல ப்ராக்ரஸ்…” என்றவர், “பத்ரி…” என்று கேட்க,

“ம்ம்ம்ம்…” என்று யோசித்தவன், “தம்பி…” என்றான்.

“வெரி குட்…” என்றவர்,

“ஷ்யாம் சாரை ஞாபகம் இருக்கா பாருங்க… கொஞ்சம் ட்ரை பண்ணுங்க…” எனவும், விஜி முகத்தை கசக்கினான். சற்று நேரம் யோசித்து விட்டு,

“அந்த பேரை நினைக்கும் போது கோபம் வருது… என்னவோ என்னையும் மீறின ஒரு உணர்வு… என்னால எக்ஸ்ப்ளைன் பண்ண முடியல…” என்றவனை மெளனமாக பார்த்தாள். அவளுக்கு புரிந்தது. ஒரு மருத்துவ மாணவியாக அவனை புரிந்து கொள்ள முடிந்தது. விஜியை நினைக்கும் போது அவளையும் அறியாமல் குற்ற உணர்ச்சி தோன்றியது.

இதற்கு தான் காரணமே இல்லாமல் காரணமாக்கபட்டுவிட்டதை நினைக்கும் போது மனம் வெகுவாக அழுந்தியது.

“மகாவேங்கடலக்ஷ்மி?” என்று மருத்துவர் கேட்க,

“ம்ம்ம்… இவங்களை தெரியுது… ஆனா மைன்ட் ப்ளான்க்கா இருக்கு… பழகி இருக்கேனான்னு தெரியல… ஆனா ஏதோ ஒரு நல்ல பீல்… என்னன்னு சொல்ல தெரியல…” என்றவனை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்.

இதை எப்படி ஹேண்டில் செய்வது என்று தெரியவில்லை. அவன் நடிக்கிறானா அல்லது உண்மையைத்தான் கூறுகிறானா என்பதும் தெரியவில்லை. அவன் ஒவ்வொரு முறை மகாவை சொந்தத்தோடு பார்க்கும் போதும் அவனது கோபம் எல்லை மீறியது.

“போதும் டாக்டர்…” என்றவன், “மஹா… நீ வெளிய வா…” என்றான், பல்லைக் கடித்துக் கொண்டு!

விஜியின் முகத்தில் சட்டென ஏமாற்றம் பரவியது. அந்த ஏமாற்றம் ஏனென்று அவனுக்கே புரியவில்லை.