VNE47(1)
VNE47(1)
47
விஜியின் இந்த நிலைக்கு காரணம் அவனாக இருக்குமோ என்ற மகாவின் எண்ணம் ஒரு நொடிக்கும் குறைவாகத்தான். ஆனால் அதை உள்வாங்கிக் கொண்டிருந்தான் ஷ்யாம், அவளது பார்வை மாற்றத்தைக் கொண்டு!
‘வெஜ் ஆர் இன்சேன்?’ என்று கேள்வி கேட்ட ஷ்யாமை அவள் நினைத்தாலும், அவன் அவளிடம் உறுதி கொடுத்து இருக்கிறான். இனியும் விஜி விஷயமாக அவளது மனம் நோகும் படி செய்வதில்லை என்று. அதை நினைவுப் படுத்திக் கொண்டாள்.
அவன் பொய்யாக அவளிடம் கூற மாட்டான். ஒன்றை கூறினால் அது அது மட்டும் தான். அதற்கு வேறு ஏதும் அர்த்தமில்லை. அதை தாண்டி செய்வான் என்று தோன்றவில்லை. செய்யவும் முடியாது.
இவளது எண்ணபோக்கு எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் போது மெளனமாக அவன் முன் வந்து நின்றான்.
“என்னை யார்ன்னு தெரியலையா விஜி?” என்று இறுக்கமாக கேட்டவனை கேள்வியாக பார்த்தான். முகத்தில் குழப்பம்.
இல்லையென்று இடம் வலமாக தலையாட்டினான்.
“நடிச்சன்னா கொன்றுவேன் ராஸ்கல்… என்னடா விளையாடுறியா?” என்றவனுக்கு கண் மண் தெரியாத கோபம் வந்தது. ஆனால் விஜியின் முகத்தில் இன்னமும் குழப்பம் போகவில்லை.
மகாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. இந்த நிலையிலும் அவனிடம் எகிறுகிறானே என்ற எரிச்சலில்,
“ஷ்யாம்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அழுத்தமாக அழைக்க, நிமிர்ந்து அவளை பார்த்தவன்,
“இவன் நடிக்கறான் மஹா…” என்றான், முகத்தில் அத்தனை எரிச்சலை காட்டி!
“இருக்கட்டும்… அவன் நடிக்கறதாவே இருக்கட்டும்… எனக்கும் புரியுது… ஆனா உன்னோட கோபத்தை காண்பிக்கற இடம் இது இல்ல… விஜி கண் முழிக்கத்தானே வெய்ட் பண்ணோம்… இனிமே ரிலாக்ஸ்ட்டா போய் வேலைய பாரு… நான் இங்க என்னன்னு பார்த்துக்கறேன்…” என்றவளை விஜி புரியாத பார்வை பார்த்தான். அவனுக்கு நடப்பவை எதுவுமே புரியவில்லை. மயக்கத்திலிருந்து எழும் போது எதுவுமே நினைவில்லை என்பது எத்தனை கொடுமையானது?
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் எழுத்துக்கள் அத்தனையும் ஒரே நேரத்தில் மாயமானதை போல இருந்தது. அதோடு எதிரில் இருப்பவனின் கோபம், அதோடு அவன் அறிந்த ஒரே பெயரான ‘மஹா’ வருத்தம் சூழ்ந்த முகம். அந்த முகம் எதிரில் இருந்தவனை சமாதானம் செய்து கொண்டிருந்தது.
“எதை பார்க்கனும்னாலும் பாரு… வெய்ட் பண்றேன்… ஆனா கிளம்பிடனும்… நைட்டிங்கேல் ஆகற வேலையெல்லாம் வேண்டாம்…”கறாராக கூற, அவள் முறைத்தாள்.
“டாக்டர் நீங்க பேஷண்ட்டை எக்சாமைன் பண்ணுங்க…” என்று மருத்துவரிடம் திரும்பிக் கூற,
“விஜய்… உங்களால எந்தளவுக்கு ரீகலெக்ட் பண்ண முடியுது?” என்று கேட்க,
“தெரியல…” என்றான் பாவமாக!
“ஓகே… ஒவ்வொரு பேரா சொல்றேன்… உங்களுக்கு நினைவு வருதா பாருங்க… அதோட என்ன பீல் பண்றீங்கன்னு சொல்லுங்க…” என்ற மருத்துவர், ஷ்யாம் எழுதி தந்த அவனது தாய் தந்தை பெயரில் இருந்து ஆரம்பித்தார்.
“மரகதம்…” என்று அவனது முகத்தை பார்க்க,
“ம்ம்ம்… அம்மா…” என்றான் கண்களை மூடிக் கொண்டு!
“அவங்க சமந்தப்பட்ட ஏதாவது நினைவுக்கு வருதா?”
“ம்ஹூம்… அம்மாங்க்றது தெரியுது… ஆனா அதுக்கு மேல….” என்றவன், அவனது தலையை பிடித்துக் கொண்டான்.
“ஓகே ஓகே ரிலாக்ஸ்… ரொம்ப யோசிக்காதீங்க… தெரிஞ்சதை மட்டும் சொல்லுங்க…” என்றவர், “சுவாமிநாதன்?”
“அப்பா…” என்றவன், “அவரை நினைச்சா ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு…” என்றவனை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்.
“அவருக்கு ஹார்ட் அட்டாக்… ரெக்கவராகி வீட்ல ரெஸ்ட்ல இருக்கார்…” என்று மருத்துவரிடம் சிறிய குரலில் கூற, அவர் கேட்டுக் கொண்டார்.
“ஓகே விஜய்… நல்ல ப்ராக்ரஸ்…” என்றவர், “பத்ரி…” என்று கேட்க,
“ம்ம்ம்ம்…” என்று யோசித்தவன், “தம்பி…” என்றான்.
“வெரி குட்…” என்றவர்,
“ஷ்யாம் சாரை ஞாபகம் இருக்கா பாருங்க… கொஞ்சம் ட்ரை பண்ணுங்க…” எனவும், விஜி முகத்தை கசக்கினான். சற்று நேரம் யோசித்து விட்டு,
“அந்த பேரை நினைக்கும் போது கோபம் வருது… என்னவோ என்னையும் மீறின ஒரு உணர்வு… என்னால எக்ஸ்ப்ளைன் பண்ண முடியல…” என்றவனை மெளனமாக பார்த்தாள். அவளுக்கு புரிந்தது. ஒரு மருத்துவ மாணவியாக அவனை புரிந்து கொள்ள முடிந்தது. விஜியை நினைக்கும் போது அவளையும் அறியாமல் குற்ற உணர்ச்சி தோன்றியது.
இதற்கு தான் காரணமே இல்லாமல் காரணமாக்கபட்டுவிட்டதை நினைக்கும் போது மனம் வெகுவாக அழுந்தியது.
“மகாவேங்கடலக்ஷ்மி?” என்று மருத்துவர் கேட்க,
“ம்ம்ம்… இவங்களை தெரியுது… ஆனா மைன்ட் ப்ளான்க்கா இருக்கு… பழகி இருக்கேனான்னு தெரியல… ஆனா ஏதோ ஒரு நல்ல பீல்… என்னன்னு சொல்ல தெரியல…” என்றவனை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்.
இதை எப்படி ஹேண்டில் செய்வது என்று தெரியவில்லை. அவன் நடிக்கிறானா அல்லது உண்மையைத்தான் கூறுகிறானா என்பதும் தெரியவில்லை.
“போதும் டாக்டர்…” என்றவன், “மஹா… நீ வெளிய வா…” என்றான், பல்லைக் கடித்துக் கொண்டு!
விஜியின் முகத்தில் சட்டென ஏமாற்றம் பரவியது. அந்த ஏமாற்றம் ஏனென்று அவனுக்கே புரியவில்லை.
“கொஞ்சம் வெய்ட் பண்ணேன் ஷ்யாம்… இந்த கைன்ட் ஆப் மெமரி லாஸ் கொஞ்ச நேரத்துக்கு தான் இருக்கும்ன்னு படிச்சு இருக்கேன்… அதை நேரடியா ட்ரீட் பண்றதை பார்க்க எனக்கொரு சான்ஸ் கிடைச்சு இருக்கு… கொஞ்சம் பொறுத்துக்க, உனக்கு வேலை இருக்குன்னா நீ வேண்ணா கிளம்பு…” எனவும், முகத்தை கல்லைப் போல வைத்துக் கொண்டு,
“சரி இரு…” என்றவன், செல்பேசியில் கார்த்திக்கை அழைத்தபடி வெளியே சென்றான். அவளது படிப்பை காரணம் காட்டும் போது அவனால் மறுத்துப் பேச முடியவில்லை. ஆனால் இது எங்கு சென்று முடியுமென்று தெரியவில்லை. அவன் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் பிரச்சனை. அந்த டாக்குமெண்ட்ஸ் இருக்குமிடத்தை அறியாமல், அதை தான் கைபற்றாமல் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது. அவன் நடிக்கிறான் என்றாலும் பிரச்சனை. மகாவுக்கு அவன் மேல் ஒரு சாப்ட் கார்னர் வந்தாகிவிட்டது. தன்னால் தான் இந்த பிரச்சனை என்று நினைக்குமளவு ஆகி விட்டது. அந்த சாப்ட் கார்னரை அவன் எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்துவான்.
என்ன செய்வது என்று குழப்பமாக இருக்க, அவனது அழுத்தங்களை வெளிவிட அவனுக்கு ஒரு துளை தேவைப்பட்டது. அதனால் தான் வெளியேறினான்.
அவன் வெளியே செல்ல, விஜி, அவனையும் அறியாமல் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டான். அவனிருந்த வரை இனம் புரியாத இறுக்கம் சூழ்ந்து இருந்தது போல இருந்தது. ஆனால் அவனால் அதை என்னவென்று வரையறுத்து கூற முடியவில்லை. பிடித்ததற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்… பிடிக்காமல் போவதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? பிடிக்கவில்லை… அவ்வளவு மட்டுமே!
ஷ்யாம் இருந்தவரை இயல்பாக இருந்தவள், அவன் வெளியேறிய பின் இறுக்கமான முகபாவத்திற்கு மாறினாள்.
“நிஜமாவே உங்களுக்கு எதுவும் ஞாபகம் இல்லையா?” என்று அழுத்தமாக கேட்க, அவன் மெளனமாக அவளை பார்த்திருந்தான்.
“மெமரி லாஸாக சான்ஸ் இருக்கு மேம்…” என்றார் ஆர்த்தோ ஐசியூ சீப். அவள் அவரை விட மிக மிக குறைவான வயது என்றாலும், அவள் இப்போதுதான் மருத்துவம் பயிலும் மாணவி என்றாலும் அவர்கள் அனைவருக்குமே மரியாதைக்குரிய மேம் ஆகியிருந்தாள்.
அவள் தான் எதிர்காலத்தில் மருத்துவமனைக்கு பொறுப்பு என்று ஷ்யாம் கோடிட்டு காட்டி இருந்தான். அதோடு முக்கிய முடிவுகள் ஒவ்வொன்றிலும், அவள் யோசனை சொல்கிறாளோ இல்லையோ, அவளை அமர வைத்தான்.
பயிற்சியை ஆரம்பித்து விட்டிருந்தான். மிசஸ் ஷ்யாமுக்கு அனைத்தையும் சமாளிக்கும் திறன் வேண்டுமே
அந்த அனுபவத்தில் மருத்துவமனையோ, மருத்துவ கல்லூரியோ, அத்தனை பேருக்கும் பரிச்சயமாகி விட்டிருந்தாள் மஹா.
“இருக்கலாம் டாக்டர்… ஆனா இவர் கேஸ்ல எல்லாத்தையுமே டவுட்டாவே பார்க்க வேண்டியிருக்கு…” என்று கூற,
“ம்ம்ம்… ஓகே மேம்… ஏ டூ இசட் எல்லா டெஸ்டும் முடிச்சிடலாம்… எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது…” என்று முடிக்க,
“ஓகே…” என்றவள், விஜியை கேள்வியாய் பார்க்க,
“என்னை உங்களுக்கு பிடிக்காதோ?” வீங்கியிருந்த முகத்தோடு, கை கால்களில் ஆபரேஷன் செய்த கட்டுக்களோடு ஐசியு படுக்கையில் படுத்திருந்த விஜி, மகாவிடம் கேள்வி எழுப்ப,
மெளனமாக அவனை பார்த்தாள். பேசியில் அவளை மிரட்டிய விஜியை மட்டுமே அவள் அறிவாள். ஷ்யாமுடன் இருந்த விஜி அவளது நினைவு பெட்டகத்தில் மெல்லிய புகைப்படலமாய் மாத்திரமே! அப்படி இருக்கும் போது எந்த தைரியத்தில் தன்னை காதலித்ததாக கூறி இவ்வளவு பெரிய வேலைகளை எல்லாம் செய்திருக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை. மலைப்பாக இருந்தது.
ஷ்யாம் தன்னை சென்னைக்கு அழைத்து வந்தபோது கூட இவனுடனும் இளங்கவியுடனும் தான் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அப்போதும் கூட ஒரு வார்த்தை பேசவில்லையே!
இவன் தன்னை காதலித்தான் என்று கூறுவது எப்படி என்றே அவளுக்கு புரியவில்லை.
ஆனால் கார்த்திக் கூறியிருந்தான். ஷ்யாம் தன்னை கஸ்டடி எடுத்தபோது, ரொம்பவுமே தவித்து எப்படியாவது மீட்க வேண்டும் என்று துடித்தது விஜி தான் என்று! அப்படி துடித்தவன், பின் ஏன் தன்னிடம் பேசவே இல்லை?
அத்தனை வருடமாக வேலை செய்த முதலாளிக்கு எதிராக திரும்பி, நெஞ்சை பதற வைக்கும் செயல்களை எல்லாம் செய்து பழி தீர்க்க வேண்டும் என்ற நினைப்பு எதனால் வந்தது?
தான் காதலித்தவளை அவன் எடுத்துக் கொண்டானே என்ற நிலை இப்படி மிருகத்தனமாக செயல்பட வைக்குமா என்ன?
அவளுக்கு என்னவோ அது மட்டும் காரணமில்லை என்று தோன்றியது. இவனுக்கு ஷ்யாமிடம் மிகப்பெரிய வஞ்சமோ, கோபமோ எந்த வகையிலாவது தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் அவனை பழி தீர்க்க முயன்று இருக்க வேண்டும்.
மனம் என்னன்னெவோ எண்ணிக் கொண்டிருக்க, “சொல்லுங்க மஹா…” என்றான் விஜி. அவன் அப்போது அறிந்திருந்த ஒரே பெண் அவள் தான் என்ற நிலையில், அவளது இந்த தவிர்ப்பு அவனை தவிக்க செய்தது. அவள் தன்னை தவிர்க்கக் கூடாது என்று பரிதவிக்க தோன்றியது. சூனியமாக தோன்றிய தோன்றிய உலகத்தை நினைத்தால் அவனுக்கு பயமாக இருந்தது. தனக்கு எந்த நினைவும் வராமல் போய்விடுமோ என்று மனதுக்குள் ஒரு திண்டாட்டம். அப்படி வராமல் போய்விட்டால் தன் நிலை என்ன என்பதை குறித்த திடுக்கிடல். தெரிந்த ஒரே பெண்ணை பற்றுக் கோடாக பற்றிக் கொண்டு அவனது கடந்த காலத்தை அறிந்து கொள்வதை தவிர அவனுக்கு வேறு வழி இல்லையே!
“நான் உங்க கிட்ட நேர்ல பேசினதே இல்லையே…” என்றவளை, புருவத்தை நெரித்துப் பார்த்தான். நேரில் பேசியே இல்லாத பெண் மேல் தனக்கு ஏன் இந்த பிடித்தம் இருக்க வேண்டும்? என்ன வகையான பந்தம் இது?
“நேர்ல பேசினதே இல்லையா?” என்று யோசித்தான். ஆனால் அவளுடைய முகம் அவனது மனது வெகு பிரியமாக இருந்திருக்க வேண்டும். அவளது கவி பேசும் கண்களை அவ்வளவு பிடித்தது.
“ம்ம்ம்… போன்ல மட்டும் தான் பேசி இருக்கீங்க…” என்றவள், அவனுக்கு இஞ்சக்ஷன் கொடுக்க வந்த நர்சிடமிருந்து மருந்தை வாங்கி, அவனது தோளில் வலிக்காமல் போட்டாள்.
“நீங்க டாக்டரா?” என்று அவன் கேட்க,
“ம்ம்ம்… படிச்சுட்டு இருக்கேன்…” என்றவள், அவனது வைட்டல்களை செக் செய்தாள்.
“எப்படி எனக்கு உங்களை தெரியும்?” என்று கேட்டான், காலில் இருந்த வலியை சகித்தபடி! சுரீர் சுரீர் என்று வலித்தது. எலும்பு முறிவல்லவா!
“ஷ்யாம் கிட்ட நீங்க வேலை பார்த்தீங்க…” என்று வெகு இயல்பாக கூறிவிட்டு, அவனது ப்ரெஷரை செக் செய்தாள்.
அவளருகில் வந்த ஆர்த்தோ ஐசியு மருத்துவர், “மேம்… டெஸ்ட்க்கு எழுதிட்டேன்… ரேடியேஷன் டிப்பார்மென்ட்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்க சொல்லி இருந்தேன்… இன்னும் பத்து நிமிஷத்துல அங்க ஷிப்ட் பண்ணனும்… ஈஈஜி, சிடி, எம்ஆர்ஐ. பிரைன் ஆக்டிவிட்டியை டெஸ்ட் பண்ணிடலாம்… அப்புறம் நம்ம சைக்கியாட்ரிஸ்ட் மோகன் சார் அப்பாயின்மென்ட் கேட்க சொல்லிருக்கேன்… அவரும் ஒரு ஒபினியன் கொடுக்கட்டும்… தென் ஆஸ் யூஸ்வல் ஆர்த்தோ சீப் ஷிக்கர் பாண்டே டேக் ஓவர் பண்ணிக்கறேன்னு சொல்லிருக்கார்….” என்று ஒப்பித்தார்.