VNE48(1)

VNE48(1)

48

காஞ்சிபுரத்தில் இருக்கும் அந்த பட்டு ஜவுளி மாளிகையை இரண்டாக்கிக் கொண்டிருந்தாள் மஹா. முகூர்த்த பட்டுப் புடவை மற்றும் அனைத்து வைபவங்களுக்குமான பட்டுப் புடவைகளையும், மற்ற அனைவருக்கும் எடுக்க வேண்டிய புடவைகளையும் எடுப்பதற்காக வந்திருந்தனர்.

பாரம்பரியமான பட்டு மாளிகை அது. புடவைகளை அவர்களே நெய்து நேரடியாக விற்பனை செய்பவர்கள். திருமண பட்டுக்கு பெயர் வாங்கிய இடம். ஷ்யாமின் பாட்டி காலம் முதலே அனைத்து திருமணங்களுக்கும் அங்கு மட்டுமே புடவைகளை எடுப்பார்கள். அதோடு ஜோதி எப்போது சென்னை வந்தாலும், அங்கு பட்டு புடவைகளை பர்சேஸ் செய்யாமல் போக மாட்டார் என்பதால் அவர்கள் நன்கு அறிமுகம். நல்ல மரியாதையும் கூட! முந்தைய தினமே சொல்லி வைத்ததால் உரிமையாளரே வரவேற்று, புடவைகளை காட்டிக் கொண்டிருந்தார்.

பட்டுப்புடவையை எடுத்து, காமாக்ஷி அம்மனிடம் பூஜை செய்தபின் தான் அவர்களுடைய வழக்கத்தில் திருமண சடங்குகள் ஆரம்பமாகும். அதுவொரு தனி வைபவம்.

காலையிலேயே மகாவை அழைத்துக் கொண்டு எல்லோரும் வந்துவிட, ஷ்யாமும் கார்த்தியும் மட்டும் ப்ரொடியுசர் கவுன்சில் மீட்டிங் முடித்து விட்டு வருவதாக கூறியிருந்தனர். முந்தைய தின மீட்டிங் தள்ளி வைக்கப்பட்டு, காலையில் தான் சற்று உரசலோடு முடிந்து இருந்தது.

விநாயகமூர்த்தி தன் பக்கம் சில தயாரிப்பாளர்களை சேர்த்துக் கொண்டு ஷ்யாமுக்கு எதிராக காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். விநாயகமூர்த்தி கவுன்சிலில் வலுவான மனிதர். அதனால் தான் பிரச்சனை என்று வந்த போது அவரை நாடினான் கார்த்திக். அவரோ ஷ்யாம் என்றதும் வாயில் வடை சுட்டு விற்று போய்விட்டார்.

கவுன்சில் மீட்டிங்கே பைனான்சியர்களின் அடக்குமுறையை எப்படி மீறுவது என்பது பற்றித்தான். அதிலும் அந்த மீட்டிங்கே ஷ்யாமை குறி வைத்து தான் என்ற நிலையில் கார்த்திக் ஷ்யாமை அழைத்துக் கொண்டு மீட்டிங்கின் முதல் வரிசையில் அமர்ந்து விட, தயாரிப்பாளர்கள் நெளிந்தனர்.

“தம்பி… கவுன்சில் மீட்டிங்ல மெம்பர்ஸ் மட்டும் தான் கலந்துக்கனும்… அது தெரியாதா?” விநாயகமூர்த்தி துணிந்து கூறிவிட, நிமிர்ந்து அமர்ந்தான் ஷ்யாம். அவர் தன்னைத்தான் தாக்குகிறார் என்பது புரியாதவனா அவன்?

கார்த்திக் என்ன பதில் போகிறான் என்று பார்க்க,

“ஆமா மூர்த்தி சர்… மெம்பர்ஸ் மட்டும் தான்…” என்றவன் சற்று புரியாமல் கேட்டான். அவன் ஷ்யாமை தான் அவர் கூறுகிறார் என்று நினைக்கவே இல்லை.

“மெம்பர்ஸ் இல்லாதவங்களை கவுன்சில் மீட்டிங்ல கூட்டிட்டு வந்தா நாம எப்படி டிஸ்கஸ் பண்றது?” என்று அவர் கேட்க, அந்த ஹாலிலிருந்த அனைவருமே கவனிக்க ஆரம்பித்து இருந்தனர். ஷ்யாமுக்கு ஆதரவானவர்கள் எழுபது சதவிதம் என்றால், அவனது கறாரில் கடுப்பானவர்கள் முப்பது சதவிதம் என்பதால், ஆங்காங்கே முனுமுனுப்பு தோன்றியிருந்தது.

“என்ன சொல்றீங்க? சொல்றதை நேரடியா சொல்லுங்க…” என்று சற்று கறாராக கேட்டான்.

“ஷ்யாம் தம்பி ப்ரொடியுசர் கவுன்சில்ல மெம்பர் கிடையாது கார்த்திக் தம்பி… அவர் ஃபைனான்சியர்…” என்று அவர் விளக்கம் கொடுக்க, ஷ்யாமுக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது. இவர்களுக்கு பணம் தேவைப்படும் போது மட்டும் நம்மை கண்ணுக்கு தெரியும்… இப்போது மெம்பர் இல்லையாமா? என்று எண்ணிக் கொண்டவன், அதை காட்டிக் கொள்ளாமல், இருவரையும் கவனித்தான்.

“ஓ அப்படி சொல்ல வரீங்களா?” என்றவன், சற்று அழுத்தமாக, “ஷ்யாம் எங்க மாப்பிள்ளை… லக்ஷ்மி மூவீஸ்னா அதுல என்னோட சிஸ்டரும் பார்ட்னர் தான்… அப்படி பார்த்தா இனிமே அவங்க சார்பா மாப்பிள்ளை தான் வருவார் மூர்த்தி சர்… போதுமா எக்ஸ்ப்ளனேஷன்…” என்று கட் அன்ட் ரைட்டாக முடிக்க, ஷ்யாம் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

விருது வழங்கும் விழாவில் புளியங்கொம்பை உன்னுடைய தங்கையை வைத்தே பிடித்து விட்டாயா என்று பொருமியவருக்கு சரியான பதிலடி கொடுத்து விட்ட திருப்தியில் புன்னகையோடு அழுத்தமாக கூறியிருந்தான்.

அவன் அப்படி கூறிய பிறகு,

“ஏன் மூர்த்தி… ஷ்யாம் தம்பி கிட்ட பணம் வாங்காதவங்க இங்க யாராவது இருக்காங்களா? பணம் மட்டும் வேணும்… அவர் இங்க உட்கார கூடாதா?” என்று இன்னொருவர் கேட்டு விட, விநாயகமூர்த்தி அதற்கும் மேல் அதைப் பற்றி பேசவில்லை.

இனியும் பேசினால் ரொம்பவுமாய் அவனை பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதை புரிந்து கொண்டவர், வாயை இறுக்கமாக மூடிக் கொண்டார். ஆனால் எதைப்பற்றி பேச வேண்டும் என்று நினைத்தாரோ அதை பற்றி பேசும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

பலதரப்பட்ட பிரச்சனைகளை பேசினார்கள். அனைத்தையும் மெளனமாக அமர்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான். அவ்வப்போது கார்த்திக் தனது கருத்தை கூறினான்.

அதிகரித்து விட்ட தயாரிப்பு செலவுகளை குறைப்பது எப்படி என்பதை பற்றியும், வலைதளங்களில் படங்களை பதிவேற்றுவது பற்றியும் பேச,

“அத்தனை செலவு பண்ணி, எவ்வளவோ கஷ்டப்பட்டு தான் படத்தை எடுத்து முடிக்கறோம்… ஆனா பாருங்க… அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்தை அன்னைக்கே டாரண்ட்ல ரிலீஸ் பண்றாங்க… யாரோட உழைப்பை யார் சுரண்டறதுன்னு வேண்டாமா? எத்தனை டெக்னீஷியன்ஸ், எத்தனை பேர், அவ்வளவு உழைப்பை கொட்றாங்க… ஆனா இவங்க ஒரே நிமிஷத்துல இல்லீகலா செய்துட்டு போறாங்க…” என்று கார்த்திக் கூற,

“நிறைய இடத்துல ஒரிஜினல் ப்ரிண்டே லீக் ஆகுது தம்பி… லேப்ல, டப்பிங்ல இன்னும் ஓவர்சீஸ் ரைட்ஸ் கொடுக்கறோம் இல்லையா… அங்க… இப்படி நிறைய…” என்று இன்னொருவர் குறிப்பிட, விநாயகமூர்த்தியை சேர்ந்தவர்கள் அந்த விவாதத்திலிருந்து தப்பிக்க நினைத்தனர்.

காரணம் என்னவென்றால் அவர்களுக்கு தெரிந்த ஓரிருவர் அது போல திருட்டுத்தனமாக படங்களை பதிவேற்றி சம்பாதிப்பவர்கள். அதில் மூர்த்தி கூட்டு என்றும் கூட ஒரு பேச்சு நிலவியது. ஆனால் யாரும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். பேசவும் விட மாட்டார்கள்.

அத்தனையிலும் சற்று இல்லை அதிகமாகவே அடக்குமுறையை கையாள்வது அந்த தாயாரிப்பாளர்கள் கூட்டணிக்கு கைவந்த கலை.

“இதையெல்லாம் ஒண்ணுமே செய்ய முடியாது தம்பி… எங்காவது ஒரு மூலைல இருந்து இப்படி பண்ணி விடறானுங்க… அவனுங்களை என்ன செய்ய முடியும்?” என்று கேட்க, கார்த்திக் சற்று கோபமாகவே கேட்டான்.

“செய்யனும்ன்னு நினைச்சா செய்யலாம் அங்கிள்… உங்களுக்கு மனசில்லைன்னு சொல்லிட்டு போய்டுங்க…” என்று வார்த்தையை விட,

“என்ன இப்படி பேசறீங்க? நீங்க இப்ப வந்தவங்க தம்பி… உங்களுக்கென்ன தெரியும்? இதுல எவ்வளவு அனுபவம் இருக்கு? முருகானந்தத்துக்கு அத்தனையும் தெரியும்… ஆனா உங்களுக்கு? தெரியாம பேசக் கூடாது…” என்று மூர்த்தியை சேர்ந்த கவுன்சிலின் பெரிய தலை குதிக்க,

“இப்ப வந்தவங்களுக்கு தான் இந்த மாதிரி திருட்டை எல்லாம் எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியும்… நீங்கள்லாம் இன்னும் நாப்பது வருஷம் பின்னாடிதான் யோசிப்பீங்க…” என்று கார்த்திக்கு ஆதரவாக குரலை எழுப்பினார் ஒருவர். மூர்த்தியின் அடக்குமுறைக்களினால் எரிச்சலானவர் அவர்.

அது போன்ற மற்றவர்களும் குரல்களை எழுப்ப, அவர்களால் சமாளிக்க முடியவில்லை.

“சரி சரி… நமக்குள்ள இப்படி பேசிட்டு இருந்தா அவங்களுக்கு தான் லாபம்… நாம சமாதானமா போய்ட்டா நமக்கு நல்லது…” என்று மூர்த்தி சமரசம் செய்ய வந்தார்.

ஆங்காங்கே முனுமுனுப்புகள் எழுந்தாலும் சற்று அடங்கியது.

ஷ்யாம் இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தானே தவிர, வெளியே அவன் பேசவில்லை.

அவன் அன்று மீட்டிங் வந்ததே மூர்த்திக்கு சற்று பயம் காட்டத்தான். விருது வழங்கும் விழாவில் அவர் அப்படி பேசியதை கார்த்திக் எதேச்சையாக தெரிவித்திருந்தான். அதோடு சில விஷயங்களில் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்ற பெயரில் இவனை உரசியும் இருந்தார்கள்.

அதையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு நேரம் பார்த்திருந்தான், திரும்ப அடிக்க!

கவுன்சில் மீட்டிங் என்றதும் அவையெல்லாம் தான் நினைவுக்கு வந்தது. தானும் வருவதாக கூறிவிட்டான். கார்த்திக் இவற்றையெல்லாம் அறிய மாட்டான்.

வந்தவன் கார்த்திக்கை பேசவிட்டு வேடிக்கை மட்டும் பார்த்திருந்தான். பேச வேண்டிய சமயங்களில் அவனுக்கு லேசாக எடுத்து மட்டும் கொடுப்பதோடு தன் பணி முடிந்தது என்பதை போல, முழங்கை வரை ஷர்ட்டை இழுத்து விட்டு, கால் மேல் காலை போட்டபடி அமர்ந்து கொண்டு சிறு புன்னகையோடு நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்தான்.

“சங்கம் சார்பா கலை நிகழ்ச்சி நடத்தலாம்ன்னு இருக்கோம்… துபாய்ல… அதுக்கு யார் யார் என்ன செய்யனும்ன்னு பேசலாம்…” என்று மூர்த்தி ஆரம்பிக்க, ஷ்யாம் அவனது காதில் கிசுகிசுத்தான்.

அதை கேட்டவன், “சர்… கலைநிகழ்ச்சி நடத்தறது நடிகர் சங்கத்தோட தொழில்… அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நாமெல்லாம் ப்ரொடியுசர்ஸ்…” என்று கேட்க,

“கார்த்திக் தம்பி… நம்ம சங்கத்தோட செலவை எப்படி சமாளிக்கறது? அதுக்கு வேற எதாவது வழி இருந்தா சொல்லுங்க…” என்று அவர் கேட்க,

“சங்க நிதின்னு எல்லார் கிட்டயும் கலெக்ட் பண்றீங்க… அப்புறமும் என்னங்க செலவு கணக்கு?”

“உங்களுக்கு தெரியாது தம்பி… நீங்க உட்காருங்க…” என்று சற்று அதட்டலாக அவர் கூற,

“அவருக்கு என்ன தெரியாது மூர்த்தி சர்? கேட்டா பதில் சொல்லுங்க…” என்று இடையிட்டது ஷ்யாம்.

ஹாலே சற்று அமைதியானது!

“இல்ல ஷ்யாம் சர்… சின்னவங்களுக்கு இந்த கணக்கெல்லாம் எப்படி புரியும்?” என்று மழுப்பலாக கவுன்சிலின் இன்னொருவர் கூற,

“ஏன்? அவர் இன்னமும் பீடிங் பாட்டில்ல பால் குடிக்கற குழந்தையா? அவருக்கு என்ன தெரியாதுன்னு இப்படி அடக்க பார்க்கறீங்க?” என்ற ஷ்யாமை அவர் சற்று அச்சத்தோடு தான் பார்த்தார்.

இத்தனை நாள் தன்னிடம் வேலை பார்த்தவனையே நடு ரோட்டில் ஓட விட்டு அடித்தவன் இவன் என்பது அனைவருமே அறிந்த ரகசியம். காரணம் தான் என்னவென்று புரியவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொன்று கூறினாலும், பொருளடக்கம் ஒன்று மட்டும் தான்.

ஹைதராபாத் ஷ்யாம் ஒரு இரக்கமே இல்லாத ராட்சசன் என்பது!

அதனாலேயே அவன் பேச ஆரம்பிக்கவுமே அவர் சற்று மழுப்ப ஆரம்பித்து விட, மூர்த்தியும் இன்னும் சிலரும் சற்று அடங்காமல் தான் பேசிக்கொண்டிருந்தனர்.

“செலவுக் கணக்கு பத்தி பேச இப்ப வந்தவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு தம்பி?” என்று மூர்த்தி கேட்டுவிட,

“ஏன் கேக்க கூடாது? கேட்டா பொறுப்புல இருக்கவங்க பதில் தரனும்… அதை விட்டுட்டு இப்படி பொறுப்பே இல்லாம பேசக் கூடாது மூர்த்தி சர்…” என்று இவர்கள் சார்பாக இன்னொருவர் கூற,

“ஆமா… இந்த வருஷ செலவுக்கணக்கை முதல்ல கொடுங்க… அப்புறமா மத்ததை பற்றி பேசலாம்…” கார்த்திக் தைரியமாக கேட்டு விட, ஆரம்பித்தது சொற்போர்.

இரண்டு சாராரும் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ள, ஒரு வழியாக மிகவும் பெரியவராக தோற்றமளித்தவர் இடையில் வந்தார்.

“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க… பொறுப்புல இருக்கவங்க கண்டிப்பா கணக்கை தாக்கல் பண்ணுவாங்க… நமக்கு பொறுமை தான் தேவை…” எனவும்,

“இப்போதைக்கு கணக்கை கொடுக்க முடியாதுங்க… ஆடிட்டர் இன்னும் பைனலைஸ் பண்ணலை… அவங்க பண்ணதுக்கு அப்புறம் தான் தாக்கல் பண்ண முடியும்…” என்று மூர்த்தி முடிக்க பார்க்க,

“கணக்கை கொடுக்க முடியலைன்னா பதவிய விட்டு விலகிகங்க…” அழுத்தமாக கூறினான் ஷ்யாம்.

மத்தியஸ்த்தம் பேசியவரே சற்று அதிர்ந்தார்.

மூர்த்தி, சங்க ரீதியாக மட்டுமல்ல… அரசியல் ரீதியாகவும் சற்று பலமுள்ளவர்… இத்தனை வருஷமாக தேர்தலே இல்லாமல் சங்க பொறுப்புகளில் இருந்தவர்களை ஒரே நாளில் பதவியை விட்டு விலகு என்று கூறினால் இது ஆகும் காரியமா?

ஆனால் ஷ்யாம் வர நினைத்தது அந்த புள்ளிக்குத்தான்.

தயாரிப்பாளர் சங்கம் தன் கைக்கு வர வேண்டும்… மூர்த்தியை முதலில் பந்தாட வேண்டும் என்பதுதான் அவனது குறிக்கோள். அதை தான் அப்போது அவன் செய்து கொண்டிருந்தான். ஆனால் அத்தனையும் கார்த்திக்கின் பெயரைக் கொண்டு!

“நீங்க அதை சொல்லக் கூடாது தம்பி…” என்றார் மூர்த்தி.

“நான் சொல்றது சரியா தப்பா?” கூட்டத்தில் இருந்த மற்றவர்களை பார்த்து அழுத்தமான குரலில் ஷ்யாம் கேட்க, அவனை எதிர்த்து பேசும் வாய்ப்புள்ளவர்கள் மிகக் குறைவு.

“கண்டிப்பா சரிதான்… நீங்க சொல்றபடி கணக்கை ஒப்படைக்கணும்… இல்லைன்னா ரிசைன் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்… பிரச்சனைகளை சமாளிக்க தெரியாதவங்க பொறுப்புல இருக்கறதை விட உங்களை மாதிரி இளரத்தம் தான் பொறுப்புக்கு வரணும் தம்பி…” என்றார் ஒருவர்.

அவரது குரலை மற்றவர்கள் மீண்டும் ஒலிக்க, கார்த்திக்கு உள்ளுர சிரிப்பு பொங்கியது. ‘அடேய் உலக நடிப்புடா சாமி…’ என்று ஷ்யாமை பார்த்து சிரித்தான்.

“ம்ம்ம்… கண்ட்ரோல் கண்ட்ரோல் மச்சான்…” என்று கிசுகிசுத்தான் ஷ்யாம்.

சிரித்தானே தவிர, உள்ளுக்குள் ஷ்யாமின் ஆகர்ஷணத்தை, ஈர்ப்புவிசையைக் கண்டு மலைத்தான். அவனிருக்கும் இடங்களில் அவனது பேச்சு மட்டுமே எடுபடும் ரகசியத்தை கார்த்திக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“பதவி விலகனுமா? என்ன விளையாடுறீங்களா?” என்று மூர்த்தி பக்கம் குதிக்க, கார்த்திக்கின் சாரார் அதில் நிலையாக நின்று கொண்டனர்.

“சரி… எலெக்ஷன் வைக்கறோம்… ஆனா யார் எங்களை மீறி போட்டியிட முடியும்?” மிரட்டலாக மூர்த்தி கேட்க,

“என் மச்சான் கார்த்திக் எலெக்ஷன்ல நிக்கறார்… என்ன சொல்றீங்க மூர்த்தி?” வெகு அழுத்தமாக ஷ்யாம் கூற, அவர் அதிர்ந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!