VNE48(2)

VNE48(2)

“கணக்கை கொடுக்க முடியலைன்னா பதவிய விட்டு விலகிகங்க…” அழுத்தமாக கூறினான் ஷ்யாம்.

மத்தியஸ்த்தம் பேசியவரே சற்று அதிர்ந்தார்.

மூர்த்தி, சங்க ரீதியாக மட்டுமல்ல… அரசியல் ரீதியாகவும் சற்று பலமுள்ளவர்… இத்தனை வருஷமாக தேர்தலே இல்லாமல் சங்க பொறுப்புகளில் இருந்தவர்களை ஒரே நாளில் பதவியை விட்டு விலகு என்று கூறினால் இது ஆகும் காரியமா?

ஆனால் ஷ்யாம் வர நினைத்தது அந்த புள்ளிக்குத்தான்.

தயாரிப்பாளர் சங்கம் தன் கைக்கு வர வேண்டும்… மூர்த்தியை முதலில் பந்தாட வேண்டும் என்பதுதான் அவனது குறிக்கோள். அதை தான் அப்போது அவன் செய்து கொண்டிருந்தான். ஆனால் அத்தனையும் கார்த்திக்கின் பெயரைக் கொண்டு!

“நீங்க அதை சொல்லக் கூடாது தம்பி…” என்றார் மூர்த்தி.

“வேற யார் சொல்லனும்ன்னு சொல்றீங்க மூர்த்தி?” இறுக்கமாக கேட்டான் ஷ்யாம்.

“இல்… இல்ல… நீங்க சொல்ல வர்ற விஷயம் சரியில்லைன்னு சொல்றேன்… ஒரே நிமிஷத்துல கணக்கு கேட்டா எப்படி?”

“எப்ப கணக்கு கேட்டாலும் தயாரா இருக்கணும்… அப்படி இருந்தா தான் சங்கத்து பொறுப்புல இருக்கணும்…”

“எப்படிங்க அதுக்குள்ளே கணக்கை எல்லாம்…” என்று திணற,

“கணக்கு ஒழுங்கா இருந்தா கொடுக்க வேண்டியதுதானே மூர்த்தி? சரி பண்ணித்தான் கொடுக்கணும்ன்னு நீங்க சொன்னா, என்ன மீன் பண்றீங்க? எதை நீங்க சரி பண்ண போறீங்க? இத்தனை வருஷமா கணக்கே இல்லாம சங்கத்தை நடத்த, இதென்ன உங்க அப்பா வீட்டு சொத்தா?”

வேறு யாராக இருந்தாலும் விநாயகமூர்த்தி இவ்வளவு பேசவே விட மாட்டார். ஆனால் இவனிடம் வேறு வழியில்லை.

‘என்னை லேடீஸ் விஷயத்துல வீக்குன்னா சொல்ற? உனக்கிருக்கு…’ என்று நினைத்துக் கொண்டவன்,

“நான் சொல்றது சரியா தப்பா?” கூட்டத்தில் இருந்த மற்றவர்களை பார்த்து அழுத்தமான குரலில் ஷ்யாம் கேட்க, அவனை எதிர்த்து பேசும் வாய்ப்புள்ளவர்கள் மிகக் குறைவு.

“கண்டிப்பா சரிதான்… நீங்க சொல்றபடி கணக்கை ஒப்படைக்கணும்… இல்லைன்னா ரிசைன் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்… பிரச்சனைகளை சமாளிக்க தெரியாதவங்க பொறுப்புல இருக்கறதை விட உங்களை மாதிரி இளரத்தம் தான் பொறுப்புக்கு வரணும் தம்பி…” என்றார் ஒருவர்.

அவரது குரலை மற்றவர்கள் மீண்டும் ஒலிக்க, கார்த்திக்கு உள்ளுர சிரிப்பு பொங்கியது. ‘அடேய் உலக நடிப்புடா சாமி…’ என்று ஷ்யாமை பார்த்து சிரித்தான்.

“ம்ம்ம்… கண்ட்ரோல் கண்ட்ரோல் மச்சான்…” என்று கிசுகிசுத்தான் ஷ்யாம்.

சிரித்தானே தவிர, உள்ளுக்குள் ஷ்யாமின் ஆகர்ஷணத்தை, ஈர்ப்புவிசையைக் கண்டு மலைத்தான். அவனிருக்கும் இடங்களில் அவனது பேச்சு மட்டுமே எடுபடும் ரகசியத்தை கார்த்திக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் பேச்சு எடுபடாமல், அவன் திணறும் ஒரே இடம் மஹா மட்டும் தான் என்று தெளிவாக புரிந்தது.

“பதவி விலகனுமா? என்ன விளையாடுறீங்களா?” என்று மூர்த்தி பக்கம் குதிக்க, கார்த்திக்கின் சாரார் அதில் நிலையாக நின்று கொண்டனர்.

“சரி… எலெக்ஷன் வைக்கறோம்… ஆனா யார் எங்களை மீறி போட்டியிட முடியும்?” மிரட்டலாக மூர்த்தி கேட்க,

“என் மச்சான் கார்த்திக் எலெக்ஷன்ல நிக்கறார்… என்ன சொல்றீங்க மூர்த்தி?” வெகு அழுத்தமாக ஷ்யாம் கூற, அவர் அதிர்ந்தார்.

நேரடியாக இப்படி மோதுவான் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பேசுவான் விட்டுவிடுவான் என்று தான் நினைத்தார்.

ஆனால் விஷயம் அவரது கையை மீறிக் கொண்டிருந்தது.

வேறு வழியில்லை…

கணக்கை தாக்கல் செய்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அந்த நிலையை தாண்டி விட்டது.

ஒப்புக்கொண்டு தானாக வேண்டும்.

ஆனால் இவர்களை நுழையவும் விடக் கூடாதே என்று யோசித்தார்.

இறுதியாக தேர்தலுக்கு பெருந்தலைகள் ஒப்புக்கொண்டது!

ஒருவழியாக இந்த களேபரங்களை முடித்து விட்டு காஞ்சீபுரத்துக்கு வந்து கொண்டிருந்த போதுதான்,

“ஷ்யாம் மச்சான்… எப்படி இப்படி? நிஜமா அசந்து போயிட்டேன்…” ஷ்யாம் தான் காரை செலுத்திக் கொண்டிருந்தான். கார்த்திக்

“ஏன் மச்சான்? இதுல என்ன அசந்து போக இருக்கு?” என்று அவன் கேட்க,

“ஒவ்வொருத்தனையும் ஆஃப் பண்ண பாரு… ச்சே எனக்கெல்லாம் வரவே வராது… இப்படியே மகாவை ஆஃப் பண்ணேன் மச்சான்?” என்று சிரித்துக் கொண்டே கேலியாக கேட்க, ஷ்யாமுக்கு உண்மையில் சிரிப்பு வந்தது. மகாவையாவது தான் ஆஃப் செய்வதாவது? நடக்கிற காரியமா என்ன?! ஒவ்வொரு தடவையும் கிழித்து தோரணம் கட்டி தொங்க விடுகிறாளே. அதையும் கார்த்தி பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.

“யோவ்… என்னை தலையால தண்ணி குடிக்க வைக்க ஒரு ஆளிருக்குன்னா அது உன்னோட பாசமலர் தான்ய்யா… ஒன்னும் முடியல…” என்று வேடிக்கையாக கூற,

“என்ன மச்சான்… நீயே இப்படி சொல்ற?” என்றவனுக்கு சிரிப்பு மலர்ந்தது.

“பின்ன… இவனுங்களை எல்லாம் ஒரு வார்த்தைல அடக்கிடலாம்… ஆனா அவகிட்ட ஒரு மணி நேரம் தொண்டை தண்ணி வத்த பேசினா கூட அசையவே அசைய மாட்டேங்கறா… அப்படி ஒரு பிடிவாதம் பிடிச்ச கழுதை… கடைசில ஒவ்வொரு தடவையும் நான் தான் கால்ல விழ வேண்டியிருக்கு கார்த்திக் மச்சான்…” என்று சிரிப்போடு விளையாட்டாகவே கூற,

“அடப்பாவி… கால்ல விழறதை இப்படி பெருமையா சொல்லிக்கற ஒரே ஒருத்தன் நீயா தான்ய்யா இருப்ப…” சிரித்தான். காரை செலுத்திக் கொண்டே திரும்பி அவனை பார்த்தவன்,

“சிரிக்கற… நீ என்ன பண்ண போறன்னு நானும் பார்க்கத்தானே போறேன்…” என்று கேலியாக கூற,

“பாரேன்… நான்லாம் தில்லா நிப்பேன் மச்சான்…” என்றவனை,

“பாக்கறேன்… பாக்கறேன்…” என்று சிரித்தவன், குறுக்கே வந்த டூ வீலரை இடிக்காமல் கியரை மாற்றி வேகத்தை குறைத்தவன் லாவகமாக திருப்ப, அதை கவனித்த கார்த்திக், புருவத்தை உயர்த்தினான்.

“எல்லா மேட்டர்லையும் பக்காவா இருக்க… எப்படி விஜி, சௌஜன்யா மேட்டர்ல மட்டும் ஏமாந்த?”

“நம்ம டைம் மச்சான்…” என்றவன், “எல்லாத்தையுமே சமாளிப்பேன்… உன் தங்கச்சியை தவிர… ஆனா மேரேஜுக்கு அப்புறம் எப்படியும் சமாதானம் பண்ணிடலாம்ன்னு ஒரு நம்பிக்கை இருக்கு… பார்க்கலாம்…” என்று நம்பிக்கையுடன் கூற,

“ஏன் மச்சான்… இப்ப சமாளிக்க முடியாதவன் அப்ப மட்டும் எப்படி சமாளிக்க போற?” என்று கார்த்திக் கேட்க,

குறும்பாக சிரித்த ஷ்யாம், “சாஷ்டாங்கமா கால்ல விழுந்துட வேண்டியதுதான்… வேற வழி?!” என்று சிரிக்க,

“அடப்பாவி… சும்மா தான் சொல்றன்னு நினைச்சேன்… நிஜமாவா சொல்ற?” அதிர்ச்சியாக அவனை பார்த்தான் கார்த்திக்.

“கண்டிப்பா… பொண்டாட்டி கால்ல விழுந்தா தான் வேலையாகும்னா விழுந்துட வேண்டியதுதான் கார்த்திக் மச்சான்… என்னோட ஒரே ப்ளான் அதுதான்… இவ கிட்ட பேசி, சண்டை போட்டெல்லாம் வேலைக்கே ஆகாது… நீயும் கத்துக்க மச்சான்… என் தங்கச்சியை நீயும் இப்படித்தான் சமாதானம் பண்ண வேண்டியிருக்கும்…” என்றவனை சற்று பெருமையாக பார்த்தான் கார்த்திக்.

இவனை காட்டிலும் வேறு யார் மஹாவுக்கு பொருத்தமாக அமைந்து விட முடியும்? அவள் கண்ணில் கண்ணீரை கண்டால் அவர்களை அழித்து விடுவேன் என்று இவன் கூறியது எத்தகைய வார்த்தை?! இத்தனை காதலை ஒருவன் வைக்க முடியுமா? அதோடு இந்த புரிதல்? மலைத்தான்!

“யோவ்… போய்யா… எனக்கெல்லாம் இந்த வெ மா சூ சு ல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி… அவ தான் என் கால்ல விழனுமாக்கும்…” என்று காலரை ஏற்றி விட்டவனை பார்த்து சிரித்தான் ஷ்யாம்.

“உன் வெ மா சூ சுவ நானும் தானடா பாக்க போறேன்… எப்படி நீ மண்ணை கவ்வ போற… எப்படி நீ தலையாட்ட போறன்னு…”

“அதெல்லாம் உன்னோட வேலை… நாமெல்லாம் ஆம்பிளை சிங்கம்ல…” என்று பெருமையாக கூறியவனை, புன்னகையோடு பார்த்தவன்,

“யோவ்… நீ இப்படி சொல்லிட்டு இரு… உன் தங்கச்சி என்னை ஆம்பிளை இல்லைன்னே சொல்லிட்டா…” என்று இயல்பாக கூறவும், அதிர்ந்தான். ஒரு ஆண் மட்டுமே அறிவான். அந்த வார்த்தையின் தாக்கத்தை! எந்தவொரு ஆணாலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத வார்த்தை அது. அதிலும் ஷ்யாமை போன்றவனை இந்த வார்த்தை எப்படி தீண்டக் கூடும் என்பதை கூட புரியாதவளா மஹா?

“என்ன மச்சான் சொல்ற?”

“ம்ம்ம்… இப்ப விஜி செயல்பட முடியாத நிலைல இருக்கானாம்… இப்ப அவனை எதாவது பண்ணா நான் ஆம்பிளை இல்லையாம்… என் வருங்கால பொண்டாட்டி ஸ்டேட்மென்ட் கொடுக்கறா…” என்று சற்று இறுக்கமாக கூற, கார்த்திக் சங்கடமாக அவனை பார்த்தான்.

“நீயேன் அவளை விஜியை பார்க்க கூட்டிட்டு வந்த? முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான?”

“சொன்னா அதுக்கும் அதைதான் சொல்வா…”

“மகாவுக்கு ரொம்ப வெய்ட்டேஜ் குடுக்கற…” என்று யோசனையாகக் கூறினான். தங்கையின் செயல்பாடுகளில் அவனுக்கே ஒப்புதலில்லை எனும் போது எப்படி ஆதரிக்க? அதை மிகவும் வெளிப்படையாக ஷ்யாமிடம் கூறவும் மனமில்லை.

திருமணம் என்று முடிவான பின், வருங்கால கணவனுக்கு பிடிக்காதவனிடம் எதற்கு தேவையில்லாத பேச்சுவார்த்தை? எதற்காக அவனை பார்க்க வேண்டும்? இது தேவையற்ற பிரச்சனைக்கு மட்டுமே கொண்டு செல்லாதா? இது தெரியாத சிறு குழந்தையா மஹா?

தங்கை இவனளவு இல்லை என்பது புரிந்தது. அவளிடம் எப்போதுமே ஷ்யாமிடம் தோழமை உண்டு. தோழமையோடு நின்றிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. அவளுக்கு உரியவனை காணக் கூடாத விதத்தில் கண்டத்தில் அதிர்ந்து போயிருக்கிறாள்.

அதைதான் அவனும் கூறினான்.

“வேற யாருக்கு மச்சான் கொடுக்க சொல்ற? மஹா இடத்துல நான் இருந்தா கண்டிப்பா இவ்வளவு பொறுமையா இருக்க முடியாது. அவளால என்னை விட்டுக் கொடுக்கவும் முடியல… அதையெல்லாம் ஜீரணம் பண்ணவும் முடியல… அவளுக்கு நான் டைம் கொடுத்து இருக்கணும்… ஆனா என்னால அந்த டைமை கொடுக்க முடியல… ரொம்ப திணறிட்டு இருக்கா… அது எனக்கும் புரியுது… நான் பேசக் கூடாதுன்னு நினைக்கறேன்… ஆனா அந்த இடத்துல என்னாலையும் கண்ட்ரோல் பண்ண முடியல… ஆம்பிளைங்கற ஈகோ…

ரொம்ப பாவம்டா… என்னை ஹர்ட் பண்ண கூடாதுன்னு தான் நினைப்பா… ஆனா உள்ள இருக்க அந்த ஜீரணமாகாத கோபம் அவளையும் மீறி வெளிய வருது… அந்த கோபத்தோட வெளிப்பாடு தான் அவ சட்டுன்னு பேசிடற வார்த்தைகள்… ஆனா எல்லாத்தையும் மீறி என் மேல டன் டன்னா லவ் வெச்சுருக்கா… அது எனக்கு தெரியும் கார்த்திக்…” என்றவனை இப்போது உண்மையிலேயே ஆச்சரியமாக மரியாதையாக பார்த்தான்.

இதுதான்… இந்த புரிதல் இருந்தால் போதுமே!

லட்டுக் குட்டி கொடுத்து தான் வைத்திருக்கிறாள் என்று தோன்றியது! ஆனால் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டான். இது போல பிருந்தாவின் தந்தை தன்னை பற்றி நினைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அவனையும் அறியாமல் வெட்க முறுவல் மலர்ந்தது.

அதே சிரிப்போடு இருவரும் அந்த பட்டு மாளிகையின் உள்ளே நுழைந்தனர்.

தங்களது கும்பல் தான் கடையை இரண்டாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை கண்களால் காட்டினான் ஷ்யாம். நடுவே புதிதாய் பூத்த பூவென மஹா. பாலசோ, கிராப் டாப்பில் அம்சமாய், அசத்தலாய் அமர்ந்து கொண்டிருக்க, அவள் மேல் ஒவ்வொரு சேலையாக வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. அவர்களோடு போய் அமர்ந்தார்கள் இருவரும். அங்கு அனைவருமே கீழே தான் அமர வேண்டியிருக்கும். மொத்தமாக மெல்லிய வெள்ளை மெத்தை மட்டுமே விரிக்கப் பட்டிருக்கும்.

முருகானந்தமும் ஆத்மநாதனும் கடை உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருக்க, பெண்கள் அனைவருமாக சேலைகளை பதம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவளிடம் மருத்துவமனையில் சண்டையிட்டு இருந்தவன், அதன் பின் பேசாமல் இருந்திருந்தான். அவனுக்கு புரிந்தாலும், பேசினால் மீண்டும் சண்டைதான் வரும் என்பதால் அதை தவிர்த்து இருந்தான். அவன் பேசாததால், அவளும் இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!