VNE49(1)

VNE49(1)

49

“நோ… பக்கத்துல வந்தா நான் என்னை கொன்னுக்குவேன்… எந்த வழியிலாவது… என்கிட்ட வராதீங்க…” விஜி கத்துவது வராண்டா வரை கேட்டது.
திக்கென்றது மகாவுக்கு. அச்சத்தோடு ஷ்யாமை பார்த்தாள். அவன் என்ன சொல்வான் என்று தெரியவில்லை. என்ன நினைக்கிறான் என்பதும் தெரியவில்லை. முஹூர்த்த சேலை எடுக்க, அவ்வளவு மகிழ்ச்சியாக போன இடத்தில் அப்படியொரு போன்கால். தான் சொன்னால் கோபப்படுவான் என்ற எண்ணத்தில் போனை ஷ்யாமிடம் தயங்கிக் கொண்டே கொடுத்து இருந்தாள் மஹா.
“சொல்லுங்க…” என்று இயல்பாக ஆரம்பித்தவனின் முகம் அவர் சொன்ன செய்தியில் கறுத்து மீண்டது.
“இப்ப என்ன பண்ணலாம்ன்னு நினைக்கிறீங்க டாக்டர்?” என்று அவன் கேட்க,
“ரொம்ப வயலன்ட்டா இருக்கு அவர் பிஹேவியர்… கண்ட்ரோல் பண்ண கஷ்டமா இருக்கு பாஸ்…” என்று கூற,
“எதாவது செடேட்டிவ்ஸ் கொடுத்து தூங்க வைக்க மாட்டீங்களா? அதுக்காக போன் பண்ணுவீங்களா?” ஷ்யாம் இறுக்கமாக கூற,
“ட்ரை பண்ணிட்டோம் பாஸ்.. எதுவும் முடியல… பக்கத்துல போகவே முடியல… நர்ஸ் எல்லாம் பயப்படறாங்க…” எனவும் அவனுக்கு துணுக்குற்றது.
“சம்ஹவ் மேனேஜ் பண்ணுங்க மனோஜ்… இதை கூட மேனேஜ் பண்ண தெரியாம இன்டென்சிவ் கேர்ல இருக்கீங்களா?” என்று பல்லைக் கடித்தான்.
“பாஸ்… மேனேஜ் பண்ணலாம்… ஆனா பேஷன்ட் ரொம்ப வயல்ன்ட்டா இருக்கும் போது என்ன பண்றதுன்னு தெரியல… அதுவும் பேஷன்ட் உங்க டைரக்ட் பேஷன்ட்ங்கறதால ரொம்ப பொறுமையா டீல் பண்ணிட்டு இருக்கோம்…” எனவும்,
“நாலு ஆளுங்களை வெச்சு கை காலை கட்டிப் போட்டு ஐவில டயட் இஞ்சக்ட் பண்ணிடுங்க… கூட செடேடிவ் கொடுத்து தூங்க வைங்க… எதுக்கும் சீப் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கங்க…” என்றவன், அதோடு முடிந்தது என்பதை போல வைத்து விட்டான்.
ஆனால் மஹாவால் அதை சுலபமாக கடக்க முடியவில்லை.
சுயநினைவு இல்லாத ஒருவன், அதுவும் சுகவீனமான ஒரு நிலையில் அவளை பார்க்க வேண்டும் என்று நினைப்பதை மனிதத் தன்மையுள்ள ஒரு மனிதியாக தவறாக கருத முடியவில்லை. ஆனால் பெரியவர்கள் அனைவரும் உள்ள நிலையில் ஷ்யாமை எதிர்த்து பேசுவதும் முடியாது.
மனதுக்குள் ஏதோவொரு குமைச்சல். அவளால் அதற்கும் மேல் அங்கு இயல்பாக அமர்ந்து கொண்டிருக்க முடியவில்லை.
ஷ்யாம் அவளது முக மாற்றங்களை பார்வையிட்டுக் கொண்டு தான் இருந்தான். சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது என்று சொல்வார்களே… அது போலத்தான் இருந்தது அவனது நிலை. விஜி விஷயத்தில் அவளை ஹர்ட் செய்ய மாட்டேன் என்று தான் கூறியிருந்தானே தவிர, அவளது நடவடிக்கைகள் அனைத்தையும் ஒப்புக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ அவளிடம் வாக்கு கொடுக்கவில்லை.
அவனுக்கு நினைவே இல்லையென்றாலும் விஜய்யை அவள் பார்ப்பதை ஷ்யாம் விரும்பவே இல்லை. எப்படி இருந்தாலும் அவள் தன்னுடைய நிலையிலிருந்து மாற மாட்டாள் என்றாலும், தான் மட்டுமே கீழறங்கி போக வேண்டும் என்றாலும், அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
அவன் எப்படி போனால் என்ன என்ற நினைவுதான். இத்தனைக்கும் இன்று அவனது பெற்றோரும் வேறு வந்து விட்டதாக தகவல் வந்திருந்தது. வந்தவர்களை பார்த்தவனுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை என்றும் முன்னரே அந்த மருத்துவர் அழைத்துக் கூறியிருந்தார். ஆனால் ஷ்யாமால் அதை நம்ப முடியவில்லை, இப்போதும். அவன் நடிப்பதாக தான் எண்ணிக் கொண்டிருந்தான்.
எதுவும் பேசாமல் மற்றவர்களுக்கான புடவைகளை தேர்ந்தெடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தவன், மெல்ல எழுந்து வெளியே சென்றான். அவன் செல்வதை பார்த்த கார்த்திக், பிருந்தாவிடம் கூறிவிட்டு, அவனை நோக்கி சென்றான்.
கார் பார்க்கிங் போனவன், சிகரெட் ஒன்றை இழுத்துப் பற்ற வைக்க, கார்த்திக் அருகில் வந்தான்.
ஷ்யாம் அவனிடம் சிகரெட்டை நீட்ட, வேண்டாமென மறுத்தான் கார்த்திக். அவனுக்கு எப்போதாவது மது அருந்தும் பழக்கம் உண்டு. ஆனால் சிகரெட் தொட மாட்டான். மதுவும் கூட தினமோ, வார இறுதியோ என்றெல்லாம் இல்லை. தோன்றினால் எப்போதாவது தான்!
“என்ன மச்சான்?” என்று கார்த்திக் கேட்டான். எதுவோ பிரச்சனை என்று புரிந்தது. ஆனால் என்னவென புரியவில்லை.
“ஹாஸ்பிடல்ல விஜி நேத்து நைட்ல இருந்து சாப்பிடலையாம்… கொஞ்சம் டிஸ்ஒரின்ட்டான மாதிரி தெரியுது போல…” என்று நடந்தவைகளை சுருக்கமாக புகையை ஆழ்ந்து இழுத்து விட்டபடி ஷ்யாம் கூற, அவனை வியாகூலமாக பார்த்தான். ஆனால் எதுவும் பேசவில்லை.  
“என்ன கார்த்திக் நினைக்கற?” என்று ஷ்யாம் கேட்க, மெளனமாக அவனை பார்த்தவன்,
“அவனை பத்தி எந்தவொரு டெசிஷனுக்கும் வர முடியல ஷ்யாம்…” என்றவன், “ஆனா மஹாவை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிதான் வெச்சாகணும்… அவளுக்கு அவனை பற்றி தெரியாது… ஆனா நமக்கு தெரியும்ல…” என்று கூற, ஷ்யாம் தலையாட்டினான்.
“ம்ம்ம்… ஆனா அவளுக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன்… விஜி விஷயத்துல அவளை ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பண்ண மாட்டேன்னு…” என்று கூற,
“இது உனக்கு தேவையில்லாத ப்ராமிஸ்… நமக்கு நம்ம லைப் முதல்ல முக்கியம்… அப்புறமா அடுத்தவனுக்கு பார்க்கலாம்…” சற்று கோபமாக கூறினான்.
“நானும் அவ கிட்ட சொல்லிட்டே தான் இருக்கேன் கார்த்திக்… ஆனா அவளுக்கு ஒரு குற்ற உணர்வு ஆல்ரெடி டெவலப்பாகிடுச்சு…”
“இது தேவையில்லாத குற்ற உணர்வு… அவளுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே… நீ செய்ற ஒவ்வொரு விஷயத்துலையும் அவ இந்த மாதிரி தலையிட்டுட்டு இருந்தா சரி வராது ஷ்யாம்… நான் லட்டு கிட்ட பேசறேன்…” என்று நடுநிலையாக கூறினான். அவனைப் பொறுத்தவரை ஷ்யாமை ஏற்றுக் கொண்டபின் தான் நினைத்தது போல தான் அவன் செயல்பட வேண்டும் என்று நினைப்பது தவறு. அது வாழ்க்கை எனும் படகை கவிழ்த்து விட்டுவிடும்.
இத்தனை நாட்களாக அவள் இருந்து ஷ்யாம் ஜீவிக்கவில்லை. அவள் சொல்லி தொழிலை நடத்தவில்லை. அவன் அளவுக்கு அனுபவமும் இல்லை, பரிட்சயமும் இல்லை எனும் போது, அவன் மேல் அளவுக்கு மீறி அவள் ஆதிக்கம் செலுத்த முயல்வதை போல உணர்ந்தான். அதை அவன் கூறவில்லை. என்ன இருந்தாலும் தங்கையை, அவளது எதிர்கால கணவன் என்றாலுமே ஓரளவுக்கு மேல் விட்டுக் கொடுத்து பேசமுடியாது. அது சரி வரவும் வராது.
அதிலும் விஜி மாதிரியான ஒருவன்… அவன் செய்த காரியங்கள்… அதன் பொருட்டு வந்த பிரச்சனைகள் என்று அனைத்தும் கார்த்திக்கின் கண் முன் வலம் வந்தன. இத்தனையையும் அறிந்தும் மஹா இப்படி செயல்படுவது முட்டாள் தனமில்லையா? எதில் மனிதத் தன்மையை காட்டுவது?
இப்போது மனிதத் தன்மையை காட்டி விட்டால் அவளுக்கு சிலை வைத்து விடுவானா விஜி?
சப்போஸ் அவனுக்கு உண்மையில் நினைவு தப்பவில்லை என்றால், இவளை வைத்து ஷ்யாமை அடிக்க நினைத்தால் இவளது பரிதாபம், மற்றவர்களுக்கு பரிகாசமாக போய்விடாதா?
“அதுக்கு எதுக்கு மஹாவுக்கு போன் பண்ணாங்க?” என்று கேட்க,
“இவ வந்தாதான் சாப்பிடுவேன்னு அடம் பண்றானாம்…” என்று கூற,
“கண்டிப்பா அவன் ப்ளான் பண்றான் ஷ்யாம்…” என்றான் கார்த்திக்.
“ம்ம்ம்… நானும் அப்படித்தான் நினைக்கறேன்…” என்று சிகரெட்டை கீழே போட்டு மிதிக்க,
“சிகரெட் வேண்டாமே ஷ்யாம்…” என்றவனை, பார்த்து சிரித்தவன்,
“குறைச்சுட்டேன் கார்த்திக்… விடறது உன் பாசமலர் கைல தான் இருக்கு…” என்று குறும்பாக புன்னகைக்க, கார்த்திக்கும் புன்னகைத்தான்.
இருவருமே ஒன்றாக கடைக்குள் நுழைய, புடவைகள் எடுத்து முடிக்கப்பட்டு பில்லிங்கில் இருந்தது. பில்லை இருவருமாக செட்டில் செய்துவிட்டு, புடவை பர்சேசை முடித்தவர்கள் மதிய உணவுக்காக சரவண பவனுக்குள் நுழைந்தனர்.
அனைவருமாக முன்னால் நுழைய, பிருந்தாவை தேக்கி தன்னோடு அழைத்துக் கொண்டு போனான் கார்த்திக்.
“என்ன திடீர்ன்னு என்னை கண்ணுக்கு தெரியுது?” மனத்தாங்கல் அவளுக்கு!
“ஹேய்… உனக்கு கோபம் கூட வருமா?” என்று சிரித்தான் கார்த்திக்.
“ஆமா… எனக்குத்தான் எந்த பீலிங்க்சும் கிடையாதே…” என்றவள், அங்கிருந்த செடிகளின் இலைகளை பறித்து போட்டபடி வர,
“அதையேன் பிச்சுட்டு இருக்க பிருந்தா?” என்றவன், அவளது கரங்களிலிருந்த இலையை பிடுங்க,
“உங்களை பிச்சு போட முடியல… அந்த கோபத்தை இப்படி ஆத்திக்கறேன்…” என்றவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
“ஏன் மேடம் க்கு இவ்வளவு கோபம்…” என்றவன் ஓரப்பார்வையாக உள்ளே சென்றவர்களை பார்த்துக் கொண்டான். இத்தனை பேச்சும் மெல்ல நடந்தபடிதான்.
அவனை முறைத்தவள், அவனை விடுத்து வேகமாக உள்ளே போக முயல, “பிருந்தா…” என்றழைக்க, வேக நடையிட்டவள் நின்றாள்.
“என்ன?”
“என்னன்னே சொல்லாம இப்படி கோபப்பட்டா என்ன பண்ண?” என்று பாவமாக இவன் கேட்க,
“உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது… தெரிஞ்சுக்கவும் மாட்டீங்க… விடுங்க… நான் இப்படியே இருந்துடறேன்…” என்று சிறிய குரலில் வெடித்தாள்.
அவ்வளவு ஆசையாகத்தான் புடவை எடுக்க வந்தாள். கார்த்திக்குடன் சற்று நேரம் செலவிடலாம் என்ற ஆசை. ஆனால் அவன் வந்ததே லேட். அதோடு குடும்பத்தின் மீது மட்டுமே பார்வையை செலுத்துவேன் என்பதை போல அவன் நின்று கொண்டிருக்க அவளுக்குத்தான் வெறுத்து விட்டது. மஹாவே வலுகட்டாயமாக ‘அண்ணியை பார்’ என்று நாசூக்காய் கூறினாலும் அதையும் காதில் வாங்கிக் கொள்ளாத மரமண்டை என்று மனதுக்குள் திட்டிக் கொண்டாள்.
அவ்வப்போது ஷ்யாம் அவளது காதை கடிப்பதையும் நொடிக்கொரு தரம் மஹா முகம் சிவந்த படி இருப்பதையும் பார்த்தவளுக்கு ஏக்கமாக கூட இருந்தது. பொறாமை இல்லை. கார்த்திக் தன்னிடம் பேச கூட யோசிக்கிறானே என்ற ஏக்கம். அதே ஏக்கத்தோடு அவனை பார்த்தாலும், அதை கண்டுக் கொண்டால் தானே?
பைரவியாக அவளை இழுத்து பேச்சுத் துணைக்கு வைத்துக் கொண்டார், அவளது ஏக்க பார்வையை கணக்கில் கொண்டு. பாவம் இந்த பெண் என்ற நினைப்பு போலும்.
“கார்த்திக்… பிருந்தாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா…” என்று தனியாக நின்று கொண்டிருந்தவனை பைரவி ஊக்க, சரியென்று அவன் தலையாட்டிக் கொண்டிருக்கும் போதே ஷ்யாம் வெளியே போக, அவனோடு இவனும் ஓடி விட்டான்.
எதற்காக தான் இங்கு வரவேண்டும் என்றாகி விட்டது. காதலை உரைக்க தயக்கம். காதலியோடு பேச தயக்கம். காதலை பற்றி பேசவே தயக்கம் என்றிருந்தால் தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பயம் ஒரு மூலையில் உதித்தது.
ஒரு சிலருக்கு காதலை கலாட்டாவாக சொல்ல தெரியும். ஷ்யாமை போல… அவர்கள் தளைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவற்றை பற்றி கவலைப் படாதவர்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு காதலை கவிதையாக மனதுக்குள் பூட்டி வைத்து அழகு பார்க்க தான் தெரியும். கார்த்திக்கை போல. குடும்பம் எனும் தளைக்கு கட்டுப்பட்டவர்கள் அவர்கள்.
இருவரது காதலும் குறைவானது அல்ல… குறைத்து மதிப்பிடக் கூடியதும் அல்ல… ஆனால் இடம் பொருள் ரொம்பவுமே பார்ப்பவன் கார்த்திக். அதை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாதவன் ஷ்யாம். முன்னவன் தென்றல்… பின்னவன் புயல்!
பிருந்தாவுக்கு முன்னமே மனத்தாங்கல் இருந்தது தான், தன்னிடம் பேசுவதில்லை என்று… இப்போது அது இன்னும் அதிகமாகி விட்டிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!