VNE51(1)

VNE51(1)

51

வெகு ஆடம்பரமாக திருமணம் நடந்து முடிந்திருந்தது. அத்தனை மகிழ்ச்சி… அத்தனை குதூகலம்… மூன்று நாட்களை ஒரு திருவிழாவை போல நடத்தி முடித்திருந்தனர் கார்த்திக்கும் ஆத்மநாதனும்! முருகானந்தம் உடல்நிலையை கருத்தில்கொண்டு வேலைகளை செய்யவில்லை. அதற்கு ஈடு செய்வது போல கார்த்திக் சுழன்றடித்து இருந்தான். உடன் பிருந்தாவின் தந்தையும் சேர்ந்து கொள்ள, வீடு களைகட்டி இருந்தது.

அந்த மூன்று நாட்களில் பழையனவற்றை எல்லாம் முற்றிலுமாக மறந்து திருமண வைபவத்தை ஆழ்ந்து அனுபவித்து கொண்டிருந்தாள் என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் எதனோடும் பெரிதாக ஒட்டாமல் தான் இருந்தாள் மஹா. பெரியவர்கள் செய்ய சொன்னதை செய்தாள். உட்கார சொன்னபோது உட்கார்ந்தாள். நில் என்று சொன்னபோது நின்றாள். இவற்றையெல்லாம் வெட்கம் என்று நம்பி அவளை கலாட்டா செய்தது அவளை சுற்றியிருந்த கூட்டம்.

மருத்துமனையில் விஜி ஓரளவு உடல் ரீதியாக தேறி இருந்தான் என்றாலும் மன ரீதியாக அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவளால் அறிய முடியவில்லை. மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே!

இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனைக்கு பைரவியின் எதிர்ப்பையும் மீறி சென்றிருந்தாள்.

“ஹாய் எப்படி இருக்கீங்க?” எப்போதும் போல ஆரம்பித்தவள், அவனது வைட்டல்ஸ் செக் செய்துவிட்டு, அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.

அவனை அறைக்கு மாற்றியிருந்தனர். காயமெல்லாம் ஆறியிருந்தது. ஆனால் காலில் இரண்டு பெரிய எலும்பு முறிவு என்பதால் இன்னமும் நடை சரியாகவில்லை. எலும்பு கூட எப்படியும் இன்னும் இரண்டு வாரமாவது ஆகி விடும் என்பதால் அவனை ரொம்பவும் நடக்க விடவில்லை.

நடக்காமலிருக்கக் கூடாது என்பதால் காலை மற்றும் மாலை இரு வேளையும் பிசியோதெரபிஸ்ட் லேசாக நடக்க வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தான் என்றாலும், அப்போதும் மௌனம் மட்டும் தான்.

அன்று ஷ்யாமை அழைத்துக் கொண்டு வராமல் தனியாகத்தான் வந்திருந்தாள்.

விஜி பேசவில்லை. தலையும் அசைக்கவில்லை. அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. தலை குனிந்தபடியே அமர்ந்திருந்தான்.

“எப்படி இருக்கீங்க?” என்று மீண்டும் கேட்டவளை நிமிர்ந்து பார்த்தவன், லேசாக மட்டும் தலையாட்டினான்.

முற்றிலுமாக மௌனித்து இருந்தான் விஜி. வலித்தால் கூட வாய் திறந்து சொல்லாத நிலையிலிருந்தான். எல்லோரிடமும் அப்படித்தான் என்பது மருத்துவர்கள் கூறும் ஸ்டேட்மெண்ட். தாயும் தம்பியும் வந்தாலும் அவர்களிடமும் அதே முகம் தான். எதுவுமே மாறவில்லை.

அவனையே ஆழ்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ஏதாவது குடிக்க வேணுமா?” என்று கேட்டாள். அதே மௌனம் தான்!

அறைக்கு வந்திருந்த ஜூஸை, தானெடுத்து அவனிடம் கொடுத்தாள். பதில் பேசாமல் வாங்கி அருந்தினான்.

கொடுத்தால் குடிக்கிறான். ஆனால் கேட்பதும் இல்லை. பேசுவதும் இல்லை.

மருத்துவரிடம் கேட்டதற்கு, இதெல்லாமே போஸ்ட் ட்ராமாட்டிக் டிப்ரஷனின் விளைவுகள் என்றார்.

“அப்படீன்னா பழசு நினைவுக்கு வந்திருக்குமா டாக்டர்?”

“அதை கண்டுபிடிக்க முடியல மேம்… ஆனா அவர் இப்ப உடல்ரீதியா நார்மலாகிட்டார். கண்கள் அலைபாயல. டிஸ்ஓரியண்டட்டா பேசலை. மற்ற ஆக்டிவிடீஸ் நார்மலா இருக்கு… இன்னொரு டூ வீக்ஸ்ல நார்மலா நடக்க ஆரம்பிச்சுவார்…” என்று கூற, அதை தான் விஜயிடமும் கூறிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க நார்மலா நடக்க ஆரம்பிச்சுடுவீங்க விஜி…” என்றவளை அப்போதும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

“எனக்கும் ஷ்யாமுக்கும் மேரேஜ்…” என்றவள், அழைப்பிதழை எடுத்து, அவனது பெயரை எழுதினாள்.

“உங்க ஃபுல் நேம் என்ன?” என்று அவனைப் பார்த்து கேட்க, நிமிர்ந்து அவளை பார்த்த கண்களில் என்ன இருந்தது என்று மஹாவால் கணிக்க முடியவில்லை.

“பாவா உங்களை விஜின்னு கூப்பிட்டு தான் பார்த்து இருக்கேன். ஹாஸ்பிடல் ரெக்கார்ட்ஸ்ல விஜய்ன்னு இருக்கு.. வெறும் விஜய்யா இல்ல ஏதாவது கூட இருக்கான்னு கேட்டேன்…” என்று விளக்கமும் கூற, அவளை வெறித்துப் பார்த்தான்.

“விஜயன்… விஜயன் சுவாமிநாதன்…” அவளை பார்த்தபடி அத்தனை நாட்களில் முதல் தடவையாக பேசினான்.

அவளது கண்கள் ஒளிர்ந்தது.

ஆக இவனுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டது… ஏன் அதை காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருக்க வேண்டும்? எப்போது இது நடந்திருக்கக் கூடும்? வேண்டுமென்றே மறைத்து வைத்து இருக்கிறானா? அல்லது பேச சங்கடப்பட்டுக் கொண்டு இருக்கிறானா?

இல்லையென்றால் மீண்டும் எதையாவது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறானா?

அவளுக்கு புரியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது. குணமாகி விட்டான் என்றதும் மனதுக்குள் அழுத்திக் கொண்டிருந்த பாரம் ஏதோ விடுபட்டது போல இருந்தது. ஷ்யாம் இவனை நடத்தியதில் ஏற்பட்ட குற்ற உணர்வு மெல்ல விலகுவது போல உணர்ந்தாள்.

ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் அவனது பெயரை பெயரை எழுதி, பத்திரிக்கையை அவனிடம் கொடுத்தாள். மெளனமாக கையிலிருந்த அழைப்பிதழை வெறித்துப் பார்த்தான்.

வெகு ஆடம்பரமான அழைப்பிதல். சும்மாவா? இரண்டு மொழி சினிமாவை விரல் நுனியில் வைத்துக் கொண்டு ஆட்டிவைத்துக் கொண்டிருக்கும் ராட்சஷனின் திருமணம். இந்திய அளவில் பெயர் சொல்லக் கூடிய நிறுவனம். அத்தனை அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கி தருபவன். அவர்கள் ஒவ்வொருவரின் முதுகெலும்பு! அவனது திருமணம் என்றால் சும்மாவா?!

இன்னும் ஐந்து நாளில் திருமணம் என்பதை பார்த்தவன், என்ன உணர்ந்தான் என்றே தெரியவில்லை. மகாவுடனான உறவு என்பதை இனி நினைத்தும் பார்க்க முடியாத கட்டத்துக்கு எப்போதோ போய்விட்டது. ஆனால் ஷ்யாம்? அவனை நினைக்கும் போதே விஜியின் முகம் இறுகியது.

“ஆல் தி வெரி பெஸ்ட்…” என்றவனை கூர்மையாக பார்த்தாள்.

“மனசுல இருந்து வாழ்த்தனும்… வெறும் மேம்போக்கான வாழ்த்து எனக்கு வேண்டாம்…” அவனை பார்த்தபடியே கூறியவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“நான் விஷ் பண்றது உங்களுக்காக மேம்… உங்களுக்காக மட்டும் தான்… உங்க விஷயத்துல நான் எதையுமே மேம்போக்கா செய்யக் கூடாதுங்கற பாடத்தை எப்பவோ கத்துகிட்டேன்…” மெல்லிய குரலில் கூறினாலும் அழுத்தமாக கூறியவனை சிறு மனத்தாங்கலோடு பார்த்தாள். அதிலும் அவனது ‘மேம்’ என்ற அழைப்பு, அவனது மனம் அவள் விஷயத்தில் தெளிவாகிவிட்டதை உணர்த்த, சிறு புன்னகையோடு அவனைப் பார்த்தாள்.

“உங்களை புரிஞ்சுக்கவே முடியல… ஏன் இவ்வளவு வஞ்சம்? ஏன் இவ்வளவு பெரிய துரோகம்? ஷ்யாம் என்ன பண்ணிட்டார்? இத்தனை நாளா உங்க மேல அவ்வளவு பெரிய நம்பிக்கை வெச்சு இருந்தாரே அதுக்கு நீங்க காட்ற பிரதிபலிப்பு இதுதானா? உங்களை என்னைக்காவது வேலைக்காரரா நடத்தியிருப்பாரா? ஒரு ப்ரென்ட் மாதிரி ட்ரீட் பண்ணவருக்கு நீங்க செஞ்ச பிரதியுபகாரம் என்ன?”

அவளது மனதுக்குள் வைத்தபடி குமைந்த கேள்வியெல்லாம் மூச்சு விடாமல் கேட்க, அவன் மௌனமாய் தலை குனிந்தான். அவள் ஷ்யாமை வறுத்தெடுப்பாள். ஆனால் வேறு யாரும் அதை செய்ய விட முடிவதில்லை. இப்போதுமே அவன் மேல் இருக்கும் கோபம் எல்லாம் மாறவில்லை. ஆனால் விஜியை கேள்வி கேட்காமலும் இருக்க முடியவில்லை.

“ரீசன் நீங்கதான்…” தலைகுனிந்தபடியே கூற, அவளது முகத்தில் கோபம் தெறித்தது. அவனது அந்த வார்த்தைகள் அவளை கொதிக்க செய்தது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு ‘நீதான்’ என்றால் தான் ஒப்புக்கொள்ள வேண்டுமா? ஷ்யாமிடம் வேண்டுமானால் அவன் இப்படி பேசி அவனை எரிச்சல்படுத்த முயலலாம். ஆனால் தன்னிடம் அந்த வேலையை காட்டக் கூடாதே. அதுவரை அவன் மேல் இருந்த பெரிய பரிதாபம் எல்லாம் காணாமல் போனது.

“பொய் சொல்றீங்க… நான் தான் ரீசன்ன்னா அந்த வீடியோஸ் எப்படி வந்தது? போட்டோஸ் எப்படி வந்தது? எப்ப எடுத்தீங்க? கண்டிப்பா அது எனக்கு நீங்க ரெண்டு பேருமே அறிமுகமாகறதுக்கு முன்னாடி எடுக்கப்பட்டதா தான் இருக்கணும்… அப்ப என் மேல உங்களுக்கு என்னங்க அட்ராக்ஷன் இருந்துது? பொய்ய திரும்ப திரும்ப சொன்னா அது உண்மையாகிடாது…” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள். அத்தனையும் அவள் மனதுக்குள் வைத்துக்கொண்டு, கோபத்தையும் தேக்கி வைத்துக் கொண்டுதான் இருந்தாள்.

“ஆனா அந்த போட்டோஸ் எல்லாம் உண்மைதானே மேம்?” சிறு குரலில் விஜி கூறியதை கேட்டவளுக்கு இன்னுமே கோபம் வந்தது. இவன் திருந்த மாட்டானா என்ற எரிச்சல்.

“அது உண்மையோ பொய்யோ? அவரோட பர்சனல் உங்களுக்கு எதுக்கு? அதுவும் அதை டாக்குமென்ட் பண்ற அளவுக்கு ஏன் போகணும்? அவரை பத்தி நான் தான் கவலைப்படணும்… என் பேரை வெச்சு பொய் சொல்லாதீங்கன்னு சொல்றேன்…” கொஞ்சமும் தயங்காமல் முகத்துக்கு நேராக அவள் கூறிய வார்த்தைகளை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது முக மாறுதலே தெரிவித்தது.

“நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல மேம்… அப்படிப்பட்ட ஒருத்தர் உங்களுக்கு தேவையான்னு தான் அப்ப யோசிச்சேன்…” உண்மையில் அவனது எண்ணமும் முதலில் அதுவாகத்தான் இருந்தது. ‘மஹா’ போன்ற பெண்ணுக்கு ஷ்யாம் தேவையா? என்ற எண்ணம்! அவனை போன்ற ஸ்த்ரீலோலனுக்கு இப்படிப்பட்ட ஒழுக்கமான பெண் தேவையா என்று தான் நினைத்தான். ஆனால் அவனுமே அப்படித்தான் என்பதை மறந்து போயிருந்தான்.

“அதை நான் தான் டிஸைட் பண்ணனும்… நீங்க இல்ல விஜி… பாழுங்கிணத்துல விழறதுன்ன்னு கூட நான் டிஸைட் பண்ணிட்டா, நான் விழுவேன்… அதை பற்றி நீங்க கவலைப்பட தேவையில்லை… அது என் இஷ்டம்…” அவளது பிடிவாதத்தின் முழு சொருபத்தினை கண்டவன் மலைத்தான். இந்தளவுக்கு இந்த பெண் பேசுமா என்ற ஆச்சரியம் வேறு!

“நீங்க நல்லா இருக்கனும்ன்னு நினைச்சேன்…” எங்கோ பார்த்துக் கொண்டு அவன் கூற,

“இப்ப நான் என்ன நாசமா போயிட்டேனா? ரொம்ப நல்லா இருக்கேனே…” வெகு தீர்க்கமான வார்த்தைகள்… உண்மைதானே!

“ஆனா அத்தனை போட்டோசையும் பார்த்துட்டு எப்படி மேம் உங்களால தில்லா நிற்க முடியுது?” ஆதங்கமாக அவன் கேட்க, அவனை உறுத்து பார்த்தவள்,

“மத்தவங்களுக்கு எப்படியோ, என்னை பொறுத்தவரை அவர் நேர்மையானவர்… எனக்கு உண்மையா இருக்காங்க, இனிமேலும் இருப்பாங்க… ஆமான்னா ஆமான்னு தான் சொல்லுவாங்க… மறைச்சு வெச்சு இல்லைன்னு சொல்லவே மாட்டாங்க… ஆனா இதையெல்லாம் நான் யார்கிட்டவும் விளக்க வேண்டிய அவசியம் இல்ல…”

யாரிடம் விளக்க வேண்டும். இது குறித்தான விளக்கத்தை கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது? ஷ்யாமை பற்றி தான் அறியாமலா திருமணம் வரை சம்மதித்து இருக்கிறோம் என்ற எரிச்சல் வேறு. ஆனால் உள்ளுக்குள் ஷ்யாமின் மீதான கோபம் கொஞ்சமும் குறையவில்லை. இப்படியெல்லாம் தன்னை விளக்கம் கூறுமளவு வைத்து விட்டானே அவனது செயல்களால் என்ற எரிச்சல்! எதற்ககெல்லாம் சப்போர்ட் செய்ய வேண்டியிருக்கிறது என்ற கோபம். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டாள். விட்டுக் கொடுக்க மாட்டாள். ஆனால் இப்போது அவன் சிக்கினால் சிக்கன் 65 போடும் வெப்பத்தில் இருந்ததை விஜி அறியவில்லை.

“அப்படீன்னா எப்படி இருந்தாலும் நீங்க அக்செப்ட் பண்ணிடுவீங்க… இல்லையா?” என்றதும் எரிச்சலின் உச்சிக்கு போனாள். இவன் என்ன சொல்வது இதை என்ற எரிச்சல்!

“அக்செப்ட் பண்றேன் பண்ணலைங்கறது என்னோட முடிவு… அதை பற்றி மத்தவங்க எதுக்கு கவலைப்படணும்?” என்று முகத்தை சுருக்கியவள், “ஆனா அந்த மியுசிக் கான்செர்ட்க்கு முன்னாடி இருந்த ஷ்யாம் வேற, இப்ப இருக்க ஷ்யாம் வேற… ஹீ இஸ் ட்ரூலி கமிட்டெட்… மத்தவங்க மாதிரி கிடையாது…”

“அதை எப்படி அவ்வளவு ஷ்யுரா சொல்றீங்க?”

“ஏன்னா அது எங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் … அதுக்கு விளக்கம் கொடுக்க முடியாது… மோர் பர்சனல்…” என்று அவனை தள்ளி நிறுத்த, அவனது முகம் இறுகியது.

அவனது கண்களில் தான் ஆழ்ந்து போனதையும், அவன் தன்னுடைய குரலில் கரைந்து போனதையும் யாரிடம் சொல்ல தேவை இருக்கிறது? அது தன்னுடைய மனதுக்கும் ஷ்யாமுக்கும் மட்டுமேயான, இருவருக்கு மட்டும் உரிமையான தனிப்பட்ட உணர்வல்லவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!