VNE60(1)

VNE60(1)

60

சிலையாக அமர்ந்திருந்தவனை பார்த்த மற்றவர்களுக்கும் என்னவாயிற்றோ என்ற பதட்டம் சூழவாரம்பித்தது. ஒவ்வொருவருக்குள்ளும் பதட்டம். என்ன என்று சொல்ல முடியாத இறுக்கம்.

“என்ன ஷ்யாம்? யார் கால் பண்ணது?” அருகிலிருந்த கார்த்திக் அவனை உலுக்க, அவனால் பேச முடியவில்லை. உணர்வற்று அமர்ந்திருந்தான். என்ன சொல்வது என்றோ… என்ன பேசுவது என்றோ கூட தோன்றவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவனை அவனே மறந்த நிலையில் அமர்ந்திருந்தான்.

ஷ்யாமின் அதிர்ந்த முகத்தை பார்த்த கார்த்திக்கு இன்னும் பதட்டமானது.

பார்த்துக் கொண்டிருந்த முருகானந்தம், “சொல்லுங்க மாப்ள… என்னாச்சு?” என்று பதறிப் போய் கேட்க, அவன் பதில் சொல்லும் நிலையில் இருந்தால் தானே?

மற்ற யாராக இருந்தாலும் அவனது அறிவு செயல்படும். வந்த செய்தியின் உண்மை தன்மையை மனம் ஆராயக் கூடும். ஆனால் மனைவியின் விஷயத்தில் அவனது அறிவு எந்த விதத்திலும் செயல்படவில்லை.

“நானா…” நாதன் ஷ்யாமை உலுக்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அழைக்க, லேசாக ஸ்மரணையடைந்தவன், தலையை பிடித்தவாறு குனிந்துக் கொண்டான்.

‘கண்டிப்பா இருக்காது… இல்ல… அது மஹா இல்ல…’ மனம் உருப் போட்டுக் கொண்டிருந்தது.

“ஷ்யாம்…” கார்த்திக் இன்னும் கொஞ்சம் உலுக்க, நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் அத்தனை ரத்த சிவப்பாய்! உணர்வுகளை அடக்கிக் கொண்டு, உடையாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள பெரிதும் முயன்று கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான் கார்த்தி.

“என்னாச்சு மச்சான்?” என்று கேட்க,

“கி… கிண்டி… ஸ்டேஷன் பக்கத்துல… ஒரு ஆக்சிடென்ட்டாம்… அது ம… மகா… மாதிரி…” என்று நடுங்கியபடி, திக்கித் திணறிக் கொண்டு கூற, பைரவி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துக் கொண்டார். ஜோதியும் நாதனும் அதிர்ந்து பார்க்க, முருகானந்ததிற்கோ நெஞ்சின் ஓரத்தில் ஒரு சிறு புள்ளியாய் வலி!

அதிர்ந்து பார்த்த கார்த்திக், தன்னை சுதாரித்துக் கொண்டு,

“அது வேற யாரோவா இருக்கும் மச்சான்… வா போய் பார்த்துடலாம்…” என்றழைக்க,

ஷ்யாம் நடுக்கத்தோடு, இடம் வலமாக தலையாட்டினான்.

“இல்ல… நான் வரமாட்டேன்…”

“ஒரு எட்டு போய் பார்த்துடலாம்… கிளம்பு…” ஷ்யாமின் பயம் புரிந்தது. ஆனால் அப்படியேவும் இருக்க முடியாதே! போய் பார்த்தால்தானே தெரியும், அது மஹாவா என்று. அவனை பொறுத்தவரை மஹா ஒன்றும் அவ்வளவு கோழையல்ல. ஷ்யாமின் கஸ்டடியில் இருக்கும் போது கார்த்திக் தான் உடைந்து அழுதானே தவிர, அத்தனை தைரியமாக இருந்தவள் அவள். அவளாவது மனமுடைந்து ரயில் முன் பாய்வதாவது? தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டவன்,

“மச்சான், உன் பொண்டாட்டி உலகமே அழிஞ்சாலும் நான் பாணி பூரி சாப்பிட்டிட்டு வரேன்னு சொல்ற ஆளு… அது போய்…” என்றவன், “கிளம்பு மச்சான்… போய் பார்த்துட்டு வந்துடலாம்…” எனவும், கொஞ்சம் அவனது இறுக்கம் தளர்ந்தாலும், அவனால் அந்த காரியத்தை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. அவளா என்று பார்த்து ருசுப்படுத்துவதே அவனைப் பொறுத்தவரை ஆயிரம் முறை இறந்து பிழைப்பதற்கு சமமாக தோன்றியது.

“முடியாதுடா… என்னால வரவே முடியாது…” பிடிவாதமாக அவன் மறுத்துக் கூறினான், நடுக்கத்தோடு.

அவனுக்கு அருகில் அமர்ந்த ஜோதி, “என்ன நானா… இப்படி பிடிவாதம் பிடிக்கற? சொன்னதுக்காக போய் பார்த்து இல்லைன்னு சொல்லிட்டு வந்துடு…” என்று அவனது தலையை தடவிக் கொடுத்தபடியே கூற, முழுவதுமாக உடைந்து விட்டிருந்தான் ஷ்யாம், சுற்றிலும் எல்லாரும் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து.

அவனது உயரம் மறந்து, அவனது பிம்பம் மறந்து, தாயின் கையை பற்றிக்கொண்டு, “எனக்கு பயம்மா இருக்கு ம்மீ… நான் போ மாட்டேன்…” என்றவனுக்கு அந்த வார்த்தைகளை வெளியே எடுக்கவே சிரமமாக இருந்தது.

கண்களில் கண்ணீர் சூழ்ந்திருந்தது. அதை யாருக்கும் காட்ட விருப்பமில்லாமல் தாயின் கைகளில் முகத்தை புதைத்திருந்தான். கைகளில் ஈரத்தை உணர்ந்த ஜோதி, திடுக்கிட்டு,

“நானா… என்ன இது? ஊருக்கே தைரியம் சொல்றவன் நீ? இப்படியா? ஸ்டே ஸ்ட்ராங் கண்ணா… மஹாவுக்கு ஒன்னுமாகி இருக்காது…” என்றவர், “சரி… நீ போக வேண்டாம்… நானும் நானாவும் போயிட்டு வரோம்…” என்றவர், கண்ணீருடன் கலங்கி நின்றிருந்த கார்த்திக்கை பார்த்து, “காரை எடு கார்த்திக்… நாம போயிட்டு வந்துடலாம்…” என்று கூற, கார்த்திக் ஷ்யாமை பார்த்தான். இன்னமும் அவன் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை.

முருகானந்தம் நெஞ்சை பிடித்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தார். பைரவி எதுவும் பேசாமல் ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

“பெரியம்மா… நானும் கூட வரேன்… நாமளே போய் பார்த்துட்டு வந்துடலாம்… அண்ணா ரொம்ப இமொஷனலா இருக்காங்க…” என்று பிருந்தா கூற, நிமிர்ந்து பார்த்தவன்,

“இல்ல… நீங்க எல்லாரும் இங்கயே இருங்க… நானும் கார்த்திக்கும் பார்த்துட்டு வர்றோம்…” என்று எழுந்து கொண்டான். அவனது நடுக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

யார் சொன்னது அவன் இரக்கமற்ற இரும்பென?

யார் சொன்னது அவன் ராட்சசன் என?

அந்த இரும்பை வளைக்கும் ஒரே நெருப்பு, அவனது மனைவி மஹாவேங்கடலக்ஷ்மி மட்டுமே!

அந்த ராட்சசன் பயம் என்பதை அறிந்ததும், அவனது மனைவி மஹாவேங்கடலக்ஷ்மியால் மட்டுமே!

எதுவும் பேசாமல் காரை எடுத்தான் கார்த்திக். இறுக்கமாகவே தான் வந்தான் ஷ்யாம். கார்த்திக்கிடம் எதுவும் பேசாமல்!

தலகுப்பாவில் அவளோடு தான் பேசியதெல்லாம் அவ்வப்போது மனதுக்குள் ரீவைண்ட் ஆகிக் கொண்டிருந்தது.

அவள் கொடுத்த சாபம், அவனுக்கானதா? இல்லை அவளுக்கானதா?

‘உலக அழகிங்க எல்லாம் என் காலடில இருக்காங்க… நீ எம்மாத்திரம் மிர்ச்சி?’ என்று தான் அத்தனை அகங்காரமாக கேட்டது இப்போதும் காதில் ஒலித்தது.

அவள் ஒருத்திக்காக இத்தனை தவிப்பை அனுபவிப்போம் என தெரிந்திருந்தால் அந்த பேச்சையெல்லாம் குறைத்து இருக்கலாமோ? ஆனால் அத்தனையும் தாண்டி, அவன் மேல் அத்தனை காதலை வைத்திருந்தாளே, தன்னுடைய, தனக்கேயான அந்த மஹா எங்கே?

அவளை தொலைத்துவிட்டு புலம்பிக் கொண்டிருந்தான் அவன்!

‘ஒரு நாள் நீ கண்டிப்பா ஃபீல் பண்ணுவ… இன்னைக்கு நீ ஆணவத்தோட, உன்னோட பணபலத்தால உலகமே உன்னோட காலடில இருக்கறதா நினைக்கலாம்… அப்படியும் இருக்கலாம்… ஆனா ஒரு நாள்…. ஒரு நாள்…. ஃபீல் பண்ணுவ… அன்னைக்கு இந்த உலகமே உனக்கு வெறுத்துப் போகும்… ஏன் நாம உயிரோட இருக்கறோம்ன்னு உன்னை நீயே வெறுக்கற சூழ்நிலை வரும்… பொண்ணுங்களை இவ்வளவு கேவலமா நினைக்கற நீயே உன்னோட குப்பையான கொள்கைகளை மாத்திக்குவ… உண்மையான அன்புக்காகவும் பாசத்துக்காகவும் ஏங்குவ… அப்ப உன்னை விட்டு எல்லாமே போயிருக்கும்….”

உண்மையில் இந்த வாழ்க்கை அந்த நொடி மிக மிக வெறுத்துப் போனது. அவள் இல்லையென்றால் என்னவாகுவோம் என்பதை கற்பனை கூட செய்ய முடியாத நிலையிலிருந்தான் ஷ்யாம். உடனிருந்த போது கூட அவளது தேவையை அவனால் உணர முடியவில்லை.

‘ஓகே… நீ இருந்தா நான் நல்லா இருக்கேன் குல்பி…’ என்ற அளவில் தான் அவனது எண்ணம் இருந்தது. ஆனால் அவள் இல்லை என்ற இந்த நேரத்தில் தான் அவளது தேவையை அவன் மிக பயங்கரமாக உணர்ந்தான். அவள் அவனுக்குள் விஸ்வரூபம் எடுத்திருந்தாள்.

இத்தனை நாட்களில் அவளை காதலிப்பதாக உணர்ந்திருந்தானே தவிர, இவ்வளவு தீவிரமாக அவளுக்குள் ஆழ்ந்து போயிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான்.

அவள் உயிரோடும் உணர்வோடும் கலந்து விட்டிருப்பதை உணர்ந்தவனால் அவளில்லாமல் இந்த உலகத்தில் ஜீவிக்க முடியும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இன்னொருத்தி ப்ளஸ் இன்னொருத்தி என்ற அந்த கணக்கீடுகள் எல்லாம் முழுவதுமாக உடைந்து சுக்கு நூறாகி இருந்து கொண்டிருந்தது.

‘வாரண்டி கேரன்ட்டி தந்துட்டு தான் லவ் பண்ண முடியுமா மிர்ச்சி? உன்கிட்ட அந்த கேரன்ட்டிய நான் இப்ப போலித்தனமா கொடுக்கலாம். ஆனா இன்னொரு ரெண்டு வருஷம் கழிச்சு உனக்கோ எனக்கோ சலிச்சு போச்சுன்னா, அதையும் கிரேஸ்புல்லா ஏத்துகிட்டு பிரியறது தான் அழகு. அதை விட்டுட்டு ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லிட்டு லைப் முழுக்க ஒரு போலியா வாழ முடியாதுன்னு சொல்றது தப்பா?’

‘ஆனா அந்த கேரன்ட்டி கூட இல்லாம உன்னால எப்படி லவ் பண்ண முடியும்? என்னை பொறுத்தவரைக்கும் லவ் வேற லஸ்ட் வேறல்ல… ரெண்டுமே ஒருத்தர் கிட்ட மட்டும் தான் பீல் பண்ண முடியும்ன்னு நினைக்கறேன்… ஆனா உன்னோட டெஃபனிஷன் வேற இல்லையா? லஸ்ட் வேற லவ் வேறன்னு சொல்ற அளவு உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு… அதை ஒரு தோழியா என்னால ஏத்துக்க முடியும்… உன்னை பெருமையா நினைக்க முடியும்… ஆனா ஒரு காதலியா மனைவியா எப்படி என்னால ஏத்துக்க முடியும்? அதை நினைச்சு பார்த்தியா?’

முதன் முதலாக இதழ் முத்தத்தை பரிமாறிக் கொண்ட அந்த தினத்தில் அவன் அவளிடம் கூறியதும் அவள் அதற்கு கொடுத்த மறுமொழியும், அவனிடம் கேட்ட கேள்வியும் நினைவுக்கு வந்தது. தன்னையுமறியாமல் தலையிலடித்துக் கொண்டான்.

‘இப்ப நான் அந்த கேரண்டியை கொடுக்கறேன் மஹா. உன்னோட வாழ்ந்து உன்னோடவே சாகனும். நான் மாறிட்டேன். எப்பவோ மாறிட்டேன். உனக்காக முழுசா மாத்திக்கிட்டவனை நீ நம்பவே இல்லையே? ஒரே ரூம்ல இருந்து இருந்தா கூட நீ என்னை நம்பி இருக்கணுமே மஹா? எப்படி நீ என்னை சந்தேகப்பட்ட? இத்தனை நாள் என்னை உனக்கு புரியவே வைக்கலையா? நான் தப்பு பண்ணிட்டேனா? உனக்காக ஸ்பேஸ் கொடுக்கறேன்னு சொல்லி நானே என்னை ஏமாத்திகிட்டேனா? இன்டிமசி இருந்து இருந்தா இந்த சந்தேகம் வந்து இருக்குமா? அப்பவும் சந்தேகம் வந்திருந்தா?’

மனதுக்குள் எவ்வளவோ புலம்பல்கள். ஆனால் வெளிக் காட்டாமல் மெளனமாக அமர்ந்திருந்தான்.

காரை செலுத்திக் கொண்டிருந்த கார்த்திக் ஷ்யாமை பாவமாக பார்த்தான்.

இத்தனை காதலை, நேசத்தை அவனே எதிர்பார்க்கவில்லை. இந்தளவு உயிராய் இருப்பவனை மகாவால் எப்படி சந்தேகப்பட முடிந்தது? இறந்த காலம் என்பது ஒவ்வொருவருக்கும் இருப்பதுதான். ஒரு சிலருக்கு ரோஜாக்களால்… ஒரு சிலருக்கு முட்களால்… அதை சரி தவறு என்பதை விட, அதை மறந்து விட்டு வாழ முயல்வது தான் வாழ்க்கை. நிமிர்ந்து நிற்கும் மூங்கில் தான் முதலில் வெட்டுப்படும் அல்லவா… வளைந்த மூங்கிலை யாரும் வெட்டுவதில்லை.

இருவரின் திருமணத்தின் வரையும் கூட கார்த்திக்கின் மனதில் குழப்பம் இருந்து கொண்டிருந்தது. ஷ்யாமை பற்றிய கணக்கீடுகள் எப்போதும் குறைவாகத்தான் இருந்து இருக்கிறது. ஆனால் இப்போது உணர்ந்தான். இவனைக் காட்டிலும் மகாவை வேறு யார் அதிகபட்சமாக காதலித்து விட முடியும்? இப்படி ஒருவனின் நேசத்தை புரிந்து கொள்ளாமல் சென்ற தங்கை மீது அத்தனை கோபமாக இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!