சூரியநிலவு 1
சூரியநிலவு 1
அத்தியாயம் 1
மஹாலக்ஷ்மி ரிசார்ட்
அதிகாலை மணி மூன்று:
தூங்காநகரமான மதுரையின் அருகில், பரவை என்னும் ஊரில், மஹாலக்ஷ்மி ரிஸார்ட்டில் உள்ள அந்த ஹால், காலையில் நடைப்பெற போகும் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக களைகட்ட தொடங்கிருந்தது. இன்று மதுரையில் பேர் சொல்லக்கூடிய முக்கிய பிரமுகர் வீட்டு விசேஷம்.
ராஜாராம், பெயரை போலவே செல்வத்திலும் ராஜா. அவரின் இளவரசன், ஒரே மகனின் திருமணம், கேட்கவா வேண்டும்! மண்டபம் மிக சிறப்பாக தயாராவதிலே தெரிந்தது.
ராஜாராமின் நெருங்கிய நண்பர், சுந்தரேசனின் மூத்த பெண் தான் மணமகள். பெற்றோர்களின் நீண்ட நாள் ஆசை (ஆசை என்பதைவிட கனவு என்பது மிக சரியாக இருக்கும்) நிறைவேற போகிறது. அவர்களின் மகிழ்ச்சி, அங்கு நடந்து கொண்டிருக்கும், சிறப்பான மேடை அலங்காரத்தில் தெரிகிறது.
வெற்றிசெல்வன்
வெட்ஸ்
மதுநிலா
என்று பொறிக்கப்பட்ட வாசகத்தை, ஒரு ஜோடி விழிகள், கண் கலங்க பார்த்து விட்டு, யாரும் அறியும் முன் அதை மறைத்து, தன் அறையில் தஞ்சம் ஆனது.
அதிகாலை மணி ஐந்து:
சுந்தரேசன் கோவத்துடன், தன் மனைவி சுமித்ராவை முறைத்து கொண்டு, மணமகள் அறையில் அங்கும், இங்கும் அலைந்து கொண்டு இருந்தார்.
சுந்தரேசன் SMS கார்ஸ் மற்றும் ஸ்பேர்ஸ் ஷோரூம் சொந்தமாக, மதுரையில் நடத்தி வருகிறார். சுமித்ரா அவரின் இல்லத்தரசி.
அடுத்து என்ன செய்ய வேண்டும், என யோசிக்க கூட முடியாத நிலை, மணப்பெண் மதுவை காணவில்லை.
மேசைமேல் ஒரு கடிதம், நான் விரும்பிய வாழ்வை நோக்கிச் செல்கிறேன் என்று இருந்தது.
எங்கு சென்றாள், எப்படி சென்றிருப்பாள் எதுவும் தெரியவில்லை.
பக்கத்து அறையில், தன் தோழிகளுடன் தயாராகி கொண்டிருந்த, தன் இளைய மகளை அழைத்து விசாரித்தார்.
“அப்பா கூப்பிட்டிங்களா” என்ற கேள்வியுடன் வந்தாள் இருபத்திரெண்டு வயது மாது.
“ஓவி மா, மதுவை காணோம். உனக்கு எதுவும் தெரியுமா? உன்னிடம் ஏதாவது சொன்னாளா?” என சுந்தர் பதைபதைப்புடன் வினவினார்.
ஆம்! அந்த அமைதியான அழகியின் பெயர் ஓவியச்செல்வி. சுந்தரேசன் சுமித்ராவின் இளைய மகள். மதுரையில், புகழ் பெற்ற கல்லூரியில், பி இ ஆட்டோமொபைல் இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி. தந்தையின் தொழிலை, எடுத்து நடத்த விருப்பம் கொண்டு இந்த படிப்பை தேர்ந்தெடுத்திருக்கிறாள்.
ஓவியாவிற்கும் இது புது செய்தியே, ‘என்ன சொல்கிறார்கள் இவர்கள். என் காதுகளில் விழுந்தது சரியா’ ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றாள்.
‘ஆனால் இது திகைத்து நிற்கும் தருணம் அல்ல, பெற்றோர்களின், முகத்தில் இருக்கும் கலக்கம், நான் கேட்டது மெய்யென்று கூறுகிறது.’ என மூளை அறிவுறுத்த, சுயத்துக்கு வந்தால்.
தன்னை திடப்படுத்தி கொண்டு, தாயின் முகம் நோக்கி
“அம்மா என்ன ஆச்சு?”
“மதுவை எழுப்பி குளிக்க அனுப்பலாம்னு ரூம்க்கு வந்தா, கதவு திறந்து இருந்துச்சு, பாத்ரூம்ல இருக்கானு வெயிட் பண்ணுனா சத்தத்தையே காணோம், அப்பறம் பார்த்தா, இந்த லெட்டர் டேபிள் மேல இருந்துச்சு”என அழுகை குரலில் சுமித்ரா கூறி, ஒரு கடித்ததை கொடுத்தார்.
“எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் விரும்பிய வாழ்வை நோக்கி செல்கிறேன். யாரும் என்னை தேடவேண்டாம்” என்று கடிதத்தில் இருந்தது.
மது அழுது கொண்டே, இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறாள், என்று அதில் இருந்த சில கண்ணீர் துளிகளின் தடம் சொன்னது.
அக்கடிதத்தை படித்துவிட்டு, மதுவின் கைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ள முயற்சிக்க, அந்தோ பரிதாபம் கட்டில் மேலேயே அடித்தது.
சுந்தரசேன், சுமித்ராவின் முதல் பெண் தான் மதுநிலா. இப்போது ‘திருமணத்தில் விருப்பம் இல்லை’ என்று கடிதம் எழுதி வைத்து சென்ற பெண். இருபதினான்கு வயது மங்கை. லண்டனில் புகழ் பெற்ற கல்லூரியில், ஃபேஷன் டிசைனிங் மேற்படிப்பை முடித்தாள்.
கல்லூரி வளாக நேர்காணலிலேயே தேர்வாகி, பிரபலமான டெக்டைல்ஸில், ஃபேஷன் டிசைனராக கடந்த இரண்டு வருடங்கள் பணியாற்றிவிட்டு, பத்து நாட்களுக்கு முன்பு தான் இந்தியா திரும்பியுள்ளாள்.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் விழித்து நின்றனர்.
தன் தோழனும், மணமகனின் தந்தையுமான ராஜாராமிடம், விசயத்தை தெரிவிக்க முடிவு செய்த சுந்தரேசன், அவர்கள் அறையை நோக்கி சென்றார்.
நாம் சென்று மணமகனை பார்க்கலாம்.
மணமகன் அறை
அகம் நிறைந்த சந்தோசத்துடன், அது முகத்தில் எதிரொலிக்க, நண்பர்கள் சூழ, கேலி கலாட்டா நடுவே புது மாப்பிள்ளை அழகோடு தயாராகி கொண்டிருந்தான் வெற்றிச்செல்வன்.
செல்வன் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் செல்வன் ஜுவல்லரி சொந்தமாக நடத்தி வரும் ராஜாராமின் ஏகபோக வாரிசு தான் வெற்றிச்செல்வன். தாய் கற்பகம் (இல்லத்தரசி). பெற்றோர்களின் இருப்பத்தியேழு வயது செல்லக்குழந்தை.
பெண்கள் மனதை, பார்த்த நொடி அள்ளி செல்ல கூடிய அழகன். பி இ சென்னையிலும், எம்.பி. ஏ, ஐ ஐ டி டெல்லியிலும் முடித்துவிட்டு, கடந்த நான்கு வருடங்களாக, மதுரையில் பிரபலமான, தங்களின் செல்வன் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஜுவல்லரியை தந்தையுடன் இணைந்து நடத்தி வருகிறான். கொஞ்சம் விளையாட்டு குணம் கொண்டவன்.
சிறு வயதில் இருந்தே பெற்றோர்களின் விருப்பப்படி, மதுவை திருமணம் செய்ய சம்மதம் சொல்லி இருந்தாலும், அவளை நான்கு வருடம் கழித்து, விமான நிலையத்தில் பார்த்த நொடி, அவளின் அசரடிக்கும் அழகில் கவரப்பட்டு முழுமனதோடு, பல கனவுகளுடன் இப்பொழுது தயாராகி கொண்டு இருக்கிறான்.
பாவம் அவன் அறியவில்லை, இன்னும் சற்று நேரத்தில், அவனின் கனவு கலையப்போகிறது என்று. அதை பற்றி தெரியாமல் சிரித்துக் கொண்டு இருக்கிறான்.
கண்ணாடி முன் நின்று, அப்பிடி இப்படி திரும்பி, தன்னை பார்த்துக்கொண்டு இருந்த வெற்றியை, வேற்று கிரகவாசியை பார்ப்பது போல, வேடிக்கை பார்த்தனர் அவன் நண்பர்கள். பின்னே ஒரு மணி நேரமாக கண்ணாடி முன்பு நின்றால், அவர்களும் என்னதான் செய்வார்கள்.
“மச்சி போதும்டா நிறுத்து, அந்த கண்ணாடிக்கு வாய் இருந்தா கதறிடும்” என கருணாகரன் சொல்ல
“மச்சி அந்த கண்ணாடி வெடிக்காம இருந்தா சந்தோசம்” கருண் உடன் கூட்டு சேர்ந்து கொண்டான் ராஜ்.
தன்னுடைய நண்பர்களை வெற்றி முறைத்தபொழுது
“டேய் ஏன்டா அவன கிண்டல் பண்ணுறீங்க!’’ என அவனுக்கு ஆதரவாக அசோக் பேச, அவனை பாசத்துடன் பார்த்தான் வெற்றி.
“மேடைல சிஸ்டர் கிட்ட இருக்கும் போது கொஞ்சமாவது பளிச்சுனு தெரிய வேண்டாம். ஆனாலும் மச்சி, சிஸ்டருடன் ஒப்பிடும் போது நீ டல்லா தான் இருக்க” என வெற்றியின் காலை வாரிய அசோக்கிற்கு, ராஜ் ஹைஃபை கொடுத்தான்.
இப்போ வெற்றியின் பாசப்பார்வை கோபமாக உருமாறியது.
அவர்களை அடிக்க ஏதாவது கிடைக்குமா என சுற்றிலும் தேடினான் வெற்றி.
அவன் கைகளில் அகப்பட்டது, என்னமோ அப்பாவி தலையணை தான், அதை எடுத்து மூன்று பேரையும் மொத்து, மொத்தென்று மொத்தினான்.
அவர்களும் வலிக்கிற மாதிரி நடிக்க, அங்கு அழகான நண்பர்களின் விளையாட்டு நடந்துகொண்டு இருந்தது
இவர்கள் நால்வரும் பள்ளிக் காலத்திலிருந்து நண்பர்கள். பன்னிரெண்டாவது வரை ஒன்றாக படித்தனர். படிப்பு முடியவும், அவர்கள் விருப்பப்படி வேறு படிப்பு, கல்லூரி, தொழில், என்று பிரிந்தாலும், அவர்கள் நட்பு? என்றும் மாறாதது.
செல்ல அடிதடி முடியவும் சோர்ந்து அமர்ந்தனர்! இன்னும் வெற்றி அவர்களை முறைப்பதை நிறுத்தவில்லை. அதை கிடப்பில் போட்ட ராஜ்
“ஆமா மச்சி, ஸ்கூல்ல படிக்கும் பொழுது, உன்னவே சுத்தி சுத்தி வருமே ஒரு சில்வண்டு, இப்போ என்ன பண்ணுது” என ராஜ் பேச்சை மாற்ற
“அவ மது ஓட சிஸ்டர் ஓவி! ஃபைனல் இயர் படிக்கறா. இன்னும் மூணு மாசத்துல அவ படிப்பு முடிஞ்சுடும். என்னோட செல்ல ராட்சஸி.” முகம் பிரகாசமாக, ரசித்து கூறினான் வெற்றிச்செல்வன்.
“ஓ! ஓவி பேரு நல்லா தான் இருக்கு, ஆளு எப்படி மச்சி, மது மாதிரி அழகா இருப்பாளா” அசோக் ஜொள்ள, இறங்கிய கோவம் ஜெட் வேகத்தில் ஏறியது.
வெற்றி மறுபடியும் ஏதாவது பெரிதாக தேட, அசோக் வாசலுக்கு ஓடிவிட்டான்.
அவன் வாசலை அடையும் முன் வெற்றியிடம் மாட்ட, அதேநேரம் சரியாக கதவும் தட்டப்பட்டது.
வெற்றியும் கதவை நோக்கிப் செல்ல, “ஹப்பா கிரேட் எஸ்கேப்” அசோக் பெருமூச்சுவிட்டான்.
‘உனக்கு இது தேவையா’ என நண்பர்கள் பார்வை, அவனை கேள்விகேட்டது. வாழ்க்கைல இது எல்லாம் சகஜம் என்பது போல இருந்தது அசோக்கின் பதில் பார்வை.
கதவை திறந்த வெற்றி, பெற்றோர் நால்வருடன் ஓவியும், கலவர முகத்தோடு இருப்பதை பார்த்து, ஏதோ பிரச்சனை என உணர்ந்து, பெற்றோர் அறையில் பேசிக்கொள்ளலாம் என்று குறிப்பு காட்டி, அங்கு சென்றான்.
உள்ளே நுழைந்து கதவை அடைத்தவுடன், யார் முதலில் ஆரம்பிப்பதென்று, அங்கு தயக்கம் ஏற்பட்டது. வெற்றியும் அவன் பெற்றோர்களும், கேள்வியாக சுந்தரை பார்த்தனர்.
அடைத்த தொண்டையை சரி செய்த சுந்தர் மெதுவாக துவங்கினார்.
“ராஜா என்னை மன்னிச்சுடு. மது இப்படி பண்ணுவான்னு, நான் நினைக்கலை” என்றார் தழுதழுத்த குரலில். அதை பொறுக்க முடியாத ராஜா
“என்ன ஆச்சு?” அவர் குழப்பத்துடன் வினவ
கடிதத்தை அவர் கைகளில் கொடுத்தார்.
அதை வாசித்த பெற்றோர்கள் உறைந்து நிற்க, கலவர முகத்தோடு, வெற்றியும் அதை வாங்கி வாசித்தான். அதில் இருந்த செய்தி? அவனை உயிர் துடிக்க வைத்தது.
தன்னை வேண்டாம், என சொல்லி ஒரு பெண், மண்டபத்தை விட்டு சென்றுவிட்டாள். இதை எப்படி எடுத்து கொள்ள? ஆண்மகன் மனதில் பலத்த அடி.
ஓவி அவன் அருகில் சென்று, அவன் கரங்களை ஆதரவாக பற்றிக்கொண்டாள். அவனும் ஆறுதல் தேடும் குழந்தையாக, அவள் கரங்களை இறுக பற்றி கொண்டான்.
விதி அவர்களை பார்த்து “இந்த கரங்கள் இனி எப்பொழுதும் பிரியப்போவது இல்லை” என சொன்னது, அவர்களுக்கு தெரியவில்லை.
“சுந்தர் என்ன இது, மதுவும் விருப்பப்பட்டு தானே இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுனோம். திடீர்னு என்ன நடந்தது” என ராஜா கோபமாகவும், சந்தேகமாக வினவ
“மது இந்தியா திரும்பிய உடனே, மதுவிடம் திருமணத்தைப் பற்றி சொல்லிவிட்டேன். நேத்து நிச்சயதார்த்தத்தில், கூட நார்மலா இருந்த மாதிரி தான் இருந்துச்சு. திடீர்னு என்ன ஆச்சு தெரியல” என சுந்தர், ஒரு பக்கம் குழம்ப
“அவ மொபைல் கூட எடுத்துட்டு போகல. என்ன பண்ண போறோம்? எப்படி கண்டுபிடிக்க போறோம்?” என சுமித்ரா, ஒரு பக்கம் புலம்பினார்.
கற்பகம் மனதில் ஒரு சந்தேகம் “மது யாரையும் விரும்பி இருப்பாளா” அவர் மனதில் நினைத்ததை, வாய்விட்டு கேட்கவும், அனைவரும் அப்படி இருக்குமா என யோசித்தார்கள்.
அதற்கு கிடைத்த விடை வாய்ப்பு குறைவு ஆனால் காதல் இல்லை என்று சொல்ல முடியாது.
ஒன்பது வருட பிரிவு, அவளை இவர்களிடம் இருந்து சற்றே தள்ளி நிறுத்தி இருந்தது. அவர்களால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை
((காதல் என்ற சொல்லில், சுமியின் மனதில் சில காட்சிகள் வந்து போகின்றது.))
தன் வினை தன்னைச் சுடும்
காலம் கடந்து யோசித்து என்ன பயன்
மது ஒன்றும் பயந்த பெண் இல்லை, பிரச்சனையை எதிர்த்து போராடும் பெண் தான். ஆனால் அவளுக்கு கொடுத்த நேரம் மிக குறைவு.
அவளுக்கு திருமணம்! அந்த செய்தி, அவளை அடையும் பொழுது அனைத்து வேலைகளும் முடிந்து, பத்து நாட்களில் முகூர்த்தம்.
ஆம்! இந்தியா திரும்பிய பின் தான், இந்த செய்தி அவளை அடைந்தது.
அவளுக்கு பேசவோ, ஏன் சிந்திக்கவோ கூட அவகாசம் தரப்படவில்லை. அவளது நேரம் முழுவதும் ஜவுளி எடுப்பதிலும், நகை எடுப்பதிலுமே சென்றது.
அதன் பின் நண்பர்கள் வருகை, உறவினர்கள் வருகை, இப்படியே மதுவிற்கு, தன் மனதில் உள்ளதை, பெற்றோர்களுடன் பேசும் சந்தர்ப்பம் அமையவில்லை.
அவள் மனதில் என்னவென்று யாருக்கும் தெரியாது.
அவளை எங்கு தேடுவது என்றும் தெரியாது.
அடுத்து என்னவென்றும் புரியாது
சிந்திக்க ஆரம்பித்தார்கள்.
‘உறவினர்களுக்கு என்ன சொல்ல ‘மணப்பெணை காணவில்லை. திருமணம் நின்றுவிட்டது’. இது இரண்டு குடும்பங்களுக்கும் அவமானம். இனி எப்படி வெளிய தலை காட்டமுடியும்? இனி வெற்றியின் வாழ்கை என்ன ஆகும்? இதற்கு என்ன தீர்வு?’ இது பெரியவர்கள் நிலை.
ஓவி ‘வெற்றியால் இதை எப்படி தாங்கிக்கொள்ள முடியும். எவ்வளவு ஆசையா இருந்தாங்க.’ மனம் வலித்தது
வெற்றிக்கு முற்றிலும் உணர்வு தொலைத்த நிலை. தன்னை வேண்டாம் என சொல்லி, தூக்கி போட்ட மதுவின் மீது அளவு கடந்த கோபம். அவள், அவன் கைகளில் கிடைத்தால், கொலை பண்ணும் ஆத்திரம்.
ஆனால் வெற்றியிடம் மது கிடைக்கும்போது, அவளை எதிர்த்து ஒரு விரலை கூட அசைக்க முடியாத நிலையில் இருப்பான். அவர்களை விட்டு மது வெகுதூரம் சென்று இருப்பாள். இது தெரியாத வெற்றி, மது மீது தன் கோபத்தை வளர்க்க தொடங்கிவிட்டான்
“இந்த கல்யாணம் நின்னு போச்சுன்னு சொல்லி எல்லாரையும் கிளம்பச்சொல்லுங்க” என கூறிய வெற்றி, வேகமாக தன் அறையை நோக்கி சென்றுவிட்டான்.
இவ்வளவு கலவரத்துக்கும் காரணமான மதுநிலா, சென்னை நோக்கி செல்லும் விமானத்தில், ஒரு ஆடவனின் தோள்களில் தலை சாய்த்து, நல்ல உறக்கத்தில் பயணமாகி கொண்டிருந்தாள்.
அழுததினால் முகம் வீங்கி, வாடிய ரோஜாவை போல் காட்சியளித்தாள். அதை பார்த்த, அந்த ஆடவனின் முகத்தில், அளவு கடந்த துயரம். இதில் இருந்து இவளை எப்படி மீட்டு கொண்டு வரப்போகிறோம், என்பது அவன் மனதின் மிகப்பெரிய கவலை.
காலை மணி ஏழு முப்பது:
மணமேடையில், மணமகன் கோலத்தில், இறுகிய முகத்துடன் வெற்றியும், அருகில் மணப்பெண் அலங்காரத்தில், என்ன உணர்வை பிரதிபலிப்பதென்று தெரியாத முகத்துடன் ஓவியச்செல்வியும் அமர்ந்திருந்தார்கள்.
மீண்டும் வியாழன் அன்று வெற்றிச்செல்வன் ஓவியச்செல்வியின் திருமணத்தில் சந்திக்கலாம்.