சூரியநிலவு 2

சூரியநிலவு 2

அத்தியாயம் 2

மதுநிலா! ரிசார்ட்டில் இருந்து சென்று, இரண்டு மணிநேரம் கடந்து தான் தேடத் தொடங்கினர். எங்கு சென்றிருப்பாள்? எப்படிச் சென்றிருப்பாள்? என தீவிர தேடுதல் வேட்டை மதுரையிலும், அதன் சுற்றுவட்டாரத்திலும், நடந்து கொண்டிருந்தது.

சில மணித்துளிகளுக்கு முன் வரை, விழாக்கோலத்துடன் காட்சியளித்த மஹாலக்ஷ்மி ரிசார்ட்டில், இப்பொழுது பரபரப்பு தொற்றிக்கொண்டது.

சிறிது சிறிதாக விசயம் கசிய தொடங்கியது. உறவினர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது. காரசார விவாதங்களும், கட்டுக்கதைகளும் அங்கு உருவாகிக் கொண்டிருந்தது.

குடும்ப பெயர், பாதிக்கப்படக் கூடும் என்ற காரணத்தினால், காவல்துறையில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்க, பெரியோர்கள் விரும்பவில்லை. அதனால் உயர் அதிகாரியிடம், தனிப்பட்ட முறையில் தேடச் சொல்லி வேண்டுகோள் விடுத்தனர்.

மதுவின் கைபேசியை, அவளது அறையிலேயே, விட்டுச் சென்றதால், அந்த எண்ணை ட்ரேஸ் பண்ண கூட முடியாத நிலை.

மதுநிலாவை அனைவரும் மதுரையில் தேட, அவள் சென்று கொண்டிருக்கும் இடமோ சென்னை.

மது சென்ற விசயம், வெற்றியை மட்டும் அல்லாமல் அவனது நண்பர்களையும் வெகுவாக பாதித்தது. வெற்றி அவள் மீது எந்தளவு ஆசை வைத்திருந்தான், என்று சற்று முன் வரை கண்கூடாக பார்த்தவர்களால், மதுவின் மீது கோபப்படாமல் இருக்க முடியவில்லை.

அதே நேரத்தில், இப்போது சென்றவளைப் பற்றி பேசுவதை விட, எந்த உணர்வையும் காட்டாமல் இருக்கும் தன் நண்பனை, இந்த பிரச்சினையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என நினைத்தனர்.

“டேய் வெற்றி! போனவளை விட்டுட்டு, அடுத்து என்ன பண்ணுறதுனு யோசி” ராஜ்

 “உன் கூட வாழுறதுக்கு அவளுக்கு கொடுத்து வைக்கல. கவலைப்படாதடா” கருண் 

“அவளுக்கு, தான் ரொம்ப அழகுன்னு திமிர் அதிகம்டா.” அசோக்   

இவ்வளவு நேரம், எந்த அழகை பாராட்டினார்களோ, இப்பொழுது வெற்றியின் மனதை மாற்றும் பொருட்டு, அதை இகழ்ந்து கூறினார்கள்.

“டேய்! ஏன்டா இப்படி சிலை மாதிரி இருக்க? ஏதாவது பேசித்தொல.” என்றான் ராஜ் எரிச்சல் குரலில்

‘வெற்றியின் கவனம் இங்கு இல்லை அதை உணர்ந்த கருண்,   நண்பர்களிடம் பேசவேண்டாம் என சைகை காண்பிக்க, அவர்களும் அமைதியாகினர்.

நண்பர்களின் பேச்சு காதில் விழுந்தாலும், அதை கருத்தில் கொள்ளாமல் இருந்தான் வெற்றி.

அவன் மனதில் தான், ‘மது எப்படி ரிசார்ட்டில் இருந்து சென்றிருப்பாள்? இல்லை யாருடன்?’ என்ற கேள்வி, இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கும் போது, இவர்களின் பேச்சு எப்படி அவன் கருத்தில் பதியும்?

கருண், வெற்றியின் அருகே சென்று, அவன் தோளை பிடித்துலுக்கி, அவன் கவனத்தை தன்னை நோக்கித் திருப்பினான்.

“கவலைப்படாதடா! எல்லாம் சரி ஆகிடும். மது போனா என்ன, உனக்கு அவளைவிட நல்ல பொண்ணு கிடைப்பா.”

“அதில்லடா, மது ஏன் போனா? அது தான் யோசிக்கிறேன்.”

“அது என்னடா பெரிய விஷயம். அவ யாரையாவது விரும்பி இருப்பா. வீட்ல சொல்ல பயந்துட்டு, யாருக்கும் தெரியாமல் போயிருப்பா” என இடை புகுந்த ராஜ், அதே எரிச்சல் குரலில் கூறினான்.

இல்லை எனும்விதமாக தலை அசைத்த வெற்றி “மது ரொம்ப துணிச்சலான பொண்ணு. அவ யாரையாவது விரும்பி இருந்தா, தைரியமா வீட்ல சொல்லிருப்பா. எங்க வீட்லயும் நிச்சயம் ஏத்துட்டு இருப்பாங்க. ஏன் இப்படி சொல்லாம போகணும்?” என்றான்.

வெற்றியின் எண்ணம் போகும் போக்கை பார்த்து, எங்கே அவன் மதுவை மறக்கமாட்டானோ என பயந்த நண்பர்கள் ”டேய் போனவளை விட்டுட்டு. இப்போ நடக்கற பிரச்சனையை முதல பாரு” என நிதர்சனத்தை உணர்த்த முயன்றனர்.

அதற்கு வெற்றியின் பதில் மௌனம் மட்டுமே.

வெற்றியின் மௌனம்! நண்பர்கள் மனதில் பயத்தை உண்டாக்கியது.

மௌனம்! பல மொழி பேசும் ஒரு சொல். வார்த்தைகள் கொடுக்காதத்  தெளிவை அல்லது பதிலை கொடுக்கும். ஒருவரின் உணர்வை காட்டும். ஆனால் வெற்றியின் இந்த மௌனம், விரக்தி நிலையை அல்லவா காட்டுகிறது.

அவனை திசை திருப்ப முயன்றனர்.

வெற்றியின் எண்ணம், சிறிது சிறிதாக மாற்றம் கொண்டது. மதுவின் மீது கோபம் எழுந்தது “மது எனக்கு வேண்டாம்” என்று தீர்க்கமான முடிவை எடுத்தான்.

***************

உறவினர்களிடையே என்ன நடக்குது பார்க்கலாம்

ஒரு விருந்து சாப்பாட்டில், உப்பு சிறிது குறைந்தால் கூட, அதை ஊதி பெரிதுபடுத்தும் நம் சுற்றத்தார். மணப்பெண்ணையே காணவில்லை, சும்மா விடுவார்களா.

அவர்கள் தாங்களே ஆளுக்கு ஒரு கதையை புனைந்து விட்டார்கள்.

“அடியே காமாட்சி! உனக்கு விசயம் தெரியுமா. கல்யாண பொண்ணு ஓடிப்போச்சாம்” என ஒரு பெருசு பால் போட.

“ஆமா அக்கா, இப்ப தான் சீதா சொன்ன” என காமாட்சி, அந்த பால்லை அடிக்க முயற்சிக்க

“அந்த புள்ள, யாரையோ காதலிச்சிருக்கு, வீட்டுல சொல்ல பயந்துட்டு, லெட்டர் எழுதிவச்சுட்டு போய்டுச்சாம்.” என நான்கு ரன் அடித்தார் சீதா

“என்னடி ஆத்தா சொல்லுற, அந்த புள்ள வேற யாரையோ கல்யாணம் பண்ணி போய்டுச்சுன்னு சொல்லுறாங்க” என முதலில் பேசிய பெருசு ஆரம்பிக்க

“யாரு கண்டா, அதுக்கு குழந்தை கூட இருக்கோ என்னவோ.” என காமாட்சி, வாய்க்கு வந்ததை சொல்லி சிக்ஸர் அடித்தார்

“அப்படியும் இருக்குமோ” என யோசித்து விட்டு. “இருந்தாலும் இருக்கும், அந்த மது புள்ள தான் வெளியூருக்கு போய் நாலு வருஷம் ஆச்சுல்ல.” என்றது அந்த பெருசு

இப்படி ஒரு குழு பெண்கள் மதுவின் நடத்தை, கற்பு அனைத்தையும் கூறுபோட,

இன்னொரு குழுவை பார்ப்போம்

“ஏம்மா நாத்தனாரே, கல்யாண பொண்ணு ஓடிப்போச்சாம். உனக்கு எதுக்குன்னு தெரியுமா?” செல்லாத்தா கேட்க

“அந்த வெற்றி பையன், யாருக்கூடையோ தொடர்பு வச்சு இருக்கும் போல, அது  அந்த பொண்ணுக்கு தெரிஞ்சு போச்சு அதுனால, யாருக்கும் சொல்லாம போய்டுச்சு”

“அப்படியா சேதி அந்த பையன பார்க்கும் போது, தப்பானவனா தெரியலையே” சந்தேகமாக கேட்க

“அட நீ வேற மதினி தப்பு பண்ணுறவன், வெளிய தெரியற மாதிரியா பண்ணுவான்”

இன்னொரு பெருசு வந்து, “நீ வேற, அவனுக்கு எதோ நோய் இருக்காம். அது தான் அந்த புள்ள போய்டுச்சு.”

“அப்படி என்ன நோய் வந்துச்சாம்? மண்டபத்துல இருந்து சொல்லிக்காம போற அளவுக்கு?” ஆவலா வினவ

“அட இது தெரியாதா, அந்த பையனால புள்ள பெத்துக்க முடியாதாம்”

என வெற்றியின் ஒழுக்கம், ஆண்மை அனைத்தையும் குழி தோண்டி புதைத்தனர்.

ஆளாளுக்கு தங்கள் மனதில் தோன்றிய கதைகளை, கேட்க காது கிடைக்கவும், தங்கள் கற்பனை திறமைகளை காட்டிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் பேச்சு, அந்த மணப்பெண்ணையோ அல்லது மணமகனையோ மனதளவில், எந்தளவு பாதிக்கும் என்று தெரிந்து தான் பேசுகிறார்களா?

ஆண்கள் ஒரு பக்கம், மது எங்கெல்லாம் சென்றிருக்க கூடும் என சிந்தித்து ரயில்நிலையம், பேருந்து நிலையம் என தங்களுக்கு தெரிந்தவர் மூலம் தேடிக் கொண்டிருந்தனர்.

***************************

இப்பொழுது “மது எனக்கு வேண்டாம்” என்பது மட்டுமே, வெற்றியின் முடிவாக இருந்தது.

எதுவாக இருந்தாலும் தன்னிடம் சொல்லி இருக்கலாம் என்பது வெற்றியின் எண்ணம்.

வெற்றியின் உறுதியான முடிவை கேட்ட, அனைவரும் கவலை கொண்டனர்.

இதுவரை கைபேசியில் பார்வையை பதித்து இருந்த ராஜா, ஒரு முடிவெடுத்தவராக “சரி வெற்றி, இனி மது உனக்கு வேண்டாம். அப்ப ஓவியா கழுத்தில தாலி கட்டு” அசால்ட்டாக குண்டை தூக்கி போட்டார்.

அனைவருக்கும் ராஜாவின் முடிவு, உச்சகட்ட அதிர்ச்சியை கொடுக்க, அதிர்ந்து போய் அவரை வெறித்தனர்.

“அப்பா என்ன பேசுறீங்க. அவளை போய் என்னால் எப்படி மனைவியா, ச்ச!  என்ன விளையாடறீங்களா? என்னால் முடியாது.” என்ற வெற்றி, வார்த்தையை முடிக்கமுடியாமல் கடித்து துப்ப

“மதுவை தேடலாம்’ சொன்னாலும் ‘வேண்டாம்’ சொல்லுற. ‘ஓவியாவை கல்யாணம் பண்ணிக்கோன்னு’ சொன்னாலும் ‘முடியாது’ சொல்லுற. உன் மனசுல, என்ன தான் நினைச்சிட்டு இருக்க’ என ராஜா எரிந்து விழுந்தார்.

“அப்பா புரிஞ்சுக்கோங்க, ஓவி சின்ன பொண்ணு. அவளை அந்த மாதிரி நான் நினச்சதில்லை”

“சின்ன பொண்ணா, இப்போ அவளுக்கு இருபத்திரண்டு வயசாகுது, மதுவை விட இரண்டு வயசு தான் கம்மி. கல்யாணம் பண்ணுற வயசு தான்”

“நீங்க என்ன சொன்னாலும், இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என வெற்றி எகுற

“சரி உன் பேச்சுக்கே வரேன். நாளைக்கு நம்ம யாராலும் வெளிய தலை காட்ட முடியாது. எங்க போனாலும் ‘உங்க பையன் கல்யாணம் நின்னுபோச்சா’ னு பாக்கறவன் எல்லாம் கேட்பான். என்ன பண்ணலாம் நீயே சொல்லு” என கூறி, சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்

“அவ்வளவு ஏன், இந்த அறையை தாண்டி வெளியே போ. அப்ப தான் தெரியும் எவ்வளவு கேவலமா பேசுறாங்கனு”

அதை முதலிலேயே தெரிந்த வெற்றியால், இதற்கு பதில் சொல்ல முடியவில்லை. அவன் இயலாமையுடன் ஓவியச்செல்வியை பார்க்க, அவளும் அதே நிலையில் உறைந்து நின்றாள்.

இந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார் ராஜா.

இதுவரை தந்தை மகன், உரையாடலுக்கு நடுவே வராமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த வெற்றியின் நண்பர்களுக்கு, அவனை இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க சொல்லி, கண்ணை காட்டிவிட்டு, அவர் வெளியே சென்றுவிட்டார். அவரை தொடர்ந்து கற்பகம், சுந்தர், சுமி, ஓவியும் வெளியேறிவிட்டனர்.

**********************

வெற்றியை ஒருவழியாக சம்மதிக்க வைத்து மேடை ஏற்றிவிட்டனர்.

வெற்றி தேர்ந்தெடுத்த பட்டு கட்டி, பியூட்டி பார்லர் பெண் கைவரிசையில், மணப்பெண் அலங்காரத்தில் தேவதையாக ஜொலித்தாள் ஓவியச்செல்வி.

அனைவரின் பார்வையையும், தன்னை நோக்கி ஈர்த்து இருந்தாள் ஓவியச்செல்வி. ஆனால் பார்க்கவேண்டிய மணாளனோ, இறுகிய முகத்தோடு, அங்கு எரிந்து கொண்டிருக்கும், அக்னிக்கும் மேல் மனதளவில் எரிந்து கொண்டிருந்தான்.

ஐயர் மந்திரம் சொல்ல, பெரியோர்கள், நண்பர்களின் ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துக்களோடு, வெற்றிச்செல்வனின் கைகளில் இருந்த மாங்கல்யம் ஓவியச்செல்வியின் கழுத்தை அலங்கரித்தது.

அடுத்து முறைப்படி எல்லா சடங்கும் செய்து முடித்த பின், மணமக்கள் இல்லம் நோக்கி பயணம் ஆரம்பமாகியது.

முதலில் வெற்றியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு கற்பகம் ஆரத்தி எடுத்து, மணமக்களை உள்ளே அழைத்தார். இது ஓவியச்செல்விக்கு புது அனுபவமாக இருந்தது. இதற்கு முன் பலமுறை இந்த வீட்டிற்கு வந்து இருந்தாலும், இன்று வெற்றியின் மனைவியாய் உரிமையுடன் நுழைகிறாள். அவன் மனதில் நுழைவாளா? அவன் இடம் தருவானா?

பூஜை அறைக்கு சென்றவள் விளக்கேற்றி, சாமி கும்பிட்டுவிட்டு கண்களை திறந்தாள். எதிரே வெற்றி கைகளில் குங்குமத்துடன் நிற்க, அவள் விழிகள் கேள்வியுடன் அவனை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவள் நெற்றியில் கீற்றாய் குங்குமத்தை இட்டான்.

ஓவியின் மனதில் ஒரு சிலிர்ப்பு.

அடுத்த சம்பிரதாயத்திற்காக, பால் பழத்தோடு உறவினர்கள் நிற்க, அவர்களோ எந்த சங்கடமும் இல்லாமல் பாலும் பழமும் உண்டு முடித்தனர்.

பின்னே ஏற்கெனவே பகிர்ந்து உண்டவர்கள் அல்லவா

அடுத்து ஓவியின் வீட்டிலும் சம்பிரதாயங்கள் முடிந்த பின், அவர்களை சிறிது ஓய்வு எடுக்க சொல்லி, அவளின் அறைக்கு அனுப்பிவிட்டனர்.

காலையில் இருந்து, அவர்கள் இருந்த மனக்குழப்பத்திற்கு அந்த ஓய்வு தேவைபட்டது. அதன் பின்னர் தான், அவர்களால் சரியாக சிந்திக்க முடியும்.

விருந்தினர் அனைவரும் சென்று விட்டிருந்தனர்.

கருண், அசோக், ராஜ் மண்டபத்தில் வைத்தே வெற்றியிடம்”இனி இது தான் உன் வாழ்க்கை. உன்னையே சுத்தி வர பொண்ணு, உனக்கு மனைவியா கிடைச்சு இருக்கு. சந்தோசமா இரு” என சொல்லி விடை பெற்றுவிட்டனர்.

மாலை

அனைவரும் தூங்கி எழுந்த பின், உடலளவில் கொஞ்சம் தெளிந்திருந்தனர். தோட்டத்தில் அமர்ந்து சந்தோஷமின்றி பேசிக்கொண்டு இருந்தனர்.

ஒருத்தி தான் அவர்களின் சிரிப்பு, சந்தோசம், ஏன் நிம்மதி எல்லாத்தையும் கையோட(இல்லை இல்லை கைப்பையோடு) எடுத்துக்கொண்டு பறந்துவிட்டாளே!

எல்லார் மனதிலும் வெவ்வேறு சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருந்தாலும்.

அனைவர் மனதிலும், மதுவை கூட்டி சென்றது யார்? (அப்படி சொல்ல கூடாதோ, மது யாரோடு சென்றால்?) என்ற ஒரே கேள்வி, சடுகுடு ஆடிக்கொண்டிருந்தது.

சுமியின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது என்ன? “மணமேடை வரை, ஒருவரை கொண்டு வந்து அவமானப்படுத்தியது, சரியா? தவறா? என் ஒருத்தியால் எவ்வளவு அவமானம் ஏற்பட்டிருக்கும். இப்போது யோசித்து என்ன பிரயோஜனம்?”

இரவு

பெற்றோர்களே, வெற்றி ஓவியை சங்கடப்படுத்த வேண்டாம் என்று அலங்காரங்களை தவிர்த்திருந்தனர்.

தன் அறைக்கு வந்த ஓவி, வெற்றி அங்கு இல்லாததை கண்டு தேடினால். அவன் பால்கனியில் நின்று தோட்டத்தை வெறித்து கொண்டு இருந்தான். அவன் மனதில் பல குழப்பங்களோடு சிந்தித்து கொண்டிருந்தான்.

அப்போது தன் பின்னொடு, கேட்ட கொலுசின் ஒலி வைத்தே, வருவது யாரென்று புரிந்து கொண்டான். அவளைத் திரும்பிக் கூட பார்க்காமல்.

”நீ போய் படு அம்மு. நான் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் வர்றேன்”

அவன் மனநிலையை புரிந்த ஓவி, சரி என தலையசைத்து விட்டு, அங்கு இருந்து திரும்பியவள், என்ன நினைத்தாளோ நிதானித்து, மீண்டும் அவன் புறம் திரும்பாமலே

“ரொம்ப நேரம் வெளிய இருக்காதீங்க. உங்களுக்கு சேராது” என சொல்லி, படுக்கையில் ஒரு ஓரம், படுத்து கொண்டாள்.

அவளை திரும்பி பார்த்த வெற்றி, ஒரு பெருமூச்சுடன் மீண்டும் தோட்டத்து பக்கம் தன் பார்வையை திருப்பிவிட்டான்.

தற்போது அவன் மனதில் இருப்பது எல்லாம் ஒரே ஒரு உணர்வு கோபம்.

மேடை வரை வந்து சொல்லாமல் போன, மது மீது,

அவளை கூட்டி சென்ற ஆடவனின் மீது

ஓவியை திருமணம் செய்ய வைத்த தந்தை மீது

தந்தையை இந்த திருமண முடிவை எடுக்க வைத்த சுற்றத்தார் மீது

கோபம், கோபம், கோபம் மட்டுமே அவனை ஆட்சி செய்தது.

அவனின் கோபம் யாரை பாதிக்க போகிறது?

மதுவையா? அந்த ஆடவனையா?

ஓவியாவையா? இல்லை தன்னையேவா?

விடையை காலத்தின் கைகளில் கொடுத்துவிட்டு

நாம் கைகட்டி வேடிக்கை பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!