VV03

VV03

ஓயாதே! வெல்…!  – 3

நந்தாவின் சகோதரர்களில் இரண்டாமவன் மேல்நிலைப்பள்ளிக் கல்வியில் தோல்வியடைந்திருந்தான்.  ஆகையால், தேர்வில் வெற்றி பெற எண்ணி தனித்தேர்வு பயிற்சியில் சேர்ந்திருந்தான்.

தேர்விற்கு பணம் கட்ட வேண்டியதிருக்க, அதைத் தாயிடம் கேட்டான்.

மகனிடம் கிழமையை விசாரித்து சற்றுநேரம் நிதானமாக யோசித்தவர், “நாளைக்கு நந்தா வீட்டுக்கு வர நாளு!  நாளன்னைக்கு பணம் கட்டலாம்னா இரு.  இல்லைன்னா இன்னிக்கே போயி ராஜேசை பணம் வாங்கிட்டு வரச் சொல்லறேன்”, என காமாட்சி கேட்க

ரமேஷ், “நாளன்னைக்கே கட்டிக்கிறேன்மா”, என்றுவிட்டான்.

அந்த கிராமத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் அருகில் உள்ள ஊர்களில் நடைபெறும் கட்டிட வேலைக்கு சென்று வருவர். விவசாய நேரங்களில் சிலர் அதனைப் பார்ப்பார்கள்.

ஆண்மக்களை பிளஸ்டூவிற்குப் பிறகு கட்டிட வேலைக்கு அனுப்ப எண்ணியிருந்தவரை, நந்தாவின் பிடிவாதத்தால் மாற்றியிருந்தான்.

தாயின் கஷ்டம், தந்தையின் பொறுப்பற்ற தன்மையை உணர்ந்து மூத்தவர்கள் மூவரும் வளர்ந்திருந்தனர்.

நந்தா, அவனின் தங்கை கீதா மற்றும் ராஜேஷ் அளவிற்கு சின்னவனான ரமேஷ் பொறுப்பாக இல்லை.

பெரிய மகன்களை விரட்டுவதுபோல விரட்டாமல், சலுகைகளோடு காமாட்சி செல்லம் கொடுத்ததும், ரமேஷின் இந்நிலைக்கு ஒரு காரணமாகியிருந்தது.

ரமேஷ் பள்ளிக் கல்வியில் தவறிய செய்தி அறிந்ததும், “நீ ஒழுங்கா படிச்சிருந்தா எப்பாடு பட்டாவது உங்கண்ணங்களை மாதிரி காலேசுல படிக்க வச்சிருப்பேன்.  இப்டி பண்ணிட்டியே!”, என்றதும் தலைகவிழ்ந்து நின்ற மகனைக் கண்டு,  “சரி, அது கிடக்கட்டும்!  நாங்கல்லாம் படிக்கவா செஞ்சோம்.  சம்பாதிக்கல!”, என்றவர்

“நீ நம்ம ஊருல உள்ள மேஸ்திரிங்கட்ட கேட்டு, யாரு வேலை குடுக்கறாங்களோ அவங்ககூட தினசரி கூலி வேலைக்குப் போடா”, என்று வாழ்த்து கூறும் விதமாக நெட்டி முறித்து கைகள் இரண்டையும் உயரே தூக்கி ஆசிர்வதித்து அனுப்பியிருந்தார்.

படிக்க சோம்பேறித்தனம் கொண்டு, கோட்டை விட்டிருந்தவன்,  தாய், தற்போது வேலைக்குப் போ என்றதும் இன்னும் வேப்பங்காயாக எண்ணினான் ரமேஷ்.

இரண்டு நாள்கள் வேலை கேட்பதாக பாவனை செய்து ஊர் சுற்றித் திரிந்தவனைக் கண்டு நந்தா என்னவென விசாரித்தான்.

தாய் கூறியதை ரமேஷ் நந்தாவிடம் பகிர, நந்தாவிற்கு இன்றைய காலசூழல் உணர்ந்து, தாயிடம் பேசுவதாகக் கூறினான்.

அப்போதும் சிறியவன், ஏமாற்றித் திரிந்ததை நந்தா அறிந்திருக்கவில்லை.

நந்தா, “ஏதோ கவனக்குறைவா ஃபெயிலாகிட்டான்போலம்மா.  இந்த ஒரு வருசம் எப்டியாவது பிளஸ்டூ படிச்சு பாஸ் பண்ணட்டும்.  நாங்க ரெண்டு பேரும் படிச்சளவுக்காவது அவனும் படிக்கட்டும்மா!”, என்றதோடு,

ரமேஷிடம், “இப்பப் படிப்போட அருமை தெரியாது தம்பி.  வயசு போனப்பறம் வருத்தப்பட்டாலும் உன்னால படிக்க முடியாது.  படிக்க எழுதத் தெரியாம வர்ற காலத்தில எதுவும் செய்ய முடியாதுடா!  அதனால எந்த பேப்பரு போச்சோ அதைப் படிச்சு முதல்ல பிளஸ்டூ பாஸ் பண்ணிர வழியப்பாரு! நம்ம வீட்ல யாரும் டிகிரி வாங்கலை!  நீயாவது டிகிரி படிடா!  உன்னால எல்லாம் முடியும்டா!”, என்று படிப்பின் அவசியத்தைக் கூறியதோடு, தோள் தட்டி உந்துதல் வார்த்தை கூறியிருந்தான் நந்தா.

தமையனின் வார்த்தைக்குப் பிறகு ரமேஷ் சிரத்தையெடுத்து படித்து வருகிறான்.

///////

அதிதீயும், நந்தாவும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்திருந்தனர்.

விகற்பமின்றி கிராமத்திலிருந்து பள்ளிக்கு வந்து சென்ற நந்தாவை ஆரம்பத்தில் தவிர்க்க எண்ணியதில்லை.

கேட்டதற்கு பதில் என்றளவிலேயே பள்ளி இறுதிவரை இருந்தபோதும், நந்தாவின் பார்வையில் தெரியத் துவங்கிய ஆர்வம், அதிதீக்கு ஏனோ பயத்தைத் தந்திருந்தது.

தந்தையின் சுபாவம் அறிந்திருந்தவள், சற்று கவனத்தோடே  நந்தாவிடம் நெருக்கம் காட்டாமல் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டாள்.

அதிதீ கல்லூரி செல்லத் துவங்கியபோது, நந்தா டிப்ளமோவில் சேர்ந்திருக்க, அவ்வப்போது தன்னைக் காண எண்ணி, வழியில் குறுக்கிட்டவனை கடுமையாகவே பேசி ஆரம்பத்தில் விரட்டிருந்தாள்.

“ஒரே ஸ்கூல்ல படிச்சோம்.  அதுக்காக!  இப்ப என்ன செய்யணுங்கற?”, என்றவள் “இன்னும் நாம சின்னப் புள்ளைங்க இல்லை.  அவங்கவங்க வேலையப் பாத்துட்டு, பாத்தாலும் பாக்காத மாதிரி போற வழியப் பாருடா நந்தா!  அதவிட்டுட்டு அறியாத வயசில நாம கைகோர்த்துட்டு இருக்கற மாதிரி இப்டி அடிக்கடி வந்து முன்ன நின்னா, நல்லாயில்லை! முதல்ல சட்டுன்னு இங்கிருந்து கிளம்பற வழியப்பாரு”, என்று விரட்டியிருந்தாள்.

தலையை ஆட்டியவாறு சென்றவனுக்கு, இதயத்தில் சம்மட்டி கொண்டு அடித்தாற்போன்ற வேதனை.

பெண்ணிற்கு உண்டாகும் பிரச்சனைகளின் வீரியம் தெரிந்தாலும், மனது அதையும் மீறி பெண்ணை நோக்கிச் சென்றதற்கு அவன் என்ன செய்வான்?

அடுத்தடுத்தும் தயக்கத்தோடே பெண்ணைச் சந்தித்தான்.

“உங்கிட்ட எத்தனை தடவைடா சொல்றது.  வீணா வந்து ரோட்டுல நிக்கவச்சி பேசிறியே அறிவிருக்கா உனக்கு? தலைபோற காரியமா அப்டி என்னத்தை வந்து எங்கிட்ட பேசப்போற! இல்லை கேக்கப்போற!  இனி இப்டி வந்து பேசாத!  உன்னைப் பாத்துட்டு, அப்புறம் கண்டவனும் பேசனும்னு ஈஈனு வந்து முன்ன நிப்பான்!”, என்றதும்

“ஒரு வார்த்தை எங்கூட பேசுனாக்கூட பிரச்சனையா?”, என புரியாமல் கேட்டான் நந்தா.

“கண்டவங்கூட பேசினாலும், சிரிச்சாலும் கண்டுக்காமப் போக இது மெட்ரோபாலிடன் சிட்டியில்லடா! இது டவுனு”, என்றவள் சுற்றிலும் பார்வையைப் பதித்தபடியே 

“என்னை இந்த ஊருல உள்ள பாதிப் பேருக்கு இன்னாரு பொண்ணுனு நல்லாத் தெரியும்.  நான் எதேச்சையா உங்கிட்ட பதில் சொல்லப்போக அதுவே எம்படிப்புக்கோ, ஃபியூச்சருக்கோ எமனா வந்திரக்கூடாதுல்ல!  சொன்னாப் புரிஞ்சிக்கோடா!”, என்று பேசிவிட்டு அகன்றிருந்தாள்.

“நான் கண்டவனா?”, என அப்போதும் பாவம்போலக் கேட்டவனை நோக்கிப் பல்லைக் கடித்தபடியே, “கண்டவன் இல்லாம அப்புறம் நீ யாருடா?”, என்றுவிட்டு கோபமுகம் தரித்து பெண்ணே அகன்றிருந்தாள்.

அன்றே பெண்ணுக்கு கொண்டவனாகப் போவதே அவன்தான் எனத் தெரியாமல் பேசிவிட்டு கோபமாகச் சென்றிருந்தாள்.

மேற்கொண்டு பேசவந்தவனோ, மனதில் எழுந்த உற்சாகம் வடிந்திட தங்களது பாலிடெக்னிக்கிற்கு சென்றான்.

அதுபோன்றதொரு நாளில், தீனதயாளனோடு பணிபுரியும் அலுவலகப் பெண்ணொருவர் அதிதீ நந்தாவுடன் பேசியதைக் கண்டதோடு, அவரிடம் எதேச்சையாக அலுவலகத்தில் உரைத்திருந்தார்.

ஆனால், அதுவரை காதல் என்கிற எந்த எண்ணமும் இன்றி இருந்தவளை, தந்தையின் பேச்சுகள், உதைகள், நம்பகத்தன்மையில்லாத வார்த்தைகள் போன்ற கொடுமைகள் நிலைகுலையச் செய்திருந்தது.  இதனால் ஆரம்பத்தில் நந்தாவின்மீது கட்டுக்கடங்காத கோபம் வந்திருந்தது.

நந்தா தன்னெதிரில் வந்தாலே, பாய்லரைப்போல கொதித்துவிடுவாள்.

“உம்மூஞ்சி!  உன்னை யாருடா எம்பின்னாடியே வரச் சொன்னது!  உனக்கு அறிவேயில்லையா!  எத்தனை தடவைடா சொல்றது! எருமை! எருமை! ஏன்டா வந்து உசிரை வாங்கற!”, என்பாள்.

சிலநேரங்களில், “உன்னையெல்லாம் யாருடா இங்க வரச் சொன்னது.  நீ வரலன்னு யாரு அழுதா?”, அழும் நிலையில் கேட்பாள்.

தூரத்தில் நந்தாவைப் பார்த்ததுமே, “கடவுளே!  என்னையக் காப்பாத்து இந்த லூசுங்ககிட்ட இருந்து!”, என்பாள்.

“என்ன பாவம் பண்ணினேனு தெரியலை.  இப்டி உங்ககிட்ட மாட்டிக்கிட்டு சித்தரவதைப்படறேன்!”, என்பாள்.

பெண்ணது வார்த்தைகளின் மூலம், தன்னால் பெண்ணுக்கு வீட்டில் பிரச்சனை என்பது புரிந்தாலும், “சாரீ அதீ.  ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசிட்டுப் போயிருவேன்.  ப்ளீஸ்… ப்ளீஸ்”, என்பான் நந்தா.

“பேசறதுக்கு என்னடா இருக்கு?”, என்பாள்.

“நீ ஒன்னுமே பேச வேணாம்.  உம்பக்கத்தில அப்டியே நானும் கொஞ்ச தூரம் நடந்துட்டு அப்டியே அமைதியா கிளம்பிருவேன்.  திட்டாதே அதீ”, எனக் கெஞ்சுவான்.

“டெயிலி இங்க வரதே உன்னைப் பாக்கத்தான்.  அப்புறம் வராதேன்னா எங்க போவேன்!”, என்பான்.

“எங்கே வேணா போ.  ஆனா என்னைய விட்ரு!  உன்னால எங்க வீட்ல குடுக்கற பிரஷர், பேச்சு, திட்டு எதையும் என்னால தாங்க முடியலடா”, என அழுகையும், கண்ணீருமாக உரைத்துவிட்டாள்.

தான் தவிர்த்தாலும், வந்து பேசுபவனைப் பற்றி ஆரம்பத்தில் வீட்டில் கூறியிருந்தாள் அதிதீ.

தீனதயாளனோ, “இவுக பெரிய மர்லின் மன்றோ!  இவுக பின்னாடியே பொழப்பத்து போயி சுத்துறானுக! நீ ஒழுங்கா இருந்தா எவனும் எதுக்கு பின்னாடியே வரப்போறான்.  நீ சரியில்லை!”, என்று மகளை மட்டுமே குறை சொல்லியிருந்தார்.

“ஆம்பளைப் பய வந்து பேசுனா, பதிலுக்கு நீயும் நின்னு, வாய ஈனு இழிச்சிருப்ப!  அதான் உம்பின்னாடியே வந்திருப்பான்!”, என்றிருந்தார் சிலநேரங்களில்.

தனது பேச்சை நம்பாத தந்தையின், நம்பகத்தன்மையற்ற வார்த்தைகள் அதிதீயின் மனதிற்குள் கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது. இரண்டு இடத்திலும் உண்டான தொந்திரவினைத் தாங்க இயலாமல், ஒரு வாரம் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.  அந்த நாள்களிலும் தீனதயாளன் பெண்ணை நம்பாமல் வார்த்தைகளால் கொன்றிருந்தார். அப்போதுதான் நந்தாவைப் பற்றி அதிகம் சிந்திக்கத் துவங்கியிருந்தாள் அதிதீ.

ஒரு வாரத்திற்குப்பின் கல்லூரிக்கு வந்தவளை அருகில் சென்று சந்திக்க முயற்சிக்கவில்லை நந்தா.

முன்பைக் காட்டிலும் பெண்ணது பேச்சைக் கேட்டு தூரத்தில் நின்று பார்ப்பது என்றளவில் தொந்திரவு செய்யாமல் ஒதுங்கி இருந்தான்.

ஆனாலும், தீனதயாளனின் வார்த்தை சாடல்கள் குறைந்தபாடில்லை.

நாள் செல்லச் செல்லவே தந்தையிடம் கோபம் அதிகரித்து, நந்தாவிடம் அதுவே மட்டுப்படத் துவங்கியிருந்தது.

அவளையும் அறியாது ஒதுங்கிய நந்தாவிடம் பிடிப்பு உண்டாகியிருந்தது.

ஆனாலும், தீனதயாளனின் பேச்சுகள் பெண்ணுக்கு ஆதரவாக இருக்கவில்லை.

அதிதீ நடந்தவற்றை நினைவுகூறாது, வேறு வேலையில் கவனமாக இருந்தபோது, “என்ன இன்னிக்கு ரொம்ப அமைதியாருக்கு வீடு! கல்யாணக் கனவுல உக்காந்திருக்கியா!”, என்றதும்

எங்கிருந்து அத்தனை வேகம் வந்ததோ பெண்ணே அறியவில்லை.  ஆனால், “ஆமா.. நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்! ஆனா உங்க சம்மதத்தோட..!  ஆனா என்னோட சம்மதமில்லாம நீங்க எதுவும் செய்யக்கூடாது. அப்டி நீங்க எதாவது பண்ணாதவரை நான் உண்டு, என் படிப்பு, வேலைன்னு இங்கே… இந்த வீட்லயேதான் இருப்பேன்!  எக்குத்தப்பா எதாவது நீங்க எதாவது பண்ணா, நானும் எதாவது பதிலுக்குப் பண்ணுவேன்!”, எனத் தந்தையிடம் அவசரத்தில் யோசிக்காமலேயே தீர்க்கமாக உரைத்திருந்தாள் அதிதீ

இத்தனை நடந்தபோதும், கௌசல்யாவிற்கும் வசவுகள், அடி, உதைகள் என நீடித்தது.

“என்னடீ புள்ளை வளத்த?  அப்பனு ஒரு மரியாதை இல்லாம எப்டி வந்து நேருக்கு நேரு நின்னு பேசுது”, எனக்கேட்டு மனைவியைத் தண்டித்திருந்தார்.

சில வேளைகளில் கௌசல்யா அதிதீக்கு ஏற்றுப் பேச முன்வந்தால், “சபாஷ்… அப்ப நீதான் இப்டி எல்லாம் செய்யச் சொல்லி வளத்து விட்ருக்கியா… பேஷ் பேஷ்… இப்டி ஒரு அம்மாவை ஊரு உலகத்தில யாரும் பாத்திருக்க மாட்டாங்க!”, என்று கிண்டலாகவும், குத்தலாகவும் பேசினார்.

அவசரத்தில் தந்தையிடம் உரைத்துவிட்டாளே அன்றி இதை நந்தாவிடம் எங்ஙனம் தெரிவிப்பது என்பதுகூட அதிதீக்குத் தெரியவில்லை.  ஆனால் காதலை நந்தாவிடம் தெரிவிக்கும்முன்பே தந்தையிடம் கூறியிருந்தாள்.

ஆனால் பெண் இதைக்கூறியது முதல், தீனதயாளன் வார்த்தைகளால் வசைபாடுவது இன்னும் கூடியிருந்தது.

அழைத்தது கேட்காமல் அமைதியாக இருந்தால்கூட, பெண்ணை வார்த்தைகளால் அசிங்கப்படுத்தியிருந்தார்.

“என்ன அவங்கூட இந்த வயசுலயே கனவுல டூயட்டா! உசிரோட  கொளுத்திப்புருவேன் பாத்துக்கோ!”

“யாருக்கும் தெரியாம வெள்ளாவில வச்சி அவிச்சு அப்புடியே புதைச்சிருவேன்”, என்பார் சிலநேரங்களில்.

“படிக்கற வயசில புத்தி இப்டிப் போனா படிப்பு எப்டி வரும்.  நீ எல்லாம் படிக்க லாயக்கு இல்லை. படிக்கிறேன்னு போயி பெஞ்சைத் தேய்க்கத்தான் லாயக்கு!”, என்பார்.

“உப்பு, உரைப்பைக் குறைடீ.  அதெல்லாம் நல்லாப் போட்டு, காரசாரமா குடுக்கறதாலதான் காதலிக்கிறேன்னு வந்து பெத்தவங்கிட்டயே பயமில்லாம சொல்லுது,  மானங்கெட்ட ஜென்மம்!”, என கௌசல்யாவிடம் கூறுவார்.

நந்தா ஒதுங்கியிருந்தான்.  பெண்ணும் அவனோடு பேசுவதில்லை.  ஆனாலும் வீட்டில் அர்ச்சனைகள் நின்றபாடில்லை.

அதிதீயை தீனதயாளன் நம்பவே இல்லை.

ஒரு காலகட்டத்திற்குமேல் வெறுத்துப் போயிருந்தாள் பெண்.  பெண்ணாகவே, நந்தாவிடம் வலியச் சென்று ஓரிரு வார்த்தைகள் பேசத் துவங்கியிருந்தாள்.

“பெத்த அப்பாங்கிற மரியாதையில்லை!  இவ்வளவு சொல்லியும் ரோட்டுக்காட்டுல நின்னு அவனோட பேசிட்டு வரன்னா மனசில எவ்வளவு திண்ணக்கம் உனக்கு! எல்லாம் உன் ஆத்தா கொடுக்கிற இடம்!  அவளைப் போட்டா எல்லாம் சரியாகிரும்!”, என அன்று கௌசல்யாவிற்கு அடியும், உதையும் அரங்கேறியிருந்தது.

“இந்த வயதில என்ன ஏத்தமிருந்த பெத்தவங்கிட்டயே வந்து அவனத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லுவ?  நானா என்னிக்குமே அந்த அன்னக்காவடிக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்.  எனக்கும் கல்யாணச் செலவு மிச்சம்னு உனக்கு காலத்துக்கும் தண்டச்சோறு போட்டாலும் போடுவனே தவிர கண்டிப்பா அவனுக்கு கல்யாணம் பண்ணித் தரமாட்டேன்!”, என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்கக் கேட்கவே, இனம் புரியாமல் நந்தாவிடம் மனம் அலைபாய்ந்து, ஒன்றுபடத் துவங்கியிருந்தது.

முன்பெல்லாம் என்றாவது தன்னைத் தேடி வரும் நந்தாவைத் தவிர்த்து ஒதுங்க எண்ணியவள், அடுத்தடுத்து ஆசையோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசத் துவங்கியிருந்தாள்.

அப்படியே சென்றிருந்த இருவரின் சொல்லப்படாத காதல், வளர்ந்ததேயன்றிக் குறையவில்லை.

கல்லூரிக் கல்வியை முடித்துவிட்டு வேலைக்குச் செல்கிறேன் என நின்றவளை செல்ல ஒப்புக் கொள்ளவில்லை.  அவரே கோச்சிங் வகுப்பில் சேருமாறு கூற, அந்த வகுப்பிற்கு செல்லத் துவங்கியிருந்தாள்.

நாள்கள் நரக வேதனையோடு சென்றது.

தரகரின் வாய்மொழியாக, கோவிலில் வைத்துத் திருமணம் செய்ய மாப்பிள்ளை வீட்டாரிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார் என்கிற தந்தையின் ஏற்பாட்டை எதிர்பாரா வேளையில் அறிந்தவள், அதற்குமேல் தாமதிக்க விரும்பவில்லை.

தாமதித்தால், தந்தையின் விருப்பம்போல வேறொருவனுக்கு மனைவியாகலாம்.  ஆனால் மனம் அவனோடு ஒன்றாது என்பதை தீர்க்கமாக அறிந்திருந்தாள்.

இரண்டரை ஆண்டுகளில் நந்தாவின்மீது காதலை வளர்த்தவளுக்கு, இன்னொருவனோடனான திருமணம் என்பதை நினைக்கவே அருவெறுப்பாக உணர்ந்தாள்.

தந்தையின் முடிவின்படி திருமணம் செய்துகொண்டால், சங்கடமான ஒட்டாத வாழ்வாக அமையும் என்பதால், நந்தாவிடம் விசயத்தைக் கூறி, அவனுடைய கருத்தை அறிய விரும்பினாள் அதிதீ.

நந்தாவின் தங்கை திருமணம் முடிந்து, அடுத்து அவனது திருமணத்தைப் பற்றிப் பேசத் துவங்கியதுமே, தாயிடம் அரசல் புரசலாகக் கூறியிருந்தான் நந்தா.

“ம்மா… மாமா பொண்ணு வேணாம்.  எனக்கு ஒரு புள்ளையப் புடிச்சிருக்கு.  நீ சரின்னா அந்தப் புள்ளையையே கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கேன்”, என்றிருந்தான் நந்தா.

காமாட்சி, தனது மகனா தன்னிடம் இவ்வளவு பேசுவது என்று ஆரம்பத்தில், அதிசயத்திருந்தார்.

ஆனால் மகன் கூறிய விசயம் அறிந்தது முதலே, “நம்மள இந்தளவுக்கு கைகொடுத்து தூக்கி விட்டதே மாமா தானய்யா.  அது வீட்டுப் புள்ளைய வேணானு சொல்றீயே! நாம நல்லாருக்கணும்லய்யா?”, என பாவம்போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்பார்.

அதில் நந்தாவிற்குமே சங்கடமாக இருக்கும்.

பதில் எதுவும் சொல்ல மாட்டான்.  ஆனால் தனது முடிவில் இருந்து பின்வாங்கவேயில்லை.

சட்டென முடிவெடுத்தவள் நந்தாவிடம், “எங்கப்பா கல்யாணத்துக்கு சைலண்டா ஏற்பாடு பண்ணிட்டாருடா.  உனக்கு என்னையக் கல்யாணம் பண்ணிக்கறதான ஐடியா இருந்தாச் சொல்லு.  நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.  இல்லை உங்க வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்கன்னா உன் வழியில நீ போ.  என் வழியில நான் போயிக்கறேன்”, என்று நேரடியாகவே கேட்டிருந்தாள்.

நந்தாவிற்கு, அதீதியின் மீது உண்டான உணர்வை ஆரம்பம் முதலே தனது வாழ்க்கையின் பிளஸ்ஸாக எண்ணியிருந்தான்.

ஏனோதானோ என்று ஆரம்பத்தில் பள்ளிக்கு வந்தவன், அதீதியின் மீது உண்டான உணர்வினால், (அப்போது அது காதல் என்றறியவில்லை)  அவளின் கற்றலின் ஆர்வத்தைக் கண்டு தானும் ஆர்வத்தோடு கற்றான். 

அவள் டியூசன் சென்றபோது ஆரம்பத்தில் அவளைக் காண எண்ணி டியூசன் சென்றவன், அதன்பின் அவளோடு போட்டிபோட்டு படிக்கத் துவங்கியிருந்தான்.

பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தபோதும், அடுத்து கூலி வேலைக்கு அனுப்பும் திட்டத்தோடு இருந்த தாயின் வார்த்தையை மீறி டிப்ளமோ படிக்க வேண்டும் என்கிற உந்துதல் பெண்ணால்தான் உண்டாகியிருந்தது.

பெண் கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்குகிறாள்.  தன்னால் பட்டம் வாங்க இயலாதபோதும் ஒரு பட்டயமாவது வாங்க வேண்டும் என கட்டிட வேலைக்குச் செல் என்று கூறிய தாயிடம் மன்றாடிப் படித்தான்.

ஆரம்பத்தில் மறுத்தவர், படிக்கும்போதே விடுமுறை நாள்களில் பணிக்குச் செல்லத் துவங்கிய மகனை நம்பத் துவங்கினார்.

தனது வீட்டின் வறுமையைத் தீர்க்க நந்தா தனக்குத் தோள் கொடுப்பான் என்கிற உறுதி உண்டாகியிருந்தது.  அதனால் மகனுக்கு அவ்வப்போது படிப்பிற்கான செலவை கடன்பட்டு வாங்கிக் கொடுத்தார்.

இளவயதிலேயே பணிக்குச் சென்று சம்பாத்தியம் செய்து கொண்டு, படிக்கவும் செய்த மகனைக் கொண்டாடினார் அந்தத்தாய்.

ஆனாலும் மகனது திருமணம் பற்றிய வார்த்தைகள் இன்னும் ஒரு ஓரத்தில் பயத்தைத் தந்திருந்தது என்னவோ உண்மை.

ஆகையினால், அவ்வப்போது தனது மறுப்பையும் வார்த்தைகளால் நேரிடையாக இல்லாமல், மறைமுகமாகத் தெரிவித்தபடியே இருந்தார்.

நந்தாவைப் பொறுத்தவரை, தனது வாழ்வு இத்தகைய நல்வழியில் மாறியதற்கு, அதிதீயின் மீது தான் கொண்ட காதலே என்கிற எண்ணம் அவளை தன்னோடு வாழ்நாள் முழுமைக்கும் வைத்துக் கொண்டாடச் சொன்னது.

பெண் தனக்கு ஏற்பாடு செய்த திருமணம் பற்றி விசயத்தைக் கூறியதும், சற்றும் தயங்காமல் ஒரே வாரத்தில் திருமணம் செய்து தன்னோடு அழைத்துக் கொண்டான்.

///////////

பேருந்தில் அலுவலகம் சென்று, அன்று எந்த கட்டிடத்தில் தனக்கு வேலை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டவன், மதிய உணவு இடைவேளையில் தங்களது கிராமத்திற்கு சென்று வர திட்டமிட்டிருந்தான் நந்தா.

கம்பெனியின் இரண்டு சக்கர வாகனத்தில் கட்டிடத்திற்குச் சென்றவன், அங்கிருந்த மேஸ்திரியிடம் உணவு இடைவேளையில், சிறிய வேலை ஒன்றை முடித்துவிட்டு ஒரு மணித்தியாலத்தில் வருவதாகக் கூறிவிட்டு தனது கிராமத்திற்குக் கிளம்பியிருந்தான்.

அரை மணித் தியாலப் பயணத்தில் வீட்டிற்கு வந்த மகனை, அவனின் மாறுபட்ட உடல்மொழி மற்றும் புதிய மணமகனுக்குரிய சில பொலிவு இவற்றை அளவெடுத்தார்.

இதுவரை இல்லாத, பெரியளவு மாறுதல் அந்தத் தாயின் கண்களுக்குத் தென்பட்டது என்னவோ உண்மைதான்!

இதுவரை பார்த்திராத புதுச் சட்டை வேறு மனதில் நெருடியது.

இதுவரை வருடத்தில் இரண்டு சட்டைகள் தனக்கும் தனது தம்பிகளுக்கும், அதுவும் தாயோடு சென்றுதான் எடுப்பான். 

அதனால் வேறுபாடு சட்டென பிடிபட்டிருந்தது காமாட்சிக்கு.

பசியோடிருந்தாலும், ஏதோ புதுவிதமான இனிமையைத் தாங்கியிருந்த கம்பீரமான முகம்.

கம்பீர முகம், அவனது களையை மேலும் கூட்டி நிமிர்வாகக் காட்டியது.

மகனை ஆராய்ச்சிக் கண்ணோடு நோக்கியபடியே, “என்ன நந்தா நாளைக்கு சாயங்காலந்தானே வரேன்னு சொல்லிட்டுப் போன.  இன்னிக்கே வந்துருக்க? எதுவும் இங்க சோலியா வந்தியா? இங்க எதனா விசேசமா?”

தாயின் கேள்விக்கு என்ன பதில் கூறினான்?

அடுத்த அத்தியாயத்தில்.

////

https://www.amazon.in/SAROJINI-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/e/B084QL1J4X?ref_=dbs_p_ebk_r00_abau_000000
https://www.amazon.in/SAROJINI-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/e/B084QL1J4X?ref_=dbs_p_ebk_r00_abau_000000
error: Content is protected !!