VVO-23

VVO-23

வெல்லும் வரை ஓயாதே!

வெல்! ஓயாதே – 23

வாரமொன்று கடந்தும், மலையேறிய தனது மங்கையர்கரசியின் மனதை மாற்ற இயலாமல் மண்டையைப் பிய்த்தபடியே பித்துபிடித்தாற்போல மாறியிருந்தான் நந்தா.

கவனக்குறைவு, இத்தகைய கவலைக்குள் என்பதைவிட, ஆழ்கடல் சகதிக்குள் தள்ளியது போன்றிருந்தது.

ரம்யா வந்து பேசியபோது, சற்றுநேரம் மொபைலைக் கையில் எடுத்து வைத்திருந்து மனைவி மகனைப் பார்த்துவிட்டு வைத்தவன், நிச்சயம் இதுபோலாகும் என நினைக்கவில்லை.  தவறுதலாக விரல் பட்டு, அழைப்பு அதிதீக்கு சென்றிருந்தது.

பெண் எடுத்து ஆரம்பத்தில் ஹலோ, ஹலோ எனக் கேட்டுவிட்டு, சற்று நேரம் காத்திருந்தவளுக்கு, அண்ட சராசரமும் ஆடிய உணர்வு.

நிச்சயமாக பெண் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.

ரம்யாவின் குரலையும், நந்தாவின் குரலையும் மாறிமாறிப் பேசக் கேட்டவளுக்கு ஆரம்பத்தில் எதுவுமே புரியவில்லை.

பிறகு தன்னை நிதானித்து ப்ளூடூத் வழியே கேட்டுக் கொண்டே வேலை பார்க்க முயன்றவளுக்கு, உடலும் மனமும் ஒத்துழைக்கவில்லை.

சற்று நேரம் தனது கேபினை விட்டு வெளியே வந்து நின்றவாறே முழுமையாகக் கேட்டவளுக்கு உதிரமும், சதுரமும் ஆடியதோடு, ஓரளவு விசயம் பிடிபட்டிருந்தது.

அதற்குமேல் அங்கு அவளால் இருக்க முடியவில்லை.

கண்ணில் நீர்வீழ்ச்சியிலிருந்து பொங்கியதுபோல நீர் வழிந்தோட அதனை நிறுத்தும் வழி தெரியாமல், பிறரின் கேள்விக் கணைகளை சமாளிக்க இயலாமல் திண்டாடினாள்.

எத்தனை அடக்கினாலும் முடியவில்லை.

ஏதோ மீளமுடியாத பெருந்துக்கம் நிகழ்ந்தாற்போல மனதும், உடலும் மாறியிருந்தது.

வீட்டிற்கு சென்றாலும் தாயை தவிர்க்க இயலாது.

அவரிடம் இதைப்பற்றிக் கூற மனம் ஒப்பவில்லை.

மதிய உணவின்போதும் அனைவரும் அவரவர் தேவையைக் கவனித்திடச் செல்ல, தனது தோற்றத்தை சீர்செய்து கொண்டதோடு, விடுப்பு எடுத்துக்கொண்டு, நந்தா இந்நேரம் அலுவலகத்தில் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என நினைத்து, நேராக நந்தாவின் அலுவலகத்தினை நோக்கி விரைந்திருந்தாள்.

தன்னிடம் இருக்கும் மாற்று சாவியைக் கொண்டு திறந்து கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் கிளம்பி வந்திருந்தாள்.

வாசலில் வந்து ஆட்டோவிலிருந்து இறங்கியவளுக்கு, நந்தாவின் பைக்கைப் பார்த்ததும், இன்னும் வீட்டிற்கு செல்லவில்லையா என்கிற கேள்வியோடே படபடப்பும் ஒருங்கே சேர்ந்திட அங்கு வந்தாள்.

வந்தவள், நந்தா தனித்திருப்பதைக் கண்டதுமே நிம்மதியாக உணர்ந்தாள்.

ஆனால் அவனிடம் எதுவும் பேச முனையவில்லை.

நந்தா, அந்நேரத்தில் நிச்சயமாக அதிதீயை அங்கு எதிர்பார்க்கவில்லை.

அதிசயத்தவன், “என்னடீ, இந்நேரத்தில இங்க வந்திருக்க?”, என இயல்பாகக் கேட்டவனிடம்

“ஏன், நான் வந்தது உனக்கு டிஸ்ட்ரப்பன்ஸ்ஸா இருக்கா?”, என்கிற கேள்வியில் அப்படியே அமைதியாகியிருந்தான்.

‘என்னாச்சி இவளுக்கு!  ஆபீஸ்ல எதுவும் பிரச்சனைபோல! அதான் குரலில் அத்தனை உஷ்ணம்’ என்றே நினைத்துக் கொண்டான்.

என்னவென தெரியாமல் தானாக எதையும் பேசவேண்டாம் என அமைதி காத்தவன், எந்தவித மாறுதலும் இன்றி அதேபடி கடந்திட்ட பத்து நிமிடங்களுக்குப்பின், “பசிக்குது! நீ சாப்ட்டியா?”

“…”

“…சாப்பிடலனா வா! வீட்டுக்குப் போகலாம்!”, என அழைத்தான்.

“போறதானா நீ போ! நான் ஈவினிங் வீட்டுக்குப் போயிப்பேன்!”

“ஏன்? என்னாச்சிடீ? பேங்க்ல எதனா பிரச்சனையா!”, என மனைவியை நெருங்கிட

“பேங்க் எப்பவும்போலத்தான் இருக்கு! சில மனுசங்கதான் மாறிப் போயிட்டாங்க!”, என்ற விரக்தி பேச்சில் முகத்தை கூர்ந்து கவனித்திட, அழுது களைத்திட்ட முகமும், சிவந்த கண்களும் ஏதோ விசயம் பெரிதென்று கூறியது.

ஆனாலும் இங்கு நடந்ததை, அதிதீயோடு இணைக்க மனம் ஒப்பாமல், “சொன்னாத்தானடீ தெரியும்!”, இதமாகவே கேட்டான்.

“எல்லாரும் எல்லாத்தையும் சொல்லிக்கிட்டா இருக்கீங்க! நான் மட்டும் சொல்ல…!”, என்றதுமே நந்தாவிற்கு சந்தேகம் வலுத்திட, கையில் இருந்த அலைபேசியினை எடுத்து, ‘ப்ரீத்தியின் புகுந்த வீட்டில் என்றாவது எதாவது செய்தால் இப்படித்தான் இருப்பாள் என நினைத்து’, மாமியாருக்கு பேசிட எண்ணி எடுத்தவன், முகமே கருத்திருந்தது.

பிரச்சனைக்கு காரணம் யாரோ அல்ல! தானும் காரணமாகிப் போயிருந்ததை கண்ணால் நம்ப முடியாமல், மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்த்து சோர்ந்தான்.

‘எப்படி?  அவ்வளவு நேரம் எப்படி கவனிக்காமல் இருந்தோம்?’ புரியாமல், அதன்பின் அழைப்பு சென்ற நேரத்தைப் பார்த்து அனைத்தையும் யூகித்தவன் அப்படியே தலையில் கைவைத்தபடியே அமர்ந்துவிட்டான்.

“நீ எதுக்கு இப்டி உக்காந்திருக்க.  நாந்தான பாதிக்கப்பட்டவ!”, என்றவளை, “எதுனாலும் வா! போயி சாப்பிட்டு தெம்பா பேசலாம்!”, என எழுந்து அருகே வந்தவன் அதிதீயை தனது இரு கரங்களைக் கொண்டு தோள் தொட்டுத் தூக்கிட

நந்தாவை இருகைகளாலும் சப்சப்பென கோபம் தீரும்வரை அடித்தாள்.

“ஏய் வலிக்குதுடீ!”, என மறைத்தவன், “சரி என்னை அடிச்சா உங்கோபம் போயிருமா?, சொல்லுடீ!”

“…”, நிறுத்திவிட்டுப் பார்த்தவள், அப்படியே நந்தாவின் மார்பில் சாய்ந்து கொண்டு அழுது தீர்த்தாள்.

தலையை வருடியவனுக்கு, என்ன நடந்துவிட்டது! இத்தனை வருத்தி அழவேண்டிய நிர்பந்தம் என்ன என பெண்ணது நிலை உண்மையில் புரியவில்லை.

“அதீ… எதுக்கு இப்ப வீனா அழுற!”

“வீனா போனவ அழக்கூடக் கூடாதா?”, எனத் தேம்பியவளைத் தேற்றும் வழி தெரியாமல் விழித்தான்.

ஆனால் அவளின் கண்ணீரீன் வெப்பம் நந்தாவின் இதயம் தொட்டுச் சொன்னது, அவளின் மனவேதனை எத்தகையது என்று.

அவனுக்குமே வருத்தமாக இருந்தது.

ஆனாலும் பெண்ணை அதிலிருந்து மீட்க எண்ணி, “இந்த மூஞ்சியோட வீட்டுக்குப்போனா அவ்ளோதான்.  பேசாம பக்கத்தில சாப்பாடு வாங்கிட்டு வரேன்.  இங்கேயே சாப்பிட்டு, தெம்பா என்னோட சண்டை போடுவியாம், அழுவியாம்!”, என மனைவியை சமாதானம் செய்து, அழுகையை நிறுத்தப் போராடியவன், சென்ற பத்து நிமிடத்தில் உணவோடு வந்திருந்தான்.

எவ்வளவு வற்புறுத்தியும் உண்ண மறுத்தவளை, வம்படியாக இருமுறை ஊட்டிவிட்டான். பிடிவாதத்தினை தவிர்க்க இயலாது முதலில் வாங்கியவள், அதன்பின் மறுத்திருந்தாள். அதனால் அதிதீயை விட்டுத் தானும் உண்ண மனமின்றி பசியோடு அமர்ந்துவிட்டான்.

எந்த சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை.

தன்மீது எந்தத் தவறும் இல்லாதபோது, தன்னைத் தண்டிப்பது பாவம் என மன்றாடிக் கேட்டவனைக் கண்டு கொள்ளவே இல்லை.

எதிலும் கவனமின்றி, இரண்டு நாள்களை வீட்டிலேயே கழித்தவள், அதன்பின் அலுவலகம் செல்லத் துவங்கினாள்.

பெண்ணை அழைத்துச் செல்ல முன்வந்தவனை, தவிர்த்துவிட்டாள்.

“நானே போயிப்பேன்.  எனக்கு டூவிலர் தனியா வாங்கித்தா!”, என்றதோடு, அன்று ஆட்டோவிலேயே சென்றுவிட்டாள்.

அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கௌசல்யா, என்னவென மருமகனிடம் பேருக்கு விசாரிக்க, “கொஞ்சம் வர்க் டென்சன்ல அப்டி இருக்காத்தை!  சரியாகிருவா!”, என சமாளித்தான்.

கௌசல்யாவிற்கு விசயம் பற்றி அறிந்திருந்தாலும்,  சமாளிக்கிறார் மருமகன் என்பது புரிந்தது.

மகளிடம் அதற்குமுன்பே கேட்டதற்கு, “ம்ஹ்ம்… நான் சாகப் போறேன்னு டாக்டர் சொல்லியும், இன்னும் சாகாம இருக்கேன்.  அதான்!”, என்றவளை

“என்ன பேச்சுடீ பேசுற!  என்னாச்சு உனக்கு!  ஏன் இப்டி நடந்துக்கற!  விசயம் என்னனு சொன்னாத்தான அதுக்கு ஒரு முடிவு எடுக்க முடியும்.  அதுக்காக வாயில என்னத்தைப் பேசறதுன்னு இல்லாம கண்டதையும் பேசுவியா?”, என்று பதிலுக்குக் கத்தியிருந்தார்.

அத்தோடு, “அந்தப் பையனும் பாவம் கெஞ்சுது!  நீ மிஞ்சுற!  உனக்கெல்லாம் உங்கப்பனை மாதிரி ஒருத்தவன் வந்து வாய்ச்சிருக்கணும்.  நாய்க்குட்டி மாதிரி உன்னையே சுத்தி வரவரை, கொஞ்சமாது மதிக்கிறியா?  நீயே மதிக்கலைனா சமூகத்தில அந்த மனுசனுக்கு என்ன மரியாதை கிடைக்கும்.  எல்லாத்தையும் பாத்து வளர்ந்த உனக்கு புத்தி சொல்ற அளவுக்கு எனக்கு முடியலைம்மா! கிடைச்ச நல்லதை காப்பாத்திக்க துப்பு வேணும்!”

“இப்ப என்ன நடந்துதுன்னே தெரியாம என்னை ஏன் கத்தறீங்க?”

“யாருடீ இப்ப கத்துறா?  நீயா இல்லை நானா?”

“…”

“…அப்ப விசயத்தை எங்கிட்டச் சொல்லு!”

ரம்யாவைப் பற்றி மேலோட்டமாகக் கூறிவிட்டு, அதற்கான நந்தாவின் அணுகுமுறையையும் கூறியவள், “இதுல நீங்க வந்து என்ன பேச முடியும்.  எனக்கு வலிக்குது.  அதான் அவனை என் வலி தீரவரை வாட்டியெடுக்குறேன். எனக்கு ரிலீஃப்பா ஃபீல் பண்ணவுடனே பேசப்போறேன்.  அதுக்குள்ள  இதை உங்கிட்ட வந்து சொல்லி என்னாகப் போகுது?”

“எல்லாப் புண்ணாக்கு புடலங்காயும் தெரிஞ்சிருக்குல்ல! அப்ப அந்தப் பையனை இந்த வீட்ல வச்சு மரியாதைக் குறைவா நடத்தக்கூடாதுல்ல! அப்டி நீ நடத்துறதை என்னால சரினு பாத்துட்டு சும்மா இருக்க முடியாது.  பேசாம உங்க வீட்டுக்குப் போயி என்ன வேணா செஞ்சுக்க!  உம்மகனை வேணா நாம் பாத்துக்கறேன்!”

“ம்மா… சீக்கிரத்தில எல்லாம் சரியாகிரும்!  எனக்கு அவனே டைம் கொடுத்தாலும், நீங்க குடுக்க விடாம என்னை நை நைனு பேசாதீங்க.  புரிஞ்சிக்கங்க!”

“எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு அதீம்மா! அவரு ஆம்பளை!  ரொம்ப நீ மிஞ்சினா, மிஞ்சறது எதுவுமே இல்லைனு போயிரும்!  பொம்பளைக்கு இவ்ளோ ஆங்காரம் கூடாது! இப்டி நீ எதுவோ முன்ன செய்யப் போகத்தான் இந்த மாதிரி இக்கட்டுல கொண்டு வந்து அவரை நிறுத்தியிருக்க!  அதைப் புரிஞ்சு உன்னை மாத்திக்கப் பாரு!”

“நான் ஆங்காரமா எல்லாம் இல்ல!  எனக்கு இன்னும் நடந்ததை ஈஸியா கடக்க முடியலை!  அதனால அமைதியா இருக்கேன்! கொஞ்சம் டைம் வேணும்!”, என அன்றோடு அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவளை தொந்திரவு செய்யாமல் பேரனோடு தனது வேலைகளில் கவனத்தோடும், அவ்வப்போது மகள் என்ன செய்கிறாள் என வாசலில் நின்று பார்ப்பதையும் வாடிக்கையாக்கியிருந்தார் கௌசல்யா.

இரவு நேரங்களில் தனிமையில் அதிதீயைப்பேச வைக்க எவ்வளவோ முயன்றும் நந்தாவால் முடியவில்லை.

மகனிடம் மட்டும் இயல்பாக இருந்தவள், தாயிடம்கூட, வள்ளென்று பேசியது நந்தாவிற்கே சங்கடமாக உணர்ந்தான்.

தேர்வுகள் துவங்கிடவே, அதில் கவனத்தைச் செலுத்தினான்.

திருச்சியிலேயே தங்கி தேர்வுகள் முடிந்ததும் வருவதாக மனைவிடம் கூறிவிட்டு, கிளம்பியிருந்தான்.

பத்து நாள்கள் இனி நந்தா இங்கு வரமாட்டான் என்றதும், ரம்யாவை அவ்வப்போது வங்கியில் விழி தேடியது.

நீண்ட விடுப்பிற்குபின் ரம்யா அலுவலகம் வரத் துவங்கியிருந்தாள்.

ரம்யாவைக் கண்டதும், ‘அப்பாடா’ என நிம்மதிப் பெருமூச்சு வந்தாலும், கணவனின் வார்த்தைகள் எதிலும் சபலமோ வேறு தனக்கு பாதகமாக இல்லையெனினும் சந்தேகம் கொள்ள மனம் தூண்டியது.

ஆழ்மனதோ, என் நந்தா அப்டிப்பட்டவன் இல்ல என வாதாடினாலும், மேல்மனம் அப்டியிருக்குமோ, இப்டியிருக்குமோ என எதிர்மறை எண்ணத்தைத் தோற்றுவித்து அதிதீயை வாட்டியது.

இயன்றவரை ரம்யாவைத் தவிர்த்தாள்.

ரம்யாவிற்கும் அதிதீயின் ஒதுக்கம் கண்டு, விசயம் இவள் காதுக்கு வந்ததை உணர்ந்து கொண்டாள்.

இன்னும் இரண்டு ஆண்டுகளேனும் இங்கு இருந்தே ஆகவேண்டும். அதுவரை அதிதீயை காண்பதை, பேசுவதை நிச்சயம் தவிர்க்க இயலாது என கடந்திருந்தாள் ரம்யா.

ரம்யாவிற்கும் அதிதீயைக் கண்டு பொறாமையே!

‘இந்தப் பட்டிக்காடுக்குப் போயி ஹாண்ட்சம்மா இப்டி ஒரு புருசன். ஆளும் அது ட்ரெஸ்ஸும்.  கொஞ்சம் கூட கேர் இல்லாம எப்டி இப்டி இருக்கா இந்தப் பொண்ணு.  அதையே திலோத்தமை ரேஞ்சுக்கு வச்சுக் கொண்டாடற அவன் ஒரு பைத்தியம்’, என்றே ஒவ்வொரு முறையும் அதிதீயைத் தாழ்த்தியும், தானே அனைத்திலும் சிறந்தவள் என்கிற ரீதியிலும் எண்ணுவதை விட்டாளில்லை.

அதிதீக்கோ, ‘நம்ம புருசனைப் பத்திதான் இந்த ரம்யா பேசறாங்கனே தெரியாம ஈனு கேட்டுக்கிட்டு இருந்த நம்ம ஏமாளித்தனத்துக்கு, யாரையும் குறை சொல்லக் கூடாது’, என்றே தோன்றியது.

ஆனாலும், தன்னை மீறி இவ்வளவும் எப்படி நடந்தது என யூகித்து மனம் நொந்தது அதிதீக்கு.

வேறு வாய்ப்புகள் ஏதேனும் கிட்டாதா நந்தாவை நெருங்க என சந்தர்ப்பம் பார்த்தே காத்திருந்தாள் ரம்யா.

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!