VVO1

VVO1

வெல்லும் வரை ஓயாதே!

வெல்! ஓயாதே – 1

புதிய பாதை! புதிய இடம்!  புதிய மக்கள்! புதிய சிந்தனை! புதிய வாழ்க்கை!

பழகாத இடத்தில் இருவரும் சற்று தெம்பாகவே உணர்ந்தனர்!

இது மனித இயல்பு அல்லவே!  ஆனாலும் உண்மையில் அமைதியும், நிம்மதியும் ஒருங்கேசேர தெம்பாக உணர்ந்திருந்தனர்.

தனக்கு பரிட்சயமான, பழகிய இடத்தில் மட்டுமே தைரியத்தோடு இருக்க முடியும்.

உலக இயல்பு அதுதானே!

முதன்முதலாய்  புறம்பான செயல்கள், சிலருக்கு பிடிக்காத செயல்கள், குறிப்பாக வலியோருக்கு பிடிக்காதவற்றைச் செய்த எளியோர், என எவரும் மேற்கூறிய கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

இதில் வலியோர் பணம் படைத்தவர் என்பதல்ல! எளியோர் என்பவர் ஏழ்மை நிலையில் இருப்பவரும் அல்லர்!

இருவரும் கருத்தொருமித்து செய்திருந்தாலும்,  செய்த விசயம் அவர்களை அவ்வாறு எண்ணச் செய்திருந்தது.

புதிய இடத்தை வந்தடையும்வரை, இதயம் செய்த ஜாலத்தில், அது வெளிவந்துவிடுமோ என்கிற நிலையில் இருந்தனர்.

ஒருவரின் அருகாமை மற்றவருக்கு இதத்தைத் தந்திருக்கவில்லை. சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளித் தந்திருக்க வேண்டிய சூழல் முற்றிலும் மாறுபட்டிருந்தது.

நண்பர்கள் எத்தனை நம்பிக்கை வார்த்தைகள் கூறியிருந்தாலும், வெளியில் அவர்கள் கூறியதை நம்பியதுபோல நடிக்கத்தான் முடிந்ததே தவிர,  உண்மையில் நம்பிக்கையில்லை.

உணர்வுப் போராட்டத்தில்தான் எத்தனை பிரச்சனைகள்!

பசிக்கு உழைக்க வேண்டிருக்கிறது. உழைத்தாலும் உண்ணும் நேரத்தை, உண்ணப்போகும் நேரத்தையும், உண்ணும் உணவையும், அளவையும் நிச்சயமாக நிர்ணயித்திட முடியாத மனித வாழ்க்கை.

எத்தகைய வசதி, வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும், எண்ணிலடங்கா உணவு வகைகள் வீட்டில் சமைக்கப்பட்டு நமக்காக அது உணவு மேசையில் காத்துக் கொண்டிருந்தாலும், கையில் நிறையப் பணம் இருந்தாலும், படைத்தவன் மனது வைக்காமல், உணவின் அருகில்கூட செல்ல முடியாது.

காலையில் நடந்து முடிந்திருந்த விசயத்தால், இருவரும் அதிஇன்பமாக உணர்ந்தாலும் அதை உணர முடியாத நிலை.  அதனால் உணவிருந்தும் உட்கொள்ள இயலாத மனநிலை!

குடும்பத்தை எண்ணியதும் தங்களின் செயல் விஸ்வரூபமாகத் தெரிந்தது.

இருவரும் அத்தகைய நிலையில்தான் உணவைத் தவிர்த்து கிளம்பியிருந்தனர்.

சொந்தமும், பந்தமும் நின்று செய்து கொடுக்கும் திருமணமான புதுத் தம்பதியரின் நிலை பல எதிர்காலக் கனவுகளை அசைபோட்டு, களிப்போடும், மகிழ்வோடும் இருந்திருக்கும். 

அத்தகைய திருமணமே கோலாகலத் திருவிழா போன்றதொரு நிகழ்வாக இருந்திருக்கும்.

ஆனால் இங்கோ, தாலி கட்டும்வரை பதக் பதக் என மனதில் பயம் ஆக்ரமித்திருக்க, ஊரைவிட்டு நெடுந்தொலைவு வரும்வரை நிம்மதியாக மூச்சுவிடக்கூட மறந்திருந்தனர் தம்பதியர்.

இருவரின் வீட்டாரும், தகவல் அறிந்ததும் தேடத் துவங்குவர்.

தான்தோன்றித் தனமான இருவரின் முடிவில் அனைத்தையும், இங்கு அனைத்தையும் என்பதில் குடும்பத்தின் மானம், மரியாதை இன்னபிற அனைத்தும் அடங்கும்.  அத்தனையையும் குழிதோண்டாமல் புதைத்துவிட்டதான புலம்பல்கள் இருவரது வீட்டிலும். (இது உற்றாரும், ஊராரும், பெற்றோரும் கூறும் வார்த்தை)  இன்று நிச்சயமாக  நடந்தேறும்.

பெற்றோரின் சம்மதத்திற்காக மூன்று முழு ஆண்டுகளை பொறுமையாகவே கடந்திருந்தனர் இருவரும்.

அதற்குமேலும் பெரியவர்கள், இருவருக்கும் ஏற்ற சாதகமான எந்த முடிவிற்கும் வராததால், இவர்களாகவே வீட்டைவிட்டு வெளிவரும் முடிவிற்கு வந்திருந்தனர்.

வந்தவர்கள் அருகில் உள்ள ஊரிலிருந்த கோவிலில் வைத்து நண்பர்கள் துணையோடு, தாலி கட்டியதும் இங்கு கிளம்பியிருந்தனர்.

இருவரின் வீட்டுப் பெரியவர்களும் அவரவர் நிலைப்பாட்டில் நின்றிருந்தனரே தவிர, இருவரின் மனநிலையை புரிந்து கொள்ள முயலவில்லை.

அவர்களுக்கு, தான் வளர்த்த பிள்ளைகளின்மீதும், அவர்களின் முடிவின்மீது அத்துனை நம்பிக்கை.

திருமணம் நண்பர்களின் முன்னிலையில் முடிந்ததோடு, சற்றும் தாமதிக்காமல் இந்த ஊருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.  முன்பே நண்பன் ஒருவரின் முயற்சியினால் பன்னிரெண்டிற்கு பன்னிரெண்டு அளவு அறையினை வாடகைக்கு எடுத்திருந்தான் மணமகன்.

இருவரின் மனநிலையும், புதுமணத் தம்பதியருக்கான அனைத்து எதிர்பார்ப்புகளையும் எதிர்நோக்காமலேயே நெஞ்சுக் குழிக்குள் புதைத்திருந்தது.

திருமணம் நடந்து முடிந்ததில் இருவருக்கும் நிறைவும், நிம்மதியும் வந்திருந்தது.

இனிவரப் போகும் நாள்களை எண்ணிப் பயம் இருந்தாலும், அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை இருவருக்குமே இருந்தது.

வீட்டிற்குள் நுழைந்ததுமே பெண்ணின் முகத்தைக் கவனித்திருந்தான் நந்தா.

பயணத்தின்போதே வாடியிருந்த முகம், வீட்டைத் திறந்து உள்ளே வந்ததும், வதங்கிய மலராக கூம்பியிருந்தது.

எப்பொழுதும் கலகலவென பேசி சிரித்து சந்தோசமாகப் பார்த்திருந்தவளை, முதன் முதலாக இதுபோன்றதொரு கோலத்தில் கண்டிருந்தான்.

இதயம் வலித்தது.

நந்தாவைப் பொருத்தவரை, அந்த இடத்தை குறையாக எண்ணவில்லை.

இதைவிடச் சிறிய அறையில், பதினைந்து நபர்கள் படுத்துறங்கி வாழ்ந்த அனுபவமெல்லாம் இருந்ததால், இருவருக்கும் இது அதிகப்படி இல்லையென்றாலும், போதுமானது என்கிற எண்ணம் இருந்தது.

அதனால்தான் நண்பர்களோடு வந்து முன்பணம் தர வரும்போது, அந்த வீட்டை சரியென்றிருந்தான்.

தனது நினைப்புபோல உண்மைநிலை இல்லை என்பதே பெண்ணின் முகத்தைக் கண்டே, கண்டு கொண்டிருந்தான்.

வந்ததும் எப்படிப் பேச்சைத் துவங்குவது என்று யோசித்திருந்தவன், அட்டைப் பெட்டிகளாக அங்கங்கு ஒழுங்கற்று வைக்கப்பட்டிருந்த அறையில் அனைத்தையும் ஒரு ஓரத்தில் ஒதுக்கி பெண்ணை அமருமாறு கூறினான்.

“கொஞ்ச நேரம் ரிலாக்சா உக்காரு அதீ”

“இல்லை.  உக்காந்தா சோம்பேறியா ஆகிரும்.  இப்பவே ஆரம்பிச்சாதான் பொழுது போகறதுக்குள்ள உக்கார இடம் கிடைக்கும்”, என்றவள் இடுப்பில் எடுத்துச் சொருகிய சேலையுடன் வேலையைத் துவங்கிவிட்டாள்.

பெண் காட்டன் சில்க் புடவை உடுத்தியிருந்தாள்.

திருமணத்தன்று பட்டுப் புடவை கட்டாமலேயே தாலி ஏறிய தருணம், ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுமையே.

அதைக்கூட பெண் தனது நன்மைக்காகவே என எடுத்துக் கொண்டாள்.

வழமைபோல சாதாரணமாகக் கிளம்பியதால்தான் தாயிக்கு பெண்மீது சந்தேகம் எழாமல் போனது.

மிகவும் சிரத்தையோடு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவளையே பார்த்தபடியே, அவனது சார்பாக அவனுக்காக காத்திருந்த பணிகளில் கவனம் செலுத்தியபடியே பெண்ணிடம் தனது மனக்குறையை வெளிப்படுத்தினான்.

“சாரிடீ”, நந்தா

கையோடு கொணர்ந்திருந்த ட்ரேவல் பேக்கில், இது நண்பர்கள் வாங்கிக் கொடுத்துவிட்டது. அதனுள் இருந்த பெண்ணின் பொருள்களை, அந்த அறையில் இருந்த செல்ஃபில் அடுக்கியவாறே, “எதுக்கு சாரி. இந்த சாரியெல்லாம் சொல்றதுக்கு நீ கல்யாணம் பண்ணாமே வீட்டோடயே இருந்திருக்கலாம்.  இன்னொருவாட்டி சாரீ சொன்னஅஅஅ அப்புறம் என்னோட இன்னொரு முகத்தைத்தான் பாக்கவேண்டி இருக்கும்”, சற்று கடுமையாகவே கூறினாள் அதிதீ.

“அவ்வளவு பெரிய வீட்ல வளர்ந்தவள இப்டி குருவிக்கூடு மாதிரி இடத்தில கொண்டு வந்து நிறுத்திட்டேன்னு நினைக்கும்போது, ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு.  அதான் அப்டிச் சொன்னேன்.  இனி சொல்லமாட்டேன்”, சட்டென்று வாபஸ் வாங்கிவிட்டான்.

“அது வந்து புரொப்போஸ் பண்றதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும்”, என்று கூறியவள்,

“பின்னாடியே வால் புடிச்சுத் திரியும்போது, பார்த்து பார்த்து சிரிச்சப்ப யோசிக்காததை எல்லாம் காலம்போன காலத்தில யோசிச்சு வருத்தப்படறேன்னு சொன்னா, உம்மேல எனக்கு மரியாதை மண்ணாங்கட்டியெல்லாம் வராது.  அடப்போடா மானங்கெட்டவனேன்னு தான் நினைக்கத் தோணும்”, மனதில் உள்ளதை மறையாது நந்தாவிடம் நறுக்குத் தெரித்தாற்போல கூறினாள் அதிதீ.

பெண்ணது பேச்சினைக் கேட்டவனுக்கு இது புதிதல்ல என்பது புரிந்தாலும், அவளின் அந்த நிமிர்வு எந்த நிலையிலும், எந்தக் காலத்திலும் மாறாதோ என ஏமாந்த உணர்வோடு பெண்ணையே பார்த்திருந்தான்.

முன்பானால் பெற்றோரின் தயவில் இருந்தாள்.  ஆனால் தற்போது தனது தயவில் இருக்கிறாள்.  இருந்தாலும் தன்னிடம் அமைதியாக அண்டிக் கொள்ளும் எண்ணத்தை விடுத்து, ‘நான் எப்பவுமே இப்டித்தான்’, என இருந்தது வாயடைக்கச் செய்திருந்தது.

நந்தாவிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே, “போகட்டும். அந்தப் பேச்சைப் பேசாதே இனி.  இனி நாம என்ன செய்யணுமோ அதை மட்டும் பேசு”, கட்டளையாகக் கூறியவள் அங்கிருந்த அனைத்தையும் திருப்தியாக அடுக்கியதை சற்று தொலைவில் நின்று பார்த்துவிட்டு, அதற்கு அடுத்த தடுப்பிற்குள் இருந்த ஒருவர் மட்டுமே நிற்குமளவிற்கான அடுக்களை போன்ற இடத்திற்குள் நுழைந்திருந்தாள்.

அங்கு வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டியைப் பிரித்து, மூன்று மாதங்களுக்கு வேண்டிய சமையல் பொருள்கள் அதனுள் வைக்கப்பட்டிருந்ததை எடுத்து புரிந்தும் புரியாமல் பார்த்திருந்தாள்.

இதுவரை தாயிக்கு அவ்வப்போது வேண்டிய உதவியை சமையல்கட்டில் செய்து கொடுத்திருந்தாலும், தனித்து இதுவரை சமைத்துப் பழக்கமில்லை.

எல்லாம் புதிது.

இனிதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

பெண்ணுக்கு தமக்கை ஒருத்தி. சிவில் சர்வீஸ் எக்சாம் எழுதி பணியில் இருக்கிறாள்.  திருமணமும் செய்து கொடுத்திருந்தனர்.

பெண் படிப்பில் புலி.  ஆகையினால் ஒரு பட்டம் வாங்கி பணிக்குச் செல்கிறேன் என்று நின்றபோது, அவளின் தந்தை அதைத் தடுத்து, “வேலைக்குப் போ வேணானு சொல்லலை.  கண்டவனுங்ககிட்டயும் போயி கையேந்தாமா, ஒழுங்கா சிவில் சர்வீஸ் எக்ஸாம், இல்லைனா வேற எதாவது டிஎன்பிஎஸ்சி, பேங்க் மாதிரி எழுதி கவர்மெண்ட் வேலைக்கு போ”, என மிகவும் கறாராகவே கூறியதோடு, பெண்ணை அதற்கு ஏற்றாற்போல கோச்சிங் வகுப்பிலும் சேர்த்து விட்டிருந்தார்.

பெண்ணும் எக்ஸாமிற்கு தயாராகிக் கொண்டுதான் இருக்கிறாள்.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தேர்வில் நல்லதொரு முடிவினை எதிர்பார்த்து விடாமுயற்சியோடு படித்து வருகிறாள்.

நந்தா சிவில் டிப்ளமோ முடித்துவிட்டு, ஒரு இன்ஜினியரிடம் சூப்பர்வைசராக பணிபுரிந்து கொண்டிருந்தான்.

அதே இன்ஜினியரிடம், அவனது நிறுவனம் மூலம் வேறு ஊரில் நடக்கும் பணிக்கு, ஒரு மாதம்முன்பே மாற்றல் வாங்கியிருந்தான்.

பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில்  எட்டாயிரத்தை இதுவரை தாயிடம் கொடுத்து வந்திருந்தான்.

நந்தாவிற்கு மூன்று தம்பிகள், ஒரு தங்கை. 

தந்தை அத்துணை பொறுப்பாக இல்லாததால், தாய்மாமன் தயவில் பிள்ளைகளை வளர்த்திருந்தார் அவனது தாய்.

நந்தா படித்து வேலைக்கு செல்லத் துவங்கியதும், குடும்பத்தில் பொருளாதார நிலை சற்றே உயர்ந்திருந்தது.

கிராமத்தில் அத்தனை செலவுகள் இல்லாத நிலையில், அதில் மிச்சப்படுத்தி அவ்வப்போது பெண்ணிற்கான நகையை ஓரளவு சேர்த்திருந்தார் அவனது தாய்.

தங்கைக்கு திருமணம் செய்து கொடுக்கும்வரை அமைதியாகவே இருந்தவன், அதன்பின்னே அதிதீயின் வீட்டில் திருமணம் பற்றிப் பேசுமாறு கூறியிருந்தான்.

இருவரும் எவ்வளவோ முயன்றும், ஒரே இனத்தைச் சேர்ந்தபோதும் திருமணத்திற்கு இருவரது வீட்டிலும் கடுமையான எதிர்ப்பு.

நந்தாவின் தாயிக்கு, தனது அண்ணனின் மகளை மருமகளாக்கிக் கொள்ளும் எண்ணம்.

அதிதீ வீட்டில், தந்தை அரசுப் பணியில் இருந்தமையால், அன்னாடங்காச்சி குடும்பத்தில் மகளை திருமணம் முடிக்க முரண்டிய மனதால் மறுத்திருந்தார்.

அதற்கிடையே பயங்கரமான கட்டுக்காவலையும் மீறி, அதிதீ நந்தாவைத் திருமணம் செய்து கொண்டிருந்தாள்.

பெற்றவர்கள் தனது பிள்ளைகளுக்கு நல்லது செய்யவே எண்ணுவர்.  இது அதிதீக்கு புரிந்திருந்தாலும், மானங்கெட்ட மனது ‘நந்தா நந்தா’ என அவன் பின்னோடுவதை மீறி வேறொருவனுடனான திருமணத்தை ஏற்றுக் கொள்ள இயலாமல் இன்று அவனுடனான வாழ்வைத் துவங்க எண்ணி அவனோடு வந்துவிட்டாள்.

அதிதீ எந்தக் குறையுமின்றி, நல்ல வசதியான குடும்பத்தில் வளர்ந்திருந்தாள்.  வீட்டிற்கு சென்றதில்லை என்றாலும் வெளியிலிருந்து பார்த்தாலே பிரம்மாண்டமாகத் தெரிந்த வீட்டில் பிறந்து வளர்ந்தவள் என்கிற எண்ணம், தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கச் செய்திருந்தது நந்தாவை.

ஆகையினாலேயே மனைவியிடம் சாரீ எனக் கேட்டிருந்தான்.

அதிதீக்கு தனது தாயை எண்ணிய வருத்தம் மட்டுமே மிகுந்திருந்தது.  தந்தை மிகவும் கண்டிப்பிற்கு பெயர் போனவர்.

அவரை மீறி வந்ததாகக் கூறமாட்டார்.  அவளின் தாயின் பொறுப்பற்ற தன்மையால் பெண் வீட்டை விட்டு வெளியேறியதாக குற்றம் சாட்டுவதோடு, இன்னும் பிற சங்கடங்களும் தாயிக்கு வீட்டில் அரங்கேறும் என நினைக்கும்போதே உள்ளுக்குள் அழுகை பொங்கியது.

தாயை எண்ணி வருந்தினாலும், அதை மனதோடு வைத்தபடியே, அடுக்களைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த செல்ஃபுகளில் பாத்திரங்களையும், சில பிளாஸ்டிக் டப்பாக்களில் பொருள்களையும் போட்டு வைத்திருந்தாள்.

இன்னும் சில பொருள்கள் அதே அட்டைப் பெட்டியில் இருக்க, அதனையும் கடைசி அடுக்கில் தூக்கி வைத்தவள், “டேய்… நந்தா”, என அழைத்தாள்.

இருவரும் ஒரே வகுப்பில் படிக்கும்போதிருந்துதான் அறிமுகம்.  நந்தா ஒன்றிரண்டு வருடம் அதிதீயைவிட மூத்தவனாக இருக்கலாம்.

இடையிடையே கல்வி தடைப்பட்ட குடும்பச் சூழலினால், நந்தா நன்கு படித்தாலும் தேங்கியிருந்தான்.

பள்ளிக் கல்வியின் போதிருந்தே நந்தாவை, மரியாதை இல்லாமல் டா போட்டு அழைத்தே பழகியிருந்தாள் அதிதீ.

அதைத் திருமணத்திற்குப் பிறகும் மாற்றிக் கொள்ளும் எண்ணமில்லாமல் இருந்தாள்.

அதிதீயின் அழைப்பை ஏற்று, அதுவரை ஃபேன் மாட்டுவது, வேண்டிய இடங்களில் பல்ப்பை மாட்டுவது என வேலை பார்த்துக் கொண்டிருந்தவன், “என்னடீ”, என பெண்ணது அருகே வந்திருந்தான்.

“இந்த ஸ்டவ் எப்டி பத்த வைக்கணும்னு தெரியலைடா.  நீ வந்து பத்தவச்சுக் குடு”

ஏர் பிரஷர் கெராசின் ஸ்டவ் இதுவரை பெண் பயன்படுத்திப் பழக்கமில்லை. ஏன் பார்த்ததுகூட இல்லை.

அவள் விவரம் தெரிந்த நாள்முதலே அவர்களது வீட்டில் கேஸ் ஸ்டவ்தான்.

நந்தா பணிபுரியும் சிவில் நிறுவனத்தில் அங்கு தங்கிப் பணிபுரியும் வெளி மாநில பணியாளர்களுக்கு, அன்றாடம் இந்த ஸ்டவ்வில் தான் உணவுகள் தயாராகும். 

சூப்பர்வைசராக இருப்பதால், தினசரி என்றில்லாதபோதும், என்றேனும் அவர்கள் அந்த ஸ்டவ்வைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறான்.

அந்த அனுமானத்தில், கருமமே கண்ணாக பெண் கூறிய வேலையைச்  செய்து முடித்தவன், அவ்வளவுதான என பார்வையால் பெண்ணிடம் கேட்க, அதுவரை நந்தா செய்வதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளோ, ‘இனி நான் பார்த்துக் கொள்கிறேன்’ எனும் பார்வை பரிமாற்றத்தில் பதிலைக் கூறி அனுப்பியிருந்தாள்.

பெண் அவளுக்குத் தெரிந்த வகையில் வாங்கி வந்திருந்த பாக்கெட் பாலை கொதிக்க வைத்தாள். அதன்பின் அதில் அரிசியை போட்டு வெந்ததும், வெல்லம் இல்லாததால், அதற்குப் பதிலாக சீனியைப் போட்டு சீனிப் பொங்கல் செய்திருந்தாள்.

அரைகுறையான பொங்கல்.  முடிவில், முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய், சுக்குபொடி எதுவுமில்லாமல் நெய் விடாமல் இறக்கியிருந்தாள்.

பொங்கல் செய்து முடிக்கும்முன் அரிசி வெந்து விட்டதா என்பதைப் பார்க்கவே ஐந்தாறு முறையும், அதன்பின் இனிப்பு சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க ஐந்தாறு முறையும் என கால்வாசி பொங்கல் பொங்கலாகும் முன்பே, சங்குக் கழுத்திற்குள் தன்னைப் பாதிக்கும்மேல் மறைத்துக் கொண்டிருந்த நாவின் வழியே வயிற்றுக்குக் காணிக்கையாக்கியிருந்தாள்.

காலையில் பதற்றத்தோடு, அரைகுறையாக உண்டு கிளம்பியது.  மதிய உணவு வேளைக்குப் பிறகே இங்கு வந்திருந்தனர்.

தற்போது தங்கியிருக்கும் இடம் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது.

வாடகை சற்று குறைவாக எதிர்பார்த்துத் தேடியதில், இங்குதான் இவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்றதாக அமைந்தது.

குருவிக்கூட்டிற்கு மாதம் ஆயிரத்து ஐநூறு வாடகை.

வேறு எங்கும் வரும் வழியில் உணவகங்கள் இல்லாததால், ஒரு டீ கடையில் நின்று டீ வேணுமா எனக் கேட்டவனை முறைத்தவள், “வேணுனா நீ குடி. எனக்கு வேணாம்”, என மறுத்திருந்தாள்.

ரொம்ப ஹைஜீனிக்காக வளர்ந்தவள்.  அவளின் தந்தை இதுவரை உணவகங்களிலிருந்து உணவை வாங்கித் தந்து பழக்கப்படுத்தியதில்லை.

பல அரிய, இழுக்கும் கண்கவர் நிறங்களோடுடனான உணவு பதார்த்தங்களைப் பார்க்கும்போது ஆசையாக இருந்தாலும், இதுவரை பெண் உட்கொண்டதில்லை.

படிக்கும்போது, அதே ஊரில் இருந்த கல்லூரிக்கு சென்று வந்தவளுக்கு, மதிய உணவையும் சேர்த்துக் கையில் கொடுத்துவிடுவார் அவளின் தாய்.

ஒருவழியாக திருப்தியாக உணர்ந்தபின், அடுப்பை அணைத்துவிட்டு, பொங்கலை இருதட்டுக்களில் வைத்து எடுத்து வந்தாள்.

ஓரளவு தங்களது தேவைக்குரிய பணிகளை முடித்திருந்தவன், பெண் கையில் தட்டோடு வந்ததைக் கண்டதும், “நீ சாப்பிடு அதீ. நான் கைகால் அலம்பிட்டு வரேன்”, என்றான்.

“முத தடவைனால சேந்தே சாப்பிடுவோம்.  நீயும் வேலைய முடிச்சிட்டு வா”, என்றுவிட்டு வந்ததிலிருந்து அவசரத்திற்குகூட வெளியில் செல்லாமல் இருந்தவள், தனது சிறுநீர் கடனை கழிக்க வெளியே சென்றாள்.

அங்கு பொது கழிப்பறை மற்றும் குளியலறை.

பெண் கழிப்பறையைப் பயன்படுத்த உள் சென்றதும், பின்னோடு வெளியே சென்றவன் கைகால்களை அலம்பினான்.

நந்தா வருமுன், தனது வேலையை முடித்து வீட்டிற்கு வந்தவள், சென்ற சில நொடிகளிலேயே “நந்தாஆஆஅஅஅ”, என்று  சத்தமாக அழைத்திட

பாதிக் கழுவியும், மீதி கழுவாமலும், பெண்ணது சத்தத்தில் என்னவோ ஏதோ என்று பதறியவாறு வந்தவன், “என்னடீ?”, என வீட்டு வாசலில் நின்றபடி இருந்த அதிதீயை நோக்கி வர

வாயிலில் நின்றிருந்தவள் உள்ளே கையை நீட்டிக் காட்டிய திசையில் நந்தாவும் நோக்கினான்.

நடந்தது என்ன?

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!