VVO11

VVO11

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 11

 

வீட்டைப் பூட்டிக் கொண்டு வேலையாக இருந்தவள் கதவு தட்டும் சத்தத்தில் வந்தாள்.

 

‘இப்பத்தான நந்தா போனான்.  எதையும் வச்சிட்டுப் போயிட்டேன்னு திரும்ப வந்திருக்கானோ!’ என எண்ணியவாறே காலையில் ராஜேஷ் சென்றதும் அவன் செய்த அலும்புகள் நினைவில் வந்திட, முகம் செவ்வானமெனச் சிவந்திருந்தது.  அத்தோடு சென்று கதவைத் திறந்தாள் அதிதீ.

 

வரும்போதே காஞ்சி காமாட்சியின் அருள் உடல் முழுவதும் இறங்கிய தோரணையில், ஆனால் காளியை நினைவுபடுத்தும் உடல்மொழியில் நின்றிருந்த மாமியாரைப் பார்த்து ஜெர்க் ஆகியிருந்தாள்.

 

அதிதீயின் முகச் சிவப்பைக் கண்டவர், “எப்போதும் இதே நினைப்புல இருந்தா எங்கிட்டு விளங்க… அதான் பய விடாம முந்தானையே மோச்சம்னு திரியறான்போல.  இப்டிப் புடிச்சிட்டேத் தெரிஞ்சா வீடு என்னாத்துக்காறது?”, என்றவர்,

 

“அதான் கையிலயும், பையிலயும் எதுவுமில்லாம பய திண்டாடுறான்!”, என விசம் தடவிய வார்த்தைகளை வீசியிருந்தார்.

 

வந்ததும், வராததுமாக மாமியார் பேசிய பேச்சில் உடலெங்கும் கூசிப் போனது அதிதீக்கு.

 

தன்னோடு பயின்றவர்களின் தாயை அம்மா என்று அழைத்துப் பழகிய பழக்கத்தில், நந்தாவின் தாய் தனக்கு மாமியார் என்பது புரிந்தாலும், “வாங்கம்மா”, என்றழைக்க

 

முடிக்கும் முன்னேயே அடுத்தகட்ட வசவை ஆரம்பித்துவிட்டார்.

 

“என்னாது… அம்மாவா?  நான் உனக்கு அம்மான்னா எம்மகன் உனக்கு என்ன உறவாகுது?”, எனத் துவங்கி காது ஜவ்வு கிழிந்திடும் அளவிற்கு கிழிகிழியெனக் கிழித்திருந்தார் அதிதீயை.

 

அதிதீக்கு அவர் பேசியிருந்த பல வார்த்தைகள் புதிது.

 

அர்த்தமே தெரியவில்லை.

 

ஆனால் அது கெட்ட வார்த்தை என்பது மட்டும் புரிந்தது.

 

தனது தந்தையைவிட அதிக கெட்ட வார்த்தைகளை காமாட்சி அம்மாள் பயன்படுத்துவாக முடிவுக்கு வந்திருந்தாள்.

 

கிராமத்து பாணியில் காமாட்சி பேசியதால் அவளால் சிலதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

ஆனாலும் முகத்தில் வருத்தம் குடிவந்திருந்தது. காலையில் செய்த ஆகாரத்தினை இன்னும் உண்ணாமல் வேலை செய்து கொண்டிருந்தவள், காமாட்சியைப் பார்த்ததும், எடுத்து வந்து கையில் கொடுத்து, “சாப்பிடுங்க…”, எனத் தயங்கியபடியே தந்தாள்.

 

வாங்கிய வேகத்தில் விட்டெறிந்தவர், “வயசுப் பையனை வெறும் வயித்தோட அனுப்பிட்டு, புருசனும் பொண்டாட்டியுமா வக்கனையா செஞ்சு சாப்பிட்டீங்களாக்கும்.  நல்ல குடும்பத்துல இருந்து வந்தவ இப்டியா பண்ணுவா?”, என்கிற பேச்சில் உண்மையில் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

 

நடந்ததை விளக்கி, தன் செயலை நியாயப்படுத்திட முடிந்தாலும், அதை விரும்பவில்லை அதிதீ.

 

ராஜேஷ் செல்லும்போது இன்றைய செலவிற்கென பணம் தரக்கூறியதே அவள்தான்.  அப்டியிருக்க… என்ன சொல்லியும் ஒன்றும் மாறாது என அமைதியாகவே இருந்தாள்.

 

தட்டோடு தரையில் சிதறிக் கிடந்த ஆகாரத்தை காலில் படாமல், சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்கியிருந்தாள் அதிதீ.

 

“பேசுறது காதுல விழுகுதா பாரேன்? காது டமாரமானுவேற தெரியலை.  இம்புட்டுப் பேச்சுப் பேசுறோம்.  ம்ஹ்ம்.. ஒத்தை வார்த்தை.  என்ன ஜென்மமோ!”, என்று தலையில் அடித்துக்கொண்டே அதிதீயைப் பேசியவாறு, அடுக்களைப் பகுதிக்குள் நுழைந்தார்.

 

“வெள்ளைத் தோலை வச்சு மயக்கியாச்சு.  அப்பனை மாதிரியே விளங்காதவன். இப்டி வீணா போயி பாழுங் கிணத்துல விழுந்து காசுக்கும், பணத்துக்கும் பரிதவிக்கிறான்”, என தலையில் அடித்தவாறே, அவருக்குத் தெரிந்த அனைத்து வகையிலும் அதிதீயை நோகடித்துவிட்டு சொல்லிக் கொள்ளாமலேயே கிளம்பியிருந்தார் காமாட்சி.

 

மதிய உணவிற்கு வந்த நந்தாவிடம் காமாட்சியைப் பற்றி மூச்சு விடவில்லை அதிதீ.

///////////

நந்தாவிற்கு ஞாயிறு ஒரு நாள் மட்டுமே விடுமுறை.

 

ராஜேஷ் இல்லாதது, இருவருக்கும் இடைய மெல்லிய இதமான உணர்வை உண்டாக்கியிருக்க, சீண்டலோடும், தீண்டலோடும் தோன்றியதை துணிச்சலோடு பகிர்ந்து கொள்ளச் செய்திருந்தது.

 

அருகே வந்தவள் நந்தாவின் மீசையைப் பிடித்து இழுக்க

 

வலியில் அலறியவன், “இதென்னடீ புது விளையாட்டு!”

 

“நீ ஸ்கூல்ல வந்து சேரும்போதே பூனை முடியாட்டம் இருக்கும்.  இப்போ நல்லா கருகருனு இருந்திச்சா!  அதான் ஒட்டு மீசையா இல்லையானு பாத்தேன்”, என்றவளை

 

“ஆசையா இருந்துச்சு.. அதான் புடிச்சு இழுத்தேன்னு சொல்லிடீ… அதவிட்டுட்டு பேச வந்துட்டா…”, என்று பொய்யாக பெண்ணது கண்ணக்கதுப்பைக் கடித்திட

 

“ஷ்… ஆஹ்க்…”, என உடலெங்கு சிலிர்த்திட,

 

“பதிலுக்கு பதில் சரியாகூட பனிஷ் பண்ணத் தெரியலை!”, என்று நந்தாவை பிடித்துத் தள்ளியவளை விடாமல்

 

“வாயைக் குடுத்து வம்பை விலைக்கு வாங்காதடீ, தாங்கமாட்ட”, என்றவன்,

 

“அப்பத்திலிருந்தே என்னை சைட்டடிச்சிருக்க..! எனக்கது தெரியாமப் போச்சே”, பெண்ணை தன்னோடு அமரவைத்து ரகசியம் பேசுவதுபோல அப்போதே தெரியவில்லையே என்கிற வருத்தம் இருந்தாலும், தற்போது தெரியவந்ததில் விசயம் இனிமையைத் தந்திருக்க ஆர்வமாகக் கேட்டான்.

 

“அதுக்குப் பேரு சைட்டா!”

 

“வேற என்னவாம்?”

 

“நைன்த் படிக்கும்போதே லைட்டா மீசையிருந்தா வித்தியாசமா தெரியுமில்ல!  அதனாலதான் ஞாபகம் இருக்கு!“, என விளக்கம் கொடுத்தாள் அதிதீ.

 

“சரி நான் வித்தியாசமா இருந்ததால பாத்தேன்னே ஒத்துக்கறேன்.  நம்ம கிளாஸ்ல இன்னும் வித்தியாசமா வேற யாரெல்லாம் இருந்தாங்க? எந்த விசயத்தில அப்டியிருந்தாங்கனு சொல்லு பாப்போம்!”

 

பத்து நிமிடங்களுக்குமேல் யோசித்தவளுக்கு அப்படி யாரையும் நினைவில் இல்லை.

 

கள்ளச் சிரிப்போடு பெண்ணயே பார்த்திருந்தவன், சற்று நேரத்திற்குப் பின் உதடு பிதுக்கி, தெரியவில்லை என்றவளின் உதட்டை தன் உதட்டால் இதமாக ஒற்றி எடுத்தான்.

 

“சொல்ல முடியலைல! இப்ப ஒத்துக்க.. என்னை மட்டுமே அப்ப இருந்து சைட்டடிச்சேனு!”

 

“இவரு பெரிய மன்மதக்குஞ்சு”, என்று சிரித்தவளை

 

“அப்ப இல்லையா?”, எனக் கேட்டவனின் குரல் கமறியதோ.

 

“போடா!”, என வெக்கம் சூழக் கூறியவளின் முகம் மேலும் சிவந்திருந்தது.

 

பெண்ணது வெட்கம், கிண்டல் செய்ததை கூறாது கூறிட, நந்தாவின் மனதில் இதம் பரவியது.

 

கருமையத்தின் ஆழத்தில் பதிந்து போயிருந்ததை பெண் நந்தாவிடம் பகிர்ந்து கொண்டதில், நந்தாவிற்குமே அத்துனை நிறைவு.

 

தனது தொந்திரவு தாங்க இயலாமல், தன்னை சரி என்று ஆமோதித்து, காதலை ஏற்றுக் கொண்டாளோ என்கிற எண்ணம் பெண்ணது செயலில் லேசாக மறையத் துவங்கியது நந்தாவிற்கு.

 

இளகி, குழைந்து நிற்கும் அதிதீயின் முகத்தைத் தனது இரு கைகளாலும் மென்மையாகத் தாங்கிக் கொண்டான்.

 

“கொல்லுறடீ!”, ஹஸ்கி வாய்சில் கூறினான் நந்தா.

 

சட்டென நந்தாவின் வாயைப் பொத்தி, “வாயில இருந்து நல்ல வார்த்தையே வராதாடா”, என கண்டிக்க

 

“நீ வெக்கப்பட்டு இப்பதான் கொஞ்ச நாளா பாக்குறேன்.  அதனால என்ன பேசறேன்னு தெரியாம பேசிறேன்”, என்றவன்,

 

“அன்னிக்கு அம்மா வீட்டுக்கு வந்தாங்களாமே?”, என்றதும் அதிதீயின் முகம் மாறியது.  நந்தா கண்டு கொண்டான்.

 

‘இது எப்டி இவனுக்குத் தெரிஞ்சுது’, எனும்படியாக நந்தாவைப் பார்த்தாள்.  நிச்சயம் இதை காமாட்சி கூறியிருக்கமாட்டார் என்பது திண்ணம்.

 

“உன்னைப் பேசினதைக்கூட ஏண்டி எங்கிட்ட சொல்லலை”, எனக் கேட்டான்.

 

“…”

 

“உன்னைத்தாண்டீ”

 

“அவங்க பையனுக்கு அவங்க விரும்பின பொண்ணைக் கொண்டு வரமுடியலைன்னு வருத்தத்தில நாலு வார்த்தை பேசத்தான் செய்வாங்க.  அதையெல்லாம் உங்கிட்ட வந்து சொல்லி என்ன செய்ய?”, என நந்தா ஆரம்பித்ததை முற்றுப்புள்ளி வைத்திட எண்ணி அகல

 

அதிதீயின் நோக்கம் அறிந்து அவளை அகலவிடாமல் தன்னோடு அமர்த்தி, “பக்கத்து வீட்டு சியாமளா அக்காதான் சொன்னாங்க.  வாயில்லாப் புள்ளைங்கறதால உங்கம்மா வாயிக்கு வந்தபடி அந்தப் புள்ளையப் பேசுறாங்க.  நீ என்னனு கேக்க மாட்டியானு”

 

“அதல்லாம் போயி கேக்காத!”, என்றவளின் வார்த்தையைக் கேட்டு,

 

“ஏன் கேக்கக்கூடாது?”, அதில் கோபம் இருந்தது.

 

“வேணானா விடேன்”

 

“வேற என்ன சொல்லிச்சு எங்கம்மா”

 

“உனக்கு நான், நீன்னு போட்டிபோட்டு பொண்ணு தரேன்னு நின்னாங்களாம்.  அதல்லாம் வேணானு அண்ணன் பொண்ணைக் கல்யாணம் பண்ணனும்னு உங்கம்மா நினைச்சிட்டிருந்தாங்களாம்.  நான் வந்து அதைக் கெடுத்துட்டேன்னு சொன்னாங்க”

 

“சிலிண்டர் கணக்கா இருக்கறவளை எந்தலையில கட்ட நினைச்சப்பவே வேணானு சொல்லிட்டேன்டீ”, என மனைவியிடம் தனது நிலையை உணர்த்த முயன்றான் நந்தா.

 

“வீட்டு ஆம்பிளைங்களுக்கு காலையில ஒரு கஞ்சித் தண்ணிகூட குடுக்க முடியாம, அப்டியென்ன பண்ணிட்டு இருந்தனு கேட்டாங்க”

 

“ம்ஹ்ம்”

 

“அவங்க பேசிட்டே இருந்தாங்கடா.  பாதிய நானே மறந்துட்டேன்”

 

“உனக்கு கோவமே வரலையா?”

 

“ஏன் வராம?”

 

“அப்ப நீயும் அதுக்கிட்ட வாயிக்கு வாயி பேசினியா?”

 

இல்லையென மறுத்து தலையசைத்தவளிடம், “அப்ப…”

 

“பேசாம போயிட்டேன்”, என பலவிசயத்தை நந்தாவிடம் கூறாமல் மறைத்துவிட்டாள் அதிதீ.

 

“எங்கிட்ட ஏண்டீ சொல்லல”

 

“உங்கிட்ட சொல்லி, நீ போயி உங்கம்மாகிட்ட கேப்ப… அப்புறம் இன்னும் அவங்க கோவம் எம்மேல கூடும்.  எதுக்கு இதெல்லாம்”, என்றவள் அதற்குமேல் காமாட்சியைப் பற்றி எதுவும் கூறவில்லை.

 

நந்தாவிற்கே தோன்றியது.  இதுவே இந்த இடத்தில் தனது மாமன் மகள் இருந்திருந்தால், இந்நேரம் சண்டையில் முடிபிடிக்கும் அளவிற்குப் போயிருக்கும் என்று.  ஆனால் அதிதீயால் என்றுமே அப்படியெல்லாம் முடியாது என்பதையும் உணர்ந்தான்.

………….

வாரம் முழுவதும் மூவருமாக இருப்பவர்கள், ராஜேஷ் சென்றதும், பெண்ணோடு அட்டைபோல ஒட்டிக் கொள்வான் நந்தா.  நந்தா மறந்தாலும் பெண் அதனைத் தொடர்ந்தாள்.

 

அடுத்தடுத்து வந்த தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்தியவண்ணம் இருந்தாள் அதிதீ.

 

இடையே பகல் முழுவதும் சும்மா இருப்பதற்கு அருகில் உள்ள பள்ளிக்கு வேலைக்குச் செல்வதாகக் கூறினாள் அதிதீ.

 

அலுவலகம் சென்றதும், அவ்வப்போது வந்த தொந்திரவு செய்யும் தாயின் செயலில் வருத்தம் இருந்தது நந்தாவிற்கு.

 

தாயை நேரில் சென்று அவ்வாறு செய்யாதே, பேசாதே எனக் கண்டித்தாலும், கோபமாகக் கூறினாலும் எதையும் பொருட்படுத்தாது தொடர்ந்திருந்தார் காமாட்சி.

 

தாயிடமிருந்து பெண்ணைக் காக்க, வேலைக்குச் செல்லட்டும் என சரியென்றிருந்தான் நந்தா.

 

மூவாயிரத்து ஐநூறு ஆரம்பச் சம்பளம் என்றிருந்தனர்.

 

வீட்டில் இருந்தால் இந்தச் சம்பளம்கூட கிடைக்காது.  தங்களது நிலையையை உணர்ந்து சரியென்றிருந்தாள்.

 

மூன்று மாதங்களில் ஓரளவு தங்களது அத்தியாவசியத் தேவை நிலையை பூர்த்தி செய்து கொண்டனர்.

 

ஓயாத உழைப்பு.

 

பெண் பள்ளியிலேயே டியூசனும் எடுத்தாள்.  அதிலிருந்தும் வருமானம் வந்தது.

 

இருவரும் அயராமல் ஓடினர்.

 

///////

மாதங்கள் கடந்தது

 

அதிதீ வேலைக்குச் செல்லத் துவங்கியது முதல், இரண்டு முறை பூட்டிய வீட்டைப் பார்த்துவிட்டு, ராஜேஷிடம் கேட்டறிந்து கொண்டிருந்தார் காமாட்சி.

 

பள்ளியில் பணிக்குச் செல்வதை அறிந்து, “வாயும் பேசாது. காதும் கேக்காது.  இதுபோயி புள்ளைங்களுக்கு என்னத்த சொல்லிக்குடுத்து.. புள்ளைங்க நல்லாப் படிச்சமாதிரிதான்”, என கிண்டல் வேறு பேசியிருந்தார் இளைய மகனிடம்.

 

ராஜேஷ், “சும்மா வாய வச்சிட்டு இருக்க மாட்டியாம்மா.  அண்ணி ரொம்ப நல்லவங்க”, என்றதும்

 

“என்னடா… என்ன?  ரெண்டு வேளை சோறு போட்டுட்டா அவளுக்கு ஏத்துக்கிட்டுப் பேசுவியா?  என்ன ஏத்தம் இருந்தா எங்கிட்டயே அவளை நல்லவம்ப!”, என்று மகனிடம் சண்டைக்கு வந்திருந்தார்.

 

தாயைப் பற்றித் தெரிந்திருந்தவன், அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

……………..

புதியதாக கட்டிடம் ஒன்றையும் தனது மேற்பார்வையில் கட்ட ஒப்பந்தம் செய்து, பணிகளைத் துவங்கியிருந்தான் நந்தா.

 

வேலைப்பளு இருந்தாலும், இடையிடையே நேரங்கிடைக்கும்போது ஊருக்குச் சென்று தாயை நேரில் சந்தித்து வந்தான் நந்தா.

 

அதற்கு தடையேதும் கூறவில்லை அதீதி.

 

நந்தாவின் தாய்ப்பாசத்தைக் காணும்போதெல்லாம் ஒரு வேகம் உண்டாகும்.  விரைவில் தானும் நல்ல வேலைக்குச் சென்று தனது தாயை அவனைவிட இன்னும் ஆயிரம் மடங்கு நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் எனும் வெறி வந்தது.

 

தாயையும், தமக்கையையும் அவ்வப்போது நினைத்துக் கொள்வாள்.

 

யாரிடமும் பேச முயற்சிக்கவில்லை.

////////////////

 

ஒவ்வொரு முறையும், தாயின் புதுவிதமான வார்த்தைகளின் மூலம் அதிதீயை தன்னிடமே வசைபாடுவதைக் கேட்டவனுக்கு, இனி வரக்கூடாது என நினைத்தாலும், அவனையறியாமல் மீண்டும் சென்று விடுகிறான்.

 

ஆனால் அதையும் அதிதீயிடம் மறையாமல் கூறிவிடுவான்.

 

எட்டு மாதங்கள் கடந்திருந்தது.

 

எட்டாயிரத்தை வாங்கிக் கொண்டும், ஐம்பது முறையாவாது சின்ன மகன்களின் மூலம் பணம் வேண்டுமென அனுப்பியதை குறைத்துக் கொள்ளவில்லை காமாட்சி.

 

இருக்கும்போது கொடுத்தான்.  இல்லாதபோது என்ன செய்ய இயலும்.

 

தன்னிடமிருந்து வாங்குவதையெல்லாம், தனது தங்கை கீதாவிற்கு பொருளாகவோ, பொன்னாகவோ கொடுப்பதை வாடிக்கையாக்கியிருக்கிறார் தாய் என்பதையும் அறிந்து கொண்டான்.

 

தெரிந்தாலும், தங்கைக்குதானே என விட்டுவிட்டான் நந்தா.

 

கிராமத்திற்கு வழமைபோல வந்திருந்தவனிடம், “உன்னோட நிலைமை எனக்குப் புரியுது. கையில முன்னப்போல காசு புழங்காம, நல்ல சாப்பாடு இல்லாம  இளைச்சுப் போயிட்டியேய்யா”, என்றவர்

 

“உனக்கு என்ன தலைவிதிய போட்டான் அந்த ஆண்டவன்.  ராசா கணக்கா இருந்திருக்க வேண்டியவன். இப்டி காசுக்கும் பணத்துக்கும் அல்லாடுறியே.  உன்னை நினைச்சா எனக்கு தூக்கமே வர மாட்டிங்குது”, என்று கண்ணீர் வடித்தார் காமாட்சி.

 

“நல்லாத்தான் இருக்கேன்மா!”, என்று கூறியவனிடம்

 

“அதை உன் வார்த்தைதான் சொல்லுது.  ஆனா உன்னைப் பாத்தா அப்டியில்லையே. பல நாளு பட்டினி கிடந்தவன் கணக்கால இருக்க”, என்றபடியே

 

“மசக்கையாவா இருக்கு” என்று கேட்க

 

ஒன்றும் புரியாமல் விழித்தவனிடம், “அந்தப் புள்ளை மசக்கையா இருக்கானு கேட்டேன்”, காமாட்சி

 

உண்மையில் நந்தாவிற்கு புரியவில்லை.

 

“என்னம்மா கேக்குற?”

 

“ஒன்னும் விசேசமில்லையா”, எனக் கேட்க

 

புரிந்து கொண்டவன், ‘நல்லா கேக்குற கேள்வி.  வாரத்துல அஞ்சு நாளு காவலுக்கு ஆளு அனுப்பிர்ற. சில வாரம் ஆறு நாளு காவல் நீடிச்சிருது.  அடுத்த ஒன்னோ, ரெண்டு நாளு தனியா இருப்போம்.  அதுல நானும் வேலை வேலைனு தெரியறேன்.  அவளும் ஸ்கூல்ல இருந்து ஓஞ்சு போயி வருவா.  இதுல எங்கிட்டு இருந்து புள்ளை வரும்’, என மனதில் நினைத்துக் கொண்டாலும், இல்லையென மறுத்து தலையசைத்தான்.

 

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.  அம்மா உனக்கு நல்லதுதான் சொல்வேன். செய்வேன்.  அதேபோல இப்பவும் சொல்றேன் கேட்டு நடந்தா உனக்கு நல்லது”, எனப் பீடிகையோடு துவங்கியவர்

 

“பாதி வருசத்துக்கு மேல ஓடிப் போயிருச்சு!  இன்னும் ஒன்னும் நல்ல செய்தி இல்லைங்கற! வந்த உடனே புழு பூச்சித் தங்கலைன்னா வாரிசுக்கு என்ன பண்ணறது?  சொல்லு… வாரிசு ரொம்ப முக்கியம்!  அந்தப் புள்ளைய உன் ஆசைக்கு அங்கேயே வச்சுக்க! அப்பப்போ போயி வந்து இருந்துக்கோ! இங்க மாமா மகளை உனக்குப் பேசி கட்டி வைக்கிறேன்.  நீ சரினு மட்டும் சொல்லு, நான் மாமாகிட்ட பேசுறேன்!  என்ன சொல்லுற?”, என்று நந்தாவிடம் மிக மெல்லிய குரலில் காமாட்சி கேட்க

 

என்ன கூறினான் நந்தா?

 

அடுத்த அத்தியாயத்தில்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!