VVO12

VVO12

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 12

 

இரவில், தம்பி உடன் இருக்கும்போது அதிதீயிடம் பேச முடியாததால், மறுநாள் காலையில் ராஜேஷ் கிளம்பிச் சென்றதும், மனைவியிடம் விளையாட்டுபோல தாய் காமாட்சி கேட்டதைக் கூறிவிட்டு, அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றிருந்தான் நந்தா.

 

ஆனால் அதற்கு தான் கூறிய பதிலடிகளைப் பற்றி எதுவும் மனைவியிடம் சொல்லவில்லை.

 

சிரித்தபடியே சொன்ன கணவனது முகத்தை மட்டுமே பார்த்திருந்தவளுக்கு, ‘எந்த மாதிரியான விசயம் இது?  இதை எப்படி இவனால இவ்வளவு ஈஸியா சிரிச்சிட்டே சொல்ல முடியுது?’ என்ற கேள்வி மட்டுமே மனதில் தொக்கி நின்றது.

 

மற்றவற்றைக் கூறும்போது அடையாத பாதிப்பை, இந்தச் செய்தி அதிதீக்குத் தந்திருந்தது.

 

நந்தா, அதிதீ எப்போதும் எந்த பாதிப்பும் இன்றி கடப்பதுபோல இதையும் கடந்துவிடுவாள் என்பது போலவே எண்ணி கூறிவிட்டு கிளம்பியிருந்தான்.

 

ஆனால் தான் கூறிய செய்திகளில் இது மட்டுமே முதன்முதலாக பெண்ணிடம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை நந்தா அறிந்திருக்கவில்லை. 

 

//////////////

பள்ளிக்குச் சென்றவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.

 

இப்போதுதான் வாழவே துவங்கியிருக்கிறார்கள்.  அதற்குள் பிள்ளை என்றால் எப்படி?

 

அப்டியே இருந்தாலும் என்ன மாதிரியான ஒரு மாற்று ஏற்பாடு செய்யச் சொல்லிக் கேட்டிருக்கிறார் இந்தப் பெண்மணி என மாமியாரை அறவே வெறுத்துவிட்டாள்.

 

நந்தாவும் தாயின் பேச்சைக் கேட்டால், தனது நிலை என்னவாகும் என யோசிக்கவே பயந்தாள் அதிதீ.

 

சிரித்தபடியே சொல்கிறானே! என்பதே மனதை ஆக்ரமித்து, அமிலமாக அரித்தது.

 

இந்த மாதிரியும் பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருக்கிறார்கள் என்பதே  அதிதீக்கு நம்ப முடியவில்லை.  ஆனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.

 

மனம் முழுவதும் நந்தாவினது பேச்சையே நினைத்து, நினைத்து ஓய்ந்திருந்தது.

 

நந்தாவிற்கும் தாயின் மாற்று ஏற்பாட்டில் உடன்பாடு உள்ளதோ என்கிற அளவிற்கு பெண்ணது மனம் யோசித்தது.  அன்றைய ஒவ்வொரு நிமிடத்தையும் ரணமாக உணர்ந்தாள்.

 

பிள்ளைகளோடு வகுப்பறையில் தன்னை ஈடுபடுத்திட முயன்று முயன்று தோற்றாள்.

 

காலை, மதிய உணவைக்கூட தவிர்த்திருந்தாள்.

 

தான் இதைப்பற்றியெல்லாம் இதுவரை எண்ணியதில்லை.  இப்படி ஒரு விசயத்தை எவ்வாறு துணிந்து செய்ய இயலும்.

 

பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும் எண்ணமின்றி அங்கேயே அமர்ந்திருந்தாள்.

 

பள்ளி விட்டதும், ஒரு மணித் தியாலம் நடைபெறும் டியூசன்.  அது முடிந்ததும் முதல் ஆளாக வெளியேறுபவள், இன்று இத்தனை நேரம் அங்கேயே இருப்பதை வராண்டா வழியே சென்ற முதல்வர் கண்டதும் அறைக்குள் நுழைந்து அழைப்புமணியை அழுத்தினார்.

 

பெண்ணது ஓய்ந்தபோன தோற்றத்தைக் கண்ட அந்தப் பள்ளியின் முதல்வர், பெண்ணை அழைத்து வருமாறு அலுவலக உதவியாளரிடம் கூறியிருந்தார்.

 

உள்ளே சென்றவள், வணக்கம் கூறி நிற்க, எதிரே இருந்த நாற்காலியில் அமருமாறு கூறினார் முதல்வர்.

 

பரவாயில்லை நிற்கிறேன் என்றவளை வற்புறுத்தி அமரச் செய்தவர், முதன் முறையாக பெண்ணோடு கூடுதல் நேரம் செலவிட்டார்.

 

முதல்வர், அதிலும் தன்னிடம் அக்கறையெடுத்துக் கேட்கும்போது கூறாமல் இருந்தால் மரியாதைக் குறைவாக இருக்கும் என்றெண்ணி, கேட்டதற்கான பதிலை சுருக்கமாகக் கூறினாள் அதிதீ.

 

நந்தாவின் பணி பற்றி முழுமையாக கேட்டறிந்தவர், “அரேண்ஞ்சுடு மேரேஜ்ல ஒரு சவுகரியம் என்னன்னா… ஹண்பண்ட் அண்ட் வயிஃப் தகராறுன்னா முதல்ல வீட்டுக்கு கால் பண்ணி, இந்த மாதிரின்னு விசயத்தை போட்டு தடால்னு உடைச்சு சொல்லிட்டு, பொறுப்பை அவங்ககிட்ட கொடுத்ததோட நிம்மதியா இருந்திருவோம்.

 

உன்னோட ஓஞ்சு போன முகத்தை வச்சிப் பாக்கும்போது, லவ் மேரேஜ்னு தோணுது!”, என்றபடியே தான் கூறுவதில் உண்மையிருக்கிறதா என்பதுபோல அதிதீயை பார்த்து, தனது பேச்சை நிறுத்தியிருந்தார்.

 

அதிதீயும், “எஸ் மேம்”, எனக்கூறி ஆமோதித்தாள்.

 

அலுவலகப் பணியாளரை அழைத்து இரண்டு தேநீர் வாங்கி வரச் சொல்லி, அதிதீக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடித்தார்.

 

வேண்டாம் என மறுத்தவளைப் பிடிவாதமாகக் குடிக்குமாறு கூறினார்.

 

பிறகு மிகவும் நிதானமாக, “சிலரோடு வாழ்க்கைல எதிர்பாராம நடக்கிற விபத்து மாதிரிதான், லவ் மேரேஜ்ங்கறதும்.  வாழ்க்கையில் எந்த விசயத்தையும் பாத்து மனசொடிஞ்சு போயி நின்னா… கேலி செய்து சிரிக்கவும், வாழ்க்கைல நாம தோத்துட்டதைக் கொண்டாடவும் ஒரு பெருங்கூட்டமே காத்துட்டு நிக்கும்.

 

தைரியமா எதையும் ஃபேஸ் பண்ணு அதிதீ.  அதவிட்டுட்டு மனசுக்குள்ள போட்டு உளப்பினா, யாருக்கு என்ன லாபம்.  உனக்கு மனவருத்தமும், அழுத்தமும் மட்டுந்தான் மிஞ்சும்.

 

அது உன்னை சிறப்பானு இல்லை, சாதாரணமாக்கூட செயல்பட விடாம முடக்கிப் போட்டுறும்.

 

நம்மோட முடக்கம், பெருந்தோல்வில கொண்டு போயி நிறுத்தும்.

 

மனசுல சின்ன நெருடல் வந்தாலும், ரெண்டு பேரும் உக்காந்து பேசித் தீத்தரணும்.  அத வளர விட்டா, புரையோடிப் போயிரும்.  அதனால பின்னாடி வரக்கூடிய பெரும்பாதிப்பு, நம்மை சுனாமி மாதிரி இழுத்துட்டுப் போகுமுன்னே.. மீள வேண்டிய வழியக் கண்டு பிடிச்சு அதுல மாட்டிக்காம தப்பிக்கணும். எப்படிப்பட்ட சூழல் வந்தாலும் பதறக்கூடாது.

 

இப்பவே சுதாரிச்சு, நிதானமா ஒக்காந்து பேசு.  கோவிலுக்குப் போ.  மனசு சீராகும்.  என்ன நடந்திருந்தாலும் அதுக்கு கண்டிப்பா தீர்வு இருக்கும்.

 

வேற வேலைகள்ல மனச திருப்பு.  நாளைக்குப் பாக்கும்போது, வழக்கமா சுறுசுறுப்பா இருக்கற அதிதீயப் பாக்கணும்!  என்ன சரியா?”, என்றதும்.

 

“கண்டிப்பா மேம்”, என்றவளிடம்

 

“மனஅழுத்தம்கிறது அவ்வளவு சாதாரண விசயமில்லை.  அதுக்கான காரணத்தை கண்டுபிடிச்சு, அதை சரிசெய்திரு. ஒரு நல்ல நிரந்தர வருமானம் வரக்கூடிய வேலை கிடைக்க நீ ப்ரிப்பேர் பண்ற எக்சாம்ஸ் உனக்கு நல்லா கைகுடுக்கும்.  ஏனோதானோன்னு இல்லாம எப்டியாவது நல்லா படிச்சு வேலைக்குப் போகற மாதிரி பாரு.

 

இந்த உலகத்திலயே ரொம்ப மலிவா கிடைக்கிறது அட்வைஸ்தான்.

 

அதத்தான் நானும் சொல்றேன்.

 

ஆனா, உன் வாழ்க்கையில நீ ஜெயிக்கற வரை ஓயக் கூடாது. வெல்லும் வரை ஓயாதேனு!  தூக்கத்திலகூட மனசு விழிப்போட சொல்லிக்கிட்டே இருக்கணும்,  அதுவே நமக்கு சாதகமான சூழலைக் கொண்டு வந்து கண்ணு முன்ன நிறுத்தும்.  அப்போ குறிக்கோளோட, கிடைக்கற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டா தொட்டதெல்லாம் ஜெயமாகும்”, என்றதோடு

 

“உனக்கு என்ன ஹெல்ப்னாலும் எங்கிட்ட கேளு.  என்னால முடிஞ்சதை செய்யறேன்.  எப்பவும் ப்ரிஸ்கா பாத்துட்டு, இன்னிக்கு உன்னை இப்டிப் பாக்க மனசே தாங்கல.  அதனாலதான் உனக்கு இவ்வளவு சொல்றேன்”, என்று அதிதீக்கு தன்னால் இயன்ற வழிகாட்டுதல்களைக் கூறி அனுப்பியிருந்தார், பள்ளி முதல்வர்.

 

மாமியார் கூறியதைப் பற்றியோ, தாங்கள் கடந்து போன நாள்களில் சந்தித்த பிரச்சனைகள், சவால்களைப் பற்றியோ கூறாமல், நாசூக்காகவே சமாளித்திருந்தாள் அதிதீ.

 

முதல்வரின் பேச்சில் முழுதாக இல்லாதபோதும், சற்றே தெளிந்த மனதோடு வீட்டை நோக்கிக் கிளம்பினாள் அதிதீ.

 

குழப்பம் இன்னும் முழுமையாக தீர்ந்தபாடில்லை.

 

முதல்வர் கூறுவதுபோல முதலில் நல்ல வேலையில் அமரவேண்டும் என்கிற வைராக்கியத்தோடு கிளம்பினாள்.

 

/////////

 

பள்ளியை விட்டு அதிதீ வெளியே வரவும், நந்தா பெண்ணைத் தேடி பள்ளி வாசலுக்கு வரவும்  சரியாக இருந்தது.

 

நந்தாவைப் பார்த்ததும், மனம் பழையவாறு குரங்காகியிருந்தது.

 

‘அவங்கம்மா சொன்னதை சிரிச்சிட்டே வந்து சொல்றான்னா, அப்ப அவனுக்கும் அப்டி ஒரு எண்ணம் இருக்குமோ’, என மீண்டும் துவங்கியது மனப் போராட்டம்.

 

அதனால் என்ன முயன்றும் இயல்பாகப் பேசவோ, நந்தாவிடம் கவனமோ போகவில்லை.

 

வீட்டிற்குச் சென்ற ராஜேஷ் தனது கையில் இருந்த சாவியைக் கொண்டு உள்ளே சென்றிருந்தான்.  பத்து நிமிடம் முன், பின் வீட்டிற்கு வருவார்கள் ராஜேஷ் மற்றும் அதிதீ இருவரும்.

 

மணி ஆறரை ஆனதும், அதுவரை வீட்டிற்கு வராத அதிதீயைப் பற்றிக்கூற எண்ணி அண்ணனுக்கு அழைத்திருந்தான்.

 

அலுவலகத்தில் இருந்தபடியே அதிதீயின் எண்ணுக்கு, ஒருவேளை பொருள்கள் வாங்க வெளியில் சென்றிருப்பாளோ என்றெண்ணி அழைத்தான் நந்தா.

 

சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

 

பதறி வீட்டிற்கு வந்தவன், அருகில் உள்ள சியாமளாவிடம் சென்று கேட்க, “இன்னும் ஸ்கூலுல இருந்த வரலயே”, என்றிருந்தார்.

 

அத்தோடு பள்ளியை நோக்கி நடந்திருந்தான்.

 

பெண்ணைப் பார்க்கும் வரை மனம் முழுக்க சிந்தனையும், பயமும் தொற்றியிருந்தது.

 

பார்த்தபிறகே, நிம்மதிப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன், இலகுவாகப் பேசியவாறு வந்தான்.

 

பெண்ணது முகத்தில் மாறி, மாறித் தெரிந்த பாவங்களைப் பார்த்தபடியே வந்தான் நந்தா.

 

பெண் பெரியளவில் ஆர்வமின்றி வந்திட, “உடம்புக்கு முடியலையா அதீ”

 

“நல்லாத்தான் இருக்கேன்”, எப்போதும் போல இலகுத் தன்மையின்றி, ஒட்டாத பேச்சை கவனிக்கவே செய்தான் நந்தா.

 

“அப்ப, ஏன் ஒரு மாதிரி இருக்க?”

 

“வீட்டுல போயி ரெஃப்ரெஷ் பண்ணா சரியாகிரும்”, என்று உடன் நடந்திருந்தாள்.

///////////

 

வந்ததும் ஓய்விற்கு வழியில்லை.  அடுத்த கட்டப் பணிகளைப் பார்வையிடத் துவங்கினாள்.

 

உடன் தன்னாலான உதவியை நந்தாவும் அதிதீயோடு சேர்ந்து செய்தான்.

 

ராஜேஷ் அண்ணன் உதவுவதைப் பார்த்தபடியே தனது பணிகளில் மூழ்கியிருந்தான்.

 

இரவு உணவைத் தயாரித்து, ஏழு மணிக்கெல்லாம் உண்டுவிட்டு பாத்திரங்களைத் தேய்த்து எட்டரை மணிக்கு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

என்றுமில்லாமல் அதிதீயின் கையில் இருந்த புத்தகத்தை வாங்கியவன், “வா… ரொம்ப டையர்டா தெரியற.. நாளைக்கு காலையில எழுப்பி விடறேன்.  அப்பப் படி.  இப்ப வந்து தூங்கு”, என்றழைக்க

 

பெண்ணிற்கும் மறுக்கத் தோன்றவில்லை.  சரியென்று சென்று படுத்திருந்தாள்.

 

என்றுமில்லாமல் இன்று அதிகப்படியான அமைதியோடு பெண் இருக்கவே, காலையில் எழுந்ததும் பேசிக் கொள்ளலாம் என நினைத்து உறங்க முற்பட்டான் நந்தா.

///////////////

 

ராஜேஷ் செல்லும்வரை பெண்ணையே கவனித்தபடி இருந்தான் நந்தா.

 

எழுந்தது முதல் எதாவது வெளிவேலை, அல்லது வீட்டில் அவனது ஆடைகளை துவைப்பது என இருப்பவன், அதிதீயையே பார்த்திருப்பதையும் ராஜேஷ் கவனித்தான்.

 

அதிதீ எப்போதும் இளநகையோடு வேலைகளைப் பார்ப்பதைக் கவனித்திருக்கிறான்.  ஆனால் அது இன்று காணாமல் இருப்பதையும் கண்டு கொண்டவன், “என்ன சொன்ன அண்ணீய?”, என நந்தாவிடம் கேட்க

 

“ஏண்டா”

 

நந்தாவிடம் பேசுவதுபோல இல்லையென்றாலும், ராஜேஷூடன் நன்றாகவே பேசிக் கொள்வாள் அதிதீ.

 

கடந்திருந்த நாளில் தன்னுடன் பேசாதது, இன்று காலை முதலே ஏதோ சிந்தனையோடு இருப்பவளைக் கண்டு ராஜேஷ் இவ்வாறு கேட்டிருந்தான்.

 

“இல்லை… எப்பவும் நல்லா சிரிச்சிட்டே வேலையப் பாப்பாங்க.  இன்னிக்கு ஏதோ சரியில்லாத மாதிரி தோணுச்சு.  அதான் கேட்டேன்”, என்றவனிடம் என்ன பதில் சொல்ல எனத் தெரியாமல் மெளனத்தைப் பதிலாக்கியிருந்தான் நந்தா.

 

தம்பி சென்றதும், “அதீ”

 

“…” கேட்டும் கேட்காததுபோல தனது பணியில் மூழ்கியிருந்தாள்.

 

“உன்னைத்தாண்டீ”

 

“…”

 

“என்ன?”, எனும் குரலே வெறுப்பைக் கூறியது.

 

“என்ன?  ஏன் ஒரு மாதிரியா இருக்க?  உன்னை நான் எதுவோ சொல்லிட்டேனு எந்தம்பி வேற உனக்கு சப்போர்ட் பண்றான்.  நான் என்னடீ பண்ணேன்”

 

“…”

 

“அதீ”

 

“…”

 

பெண் காலையில் இருந்து வழமைபோல தனது தேவைகளுக்குக்கூட தன்னிடம் பேசாதது நினைவிற்கு வந்தது நந்தாவிற்கு.

 

கேட்டால் பதில்.  அந்தளவில் முந்தைய தினம் முதல் இன்று காலைவரை இருந்ததை நினைவு கூர்ந்தான்.

 

அன்று அலுவலகத்திற்கு விடுப்புக் கூறிவிட்டு பெண்ணையும் விடுப்பு எடுக்குமாறு கூறினான்.

 

நந்தா கூறியதைச் செய்தவள், என்ன ஏது என்று எதுவும் கேட்கவில்லை.

 

காலையில் பெண்ணோடே நின்று வேலையைத் துவங்கியவனுக்கு மதிய உணவை எடுத்து வைக்கப் போன மனைவியிடம், “நானும் இன்னிக்கு லீவு” என்க

 

எதனால் லீவு எனக் கேட்பாள் என்று பார்த்தால், கேட்கவேயில்லை. அதற்குமேல் காலை ஆகாரத்தை உண்டு முடித்துவிட்டு எதுவும் பேசாமல் அறையில் பாயை விரித்தமர்ந்து புத்தகத்தைக் கையிலெடுத்தபடி அமர்ந்திருந்தாள்.

 

பொறுமை போயிருந்தது நந்தாவிற்கு.

 

“அதீ”

 

“…”

 

“ஏய் கூப்பிட்டா என்னனு கேக்க மாட்டியாடீ?”

 

“…”

 

“சொன்னாத்தானடீ தெரியும்”

 

“சொன்னதே நீதானே”

 

“என்ன சொன்னேன்”

 

“உங்கம்மா சொன்னாங்கனு, நீ பாட்டுக்குப் போயிட்டா நாந்தனியாத்தான இருக்கணும் நந்தா.  அதுக்கு இப்பவே என்னை பழக்கிக்கறேன்”, என்றபடியே புத்தகத்தில் கவனத்தைச் செலுத்தும் பாவனையோடு இருக்க

 

“பாட்டுக்குப் போனேன், தாளத்துக்குப் போனேன்னு என்னடீ பேசற…”, என வழமைபோல கிண்டலாகக் கேட்க

 

நந்தாவை முறைத்தவள், ‘வந்துட்டான் பெருசா’, என்பதுபோல பார்வையை வீசிவிட்டு, “இப்டியெல்லாம் பேசி என்னை டைவர்ட் பண்றத விட்டுட்டு வேற வேலையிருந்தா போயி பாரு”, என அங்கிருந்து நகல முயன்றாள்.

 

பெண் மனதிற்குள் வைத்திருந்தது வெளியே வந்திருக்க, புரியாமல் பார்த்தான் நந்தா.

 

பெண்ணது செயலில் உண்மையில் ஏதோ பெரிய விசயம்போல என எண்ணி கிண்டலை விட்டு, மிகுந்த யோசனையோடு, “என்னடீ சொல்ற, என்னைப் பாத்தா உன்னை விட்டுட்டுப் போறவன் கணக்காத் தோணுதாடீ உனக்கு”, பெண்ணைப் பிடித்து உலுக்கினான்.

 

நாகேந்திரனின் வீட்டில் அடைபட்டிருந்த பெண்ணை மீட்க தான் மேற்கொண்டிருந்த அனைத்து சிரத்தைகளைப் பற்றி அறிந்திருந்தும் பெண் இவ்வாறு பேசியதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை நந்தாவிற்கு.

 

“…”

 

“சொல்லுடீ”

 

“…”

 

“சொல்லு அதீ”

 

“போயிட்டா என்ன செய்ய முடியும் நந்தா என்னால”, மிகவும் அமைதியான குரலில் நந்தாவைப் பார்த்துக் கேட்டாள்.

 

“…”இப்போது வாயடத்தது இவன் முறையாகியிருந்தது.  அந்த நம்பிக்கை போயிருக்க காரணம் தான்தானோ.

 

“எங்கம்மா சொன்னதைச் சொன்னதுக்கா இவ்வளவு பேசற?”

 

பதில் சொல்லாமல் நின்றவளிடம், “என்னைப் புரிஞ்சுக்கவே இல்லல”, என வருத்தத்தோடு பகிர்ந்தவன்

 

யோசித்தவன்,  பெண்ணிடம் முந்தைய தினம் காட்டாது விட்டிருந்த இருவரின் திருமணத்தை பதிவு செய்திருந்ததற்கான சான்றிதழை எடுத்துக் கொண்டு வந்து அதீதியின் கையில் கொடுத்தவன், “இதல்லாம் எதுக்குனு அப்போ யோசிச்சேன்.  ஆனா இதக் கையில பத்திரமா வச்சுக்க.  அப்டி நான் எதாவது செஞ்சா…”, என்றதும் நந்தாவை விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் அதிதீ.

 

“… அப்டித்தான நினைக்கிற… அதான் அப்டி சொல்றேன். நீதான் எல்லாமேனு எப்டி உனக்கு புரிய வைக்குறதுன்னு சத்தியமா எனக்குத் தெரியலைடீ”, என வருத்தத்தோடு பகிர்ந்தவன்

 

“உரிமையை தக்க வச்சிக்க இது உனக்கு உதவும்னு நெனைச்சுக் குடுக்கறேன்.  எம்மேல நம்பிக்கை வர இதுபோதுமா?  இல்லை இன்னும் நான் என்ன செய்யணும்”, எனக் கேட்டான் நந்தா.

 

“…”

 

“சொல்லு.  அதையாவது வாயத் திறந்து சொல்லு”

 

“நான் சொல்றதுக்கு இதுல என்ன இருக்கு”

 

“இப்டி விட்டேத்தியா சொன்னா என்னடீ அர்த்தம்”

 

“உனக்கு ஏத்தவளா நான் இல்லைனுதான உங்கம்மா சொல்றாங்கனு வந்து சந்தோசமா எங்கிட்ட சொன்னா என்ன அர்த்தம்?”

 

“வரவர நல்லாத்தான் பேசுற”

 

“…”

 

“முடிவா என்னதான் சொல்ல வர”

 

“இத்தோட நீ உங்கம்மா சொன்னதைக் கேட்டு, அவங்க சொல்றமாதிரி செய்யறதா இருந்தா உங்க வீட்டுக்கு போயிரு நந்தா.  என்னை விட்டுட்டுப் போயிருவியோனு பயந்து பயந்து சாகறதுக்கு.. ஒரே நாள் உக்காந்து அழுது தீத்துட்டு, நான் மட்டும் இங்க இந்த ஸ்கூல், அப்புறம் எதாவது எக்சாம் பாஸ் பண்ணி எதாவது வேலைக்கு போயிக்குவேன்”, அதைச் சொல்லும்போதே பெண்ணுக்கு அழுகை பொங்கியது.

 

முந்தைய தினம் முதல்வரின் பேச்சைக் கேட்டதும் நினைத்தது ஒன்று.  ஆனால் காமாட்சி கூறியதாக நந்தாவின் வார்த்தைகள் ஏற்படுத்தியிருந்த தாக்கம் பெண்ணை அவ்வாறெல்லாம் யோசிக்காமல் பேசச் செய்திருந்தது.

 

“இனியும் என்னால நீ கஷ்டப்பட வேணாம்டா.  நீ உங்கம்மா சொல்றமாதிரிக் கேட்டு நடந்துக்கோ”

 

“இதுதான் உன் முடிவா?”

 

“ம்..”, என தலையசைத்து ஆமோதித்தாள்.

 

“நீங்க மட்டும் தனியா இருந்து, உங்க டார்கெட்டை அச்சீவ் பண்ணுவீங்க.  நாங்க மட்டும் எந்த குறிக்கோளுமில்லாம நீங்க சொல்றதைக் கேட்டுகிட்டு,  செம்மறி ஆடு மாதிரி எங்கம்மா பின்னாடி போயிக்கிட்டே இருக்கணும்!”. என அதிதீயைப் பார்த்துக் கேட்டவன்

 

“….”

 

“இனி நான் என்ன பண்ணனும்னு எதுவும் நீ எனக்குச் சொல்லத் தேவையில்ல. எனக்கு என்ன செய்யனும்னு தெரியும்.  உன் வாயத் திறந்து எதாவது சொன்ன அவ்வளவுதான்”, என விரலைக் காட்டி பெண்ணிடம் பத்திரம் காட்டிவிட்டு, கிளம்பி வெளியே சென்றிருந்தான்.

 

சற்று நேரத்தில் வந்தவன், பெண்ணைக் கண்டும் காணாததுபோல ஏதோ வேலை செய்தான்.

////////////

மாதமே சென்றிருந்தது.

 

இருவரும் பேசிக் கொள்வதில்லை.

 

ஏதோ சரியில்லை எனப் புரிந்து கொண்ட ராஜேஷ், ஒரே வாரத்தில் தாய் வற்புறுத்தியும், இங்கு இனி தங்கமாட்டேன் என கிராமத்திலிருந்து சென்று வரத் துவங்கியிருந்தான்.

 

தட்டில் உணவைப் போட்டு வைத்தால், அவனாகவே வந்து உண்டான்.

 

முன்பைக் காட்டிலும் இன்னும் அலைந்தான்.

 

பெண் வழமைபோல பள்ளிக்குச் சென்று வந்தாள். அதிதீ தனது தேவைக்கு பேசினாலும், கோபத்தில் செயல் மொழியைத் தவிர, பேசுவதை அறவே விட்டிருந்தான் நந்தா.

 

ஆனால் மனைவிக்கு வேண்டிய அனைத்தையும் செய்தான்.  ஆனால் பேசுவதில்லை.

 

அடுத்தடுத்து, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அந்த வேலைகளைக் கவனிப்பதால், பார்த்து வந்த வேலையை விட்டிருந்தான் நந்தா.

 

அதை அதிதீயிடம் பகிரும் ஆவல் எழுந்தாலும், என்னைப் பார்த்து இப்படிப் பேசிவிட்டாளே என்கிற கோபம் இன்னும் இருக்க, அதைக் கூறவிடாமல் தடுத்தது.

 

மிகுந்த வருத்தம் நந்தாவிற்கு இருந்தது.  பெண்ணிடம் முன்பைப்போல அன்றன்று நடப்பதை கூறாததால் தலை வெடித்து விடும்போல இருந்தது.

 

தனக்கு அவள் எப்படியோ, அப்படி தான் அவளுக்கு இல்லையோ என்கிற வருத்தம் வேறு.

 

மணல், ஜல்லி, செங்கல் போன்றவை லோடு இறங்கும் வேளைகளில் இரவு நேரங்களில் எல்லாம் கிளம்பி வெளியில் சென்றான்.

 

அதிகாலை சென்றவன், பதினோரு மணியளவில் வீடு திரும்பியிருந்தான்.

 

தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்து வந்தவனுக்கு, அன்று ஞாயிற்றுக் கிழமை என்பது நினைவில் இல்லை.

 

வந்து குளித்துவிட்டு, பெண் செய்து வைத்திருந்த உணவை எடுத்து உண்ணும்போது, வெளியில் நின்றவாறு அழைக்கும் சத்தம் கேட்டது.

 

அதிதீ என்று சியாமளா அழைத்த சத்தம் கேட்டு வெளியில் வந்தவன், பள்ளிக்கு அதீ சென்றிருப்பதாக கூறினான்.

 

சியாமளாவோ, “இன்னிக்கு சண்டே.  இன்னிக்கு என்ன ஸ்கூலு”, என்ற பிறகே நந்தாவிற்கு உரைத்தது.

 

இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமையா? என்று சரிபார்த்தான்.

 

பள்ளிக்குச் செல்ல இன்று வாய்ப்பில்லை.

 

வேறெங்கும் பெண் தனித்து இதுவரை கிளம்பியதில்லை.

 

சியாமளாவிடமே, “எப்போ வெளிய போனா” எனக்கேட்க

 

“பாக்கலையே”, என்றபடி, “உங்கிட்ட கேட்டா, நீ எங்கிட்ட கேளு”, எனச் சிரித்தபடியே அகன்றிருந்தார்.

 

நேரத்தைப் பார்த்தான்.  நந்தா வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது

 

கடைத் தெருவிற்கு சென்றாலும் அரை மணித்தியாலத்தில் சென்று திரும்பிவிடுவாள் என்பதை அறிந்திருந்தான் நந்தா.

 

எங்கே சென்றாள் என்பதும் தெரியாமல் வீட்டில் எல்லா இடத்திலும் பார்த்தான். 

 

எதாவது வெளியில் சென்றதைப் பற்றி எழுதி வைத்திருக்கிறாளா என்று பார்த்தான்.

 

நந்தாவின் ஃபைல் இருந்தது. கையோடு எடுத்து வந்திருந்த அவளது ஃபைல் அங்கில்லை.  

 

அவளது புத்தகங்கள் வழமைபோல வரிசையாக அடுக்கியிருந்தது.

 

ஃபைலை எடுத்துக் கொண்டு  இன்டர்வியூவிற்கும் செல்ல விடுமுறை தினமென்பதால் வாய்ப்பில்லை.

 

அவளது கையில் மொபைல் இருப்பதால் உடனே அழைத்தான்.  அழைப்பு சென்றதே அன்றி  பெண் அழைப்பை ஏற்கவே இல்லை.

 

அடுத்தடுத்து அழைத்து ஓய்ந்தான்.

 

அதுவரை தனது கட்டிட வேலையைப் பற்றிய சிந்தனையில் இருந்தவன், அதற்குமேல் எதையும் யோசிக்க இயலாமல், அதிதீயைப் பற்றிய சிந்தனைக்கு வந்திருந்தான்.

 

யாரிடம் சென்று கேட்பது? என்று புரியாமல், முதலில் அவள் பணிபுரியும் பள்ளிக்குச் சென்று பார்த்தான்.

 

கேட் பூட்டியிருந்தது.

 

வந்து இத்தனை நாள்ல எங்கேயும் என்னை விட்டுப் போனதேயில்லையே.  இன்னிக்கு எங்கே போனா? குழப்பம் நீடித்திட மனமெங்கும் பாரமாக உணர்ந்தான்.

 

பேசாமல் இருந்தபோது தெரியாதது, அவள் தன்னைவிட்டுச் சென்று விட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

 

யாரிடம்போய் அவளைப் பற்றி விசாரிப்பது?

 

பைத்தியக்காரன்போல சாலையில் நடந்தவாறே, தேடினான்.

 

முந்தைய நாளின் இரவுகூட தான் கிளம்பும்போது உறங்கிக் கொண்டிருந்தாளே!  அவளை எழுப்பி, “கதவைப் பூட்டிக்கோ அதீ”, என்றுவிட்டுத்தான் கிளம்பியிருந்தான்.

 

அமைதியாக பின்னோடு எழுந்து வந்து கதவைச் சாத்திய பிறகே சென்றிருந்தான்.

 

சமீபத்தில் செகண்ட் ஹேண்ட் டூவிலர் ஒன்று எடுத்திருந்தான்.

 

அதுவரை நடந்து சென்று தேடியவன், அடுத்து தனது டூவிலரை எடுத்துக் கொண்டு சற்று தூரத்தில், இருவரும் முன்பு சென்று வந்த இடங்களுக்கு எல்லாம் பார்த்தான்.

 

மூன்று மணி வரை தேடித் திரிந்தான்.

 

உலகமே வெறுத்திருந்தது. 

 

பெண் தன்னை தவறாக எண்ணி விட்டதோடு, உன் தாய் சொல்வதைக் கேட்டு அவர் சொல் கேட்டு நடந்துகொள் என்று கூறியதால் எழுந்த கோபத்தில் பெண்ணோடு பேசாமல் இருந்தான்.

 

பெண் வழமைபோல ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாலும், நந்தாதான் கோபம் குறையாமல் விரைப்பாகவே தெரிந்தான்.

 

மற்றபடி பெண்ணை எந்த நிலையிலும் விட்டுவிடும் எண்ணமில்லை அவனுக்கு.

 

இன்றானால், அதிதீ அவனை விட்டுவிட்டு, என்பதை நினைக்கவே வெறுப்பாக இருந்தது.

 

தன்னோடு இருக்கும்வரை பெண்ணைத் தவிர்த்தவனுக்கு, பெண் தன்னை விட்டுப் போய் விட்டாளோ என்று தவிப்பாக இருந்தது.

 

ஆழ்மனது, ‘அதீ என்னை விட்டுப் போக மாட்டா’, என ஆணித்தரமாக உரைத்தாலும், ‘அப்போ இவ்ளோ நேரம் எங்க போனா.  போனவ ஏன் இன்னும் எங்கிட்ட வரலை’, எனக் கேட்டு வதைத்தது.

 

இவ்வளவு நாள் பெண்ணைத் தேடி வராத அவளின் தந்தை, இன்று வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றிருப்பாரோ?, என்றெல்லாம் மனம் சிந்தித்து ஓய்ந்தது.

 

என்றுமில்லாமல் இறைவனைப் பிரார்த்தித்தான்.

 

‘அதிதீயோடு பேசாமல் இனி இருக்க மாட்டேன்.  அவளோடு கோபமோ, சண்டையோ இனி வராமல் நடந்து கொள்வேன்.  ஆனால் அவள் எனக்கு வேண்டும்.  எங்கு சென்றிருந்தாலும், என்னிடமே அவளைச் சேர்த்துவிடு’ என்று மன்றாடினான்.

 

அதிதீ என்னவானாள்? நந்தா வேண்டியது நடந்ததா?

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!