VVO13

VVO13

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 13

 

அதிதீயைப்  பொறுத்தவரை இயலாமை, பாதுகாப்பற்ற தனது நிலையை மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டதன் விளைவால், நந்தாவிடம் விட்டேத்தியாக பேசியிருந்தாலும், அடுத்த கனமே மனதில் இருந்த பாரம் குறைந்திட இயல்புக்குத் திரும்பியிருந்தாள்.

 

கணவனது செயலில் வருத்தம் வந்திருந்தாலும், எத்தனையோ முறை நந்தாவிடம் மன்னிப்புக் கோரியும், முறைப்பாக ஒரு பார்வை என்பதைத் தவிர, அவனது மறைமுகமான செயல்கள் தன்மீதான நந்தாவின் அன்பை வெளிப்படுத்துவதை உணர்ந்து, தன்னோடு பேச வற்புறுத்தாது நந்தாவின் போக்கில் விட்டிருந்தாள்.

 

‘ரொம்பத்தான் பண்றடா… இன்னும் எத்தனை நாளுக்கு உன் கண்ணாமூச்சி ஆட்டம்னு பாக்கறேன்’, அதிதீ

 

நந்தாவிற்கு தனது பொறுப்பு என்று, பெண்ணை காலம் முழுமைக்கும் தன்னுடன் கண்கலங்காமல் வைத்துக் கொள்ள வேண்டும், அவளது தேவைகளுக்காக பிறரை நாடவிடாமல், வேண்டியதை சம்பாதித்து தர வேண்டும் என்பது மட்டுமே.

 

தந்தையின் பாராமுகம் ஏற்படுத்தியிருந்த தாக்கம் அவ்வாறு நந்தாவை எண்ணச் செய்திருந்தது.

 

மற்றபடி உரிமையான பொறுப்புகள் என்று எதையும் அறிந்திருக்கவில்லை.

 

அவனது வீட்டில் அனைத்தையும் இதுவரை காமாட்சியே பார்த்துக் கொண்டிருந்தமையால், பணத்தைத் தந்ததோடு விலகியிருந்தான்.

 

ஆனால் தற்போதைய தனது நிலை, பொறுப்பு அனைத்தும் நந்தாவிற்கு இன்னும் பிடிபடவே இல்லை.

 

குடும்ப வாழ்க்கையில் இருவரின் ஒருமித்த செயல்பாடு தெரியவில்லை.

 

தனது தந்தையைப்போல பொறுப்பற்று இராமல், வீட்டிற்கு வேண்டிய அனைத்தையும் தன்னால் கவனிக்க முடிகிறது என்கிற அளவில் மட்டுமே நிறைவாக யோசித்திருந்தான்.

 

அதிதீயும் பள்ளிக்கு செல்வது, வீட்டு வேலை அதுதவிர, தேர்விற்கு தயாராவது என மிகவும் பிஸியாகவே இருந்தாள்.

 

நந்தா வீம்பாக தன்னைத் தவிர்த்தாலும், பெண் நந்தாவைத் தவிர்க்க எண்ணவில்லை.

 

தனது தந்தையை ஒப்பிட்டுப் பார்த்தவளுக்கு, நந்தா ஆயிரம் மடங்கு என்ன அதற்குமேலும் நல்ல கணவனே என்கிற எண்ணம் வந்திருந்தது.

 

கோபத்திலும், தனக்கு வேண்டியதை செய்யவே நினைக்கிறான் என்றபோது, வேலை நிமித்தமாக தான் வாங்கி வரச் சொன்னதை மறந்து வந்தாலும் அதிதீயே அதை உணர்ந்து, இயன்றவரை தானே பார்த்துக் கொள்ளத் துவங்கியிருந்தாள்.

 

ராஜேஷ் இருக்கும்வரை, வெளிவேலைகளை அவனிடமும் அதிதீ கூறுவாள்.  அவனும் மறுக்காமல் செய்துவிடுவான்.

 

ராஜேஷ் சென்றபின் நந்தாவிடம் பத்து முறை கூறினால்தான் வேலை நடக்கும் என்கிற அளவிற்கு புதிய வேலைப் பளுவில் மறந்துவிட்டு வருவதைக் கண்டவளுக்கு, புரிந்து கொண்டு கடந்துபோன நாள்களில் தானாகவே செய்யப் பழகியிருந்தாள்.

 

அதில் பெண்ணுக்கு வருத்தமெதுவும் இல்லை.

பள்ளி விட்டு வரும்வழியில் வீட்டுத் தேவைகளுக்கு ஏற்ப வாங்கி வருவதை வாடிக்கையாக்கியிருந்தாள்.

 

தனது தந்தை, தாயை இந்தளவிற்கு சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திராத நிலையைக் கண்டு வளர்ந்திருந்தவளுக்கு, நந்தா பேசாமல் இருந்தாலும், வீட்டிற்குள் வந்ததும் தன்னைத் தேடுவது, தன்னைக் கண்ட பிறகு முறுக்கிக் கொண்டு திரிவது எனப் பார்த்தவளுக்கு சிரிப்பாக மட்டுமே வரும்.

 

‘பய நம்மத் தேடுனாலும், அதை காட்ட மாட்டானாக்கும்.  ஒரு நாளைக்கு வசமா வந்து மாட்டுவடீ’, என சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தாள் அதிதீ.

 

மறைந்திருந்த தனது மீதான நந்தாவின் அன்பில் நனைவதே அதிதீக்கு பேரின்பமாக உணரத் துவங்கியிருந்தாள்.

 

வீட்டிற்குள் வந்து பத்து நிமிடங்கள் தன்னைக் காணவில்லையெனில், பேசாத போதும் அலைப்புறுதலோடு தேடி அலைவதைக் கண்டிருந்தாள்.

 

ஒரு சமயம் சியாமளா வீட்டிற்குச் சென்று வருவதற்குள் வீட்டிற்குள் நுழைந்த நந்தாவைப் பார்த்ததும் பின்னே வந்தவள், அதிதீயைக் காணாது நந்தா தேடியதை வெளியில் மறைந்திருந்து பார்த்திருந்தாள்.   அப்போதுதான் தனது மீதான நந்தாவின் தேடுதல் எத்தகையது என்பது பெண்ணுக்குப் புரிந்திருந்தது.

 

அதனாலயே ஒரு வாரம் முன்பே ஞாயிற்றுக்கிழமை தேர்வு இருப்பதைப் பற்றி நந்தாவிடம் கூறியிருந்தாள்.

 

அதன்பின்பும் இரண்டு நாள்களுக்கு முன்பும் கூறியிருந்தாள்.

 

புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அலைந்து கொண்டிருந்தவன் விசயத்தை முழுமையாக உள்வாங்கியிராததால் நினைவில் இருக்கவில்லை.  அதனால் எழுந்த பிரச்சனைதான் இது.

 

நந்தாவிற்கும் அனைத்தையும் தனியொருவனாக சமாளிக்கவே இயலாமல் திணறிக் கொண்டிருக்கும் சமயமிது.

 

ராஜேஷிடமும் விடுமுறை அன்றாவது வந்து உடன் நில் எனக் கேட்டும் இன்றுவரை வரவில்லை.

 

சொந்தத் தொழில் என்பது அத்தனை எளிதல்லவே.

//////////

நீண்ட நேர யோசனை மற்றும் தேடலுக்குப்பின், ஒருவேளை ஏதேனும் தேர்வு எழுதச் சென்றிருக்கிறாளே என்கிற எண்ணம் வந்ததும், ‘எப்ப இனி அடுத்தடுத்த எம்சாம்னு ரிமைண்டர்ல நாந்தான் போட்டு வச்சுக்கனும்’, என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நேரத்தைப் பார்த்தான்.

 

ஒரு மணிக்கு முடிந்திருந்தாலும், இந்நேரம் வந்திருக்க வேண்டுமே! ஆனால் நான்கு மணியாகியும் அதிதீ வரவில்லை.

 

அதிதீயின் வீடு இருக்கும் தெருவின் வழியே சென்றும் பார்த்து வந்தான்.

 

வழமைபோலவே அந்தத் தெரு, குறிப்பாக பெண்ணது வீடு அமைதியாக காட்சியளித்தது.

 

வித்தியாசமாக எதுவும் கண்ணில் தென்படவில்லை.

 

அடுத்து, பேருந்து நிறுத்தம் வழியே டூவிலரில் சென்றபடியே பார்வையை அங்கு வைத்தவாறே மெதுவாக ஓட்டி வந்தவன், வண்டியை நிறுத்திவிட்டு சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்.

 

அருகே பூ விற்றுக் கொண்டிருந்த பெண்மணி, “இந்தாய்யா பூ வாங்கிட்டுப்போ”, என்றழைக்க

 

‘இத்தனை நாளு நீ எங்கத்தா போயிருந்த! இன்னிக்கு சரியா பொண்டாட்டி காணாம போன அன்னிக்கு வந்து பூ வாங்குங்கற’, என மனதில் ஓடக் கடந்தான்.

 

நேரம் ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

 

நாகேந்திரன் மீதெல்லாம் சந்தேகம் வந்தது.  வெளியே சென்றபோது எங்கேனும் மாட்டிக் கொண்டாளோ என எண்ணி ஓய்ந்தான்.

 

காவல்துறையிடம் கொடுத்த புகாரினால் நிச்சயமாக நேரிடையாக எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்த மாட்டான் என்பது திண்ணம்.

 

ஆனால் மறைமுகமாக…

 

‘இவளுக்கு எப்பவும் இதே வேலையாப் போச்சு.  இவ காணாமப் போறதும் நான் தேடித் திரியறதுலயுமே வாழ்க்கையே ஓடிரும்போல’, என மனம் அலுத்தாலும், பயம் கவ்வியிருந்தது.

 

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, நீண்ட நாளுக்குப்பின் என்பதைவிட, நீண்ட வருடங்களுக்குப் பின் சிகரெட்டை வாங்கி வாயில் வைத்து அதைப் பற்ற வைத்தான்.

 

எங்கேயிருக்கிறாள் என்றே தெரியாமல் எங்கு போய்த் தேட என்றெண்ணியவாறே, ஒரு இழு முழுமையாக இழுத்து புகையை விடுமுன், முதுகில் தட்டி யாரோ தன்னை அழைக்கவும் வேகமாக புகையை வெளிவிட்டபடியே ‘யாரது இங்க’, என நண்பர்களை எதிர்பார்த்து எரிச்சலோடு திரும்ப

 

“வா நந்தா, நேரமாகுது.  ரொம்ப டயர்டா இருக்கு.  மயக்கமே வந்திரும்போல”, என்றழைத்த குரலோடு நின்றிருந்த அதிதீயைக் கண்டவுடன், மனதில் மகிழ்ச்சி வந்திட, கையில் வைத்திருந்த சிகரெட்டையும் மாறி மாறிப் பார்த்தபடியே மலுப்பலான சிரிப்போடு நின்றிருந்தான்.

 

நீண்ட நாளுக்குப் பிறகு மனைவியைப் பார்த்துச் சிரிக்கிறான்.

 

அதிதீக்கு புரிந்தது.  எதனால் இந்த கள்ளச் சிரிப்பு என்று.  கையையும் முகத்தையும் மாறிமாறிப் பார்த்தவள், “வழியுது..! வா சீக்கிரம்”, என உரைத்துவிட்டு திரும்ப

 

கையில் வைத்திருந்ததை தடுமாற்றத்தோடு கீழே போட்டு, தனது காலால் நசுக்கிவிட்டு, “டீ குடிக்கிறியா”, என பெண்ணிடம் கேட்க

 

“வாடா வீட்டுலபோயி போட்டுக் குடிச்சிக்கலாம்”, என்றபடியே, நிறுத்தியிருந்த அவர்களது வண்டியின் அருகே போய் நின்றாள்.

 

‘இவ்வளவு நேரம் தேடுனேன். அப்ப வராதவ வாங்கி வாயில வச்சதும் எங்கிருந்து வந்து குதிச்சா’, என்பதுபோல பெண்ணையே பார்த்தபடி வந்தான்.

 

‘இவகிட்ட இத்தனை நாளு இருந்த வீம்புக்கு இன்னிக்கு இப்டி மண்ணைக் கவ்வற மாதிரிப் போச்சேடா நந்தா’, என மனம் யோசிக்க, இன்று இப்படி வசமாக பெண்ணிடம் மாட்டிக் கொண்டு தான் விழித்து நின்றதே குறையாக மனதில் தோன்ற, வீட்டிற்குச் சென்றபின் நிலவரம் கலவரமாகுமா அல்லது களேபரமாகுமா என்பது தெரியும் என யோசித்தவாறே பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தான்.

 

பெண்ணது தோற்றமே அவள் தேர்விற்கு சென்று வந்ததைப் பறைசாற்ற, அதிதீயும் விடாமல் அன்றைய தேர்வைப் பற்றி நந்தாவிடம் பேசியவாறே வந்தாள்.

 

‘ம்ஹ்ம்..’ கொட்டியவாறே வீட்டிற்கு வந்திருந்தான்.

 

வீடு வந்ததும், “அப்ப எங்கிட்ட ஏன் சொல்லலை?”, நந்தாவின் கேள்வியில்,

 

“என்னாச்சுடா வர வர நான் பேசுற எதையும் காதுல வாங்காம பஞ்சை வச்சிக்கிறியா இல்லை… காதுல எதுவும் பிரச்சனையாடா”, எனக் கேட்டாள் அதிதீ.

 

“ஏதோ டென்சன்ல கவனிக்காம இருந்துட்டேன் போலடீ”, என்றவன் பெண் வீட்டிற்குள் நுழைந்தும், வெளியிலேயே ஏதோ வேலை செய்யும் பாவனையிலேயே சுற்றி சுற்றி வந்தவாறு இருந்தான் நந்தா.

 

நீண்ட நேரமாகியும் வராதவனைத் தேடி, பெண் வெளியே வரவில்லை.

 

பெண்ணிற்கும் புரிந்தேயிருந்தது.  ஆனாலும் வராமல் எங்கே போகப் போகிறான் என, இருந்த களைப்பில், தன்னை ரெஃப்ரெஷ் செய்து கொண்டு, தேநீர் தயாரிப்பில் நின்றிருந்தாள்.

 

அதேநேரம் வெளியில் காமாட்சியின் சத்தம் கேட்டது.

 

‘என்னது இந்நேரத்தில வந்திருக்காங்க?”, என யோசித்தபடியே நின்றிருந்தாள்.

 

“எங்கதான் வீட்டப் பூட்டிட்டு போய்த் தொலைஞ்சீங்க”, என்ற காமாட்சியின் கேள்விக்கு

 

“நீ வருவேன்னு நாங்க கனவா கண்டோம்.  அதுக்கு தொலைஞ்சீங்கனு கேக்கற?”, என நந்தா கடுப்பாகக் கேட்க

 

“நீ வேலை வேலைனு இருப்பேனு எனக்குத் தெரியாதாயா?  அந்தப் புள்ளைக்கு இன்னிக்கு லீவுதான?  அதான் கேட்டேன்”, என மகனிடம் கேட்பதும் அதிதீக்கு கேட்டது.

 

“லீவுன்னா கதவைத் தொறந்து வச்சிட்டு நீ எப்படா வருவேனு வாசலையேவா பாத்துக்கிட்டுருப்பா.  அவளுக்கு இப்பதான் எக்ஸாம் முடிஞ்சு வீட்டுக்குள்ள வந்தா”

 

“ம்ஹ்ம்.. இன்னும் என்னத்தைப் போயி எழுதிக்கிட்டு…”, என்றவர், “ஆமா முன்னல்லாம் ஊருப்பக்கம் வருவியே… இப்பல்லாம் ஏன்யா வரவே மாட்டீங்கற…”, என மகனிடம் நெகிழும் குரலில் கேட்க

 

“ஏன்னு உனக்குத் தெரியாதாக்கும்!  தெரியாத மாதிரி வந்து கேக்கற!”, நந்தாவின் கிடுக்கிப்புடித்தனமான கேள்வி வீட்டிற்குள் நின்றிருந்தவளுக்கும் கேட்டது.

 

“நான் என்னயா பண்ணேன்”, மகனிடம் மிகவும் பவ்யமாகப் பேசும் காமாட்சியின் குரலைக் கேட்டவளுக்கு,

 

‘மகன்கிட்டல்லாம் நல்லாதான் பேசுறாங்க.  நம்மகிட்டதான் ரூடா பேசுறாங்க’, என நினைத்தபடியே தயாரித்த தேநீரை மூன்றாகப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டாள்.

 

“என்ன நம்ம கீதா மாப்பிள்ளைக்கு, பொண்ணு பாத்திட்டியா? எப்ப கீதாவுக்குத் தெரியாம மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போற”, என நந்தா நக்கலாகக் கேட்கவும்

 

“அவச்சொல்லாவே சொல்லாதயா… கூடப் பிறந்தவளுக்கே யாராவது இப்டி குழியத் தோண்டக் கண்டமா?”, என்ற காமாட்சியின் குரல் குறைந்து ஒலித்தது.  அதிதீக்கு கேட்கவில்லை.

 

“உம்பொண்ணுக்குன்னா மட்டும் பதறுற.  அப்டித்தான எனக்கு வேற பொண்ணு பாக்கறேன்னு சொன்னா எம்பொண்டாட்டிக்கும் இருக்கும்”, என கோபமாக வழமையான சத்தத்திலேயே நந்தா தாயிடம் கேட்டான்.

 

“….”

 

“இனி அங்க வந்தா, உம்பேரனோ, பேத்தியோ பிறந்து கூட்டிக்கிட்டு வருவேன்.  இல்லனா இனி நீ இருக்கற பக்கங்கூட தலைவச்சுப் படுக்கமாட்டேன்.  வந்தா இன்னும் எதாவது எங்கிட்ட கோபத்தைக் கிளறுற மாதிரி நீ சொல்ல.. அது இனி நல்லாயிருக்காது”, எனக் கூறக் கேட்டவனை நினைத்து வீட்டிற்குள் நின்றிருந்தவளுக்கு சிரிப்பே வந்துவிட்டது.

 

‘நம்மகிட்ட முறைச்சிகிட்டு தெரியுது… லூசு அங்க பேசற பேச்சைப் பாரு’, என எண்ணியவாறே வெளியே வராமல் சற்று தாமதித்தாள்.

 

“அது வெளாட்டுக்கு சொன்னேன்.  அதுக்காகவா அந்தப் பக்கம் வராம இருக்க”, காமாட்சி

 

“அதைத்தான் உங்கிட்ட அன்னைக்கே சொல்லிட்டுத்தான வந்தேன்”

 

“….”, காமாட்சி

 

“ராஜேஷுக்கு தெரியறதுகூட உனக்குத் தெரியாத மாதிரிப் பண்ற… போ… முதல்ல வீட்டுக்குள்ள போயி டீ எதாவது குடுப்பா வாங்கிக் குடிச்சிட்டு கிளம்பற வழியப் பாரு.”, என்று தாயிடம் கூறிவிட்டு அப்படியே வண்டியை எடுத்துக் கொண்டு வேலை நடக்கும் இடத்திற்கு கிளம்பிவிட்டான்.

 

வீட்டிற்குள் செல்ல யோசித்தவாறு நின்றிருந்தவனுக்கு, தாயிடம் பேசியதோடு, காலையில் விட்டு வந்திருந்த வேலைகள் நினைவில் வந்திருக்க,  கவனிக்க எண்ணிக் கிளம்பியிருந்தான்.

 

காமாட்சி எதுவும் அதிதீக்கு தெரியாது என்பதுபோல, “இதுவே எஞ்சொந்தத்துல பொண்ணு எடுத்திருந்தா இப்டி நடந்திருக்குமா?  அந்நியமா போனதால பெத்தவுகளே வேணானு சொல்றமாதிரி எம்மகனை மாத்தி வச்சிருக்கா”, என்றவாறே உள்ளே நுழைய

 

“…”, கேட்டும் கேட்காததுபோல டீயை கொணர்ந்து தந்துவிட்டு, காலையில் போட்டுச் சென்றிருந்த பாத்திரங்களைக் கழுவத் துவங்கியிருந்தாள்.

 

“இது என்ன டீயா? இல்லை காபியா?  கழனித் தண்ணீ மாதிரி ச்சேய்… ஒரு காபி கூட போடத் தெரியாம… எம்புள்ளைக்கு என்னத்தை ஆக்கிப் போடுறாளோ?  அதான் எம்புள்ளை தேஞ்சு போயிட்டான்”, என்றபடியே குடிக்கத் துவங்கியபோது,

 

“எதுக்குத்தை உங்களுக்கு கஷ்டம்.  நல்லாயில்லைனா தாங்க…” என கையில் இருந்ததைக் கேட்க

 

அதிதீயின் இந்தச் செயலை எதிர்பார்த்திருக்கவில்லை காமாட்சி.

 

“அதை அப்டியே வச்சிருங்கத்தை… அதை நாயிக்கு ஊத்திறேன்.  பாலு இருக்கு.  வேணா நல்ல டீயா போட்டுக் குடிச்சிட்டுப் போங்கத்தை… இல்லைனா நல்ல டீயா பஸ்ஸ்டாண்டுல வாங்கிக் குடிச்சிட்டுப் போங்க”, என நகர்ந்திருந்தாள்.

 

கையில் இருந்ததை குடிக்கவும் மனதில்லாமல், வைத்துவிட்டுச் செல்லவும் மனமில்லாமல், “மாமியாக்கிட்ட எப்டி பேசணும்னு தெரியாதா உனக்கு.  உன் கொட்டத்தை அடக்கவாவது வேற ஒருத்தி சீக்கிரம் இங்க வருவா.  வேணா பாரேன்”, என்றபடியே கிளம்ப எத்தனிக்க

 

“ஒரு நிமிசம்…”, என்றவள், “உங்க மகன் பேசுனது எல்லாம் எங்காதுலயும் விழத்தான் செஞ்சுது.  எதுவுமே நடக்காத மாதிரி நாடகம் போல நடிச்சுப்பேச எனக்குத் தெரியாது.  என்ன நான் கொட்டமடிச்சேன்னு இப்ப வந்து தேவையில்லாம வார்த்தைகளை விடறீங்க.  குடுக்கறதை வாங்கிச் சத்தமில்லாம சாப்பிட்டா இனி வீட்டுல இருக்கறதைத் தருவேன்.  இல்லனா பச்சத் தண்ணீ கூட கிடையாது”, என்றுவிட்டு அகன்றிருந்தாள்.

 

இதுவரை பேசாத மருமகள் முதன்முறையாக எதிர்த்துப் பேசியது கோபத்தை உண்டு செய்திட, “கொடுமைக்காரியாவுல வந்திருக்கா.  கடவுளே எம்புள்ளையே அப்புராணி.  அவனுக்கு இப்டி ஒரு பத்திரகாளிய வச்சிக்கிட்டு எம்புட்டுக் கஷ்டப்படுறானோ”, என புலம்பியவாறே,

 

“எம்மகன் இங்க இல்லங்கற திமிருல என்னவெல்லாம் பேசற… ஒரு குடும்பத்துப் பொம்பளை பேசற மாதிரியா பெரியவங்ககிட்ட பேசற?” காமாட்சி கேட்க

 

இதுவரை காமாட்சி கூறியதாக நந்தா பேசிய அனைத்தையும் தொகுத்து கூறியவள், “இதெல்லாம் நீங்க பேசுனதுதான்.  அப்ப நீங்க குடும்பத்து பொம்பிளை இல்லையா அத்தை”, எனக் கேட்க

 

“என்ன வார்த்தை என்னைப் பாத்துப் பேசிட்ட… எம்மகன் வரட்டும் இன்னைக்கு.  வந்ததும் உன்னோட கொட்டத்தை அடக்கலே என்னப் பெத்தவ முத்தமா இல்லைடீ”, என அங்கேயே காலை நீட்டி அமர்ந்து புலம்பத் துவங்கிவிட்டார்.

 

பத்து நிமிடங்கள் அப்படியே புலம்பியவர், “வந்து வருசமாகப் போகுது.  ஒரு புள்ளைய பெத்துக் குடுக்கத் துப்பில்லை. துப்புக் கெட்டத்தனமா பேசுறா… இவுக இருக்கற இலட்சணத்துல இன்னும் படிக்கறாகலாம்.  வெக்கங் கெட்ட சென்மம். 

 

அவங்கப்பன் வீட்டுக் காசுலல படிச்சிட்டு வந்திருக்கணும்.  இங்க காமாட்சி மயந்தான் ஏமாந்தவன் கிடைச்சிருக்கான்ல… அதான் இன்னும் படிக்கப் போறேனு ஊரை ஏமாத்திக்கிட்டு தெரியறா”, என பேசியபடி வெளியேறியிருந்தார் காமாட்சி.

……………..

 

இரவில் வீடு திரும்பியவன், அனைத்தையும் மறந்ததுபோல, “போனா சொல்லிட்டுப் போக மாட்டீயா அதீ?  எப்பப்பாத்தாலும் உன்னைத் தேடீத் தெரியதுதான் எனக்கு வேலையா?”, என்றபடியே உள்ளே வந்திருந்தான் நந்தா.

 

‘அதான் அப்பவே கேட்டானே… அதுக்கும் பதில் சொல்லியாச்சே…’, என யோசித்தவள், ‘பயபுள்ள அது செஞ்ச கோல்மாலை மறைக்க ஏதேதோ பேசுது’, என நந்தாவையே அமைதியாக நோக்கினாள்.

 

“சொல்லிட்டுப் போயிருந்தா நான் பாக்கும்முன்ன தம்மடிச்சிருப்பியா?”, என்று கிண்டலான குரலில் கேட்டவளை

 

“பேச்சை மாத்தாதே.  நாங்கேட்டதுக்கு முதல்ல பதிலைச் சொல்லு”

 

“என்ன சொல்லணும்?”

 

“எங்க போன?”

 

“எக்ஸாமுக்குத்தான் போனேன்.  நேத்துக்கூட உங்கிட்ட ஈவினிங் சொன்னேன்.  நான் பேசறதை காதுல வாங்கணும்.  காதுல வாங்காம விரைப்பா தெரிஞ்சுட்டு, இப்ப வந்து எங்க போனேன்னு குதிச்சா…”

 

“ஓஹ்”

 

“என்ன ஓஹ்.  இப்டி இன்னும் என்னென்ன பழக்கமெல்லாம் இருக்கு”, என்று நையாண்டி குரலில் வினவியவாறே நந்தாவின் அருகில் சென்றவளிடம்,  

 

“ரொம்ப டென்சனாகிட்டேன்டீ.  அதான்…”

 

“அப்ப நானும் டென்சனானா இப்டி எல்லாம் யூஸ் பண்ணிக்கலாம்ங்கற…”, அதிதீ குதர்க்கமாகக் கேட்க

 

பெண்ணது பேச்சில் அருகே வந்து வாயைப் பொத்தியவன், தலையை மறுத்தசைத்து, “யோசிக்கவே முடியலை.  நாலு வருசத்துக்குப் பின்ன இன்னிக்குத்தான் வாயில வச்சேன்.  உன்னைப் பாத்ததும் வீசிட்டேன்”

 

“நான் வந்ததால வீசீட்ட… ரொம்ப வருத்தம்போல”

 

“உன்னைப் பாத்ததுமே மனசு ஃபீரியாயிருச்சு.  அதனாலதான் போட்டேன். வருத்தமெல்லாம் இல்லை”,  உணர்ந்து இளநகையோடு உரைத்தவனை புன்சிரிப்போடு கடந்திருந்தாள் அதிதீ.

 

வழமை திரும்பியிருந்தது.

 

சீண்டலும், தீண்டலும், அதிதீயின் அணுசரனையும், இதுவரை காணாத சொர்க்கத்தை இருவருக்கும் காட்டியது

////////////////

நாள்கள் மிகவும் விரைவாகச் சென்றது.

 

பள்ளிக்குச் சென்று கொண்டே, அடுத்தடுத்த தேர்வுகளிலும் அதிதீ பங்கு கொண்டாள்.

 

முன்பைக் காட்டிலும், சொந்தத் தொழில் காரணமாக, வீட்டில் அதிக நேரம் செலவழிக்க இயலாமல் நந்தா ஓடினான்.

 

வங்கித் தேர்வில் தேர்ச்சியடைந்தவளுக்கு அழைப்பு வந்திருந்தது.

 

முதல்வரிடம் சென்று தெரிவித்து தனது மகிழ்ச்சியை கொண்டாடினாள்.  அதே மகிழ்ச்சியோடு பணியில் சேர்ந்திருந்தாள்.

 

நந்தாவிற்குமே மகிழ்ச்சி.

 

“இனி அவசர ஆத்தரத்துக்கு லோனுக்கு பிரச்சனையில்லை”, என்று மனைவியை அழைத்துச் சென்று முதல்நாள் வங்கியில் விட்டு வந்தான்.

 

“எடுத்தவுடனே லோனுனு ஆரம்பிக்கறீயே”, என்க

 

“எனக்கு என்ன தேவையோ, அதைத்தானே நான் கேட்க முடியும்”, என்றவனை முதுகில் செல்லமாகத் தட்டிவிட்டுச் சென்றாள்.

 

இரண்டு கட்டிட பணிகள் நடந்து கொண்டிருக்க, ஒரு கட்டிடம் நாகேந்திரன் வசிக்கும் பகுதியில் நடந்தது.

 

ஆரம்பித்தபோது இல்லாத இடையூறுகள், தலையிடல்கள், நாள் செல்லச் செல்ல அதிகரித்திருந்தது.

 

அதிதீயிடம் எதுவும் கூறாது வந்த நஷ்டங்களை, தனியொருவனாகவே சமாளித்தான்.

 

ஆறுமாத காலத்திற்குள் கட்டி முடித்திருக்க வேண்டிய கட்டிடம், இடையூறுகளால் இழுத்தது.

 

வரும் லாபம் எதுவும் இன்றி கையைக் கடிக்கும் வண்ணம் சென்றிருந்தது.

 

தனக்கு அதிதீயின் விசயத்தில் உதவிய ஏசிபி மாறுதலாகிச் சென்றிருந்தாலும், இடையூறுகளைச் சமாளிக்க வழி கேட்டான்.

 

“பெரும்பாலும் எங்க டிபார்ட்மெண்ட்ல அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் மாதிரி விசயங்கள்ல இருந்து தப்பிக்க, போற இடத்தில எல்லாத்துக்கும் சரி சரினு போயிருவாங்க.  ரொம்ப ரேராதான் அவங்களை எதித்து நியாயம்னு எதாவது செய்யற ஆளுங்க இருப்பாங்க.  அதனால நீங்க எல்லா பேப்பர்ஸூம் பக்காவா வச்சிட்டு வர்க் கண்ட்டினியூ பண்ணுங்க.  அப்ப எதனா பெரிய பிரச்சனைனா கம்ப்ளைண்ட் பண்ணலாம். க்ளைம் பண்ணலாம்.”, எனக் கூறியிருந்தார்.

 

அனைத்தையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாலும், பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை.

 

மறைமுகப் பிரச்சனைகளை கொடுத்த வண்ணமிருந்தான்.

 

முதலுக்கே மோசம் என்கிற அளவில் அந்த கட்டிடத்தை முடித்திருந்தான்.

 

டிப்ளமோ படித்துவிட்டு எப்படி பில்டிங் வேலைகளை எடுக்கலாம் என்பதுபோன்ற பேச்சுகள் தொடங்கவே, வந்த ஒப்பந்தங்கள் சில கையை விட்டு நழுவியிருந்தது. அதனால் மிகுந்த மனஉளைச்சல் நந்தாவிற்கு வந்திருந்தது.

//////

காலையில் பணிக்குச் சென்று மாலை ஏழு மணிக்கே வீடு திரும்பினாள் அதிதீ.

 

“என்னடீ அஞ்சு மணிக்கல்லாம் விடமாட்டாங்களா?”, நந்தா

 

“விட்டா அங்க ஏன் உக்காந்திட்டுருக்கப்போறேன்”, என அயர்வாகக் கூறியவள், நந்தாவின் மலர்ச்சியற்றிருந்த முகத்தை கடந்து போன தினங்களில் கவனித்திருந்ததால், “ஏன்டா ஒரு மாதிரியா இருக்க?”

 

“ஒன்னுமில்லைடீ”, என்றவனை விடாமல் கேட்டாள்.

 

கூறாமல் சமாளித்தவனை, “ஒருத்தருக்கொருத்தர் இப்டி மறைச்சு வாழறதுக்கா இந்த வாழ்க்கை.  நான் எப்டி எல்லாத்தையும் உங்கிட்ட ஷேர் பண்றேன்”, அதிதீ

 

“அக்ரிமெண்ட் சைன் பண்ற நேரத்தில ரெண்டு பில்டிங் கைய விட்டுப் போயிருச்சுடீ”, நீண்ட நாளுக்குப்பின் மடியில் முகம் வைத்துக் கொண்டு பிதற்றினான்.

 

அத்தோடு சாதக, பாதக விசயத்தைப் பேசி, ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள்.

 

“ஒன்னும் வர்ரி பண்ணாதடா நந்தா.  வர வர்க் மட்டும் பாரு.  உனக்கு பார்ட் டைம்ல இன்ஜினியரிங் பண்ற ஐடியா இருந்தா பண்ணு”, என்றிட

 

நந்தாவிற்குமே தோன்றியிருந்தது.  பெண்ணும் அதையேகூற அதற்கான ஆயத்தங்களில் இறங்கியிருந்தான் நந்தா.

 

இரண்டொரு நாளாக அதிதீக்கும் சோம்பலும், வாந்தியுமாக இருந்தது.

 

நாள் தள்ளிப்போனதைக் கணக்கிட்டவள், நந்தாவிடம் தனது சந்தேகத்தைக் கூறினாள்.

 

கிட்டை வாங்கி சோதித்தறிந்தனர்.  பாசிடிவ் எனத் தெரிந்ததும் கருவுற்றிருந்தவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான் நந்தா.

 

அங்கு எதிர்பாராது அதிதீயின் தமக்கையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

 

இதுவரை தங்கையைத் தேடாத ப்ரீத்தி, அதிதீயைக் கண்டதும் என்ன செய்தாள்?

 

ப்ரீத்தி, அதிதீயைக் கண்டு கொண்டாளா?

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!