வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 14

 

முதலில் தமக்கையைப் பார்த்ததும், தனது செயலை எண்ணி அதிதீ தயங்கி நிற்க, “அதீ….”, என்றவாறே நிறைமாத வயிற்றோடு தங்கையின் அருகே வந்து கையைப் பிடித்துக் கொண்டாள் ப்ரீத்தி.

 

ப்ரீத்திக்கு கண்கள் கலங்கியிருந்தது.

 

மூச்சு வாங்கியபடி பேசிய ப்ரீத்தியிடம் என்ன பேசுவது எனத் தெரியாமல் மலங்க விழித்தபடியே, குற்றவுணர்வோடு கண்ணில் நீர் வழிய நின்றிருந்தாள் அதிதீ.

 

“எப்டிடீ இருக்க? ரொம்ப மெலிஞ்சு ஓஹ்னு போயிட்ட!”, என்றபடியே தங்கையின் முகத்தை ஆராய்ந்தாள் ப்ரீத்தி.

 

சோர்ந்திருந்தவளின் தோற்றத்தைக் கண்டு விசயத்தைக் கணித்தாலும், பொதுவான பேச்சுகள் மட்டுமே.

 

“ம்ஹ்ம்…”, என தலையை அசைத்து கூறியவளுக்கு அழுகை வந்தது.

 

பின்னால் நின்றிருந்த நந்தாவைப் பார்த்தவளுக்கு ஏதோ தோன்றிட, “வாங்க”, என்பதுபோல தலையை அசைத்து முகமன் கேட்டாள் ப்ரீத்தி. 

 

தமக்கையைப் பார்த்ததுமே நந்தாவிடம் கூறியிருந்தாள் அதிதீ.

 

நந்தாவும் இருவரின் பேச்சைக் கேட்டபடி, அதுவரை பெண்ணை விட்டு தயங்கி பின்னே நின்றிருந்தவன், ப்ரீத்தியின் இயல்பான வரவேற்பில், தன்னை அதிதீயின் வீட்டில் ஏற்றுக் கொண்ட நிறைவோடு, “நல்லாயிருக்கீங்களா… வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”, என கிராமத்து பாணி உபசரிப்பில் இறங்கியிருந்தான் நந்தா.

 

ப்ரீத்தியும் மரியாதை நிமித்தமாக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாள்.

 

சற்று நேரத்தில் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு அங்கு வந்த கௌசல்யா மிகவும் இளைத்துக் காணப்பட்டார்.

 

மகளைக் கண்டதும் அரவணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார்.

 

அதிதீயும், “சாரிம்மா… வேற வழியில்லாம அப்டி பண்ணிட்டேன்.  ரொம்ப அப்பா உன்னைக் கஷ்டப்படுத்திட்டாராம்மா…”, என அழுகையோடு தாயைக் கேட்டாள்.

 

“நீ செஞ்ச காரியத்துக்கு என்னை அவரு உயிரோட விட்டதே பெருசு!”, என பெருமூச்சு விட்டவர், “இனி நடந்து முடிஞ்சதைப் பத்திப் பேசி ஒன்னுமாகப் போறதில்லை!”, என விட்டேத்தியாக உரைத்தார் கௌசல்யா.

 

டோக்கன் போடுவது போன்ற பணிகளைப் பார்க்க அவர்களைவிட்டு நந்தா சென்றிருக்க, மூவருமாக வெளியில் இருந்த கேண்டினில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

அதிதீ சென்றது முதல் நிகழ்ந்த அனைத்தையும் கௌசல்யாவும், ப்ரீத்தியும் ஒவ்வொன்றாக தொகுத்துக் கூறினர்.

 

அனைத்தையும் வருத்தத்தோடும், இயலாமையோடும் கேட்டுக் கொண்டாள் அதிதீ.

 

அதிதீ வங்கியில் வேலையில் இருப்பதை அறிந்து உச்சி முகர்ந்து, “உன்னோட முயற்சிக்கு கடவுள் உன்னை கைவிடமாட்டார்.  நல்லாயிருப்ப!”, என மகளை வாழ்த்தினார் கௌசல்யா.

 

ப்ரீத்தியின் குடும்பம் சார்பாக எழுந்த அதிதீயைப் பற்றிய பேச்சுகளும் அலசப்பட்டது.

 

தீனதயாளனுக்கு ஸ்ட்ரோக் வந்து வீட்டில் படுக்கையில் இருப்பதாகக் கூறினார் கௌசல்யா.

 

பதறி அழுதவளைத் தேற்றிய இருவரும், “எல்லாத்தையும் அதட்டி, திட்டினு வாழ்ந்தவரு..! இப்ப பேசமுடியாம படுத்த படுக்கையாகிட்டாரு! ஆனா  இன்னும் கோபம் வருது.  பேச முடியல…! ஆனா ஆக்ரோசத்துல பக்கத்துல இருக்கறதையெல்லாம் தட்டி விடறது, கத்தரதுன்னு அவரு பொழுது போகுது!  அதைக் கண்ட்ரோல் பண்ண மெடிசன் எடுத்தும், நாளுக்கு நாள் ரொம்ப மோசமாகிட்டேயிருக்காரு!”, வருத்தத்தோடு உரைத்தார் கௌசல்யா.

 

தீனதயாளனின் நிலையைக் கேட்டு அதிதீக்கு மேலும் குற்றவுணர்வு வந்தது.

 

“எல்லாம் என்னாலதான”, என கழிவிரக்கத்தோடு தந்தையை எண்ணி அழுதவளைத் தேற்றிய கௌசல்யா

 

“நீ செஞ்சது சரினு சொல்ல மாட்டேன் அதீ!  ஆனா நீ இருந்த சூழ்நிலை உன்னை அப்டி செய்ய வச்சிருச்சு! அதுக்காக உன்னை நியாயப்படுத்தறேன்னு எடுத்துக்கக் கூடாது.

 

உங்கள எந்தக் கஷ்டமும் இல்லாம வளத்து, ஊரு மதிக்கறமாதிரி ஒரு நல்ல இடத்தில கல்யாணம் பண்ணிப் பாக்கத் துப்பில்லாத அம்மாவா இருந்துட்டேன்!”, என வருத்தத்தோடு பகிர்ந்தவர்

 

“…பெத்தவங்க அமையறதுகூட வரந்தான்போல!”, என கழிவிரக்கத்தோடு கூறினார்.

 

“…ஆனா உங்களுக்கு மட்டும் அந்தக் கொடுப்பினைய ஆண்டவன் ஏன் குடுக்கலைன்னு தெரியலையே!”, என அழுதவர்

 

“எல்லாம்… பாவி என்னாலதான்…!”, என தலையில் அடித்துக் கொண்டு குமுறிவிட்டார்.

 

அழாதம்மா எனத் தேற்றிய மகள்களை அணைத்தபடியே, “ப்ரீத்திக்கும் இப்டித்தான் அவருபோக்குல தானாவே முடிவெடுத்து கல்யாணம் பண்ணார்.  ஆனா அதுல அந்தப் பையன் நல்ல குணம்.  அதுனால அவ தப்பிச்சா. மாப்பிள்ளையும் ப்ரீத்தியோட வேலையக் காரணம் காட்டி, வேற ஊருக்கு மாத்தி வந்துட்டாரு.  அப்பப்ப யாராவது வீட்டுக்கு வரும்போது மட்டுந்தான் அவளுக்குப் பிரச்சனை.  அதையும் அவரே சமாளிச்சிராரு.  

 

உறவுங்க ஒன்னுகூடி சந்தோசமா, ஒத்துமையா இருந்தா நல்லாயிருக்கும்.  ஆனா உள்ளுக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு குளிர்காய நினைக்கிற ஆளுங்களுக்கு இடையிலே மாட்டிக்கிட்டா அப்பிராணியா இருக்கறவங்களோட நிம்மதி போயிரும்.  சண்டையும் சச்சரவும் குடும்பத்துக்குள்ள நிரந்தரமானா எல்லாம் போயிரும். அப்படிப்பட்ட குடும்பந்தான் ப்ரீத்தியக் குடுத்த இடம்.  அதைப் போன கொஞ்ச நாள்லயே புரிஞ்சிகிட்ட மாப்பிள்ளை நல்ல முடிவா எடுத்தாரு.  அவரால ப்ரீத்திக்கு இப்ப பெரிய அளவுல அவங்க வீட்டு ஆளுங்கனால பிரச்சனை எதுவும் இல்லாம இருக்கா.

 

உன்னை நினைச்சுத்தான் பயந்துட்டே இருந்தேன். என்னாச்சோ, எப்டியிருக்கியோனு… ஆனா இன்னைக்கு உன்னைப் பாத்ததும் அந்தப் பயம் போயிருச்சு.  பெத்த வயிறு இப்பத்தான் குளிர்ந்திச்சு”, என்றவர்

 

“கையாலாகதா அம்மாவா இருந்ததால உங்களுக்குன்னு சுயமா யோசிச்சு நான் எதுவும் செய்ய முடியலை. பெத்த பொண்ணுங்களுக்கு அப்பானாலேயே வந்த சங்கடங்களை கண்கூடா பாத்திருந்தும், அதை சரி செய்ய முடியல…! என்னை மன்னிச்சிருங்கடீ…!”, என கதறியிருந்தார் கௌசல்யா.

 

“ம்மா… எதுக்கும்மா பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி எங்களை சங்கடப்படுத்தற”, என இருவரும் தாயை கடிந்திட,  

 

“உனக்கென்னம்மா.. உன்னை மாதிரி எங்களை புரிஞ்சிட்ட தாய் வேற யாருக்கும் கிடைக்க மாட்டாங்க.  அப்பா பேசுறதைத் தவிர வேற எந்தக் குறையும் எங்களுக்கு தெரியாமதான் நாங்க வளந்தோம்மா.  அவரு இல்லாதப்ப எங்களை நீ எப்டி கேர் எடுத்துப்பனு எங்களுக்குத் தெரியும்மா.. அப்பா பேசுறதையும் வருத்தமாத்தான் நினைச்சோமேத் தவிர… அவரைப் பிடிக்காம இல்லைமா!”, என்ற அதிதீயின் பேச்சில்

 

“கோழி மிதிச்சு குஞ்சு முடமாகாதுன்னு சொல்லுவாங்க.  அதுதான் நானும் சொல்றேன்.  நாலு அடி அடிச்சிட்டாகூட பிள்ளைங்களுக்கு மறந்திரும்.  நம்ம நல்லதுக்கு கண்டிச்சாங்கனு மனசாறிப் போயிரும்.

 

ஆனா வார்த்தைகள்…! மறக்காது!  அது ரொம்ப பெரிய வடுவா மாறிரும்.  அதுல இருந்து மீளறது ரொம்பக் கஷ்டம்!  ஆனா அந்தக் கஷ்டத்தை உங்களுக்கு அவரு குடுக்கும்போது எதுவும் செய்ய, தடுக்க என்னால முடியலையே!”, என கௌசல்யா வருந்த

 

“நடந்ததை நினைச்சு இனி வருத்தப்படாதம்மா!”, என மகள்கள் இருவரும் தாயைத் தேற்றினர்.

 

“எதுனாலம்மா ஸ்ட்ரோக் வந்துச்சு அப்பாவுக்கு”, அதிதீ

 

“உங்கப்பாவா அவருபோக்குல நாகேந்திரன் வீட்டில போயி உனக்கு மாப்பிள்ளை பேசியிருந்திருக்காரு. அவங்க வீட்டுப் பெரியவருக்கு ஆரம்பமே டவுட்டுனு மேற்கொண்டு பேசாம என்னைக் கூட்டிட்டு வரச் சொல்லி இருந்திருப்பாருபோல…! ஆனா உங்கப்பா மட்டும் அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்திருக்காரு!”, என அப்போதைய விசயத்தை எடுத்துக் கூறியவர்

 

“…அவரா இழுத்து வச்சு, இக்கட்டுல மாட்டிகிட்டார். நீ போனது தெரிஞ்சதும் வீட்டுக்கு வந்து, ‘எங்களை அவமானப்படுத்தனும்னு நினைச்சு இப்டிப் பண்ணிருக்கனு அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ பேசனது, அத்தோட நாங்க பட்ட அவமானத்துக்கு நஷ்டஈடு தான்னு கேட்டு தொந்தரவு குடுத்தாங்க.  பொண்ணை எங்க மறச்சு வச்சனு கேட்டு ரொம்ப பிரச்சனை பண்ணாங்க. வீட்டைப் பூட்டிட்டு வெளிய போனாலும் விடலை. அதுக்கப்பறம் போனுல, ஆபீஸ்லனு ஒரேடியா அவங்க குடுத்த பிரஷர் தாங்க முடியல உங்கப்பாவுக்கு!  அதையும் அவங்க போனபின்னே எம்மேலதான் காட்டுவாரு!  நானும் எல்லாத்தையும் அமைதியா வாங்கிப்பேன்.

 

ஆனா, எல்லாரையும் அரட்டி, உருட்டி, அடிச்சு தான்தான் அப்டிங்கற மாதிரி இருந்தவருக்கு நாகேந்திரன் வீட்டுல குடுத்த குடைச்சல் செட்டாகாம டிப்ரெஷன் அதிகமாகி, ஒரு நாள் திடீர்னு இப்டி முடக்கிருச்சு!”, என்றதும்

 

அதிதீ பெருங்குரலெடுத்து, “எல்லாத்துக்கும் நாந்தான் காரணமாப் போயிட்டேன்னு”, அழத் துவங்க.. மகளை தன்னோடு அணைத்து,

 

“அதுக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை அதீ.. இது அவரா இழுத்துகிட்டது”, என அதிதீ வருந்தக்கூடாது எனக் கூறியவர் 

 

“நல்ல வேளை நீ தப்பிச்ச.  அப்டியொரு குடும்பத்துல போயி வாழ்க்கைப்பட்டிருந்தா உன்னோட நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். காலத்துக்கும் கஷ்டப்பட்டிருப்ப. அதுல இருந்து தப்பிச்சேனு எனக்கே உன்னை நினைச்சு சந்தோசந்தான்.  அவங்க குடும்பத்தைப் பத்தி எல்லாந் தெரிஞ்சும் உன்னை அங்க தள்ள நினைச்சதுக்குதான் இப்ப இவரு அனுபவிக்கிறாரு!”, என கணவனைப் பற்றியே குறை கூற வேண்டிய நிலையில் கண்ணீரோடு பகிர்ந்து கொண்டார் கௌசல்யா. 

 

இதுவரை எந்த சூழலிலும் கணவரை விட்டுக் கொடுத்திராதவர், முதன் முறையாக பெண் மக்களிடம் தனது ஆதங்கத்தையும், ஏக்கத்தையும், இயலாமையையும் பகிர்ந்து கொண்டிருந்தார்.

 

“பெத்த புள்ளைங்க கஷ்டப்பட யாராவது ஆசைப்படுவாங்களா?  ஆனா அவருக்கு புள்ளைங்க மேலேயே துவேசம். நம்பிக்கை இல்லாத தன்மை.  பெத்தவங்களே புள்ளைங்கள நம்பலைன்னா வேற யாரு நம்புவா?

 

அவங்க வீட்ல அவரோட அக்கா செஞ்ச காரியத்தால, உங்களை போட்டு சித்தரவதை பண்ணாரு.  அந்த மகராசி போன இடத்தில நல்லாத்தான் இருக்கறதாக் கேள்வி. 

 

அத மனசில வச்சிட்டு, ஒரு நல்ல தகப்பனா அவரு உங்களை எப்பவும் நடத்தலைங்கற வருத்தம் எனக்கு எப்பவும் உண்டு.  ஆனாலும் அவரு சம்பாத்தியத்திலதான் இந்த நிலைக்கு நீங்க வந்திருக்கீங்க.  அதனால அவரு செஞ்ச எல்லாத்தையும் மறந்துருங்க.  மனுசன் திருந்திறாரோ இல்லையோ… அவரோட கடைசிக் காலமாது நல்லாயிருக்கணும்னு சாமியக் கும்பிடுங்க.  எதுக்காகவும் உன்னை நீயே வருத்திக்காதே!”, என அதிதீயைத் தேற்றியவர், நந்தாவின் குடும்பம் மற்றும் பூர்வீகம், அவனது பணி போன்ற தற்போதைய நிலையை கேட்டறிந்து கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அதிதீயின் தாய்.

 

“அப்பாவை வந்து பாக்க வரட்டாமா?”, என ஏக்கத்தோடு கேட்ட மகளை

 

“உங்கப்பாவைப் பாக்க எங்கிட்ட எதுக்கு கேக்கற?”, என்றவர்,

 

“உன்னால முடியறப்போ வந்து பாரு. தெளிவா பேச முடியலை. ஆனா கோபப்பட்டு கத்தினாலும் பொருத்துக்கோ”, என மகளிடம் கூறியிருந்தார் கௌசல்யா.

 

அழைக்க வந்த நந்தாவிடம், “எம்புள்ளைக்கு என்னால எதுவும் செய்ய முடியாத நிலையில இருக்கேன்.  பாத்துக்கங்க தம்பி.  அவளுக்கு ஒன்னுந் தெரியாது.  ஆனா எல்லாம் கத்துப்பா”, என்று கௌசல்யா கூற

 

“வந்தப்போ இருந்ததுக்கு இப்போ எல்லாம் கத்துகிட்டாத்தை.  நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க.  நான் பாத்துக்குறேன்”, என நம்பிக்கை வார்த்தை கூறினான் நந்தா.

 

நந்தாவின் அணுகுமுறை, மரியாதை அனைத்தும் அவன்மீது நம்பிக்கையைத் தந்திருந்தது கௌசல்யாவிற்கு.

 

ப்ரீத்தியோடு, அதிதீக்கும் மருத்துவரின் ஆலோசனைகளை அறிந்து கொண்டபின், அதிதீயின் வீட்டு முகவரி, அலைபேசி எண் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, விடைபெற்றிருந்தார் கௌசல்யா.

………………

அதிதீக்கு அடுத்தடுத்து தலைசுற்றல், வாந்தி என நீள, அத்தோடு பணிக்கும் சென்று கொண்டு மிகவும் சிரமப்பட்டாள்.

 

இயன்றவரை நந்தாவும் பெண்ணுக்கு, வீட்டு வேலைகளில் உதவினான்.

 

நந்தா இல்லாத நேரங்களில் அருகே இருந்த சியாமளா வந்து கவனித்துக் கொண்டார்.

 

பெண்ணுக்கு அதீத களைப்பும், இயலாமையுமாக வங்கிக்கு சென்று வந்தாள்.

 

விடுப்பு கேட்டாலும் கிடைக்கவில்லை.

 

பணிக்கு சேர்ந்து இரண்டு வருடங்களுக்குள் மெடிக்கல் விடுப்பும் இல்லாமல் சிரமப்பட்டாள் அதிதீ.

 

இடையே தந்தையைக் காண செல்ல நினைத்தாலும் உடல் ஒத்துழைக்கவில்லை.

 

அவ்வப்போது, கௌசல்யா மகளிடம் போனில் பேசிக் கொண்டார்.  ப்ரீத்திக்கு ஆண் குழந்தை பிறந்ததும், தம்பதியர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வந்தனர்.

 

ப்ரீத்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்வரை தினசரி மருத்துமனைக்குச் சென்று சற்று நேரம் இருந்துவிட்டு வந்தாள் அதிதீ.

 

முன்பைக் காட்டிலும் பெண் மெலிந்து இருந்ததைக் கண்ட கௌசல்யா மகளின் நிலை கண்டு வருந்தினார்.

 

வீட்டிற்கு வா என அழைத்தாலும், “இப்பத்தான் ப்ரீத்திக்கு பாத்திட்டு, அப்பாவுக்கும் பாத்திட்டு கஷ்டப்படற… இதுல நானும் வந்து உன்னைக் கஷ்டப்படுத்தவா”, என அதிதீ அங்கு செல்வதையே விரும்பவில்லை.

////////////////

 

நந்தா அடுத்த கல்வியாண்டு முதல் பார்ட் டைமில் இன்ஜியனிரிங்க் படிக்க வேண்டி கல்லூரியில் சேர்ந்திருந்தான்.

 

பெண்ணுக்கு ஐந்து மாதங்கள் ஆகியிருந்தது.

 

ப்ரீத்திக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கடந்ததும், அவள் ஊருக்குச் சென்றபின் அதிதீ தாய்வீடு சென்றாள்.

 

அதிதீ வீட்டிற்குச் செல்லும்போது, தீனதயாளனுக்கு மறதி வந்திருந்தது.

 

அதனால் யாரையும் அடையாளம் தெரியவில்லை.  சுத்தமாக பேச்சு வரவில்லை.  மிகவும் கவலைக்கிடமாக இருந்தார்.

 

தந்தையை உக்கிர கோலத்தில் பார்த்துப் பழகியிருந்தவளுக்கு, இந்நிலையில் பார்க்க அழுகையாக வந்தது.

 

கௌசல்யாவும் கணவரை முகங்கோணாமல் நன்கு கவனித்துக் கொண்டார்.

 

தாயின் செயலைக் கண்டு பொங்கி வந்த கண்ணீரை அடக்கி கொண்டவள், “எப்டிம்மா… இப்டியொரு மனசு உனக்கு கடவுள் கொடுத்தாரு.  அப்டிப்பட்ட உனக்கு ஏன் மோசமான வாழ்க்கையக் கடவுள் கொடுத்தாரு”, என தாயிடம் புலம்பிவிட்டாள் அதிதீ.

 

“அது நான் வாங்கி வந்த வரம்.  அதுக்கு யாரையும் நோக முடியாது”, என்றிருந்தார் கௌசல்யா.

 

“எப்டிம்மா உன்னால அப்பாவை நல்லா கவனிக்க முடியுது”, என ஆச்சர்யமாகக் கேட்ட மகளிடம்

 

“நம்ம மாதிரி ஆரோக்கியமா இருக்கற மனுசங்ககிட்ட நேருக்கு நேர நின்னு பேசலாம், சண்டை போடலாம் .  என்ன வேணா செய்யலாம்.  அப்போவே நான் எதுவும் பேசினது இல்லை.  இப்ப அவரு இருக்கற நிலைமைய எனக்குச் சாதகமா பயன்படுத்திட்டா நான் மனுசி இல்லை… மிருகமா மாறினதா அர்த்தம்.

 

புத்தியில்லாம அவரு புரியாம ஏதேதோ செஞ்சாருங்கறதுக்கு, நானும் பதிலுக்குச் செஞ்சா அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்.

 

அவரு அவரா எப்டி இருந்தாரோ, அப்டி நானும் கடைசிவரை நானா இருந்திட்டுப் போகப் போறேன்.  அதுக்காக அந்த மனுசனை ஒரு எறும்பு, ஈ தீண்டாம நல்லா பாத்துக்கறேன்”, என்ற தாயை மெய்சிலிர்க்க அணைத்துக் கொண்டாள் அதிதீ.

 

அதிதீக்கு மனதிற்குள் தன்னால்தானோ தனது தந்தைக்கு இப்டியொரு நிலை என்கிற எண்ணம் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது.

///////////////

 

கௌசல்யாவும் அத்தியாவசிய தேவைக்கு என வெளியில் வரும்போதேல்லாம் அதிதீயை வங்கியில் வந்து பார்த்துச் சென்றார்.

 

அதற்குமேல் அவராலும் மகளை உடன் வந்திருந்து கவனித்துக் கொள்ள இயலாத நிலை.

 

நந்தாவிற்கும், காலையில் கட்டிட வேலையும், மதியம் கல்லூரிக்கு கிளம்பினால், இரவு ஒன்பது  மணிக்குமேல்தான் வீட்டிற்கு திரும்புவான்.

 

இடையிடையே காமாட்சி வீட்டிற்கு வந்து சென்றார்.

 

அதிதீயின் நிலை கண்டு முன்பைப்போல பேசுவதைச் சற்றுக் குறைத்திருந்தார்.

 

அதிதீ சோம்பியிருப்பதைக் கண்டு, “நானெல்லாம் நந்தாவை வயித்தில வச்சிருக்கும்போது இரட்டக் கொடம் போட்டு இடுப்புல ஒன்னு தலையில ஒன்னுனு தண்ணீ குடம் தூக்குவேன்.  நிறைமாசத்துல கிராமத்துல இருந்து நடந்தே வந்து தர்மாஸ்பத்திரில அவனைப் பெத்தெடுத்தேன்.  இவ என்னனா இப்பவே இப்டி இருக்கா”, என மருமகளின் தோற்றத்தைக் கண்டு பேசத்தான் செய்தார்.

 

“நம்ம சுறுசுறுப்பா இருந்தாதானே பிறக்கப்போற புள்ளையும் சுறுசுறுப்பா பிறக்கும்”, என இதமாக எதையும் கூறத் தெரியாதபோதும், அவ்வப்போது அதிதீக்கு கைபக்குவங்களைச் செய்து கொடுத்து, சற்றே தெம்பாக நடக்கச் செய்தார்.

 

“ரெண்டு இட்லி உனக்கே பத்தாது.  அதுல வயித்தில இருக்கறதுக்கு என்ன போயிச் சேரும்.  கூட நாலு இட்லி சாப்பிடு”, என வற்புறுத்தி உண்ணச் செய்வார்.

 

உண்டதும் வாந்தி என ஓடுபவளைக் கண்டு, “என்ன சாப்பிடப் புடிக்குதுனு சொன்னா செஞ்சு தரப்போறேன்.  அதச் சொல்லக்கூடத் தெரியாம இப்டி ஒரு பொம்பிளை…”, என மருமகளின் நிலையைக் கண்டு மாய்ந்து போனார் காமாட்சி.

 

அதிதீ எதற்கும் பதில் பேசும் நிலையில் இல்லை.  அதனால் காமாட்சியின் பேச்சைக் கண்டு கொள்வதில்லை.

 

காமாட்சிக்கு மகன் பிள்ளை நல்ல நிலையில் எந்த குறையும் இன்றிப் பிறக்க வேண்டுமே… இப்டி இந்தப் பெண் இருந்தால் எப்டி குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்கிற வாதனை.. அதனால் எதையேனும் செய்து வந்து தந்து, “இந்தா இதைச் சாப்பிட்டுப் பாரு…”, என ஒவ்வொரு சுவையிலும் எதேனும் பொருளைக் கொணர்ந்து தந்தார்.

 

ஒரு நிலைக்குமேல் பெண்ணுக்கு சில உணவுகள் ஒத்துக் கொள்ளத் துவங்கியதைக் கண்டு அதையே செய்து தந்தார்.

 

தொடர்ச்சியாக தங்கியிருக்க முடியாத நிலை காமாட்சிக்கு.  ஆகையால் வாரத்தில் இரண்டு நாள்கள் வந்து செல்வதை வாடிக்கையாக்கியிருந்தார்.

 

அதிதீக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது.  முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் தன்னை நொள்ளை சொல்லிவிட்டு, ஒன்றுமே நடவாததுபோல தற்போது நடந்து கொள்வதை எண்ணி சற்று ஐயமாகவும் இருந்தது.

 

அதை நந்தாவிடமும் கூறிவிட்டாள் அதிதீ. “என்னடா மருமக வேணாம்.  ஆனா அவ பெத்துக்குடுக்கற புள்ளை மட்டும் வேணுமாக்கும். உங்க அம்மாவுக்கு”, எனக் கேட்டவளிடம்

 

“ஓம்பாடு, உம்மாமியா பாடு.. இதுல என்னை எதுக்கும் இழுக்க நினைக்காத”, என சிரிப்போடு விலகியிருந்தான்.

 

நந்தாவிடம் அதிதீயின் வாடா.. போடா என அழைக்கும் மரியாதையற்ற பேச்சுக்களைக் கண்டு ஒரு நாள் கொதித்து விட்டார் காமாட்சி.

 

“வீட்டு ஆம்பளைய தலையிலடிக்கற மாதிரி வாடா போடான்னு ஒரு பொம்பளை பேசக் கண்டோமா… எங்கேயும் நடக்காதது இந்த வீட்டுல மட்டும் நடக்குது”, என இரண்டு நாள்கள் புலம்பி விட்டார்.

 

நந்தாவிடம், “நீ ஒரு ஆம்பிளையாடா… அவ வாடா போடாங்கறா… பல்லைத் தட்டி கையில குடுக்காம ஈனு போற…”, என மகனுக்கும் மண்டகப்படி.

 

நந்தா, “ம்மா… அவளும் நானும் ஸ்கூல்ல ஒன்னாப் படிச்சோம்.  அப்போ இருந்தே அந்தப் புள்ளை அப்டிக்கூப்பிட்டுப் பழகிருச்சு.  எனக்கும் அதுனால அவ அப்டிக் கூப்பிட்டா ஒன்னுந் தெரியலை.  இப்ப எதுக்கு வந்து இதைப் பெரிசு பண்ற… சத்தமில்லாம இருக்கறதா இருந்தா இரு.  இல்லைனா கிளம்பு”, என்றதும்

 

“அங்க ஒன்னும் பேச முடியலை… பெரிசா எங்கிட்ட வந்து பேச வந்துட்டான்”, என அதற்கும் நந்தாவிற்கு திட்டு விழுந்திருந்தது.

 

////////////

டெலிவரிக்கு நாளும் நெருங்கியது.

 

கௌசல்யாவும், “அம்மாவோட வந்து நம்ம வீட்டுல இரு”, என்று கூறியும் அதிதீ அங்கு செல்லவில்லை. 

 

ப்ரீத்தியின் வீட்டினர் அதிதீ சென்ற புதிதில் பிரச்சனை செய்ததை அறிந்திருந்தமையால், தந்தை உடல்நலக்குறைபாடோடு இருக்கும்போது பிரச்சனை வேண்டாம் எனத் தவிர்த்திருந்தாள்.

 

அதிதீக்கு மனதளவில், ‘பிள்ளையப்  பெத்து எப்டிக் கரையேறப் போறேனோ’, என்கிற பயம் இருந்தது.

 

அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அசௌகரியமாக உணர்ந்தாள் பெண்.

 

எதனால் அந்த அசௌகரியம் என்பது புரியவில்லை.

 

நந்தாவிடம் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றதும், அருகே சியாமளாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப எத்தனித்தவனிடம், “நீ தனியா என்ன பண்ணுவ.. இரு சித்த.. நானும் வரேன்”, என்று கையில் இரண்டு பிக் ஷாப்பருடன் கிளம்பியவரை புரியாமல் பார்த்திருந்தான்.

 

மருத்துவமனைக்கு வந்து அதிதீயை அட்மிட் செய்துவிட்டு காத்திருந்தார்கள்.  நந்தாவிடம், அதிதீக்கு வேண்டியவற்றை கேட்கக் கேட்க ஓடிப்போய் வாங்கி வந்தான்.

 

சியாமளா, அதிதீயுடன் துணைக்கு இருக்க, நந்தா வெளி வேலைகளைப் பார்த்துக் கொண்டான்.

 

தான் ஒருவனாக சமாளிக்கலாம் என எண்ணியது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பது அப்போதுதான் புரிந்தது நந்தாவிற்கு.

 

தானே பார்த்துக் கொள்ளலாம் என்கிற நிலையில் நின்றிருந்தவனுக்கு, எதிர்பாரா விதமாக சியாமளா அக்கா வந்திருந்தது பேருதவியாக இருந்தது.

 

அதே நேரம் அதிதீயின் தந்தை மிகவும் கவலைக்கிடமாக இருந்தமையால், கௌசல்யாவால் முன்பே அங்கு வரஇயலாத நிலை.

 

ஆனாலும், அவருக்கு மனம் வாதனையாக இருக்க, நந்தா தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அழைத்துக் கூறியதும், வேலைக்காரவர்களின் பொறுப்பில் கணவனை விட்டுவிட்டு மகளைக் காண ஓடோடி வந்திருந்தார் கௌசல்யா.

 

காமாட்சிக்கும் நந்தா விசயத்தைக் கூறியிருந்தான்.

 

நந்தா சம்பாத்தியம் செய்யத் துவங்கியதும், அதில் சேமித்து வாங்கிய நிலத்தில் விவசாயம் செய்ய துவங்கியிருந்தார் காமாட்சி.  அதில் நடவு வேலைகளை விட்டு முன்கூட்டியே வரமுடியாததால், மகன் விசயத்தைக் கூறியதும் உடனே கிளம்பி வருவதாகக் கூறி வைத்திருந்தார் காமாட்சி.

 

குழந்தையைப் பார்த்ததும் அனைவரும் மகிழ்ந்திருக்க, பேரிடியாக வந்த செய்தி அனைவரையும் நிலையிழக்கச் செய்திருந்தது.

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!