VVO15

VVO15

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 15

 

அதிதீக்கு அதிக சோர்வு.  ஆனாலும் மகனைப் பார்த்ததும் களைப்பு நீங்கியது.  நந்தாவிற்கும் ஏதோ நிறைவு.

 

நந்தாவைப் பொறுத்தவரை அனைத்தும் கனவு போலவே இருந்தது.  தற்போதுதான் அதிதீயுடனான திருமணம் நடந்தது போலிருந்தது.

 

தங்களுக்கும் ஒரு குடும்பம் என்ற ஒன்றை நல்கிய இறைவனை நினைவு கூர்ந்தான்.

 

மனைவியை தனியே காண, பேச மனம் துடித்தது.

 

அதிதீக்கும் அதே நிலைதான்.

 

ஆனால், முதலில் கௌசல்யா பிறகு, சியாமளா வீட்டிற்குச் சென்றதும் வீட்டருகில் இருப்பவர்கள் என குழந்தையைக் காண அடுத்தடுத்து வரத் துவங்கியிருந்தனர்.

 

வருபவர்களுக்கு வாங்கி வைத்திருக்கும் ஸ்வீட்டோடு, டீ வாங்கித் தருவது என நந்தா மிகவும் பிஸியாகியிருந்தான்.

 

காமாட்சியும் பேரனைப் பார்த்ததும் நெட்டி முறித்து, கண்ணேறு கழித்தார்.

 

வந்ததும் மடியில் வைத்துக் கொண்டு, கிராமத்து வழக்கமான பிள்ளைப்பேறு எந்தக் குறையுமின்றிக் கிட்டியதா என்கிற ஆராய்ச்சியை செய்து முடித்து, நிறைவோடு,  வந்தவர்களை வரவேற்றார்.

 

கௌசல்யா மகளைக் கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, காமாட்சி வந்ததும் வீட்டிற்கு கிளம்பியிருந்தார்.

 

அவர் சென்றதும், சாடைப் பேச்சுகள் அவ்வப்போது வந்தது.

 

“ஏமாந்தவன் கிடைச்சதும், அவந் தலையிலயே மொளகா அரைச்சு.. வளைகாப்பைப் பண்ணதோடு, பிரசவத்தையும் அவந்தலையிலேயே கட்டியாச்சு. எம்புள்ளைதான் எல்லாத்தையும் கிடந்து பாக்கணும்னு தலையெழுத்து.  கொஞ்சங்கூட மனசிறங்கல பெத்தவளுக்கு… யாரோ மூனா மனுசமாதிரி கையாட்டிட்டு வந்துட்டுப் போயாச்சு.  எல்லாம் இவந்தலையெழுத்து”, எனத் துவங்கி யாருமற்ற நேரத்தில் பேசியபடி இருந்தார் காமாட்சி.

 

அதிதீக்கு அனைத்தும் கேட்டது.  ஆனாலும் அவளின் அயர்ச்சி எதுவும் பேசத் தோன்றவில்லை.

 

நந்தா வந்ததும், இதேபோல பேசத் துவங்க… “அவங்க வீட்டு நெலவரம் என்னனு தெரியாம எதுக்கு வாயில வர்றதைப் பேசுறம்மா… சும்மா பேசாம இருக்கறதா இருந்தா இரு.  இல்லைனா ஊருக்கு கிளம்பு.  அவளை நானே பாத்துக்குவேன்”, என முடிவாக, கராறாகக் கூறிவிட்டான்.

 

//////////////////

நந்தாவின் தந்தை முனியாண்டி அவர்களது குலதெய்வ கோவில் நிர்வாகம் மற்றும் அதனைச் சார்ந்த விசயங்களில் மட்டும் கவனம் செலுத்தி குடும்பத்தைவிட்டு ஒதுங்கியிருந்தார்.

 

குறிப்பிட்ட காலம்வரை காமாட்சியோடு குடும்பம் நடத்தியவருக்கு, திடீரென உதித்த ஞானோதயத்தால்… (இதில் ஞானோதயம் என்பது முனியாண்டியின் வாதம், புத்தி பேதலிப்பு என்பது காமாட்சியின் வாதம்.  இதன் முடிவை உங்களின் கைகளில் ஒப்படைத்து விடுகிறேன்) சிவராத்திரியை முன்னிட்டு குடும்பமாக சென்றிருந்தபோது, வீட்டிற்கு திரும்பிவர மறுத்து அங்கேயே தங்கிவிட்டார்.

 

சாமி காரியம் என்பதால், காமாட்சியும் அதற்குமேல் எதுவும் பேசாமல் பிள்ளைகளோடு வீட்டிற்கு வந்துவிட்டார்.

 

முனியாண்டி அதன்பிறகு குடும்பத்தைக் கவனிக்காமல், கோவில் சார்ந்த திருப்பணிகளில் மட்டுமே தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார்.

 

கிராமத்தை விட்டு ஒதுங்கியிருந்தது அக்கோவில்.  அங்கு மாதந்தோறும் வரும், அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி தினங்களில் மட்டுமே சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபாட்டிற்கு வந்து செல்வர்.

 

கோவிலுக்கு, பேருந்து செல்லும் வகையில் சாலை வசதியில்லாததால், ஒற்றையடிப் பாதையில் மூன்று மைல் தொலைவிற்கு நடந்து செல்ல வேண்டும்.

 

சில இடங்களில் மணல் பாங்கான பாதையாதலால், இருசக்கர வாகனங்களை எளிதில் ஓட்ட இயலாது. வாரிவிடும் நிலையில் மணல் மிகுந்து காணப்படுவதால் பெரும்பாலும் மக்கள் அப்பகுதியில் நடந்தே சென்றுவருவர்.

 

மழைக்காலங்களில் சில இடங்கள் தாவான பகுதியென்பதால் மழைநீர் தேங்கி கண்மாய் போல காட்சியளிக்கும்.

 

அப்போது செல்வதற்காக முண்டுக் கற்களை இட்டு பாதையமைத்திருந்தனர்.  நீர் தேங்கி நிற்கும் சமயங்களில் அதில் நடந்து செல்வர்.

 

விசேச தினங்களைத் தவிர்த்து, மற்ற நாள்களில் ஈ, காக்கையைக்கூட அப்பகுதியில் பார்க்க இயலாது.

 

முனியாண்டி மட்டும் கோவில் இருந்த பகுதியை ஒட்டி, பனை ஓலையில் குடிசை வேய்ந்து அதில் தங்கியிருந்தார்.

 

காலை, மாலை இருவேளையும் பூஜை.  இதர நேரங்களில் கோவிலைச் சுற்றியிருக்கும் பகுதியில் சிறியளவில் பயிர்க்குழிகளைப் போட்டு, அதனைப் பராமரிப்பது போன்ற வேலைகளைச் சுயமாகச் செய்வார்.

 

பெரும்பாலும் அதில் கிடைக்கும் காய்கறிகளை தனது தேவைக்கு பயன்படுத்திக் கொள்வார். தனக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொண்டு அங்கேயே இருந்துவிட்டார். 

 

அதிக விளைச்சல் நேரங்களில் கிராமங்களில் கொண்டு வந்து மொத்தமாக விற்பனை செய்து விடுவார்.

 

அவரின் பூர்வீக நிலத்தில் அமைந்திருந்த கோவில் அது. ஆதலால், யாரும் அவரிடம் எந்த கேள்வியும் இதுவரைக் கேட்டதில்லை.

 

இரவு நேரத்தில் சிம்னி விளக்கு வெளிச்சம் மட்டுமே. பெரியளவில் எந்த வசதியும் இல்லையென்றாலும் திருப்தியாகவே தனது கோவில் சார்ந்த திருப்பணிகளைச் செய்து வந்தார் முனியாண்டி.

 

அக்கோவிலில் வீற்றிருந்த தெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் சில பணம் படைத்தோர், கடந்த சில ஆண்டுகளாகவே மின்வசதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

 

அருகில் வீடு எதுவும் சுற்றிலும் இல்லாதநிலையில் மின்வசதியை ஏற்படுத்துவது சிரமமாக இருந்தது.

 

விருப்பமுள்ளவர்களிடம் இருந்து நன்கொடைகப் பெற்று, சோலார் மூலம் மின்வசதியை ஏற்படுத்தித் தருவதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து கொண்டிருந்தது.

 

முனியாண்டி பெரும்பாலும் கிராமத்திற்குள் வரமாட்டார்.  ஏதேனும் பணிகள் இருந்து ஊருக்குள் வரும்போது நடந்தே வருவார். வீட்டிற்கு வந்து காமாட்சியையும், வீட்டில் இருக்கும் பிள்ளைகளையும் பார்த்துவிட்டு, வெளியில் நின்று ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அப்படியே கிளம்பிவிடுவார்.

 

எத்தனையோ முறை, காமாட்சியும், மகன்களும் அழைத்தும் வீட்டிற்குள் வருவதை அவர் விரும்பவில்லை.

 

ஆனால், வீட்டில், ஊரில் நடக்கும் அனைத்து, நல்ல, கெட்ட விசயங்களில் தவறாது வந்து கலந்து கொள்வார்.

 

மகள் கீதாவின் திருமணத்திற்கு வந்திருந்தார்.

 

அதன்பின் அழுகையோடு சென்று நந்தாவின் திருமணச் செய்தியைக் காமாட்சி கூற, “உங்கிட்ட சொல்லாம செய்யமாட்டானே”, என சரியாக மகனைக் கணித்தவர்,

 

“நீ ஒத்துக்காம ஏறுக்குமாறா அவங்கிட்ட எதாவது பேசிருப்ப… அதான் அப்டிச் செஞ்சிருப்பான்”, என கூறியதோடு, “வாழப்போறவன் அவந்தான… அவனுக்குப் பிடிச்சதை அவஞ் செஞ்சிருக்கான்.  புடிச்சா ஏத்துக்கிட்டு வீட்டுக்கு கூட்டியா… இல்லைனா… அதுகள தொந்திரவு பண்ணாம அதுக போக்குல விட்ரு”, என்றிருந்தார் முனியாண்டி.

 

அதற்கும் முனியாண்டிக்கு வண்டி வசவுகள் கிடைத்தது.

 

“உன்னை மாதிரியே உம்மகனும் நட்டாத்துல என்னை விட்டுட்டுப் போயிட்டானே.  உம்புத்திதான் அவனுக்கும் இருந்திருக்கு.  இதுதெரியாம எம்பொறப்பு அவம்மகளை கட்டுவானு நெனைச்சு எனக்கு செஞ்சே ஓஞ்சு போனானே”, என அரற்ற

 

“அப்ப… அவம்மகளைக் கட்டத்தான் உனக்குச் செஞ்சானா!”, என முனியாண்டி பாயிண்டைப் பிடிக்க

 

“பிறந்தவ கஷ்டப்படறதைப் பாக்க முடியாமத்தான் செஞ்சான்!  இந்தப்பாவிதான் வாயிருக்க மாட்டாமஅஅஅ எம்மகனுக்கு உம்மகளை எடுத்துக்கறேன்னு வாக்கு கொடுத்தேன்”, என மீண்டும் தனது பல்லவியைத் துவங்க

 

“இப்ப என்ன கெட்டுப் போச்சு. சின்னவனுக்கு கட்டி வையி”, என்க

 

“ஆஹான்… அது எப்டி… அவன் அவளைக் காட்டிலும் சின்னவனுல்ல”, என இழுக்க 

 

“ஊரு உலகத்தில மாப்பிள்ளைக்கா பஞ்சம்.  வேற இடத்துல பாத்து  செஞ்சிட்டா போச்சு.  அதுக்கு வந்து ஏன் ஒப்பாரி வைக்குற”, முனியாண்டி

 

“இந்தப் பயலுக்குனு பேசி வச்ச புள்ளைய இனி யாரு வந்து சீண்டுவா. அதுக்கு, அப்பனும் மயனும் ஒரு நல்ல வழி சொல்லுங்க”, என்று மல்லுக்கு நின்றிருந்தார் காமாட்சி.

 

“போடீ மூதி… நீயும் உங்கண்ணனும் பேசி வச்சிட்டா ஆச்சா.  அவனுக்குப் புடிக்கணுமில்லடீ… போயி வேற மாப்பிள்ளைய பாக்கச் சொல்லு உங்கண்ணனை.  அதைவிட்டுட்டு வேற புள்ளையோட வாழ ஆரம்பிச்ச பின்ன வந்து நியாயம் பேச வந்துட்டா”, என பதிலுக்கு விரட்டியிருந்தார் முனியாண்டி.

 

அதன்பின் வீட்டிற்கு வந்த முனியாண்டியை கண்டு கொள்வதில்லை காமாட்சி.  வாசலில் வந்தவரை வா எனக்கூட கேளாமல் தனது மனதைக் காட்டியிருந்தார்.

 

ஆனாலும், முனியாண்டி காமாட்சியைப் பற்றி அறிந்தமையால் அவ்வப்போது வீட்டிற்கு வந்திருந்துவிட்டு சென்றார். வருவதை நிறுத்தவில்லை.

////////////////

 

அதிதீக்கு குழந்தை பிறந்ததும் காமாட்சிக்கு நந்தா அழைத்துக் கூறியதும், ஊருக்குள் சுற்றித் திரியும் ரமேஷிடம், “உங்கண்ணனுக்கு ஆம்பிளைப் புள்ளை பிறந்திருக்காண்டா.  நா ஊருக்குப் போறேன்.  உங்கப்பாவைப் போயி மறக்காம பாத்துச் சொல்லிருடா.  சொல்லலைனா அதுக்கும் கத்தித் தொலைவாரு அந்தாளு, மறந்து தொலைஞ்சிராத…”, என்றுவிட்டு புதுக்கோட்டைக்கு கிளம்பியிருந்தார் காமாட்சி.

 

காமாட்சி சென்ற அன்று மதியத்திற்குமேல், அருகில் உள்ள வீட்டில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கிக் கொண்டு தந்தையைக் காணச் சென்றான் ரமேஷ்.

 

சைக்கிள் இருந்தது.  ஆனாலும் மோட்டார் சைக்கிளில் சென்று வருவது ஒரு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும், கதாநாயக எண்ணத்தையும் தருவதுபோல ரமேஷிற்கு தோன்றும்.

 

ரமேஷ் தற்போதுதான் இருசக்கர வாகனத்தை ஓட்டக் கற்றிருந்தான். அவனுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிட்டும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக யாரிடம் இரவல் கேட்டால் தருவார்களோ அவர்களிடம் இதமாகப் பேசி வாங்கி ஓட்டுவான்.

 

நந்தா ஊருக்கு வந்தாலும், “அண்ணே ஒரு ரவுண்ட்டுண்ணே”, என்றதும் அவனும் தம்பியின் கையில் சாவியைக் கொடுத்து விடுவான்.

 

அவர்களின் கிராமத்தில் இருந்து புதுக்கோட்டை வரும்வழியில் போடப்பட்டிருந்த சிறிய தார்ச்சாலையில் சற்று தூரம் வரை சென்று வருவான்.

 

அதேபோல நினைத்துக் கொண்டு, வண்டியை எடுத்துக் கொண்டு ஒற்றையடிப் பாதையில் தந்தையைக் காண விரைந்திருந்தான்.

 

ரமேஷிற்கு மிகுந்த சவாலாக இருந்தது அப்பாதை.

 

மணல் மிகுந்து காணப்பட்டது. அதனால் அதிக சிரமத்தோடு, நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு ஒரு வழியாக கோவிலை வந்தடைந்தான்.

 

வந்ததும் தந்தையிடம் விசயத்தைக் கூற, “உங்கூடயே நானும் வந்துட்டு வரேண்டா.  தீட்டா போனதால இன்னும் முப்பது நாளுக்கு கோவிலுக்குள்ள நானும் போகக்கூடாது.  அதனால வெளியில இருந்தே மத்ததை பாத்துக்கணும்”, என்றவர் மகனோடு கிளம்பிவிட்டார்.

 

இதுவரை மோட்டார் சைக்கிளில் டபுள்ஸ் ஓட்டி பழகியிராதவன் முதன் முறையாக தந்தையை ஏற்றிக் கொண்டு கிளம்ப, வரும் வழியில் இருந்த மணல் பாதை மிகுந்த சிரமத்தைத் தந்தது. மணல் வாருவதை உணர்ந்து மெதுவாகவே வந்தான்.

 

முனியாண்டிக்கு இதுநாள் வரை யோசித்திருந்த விசயம் இன்று பேரன் பிறந்த செய்தி கேட்டு தோன்றாது போயிருந்தது.

 

ரமேஷ் தடுமாறுவதைக்கூட கவனிக்காமல், மருத்துவமனைக்குச் சென்று பேரனைப் பார்க்கும் ஆவலில் இருந்தார் மனிதர்.

 

ரமேஷ் மிகவும் சிரமத்தோடு, “ப்பா… மணல்ல வண்டி வாருது.  நீன்னா வண்டிய எடுத்துட்டு போயி ஆஸ்பத்திரில பாத்துட்டு வாரியாப்பா.  நான் அப்டியே பொடிநடையாப் போயி நீ வண்டிய எடுத்துட்டுப் போனதை நடராசு அண்ணன்கிட்ட சொல்றேன்”, என்க

 

“நான்னா ஓட்டவாடா”, என வண்டியை மகனிடம் இருந்து வாங்கியிருந்தார்.

 

மறுத்தவனையும், வற்புறுத்தி ஏற்றிக் கொண்டு கிளம்பியிருந்தார் முனியாண்டி.

 

அடுத்த அரைகிலோ மீட்டர் தூரம் செல்லும்முன்னே மணல் பெரியவரை வாரிவிட, பதற்றத்தில் பிரேக்கைப் பிடித்து வண்டியை நிறுத்துமுன் இருவரும் ஆளுக்கொரு புறமாகச் சென்று விழுந்திருந்தனர்.

 

வேகத்தில் சென்று விழுந்ததில்,  மழைக்காலங்களில் நீருக்குள் செல்ல முடியாமல் போகும் காலங்களில் நடக்க ஏதுவாக போட்டு வைத்திருந்த முண்டுக்கல்லின் முனையான பகுதி முனியாண்டியின் பின்மண்டையில் அடித்திருந்தது.

 

வேகமாகப் போய் விழுந்ததில் சுதாரிக்குமுன் அடிபட்டு, கபாலத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி, குபுகுபுவென இரத்தம் பீறிட்டிருந்தது.

 

கை கால்களில் எந்த சிராய்ப்போ, காயமோ இல்லாமல் இருந்த இருவரும், எழுந்த பிறகே முனியாண்டியின் வெள்ளைச் சட்டை முழுவதும் சிவப்பாக மாறியதைக் கண்ட ரமேஷ், “ப்பா… சட்டையெல்லாம் ரத்தமாருக்கு… எங்கப்பா அடி பட்டிச்சு”, என தந்தையைக் கேட்க

 

அதுவரை சுரீர் என வலித்த வலியைத் தாங்கிக் கொண்டு எழுந்திருந்தவர், சட்டையின் சிவந்த நிறத்திலும், மேனியில் சூடான உணர்வோடு இறங்கும் ரத்தத்தைக் கண்டு, கண்கள் சற்றே மங்க… “வண்டிய எடுத்துட்டுப்போயி ஆட்டோ புடிச்சிட்டு வாடா தம்பி”, என மகனை அனுப்ப

 

வண்டி ஸ்டார்ட் ஆகாமல் சதி செய்தது.

 

பாதி தூரத்தில் நின்றிருந்தவர்கள் கண்டிப்பாக கிராமத்திற்குச் சென்றால் மட்டுமே முதலுதவி செய்ய இயலும் என்கிற நிலையில்,  தந்தையைக் கண்ட பதற்றத்தில் விட்டுச் செல்லவும் மனமில்லாது, ஆனால் போகாமல் தந்தையைக் காப்பாற்ற இயலாது என்கிற நிலையில் தன்னை ஆயத்தம் செய்து கொண்டு கிளம்பினான் ரமேஷ்.

 

தோளில் போட்டிருந்த துண்டைக் கொண்டு புனலைப் போல பீறீட்டுப் பாயும் குருதியை இயன்றவரை இறுக்கிக் கட்டியபடியே, தனது குலதெய்வத்தை நோக்கி முண்டுக்கல்லின் மீதே அமர்ந்துவிட்டார் முனியாண்டி.

//////////////

 

ஓட்டமும் நடையுமாக விரைந்து கிராமத்திற்கு வந்ததும், நந்தாவிற்கு தந்தையின் நிலையை அழைத்துக் கூறியவன், அங்கிருந்த ஆட்டோ ஒன்றை அழைத்துக் கொண்டு தந்தையிருக்கும் இடம் விரைந்தான்.

 

வருவதற்குள் மயங்கி விழுந்திருந்தார் முனியாண்டி.

 

ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் செல்ல, முனியாண்டியின் நிலையைப் பார்த்து சந்தேகித்து, ‘இது போலீஸ் கேஸ் மாதிரி தெரியுது.  அதனால ஜிஎச்கே போயிருங்க’ என்க, பிறகு ஜிஎச் கொண்டுவந்து அவசரப் பிரிவில் சேர்த்திருந்தனர்.

 

உடன் வந்தவர்களை வெளியில் சற்று தாமதிக்கும்படி கூறிவிட, அங்கே வந்த நந்தாவும், ராஜேஷூம் தந்தையின் நிலையைக் கேட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைப் பற்றி விசாரித்தனர்.

 

மாலை நேரத்தில் அங்கு மருத்துவர்கள் இல்லை.  ஆனாலும் எமர்ஜென்ஸி பிரிவில் இருந்த மருத்துவர்கள் மிகவும் அதிகமான இரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு, முதலுதவி செய்ததோடு தேவையான இரத்தத்தை ஏற்பாடு செய்யப் பரிந்துரைத்தனர்.

 

அத்தோடு ஆளுக்கொரு புறமாக இரத்தம் வேண்டி தெரிந்த நபர்களின் மூலமாகத் தொடர்பு கொண்டு விசாரித்த வண்ணமிருந்தனர் சகோதரர்கள்.

………..

கணவரின்மேல் என்னதான் அதிருப்தி இருந்தபோதிலும், விசயம் கேள்விப்பட்டதும் ஆடிப்போய்விட்டார் காமாட்சி.

 

காமாட்சி கணவரின் நிலையை எண்ணி மருத்துவமனைக்கும் செல்ல இயலாது, மருமகளை இந்நிலையில் தனித்து விட்டுச் செல்லவும் இயலாது என்கிற நிலையில் ஆண்மக்கள் மூவரும் கணவருடன் இருக்க, அதிதீயுடன் தங்கிவிட்டார்.

 

நந்தா மீண்டும் கௌசல்யாவிற்கு அழைத்து தனது தந்தையின் விசயத்தைக் கூறியிருந்தான்.

 

“அத்தை அதீ கூட என்னால இருக்க முடியாது.  அம்மாவோட அவ அந்தளவு செட்டாக மாட்டா.  முடிஞ்சா அதீகூட வந்து இருங்க”, என உரைத்துவிட்டு வைத்திருந்தான் நந்தா.

 

அதிதீக்கு விசயம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

 

வீட்டிற்கு சென்றவர் இரவு உணவை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கே வந்திருந்தார் கௌசல்யா. காமாட்சியின் நிலை உணர்ந்து தானே அதிதீயைப் பொறுப்பெடுத்துக் கொள்ளவும் முடியாமல், என்ன செய்ய எனப் புரியாமல் தடுமாறி நின்றிருந்தார் கௌசல்யா.

 

மூத்த மகளின் வீட்டில் வந்த பேசிச் சென்றது மனதில் இருந்தாலும் அதிதீயைத் தனித்து விடும் எண்ணமில்லை கௌசல்யாவிற்கு.

 

“இப்டி ஒரு காரியம் பண்ண வீட்டுல சம்பந்தம் வச்சிட்டதை நெனைச்சா ஒரே அசிங்கா இருக்கு.  ஆனா அந்தப் புள்ளைய இனி சேத்துக்க மாட்டீங்கன்னு சொன்னதை நம்பித்தான் போறோம்.  உங்க காலத்துக்குப் பின்ன எல்லாத்தையும் எங்க ப்ரீத்தி பேருலயே மாத்தித் தந்திருங்க”, என தீனதயாளனிடம் பேசிட, அவரும் அதற்கு ஆமோதித்துத் தலையை ஆட்டியிருந்தார் அப்போது.

 

ஆனால், தற்போது அதிதீயை அப்படியே விட்டுவிட இயலாது என்கிற முடிவுக்கு வந்திருந்தார் கௌசல்யா.

 

வருவது என்னவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என தீர்மானித்துவிட்டார்.

 

அப்படியே மகளை வீட்டிற்கு தன்னோடு அழைத்துச் செல்லலாம் என்றாலும், அன்றே அழைத்துச் செல்ல இயலாது. மூன்றாம் நாளுக்குப் பிறகே பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்ல இயலும்.  அதுவரை தன்னால் பெண்ணோடும் தொடர்ச்சியாக இருக்க முடியாத நிலை.

 

தீனதயாளனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டாலும், அன்றைய இரவிற்கு மட்டும் அவரை வேலைக்காரர்களின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வந்திருந்தார்.

 

அதிதீயைத் தனித்து விட இயலாது என்பதாலும், காமாட்சியை அங்கு நிறுத்தி வைப்பது தவறு என எண்ணியதாலும், அதிதீயுடன் தங்க எண்ணினார்.

 

மூத்த மகளுக்கு அழைத்துப் பேசி, “முடிஞ்சா ரெண்டு நாளைக்கு வந்து அப்பாகூட வீட்டுல இருக்கியா”, எனக் கேட்க, விசயம் அறிந்த பெண் நிலை உணர்ந்து குழந்தையோடு அம்மாவின் வீட்டிற்கு வரச் சம்மதித்திருந்தாள்.

 

ப்ரீத்தி அப்படியே உடனே கிளம்பி வந்தாலும், மறுநாள் முதலே அவளை நம்பி கணவரை விட இயலும் என்கிற நிலை கௌசல்யாவிற்கு.

 

அனைவரும் அவரவர் மனதில் குழப்பத்தோடு இருக்க, பேரன் பிறந்த மகிழ்ச்சி எதுவும் இன்றி இருந்த தாய் மற்றும் மாமியாரை யோசனையோடு பார்த்திருந்தாள் அதிதீ.

 

குழந்தை பிறந்ததும் தன்னை வந்து பார்த்த கணவனை அதன் பிறகு காணவே இல்லை. அதிதீக்கு நந்தாவைக் காண மனம் ஏங்கத் தேடினாள்.

 

ஆனால் யாரிடம் கேட்க, எனப் புரியவில்லை பெண்ணுக்கு.

 

தாய் தனித்திருக்கும் வேளையில், “ம்மா அப்பாவைத் தனியா விட்டுட்டு இங்க என்ன செய்யறீங்க… அதான் அத்தை இருக்காங்கள்ல.. அவங்க பாத்துப்பாங்க… நீங்க கிளம்புங்க”, என மாமியாரின்  முன்னே கூற

 

முனியாண்டியை ஐசியுவில் வைத்திருப்பதை மகளிடம் தெரிவித்துவிட்டார் கௌசல்யா.  முதலில் என்ன ஏது என்று புரியாமல் விழித்தவள், விசயத்தை கூறியதும், கிரகித்து அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.

 

இட்லியை உண்ணத் தந்ததை மறுக்க, “புள்ளைக்கு பால் குடுக்கணும்.  ஒழுங்கா எழுந்திருச்சு சாப்பிடு”, என அவ்வேளையிலும் காமாட்சி தனது அதிகாரக் குரலைக் காட்டிட, கௌசல்யா திகைத்தாலும் அமைதியாகவே பார்த்திருந்தார்.

 

பேருக்கு மூன்று இட்லிகள் போதும் என மறுத்தவளை, வற்புறுத்தி ஐந்து இட்லிகளை உண்ணச் செய்தே விட்டார் காமாட்சி.

 

காமாட்சிக்கு கணவரைப் பற்றிய தகவல் வந்திருக்க, அவரால் அழுகையை அடக்க முடியாமல் அரற்றத் துவங்கியிருந்தார்.

 

காமாட்சிக்கு ஆறுதல் சொல்வதா, மகளைக் கவனிப்பதா என்கிற குழப்பம் கௌசல்யாவிற்கு.

 

மகளைக் கவனித்தபடியே, “ஒரு குறையும் ஆண்டவன் தரமாட்டான்.  எல்லாம் சரியாகி அண்ணன் நல்லபடியா வந்திருவாரு”, என கௌசல்யா ஆறுதல் கூற

 

“என்ன செய்யறது… சிலரு குலை தொறக்குற நேரம் இப்டியிருக்கு”, என காமாட்சி கூறியதும், பேரனை தன் மகள் ஈன்றெடுத்ததைத்தான் சம்மந்தி அவ்வாறு குறிப்பிடுகிறார் என்பது புரிந்ததும் கௌசல்யாவிற்கு கோபம் வந்தது. ஆனால் அதனைக் காட்ட இது சரியான தருணமல்ல என அமைதியாக இருந்தார்.

 

காமாட்சி பேரனைக் காண மருத்துவமனைக்கு கிளம்பி வந்தபின், நந்தாவிடம் கூறி சிலருக்கு அழைத்து பேரன் பிறந்ததைக் கூறச் சொல்லியிருந்தார்.

 

பார்க்க வந்தவர்கள் அனைவரும் குழந்தையைப் பார்த்ததோடு, சென்றிருந்தனர்.  ஆனால் விசயம் அறிந்து அடுத்தடுத்த நாள்களிலும் கிராம மக்கள் வருவார்கள் என்பது காமாட்சிக்குத் தெரியும். 

 

அதேபோல மறுநாள் காலையில் பேரனைக் காண வந்தவர்கள், முனியாண்டியின் நிலையை அறிந்து அதைப்பற்றி காமாட்சியிடம் விசாரிக்கத் துவங்க, “அடிபட்டு கொண்டு வந்து சேத்தப்போ பேச்சு மூச்சில்லாம கிடந்தவரு, பேரன் பிறந்ததும் கண்ணு முழிச்சிட்டாருனு மயன் போனு போட்டான்.  ஆனா இன்னும் இரண்டு நாளைக்கு அங்கதான் வச்சிருக்கணும்” என சமாளித்த வண்ணமிருந்ததை ஆச்சர்யத்தோடு பார்த்திருந்தாள் அதிதீ.

 

பேரனை ஏற்றுக் கொள்ளும் மாமியாருக்கு, மருமகளான தான் வேண்டாம் என்கிற ‘ஆடு பகை குட்டி உறவு’ எனும் தோரணையிலான பேச்சு சிரிப்பையே உண்டாக்கியது அதிதீக்கு.

 

////

 

ப்ரீத்தி வந்ததும் முழுவதுமாக மகளின் பொறுப்பில் வீட்டையும், தீனதயாளனையும் ஒப்படைத்துவிட்டு அதிதீயுடன் வந்து தங்கிவிட்டார் கௌசல்யா.

 

அதிதீயுடன் அவளின் தாய் இருக்க, காமாட்சி ஐசியுவில் இருந்த கணவரைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

 

மூன்றாம் நாள் எத்துனை பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என அதிதீயை தன்னோடு வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார் கௌசல்யா.

 

அவ்வப்போது அதிதீ நந்தாவிடம் முனியாண்டியின் நிலைபற்றிக் கேட்டறிந்து கொண்டாள்.

 

அதிதீக்கு மிகுந்த வருத்தம்.  நந்தாவின் நிலை மனைவியையும் காண இயலாது, தந்தையின் நிலவரம் புரியாது மன உளைச்சலோடு, பணம் நீராகச் செலவளிய, நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருந்தான்.

 

இன்னும் இரண்டு நாள்கள் கழித்தே முனியாண்டியின் நிலையை சரியாகக் கூற முடியும் என்றிருந்தனர் மருத்துவர்கள்.

 

அத்தோடு, அதிக இரத்தப்போக்கால் மிகவும் கவலைக்கிடமாக இருந்தவரை, திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றியிருந்தனர்.

 

முனியாண்டி பிழைத்து எழுந்தாரா?

 

கௌசல்யா, ப்ரீத்தியின் வீட்டினரால் எதிர்கொண்ட பிரச்சனைகளை சரிசெய்ய இயன்றதா?

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!