VVO17

VVO17

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 17

 

அதிதீயோடு நந்தா தனித்து இருக்கும் நேரமே குறைவு.  அதிலும் முகத்தைத் திருப்பியவனைக் கண்டு தலையில் அடித்துக் கொள்ளலாம் போன்றிருந்தது அதிதீக்கு.

 

‘இவனுக்குப் புரிய வைக்குறதுக்குள்ள நான் மண்ணுக்கு உரமாயிருவேன் போலயே’, எனும் கழிவிரக்கம் பெண்ணை ஆட்கொண்டிருந்தது.

 

சமாதானம் செய்யும் அளவிற்கு தான் ஒன்றும் தவறாகக் கேட்கவில்லை என எண்ணியவள், மகனையும், வீட்டையும் பார்ப்பதில் கவனத்தைத் திருப்பியிருந்தாள்.

 

வழமைபோல தனக்கு தேவையெனில், நந்தாவிடம் பேசுவதை குறைத்தாளில்லை.

 

ஆனாலும் எதையும் மற்றவர்கள் முன் காட்டிக் கொள்ளவில்லை நந்தா. வீட்டில் அனைவரும் இருக்கையில் பெண்ணிடம் பொதுவான பேச்சுகள் மட்டுமே.

 

அதிதீக்கு மட்டுமே, அவனது மட்டுப்பட்டிருந்த தன்மீதான நேசம் புரிந்தது. கோபத்தால் நேசம் மறைந்து கிடந்ததோ!

 

அன்னியமாகத் தோன்றிய வீட்டில் வாயைத் திறக்கவே தயக்கமாகத் தோன்றியது அதிதீக்கு.

 

எப்போதுடா பணிக்குச் செல்வோம் என்று எதிர்பார்த்திருந்தாள் அதிதீ.

 

பேரனுக்கு பெயர் சூட்டுவதிலும் பிரச்சனை செய்தார் காமாட்சி.

 

அதிதீ பெயர் கூற, அது நல்லாவேயில்லை என அவராக ஒரு பெயரைச் சூட்ட வேண்டுமென மகனைக் கட்டாயப்படுத்தினார்.

 

முனியாண்டியோ, “உம்புள்ளைகளுக்கு நீதான பேரு வச்ச.  அப்ப எங்கப்பன் ஆத்தா பேச்சைக் கேட்டா பேரு வச்ச.. அவங்கவங்க புள்ளைக்கு அவங்க விருப்பம்போல பேரு வைக்கட்டும். உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு”, எனக் குறுக்கிட

 

வேறுவழியில்லாமல் வாயை மூடும்நிலைக்கு வந்திருந்தார் காமாட்சி.

 

அதன்பின் ஒரு வழியாக நந்தா கூறிய முகிலரசன் எனும் பெயரை ஒருமனதாக ஆமோதித்து, அதையே வைத்தனர்.

 

பேரனை மூத்தவர்கள் நன்கு கவனித்துக் கொண்டாலும், அதிதீக்கு ஓய்வே இல்லை எனும்படியாக வேலை நெட்டித் தள்ளியது.

 

முனியாண்டி, வாரமொருமுறை வந்து செல்வதாகக் கூறி கோவில் பணிகளைப் பார்க்கவென கிளம்பிச் சென்றிருந்தார்.

 

காமாட்சிக்கு முன்பைக் காட்டிலும் கணவர் கிளம்பியது இன்னும் வசதியாகிப் போனது.

 

முனியாண்டியின் வார்த்தைகளுக்குப் பயந்து சற்றே அடக்கி வாசித்தவர், அவர் இல்லையென்றதும் மேள தாளமில்லாமலேயே தனது நாடகங்களை அரகேற்றத் துவங்கி அடுத்த கட்டத்திற்கு வந்திருந்தார்.

 

அனைவரும் வெளியே சென்றபின், பேரன் மற்றும் மருமகள் மட்டுமே வீட்டில்.

 

நிம்மதியாக ஹாலில் படுத்துக் கொண்டு தொலைக்காட்சியைப் பார்ப்பவருக்கு, நேரத்திற்கு அனைத்தும் வேண்டும் என்கிற தொனியில் அதிதீயை வதைத்தார்.

 

பேரனைக் கவனிப்பது என்பது பேருக்குத்தானேயொழிய, மற்றபடி அவருடைய உலகம் தொலைக்காட்சியில் வரும் சீரியலோடு, சீரியசாகி இருந்தது.

 

நந்தா வரும் நேரத்திற்கு முன்பே, தனது செயல்களை மாற்றிக் கொள்வார்.

 

அதுவரை எந்த வேலையையும் பார்க்காமல் இருப்பவர், மகன் வரும் நேரங்களில் வேலை பார்ப்பதாக பாவனை செய்வதும், “வீட்டில எந்நேரமும் வேலை இருந்துகிட்டே இருக்கு.  ஓயவே ஓயமாட்டிங்குது”, என்றபடியே வியர்வையோடு வரும் தாயை நந்தா நம்பினான்.

 

அந்நேரம் மகனோடு இருக்கும் மனைவி, ஓய்வில் இருப்பதாகவே தோன்றியது நந்தாவிற்கு.

 

ஆண்பிள்ளைகளுக்கு எப்போதுமே பெண்களின் சூட்சும செயல்கள் புரிவதில்லை. அதற்கு நந்தாவும் விதிவிலக்கில்லாமல் இருந்தான்.

 

மற்ற மகன்களின் முன் இத்தனை முன்னேற்பாடுகளைச் செய்யாமல், வழமைபோல சீரியலில் மூழ்கிவிடுவார்.

 

ரமேஷிற்கு தாயின் அனைத்து செயல்களையும் நேரில் கண்டாலும், அதில் அடங்கியிருக்கும் சூட்சுமங்களை புரிந்து கொள்ள மெனக்கெடவில்லை.

 

ராஜேஷ் தனது படிப்பு முடிந்து, டூவீலர் மெக்கானிக் ஷாப்பிற்கு பணிக்குச் சென்று வந்தான்.

 

அவ்வப்போது நந்தாவோடும் கட்டிட வேலையின் மேற்பார்வைக்கும் சென்று வருவான்.

 

ஓய்வேயில்லாமல் ஓடியவள், ஓய்ந்து போகாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசித்து யோசித்து ஓய்ந்து போனாள் அதிதீ.

 

நந்தாவிற்கு கட்டிட வேலைகளை குறிப்பிட்ட தினங்களுக்குள் முடித்துதர வேண்டுமென்கிற நிர்பந்தத்தால், இரவு பகல் பாராமல் வேலைக்கு ஆட்களை விட்டதோடு, கட்டிடத்திலேயே ஒரு நாளின் முழு நேரத்தையும் செலவிட்டவாறு இருந்தான்.

 

முனியாண்டியின் உடல்நிலையில் உண்டான எதிர்பாரா நிகழ்வினால் கட்டிடங்களை கூறிய தினத்திற்குள் முடித்துக் கொடுப்பதில் தாமதமாகியிருந்தது.

 

கடன் இல்லாதபோதும், அடுத்த கட்ட, கட்டிடப் பணிக்கான முன்தொகை அனைத்தும் செலவளிந்திருந்த நிலையில், அதிதீயின் வங்கிக் கணக்கில் இருந்த தொகை மேற்படி செலவிற்கு பெரிதும் நந்தாவிற்கு கை கொடுத்தது.

 

கட்டிடப் பணிக்கென உடையவர்களிடமிருந்து முன்பணமாக பெறப்பட்டது அனைத்தும் தந்தையின் மருத்துவ செலவிற்கு பயன்படுத்தியிருக்க, மேற்கொண்டு பணிக்கான தொகையை அதிதீயின் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துச் செலவளித்தான்.

 

அனைத்தையும் பெண் அறிந்தாலும், எதைப் பற்றிக் கேட்கவோ, பேசவோ நந்தாவிற்கு நேரமுமில்லை.  உரியவனுக்கு மனமும் இல்லை என ஓடிக் கொண்டிருந்தன நாள்கள்.

 

பகுதிநேர கல்வி பயிலத் துவங்கியது முதல், புதிய கட்டிடங்களை ஒப்பந்தம் செய்யாமல் இருந்தான் நந்தா.

 

பழைய ஒப்பந்த கட்டிடங்கள் மட்டுமே இன்னும் பணி முடிக்க காத்திருந்தது.

 

 

/////////////

கிராமத்தில் நடந்த விசேசம் ஒன்றிற்கு காமாட்சி சென்றிருந்தார்.

 

நந்தாவிடம் கூறினால், ‘நான் சென்றுவருகிறேன்.  நீ எம்மகனைப் பாத்துக்கோ’ என காமாட்சியை கிராமத்திற்கு அனுப்ப மாட்டான் என அதிதீயிடம் கூறியவர், எதையும் மகனிடம் கலந்து கொள்ளாமல் கமுக்கமாகவே கிளம்பியிருந்தார்.

 

உண்மையில் நந்தா அவ்வாறு கூறமாட்டான் என்பது காமாட்சிக்கும் தெரியும்.

 

வேலைப்பளு சற்று குறைவாக இருக்கவே, மகனோடு நிம்மதியாக அமர்ந்துவிட்டாள் அதிதீ.

 

மதிய உணவிற்கு வந்த நந்தா, மகனை உறங்க வைக்கும் முயற்சியில் அதிதீ இருப்பதைக் கண்டு, “எங்க அம்மா?”

 

“உங்கிட்ட சொல்லலையா?”

 

“என்னத்தை சொல்லலையாங்கற?”

 

“ம்ஹ்ம்… ஊருக்குப் போறதை உங்கிட்ட சொல்லலையா?”

 

“என்ன விசயமா போயிருக்கு?”, ஆச்சர்யமாகக் கேட்டான்.

 

“யாரு வீட்லயோ காது குத்தாம்”, அதையே குத்தலாக கூறினாள் பெண்.  உண்மையில் காது குத்து என அதிதீயிடமும் காமாட்சி பகிர்ந்தாரில்லை.

 

“அப்டியா..”, என யோசித்தவன், “எனக்குத் தெரியாம யாரு வீட்ல காது குத்து”, என்றவாறே தன்னை சீர் செய்து கொண்டு உண்ண அமர்ந்தான்.

 

உணவைக் கொண்டு வந்து தந்தவள், மகன் உறங்க வைக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கியிருந்தாள்.

 

இடையிடையே நந்தா பேச, கண்கள் சொருக உறங்கப் போகும் முகில் தந்தையின் பேச்சு சத்தம் கேட்டு மீண்டும் கண் விழிப்பதும், அதிதீ மீண்டும் தொட்டிலை ஆட்டுவதுமாக நேரம் நீண்டது.

 

நந்தா அடுத்து பேசத் துவங்க, “இன்னிக்கு என்னடா வந்துச்சு.  உனக்கும் உம்பிள்ளைக்கும்.  பேசாம சாப்பிட்டு எந்திரி!”

 

“ஏன்.. இப்ப என்ன பிரச்சனை!”

 

“தூங்கப் போறவன், உம்பேச்சைக் கேட்டதும் முழிச்சிக்கறான்.  கொஞ்ச நேரம் பேசாம சாப்பிடு.  அவந்தூங்கின பின்னதான் வேலை பாக்கணும்”

 

அத்தோடு நந்தா அமைதியாகியிருக்க, ஒருவழியாக கண்ணசந்தவனைக் கண்டு, தொட்டிலில் இருந்து கையை மெதுவாக எடுத்தவள், அங்கிருந்து அகன்றாள்.

 

அதற்குள் உண்டு முடித்தவன், அடுக்களையில் நின்றிருந்தவளை நோக்கி வர, “தண்ணீ அங்க எடுத்து வச்சிருக்கேன்”, என அதிதீ நந்தாவின் வருகையை உணர்ந்து மெல்லிய குரலில் கூற

 

“ஸ்ஸ்..”, என்றபடியே பெண்ணை பின்னோடு வந்து அணைக்க, கைகளை விலக்கிக் கொண்டு, திரும்பியவள், “போ… போயி ரெஸ்ட் எடு.  உம்மகன் முழிக்கிறதுக்குள்ள கிடக்கிற வேலையை முடிச்சிட்டு வரணும்”, என

 

“இப்பல்லாம் என்னை நீ கவனிக்கறதே இல்லை”, என அடமாக நின்றவனை

 

“உம்புள்ளையவும், வீட்டையும் பாக்கவே என்னால முடியலை.  இதுல உன்னைய எங்கிட்டுப் பாக்க”, என்றபடி நகர்ந்தவளின் பின்னேயே சென்றான் நந்தா.

 

நந்தாவின் வருகையை உணர்ந்தவள், “என்னடா புதுசா பின்னாடியே கொடிப்பிடிச்சு வர்ற?  என்ன விசயம்?”, என நிதானமாக நந்தாவை நோக்கிக் கேட்க

 

வாயில் விரல் வைத்து ‘சத்தமாகப் பேசாதே! முகில் எழுந்திருவான்’ எனக் காட்டியவன், பெண் அசந்திருந்த நேரத்தில் அலேக்காகத் தூக்கிக் கொண்டு ஹாலுக்குள் நுழைய, அதிதீ பதறி, “என்னடா.. என்னை இப்ப எங்க தூக்கிட்டுப் போற?”

 

அறைக்குள் பெண்ணோடு நுழைந்தவன், பெண்ணை படுக்கையில் விட்டதோடு, தானும் அருகே படுத்துக் கொண்டு, “கொஞ்ச நேரம் எங்கூடப் படேன்!”, என

 

“என்னாச்சுடா…!”, என நந்தாவின் முகம் பார்க்க

 

அதிதீயை இறுக அணைத்துக் கொண்டு பெண்ணின் மார்பில் முகம் புதைத்துப் படுத்திருந்தவனின், தலையை கோதியபடி இருக்க, மெல்லிய குரலில் நீண்ட நாளைக்குப் பின் கட்டிடம், தனது படிப்பு, பண  நிலவரங்களைப் பெண்ணிடம் பகிர்ந்தவன் சற்று நேரத்தில் உறங்கிப் போயிருந்தான். நந்தா உறங்கியதை அவனது தளர்ந்த அணைப்பில் கண்டு கொண்டாள் அதிதீ.

 

சற்று நேரம் அதிதீயும் அமைதியாக கண்மூடிக் கிடந்தாள்.

 

மகனின் மழலைக் குரல் கேட்கவே, எழுந்து வந்தாள். தொட்டிலிலிருந்து காலை வெளியில் போட்டபடியே தனியாகப் பேசிக் கொண்டிருந்தவனை எட்டிப் பார்க்க… தாயைக் கண்ட மகிழ்ச்சியில் கைகளை மேலேதூக்கி, தன்னை தூக்குமாறு கைதூக்கிய முகிலைத் தூக்கி முத்தமழை பொழிந்தாள்.  பிறகு இடுப்பில் குழந்தையை வைத்தபடியே பாலைக் காய்ச்சச் சென்றாள்.

 

ஏனோ நந்தாவின் அரவணைப்பும், பேச்சும் அதனைத் தொடர்ந்து, மகனது செயலும், அதிதீயின் மனதிற்குள் இருந்த இறுக்கத்தை விரட்டிய உணர்வு.

 

மகனுக்கு வேண்டியதை செய்துவிட்டு, நந்தாவிற்கும் டீயை போட்டு கையில் எடுத்து வந்து எழுப்ப, எழுந்தவனுக்கும் மனம் இலேசான உணர்வு.

 

பேசாத வார்த்தைகள் கூட, சில அன்பானவர்களின் செயலில் புரிந்துபோகும்போது, தனக்குள் நொறுங்கிய, உடைந்த, சரிசெய்ய முடியாது என்றிருந்த அனைத்தும் நிமிடங்களில் சரியாகிறது என்பது புரிந்தும், புரியாமலும் அதிதீயிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் நந்தா.

 

…………….

பிரசவ கால விடுப்பு முடிந்து அதிதீ பணிக்குச் செல்லும் நாளும் வந்தது.

 

குழந்தைக்கு வேண்டிய அனைத்தையும் இலகுவாக காமாட்சி எடுத்துப் பயன்படுத்தும் விதமாக அதற்கான கூடையில் எடுத்து வைத்துவிட்டு பணிக்குக் கிளம்பியிருந்தாள் அதிதீ.

 

“எப்ப வருவ?”, என கிளம்பும் முன் கேட்ட மாமியாரைப் புரியாமல் பார்த்தாள் அதிதீ.

 

“தெரியலைத்தை… எப்படியும் ஆறு மணி ஆகிரும்”, எனத் தயங்கி உரைத்தவளிடம்

 

“ஆறு மணியா!”, என அலறியவரை, புரியாமல் பார்த்தாள் அதிதீ.

 

“எப்பவும் ஆறு மணிக்கு மேலதான் வருவேன்.  முகில் சின்னவனா இருக்கறதால கொஞ்சம் முன்ன கிளம்பி வரப் பாக்கறேந்தை”, என்றுவிட்டு கிளம்பியிருந்தாள்.

 

காலையிலேயே அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டுக் கிளம்பியிருந்தாள் அதிதீ.

 

மதிய உணவிற்கு வந்த நந்தாவிற்கு, காலையில் செய்த உணவை, “எல்லாம் உன் தலையெழுத்து.  இப்டி ஆறின சோத்தைச் சாப்பிடனும்னு விதி இருந்திருக்கு!”, என்றபடியே காமாட்சி பரிமாற,

 

“ஏம்மா… நீ வீட்லதான இருக்க!  மதியத்துக்கு நமக்கு மட்டுமாவது சோறு வடிச்சிருக்கலாம்ல!”, என்றவனிடம்

 

“உம்மகனை ஒத்தாளா பாத்துக்கறதே கண்ணைக் கட்டுது.  இதுல சமையலும் பண்றதுன்னா எப்டிப்பா”, எனக் கேட்க

 

“நீதான ஆரம்பிச்சே… அதான் கேட்டேன்!”, என்றுவிட்டு, மகனோடு சிறிதுநேரம் செலவிட்டான்.

 

காலையில் குளிக்க வைத்து, புதிய ஆடையை அணிவித்து மகனை மாமியாரிடம் குடுத்துவிட்டுச் சென்றிருந்தாள் அதிதீ.

 

மகனைத் தூக்கும்போது, எப்போதுமில்லாது குழந்தையின் மீது எழும் பால்மணத்தோடு சிறுநீர் நாற்றமும் வரவே, “ஏம்மா தம்பி எப்பவும் வாசமா இருப்பான்.  இன்னிக்கு அவனுக்குக் குளிக்க ஊத்தலையா”, எனக் கேட்க

 

“ஏன் ஊத்தாம.. காலையிலயே ஊத்திட்டுத்தான குடுத்திட்டுப்போச்சு..”

 

அதற்குமேல் எதுவும் தாயிடம் கேட்கவில்லை.  நந்தாவிற்கே புரிந்திருந்தது.

 

சிறுநீர் கழித்த உடையை மாற்றாதது, பால் குடித்த பிறகு, நீரை வைத்துத் துடைத்துவிட்டு, மகனுக்கு பேபி பவுடரை மனைவி போட்டு விடுவதைக் கவனித்திருக்கிறான்.

 

அதுபோல எதையும் செய்யாததால்தான் மகன் இன்று இதுபோல இருக்கிறான் என்பது தெளிவாகியிருக்க, தானாகவே தனக்குத் தெரிந்த அளவில் பழைய உடையைக் களைந்து, வெதுவெதுப்பான நீரை வைத்து, மகனுக்கு கால், கை, முகம், கழுத்துப் பகுதியை துடைத்து பேபி பவுடரையும் போட்டு விட்டான்.

 

புதிய ஆடையை உடுத்திவிட்டு, தாயிடம் மகனைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.

 

மகனின் செயலை ஆவென பார்த்திருந்தவர், “பொண்டாட்டி சொல்லிட்டுப் போனாளாக்கும்.  அதை எங்கிட்ட சொன்னா நான் செஞ்சிருக்கப் போறேன்”, என்றதும்

 

கிளம்பி வெளியேறியவன் காதில் விழுந்ததும் உள்ளே வந்தவன், “அவ சொல்லணும்னு அவசியமில்ல.  இத்தனை நாளு முகில் இப்டி இல்லையேனு யோசிச்சு நானா பண்ணேன்.  எதுக்கெடுத்தாலும் அவளையே சொல்லு”, என்று கடிந்துவிட்டு கிளம்பியிருந்தான் நந்தா.

 

முனியாண்டிக்கு முடியாமல் போனது முதலே தாயை கடிந்து ஒரு வார்த்தை சொல்லியிராதவன், நீண்ட நாளுக்குப்பின் கடிந்தது காமாட்சிக்கு, “ரொம்பத்தான் பேசுறான்.  இவனையெல்லாம் யாரு வளத்தா… நாந்தானே வளத்து இந்தளவுக்கு ஆளாக்கிவிட்டேன்.  நான் வளக்காமயா இப்டி வந்தான்”, என புலம்பலோடு மருமகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

 

காலையில் அதிதீ சென்றபின் பயன்படுத்திய பாத்திரங்கள், மதிய உணவு பாத்திரங்கள் என அனைத்தும் அப்படியே கிடக்க, மாலையில் வீடு திரும்பியவளுக்கு அத்துணை அசதி.

 

தாயைக் கண்டதும் தாவிய மகனைத் தூக்காமல், ஓடிச்சென்று ஆடையை மாற்றிக் கொண்டு, தன்னைச் சுத்தம் செய்து கொண்டு விரைவில் வந்து தூக்குவதற்குள் அழுது களைத்திருந்தான் முகில்.

 

பசி எடுத்ததில் முன்பே அழத் துவங்கியிருந்தான்.

 

காமாட்சி பாலைக் காய்ச்சாமல் அதிதீயை எதிர்பார்த்திருக்க, வந்ததும் மகனை இடுப்பில் வைத்துக் கொண்டு அவசர அவசரமாக பாலைக் காய்ச்சி, அதனை தகுந்த சூட்டிற்கு ஆற்றி, மகனுக்கு பாலைப் புகட்டினாள்.

 

அதற்குள், “வந்து இவ்வளவு நேரமாச்சு.  ஏழு மணிக்கு எந்த வீட்லயாவது காப்பித் தண்ணி போடறதைப் பாத்திருக்கோமா”, என ஆரம்பித்திருந்தார் காமாட்சி.

 

“பாலிருந்ததே அத்தை, நீங்களே போட்டுருக்கலாமே”, என்றதுமே அடுத்த கட்ட பேச்சிற்கு தாவியிருந்தார்.

 

ஒரே நாளில் பெண்ணிற்கு கண்ணைக் கட்டுவது போலிருக்க, அடுத்த கட்ட அடுக்களைப் பணிகள் காத்திருந்தது. வேலை பார்த்துவிட்டு வந்த அயர்ச்சியோடு, காமாட்சியிடம் விட்டாலும் அழுது கொண்டே தன்னை நாடி வந்த மகனை இடுப்பில் வைத்தபடியும், அருகே அமர வைத்தபடியும் பணிகளைச் செய்து முடித்தாள்.

 

இரவு உணவிற்கான பணிகளை முடித்துவிட்டு, மகனுக்கு வேண்டியதைச் செய்துவிட்டு, பேருக்கு உண்டதாக நான்கு கவளத்தோடு படுக்கைக்கு சென்றுவிட்டாள் அதிதீ.

 

ராஜேஷ், ரமேஷ் இருவருக்கும் வேண்டியதை பார்த்துவிட்டு காமாட்சியும் சென்று படுத்திருந்தார்.

 

பதினோரு மணிக்கு வந்த நந்தா, ஆளுக்கொரு மூலையில் உறங்கும் தாயையும், தாரத்தையும் பார்த்தவன், யாரையும் அழைக்காமல் தானாகவே போட்டு உண்டான்.

 

காலையில் அதிதீ எழுமுன்னே எழுந்து சென்றவன், அசந்து உறங்கும் மனைவியையும், தாயை இறுகக் கட்டியபடியே உறங்கும் மகனையும் பார்த்தபடியே நெடுநேரம் நின்றிருந்தான்.

 

எங்கோ தான் தவறுவது புரிந்தது. 

 

என்ன செய்தால் அனைத்தும் சரியாகும் என்பது புரியவில்லை.  அதிதீயைத் தவிர்த்து தான் ஒதுங்குவதும் நந்தாவிற்கு புரிந்தது.  அதற்காக தாயையும், தம்பிகளையும் தான்தானே கவனிக்க வேண்டும் என்கிற திட எண்ணமும் முரண்ட, எவ்வளவு நேரம் அதே யோசனையோடு நின்றானோ… இதை எதனையும் அறியாதவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

 

அடுத்தடுத்த நாள்களிலும் இதேநிலை தொடர்ந்தது.

 

அதிதீயின் நிலை மோசமாகிக் கொண்டேயிருக்க, முகிலை இயன்றளவில் அதிதீ இல்லாத நேரங்களில் நந்தாவே கவனித்துக் கொள்ளத் துவங்கினான்.

 

இதனால் நந்தாவிற்கும் வெளிவேலைகள் பாதித்தது.

///////////

தீனதயாளன் இறந்த செய்தி அறிந்ததும், அதிதீயும், நந்தாவும் உடனே கிளம்பிச் சென்றிருந்தனர்.

 

அனைத்தையும் முன்னின்று நந்தாவே பார்த்துக் கொண்டான்.  ப்ரீத்தியின் வீட்டினர் வரும்வரை தனியாக கவனித்துக் கொண்டவன், அதன்பின் ப்ரீத்தியின் கணவனோடு கலந்து கொண்டு மேற்படி காரியங்களை கவனித்து செய்தான்.

 

கௌசல்யா, படுத்த படுக்கையாக எந்த உணர்வும் இன்றி இருந்த கணவனுக்கு, இறைவன் இனியேனும் நற்கதியைத் தரட்டும் என்கிற வேண்டுதலோடு வற்றிய கண்ணீரோடு வறண்ட மனநிலையில் இருந்தார்.

 

தீனதயாளனின் சகோதரர்களின் வழியில் கொள்ளி வைக்க ஆண் வாரிசு இல்லாததால், தாங்கள் வைப்பதாக போட்டிபோட்டுக்கொண்டு முன்வர, “அவருக்கு பிறந்தது ரெண்டும் பொட்டைப் புள்ளைங்கதான்.  அதுகளையே கொள்ளி வைக்கச் சொல்லிட்டேன்.  மத்தவங்க யாரும் இதுல தலையிட்டாலும் சொத்துபத்தில சல்லிக்காசு தரமுடியாது.  ஏன்னா அவரு காலத்திலேயே ரெண்டு பேரு பேருலயும் எல்லாத்தையும் எழுதி வச்சிட்டாரு”, என்றதுமே பின்வாங்கியிருந்தனர்.

 

தாயை இனி தனியே விடமுடியாது, இனி தாயோடு அங்கேயே இருக்கப் போவதாக தீர்மானமாகக் கூறிய அதிதீயை எங்ஙனம் எதிர்கொண்டான் நந்தா.

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!