VVO19

VVO19

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 19

 

மகப்பேறு மருத்துவ விடுப்பில் அதிதீ இருந்த சமயத்தில், அவளின் வங்கிக்கு மாறுதலாகி வந்திருந்த ரம்யா, அவளின் வீட்டருகே இருந்த விடுதியில் தங்கி பணி புரிந்தாள். 

 

முன்பானால் நந்தா அழைத்துச் சென்று வங்கியில் விடுவான். மாலையில் தானாகவே வீடு திரும்புவாள்.  ஆனால் தற்போது பெண்ணைக் கண்டு கொள்ளாத நிலை.

  

பணிக்கு தாய் வீட்டிலிருந்து செல்லத் துவங்கிய இரண்டொரு நாளில் ரம்யாவாகவே வந்து அதிதீயிடம் கேட்டறிந்து கொண்டாள்.

 

அதுமுதல் இருவருமாகவே இணைந்து வங்கிக்குச் செல்வதும், பணி முடிந்து சேர்ந்தே திரும்புவதுமாக நாள்கள் சென்றது.

 

வீட்டிலிருந்து ரம்யாவின் விடுதி வரை நடந்து வருபவள், அதன்பின் ரம்யாவின் டூவிலரில் இணைந்தே வங்கிக்குச் செல்வர்.

 

அதிதீ வீட்டிலிருந்து கிளம்பியபோது, நந்தா பின்னோடு வந்ததை அறியாமல், ரம்யா தனக்காக காத்திருப்பதை நீட்டிக்க விரும்பாமல் விரைவாகவே விடுதி நோக்கி நடந்திருந்தாள். 

 

விடுதியின் அருகே வந்ததும், ரம்யாவிற்கு மிஸ்டு கால் தர, வாயிலருகே அதிதீ வரவும், ரம்யா வண்டியோடு வெளிவரவும் சரியாக இருந்தது.

 

ரம்யா சென்னையைச் சேர்ந்தவள்.  இன்னும் திருமணமாகவில்லை. பெற்றோர் சென்னையிலேயே அவளின் சகோதரனுடன் வசிக்க, ரம்யா புதுக்கோட்டையில் விடுதியில் தங்கி பணி புரிந்தாள்.

 

கடந்த மூன்று ஆண்டுகளாகவே தனது மனம் விரும்பும் மணாளனை வலைவீசித் தேடி வருகிறாள் ரம்யா.

 

நிறைய வரன்கள் வந்தாலும், காதலித்து நன்கு புரிந்து கொண்டபின்தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக பெற்றோரிடம் கூறியவள், அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறாள்.

 

புதுக்கோட்டை வந்தபின்புதான் அதற்கான வாய்ப்புகள் அமைந்ததாக ரம்யா நம்புகிறாள்.

 

பார்வையால் இதயங்களை இதமாக பரிமாறத் துவங்கிய தருணங்கள் சில நாட்கள் முன்பு அமைந்ததால், இருவரின் நேசம் விரைவில் அடுத்த கட்டத்திற்கு வரலாம் என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறாள் ரம்யா.

 

தன்னைவிட வயதில் மூத்தவளான ரம்யாவிடம், “வீட்ல அலையன்ஸ் பாத்துட்டு இருக்காங்களா?”, என அதிதீ கேட்க

 

ரத்தினச் சுருக்கமாக தனது எண்ணத்தையும், தனது எதிர்பார்ப்பையும் பகிர்ந்ததோடு, விரைவில் தன் மனங்கவர்ந்தவனோடு திருமணத்தை எதிர்பார்க்கலாம் என கூறியிருந்தாள்.

 

கண்டதும் காதல்… என்றதுமே அதிதீ ஆச்சர்யமாக வினவ, “நம்ம மனசுக்குள்ள வரப்போற ஹப்பி பத்தின எதிர்பார்ப்பு இருக்குமுள்ள!  அந்த எதிர்பார்ப்பை யாரு ஃபில் பண்ணி, நம்ம வேற லெவல்ல ஃபீல் பண்ண வைக்குறாங்களோ அவங்கதான நம்ம லைஃப் பார்ட்னராக முடியும்!  அப்டித்தான் அவரைப் பாத்ததும் இவருதான் மை மேன்னு மனசு சொல்லிருச்சு!” எனக் கண்ணில் கனவோடு கூற

 

காதல் என்பது வந்துவிட்டால், எவ்வளவு தெளிவான பெண்ணும் இப்படித்தான் தத்து பித்தென்று மாறிவிடுவார்களோ என அதிசயமாக ரம்யாவையே பார்த்திருந்தாள் அதிதீ.

 

தனக்கும் காதல் வந்தது.  ஆனால் அது வேறு மாதிரி.  உண்மையில் தனக்குப் பிடித்தது என்றுகூட அதிதீயால் அப்போது கூறமுடியவில்லை.

 

அது தந்தையின் நம்பிக்கையற்ற பேச்சு மற்றும் விடாத தொந்திரவினால் விளைந்த மாற்றம் என்றே அதிதீ இன்றுவரை நம்புகிறாள்.

 

தந்தை தீனதயாளன் அதுபோல தன்னைப் பேசாமல் இருந்திருந்தால், கட்டாயம் நந்தாவை திருமணம் செய்வது பற்றி யோசித்திருக்க மாட்டோமோ என அவ்வப்போது அதிதீக்கு தோன்றும்.

 

நந்தாவை நினைத்தால் மனமெங்கும் உல்லாசச் சாரல் என்பது போலெல்லாம் திருமணத்திற்கு முன்புவரை உணர்ந்ததில்லை.

 

திருமணத்திற்குப் பிறகும் அதுபோல எண்ணியதில்லை.

 

நந்தாவோடு ஒரே வீட்டில் வாழத் துவங்கி, எதிர்பாரா முதல் பிரிவில்தான் முதன்முறையாக அவன்வசம் மனம் மண்டியிட்டது. அவனைத் தேடியது!  நாடியது! அனைத்துமே அப்போதுதான்.

 

அதையும் தனக்கு எந்த ஆதரவும் இல்லாத நிலையில் தானறிந்த, தனக்குத் தெரிந்த ஒரே ஜீவன் தற்போது நந்தா மட்டுமே என்கிற நிலையில்தான், வேறு வழியின்றி அவனை நாடியதாக ஆரம்பத்தில் எண்ணியிருந்தாள் அதிதீ.

 

அதன்பிறகே ஒரு சமயம் நந்தா, ‘மற்ற ஆண்களையெல்லாம் கவனித்திராத நீ, என்னை மட்டுமே இன்று வரை நினைவில் வைத்திருக்கும் வகையில், பள்ளிப் பருவ எனது செயல்களை, உருவத்தை கருத்தில் கொண்டிருந்தாய் எனில் அதற்கு என்ன அர்த்தம்’ எனக்கேட்டு யோசிக்க வைத்த பிறகே, தனக்கே தெரியாமல் அவன்பால் அப்போதே ஈர்க்கப்பட்டதையும் அறை மனதோடு நந்தாவிடம் ஒப்புக் கொண்டிருந்தாள் அதிதீ.

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக காதல் அதன் அனுபவத்தைத் தந்து, பித்து கொள்ளச் செய்கிறது என நினைத்தபடியே ரம்யாவோடு பயணத்தைத் தொடர்ந்திருந்தாள்.

 

ரம்யா வண்டியை மெதுவாகச் செலுத்தியவாறே, செல்லும் வழி நெடுகிலும் பார்வையை வீசியவாறே வந்தாள்.

 

“என்ன ரம்யா?  இன்னைக்கும் உங்க ஆளைத் தேடுறீங்களா?”. அதிதீயைக் காட்டிலும் ரம்யா வயதில் மூத்தவள்.  ஆகையால்தான் இந்த மருவாதை.

 

“ம்ஹ்ம்.. இன்னும் அவரைக் காணோம்.  அதான் பாக்கறேன்”, என தனது தேடுதல் வேட்டையின் முடிவாக, காணாத ஏக்கத்தில் மனம் வருந்தியதை வார்த்தைகளின் தாக்கத்தில் உணர்த்தியதை உணராமல் கூறினாள் ரம்யா.

 

சற்று நேரம் பேசாமல் வந்த அதிதீ, திடீரென, “இன்னிக்கு ஈவினிங் திருச்சி மீட்டிங் கன்ஃபார்ம்தான”

 

“அதுல என்ன சந்தேகம்?”

 

“அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தேன்.  மீட்டிங் முடிஞ்சு  திருச்சிலயே ஸ்டே பண்ணிட்டு அடுத்த நாளு நேரா பேங்குக்கு போயிருவேன்னு.  ஃபர்ஸ்ட் டைம் என் பையன விட்டுட்டு நைட் வெளிய தங்குறது மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு.  எப்டியாவது பிளான் மாறிறாதா! இல்லைனா வேற யாரையாவது எனக்கு பதிலா அனுப்பி வப்பாங்களானு இருக்கு!”, துயரத்தோடு பகிர்ந்தாள் அதிதீ

 

“நானும் மீட்டிங் வரேன்.  இல்லனா உங்களுக்குப் பதிலா நானே போயிட்டு வந்துருவேன்”, என்றபடியே “இன்னிக்கு என்னானு தெரியலை.  அவரை ஆளையே காணோம்” வண்டியை ஓட்டியபடியே இன்னும் விடாமல் சாலையின் இருபக்கமும் கண்களால் துளாவியபடி வந்தவளைக் கண்ட அதிதீக்கு ரம்யாவின் பேச்சில் வியப்பாக இருந்தது.

 

“பேசிக்கவே இல்லை இன்னும்.  ஆனா பாத்ததை வச்சு மட்டுமே எப்டீ லவ்வுனு கன்ஃபார்மா சொல்றீங்க”, என ரம்யாவிடம் ஐயத்தோடு வினவ

 

“என்னோட இத்தனை வருச அனுபவத்தில எவ்ளோ ஜென்ஸ்ஸை மீட் பண்ணிருக்கேன்.  அவங்கட்டல்லாம் வராத ஃபீல் இவரைப் பாத்ததுமே வந்துச்சு,  அண்ட் தென், நான் எதிர்பார்த்த மாதிரியே அவங்க அவுட்லுக், , அப்ரோச் அத்தனையும் எனக்குப் பிடிக்குதே.. அத வச்சுத்தான்”

 

“எனக்குப் புரியலை!”

 

“நீங்கள்லாம் லவ் மேரேஜ்னு வெளிய சொல்லிராதீங்க!”, என அதிதீயைச் சீண்ட

 

“சொன்னாலும் நம்ப மாட்டாங்க”, என சோகமாகவே கூறினாள் அதிதீ.

 

“எங்களோடது ரொம்ப வித்தியாசமானது.  ரெண்டு பேருக்குள்ளயும் அப்டியொரு கெமிஸ்ட்ரி, பயாலஜி, ஃபிஸிக்ஸ்னு பின்னுது”, என உற்சாகக் குரலில் கூறினாள் ரம்யா.

 

“ம்ஹ்ம்… எனக்குத்தான் நீங்க சொல்றது எதுவும் புரிய மாட்டிங்குது”, என வருத்தமான குரலில் உரைத்தாள் அதிதீ.

 

“வருத்தப்படாதீங்க…! இன்னும்கூட உங்களுக்கு வயசாகல.. உங்க ஹப்பிய இப்பக்கூட ட்ரையல்கு கூப்பிடுங்க!”

 

“ம்ஹ்ம்.. அவன் நான் கூப்பிடவும், வந்துட்டுத்தான் மறுவேலை பாப்பான்”, என அதிதீ விட்டேத்தியான குரலில் கூற

 

முதன் முறையாக அன்றுதான் அதிதீ தனது கணவனைப் பற்றி, அதுவும் அவன் இவன் என மரியாதை குறைவாகப் பேசுவதைக் கேட்டவள், “என்ன அதீ… நீங்க தான் ட்ரெண்டுல இருக்கற மாதிரி தெரியுது.  ஒன்னுந் தெரியாமலையே அவன் இவன்னுலாம் மேரேஜ்கப்புறமாவும் ஹப்பிய சொல்றீங்க.   பின்னுறீங்க போங்க”, என ரம்யா அதிதீயைப் பாராட்ட

 

“அது சின்ன வயசில இருந்து கூப்பிட்டுப் பழகிட்டதால மாத்திக்க முடியலை”, அதிதீ.

 

‘இப்படி ஊரே கேக்கற அளவுக்கு நந்தாவை மரியாதை குறைவா பேசுறதை முதல்ல குறைக்கணும், அப்டியே படிப்படியா நிப்பாட்டணும்” என அப்போதும் தனக்குள் முடிவு எடுத்துக் கொண்டாள் அதிதீ.

 

வங்கி வந்துவிடவே, அவரவர் கேபினுக்குச் செல்லும் வழியில், அன்று மதியம் கிளம்ப வேண்டிய விசயத்தைப் பற்றிப் பேசியபடியே விடைபெற்றுப் பிரிந்தனர்.

………………….

நந்தா அதிதீயின் வீட்டிற்குள் வந்ததும், மகன் முகிலோடு நேரத்தைச் செலவிட, குழந்தையைப் பார்க்க வந்திருக்கிறான்போல என எண்ணிய அதிதீ, எதுவும் பேசிக்கொள்ளாமல் ரம்யாவின் விடுதியை நோக்கி நடையைக் கட்டியிருந்தாள்.

 

அதனால் பின்னோடு சற்று தாமதமாக வந்த நந்தாவை கவனிக்கவில்லை.

 

அதிதீ தன்னைக் கண்டுகொள்ளாது சென்றதும், சற்று நேரம் பெண் செல்லும் பாதையையே பார்த்திருந்தவன், வீட்டிற்குள் செல்லாமல், அப்படியே தனது அலுவலகத்திற்கு கிளம்பியிருந்தான்.

 

அன்று இரவு தனது பகுதி நேர வகுப்பு முடிந்து அதீதியின் வீட்டிற்கு செல்லும் முடிவோடு அன்றைய பணிகளைத் துவங்கியிருந்தான்.

 

மனைவியின் பாராமுகத்திற்கும் தானும் ஒரு காரணம் என்பது புரிய, அலுவலகத்திற்கு தன்னைத் தேடி வந்து பேசியவளிடம் அப்போதே சமரசமாகியிருக்கலாம் என்று காலம் கடந்து யோசித்தபடியே அமர்ந்திருந்தான்.

 

எதிலும் மனம் லயிக்கவில்லை.

 

தற்போது வங்கிக்கு சென்றாலும் அதிதீயைப் பார்க்கலாம், பேசலாம் என்றாலும் அது தனக்குப் போதாது என்றது நந்தாவின் மனம்.

 

நீண்ட நாள் பிரிவினைப் போக்க, அதிதீயோடு நீண்ட நெடிய பொழுதினை செலவளிக்கும் வேட்கை வந்திருந்தது.

 

ஆறு அல்லது ஆறரை மணிக்குமேல் வீட்டிற்கு வருவாள் அதிதீ.  இன்று தனது பகுதிநேர பொறியியல் இறுதி வகுப்பினை கட் அடித்துவிட்டு நேராக மாமியார் வீட்டிற்கு சென்று விடவேண்டும் என டீனேஜ் பையனைப்போல  மனதைத் தேற்ற முயன்றிருந்தான் நந்தா.

//////////////////

 

மதியத்திற்கு மேல் வங்கியின் மேலாளரும் திருச்சி மீட்டிங்கில் கலந்து கொள்ளக் கிளம்ப, அவருடைய வாகனத்திலேயே அறுவர் கொண்ட குழு திருச்சியை நோக்கிப் பயணித்தது.

 

வாகனத்தில் செல்லும்போது பொதுவான பேச்சுகள் மட்டுமே.

 

திருச்சி கிளைக்குச் சென்று தங்களை ரெப்ரெஷ் செய்து கொண்டு அனைவரும் மீட்டிங் ஹாலிற்கு வந்திருந்தனர்.

 

ஐந்து மணிக்குத் துவங்கிய மீட்டிங் முடியவே எட்டு மணியாகியிருந்தது.

 

மீட்டிங்கின் முடிவில், புதியதாக கணினியில் பயன்படுத்தப்பட இருக்கும் அப்ளிகேசனைக் கையாளுவதற்கு ஒவ்வொரு கிளையில் இருந்தும் இருவரை நியமிக்க கேட்டிருக்க, இவர்களது வங்கி மேலாளர், “அதிதீயும், ரம்யாவும் நாளைக்கு ஃபுல்லா இருந்து பாத்துட்டு வாங்க”, என இவர்களிடம் ஒப்புக்குக் கூறிவிட்டு, இருவரின் பெயரையும் அங்கு தங்களது கிளையின் சார்பில் கூறியிருந்தார்.

 

மறுக்க முடியாது.

 

ரம்யா உடனே சரியென்றிருந்தாள்.  அதிதீக்குத்தான் அடுத்த நாள் காலையில் விரைவாகக் கிளம்பி வீட்டுக்குச் சென்று மகனைப் பார்த்துவிட்டு வங்கிக்குச் செல்லலாம் என்கிற தனது எண்ணத்தில், மண்ணை அள்ளிப் போட்ட தங்களது மேலாளரை மனதிற்குள் வறுத்தெடுத்தபடியே ரம்யாவோடு வெளியேறினாள்.

 

இரவு உணவை முடித்துக் கொண்டு, வெளியில் தங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்யக் கிளம்பினார்கள்.

 

ரம்யாவும், அதிதீயும் இருவர் தங்கக்கூடிய அறையை எடுத்திருந்தனர்.

 

அறைக்கு வந்தவர்கள், அறையில் இருந்தபடியே அவரவர் வீட்டிற்கு அழைத்துப் பேசினர்.

 

அதிதீ தாயிடம் பேசிவிட்டு வைத்திருந்தாள்.

 

கௌசல்யாவும், “காலையில தம்பி உங்கிட்ட ஏதோ கேக்கணு பின்னாடியே வந்துச்சு.  நீ பாட்டுக்கு அதை கண்டுக்காம கிளம்பிட்ட”, என பகிர

 

“ஆபீஸ்கு கிளம்ப வெளிய வந்திருப்பான்மா.  நீயா எதாவது நினைச்சிட்டு பேசாத”, என்க

 

“நீ ஒன்னும் சொல்லாம கிளம்பினதும், அப்டியே முகமே மாறிப் போயிருச்சு”

 

“அவன் முகமே அப்டித்தான்”, அதிதீ சிரிக்க

 

“சும்மா வாயிக்கு வாயி அவன் இவன்னு பேசாத அதீம்மா.. இதே பேச்சு சின்னவன் முன்னாடியும் பேசினா அவனும் அப்டித்தான் பேச ஆரம்பிப்பான்”, என கண்டித்தார்.

 

நந்தாவை அலுவலகத்தில் சென்று பார்த்தபிறகும் தன்னைக் கண்டுகொள்ளாது தவிர்த்ததும், பெண் மிகவும் ஓய்ந்து போயிருந்தாள்.

 

அதுவரை இல்லாத மனஉளைச்சல் புதியதாக வந்து ஒட்டிக் கொண்டிருந்தது.

 

வங்கிப் பணியிலும், மகனின் சிரிப்பிலும் தன்னை மறக்கப் பழகியிருந்தாள்.

 

அவளால், நந்தாவின் செயலை இலகுவாக எடுத்துக் கொள்ள இயலவில்லை.

 

‘விழலுக்கு இறைத்த நீர்போல’, பணத்தை தான் எந்தக் கேள்வியுமின்றி வாரியிறைத்தாலும், தன்னை, தனது தேடலை கணவன் புறந்தள்ளி ஒதுக்கியதை எண்ணி மனம் வெதும்பியது.

 

இதற்கிடையே தாயின் சொல் அதிதீக்குள் மகிழ்ச்சியை உண்டு செய்திருந்தாலும், இத்தனை நாள் கணவனது பாராமுகம் நந்தாவின் மீது நம்பிக்கையை உண்டு செய்யத் தவறியிருந்தது.

 

மகனைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் தாயிடம் பேசிவிட்டு, “ம்மா அவன் காதுல போனை வையேன்.  முகில்கிட்ட பேசறேன்”, என்று ஏக்கமாக மகள் கேட்டதும் அவ்வாறே கௌசல்யா செய்ய

 

தாயின் பேச்சைக் கேட்ட முகில் கையைத் தட்டி, கால்களைக் கொண்டு மாறி மாறி வேகமாகக் குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

 

“ங்க்கா..”, என இதுவரை பேசிக் கொண்டிருந்தவன், முதன் முறையாக, “ம்ஆஅஅஅஅ”, என்று அழைத்திடவே, ஒரு பக்கம் அதிதீயும், மறுபக்கம் கௌசல்யாவும் முகிலின் முதல் சொல்லில் மகிழ்ந்து, சந்தோசத்தில் ஆழ்ந்திருந்தனர்.

 

அதேநேரம் காலிங்பெல் சத்தம் கேட்கவே, “அதீ இந்நேரம் யாருன்னு தெரியலை!  போயிப் பாக்கறேன்.  பத்திரமா நாளைக்கு வந்து சேரு!”, என்றுவிட்டு போனை வைத்திருந்தார் கௌசல்யா.

//////////////

நந்தாவை அந்நேரத்தில் எதிர்பார்க்கவில்லை கௌசல்யா.

 

வந்த மருமகனை உள்ளே அழைத்தவர், “சாப்பிடுங்கப்பா!”

 

பேரனோடு நின்றிருந்தவரிடமிருந்து, மகனை வாங்கிக் கொள்ள கையை நீட்ட பின்னால் இழுக்கப்பட்ட நாணைப்போல, விரைவாக மகிழ்வோடு பாய்ந்து வந்தான் முகில்.

 

தாயின் பிரிவில் ஏதோ ஏக்கத்தோடு இருந்தவனுக்கு, தந்தையைக் கண்டதும் குஷியாகியிருந்தான்.

 

மகனை வாங்கிக் கொண்டே, “எங்கத்தை அதிதீ”

 

விசயத்தைக் கூறக் கேட்டவனுக்கு, ‘இப்பத்தான அங்க இருந்து வந்தேன். அவ அங்க இருக்கானு தெரிஞ்சிருந்தா வராம அவளோடயே தங்கியிருக்கலாமே’, எனத் தோன்ற

 

அமைதியாக உண்டவன், அடுத்து மகனை தன்னோடு படுக்க வைத்துக் கொள்ளக் கேட்டு வந்து படுக்கையில் விழுந்தான்.

 

முகிலும் அன்றைய மாலை நேர விளையாட்டுக்களை தாயிடம் விளையாடத் தவறியிருக்க, தற்போது தந்தையோடு ஆர்வமாகவே விளையாடினான்.

 

ஒரு வழியாக இருவரும் களைத்து உறங்க முற்பட பனிரெண்டு மணிக்குமேல் ஆகியிருந்தது.

 

இடையில் அதிதீயை அழைத்து, கௌசல்யாவே விசயத்தைக் கூறியிருந்தார்.

 

உடன் ரம்யாவை வைத்துக்கொண்டு நந்தாவிடம் என்னத்தைப் பேச என்றெண்ணி அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் என விட்டிருந்தாள் அதிதீ.

 

அத்தோடு படுக்கைக்கு வந்தவளை உறங்க விடாமல், தனது மனம் கவர்ந்தவனைப் பற்றிய ஆகர்சிக்கும் பேச்சால் அதிதீயையே தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியிருந்தாள் ரம்யா.

//////////////

 

மதிய உணவிற்கு அதிதீயின் வீட்டிற்கு சென்றவன், மாமியாரிடமே விசாரித்துவிட்டு, உணவிற்குப்பின் திருச்சியை நோக்கிக் கிளம்பியிருந்தான் நந்தா.

 

அங்கு மீட்டிங் முடிந்து வங்கியை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தவளுக்கு அழைப்பு வரவே, எடுத்தாள்.

 

நந்தாவின் அழைப்பை அந்நேரம் நிச்சயமாக பெண் எதிர்பார்க்கவில்லை.

 

“எங்க இருக்க?”

 

“மெயின் பிரான்ஜ்லதான்.  என்ன விசயம்?”

 

“விசயம் இருந்தாதான் பேசணுமா?”

 

“…”, ‘என்னடா ஆச்சு?  திடீர்னு போனைப் போட்டுக் கேட்டா பதறுதுல்ல’

மனைவி அமைதி காக்கவே, “நான் திருச்சிலதான் இருக்கேன்.  வந்து பிக்கப் பண்ணத்தான் கேட்டேன்”, நந்தா

 

மற்ற நேரமாக இருந்திருந்தால் சரியென்றிருப்பாள் அதிதீ.  ஆனால் ரம்யாவும்  உடன் இருக்க, தயங்கியவள், “இல்லை… ஆஃபீஸ் ஸ்டாஃபோட வந்திருக்கேன்.  நீ கிளாஸ் முடிச்சிட்டு வா.  நான் பஸ்ஸூல வீட்டுக்குப் போறேன்”, என்க

 

மனைவியின் பதிலில் வந்த கோபத்தில் அழைப்பைத் துண்டித்திருந்தான் நந்தா.

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!