VVO20

VVO20

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 20

 

தாயைக் கண்டதும், பொக்கை வாய்ச் சிரிப்போடு பாய்ந்து வந்திருந்தான் முகில்.

 

வந்தது முதலே தாயை விடாமல் அன்பால் திணறச் செய்தான் மகன்.  மகனின் தேடலில் ஓய்ந்து போன மனமும், உடலும் உத்வேகத்துடன் குதூகலமாக மாறியிருந்தது.

 

‘முகில் அம்மாவ ரொம்பத் தேடுனீங்களா!’, என மகனிடம் கேட்டவளின் கேள்விக்கு தனது செயலாலேயே ஆமோதிப்பைத் தந்து பதில் கூறினான்.

 

முகிலோடு தனது ஒரு நாள் பிரிவைப் போக்க நேரம் செலவளித்து, உணவளித்து உறங்கச் செய்துவிட்டு, அலைச்சல் காரணமாக எழுந்த அயர்வில் விரைவாகவே உறங்கச் சென்றாள் அதிதீ.

 

முகிலை பெரும்பாலும் கௌசல்யா தன்னுடைய மேற்பார்வையில் இரவில் வைத்துக் கொள்வார்.

 

வேலைக்கும் சென்றுவிட்டு, இரவிலும் கண் விழித்தால் மகளுக்கு உடல் நலன் கெடும் என நினைத்து, அதிதீ பணிக்குச் செல்லத் துவங்கியது முதலே முகிலை தனது பொறுப்பில் வைத்துக் கொள்ளத் துவங்கியிருந்தார் அந்தத் தாய்.

 

அதனால், மகனை தாயிடம் ஒப்படைத்துவிட்டு அறைக்குள் வரவும், அதேநேரம் நந்தாவின் வண்டிச் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

 

கௌசல்யா, “அதீ, மாப்பிள்ளையோட வண்டிச் சத்தம் மாதிரி கேக்குது.  போயிப் பாரு!”, என்றதுமே வெளியில் சென்றாள் பெண்

 

முகத்தை உம்மென்று வைத்தவாறே, அதிதீயை கண்டு கொள்ளாமல் வண்டியை சிவனே என நிறுத்திவிட்டு வந்தவனை யோசனையோடு பார்த்தபடியே, ‘மலையேறிட்டான் போலயே!  இவனை சமாதானம் பண்ணறதுக்குள்ள தாய்க்கிழவி முன்ன என்னைய மாட்டி விட்ருவானோ!’, எனும் ஐயம் உள்ளத்தைக் கவ்வ, கதவைப் பூட்டிவிட்டு நந்தாவின் பின்னோடு வந்தாள்.

 

நந்தாவை குறை சொல்லும் எண்ணமே வராத அளவிற்கு இதுவரை நடந்து கொண்டிருந்தவனை சமீப காலத்திற்குள்ளேயே ஓரளவிற்கு கணித்திருந்தார் கௌசல்யா.

 

அதனை அதிதீ மறுத்து, “உங்க முன்ன நல்லவன் வேசம் போடறான்.  நீங்க அவனுக்குத்தான் சப்போர்ட் பண்றீங்க”, என நந்தாவைப் பற்றிக் கூற வந்தாலும், மகளைத் திட்டி வாயை அடைத்துவிடுவார் கௌசல்யா.

 

நந்தாவை நோட்டம் விட்டவாறு மெல்லிய குரலில், “என்னடா சாப்பிடுறியா?”, எனக் கேட்க

 

கண்டு கொள்ளாமல் சென்றவனையே பார்த்தவாறு நின்றிருந்தவளை, “என்ன அதீ, மசமசன்னு நின்னுட்டுருக்க.  வந்த புள்ளைக்கு குடிக்க எதாவது முதல்ல குடு.  அடுத்து ஆகவேண்டிய வேலைய வேகமா பாரு.  போ போயி சாப்பாடு எடுத்து வையி!”, என கௌசல்யா அறைக்குள் இருந்தபடியே வெளியில் எட்டிப் பார்த்து மகளை விரட்ட

 

“இதோ வைக்கிறேன்மா”, என்ற அதிதீயின் சத்தத்தோடு

 

“சாப்பிட்டுத்தான் வரேந்தை!”, என மாமியாருக்கு பதில் தந்தவன், முகத்தைத் திருப்பிக் கொண்டே, “எனக்கொன்னும் வேணாம்!”, என துணைவிக்கு பதில் சொன்னான்.

“முகில் தூங்கீட்டானா?”, என கௌசல்யாவைப் பார்த்து வினவ,

 

“அவங்கம்மா வந்ததுல இருந்து ஒரே ஆட்டம்.  அதுலயே அசந்து சீக்கிரமாத் தூங்கிட்டான் இன்னைக்கு”, என கௌசல்யா கூறியதுமே, அங்கிருந்து அகன்றவன் சட்டையை கழற்றியபடியே அதீதீயின் அறைக்குள் நுழைந்திருந்தான்.

 

‘ரொம்பத்தான் பண்ணுது பயபுள்ளை இன்னிக்கு!  எப்பவும் இங்க வராது.  இன்னைக்கு என்னானு தெரிலையே!  ஒரு வேளை அவங்கூப்பிட்டதுக்கு நான் வரலைங்கற கோபத்துல இஞ்சி தின்ன மங்கி ஃபேஸ் மாட்டிட்டு தெரியுறானோ!’, என யோசித்தவாறே அடுக்களைக்குள் அசதியோடு நுழைந்தாள் அதிதீ.

 

உணவு உண்டதாக நந்தா கூறியதைக் கேட்டு அத்தோடு தான் உறங்கச் சென்றால், அடுத்து தாய் தன்னை பாலைக் காய்ச்சி நந்தாவிற்கு கொடுக்கச் சொல்லி தன்னைக் காய்ச்சுவார் என யூகித்தவள், மிதமான சூட்டில் பாலைக் காய்ச்சி எடுத்து வந்தாள்.

 

நந்தாவிடம் கையில் இருந்ததை நீட்ட, அதைக் கண்டு கொள்ளாமல் தவிர்த்து, இரவு உடைக்கு மாறிவிட்டு, சுத்தம் செய்து கொள்ள அவர்களது அறைக்குள்ளிருந்த வாஷ் ரூமிற்குள் நுழைந்திருந்தான்.

 

அங்கிருந்த டேபிளின் மீது பாலை வைத்துவிட்டு, ‘ரொம்பப் பண்றானே! உனக்கு இப்ப என்னதான் பிரச்சனை.  எனக்கு கண்ணைக் கட்டுதுடா!’ என எண்ணியபடியே மகனுக்கு வேண்டியதை தாயின் அறைக்குள் எடுத்து வைத்ததை ஊர்ஜிதம் செய்து கொண்டு, இன்னபிற வேலைகளையும் சரிசெய்துவிட்டு, தங்களது அறைக்குள் வந்திருந்தாள்.

 

அதிதீக்கு ஆச்சர்யம்.  முந்தைய தினம் தான் வீட்டில் இல்லை என்பதால் மகனுக்காக வந்து தங்களது வீட்டில் நந்தா தங்கியிருக்கிறான் என்று நினைத்திருக்க, இன்றும் இங்கு இரவு வந்ததை பெண்ணால் நம்ப முடியவில்லை.

 

‘அவங்கம்மாகிட்ட என்ன ரீலு விட்டானோ தெரியலை!’, என எண்ணியவாறே, அயர்ச்சி இருந்தாலும், நந்தாவைப் பார்த்ததில் ஏதோ புத்துணர்வாய் மனம் உணர மகிழ்ச்சியும், நந்தாவின் அமைதியில் மனக்குழப்பமுமாக அறைக்குள் நுழைந்தாள்.

 

அறைக்குள் வந்து கதவைத் தாளிட்டபின் படுக்கைக்கு வந்தவளை  பார்த்தபடியே, கையில் இருந்த அலைபேசியிலும் கவனத்தைப் பதித்திருந்தான் நந்தா.

 

நந்தாவின் அமைதியைக் கலைக்க எண்ணி, “என்ன நந்தா?  திடீர்னு இந்தப் பக்கமா காத்தடிக்குது?”

 

“…”

 

“என்னாச்சு?”

 

“…”

“ரொம்பத்தான் பண்றடா நீயி!”

 

“யாரு? நீயா இல்லை நானா?”, என ஒதுக்கத்தோடு பதிலுக்கு பதிலாக வினவினான்.

 

“சரி. சரி. விசயத்துக்கு சீக்கிரமா வா!”

 

“ம்ஹ்ம்… உனக்கெல்லாம் வர வர ரொம்ப ஏத்தம்டீ!”

 

“என்ன அளந்து பாத்த மாதிரிச் சொல்ற?”, எனச் சன்னச் சிரிப்போடு கேட்டாள்.

 

“ம்ஹ்ம் அதைத்தான் எங்கண்ணால பாக்கறேனே!”

 

“கண்ணுலயே அளக்குற மெஷின்லாம் வச்சிருக்கியாடா…! ஏத்தம் எவ்வளவுனு சொல்லேன்.  நானும் தெரிஞ்சிக்கறேன்!”, எனது தனது உடலை குனிந்து பார்த்து நந்தாவிடம் கேட்க

 

“…”, முறைத்தவனைப் பார்த்து

 

“என்ன ஒரு நூறு ஏக்கர் இருக்குமா!”, என சிரித்தபடியே பெண் கேட்டாள்.

 

“ஆசையா வந்து கூப்பிட்டுக்கறேன்னு சொன்னா, சரினு எங்கூட கிளம்பி வராம… என்னமோ வழி தெரியாத குழந்தை உங்கூட வந்தது வழி மாறிப் போயிரும்னு அதுக்காக என்னை டீல்ல வீட்டல்ல!”, என ஆற்றாமையோடு கேட்க

 

“அதானா! நாங்கூட என்னவோ ஏதோனு பயந்துட்டேன்!”, என இதுக்குத்தான் இவ்வளவுமா என்பதுபோல அதிதீ கேட்க

 

இன்னும் நந்தாவின் மனது நொந்து போயிருக்க, “என்ன அதானா?  அது எவ்வளவு பெரிய விசயம்னு உனக்குப் புரியவே இல்லையா?”, நிதானமாகவே கேட்டான்.

 

“நந்தா கூல்!  எனக்கு அங்க அசைன் பண்ண வர்க்ல இருந்து அப்பத்தான் வெளிய வந்திட்டுருந்தேன்.  நீ கூப்பிட்டதும் எப்டி உங்கூட உடனே கிளம்பி வர முடியும்.  என்னோட நிலமையில இருந்து யோசிச்சுப் பாரு!”

 

“எல்லாத்தையும் யோசிச்சுத்தான் சொல்லுது!”, என கடுப்போடு கூற

 

“என்னத்தை அப்டி யோசிச்ச!”

 

“போடீ…! வர வர நீ முன்ன மாதிரியில்ல!”, என

 

“ஆமா.. முன்ன ஒரு அம்பது கிலோ இருந்தேன்.  இப்போ அறுவத்தி ரெண்டு கிலோனு நினைக்கிறேன்”, யோசித்தவாறு கூற

 

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்.  நீ என்ன சொல்ற.. என்னடீ லந்தா…!”, என கோபக்கனலோடு சத்தம் கூட்ட

 

அதிதீக்கு நந்தாவின் அலுவலகத்திற்கு நேரில் சென்ற அன்று தன்னைக் கண்டு கொள்ளாமல் அலைக்கழித்தது அந்நேரம் நினைவில் வந்திட, “நல்லாத்தான் யோசிக்கற…! யாரு லந்து பண்றா? நான் அன்னிக்கு வந்து பேசினப்போ இந்த யோசனையெல்லாம் எங்க போயிருந்துச்சு!”

 

“அப்ப அதுக்கு சரிக்கு சரி பழி வாங்கணும்னுதான் நான் கூப்பிட்டதுக்கு வரலையா!”, நந்தா

 

“நீயும் உன் கண்டுபிடிப்பும்!  இப்ப எங்கூட சண்டை போடத்தான் வந்தியா?”

 

“பேச்சை மாத்தாதடீ”, என முறைத்தபடியே பெண்ணை பார்த்திருந்தான்.

 

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு முதல்ல!”

 

“நீ டீச்சராயிருக்கலாம்!”

 

“கேட்டதுக்குப் பதில் பேசுடா!  உங்களுக்கு மட்டும் கோபம் கோல்கொண்டா அளவுக்கு வரும்.  எங்களுக்கு கோலிகுண்டு சைஸ்கு கூட வரக்கூடாதா?  இல்லை தெரியாமத்தான் கேக்கறேன்.  வேலை மெனக்கெட்டு காலையில வேலைக்கு போற அவசரத்துல தேடிவந்து பேசுனா… எப்டி ரியாக்ட் பண்ண அன்னிக்கு?  நியாபகம் இருக்கா இல்லையா!  நீ செய்யறது எல்லாம் சரி.  அதையே நான் செஞ்சா தப்பா? எந்த ஊரு நியாயம்டா இது!  எனக்கு இருக்கற வேலை டென்சன், அதோட நம்ம முகிலைப் பாக்கறது.  அத்தோட என்னால வீட்டைப் பாக்க முடியலைன்னு சொன்னா கன்சிடர் பண்றேன்னு சொல்லக்கூட துப்பில்லை உனக்கு.   பெருசா பேச வந்திட்டான்”, என அதிருப்தியோடு அங்கிங்கு இறைந்து கிடந்த முகிலின் பொருள்களை உரிய இடத்தில் எடுத்து வைத்தபடியே,

 

“போன் பண்ணாதான் எடுக்கலை.  ரொம்ப வேலையா இருக்கபோலனு நேருல வந்தா.. என்னமாதிரி ரியாசன்டா அது!  என்னமாதிரி நிலைல அன்னிக்கு அங்க வந்தேன்னு தெரியுமா உனக்கு? ஒருத்திட்ட கெஞ்சி எம்புருசன் ஆபிஸ்ல கொண்டுபோயி விடுன்னு கேட்டு தேடி வந்தா… பெரிய அப்பாடக்கரு கணக்கா மூஞ்சை தூக்கி வச்சிட்டு… கிளம்பற வரை படங் காமிக்கற!  வெளிய வந்து திரும்பிப் பாத்தா மறைஞ்சு நின்னு போறவளையே பாத்திட்டுருக்க! கல்யாணத்துக்கு முன்ன என்ன கத்தினாலும் கண்டுக்காம முன்னாடி வந்து ஈனு நிப்ப.  ஆனா இப்ப அப்டியே உல்டாவா மாறிட்ட! நேருல வந்தவகிட்ட பேச உனக்கு அவ்ளோ ஈகோ! புதுசா எதுவும் கொம்பு கிம்பு முளைச்சிருச்சோ!”, என்று நந்தாவின் தலையைப் பார்த்தபடியே கத்திட

 

“அப்டியில்லடீ..!.”, மாறான அமைதியோடு பகின்றவனிடம்

 

“வேற எப்டி? சொல்லு! தில்லானா மோகனாம்பாள்ல வர சிவாஜின்னு நினைப்பாக்கும்.  நாங்க பத்மினி.. இவரு மறைஞ்சு நின்னு பாக்கறதைப் பாத்து மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன… கலை அழகா இல்லை கண்றாவி அழகானு பாடஅஅஅ…!”, என விடாது பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்திருந்தவனுக்கு பழைய அதிதீயின் ஞாபகம் வந்திட அவனது அத்தனை பிடிவாதம், வரட்டு கௌரவம், கோபம் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்திருக்க, சிரிப்பு தோன்றியிருந்தது.

 

ஆனால் பெண்ணோ எதனையும் கண்டு கொள்ளாது தொடர்ந்திருந்தாள். “…லூசு! எருமை! நீயா எதாவது நினைச்சிட்டு மூஞ்சைத் தூக்கி வச்சிட்டு சுத்துனா எனக்கு எப்டித் தெரியும்.  நான் என்ன பிரச்சனைனு தெளிவா எடுத்துச் சொல்லிட்டேன்.  அதுக்கும் மேலயும் மூஞ்சை கிரேன் மாதிரி தூக்கி வச்சிக்கிட்டா! ஏற்கனவே பனை மரத்துல பாதியிருக்க.  அதுக்கு மேல உம்மூஞ்சிய தூக்கி வச்சிகிட்டுத் தெரிஞ்சா எனக்கு என்னானு எப்டித் தெரியும்.  இல்லை உன்னோட பெர்ஃபாமன்ஸ் பாத்து பயந்துருவேன்னு எதாவது எண்ணமா!  அதுக்கெல்லாம் வேற ஆளைப்பாரு!”, என்றவள்

 

“…எல்லா கோக்கு மாக்கு வேலையும் நீ பாத்திட்டு, அப்புறம் ஒன்னுமே நடக்காத மாதிரி நீ வான்னு கூப்பிட்டா மானம் ரோசம் கெட்டு உம்பின்னாடியே வந்திரனுமா?  இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்!”, என்றவள் சற்று நிதானித்து

 

“அப்டியே நீ வான்னா எல்லாத்தையும் போட்டது போட்டபடியே போட்டுட்டு உம்பின்னாடியே இப்ப வர முடியுமா? எங்கப்பாவோட பேங்கா.. இல்லை உங்க பாட்டன் பூட்டன் பேங்கா!  யோசிக்க வேணாம்.  அறிவ எங்கடா போயி அடமானம் வச்ச?”, என்றவள்,

 

தீர்க்கமாகவே, “வரலாம் இனி முடியாது.  எனக்கும் நிறைய ரெஸ்பான்சிபிலிட்டீஸ் இருக்கு.  எல்லாத்தையும் யோசிச்சுத்தான் என்னால ஒரு முடிவுக்கு வர முடியும்.  சும்மா தலையை செம்மறி ஆடு மாதிரி ஆட்டிக்கிட்டு உம்பின்னாடியே வரலாம் இனி வாய்ப்பே இல்ல!”, என மூச்சு விடாமல் பேசிவிட்டு நந்தாவைப் பார்க்க சிரித்தபடியே பார்த்திருந்தான்.

 

“நான் பேசுறது உனக்கு அவ்வளவு சிரிப்பா இருக்கா?”

 

“சேச்சே… சந்தோசமா இருக்கு!”

 

“ஏன் சொல்ல மாட்ட..!”, என்றவள் நந்தாவின் தோற்றத்தையும், அவனது மாற்றத்தையும் கண்டு, ‘ரொம்பப் பேசிட்டமோ!  ஐயே… இப்ப இவன் ஏன் இப்டி சிரிக்கிறான்.  ஒன்னுமே புரியலையே’!, என்கிற குழப்ப மேகம் சூழ்ந்திட,

 

“நீ  பண்ணதுல நான் பேச வந்ததுலாம் மறந்து போயிருச்சு எருமை!”, என்றபடியே தலையணையை எடுத்து நந்தாவை அடித்து தன்னை நிதானிக்க முயன்றாள்.

 

அதைத் தடுத்தபடியே, “பேசி முடிச்சிட்டியா? இல்ல இன்னும் பெண்டிங் வச்சிருக்கியாடீ?”

 

“இன்னும் நிறைய இருக்கு.  ஆனா பேசத்தான் முடியலை!  ரொம்ப டயர்டா இருக்குடா!”, என முகத்தைச் சுருக்கி தனது இயலாமையை வெளிப்படுத்தியபடியே இதுவரை ஒன்றுமே தான் பேசவில்லை என்பதுபோல கூற

 

“எம்புட்டு காண்டுடீ எம்மேல.  இப்டி ஊசிப்பட்டாசு மாதிரி வெடிக்கற!”, என்றபடியே நின்றிருந்தவளை தனதருகே பிடித்து இழுக்க

 

கையை நந்தாவின் கையில் இருந்து தனது கையை வெளியே இழுத்தவள், “ஒன்னும் வேணாம்.  உங்கூட இப்பத்தான நான் சண்டை போட்டேன்.  போடா!”, என்றபடியே வார்ட்ரோபைத் திறந்து அங்கிருந்த பெட்சீட், தலையணையை எடுத்து கீழே போட

 

“எங்கூட சண்டை போட்டாலும், சமாதானம் ஆனாலும் தப்பில்லை.  வேற யாருகிட்டடீ இதையெல்லாம் செய்ய முடியும்!”, எனச் சிரித்தவன், நின்றபடி விரிப்பவளின் பின்னோடு வந்து சேர்த்து அணைக்க,

 

“விரிச்சிட்டுருக்கும்போது என்னடா பண்ற?”, விலக்க

 

சற்று விலகியதுபோல அவளை உரசிக் கொண்டு நின்றிருந்தவன், அவள் விரித்ததும் அதில் வந்து படுக்க

 

“எதுக்குடா எம்புட்டுல வந்து படுக்கற?”, என சிறுபிள்ளைபோல அவனைத் தள்ளிவிட

 

“இவ்வளவையும் இத்தனை நாளு மனசுக்குள்ளயே வச்சிட்டுருந்துட்டு சரியான நேரம் பாத்து எடுத்து வீசிட்ட அப்டித்தான!” , என்றபடியே படுக்கையில் படுத்தபடியே தன்னைத் தள்ளியவளை இழுத்தணைத்திட முயற்சிக்க

 

“என்னத்தை வீசுனாங்க!”, என்றவாறே நந்தாவின் புன்னகை தோய்ந்திருந்த வசிய முகத்தைப் பார்த்து, “…முகத்தை பெரிய இவரு கணக்கா தூக்கி வச்சிருந்ததை எங்கடா அதுக்குள்ள கொண்டு போயி மறைச்சு வச்ச?”, என எதுவுமே நடவாததுபோல இருந்த நந்தாவைப் பார்த்துக் கேட்டாள் அதிதீ.

 

“ரெண்டு பேருமே ஒரே மாதிரி கத்தினா, அத்தை எந்திருச்சி வந்திர மாட்டாங்களா?”

 

“அப்ப அதுக்குத்தான் இப்ப அடக்கி வாசிக்கிறியா?”, எனக் கேட்டவளை சிரித்தபடியே தன்னோடு இழுத்தணைத்து, “கோபமாத்தான் வந்தேன்.  பழைய அதிதீய பாத்தவுடனே எல்லாம் அப்டியே மாறிடுச்சு”, என்றபடியே மூச்சு முட்ட இதழ் பதித்திட, அதுவரை இருவருக்கும் இடையே இருந்த பனிப்போர் சட்டென்று முடிவுக்கு வந்திருந்தது.

 

“நல்லா முத்தா குடுத்தே அப்பனும் மயனும் என்னை ஏமாத்திறீங்கடா?”

 

“என்னடீ சொல்ற?”

 

“நேத்து நான் முகிலைப் பாக்கலைல!  வந்ததும் உம்மகன் ஜொல்லு முழுக்க எம்முகத்துலதான்.  எங்கம்மா டீ போட்டு வந்து, ஏண்டி முகத்தைக் கழுவினா துடைக்கக் கூட இன்னும் துண்டு எடுத்துத் தரணுமானு திட்டுறாங்க”, என அந்நிகழ்வை எண்ணிச் சிரித்திட

 

இணைந்து சிரித்தவன், “வேற வழி எங்க ரெண்டு பேருக்கும் தெரியலையேடீ!”

 

“கில்லாடீங்கடா!”

 

“இதுக்கே இப்டிச் சொன்னா… அடுத்தடுத்து நடக்கப் போறதைப் பார்த்து என்ன சொல்லுவ…!”

 

“தள்ளிப் படு முதல்ல. இல்ல மேல போயிப்படு”

 

“உம்மேலயா..”, எனக்கேட்டு அந்நேரத்தில் பெண்ணது மேனியை சிலிர்க்கச் செய்தவனை கையாலேயே மொத்தினாள். 

 

“ஏண்டா இப்டி க்ரீனா பேசி உசிர வாங்குற!”

 

“உண்மையச் சொல்லு, நான் இப்டிப் பேசறது பிடிக்கலைனு”, எனக் காது மடலோடு இதழ் தீண்டக் கேட்டவனை

 

“முடியலைடா… பெட்ல போயி படுடா!”, எனத் தள்ளினாள்.

 

“முடியாது”, என தீர்க்கமாக பெண்ணை தன்னோடு அணைத்தபடியே படுக்க 

 

“இப்டியே எதனா பேசி என்னை மெஸ்மரைஸ் பண்ற.  நானும் எல்லாத்தையும் மறந்து ஈஈஈஈனு உம்பின்னாடியே வந்திரேன்”, என நந்தாவின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நந்தாவை விரட்ட

 

“ரொம்பப் பண்ணாதடீ!  நானே ரொம்ப டென்சன்லதான் நாலு நாளா உன்னைத் தேடுறேன்!”

 

“அதான…! என்னடா பய ரவுடியா மாறி வாலண்டியரா வண்டில ஏறுறான்னு பாத்தேன்!”, என்க

 

“ரவுடியோட அடாவடிய இப்பப் பாரு!”, என பேச்சில் வம்பு வளர்த்தவளை, பேச விடாமல் முற்றுகை இட்டவன், நீண்ட நாளுக்குப்பின் சோமபானம் இல்லாமலேயே காமனின் விளையாட்டில் மயங்கிக் கிடந்தான்.

 

மயங்கிய உள்ளங்கள்

மனக்கிலேசங்களை

மறந்து போனது!

 

மஞ்சத்தில் சஞ்சரித்த

மனம் – தடுமாற்றங்களை

மறைத்து

மனமொன்றிப் போனது!

 

மையலோடு மனம் சங்கமித்திருக்க, மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச கோபமும் போயிருக்க, மனம் குழந்தையைப்போல தெளிவாகியிருந்தது இருவருக்கும்.

 

அன்பு இரவுநேர விண்மீனோடு போட்டுபோட்டுக் கொண்டு மிளிர்ந்திட, கடந்து போன அனைத்தும் கசடான கனவாகவும், நடப்பது மட்டுமே நிதர்சனம் என்பதுபோலவும் மனம் ஏற்றுக் கொண்டு இருவரையும் ஏமாற்றிக் கரை சேர்த்திருந்தது.

 

ஊடலுக்குப்பின் கூடலில்தான் எத்துனை நிம்மதி!

உரசலில் உள்ளத்துத் தீ

உலைபோல பற்றியெரிய

உளமெங்கும்

உலாவிய அதிருப்திகள் அதில் பஸ்பமாகிட

உணர்வெங்கும்

உல்லாசக் கொண்டாண்டங்கள்!

………………………..

விடியல்வரை பெண்ணை உறங்க விடாமல் பலகதைகள் கூறியவன், விடியலில் உறங்கியிருந்தான்.

 

அனைத்தும் மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்திட, எல்லாவற்றையும் வழமைபோல அமைதியாகக் கேட்டுக் கொண்டவள் நந்தாவின் மாற்றத்திற்கான காரணத்தை யூகித்திருந்தாலும் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.

 

நந்தாவின் தங்கை கீதா மற்றும் அவளது கணவர் இங்கேயே வந்து தங்கியதை அறிந்து கொண்டவள், எந்த மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கிறார்கள் என்பதை மட்டும் கேட்டறிந்து கொண்டாள்.

 

காலையில் எழுந்ததும், வங்கிக்கு  செல்ல வேண்டுமே என அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் அதிதீ.

 

ஓரளவிற்கு பெண்ணின் நிலையை யூகித்தவர், பேரனுக்கு வேண்டியவற்றை கவனித்துவிட்டு, பெண்ணுக்கு வேண்டியவற்றையும் எடுத்து வைத்திருந்தார் கௌசல்யா.

 

மகளின் சோர்ந்த தோற்றத்தில், “ரெண்டு நாளு அங்கிட்டும் இங்கிட்டும் அலைஞ்சதுல ரொம்ப சோந்து திரியறடீ.  முடிஞ்சா இன்னிக்கு லீவு போடேன்”, என்க

 

“எனக்கு லீவு இல்லமா!  எல்லாத்தையும் எடுத்தாச்சு.  அதனால போயித்தான் ஆகணும்.  ஆனா பர்மிசன் சொல்லிருக்கேன்”, என்றபடியே கிளம்பினாள் அதிதீ.

 

அறைக்குள் நுழைந்ததும், அணைத்து கழுத்தில் வாசம் பிடித்து, முத்தமிட்டவனை தன்னிடமிருந்து விலக்கியவள், “என்ன நந்தா.. இப்ப என்னைக் கொண்டு விடுவியா இல்லையா!”

 

“ம்ஹ்ம்… கொல்லுறடீ!”, என்றபடியே மயக்கத்தில் நின்றிருந்தவனிடம், “இப்டியே பேசிட்டுரு!  நானே உன்னைக் கொல்றேன்”, என வம்படியாக நகர்ந்தவள்,

 

“நீ வேலைக்கு ஆகமாட்டபோல.. நான் கிளம்பி ஆட்டோவுல போயிக்கறேன்!”, என வேகமாக அறையைவிட்டு அகன்றவளை முறுவலோடு பின்தொடர்ந்தான் நந்தா.

 

ரம்யாவிற்கு முன்பே அழைத்து தான் பர்மிசன் என்பதைக் கூறியிருந்தவள், பதினோரு மணிக்கு நந்தாவோடு வங்கிக்குச் சென்று இறங்கினாள்.

 

அடுத்து வந்த டீ பிரேக்கில், “யாரு அதீ அது.  உங்கள வந்து ட்ராப் பண்ணது உங்க ப்ரோவா?” எனக் கேட்ட ரம்யாவிடம் என்ன கூறினாள் அதிதீ?

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!