VVO21

VVO21

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 21

 

வீட்டிற்கு வந்து முகிலோடு நேரம் செலவளித்த அதிதீயிடம் கௌசல்யா, “இன்னைக்கு அண்ணன், அதான் உங்க மாமனார் பேரனைப் பாக்க வந்திருந்தார் அதீ”

“கரெக்டா மாசம் ரெண்டு தடவை இந்தப் பையலைப் பாக்க வந்திறார்லம்மா!”, என ஆச்சர்யமாக வினவ

அதிதீயை இதுபோல தாயின் வழி உறவுகளோ, தந்தை வழி உறவுகளோ பாசத்தோடு பார்க்க வந்ததாக நினைவில் இல்லை.

அதனால் முனியாண்டியின் செயல் பெண்ணுக்கு ஆச்சர்யத்தைத்தான் தந்தது.

“நல்ல மனுசன்.  நீயும், உன் வீட்டுக்காரவரும் ஊருக்குப்போனா, அப்டியே கோவிலுக்குப் போயி அவரையும் பாருங்க.  வயசானவரு, இன்னும் தனியா கிடந்து எதுக்கு கஷ்டப்படணும்.  முன்னைவிட ரொம்ப ஓஞ்சி தெரியறாரு, மாப்பிள்ளை இல்லைனா, அவங்கம்மா யாராவது எடுத்துச் சொல்லக்கூடாதா?”. சகோதர வாஞ்சையோடு கௌசல்யா கேட்க

“அவரை இங்க இருக்க சொன்னா இருக்க மாட்டிங்கராறாம். ஏதோ முடியாமப்போனதால இவ்வளவு நாளு வந்து இங்க இருந்திருக்கார்.  இல்லைனா ஒரு இடத்தில இருக்கறவரே இல்லையாம்.  இந்த வயசிலயும் தனியாப்போயி கோவிலை பராமரிச்சிகிட்டு, அவரே சமைச்சி சாப்பிட்டுகிட்டு, மத்த வேலையும் பாத்திட்டுருக்கறதுதான் நிம்மதியா இருக்குங்கறார்.   அதுக்குமேல அவரை வற்புறுத்த முடியாது.  அவரா வந்தா சரிதான்மா!”, என்று கடந்திருந்தாள்.

மகள், மருமகன் பேரன் என உடன் இருப்பது கௌசல்யாவிற்கு இதமான உணர்வோடு பழையதை நினைக்காமல் வளைய வந்தார்.

பகல் முழுவதும் பேரனோடு பொழுதுகள் இனிமையாகவே சென்றது.

தொடர்ச்சியான விடுமுறை நாள்களில் ப்ரீத்தியும், அவர்களது குடும்பமும் வந்து சென்றது.

அப்படி வரும்போது, இரு மகள்களையும் அழைத்து, ஒவ்வொரு சொத்துகள் பற்றிய விபரங்களைப் பகின்றுகொண்டு, தற்போதைய நிலவரப்படி இருவருக்கும் சரிபாதியாக வேண்டியவற்றை பிரித்து, கௌசல்யாவின் காலத்திற்குப்பின் இருவரும் அதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முன் உயில் எழுத ஏற்பாட்டினைத் துவங்கியிருந்தார் கெளசல்யா.

இரு பெண்களும் மறுத்தும் கௌசல்யா வாயை அடைத்திருந்தார்.

நந்தா மற்றும் ப்ரீத்தியின் கணவர் இருவருமே ஒருமித்த கருத்தோடு செயல்பட்டதால், பிரச்சனைகள் எதுவுமின்றி சுமுகமாகவே சென்றது.

மாற்றம் வேண்டி எப்போதாவது ப்ரீத்தியின் வீட்டிற்கும் சென்று தங்கி வந்தார் கௌசல்யா.

ஆனால் பெரும்பாலும் புதுக்கோட்டையில் இருப்பதையே விரும்பினார்.

பகல் முழுவதும் தனிமை என்பது இல்லாமல், அவரின் பொழுதுகள் முகிலோடு சென்றது.

மாலை அதிதீக்கு வேண்டிய அனைத்தையும் கௌசல்யாவே செய்து வைத்திருப்பதால், முன்பைவிட அதிதீ இலகுவான மனநிலைக்கு வந்திருந்தாள்.

மாலையில் மகனோடு நேரத்தைச் செலவிட, தாயே இரவு உணவுக்கான பணிகளை அவ்வப்போது கவனித்துக் கொண்டார்.

மனைவியின் தயவில் படிப்பை மேற்கொண்டவாறு, பகலில் எஸ்டிமேட், கேட் டிராயிங், எலிவேசன் போன்ற பணிகளை முன்பைக் காட்டிலும் கூடுதலாகவே தனது அலுவலகத்தில் இருந்து பார்த்தான் நந்தா.

வேலை இல்லாத நேரங்களில் மகனோடு பொழுதைப் போக்குவான்.

வங்கிக்கு அதிதீ சென்றபின், கௌசல்யா மதிய வேலைகளைக் கவனிக்கும் பொருட்டு, முகிலை தன்னோடு அழைத்துக் கொண்டு அலுவலகம் செல்வான்.

சில வேளைகளில் காமாட்சி பார்க்க வேண்டுமெனக் கூறினால், அங்கு மகனை அழைத்துச் சென்று வருவான்.

மதிய உணவிற்குப் பின் மகனை மாமியாரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு நெருங்குவதால் படிப்பு என நந்தாவிற்கு நேரம் போனது.

தீனதயாளன் மறைந்த ஒரு வருடம் நிறைவடைந்த பிறகு, மாலை வேளையில் அதிகமாக கோவில் குளம் என செல்லத் துவங்கியிருந்தார் கௌசல்யா.

////////

இரவு படுக்கைக்குச் செல்லும்போது அதிதீக்கு ரம்யாவின் நினைவு மீண்டும் வந்தது.

தனது அழைப்பைப் பார்த்துவிட்டு எப்போதும் அழைப்பவர், இன்று ஏன் அழைக்கவில்லை என்கிற நினைப்போடு, அழைக்க நேரம் பார்க்க, நேரம் இரவு பத்து மணி என்றது.

காலையில் பார்த்தபோது ரம்யா கேட்டது, அதற்குத் தான் பதில் கூறியது, அதன்பின் மாலை வரை பார்க்காதது, உடல்நலக்குறைபாடு என வங்கியில் இருந்து முன்பே கிளம்பிச் சென்றிருந்தது என யோசனையில் வர, ஏதேனும் பிரச்சனையோ எனத் தோன்றியது.

ஆனால் இவை அனைத்தும் தனது பதிலால் வந்த மாற்றம் என்பது அதிதீக்கு தெரிந்திருக்கவில்லை.

அந்த நினைப்போடு, ‘காலையில நல்லாத்தானே இருந்தாங்க’, என டீ டைமின்போது சந்தித்ததை நினைவு கூர்ந்தபடியே படுக்கைக்குச் செல்ல ஆயத்தமானாள் அதிதீ.

 

“உங்கள வந்து ட்ராப் பண்ணது உங்க ப்ரோவா?” எனக் கேட்ட ரம்யாவிடம், “இல்லை, அது உங்க ப்ரோ!”, இயல்பாகக் கூறிவிட்டு, “எனக்கெல்லாம் ப்ரோவே இல்ல!” எனச் சிரித்திருந்தாள் அதிதீ.

அதிதீக்கு அது ரம்யாவிடமிருந்து சாதாரண வினாவாகவே தோன்ற, அதற்குமேல் அதைப்பற்றிச் சிந்தித்தாளில்லை.

குதர்க்கமாக யோசிக்க அவளுக்கு நேரமும் இல்லை.

ரம்யாவிற்கு நந்தா அதிதீயை விட்டுச் சென்றது முதலே மனவாதனைதான். 

இறங்கி நின்ற அதிதீ, நந்தாவிடம் விடைபெற்றபோதுதான் ஏதேச்சையாகக் கவனித்திருந்தாள் ரம்யா.

அனைத்துப் பெண்களுமே, இருசக்கர வாகனத்தில் கணவனுடன் செல்லும்போது தங்களது உரிமையை ஊருக்குப் பறைசாற்றுவதுபோல, பசைபோடாமலேயே முதுகில் ஒட்டிக்கொண்டு, இடுப்பை இறுகக் கட்டிக் கொண்டு, தோளில் கைபோட்டுக்கொண்டு செல்வதில்லையே.

அதேபோலத்தான் அதிதீயும்.  தங்களது அன்னியோன்யம் அனைத்தும் மனதிற்குள்ளும், நான்கு சுவர்களுக்குள்ளும் என வரையறைக்குட்பட்ட செயல்கள்தான் அவளது.

ரம்யா எண்ணுவதுபோல, முன்பே கவனித்திருந்தால் அவர்களுக்கிடையேயான உறவு எத்தகையது என்பதை தெளிவாகக் கணித்திருக்கலாமே என்பதற்கான பதில் அதிதீயின் செயலில் கிட்டியிருக்கவே வாய்ப்பில்லை என்பது தெரியாமல் கவலைக்குள்ளாகி இருந்தாள்.

நந்தாவுமே அதிதீயின்பால் பிரபஞ்ச விதிக்கேற்றாற்போல ஈர்க்கப்பட்டாலும், அதனை பொது இடங்களில் காட்டிக் கொள்ள, நிலைநாட்ட விரும்பமாட்டான்.

தான் விரும்பியது, அதிதீயின் கணவனையா? என்கிற நினைவே ரம்யாவிற்கு கசந்துபோக, அழைத்து வந்து விட்டதால் கணவனாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே, சகோதரனாகவோ, வேறு ஏதேனும் உறவாகக்கூட இருக்கலாமே எனத் தோன்றி, அப்படித்தான் இருக்க வேண்டும் இறைவா என்கிற வேண்டுதலோடு, அதிதீயிடம் கேட்டிருந்தாள்.

ரம்யாவிற்கு அதிதீயின் பதிலில் முகமே கருத்திருந்தது. அதிதீ மற்ற அலுவலக நண்பர்களிடமும் பேசியவாறே தேநீரை அருந்திவிட்டு, தனது மேசைக்கு விரைந்திருந்தாள்.

ரம்யாவை, அவளின் முகமாற்றத்தைக் கவனிக்கவில்லை. அப்படிக் கவனிக்கவும் தோன்றவில்லை.

மதிய உணவின்போதும் ரம்யாவைப் பார்க்கவில்லை.  வங்கியைப் பொறுத்தமட்டில், உணவு நேரத்தில் ஒருங்கே சென்று அனைவரும் உண்ண இயலாது.  இவருடன் மட்டுமே சேர்ந்து உண்ணச் செல்வேன் என யாரும் யோசிப்பதில்லை.

அவரவர் பணிக்கு இடையே, நேரம் ஒதுக்கி இருவர் இருவராகச் சென்று உண்டு வருவர்.

அன்றும் வேறொரு வங்கி அலுவலரோடு சென்று உண்டிருந்தாள் அதிதீ.

மாலை வீடு திரும்பும் வேளைதான் ரம்யாவைத்தேட, அவளின் அருகே உள்ள மேசையில் இருக்கும் சகதோழி, “அவங்க ஹெல்த் இஸ்யூனு லன்ச் அப்பவே போயிட்டாங்களே! உங்கட்ட சொல்லலையா?”, எனக் கேட்க

“இல்லையே மேம்.  தேங்க்யூ”, என்றவள், ‘என்ன பிராப்ளம்னு தெரியலையே’, என அலைபேசிக்கு அழைக்க, அழைப்பு சென்றதே தவிர ரம்யாவால் எடுக்கப்படவில்லை.

‘மிஸ்டு கால் பாத்துட்டு கூப்பிடட்டும்’, எண்ணியவாறே, நந்தாவிற்கு அழைக்க எண்ணி, அவன் வகுப்பிற்கு சென்றிருப்பான் எனத் தோன்ற, தவிர்த்து தனித்தே கிளம்பினாள்.

வெளியில் வரவும், நந்தா அங்கு வரவும் ஆச்சர்யமாக, யோசனையோடு பார்த்தாள்.

அருகே வந்தவளிடம், வழமையான வசியப் புன்னகையோடு, “என்னடீ, என்ன யோசனை?”

“ம்ஹ்ம், நான் உன்னை வரச் சொல்லவே இல்லையே.  எப்டி கரெக்ட் டைமுக்கு பிக்கப் பண்ண வர?”

“வேற ஒரு வேலையா இந்தப் பக்கமா போனேன்.  உன்னைப் பாத்ததும், சரி நம்மாள முதல்ல கவனிப்போம்னு அப்டியே திரும்பி வந்துட்டேன்!”

கணவனது பேச்சில் பிறரறியாமல் முதுகில் செல்லமாக அடி வைத்தவள், “இன்னிக்கு காலேஜ் போகலையா?”

பெண்ணது செல்ல அடியை ரசித்தபடியே, “இல்ல.. செமஸ்டர் ஸ்டார் ஆகப் போகுது.  நேத்துதான் ஹால் டிக்கெட் கலெக்ட் பண்ணிட்டு வந்தேன்”, என்றதும், அதன்பின் அமைதியாக நந்தாவோடு வீடு வந்து சேர்ந்தாள்.

வரும்வழியில், ரம்யாவின் விடுதியைக் கடந்து வரும்போது, ரம்யாவின் நினைவுவர, மிஸ்டு கால் பார்த்துவிட்டு அழைக்கட்டும் என நினைத்தபடியே கடந்திருந்தாள்

ஆனால் இன்றுபோல ரம்யா இதுவரை தனது தவறிய அழைப்பைப் பார்த்துவிட்டு அழைக்காமல் இருந்ததில்லை.

சரி காலையில் எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தபடியே அறைக்குள் நுழைந்தவளை, பின்னோடு அணைத்தவனைக் கண்டவள், “எக்ஸாம் இருக்குனு சொல்லிட்டு, இப்ப இங்க என்னடா பண்ணிட்டு இருக்க!”

“அதுக்கும், இதுக்கும் என்னடீ சம்பந்தம்!”

“இருக்கு! இதே நினப்புல அரியர் வச்சு கோட்டை விட்ட, கொன்னுறுவேன்!”

“செய்வடீ!”, என்றவன், “கோட்டை விடக்கூடாதுன்னா, இப்ப நான் சொல்றதக் கேளு!”, என கிசுகிசுத்தவன், மறுத்தவளிடம் மன்றாடி, மனதில் உள்ளதை அடுத்தடுத்து எடுத்துச் சொல்ல, அதைக் கேட்டவளுக்கு நாணமோ ஏதோ ஒன்று உடலில் தோன்றிக் கூசியது.

“அம்மாடீ! என்னடா இப்டியெல்லாம் பேசற! ச்சீய்ப் போடா…!”, என்ற அதிதீயின் குரலில் வெட்கமும், நாணமும் மிகுந்திருந்தது.

கூச்சம் எனும் உடல்மொழி வெளிச்சத்தின் துணையோடு, மனைவியின் அண்மையில் குளிர்காய்ந்தான் நந்தா.

அதேநேரம் அவனது நினைவோடு, சென்னையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

——————–

அதிதீயின் பதிலில் உலகமே இருண்டது ரம்யாவிற்கு.

எதனையும் இலகுவாக எடுத்துக் கொள்பவளால், நடப்பை, அதிதீ கூறியதை ஏற்க இயலாமல் மனம் தவித்தது.

யோசிக்க தனிமை தேவையாக இருந்தது.

அலுவலகத்தில் இருந்து விடுதிக்கு வந்தவள் நடந்தவற்றை மனக்கண்ணில் கொண்டு வந்திட, தொடர்ச்சியாக இல்லாதபோதும், இரண்டொரு நாளுக்கு ஒரு முறையோ, அல்லது சில நாள்களில் தொடர்ச்சியாகவோ வங்கிக்குச் செல்லும் வழியில் தன்னைப் பார்த்தவனைப் பற்றியே சிந்திக்கத் துவங்கியிருந்தாள்.

மதியம் முதல் ஒவ்வொரு நிகழ்வையும் யூகித்தவளுக்கு, அதிதீயையே அவன் காண வந்திருக்கிறான் என்பது பட்டவர்த்தனமாகத் தெளிவாகியிருந்தது.

தன்னை முட்டாளடித்த, கடந்த காலத்தை எண்ணி துயருற்றாள்.

தன்னைப் பார்க்க வரவில்லையென்றால், அவனது மனைவியை ஏன் சாலையில் நின்று அவ்வாறு பார்க்க வேண்டும் என்கிற வினா எழ, புரியவில்லை.

காதல் திருமணம் செய்தவன், திருமணத்திற்குப் பிறகு இதுபோல பின்னோடு சுற்ற என்ன முகாந்திரம் இருக்க வாய்ப்புள்ளது என யோசித்து யோசித்து ஓய்ந்தாள்.

‘ஒரு வேளை இதுவும் ஒரு வகை மேனியாவோ!’, எனத் தோன்றியது.

புரியாததைப் பற்றி யோசித்து, வீணாக நேரத்தை செலவளிப்பதைவிட, தன்னால் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ள இயலுமா என யோசித்தவளுக்கு, அந்த யோசனையே வெறுத்து வந்தது.

வேறொருத்தியின் கணவன் என்றாலும், அவனை தன்னால் விட்டுத்தர முடியாது என்கிற முடிவுக்கு வந்தாள் ரம்யா.

ஒருவன் தன்னை காலத்திற்கும் சுற்றினால் எந்தப் பெண்ணுக்குமே மகிழ்ச்சிதானே!

‘மேனியாவா இருந்தா என்ன? அவன் மேன்லியா இருக்கான்.  எனக்கு அதுபோதும்’, என்பது மட்டுமே ரம்யாவின் மனதில் பதிந்திருந்தது.

தனக்கு பிடித்த ஒவ்வொரு பொருள்களையும் இதுவரை பெற்றோரிடம், பிடிவாதமாக வாங்கி பயன்படுத்திய குணம் இங்கும் அவளை அதைப்போலவே செய்யத் தூண்டியது.

இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்தவள், சென்னைக்குச் செல்லத் திட்டமிட்டாள்.

அடுத்த நாள் வீட்டிற்கு வந்தவளின் முகமே, ஏதோ சரியில்லை எனத் தோன்றிட, பெற்றோர் உடல் உபாதையா, வேறு என்ன பிரச்சனை எனக் கேட்டாலும் அமைதியே பதிலாக இருந்தது.

வந்தது முதலே யோசனையோடு இருந்தவள், உணவு வேளையின்போது பெற்றோரிடம், “எனக்கு அங்க ஒருத்தவனைப் பிடிச்சிருக்கு.  நான் இன்னும் என்னோட மனசை அவங்கிட்ட சொல்லலை.  ஆனா சீக்கிரமே சொல்லிருவேன்.  நீங்க என்ன பாடுபட்டாவது அவங்கூட கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்”, என தடாலடியாக விசயத்தைக் கூறிவிட்டு, அதன்பின் பையனைப் பற்றி பெற்றோர்கள் விசாரிக்க, ஊர் மட்டுமே அவளால் கூற முடிந்தது.  தொழில்பற்றி அவள் தெரிந்ததைக் கூறினாள்.  மற்றபடி அவர்கள் குடும்பம்பற்றி அதாவது அதிதீயைப் பற்றித் தெரிந்தாலும் அவளை மறைத்தவள், அன்று மாலையில் புதுக்கோட்டை கிளம்பிவிட்டாள்.

உண்மையில் அவன் பெயர்கூட தெரியாமல்தான் இருந்தாள் ரம்யா.

பெற்றோருக்கு மகளின் பேச்சு புரியவில்லை.

“இதைச் சொல்லறதுக்கா இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி சென்னை வந்த!  அப்டினா நீ போனுலயே சொல்லியிருக்கலாமே!”, என

“ரொம்ப நாளாச்சுல்ல.  அதான் உங்களையெல்லாம் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்”, என சமாளித்துவிட்டு, திரும்பியிருந்தாள்.

தான் விரும்புபவன், ஏற்கனவே திருமணமானவன் என்பதையோ, தனது தவறான முடிவால் விளைந்த விசயம், இன்று தன்னை அலைக்கழிக்கிறது, ஆகையினால்தான் இப்படி ஒரு முடிவு அவளாகவே எடுத்ததைப் பற்றியோ கூறவில்லை.

அதிதீயை ஒருமுறை அவளது கணவன் அலுவலகத்தில் சென்றுவிட்ட ஞாபகத்தில், தனியே சென்று அவனது அலுவலகத்திலேயே அவனைச் சந்திக்க முடிவெடுத்துவிட்டாள் ரம்யா.

//////////

பதினோரு மணியளவில் அந்த வளாகத்தில் இருந்த அறைக்குள் நுழைய அனுமதி கேட்க, நந்தாவிற்கோ புதிய ஒப்பந்தம் என நினைத்து, பார்த்துக் கொண்டிருந்த பணியை பாதியில் விட்டு வந்தவன், வாயெல்லாம் பல்லாக வரவேற்றான்.

வெளியில் இருந்த அலுவலக பெயர்ப் பலகையில் இருந்த பெயரைப் பார்த்தவளுக்கு, ‘பேரு, ஆளு மாதிரியே நல்லாத்தான் இருக்கு.  ஆனா பேசிப்பாத்து, எப்டியாவது சம்மதிக்க வைக்கணும்’, என எண்ணியவாறே உள்ளே வந்திருந்தாள்.

‘எனக்கென்ன குறை.  என்ன வேணானு ஒருத்தன் சொல்லிருவானா?  பணத்திலயோ, அழகிலயோ குறை இல்லாத என்னை வேணானு சொல்ல ஒருத்தன் இனிமேதான் பிறக்கணும்’, என்கிற அகம்பாவம் ரம்யாவிற்கும் இருந்தது. அந்தத் தைரியத்தில்தான் வந்திருந்தாள்.

மிகவும் மரியாதையோடு வரவேற்று, ‘என்ன எஸ்டிமேட்ல பில்டிங் பண்ற ஐடியால இருக்கீங்க மேம்’ என எதிரில் இருப்பவன் வினவ, சுற்றி வளைக்காமல் விசயத்திற்கு வந்திருந்தாள் ரம்யா.

ஆரம்பமே இடி, மின்னலோடு எனத் துவங்க, சற்று நேரத்தில், மிதமான மழைபோல மனம் மாறிட, ரம்யா பேசுவதையே அமைதியாக உள்வாங்கிக் கொண்டிருந்தான் நந்தா.

வரவேற்றபோது இருந்த மனநிலை நந்தாவிற்கு பெண் பேசப் பேச முற்றிலும் மாறியிருந்தது.

‘என்னடா இது வில்லங்கமான புதுக்கதையா இருக்கு!’ என தான் அமர்ந்திருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, இடக்கை கட்டைவிரலால் அவனது தாடையைத் தாங்கியவாறு, ஆட்காட்டி விரலை மூக்கின்மீது வைத்தபடியே, ரம்யா பேசுவதை மட்டுமே கவனித்திருந்தான்.

உள்ளே நுழைந்தவளை வரவேற்றபோது இருந்த பார்வையின் தரம், எதிரே இருந்தவளின் பேச்சால் எழுந்த மனத் தடுமாற்றத்தால் தரமாறியிருந்தது.

அவளின் பூர்வீகம், பெற்றோர், தனது பணி துவங்கி, தான் எதற்காக வந்திருக்கிறேன் என்பது முதல், அவனைப் பார்த்தது, அவனின் மேல் மையல் கொண்டது, அவனை விடுத்து இனி வேறு யாரையும் தன்னால் திருமணம் செய்து கொள்ள இயலாது என்பது வரை அனைத்தையும் கூறிவிட்டு, “நீங்க எனக்கு ஒரு நல்ல முடிவு சொல்லணும்”, என்க

நந்தாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ஆனந்தமாகவும் உணர்ந்தான்.

‘என்ன மாதிரி ஒரு புரொப்போஸ்டா!’, எனத் தோன்றாமல் இல்லை.

கொஞ்சம் வயிட் பண்ணியிருந்தா நம்மளையும் தேட, துரத்த, காதலிக்க, கல்யாணம் பண்ணனு ஒரு கூட்டம் வந்திருந்திருக்குமோ!  நாமதான் அவசரப்பட்டு விழுந்துட்டோமோ என நினைக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.

சந்தோசமாகவும் உணர்ந்தான்.

மனதிற்குள் நந்தா உணர்ந்ததை வார்த்தைகளில்…

 

ட்டொயின்ட டொயின்ட்டயின் ட்ரீடூம்

ட்டொயின்ட டொயின்ட்டயின்.. ட்ரீடூம்

 

முத்து ரதம் போலே சுத்தி வரும் பெண்கள்
முத்தமழை தேனாக ஹான் ஹான் ஹான்
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம்
உள்ளவரை நீயாடு
ஆஹா பெண்கள் நாலு வகை
இன்பம் நூறு வகை வா… வா

ஆஹா பெண்கள் நாலு வகை

இன்பம் நூறு வகை வா…

தினம் நீயே செண்டாகவே
அங்கு நாந்தான் வண்டாகவே ஹே…………

 

அதற்கிடையே, அதிதீயின் பின்னே கடந்த வாரம்வரை அவளறியாது தான் பின்தொடர்ந்தது வேறு மனக்கண்ணில் வந்திட, அவனையறியாமலேயே புன்முறுவல் இதழோரம் வந்து போனது.

‘தான் அதிர்ஷ்டக்காரன் என எடுத்துக் கொள்வதா? இல்லை தனக்கு கெட்ட நேரம் நெருங்கிவிட்டது என எடுத்துக் கொள்வதா? எனப் புரியவில்லை நந்தாவிற்கு.

ஆனாலும் இடைச்செறுகல் இன்றி அமைதியாகவே அனைத்தையும் கேட்டான்.

அதனிடையே அசரீரி போல சில வார்த்தைகளும் நந்தாவின் மனதில் அவ்வப்போது வந்து சென்றது.

‘எதுக்கு இதை எங்கிட்ட கூப்பிட்டுச் சொல்லிருப்பாருனு புரியாமலே கேள்வியோட தெரிஞ்சதுக்கு, இப்டியொரு இன்சிடென்ட்டத் தந்து ஆண்டவன் டெஸ்ட் வைக்குறாரோனு?’, தோன்றாமல் இல்லை.

இப்படி ஒரு விசயத்தை யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்.

ஒரு ஆணாக, தன்னை மனதில் வரித்துவிட்டதாகக் கூறிக் கொண்டு வந்து எதிரில் அமர்ந்திருப்பவளை எண்ணிப் புல்லரித்து, புளங்காகிதம் அடைவதா? இல்லை மனைவி, மகன் என்கிற தனது கூட்டினை காபந்து செய்ய முடிவெடுப்பதா என்கிற திணறல் நந்தாவிற்குள் வந்ததென்னவோ உண்மை.

இடையே முந்தைய தின மனைவியோடுடனான முக்குளிப்பும் நினைவில் வந்திட, எங்கோ பறந்து சென்றது மனம்.

“உங்களுக்கு எவ்ளோ டைம் வேணுனாலும் எடுத்துக்கங்க. ஆனா நிதானமா யோசிச்சு எனக்கு நல்ல முடிவாச் சொல்லுங்க!”, என்றவள், “ரொம்ப டிலே பண்ணீறாதீங்க!”, என்றபடியே ரம்யா எழ எத்தனிக்க

தொண்டையைச் செறுமிக் கொண்டவன், கையாலேயே அமருமாறு செய்கை செய்தான்.

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!