VVO4
VVO4
வெல்லும் வரை ஓயாதே!
ஓயாதே! வெல்…! – 4
கடந்திருந்த மூன்று நாள்களாகவே அரைகுறையான உணவு நந்தாவிற்கு.
திருமணம் முடிந்து புதிய இடத்தில், தங்குவதற்கு ஏதுவான பணிகளைச் செய்துகொண்டிருந்தவனுக்கு, மனைவி உண்ண அழைத்ததும் ‘அப்பாடா’ என்றிருந்தது.
கைகால்களை அலம்பி வருவதற்குள், அலறி அழைத்திருந்தாள் புதுமனைவி.
என்னவோ ஏதோ என்று பதறி வந்தவனின் கண்களில் முதலில் பட்டது, உணவுத் தட்டு வைத்திருந்த இடத்தில் தாவித் திரிந்த தவளையைத்தான்.
‘இதப் பாக்கவா கூப்பிட்டா! தவளையப் பாத்ததும் ஓடிவந்து தட்டை எடுத்திருக்கலாமே இவனு’ எண்ணியவனுக்கு அவள் நின்றிருந்த தினுசில், ‘ஒரு வேளை தவளையைப் பார்த்து பயப்படுகிறாளோ!’, எனத் தோன்றியது.
உடனே ‘ச்சீய் அதுக்குப்போயி யாராவது பயப்படுவாங்களா?’, என நினைத்தபடியே மனைவியை நோக்க அவனுக்காகவே காத்திருந்தவள், ‘நீ அந்தத் தட்ட வேகமா போயி எடுடா!’, என்று நந்தாவின் முதுகைத் தொட்டு, உள்ளே செல்லுமாறு முதுகில் கைவைத்துத் தள்ளினாள்.
அதிதீயின் செய்கையில், தனது கேள்விக்கான பதிலாக மனைவியின் உள்ளம் தெரியவே ‘உன் தைரியம் இவ்வளவுதானா’ எனத் திரும்பி நக்கலாக பெண்ணைப் பார்த்துச் சிரித்தபடியே உள்ளே செல்ல எத்தனித்தான்.
அதேநேரம் அறைக்குள் அங்கிருந்த தூப்பாக்குழி வழியே இரையைத் தேடி, உள்ளே நுழைந்திருந்த பாம்பை நந்தா கவனித்திருக்கவில்லை.
பெண்ணைப் பார்த்து சிரித்தபடியே உள்ளே சென்றவனை நோக்கி திடீரென்று, ‘பொங்கல் போனா போகட்டும் நந்தா, பாம்புடா பாத்து வெளிய ஓடிவந்திரு…’ எனக் கத்தியிருந்தாள்.
அதிதீயின் வார்த்தையைக் கேட்டு அதே இடத்தில் அசையாமல் நின்றவன் ஆராய்ச்சியோடு சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான். பாம்பு அந்தத் தரையில் சிரமப்பட்டு ஊர்ந்தது தெரிந்தது. ஆனாலும் அதற்கு வேண்டிய இரையான தவளையைப் பிடிக்க, விடாமல் முயன்றதை உணர்ந்தான். அதைக்கண்டவன் சுதாரித்து சட்டென்று முடிவுக்கு வந்தான்.
அதற்குமுன்பே வெளியில் நின்றிருந்தவள், “வெளிய ஓடி வந்திருடா. எனக்குப் பயமாருக்கு. பாம்பு எதனா பண்ணிரப்போகுது”, என்று நந்தாவை அழைத்தவாரே இருந்தாள்.
பெண் இமைக்கும்முன் வாயிலில் நின்றவளை இடித்தபடியே வீட்டிற்கு வெளியே சென்று, சுற்றிலும் அங்கிங்கு ஓடி எங்கோ கிடந்த கட்டையை எடுத்து வந்து அறையினுள் பார்க்க, அனைத்தும் இடமாறியிருந்தது.
பெண், பாம்பு தவளையை பிடிக்கும் நோக்கில் முன்னேறுவதை வாயிலில் நின்றவாறே பயத்தோடு பார்த்திருந்தாள்.
நந்தா வந்ததும் பார்வையில் சட்டென படாததை, ‘அங்க அந்த மூலையில. அந்த அட்டைப் பெட்டி பக்கத்தில லெப்ட்லடா.’ என பாம்பின் இருப்பிட மேப்பைக் கைகாட்டிக் கத்திக் கூற, பெண்ணின் தகவலைத் துணை கொண்டு முதலில் பாம்பையும், அதன்பின் தவளையையும் அடித்து வெளியே தூக்கிப் போட்டிருந்தான்.
அதை சற்றுத் தூரத்தில் வெளியே தூக்கி எறிந்துவிட்டு எதுவும் நடவாததுபோல வந்தவனை, திறந்த வாயை மூடாமல், இமைக்காமல் பார்த்திருந்தாள்.
அதிதீயைப் பார்த்து, “வா சாப்பாடு எடுத்து வையி”, என அழைத்தான்.
சற்றுநேரம் பேசாமல் நடந்தவற்றை மீண்டும் மீண்டும் மனக்கண்ணில் ஓடவிட்டவள், பயம் தெளியாமல் அதேயிடத்தில் சிலைபோல நின்றிருந்தாள்.
அதைவிட, ‘இந்த நந்தா பையலுக்கு பாம்புன்னா பயமில்லையா? பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்பாங்க… இவன் என்னன்னா பாம்படிக்கவே பிறந்தவன் கணக்கா ஒரே அடியில அதைச் சாச்சுப்புட்டான்’, என்கிற எண்ண ஓட்டத்தில் நகராமல் நின்றிருந்தாள்.
பெண்ணை சாப்பாடு எடுத்து வைக்கும்படி கூறிவிட்டு, தன்னைச் சுத்தம் செய்துகொண்டு வந்தவன், பெண் ஒரே இடத்தில் அசையாமல் நிற்பதைப் பார்த்துவிட்டு, அதிதீயை அலேக்காக கையில் தூக்கியபடியே, “என்னடீ பயந்துட்டியா?” என பெண்ணோடு வீட்டிற்குள் நுழைந்தான்.
கணவன் தூக்கியதும் நடப்பிற்கு வந்தவள், “ம். பயப்படாம… வேற என்ன செய்வாங்களாம். இறக்கிவிடு நந்தா!”, என்றவளை அடுக்களைக்குள் கொண்டு இறக்கி விட்டிருந்தான்.
அச்சத்தோடு கட்டியிருந்து சேலையைத் தூக்கியவறே, சுற்றிலும் பார்த்தபடியே நின்றிருந்தவளை, “வேப்பிலை எடுத்துட்டு வரவாடீ”, என்று கேட்க,
“எதுக்கு?”
“ம்.. இன்னும் பயம் போகலைபோலயே”, என்றதோடு, “சீக்கிரமா சாப்பாடு எடுத்து வையிடீ”, என்று நந்தா மீண்டும் கேட்டதுமே நடப்பிற்கு வந்தாள் அதிதீ.
“நான் சீனிப் பொங்கல் மட்டுந்தான் செஞ்சேன். அதை ரெண்டு தட்டுலயும் ஷேர்பண்ணிட்டு, கொஞ்சமாத்தான் பானையில இருக்குடா”, என்றபடியே பானையைத் திறந்து நந்தாவிடம் காட்டினாள்.
அவளின் அருகே வந்தவன், “இவ்வளவு நேரம் பொங்கல் மட்டுந்தான் செஞ்சியா?” எனக்கேட்டபடியே வந்து நின்றான்.
“ஆமாண்டா”, என்றவள் இன்னும் தரையில் வைக்கப்பட்டிருந்த தட்டுகளில் இருந்த பொங்கலைக் காட்டி, “பாம்பு, தவளைன்னு விரட்டி அடிக்கறதுக்குள்ள பொங்கல் பக்கத்திலலாம் பாம்பு போச்சுடா. இந்த திமிரு புடிச்ச தவளைதான் முதல்ல இடமே கிடைக்காம பொங்கல்மேல லாங்க் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் பண்ணி விளையாடுச்சு. உவ்வேஏஎஎ… அதை அப்டியே எடுத்துட்டுப்போயி கீழ போட்டுருடா”, என நந்தாவிடம் பணியை ஒப்படைக்க
“சரி அது போனா போகட்டும்”, என அதை எடுத்து வந்தவாறே, “வேற என்ன சாப்பிட வச்சிருக்க”, எனக் கேட்டான்.
நந்தாவின் எதிர்பார்ப்பை சரிசெய்ய இயலாத நிலையை எண்ணிய வருத்தம் பெண்ணுக்கு மேலிட, “சாரிடா… சோறு வைக்கலை! கொஞ்சமா பானையில இருக்கற பொங்கலை நீ சாப்பிடு!”, என்றதோடு, “ஆனா அது உனக்குப் பத்துமானு தெரியலையே!”, எனத் தயங்கியவாறு உரைத்தவளிடம் அவனால் என்ன சொல்ல இயலும்.
வயிறு காந்த, சின்ன தட்டில் எடுத்து வந்திருந்த மீதப் பொங்கலைக் கண்டவனுக்கு, ‘யானைப் பசிக்கு சோளப் பொறியா?’, எனும் நினைப்போடு, “அதை நீ சாப்பிடு. இதோ வரேன்”, என சட்டையை மாட்டியபடி வெளியே சென்று, பால் வாங்கி வந்தான். சென்று வரவே அரைமணித் தியாலம் கடந்திருந்தது நந்தாவிற்கு.
புதிய இடமாகையால் எங்கு பால் போன்ற பொருள்கள் கிடைக்கிறது என்பது தெரியவில்லை. சற்று அலைந்து திரிந்து கடைகளைக் கண்டு வாங்கி வந்தான்.
வரும்வரை அந்த தட்டில் இருந்த பொங்கலைப் பார்த்தபடியே இருந்தவள், நந்தா வந்ததும், “எனக்குப் பசியில்ல, நீ சாப்பிடு”, என அதை நந்தாவிடமே கொடுத்திருந்தாள்.
பாலைக் காய்ச்சி, சீனி போட்டுத் தர இன்னும் அரைமணித் தியாலத்தைக் கடத்தியிருந்தாள் பெண். அதுவரை நந்தாவும் பொங்கலைத் தொடவில்லை.
பொங்கலை ஒருவருக்கொருவர் இரண்டொரு வாய் ஊட்டி, இருந்த பாலைக் குடித்து கால் வயிற்றை நிறைந்திருந்தனர்.
வரும் வழியில் மாவு விற்பதைப் பார்த்ததாக கூறினான் நந்தா.
“அதை வாங்கிட்டு வந்தாலும் இட்லி ஊத்த, இட்லி பாத்திரம் இல்லை. தோசை ஊத்த தோசைக் கல் இல்லை”, என்றாள்.
அடுக்கி வைத்தபோது, ரவை பாக்கெட்டுகள் இருந்ததைக் கண்டிருந்தவள், “உப்புமா செய்கிறேன்” என்று கிளம்பினாள். போனவளை, அலறி நந்தாவே தடுத்துவிட்டான்.
“ஐயோ உப்புமாவா? வேணாண்டீ. அதுக்கு நான் பட்டினியாவே இருந்துப்பேன்”, என்றிருந்தான்.
அவளோ வேற என்ன செய்ய என தீவிரமாக யோசித்து, சாதம் மட்டும் வடித்து, இரவில் வாங்கி வந்த தயிரை ஊற்றி, அப்பளம் பொரித்து, ஊறுகாயைக் கொண்டு சாப்பிட்டனர்.
வறுமையிருந்தபோதும், உணவிற்காக கஷ்டப்பட்டிராதவன் நந்தா. கிராமத்தில் மட்டை அரிசி சாதத்தோடு, ஒரு கிலோ காய்கறிகளைப் போட்டு எதாவது குழம்பு என்று செய்ததை தளதளவென சோற்றில் ஊற்றி, அத்தோடு தொட்டுக்கொள்ள வற்றல், வடகம், துவையல் போன்றவற்றுடன் எதாவது கீரைக்கூட்டு அல்லது பொரியல் என்று சாப்பிட்டு வளர்ந்திருந்தான்.
ஊறுகாய் எல்லாம் பெரும்பாலும் பயன்படுத்த மாட்டார்கள். குழம்பு சாதத்தையே இரண்டு முறை வாங்கி உண்பான்.
அப்படி உண்டு பழகியிருந்தவன், வெளியிடங்களுக்கு சென்றால் கிடைப்பதை உண்டு கொள்வான்.
வெளியிட உணர்வே வீட்டிலும் தோன்றிட, கடந்து போன தினங்களின் வேலை, மன அழுத்தம், அதிதீயின் அருகாமை தந்திருந்த முழுமையான நிறைவோடு, அசதியில் படுத்ததும் உறங்கியிருந்தான்.
அதிதீ, பாம்பு தங்களின் வீட்டிற்குள் வந்ததை மனக்கண்ணில் கொண்டு வந்து அதையே நினைத்திருந்தாள். அதனால் எழுந்த பயத்தில் உறங்காமல் விழித்திருந்தாள் என்பதைவிட, படுக்காமல் அமர்ந்தே இருந்ததை நந்தா அறிந்தாலும், அசதி அவனை அசத்தி உறங்கச் செய்திருந்தது.
முந்தைய தினம் மறுத்த உப்புமாவை, அவனைக் கேளாமலேயே காலையில் கையில் கொடுத்திருந்தாள் அதிதீ.
பயந்து உண்ணத் துவங்கியவன், அதன் சுவையில் அமைதியாகவே உண்டெழுந்தான்.
ஆனாலும், ஏதோ ஒரு குறை.
இதுவரை அவனது தாய் உப்புமா எல்லாம் செய்து தந்ததில்லை. பணிபுரியும் இடத்தில் களிபோல உப்புமாவை தந்ததை முடியாமல் உண்டிருக்கிறான். ஆனால் அது நிறைவான உணர்வைத் தந்ததில்லை.
மதியம், பருப்பு சாதம் என்று செய்திருந்தாள். உருளை வருவலோடு.
அன்று இரவும் அதையே வைத்துக் கொண்டார்கள்.
இன்று காலையில் வெண் பொங்கல், சாம்பார்.
இதுபோல உணவு அவன் உண்டு பழக்கமில்லை. ஆனாலும் பெண்ணிடம் எதையும் கூறவில்லை.
அத்தோடு காலையில் கிளம்பி வேலைக்குச் சென்றுவிட்டு, மதியம் தங்களின் கிராமத்து வீட்டிற்கு வந்தவனுக்கு பசி மிகுதியில் நின்றிருந்தான். அதேநேரம் தன்னிடம் தாய் கேட்டதை புறந்தள்ள முடியாமல், ‘என்ன சொல்லலாம்’, என யோசித்தபடியே நின்றிருந்தான்.
பதிலைக் கூறாமல் நின்றிருந்தவனின் தோற்றமே நல்ல பசியில் இருக்கிறான் என்பதை அத்தாயிக்கு உணர்த்தியதுபோலும்.
அவராகவே மகனது களையான தோற்றத்தைக் கண்டு, ‘நல்ல உடுப்பு போட்டதால புள்ளை புதுமாப்பிள்ளை கணக்கா ஜோரா இருக்கான்போல! ஆனாலும் வாடித் திரியறான்!’, என மனதோடு நினைத்துக் கொண்டே அடுக்களைக்குள் சென்று கையில் உணவுத் தட்டோடு திரும்பினார் காமாட்சி.
“சாப்பிடு”, என தட்டில் உணவை இட்டு மகன் முன் வைத்தார் காமாட்சி.
கேள்வியைக் கேட்டபடியே உள்ளே சென்ற தாய் கொண்டு தந்த உணவைப் பார்த்ததும் பதில் சொல்லத் தோன்றவில்லை நந்தாவிற்கு.
நல்ல காரசாரமான மீன்குழம்பு சாதம், அரைக்கீரை, தேங்காய்த் துவையல் என தாயாரின் கைப்பக்குவத்தில் கமகமக்க ஒரு பிடி பிடித்தான்.
மகன் எப்போதும் போலல்லாமல், ஆவென வேகத்தோடு உண்ட தினுசில் என்ன கண்டுபிடித்தாரோ காமாட்சி, “இன்னும் கொஞ்சம் சோறு போடுறேன்”, என
சரியென்று ஆமோதித்தான் நந்தா. மூன்று ரவுண்டு முடித்து, போதுமென்றிருந்தான்.
உண்டு முடிக்கும்வரை காத்திருந்தவர், “ஏன்யா, நீ வேல பாக்கற எடத்தில இப்ப சமைக்கிறதில்லையா?”
“ம்.. என்னம்மா”, என்றவன், “சமைக்கிறாங்க. ஆனா வடநாட்டுப் பசங்க உப்பு, உரப்பில்லாம பருப்பு, சப்பாத்தினு சமைக்கிறாங்கம்மா”, என்றவாறே கைகழுவி எழுந்தான்.
மகன் தான் கேட்டதற்கு பதில் கூறவில்லை என்றாலும், மீண்டும் அதைப்பற்றி கேட்காமல் காலையில் சிறியவன் கேட்டதை நினைவுபடுத்தினார். “சின்னவனுக்கு பரிச்சைக்கு பணம் வேணுனு கேட்டான்”
எவ்வளவு எனக்கேட்டு, வேண்டிய தொகையை தாயிடம் எடுத்துக் கொடுத்தான்.
தாய் தன்னிடம் கேட்டிருந்ததற்கு உண்மையான பதிலைக் கூறினால் எத்தகைய விளைவுகள் உண்டாகும் என்பது தெரிந்தாலும், எவ்வளவு நாளுக்கு இதை மறைக்கமுடியும் எனத்தோன்ற கூறிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருந்தான்.
“ம்மா…”, என தயக்கத்தோடு இழுக்க
“என்னய்யா”
சற்று தயங்கியவன், என்றானாலும் கூறித்தானே ஆகவேண்டும் என நினைத்து, “அவ வீட்ட விட்டு எங்கூட வந்துட்டா…”
நந்தா கூறி முடிக்குமுன்னே, “என்னடா சொல்ற? திடுதிப்புன்னு வந்து, பாராங்கலைத் தூக்கி தலையில போடுற!”, என்றபடியே தலையில் இருகைகளலும் அவரின் தலையில் அடித்தபடியே அமர்ந்துவிட்டார்.
“ஆமாமா. அதனால கோயில்ல தாலி கட்டி என்னோட கூட்டிட்டு வந்துட்டேன்”, என தலைகவிழ்ந்தபடியே கூறினான்.
“எங்க?”, எனக் கேட்டபடியே அவசரமாக எழுந்து வாயிலை நோக்கிச் சென்றார்.
தாயின் எதிர்பார்ப்பு பொய்யாகிப் போய்விட, திரும்பி மகனிடம், “எங்கே?”, எனக் கேட்க, நந்தா தாயினருகே சென்று விசயத்தைக் கூறினான்.
மகன் விசயத்தைக் கூறியதும், பெண்ணை தன்னிடம் காட்டவே இன்று வந்திருக்கிறான் என எண்ணியிருந்தது அந்தத் தாயுள்ளம்.
மகனின் களையான தோற்றத்திற்கான காரணமும் கிடைத்திருந்தது.
விசயத்தை விளக்கியதும், பொறுமையாகக் கேட்டிருந்தவர் எல்லாம் தலைக்கு மேலே போய்விட்டதை அறிந்து பொங்கிவிட்டார்.
“என் ஈரக்கொலையையே அறுத்துப்புட்டியேடா! இதுக்கா உன்னை அரும்பாடுபட்டு வளத்தேன். முகத்துல கரியப் பூசிட்ட! இப்ப எப்டி உங்க மாமன் முகத்துல முழிப்பேன்!”, என முதலில் மகனைத் திட்டத் துவங்கி, அடுத்து அதிதீயை வசைபாடத் துவங்கியிருந்தார்.
“என் வம்சத்தைக் குடிகெடுக்க வந்திருக்காளா? எப்டி அவ நல்லாயிருப்பா. அவளுக்கு ஊரு உலகத்தில எவனும் கிடைக்கலையா? எம்புள்ளைதான் கிடைச்சானா?”, எனும் பேச்சைக் கேட்டவனுக்கு, சங்கடமாக உணர்ந்தான்.
தாயிடம், அதிதீயை இப்படிப் பேசாதீர்கள் என்று கூறவும் முடியவில்லை.
ஒன்பதாம் வகுப்பில் இருந்து தான்தானே அவள் பின்னோடு சுற்றினோம். கல்லூரி செல்லத் துவங்கிய பிறகும், தன்னோடு ஒரு வார்த்தை பேசவே யோசித்திருந்தவளுக்கு, தன்னால் எத்தனை அவமதிப்புகள்?
தான் தவறு செய்திருக்க, தன் தாய் அவளைத் திட்டியது நந்தாவிற்கு குற்ற உணர்வாக இருந்தது.
மேலும் மேலும் கிராமத்து லயத்தில் மனைவியை பேசக் கேட்டவனுக்கு உள்ளம் விட்டுப்போனது.
ஒரு மணித் தியாலம் அங்கிருக்க எண்ணி வந்தவன், தாயின் திட்டலில், அவர் பேசத் துவங்கிய, பத்து நிமிடங்களிலேயே அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
சொல்லிக் கொள்ளத் தோன்றவில்லை.
சிறிது தூரம் சென்றவன், அதற்கும் அதிதீயைத்தான் தாய் திட்டுவார் என்று தோன்றியதும், மீண்டும் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்தான்.
மகன் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பியது இன்னும் மனதில் வலியை உண்டாக்கிட, ஆக்ரோசமாகத் திட்டியவாறு இருந்தார்.
திரும்பி வந்தவனை சட்டை செய்யாமல் அதிதீயை வசைபாடியவாறு இருந்தவரிடம், “எனக்கும் புடிச்சுப் போயித்தான் அவளைக் கல்யாணம் பண்ணிருக்கேன்மா! அவளை நீ இப்டித் திட்டுனா நான் எப்டி இங்க வரது, போறது? அவளைக் கல்யாணம் பண்ணா நான் உம்புள்ளையில்லைன்னு போயிருமா? அவ எப்டி நல்லாயிருப்பானு எங்கிட்டயே கேக்குற! அவ நல்லாயில்லன நாமட்டும் எப்டி நல்லாயிருப்பேன்?”, என்கிற கேள்வியோடு தாயின் பதிலை எதிர்பாராமல், “நான் கிளம்பறேன்”, என்று அங்கிருந்து வந்துவிட்டான்.
மகன் இவ்வளவு பேசுவானா? என்பதையே அன்றுதான் காமாட்சி அறிந்தார்.
‘வாயைத் திறக்கவே யோசிச்சவனை அந்தச் சீமச் சித்தராங்கி வந்த ரெண்டே நாள்ல எப்டியெல்லாம் பேச வைக்கிறா! குரளி வித்தக்காரியா இருப்பா போலயே’, என்றவாறே ஆச்சர்யமாக கன்னத்தில் கைவைத்தபடியே கோபமாகச் செல்லும் மகனையே இமைக்காது பார்த்திருந்தார். அத்தோடு அவளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலும் பிறந்திருந்தது.
அன்றைய பொழுதே நந்தாவிற்கு மிகவும் துன்பமாக உணர்ந்தான்.
அதிதீயை மிகுந்த அவமானத்திற்குள் தள்ளிவிட்டோமோ என்கிற எண்ணமே அவனை வதைத்தது.
தன்னால் அதிதீக்கு எத்தனை ஏச்சுகள், பேச்சுகள்?
இதை அறிந்தால், அவளின் நிலை?
தனக்கே வலிக்கும்போது, அவள் எப்படி உணர்வாள்?
பெண்ணைத் தேடியது மனது. பொழுது போகும்வரை நேரத்தைப் போக்க இயலாமல், வேலையிலும் கவனமில்லாமல் இருந்தான்.
///////////////////
தனது வாழ்விற்காக என்றில்லையெனினும் தாயாருக்காக, கண்டிப்பாக எதாவது அரசுப்பணிக்கு செல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் யோசித்துக் கொண்டிருந்தாள் அதிதீ.
அரசுப் பணியில் சேர்ந்ததும், தாயைத் தன்னோடு அழைத்துக் கொள்ளவேண்டும் என்கிற எண்ணமும் வழமைபோல தோன்றியது.
நந்தா கிளம்பியதும், தாயை எண்ணிய மனம் பாறாங்கல்லாய் மாறியிருந்தது. அவரைப் பற்றி சிந்தித்தபடியே அமர்ந்திருந்தவளுக்கு, கதவு தட்டலின் சத்தத்தில் பயந்திருந்தாள்.
கதவு தட்டும் சத்தம் சற்று மட்டுப்பட்டிருந்தது.
ஆனாலும், பயந்து ‘யாராக இருக்கும்’ எனப் பார்க்க எண்ணி மெல்லக் கதவைத் திறந்தவளுக்கு, புதர்போன்ற தலைமுடிக்குள் மறைந்திருந்த சிறிய முகத்தில், வெற்றிலை பாக்கு போட்டு சிவப்பேறியிருந்த பற்களோடு சிரித்தபடியே நின்றிருந்தவரைப் பார்த்ததும் ‘அப்பாடா’ என்றிருந்தது.
தன் வீட்டிலிருந்து யாருமில்லை என்பதே நிம்மதியைத் தந்திட, எதிரே குறுகுறுத்த பார்வையோடு இவளை நோக்கியவரை, கேள்வியோடு நோக்கினாள்.
“ஒரே சத்தமா இருந்துச்சுன்னு சொல்லிக்கிட்டாளுங்க. என்னாச்சி”
அதிதீக்கு ஒன்றுமே ஆரம்பத்தில் புரியாமல் விழித்தபடியே யோசித்து, பிறகு இரண்டு தினங்களுக்கு முந்தைய நிகழ்வைப் பற்றி விசாரிப்பதை உணர்ந்து, “பாம்பு வீட்டுக்குள்ள வந்திருச்சு அதான்”, என்றாள்.
“அதுக்கா அப்டிச் சத்தம் போட்ட?”
‘பாம்புன்னா படையும் நடுங்கும்பாங்க. இந்தம்மா என்னன்னா இதப் போயி பெருசா கேக்குது’
“நீ எந்த ஊரு?”, வந்திருந்த மூதாட்டி
“இங்க பக்கந்தான். ஏன் கேக்கறீங்க?”
“நாலாவது வீட்டுக்காரி இப்பத்தான் எல்லாம் சொன்னா! லவ்சோடி ஒன்னு வந்திருக்குனு. அதான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்”, எனச் சிரித்தார்.
“….”
“நானு இருளாயி. இங்கதான் அந்தக் கடைசி வீட்ல இருக்கேன்”, தானாகவே அறிமுகம் செய்து கொண்டார்.
“….”
“பய எங்க?”
“வேலைக்குப் போயிருக்கான்”
“போயிருக்கான்னா?”
“போயிருக்கான்னா, போயிருக்கான்னுதான அர்த்தம்”, என அழுத்தமாக உரைத்தாள்.
வாயைப் பொத்தி எழுந்த சிரிப்பை அடக்கியவாறே, “இப்ப உள்ள புள்ளைக எல்லாம் புருசனை…”, என நிறுத்தியவர், “கல்யாணமாயிருச்சா”, எனக் கேட்டு பெண்ணது கழுத்தைக் கவனித்தார்.
“ம்ஹ்ம்”, என தலையை அசைத்து ஆமோதித்தாள்.
“ம்ஹ்ம்”, என தலையை மேலும் கீழும் ஆட்டியதோடு, “என்ன வேலை பாக்கறான் உம்புருசன்?”
“பில்டிங் சூப்பர்வைசர்”
“அப்டினா?”
என்ன சொல்ல என யோசித்தவள், “வீடு கட்டறதை மேற்பார்வை செய்யறது”
“ஆஹான்.. மேஸ்திரியா?”
“இல்லை. அதுக்கும் மேல”
“அதுக்கும் மேலயா?”, என ஒரு மார்க்கமாகப் பார்த்தபடியே
“பொழுதன்னிக்கும் இப்டி வீட்டைப் பூட்டி வச்சிக்கிட்டு உள்ளயே அடஞ்சு கிடந்தா என்னாத்துக்கு ஆவ! எங்களோட வா! வந்து காத்தோட்டமா உக்காந்து பேசிட்டுரு!”, என அழைக்க
“சரி… வேற ஒன்னுமில்லைல!”
“ஏன்? வேலையா இருக்கியா?”, எனக் கேட்டார் அந்தப் பாட்டி
“இல்லை படிக்கணும்!”
“இஸ்கூலுல படிக்கிறியா?”, என நக்கலான குரலில் வந்தது.
“ஐயையோ…! இல்லை காம்படேடிவ் எக்சாம்கு பிரிபேர் பண்றேன்”
பெண் கூறியது புரியாததால் பே எனப் பார்த்திருந்துவிட்டு, ஆனால் ஏதோ புரியாமல் ஆங்கிலத்தில் பேசுவதை உணர்ந்து நிறையப் படித்த பெண் போலும் என எண்ணியவர், “அப்ப டூசன்லாம் எடுப்பியா?”
“இல்லை”
“ஏன்? எங்க வீட்ல, பக்கத்துல எல்லாம் நிறையப் புள்ளைங்க இருக்குதுங்க. சும்மாதான இருப்ப. அப்ப டூசன் எடுக்கலாமுள்ள”
“அவன் வந்தவுடனே கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன்”
“நீ உன் வீட்டுக்காரனைத்தான அவ, இவங்கறியா?”
“ம்”, என தலையை அசைத்து ஆமோதிக்க
“என்ன நீ? பெரிய படிப்பு படிச்சிருந்தா புருசனை அவன், இவங்கற… நாங்கள்லாம் அது குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்ணாதான் மரியாதையில்லாம இப்டிப் பேசுவோம்”, எனச் சிரித்தபடியே, “இப்ப என்னமோ எல்லா நேரத்திலயும் மரியாதையில்லாமயே பேசுதுங்க!”, என்றபடியே அகன்றிருந்தார்.
இருளாயி பேசிச் சென்றதும், வெளியில் காயப்போட்டிருந்த துணிகளில் காய்ந்தவற்றை எடுத்து வந்து மடித்து வைத்தாள். அதன்பிறகு மதிய உணவை உண்டு, பாத்திரங்களைத் தேய்த்தாள். மீண்டும் மாலை வரை பொழுதை நெட்டித் தள்ளினாள்.
இரவு நந்தா வருமுன்னே, எதாவது செய்யலாம் என்றால் என்ன செய்யலாம்? என இருக்கும் பொருள்களை எடுத்து ஆராய்ந்தாள்.
கோதுமை, மைதா மாவு இருந்தது.
கோதுமை தோசை, அல்லது சாப்பாத்தி எதுவாயினும் தோசைக் கல் வேண்டும்.
இன்று நந்தா விரைவில் வந்தால், வெளியில் சென்று வாங்கி வரலாம் என்கிற முடிவிற்கு வந்தாள் அதிதீ.
கையில் மொபைல் போனும் இல்லை.
வீட்டிலிருந்து உடுத்திய சேலையோடு, படித்த சான்றிதழ்கள் அடங்கிய ஃபைல் மட்டும் கோச்சிங் வகுப்பில் வைத்துவிட்டு வந்திருந்த கைடுகள் மட்டும் கையோடு எடுத்து வந்திருந்தாள்.
பணத்தேவை அதிகமாக இருந்தது. அருகில் இருக்கும் பள்ளிகளில் வேலைக்கு கேட்கலாமா என்கிற எண்ணம் அவ்வப்போது வந்து போனது.
நந்தா அதற்கு என்ன சொல்வானோ?
கணவனுக்காக காத்திருந்தாள் அதிதீ.
////////////
தாயின் பேச்சைக் கேட்டு மனமுடைந்து பணிக்குத் திரும்பிய நந்தனின் உள்ளம் துவண்டிருந்தது.
எப்போதுடா சென்று அதிதீயைப் பார்ப்போம் என்றிருந்தது.
வேலை முடிந்து அலுவலகத்திற்குச் சென்றவன், ரிபோர்ட் செய்துவிட்டு கிளம்பும்போது, அந்நிறுவன எம்டி அழைத்ததாக வந்து நந்தாவிடம் கூறவே, அவரின் அறைக்குள் நுழைந்தான்.
அழைப்பை ஏற்று உள்ளே சென்று, பதினைந்து நிமிடங்களுக்குப்பின் வெளியில் வந்தவனின் முகம் கறுத்திருந்தது.
உள்ளே நடந்தது என்ன?
அடுத்த அத்தியாயத்தில்.
////