VVO5
VVO5
வெல்லும் வரை ஓயாதே!
வெல்! ஓயாதே – 5
வீட்டிற்கு கம்பெனி டூவிலரில் கிளம்பியவன், தனது எம்டி தன்னிடம் பேசிய விசயத்தைப் பற்றியே எண்ணியபடி வீட்டிற்கு வந்திருந்தான்.
வரும் வழி நெடுகே, இத்தனை நாள் இதுபோன்ற பணிகளை மறுத்தோ, தயங்கியோ இல்லாதவனின்மீது கடுகளவும் இரக்கமின்றிப் பேசிய எம்டியின் வார்த்தைகள் வருத்தியது.
வாசலில் கொணர்ந்து வண்டியை நிறுத்தியதும், எதிரே வந்து நின்றவளின் புன்னகையில் சட்டென மனம் லேசானது போன்ற உணர்வு.
உலகத்துத் துன்பங்கள் அனைத்தும் அந்தப் புன்னகையில் பொசுங்கியது போன்றிருந்தது.
காலையிலிருந்து, கிளம்பும்வரை தலையைக் குடைந்த அனைத்தையும் காற்றினில் சட்டெனக் கரைத்திருந்தான்.
காதலின் சக்தி!
அதிதீயின் சந்தோசப் புன்னகை, நந்தாவையும் தொற்றிக் கொண்டது.
உடல் களைத்திருந்தாலும், உள்ளம் உல்லாச உணர்விற்குத் திரும்பியிருந்தது.
விசிலடித்தபடியே வண்டியிலிருந்து இறங்கி வந்தவன், வீட்டினுள் வந்ததும், பெண்ணைத் தன்னோடு இழுத்தணைத்தான்.
கோகுல் சாண்டல் பவுடரின் மணத்தோடு, அவள் பூசியிருந்த காந்தி சேவா பூஜா கஸ்தூரி மஞ்சளின் நறுமணமும் சேர்ந்து நாசியை நிறைத்து, நந்தாவின் மோக நாடியைத் தூண்டியிருந்தது.
மனதினுள் மாயமாகி இருந்த மோகம், பெண்ணது அருகாமையில் பொலிவுடன் கும்மாளத்தோடு வந்திருந்தது. மோகத்தோடு அணைத்தவனை, அவளின் மீது வீசிய நறுமணம் சோதித்தது.
சோதனையில் தடுமாறியவன், பெண்ணது கழுத்தில் தனது முத்திரையைப் பதித்தான்.
இறுகிய இதயம் சற்றே இளகி இதமாக உணர்ந்தது.
நந்தாவின் திடீர் செயலில் சிலிர்த்தவள், “ஏய் என்ன பண்ணிட்டு இருக்க! கதவு தொறந்து கிடக்கு! வந்ததும் வராததுமா என்னடா இது?”, என செல்லமாகக் கடிந்திட
“டிக்கெட்டில்லாமயே இன்னிக்கு தரிசனமா! அதுல மச்சான் குஜாலாயிட்டேன்!”
“தரிசனம் கரிசனம்னல்லாம் என்னடா சொல்ற?”, புரியாமல் கேட்டாள்.
“இவ்வளவு நாளு, காத்துக் கிடந்து, கால் கடுக்க, காலை மாத்தி, மாத்தி ரோட்டோரத்தில நின்னு, போற வாரவனெல்லாம் கேவலமா பாக்கறதைப் பாத்தாலும், பாக்காத மாதிரி, கண்ணை மூடுற கேப்ல எங்க நீ போயிருவியோனு பயந்து, கண்ணைச் சிமிட்டாம நீ போற வர வழியவே பாத்திட்டே ‘ப்பேனு’ இருப்பேன்.
ஆனா இன்னிக்கு வந்தவுடனே எதிப்புல நீ! அதுவும் சிரிச்சிட்டே நீயா என்னப் பாத்து வந்தியா…! அப்டியே அசந்துட்டேன்! வானத்தில பறக்கற மாதிரியிருந்தது! டையர்டா இருந்த எனக்கு ப்பிரிஸ்கா மாறுன ஃபீல்! விளக்கம் போதுமா!”
“இதுக்கு முன்ன இருந்த ரிலேசன் வேற, இப்ப இருக்கற ரிலேசன் வேறன்னு உன் மரமண்டைக்கு இன்னும் தோணலையா?”
“ஏந்தோணாமா..!”, என குதூகலமாகச் சிரித்தவன், “எல்லாம் எனக்கே எனக்கா?”, என கண்ணைச் சிமிட்டிக் கேட்டான்.
“வந்ததும் பேசற பேச்சே சரியில்லையே! மணியென்ன?”, என்றவள், “ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வாடா. டீ தரேன்”. என்றுவிட்டுத் திரும்பினாள்.
திரும்பியவளை விடாமல், தன்னோடு இழுத்தணைத்து, “அதெல்லாம் எதுக்கு? நீ மட்டும் போதும்!”, சரசமாகக் கூறினான்.
“நந்தா… சீரியசா கேட்டுக்கிட்டிருக்கேன். அதுக்கும் பதில் சொல்லாம… என்னதிது! வெளிய போயிட்டு வரலாம்னு நினைச்சேன்”, என தனது எண்ணத்தைக் கூறினாள்.
“அப்ப இதல்லாம் எனக்காக இல்லையா?”, என சட்டென முகம் மாறிடக் கேட்டவன், “சரி போகுது. டீக்கு பதிலா ஸ்ட்ராங்கா ஒன்னே ஒன்னு”, என இதழைக் காட்ட
கைவிரல் இரண்டால் தனது இதழில் வைத்து, பிறகு அவனது இதழில் விரலாலேயே ஒற்றி எடுத்தாள்.
“அநியாயம் பண்றடீ!”, என்றவன், அதிதீயின் முகத்தைப் பிடித்து, தனக்கு வேண்டியதை தன் மனம்போல நிறைவேற்றிக் கொண்டு, மனம் நிறைந்த பிறகே பெண்ணை விட்டான்.
இதழ் முத்தம் பித்தம் கொள்ள வைத்திருந்தாலும், உடனே தன்னைச் சமாளித்து நடப்பிற்கு வந்தவள் பொய்யாக, “வந்ததும் வராததுமா என்னதிது? கிளம்பியிருந்தேன். இப்பப் பாரு!”, என தனது இதழைக் காட்டி சலித்துக் கொண்டாள்.
“என்னாச்சுடீ! மேக்கப்பெல்லாம் கலைஞ்சிருச்சா”
“கடிச்சி வச்சிட்டு, ஒன்னுமே தெரியாத மாதிரி கேள்வி கேக்கற பக்கி! இப்டியே எப்டிடா வெளிய போறது!”, என்று சிவந்து தடித்திருந்த உதடுகளைக் காட்டி சிணுங்கலோடு கேட்க
அருகில் வந்து ஆராய்ச்சி செய்வதாக பாவனை செய்தவன், “முன்னைவிட இன்னும் பிரைட்டா தெரிது. வேற எதுவும் எனக்குத் தெரியலையே”, என்றபடியே, “கண்டிப்பா வெளிய போணுமா?”, எனக் கேட்டான்.
“திங்க்ஸ் கொஞ்சம் வாங்கணும், போவமா?”, முகத்தைச் சுருக்கிக் கெஞ்சலாகக் கேட்டாள்.
“இப்டிக் கேட்டா நான் என்னத்தைச் சொல்ல! இன்னிக்கே போகணுமா?”
“ம்ஹ்ம்…”, தலையசைத்தபடியே நந்தாவை யோசனையோடு நோக்கியவள், வந்தது முதலே கிளம்பத் தயங்கியவனின் வார்த்தைகளை மறுஒலிபரப்பு (அவன் பேசினதை திரும்ப மனசுக்குள்ள ஓடவிட்டுப் கேக்கறா) செய்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
“ஏன் கைல மணியில்லையா?”
“இல்லஅஅஅ..”, என ஏதோ சொல்ல வாயெடுத்தவன் நிறுத்தி, “சரி போகலாம். ரெஃரெஷ் பண்ணிட்டு வரேன்”, எனக் கூறிவிட்டு பத்தே நிமிடத்தில் ரெடியாகி வந்திருந்தான்.
முதன் முதலில் நந்தாவோடு, இருசக்கர வாகனத்தில் பயணம். இனித்தாலும், அந்த உணர்வை இருவராலும் பூரணமாக அனுபவிக்க இயலவில்லை.
மனம் முழுமைக்கும் சஞ்சலங்கள். ஆனாலும் இருவரும் ஒருவருக்காக மற்றவர் நடித்தனர். மகிழ்ச்சியாக இருப்பதாக.
பெற்றவர்கள் சம்மதத்தோடு திருமணம் என்கிற நிலை எத்தனை மகிழ்வைக் கொடுத்திருக்கும்! அதெல்லாம் இல்லாமல் நித்திய தேவைகளுக்கு நித்தமும் சிந்தனைப் போராட்டம் நடத்தும் பட்ஜெட் வாழ்க்கை!
பெண் கேட்டு மறுத்தால்? அவன் மனமே அவனைக் கொன்றது.
அவனிடம் கையில் பணம் உள்ளதோ? இல்லையோ? அவள் மனம் தனது அவசர முடிவால் உண்டான அவனது சங்கடங்களை அறிந்து வேதனை கொண்டது. அதனால் நந்தாவின் தலையில் அதிகச் சுமையை கட்டுகிறோமோ எனச் சுட்டது அதிதீக்கு.
செல்லும் வழியில், “நந்தா உங்கைல பைசா இருந்தா வாங்கலாண்டா. இல்லைனா நெக்ஸ்ட் மன்த்கு இன்னும் டென் டேஸ்தான இருக்கு. அப்புறம் வாங்கிப்போம்!”, என்றாள்.
திருமணத்தின்போது நண்பர்கள் கொடுத்துதவிய பணம் சிறிதளவு நந்தாவின் கைவசம் இருந்தது.
முன்பே கையில் இருக்கும் தொகையை பெண்ணிடம் கூறி, அதற்குள் வேணுமென்பதை வாங்கிக் கொள் என நந்தா கூற, நேரத்தைக் கடத்தாமல் வேண்டியதை வாங்கிக் கொண்டு உடனே வீட்டிற்குத் திரும்பினர்.
மனதிற்குள் இன்னும் இலேசாக பயம் இருந்தது.
இருவரும் திருமணத்திற்கு மறுநாளே சென்று முறையாக திருமணத்தை பதிவு செய்திடும் வழிகளைக் கையாண்டிருந்தனர்.
இருந்தாலும், மனதிற்குள் ஏதோ அச்சம்.
இருவரையும் பிரித்திட எண்ணி என்ன வேண்டுமானாலும், எப்போது என்றாலும் செய்யத் துணிந்தவர்கள் இருவரது வீட்டாரும் என்பதை அவர்களுக்குள்ளாகவே உணர்ந்திருந்தனர்.
ஆகையினால், ஒருவர் மற்றவரை காபந்து செய்ய எண்ணி ஒருவருக்கொருவர் விழிப்பாய் இருக்கும்படி கூறிக் கொண்டிருந்தனர்.
தனது வீட்டாரால் பெண்ணுக்கு ஏதேனும் துன்பம் எனில் அதனைத் தவிர்க்கவே வெளியில் பெண்ணை அதிகம் அழைத்துச் சென்று சுற்றுவதைத் தவிர்த்திருந்தான் நந்தா.
வீட்டிற்கு திரும்பியதும், பழைய நிலைக்கு நந்தாவின் மனம் வரத் துவங்கியிருந்தது.
மனம் முழுக்க, தாய் பேசியது, அடுத்து அலுவலகத்தில் அழைத்துப் பேசியது குடைந்தபடியே இருந்தாலும், தனக்குள் வைத்துப் புழுங்கியபடியே அமைதியாக இருந்தான்.
வீட்டிற்கு வந்ததும், நந்தாவின் இயல்பு தொலைந்தாற்போலிருந்த தோற்றத்தைக் கண்டு, “வந்ததும் நல்லாத்தானே இருந்த. இப்ப என்னடா ஆச்சு, இங்க வா”, என அருகே அழைத்தாள்.
“என்னடீ!”, என அலுப்பான குரலில் கேட்டான்.
அமர்ந்திருந்த இடத்திலிருந்து அசையாமல் கேட்டவனை நோக்கி வந்து, “என்னாச்சுடா?”, என நெற்றியில் தொட்டுப் பார்த்தாள்.
“என்ன பிரச்சனைனு சொல்லுடா. ஏன் ஒரு மாதிரியா இருக்க?”, என்றவளிடம் கூறாமல் ஒன்றுமில்லை என்று அவளோடு எழுந்து அடுக்களையில் வந்து நின்றான்.
பெண் அன்றைய தினம் செய்து தந்த உணவை அமைதியாகவே உண்டான்.
பெண்ணும் உண்டு, அனைத்தையும் கழுவி வரும்வரை அருகிலேயே இருந்தான்.
அதிதீயின் பார்வையில் கண்ட பயத்திற்குப் பிறகு, நான் அருகில் இருக்கிறேன் பயப்படாதே எனும்படியாக செயலில் காண்பித்திருந்தான்.
ஆனால் பெண் கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் கூறவில்லை.
////////////
உறங்க பாயை விரித்து படுத்தவன், அருகே புத்தகத்தோடு படிக்க அமர்ந்திருந்தவளிடம், “அதீ.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்”
புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு, ‘சொல்’, என்பதுபோல பார்த்தாள்.
என்ன தோன்றியதோ நந்தாவிற்கு, பெண்ணின் மடியில் தலைவைத்ததோடு, அதீயின் கையை எடுத்து தனது தலையில் வைத்துக் கொண்டான்.
தலை முடிகளுக்கிடையே பெண் தனது விரலைக் கொண்டு அளைவது அவனை எங்கோ கொண்டு செல்லும்.
இரண்டு நாள் பழக்கமானாலும், அதற்கு அவ்வளவு தூரம் அடிமையாகியிருந்தான்.
“கைல என்னடீ வச்சிருக்க”, என அன்றே கேட்டிருந்தான்.
பெண்ணோ புரியாமல், “ஒன்னுமில்லையேடா, ஏங்கேக்குற”
“இல்ல, உங்கைல என்னை மயக்கற ஏதோ வசியமருந்து வச்சிருக்க. அப்டியே இழுத்துட்டுப் போகுது”
“பாத்து… ரொம்ப இழுத்துரப் போகுது”
“ரொம்ப இழுத்தா இன்னும் சுகமாத்தானே இருக்கும்”
அன்றிலிருந்து நேரங்கிடைக்கும் போதெல்லாம் பெண்ணின் மடியில் தலைவைத்துக் கொண்டு அதைத் தொடரச் செய்தான்.
“இன்னிக்கு அம்மாவைப் பாக்கப் போனேன்”, எனத் துவங்கினான்.
பெண் இதைப்பற்றி யோசித்திருக்கவில்லை.
தன்னால் தன் தாயை நந்தாவைப்போல இயல்பாகச் சென்று காணமுடியாத ஏக்கம், அவளையும் மீறி முகத்தில் தெரிந்தது.
ஆணாக இருப்பதால் என்பதைவிட, வீட்டைத் தாங்கும் தூணாக இருப்பதால் நந்தா இருப்பதால், அங்கு சென்று வருவதில் இடர்பாடு இல்லை என்பதும் புரிந்தது.
ஆனால் தான் அப்படி தனது வீட்டிற்குச் செல்ல காலம் கனியுமா?
கனிய வைக்க காலமெடுக்கும் என்பது புரிந்தது.
அதுவும் அவளின் தந்தையை நினைத்ததும், இப்போதும் பயஉணர்வு வந்தது.
தந்தையை மீறி தாய் தன்னோடு வருவாரா?
அத்தனையையும் அடுத்தடுத்து மனக்கண்ணில் ஓடவிட்டு, மனதிற்குள் சலித்தாள்.
ஒருக்களித்த நிலையில் படுத்தபடியே தாய் பேசியதை மறையாமல் அதிதீயிடம் வருத்தத்தோடு கூறிவிட்டான்.
அதில் சிலவற்றை மறைத்து, சிலவற்றை மட்டுமே கூறினான்.
இடையில் எந்த இடையூறும் செய்யாமல் அனைத்தையும் அமைதியாகக் கேட்டிருந்தவள், அவனது தாயின் பேச்சைக் கேட்டுக் கருத்துக் கூறுவாள், ஏன் அங்கு போனாய் என்று எதாவது பேசுவாள் என எதிர்பார்த்திருந்தான்.
ஆனால் அதிதீ எந்தக் கருத்தும் கூற விழையவில்லை.
தனது தந்தைக்கு, குறைவாகவே நந்தாவின் தாய் தன்னைப் பேசியதாகத் தோன்றியது அதிதீக்கு.
ஆனாலும் அதைப்பற்றி நந்தாவிடம் கூறவில்லை.
மாமியாரின் வசைமொழிகளைக் கேட்டவள், “இதுனாலதான் என்னை கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலையா?”
ஆம் என தலையசைத்து ஒப்புக் கொண்டவன், “தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்லயே எங்கம்மா எங்கல்யாணத்தைப் பத்தி பேசுச்சு. அப்பவே உன்னைப் பத்தி சொல்லிட்டேன். ஆனா, அது எங்க மாமா பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லிட்டே இருக்கும். அப்டி இருக்கும்போது உன்னை அங்க கூட்டிட்டுப்போக எனக்குப் பிடிக்கலை”
“இப்ப வந்து நான் உங்கிட்ட கேக்காம இருந்து, எங்கப்பா பாத்த மாப்பிள்ளையவே கல்யாணம் பண்ணிட்டுப் போயிருந்தா என்னடா பண்ணிருப்ப?”
“நீதான் போகலையே. அப்புறம் எதுக்கு அந்தப் பேச்சு”, என்றபடியே பெண்ணது இடுப்பை இறுகக் கட்டிக் கொண்டான்.
சிறுகுழந்தைகள் தனக்குப் பிடித்ததை யாராவது கேட்டால், இறுகப் பற்றிக் கொண்டு, தர மறுப்பது போலிருந்தது நந்தாவின் செயல்.
அதில் நந்தா தன்மீது கொண்டுள்ள காதலை உணர்ந்தாள் பெண்.
“இதுக்கா மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இவ்ளோ நேரம் தெரிஞ்ச!”
“இல்லடீ!”, தயங்கினான்.
“வேறென்ன?”
“எம்டி இன்னைக்கு என்னைக் கூப்பிட்டுப் பேசினாரு!”, எனத் துவங்கியவன்
“எங்க கம்பெனி ஒரு பிரைவேட் லிமிட்டெட். நம்ம ஸ்டேட்குள்ள வேற வேற இடங்கள்லலாம் எங்க கன்ஸ்ட்ரக்சன் வர்க் போகுது. இப்ப செங்கல்பட்டுல நடக்கிற வர்க்க போயி என்னைக் கன்டினியூ பண்ண சொல்றாரு. நான் மேரேஜ் ஆயிருக்கற விசயத்தைச் சொல்லி உன்னைத் தனியா விட்டுட்டுப்போக முடியாது. வேணா அங்கேயே ஷிஃப்ட் ஆகிக்கற மாதிரியும், சம்பளம் கூடுதலாவும் தாங்கனு கேட்டேன்”
“சம்பளம் அதேதானாம், மினிமம் த்ரீ டூ சிக்ஸ் மன்த்ஸ்ல அங்க வர்க் ஃபினிஷ் ஆகிரும்கறார். அங்க ஃபேமிலி கொண்டு போறது போகாதது உன்னிஷ்டம்னுட்டார். நாமதான் அங்க வேணுங்கற ஏற்பாடு பண்ணிக்கனும்னு சொல்றாரு!”
“அங்க செலவு இதைவிட இழுக்கும்… நான் இதுக்கு முன்ன ஒரு சூப்பர்வைசருக்கு பதிலா ஒன்வீக் போயிருந்திருக்கேன். நம்ம ஏரியா மாதிரி இருக்காது”, என நந்தா கூறக் கேட்டவள், அமைதியாகச் சிந்தித்திருந்தாள்.
தந்தையின் வேலையாக இருக்குமோ என்கிற எண்ணம் வந்தது.
சாப்பாட்டிற்கும், தங்குவதற்குமே கஷ்டம் எனில் பெண் திரும்பிவிடுவாள் என இதுபோன்ற விசயங்களைச் செய்கிறாரோ? மனதில் தோன்றியதை நந்தாவிடம் கூறவில்லை.
“நீ என்ன முடிவு பண்ணிருக்க?”, அதிதீ
“இங்க தெரிஞ்ச இடம். எதாவது ஹெல்புன்னா ஃபிரண்ட்ஸ் உடனே ஓடி வந்திருவானுங்க. அங்க தெரியாத இடம். முன்னல்லாம் வர்க் நடக்கிற எடத்திலேயே தங்கிப்பேன். சாப்பாடும் அங்கேயே சாப்பிட்டுக்குவேன். இப்ப உன்னையும் அங்க கூட்டிட்டுப்போனா வீடு பாக்கணும்”
“நான் இங்கயே இருக்கேன்டா. நீ மட்டும் அங்கபோயி வேலை பாரு. உன்னால எப்ப முடியுதோ அப்ப இங்க வா”, என்று வழிமுறை சொன்னாள்.
“யாரை நம்பி உன்னை இங்க விடச் சொல்ற?”, என்றவன், “இங்க உன்னைத் தனியா விட்டுட்டுப்போயி, அங்க என்னால நிம்மதியா எந்த வேலையும் பாக்க முடியாதுடீ”
அதிதீ, “அப்ப அங்கேயே நானும் உங்கூட வந்திரேன்”
“ஒரே குழப்பமா இருக்குடீ”, என்றவன் “மறைமுகமா, இப்ப ஆளுங்களை வேற குறைச்சிட்டு இருக்காங்களாம். போகலைன்னா வேற ஆளத்தான் உனக்குப் பதிலா பாக்கற மாதிரி இருக்கும்னு பட்டுனு சொல்லிட்டார். எனக்கு ஒரே கஷ்டமாப் போச்சு. எப்பவும் இப்டிப் பேச மாட்டாரு. ஆனா என்னவோ தெரியலை இன்னிக்கு இப்டி சொல்லிட்டார்”, என மனக்குறையை மனைவியோடு பகிர்ந்து கொண்டான்.
“போறதுன்னா எப்ப கிளம்பனும்?”
“நெக்ஸ்ட் வீக் தேர்ஸ்டே அங்க இருக்கணும், இன்னும் டென் டேஸ் இருக்கு”
“என்னையப் பத்தி நீ யோசிக்காதடா. நான் இருந்துப்பேன். முதல்ல அங்க போயி வர்க் பாத்துட்டே, வீடு பாரு. ஒத்து வந்தா அடுத்து என்னைய அங்க கூப்பிட்டுக்கோ. இல்லைன்னா அதிகபட்சம் ஆறு மாசந்தான. நான் இங்க தனியா சமாளிச்சிப்பேன்”
“நீ சமாளிச்சிக்குவேன்னு எனக்குத் தெரியாதா? என்னால உன்னைவிட்டுட்டு அங்க நிம்மதியா இருக்க முடியாதுன்னுதான சொல்றேன்”
“சரி இதையே போட்டுக் குழப்பாத. ரெண்டு நாளு அமைதியா இரு. அப்புறமா இதைப் பத்தி யோசிப்போம்”, என்றவளின் மடியிலேயே சற்றுநேரத்தில் உறங்கிப் போயிருந்தான் நந்தா.
தலையை அளவிய கையை பெண் எடுத்ததும், உறக்கத்திலேயே மீண்டும் அவளது கையைத் தேடி தலையில் வைத்துக் கொண்டான்.
“நந்தா, தலையணையில தலை வச்சுப் படுடா”, என்றாள்.
பெண் கூறியதைக் கேட்டவன், மனதில் இருந்ததை அவளிடம் கூறியதால் மனப்பாரம் குறைந்திட சற்று நேரத்தில் ஆழ்ந்து உறங்கியிருந்தான்.
ஏனோ அதீதிக்கு உறக்கம் வரும்போலத் தோன்றவில்லை.
புத்தகத்தைக் கையில் வைத்தபடி கவனத்தை அதில் செலுத்த முனைந்தாள்.
ஆனால், நடப்பு நிகழ்வுகள் எதிலும் கவனத்தைச் செலுத்தவிடாமல், நந்தா கூறியது விஸ்வரூபமாகத் தோன்றிட அனைத்தையும் பின்னே தள்ளியிருந்தது.
///////////
மற்ற தெரிந்த நண்பர்களின் வாயிலாக வேறு எங்கேனும் பணிக்கு ஆட்கள் தேவையா என விசாரித்து ஒரு வாரத்திற்குள் வேறு ஊரில் நடந்த இண்டர்வியூக்களில் சென்று கலந்து கொண்டான் நந்தா.
அனுபவம் இருக்கிறதா எனக் கேட்டார்கள்.
கூறினான்.
ஏன் அங்கிருந்து கொண்டே இந்த புதிய முயற்சி செய்கிறாய் எனக் கேள்விகள் தொடர்ந்தது.
சம்பளம் அங்கு குறைவாக இருப்பதாலும், அதனைக் காட்டிலும் இங்கு இரண்டாயிரம் அதிகமென்பதால், இண்டர்வியூவில் கலந்து கொண்டதாகக் கூறினான்.
முடிவை அலைபேசியில் தெரிவிப்போம் என்றுவிட்டார்கள்.
ஆட்டோகாட் டிசைனர், ட்ரெயினர் போன்ற பதவிக்குரிய இண்டர்வியூவிலும் கலந்து கொண்டிருந்தான்.
சில இடங்களில், பில்டிங் எஸ்டிமேட் போடும் காலிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பித்திருந்தான்.
சென்ற இடங்களிலெல்லாம் ஒரே பதில்.
////////////////
செல்லும் நாள் நெருங்கவே இருவரும் ஏதோ சஞ்சலத்தோடு இருந்தனர்.
குழப்பம் மனதில் இருவருக்குமே நிறைந்திருக்க, இளந்தம்பதியருக்குரிய எந்த உற்சாக, உல்லாச உணர்வும் இன்றி, மன அழுத்தத்தோடே நாட்களைத் தள்ளினர்.
தற்போது வசிக்கும் பகுதியில் வேலை எதுவும் கிடைத்துவிட்டால் நல்லது. இல்லையெனில் கண்டிப்பாக செங்கல்பட்டு சென்றேயாக வேண்டும். அப்படிச் செல்லும்நிலையில், அதிதீயை அவசரத்திற்கு தொடர்பு கொள்ள இயலாத நிலை இருந்தது. அதனால் புதிய மொபைல் வாங்கலாம் என தீர்மானித்தான் நந்தா.
பெண்ணோ, அடுத்த மாதம் சம்பளம் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தாள்.
மொபைல் வாங்கவேண்டும் என்றால், குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயாவது வேண்டும்.
ஐநூறு, ஆயிரத்திற்கு வாங்கினால் எப்படி உழைக்கும் என்று கூற இயலாது என்பதால், “வாங்குறதுனா நல்லதாவே வாங்கிருவோண்டா”, என்றிருந்தாள்.
சம்பள நாளும் வந்தது.
தாய் வீட்டிற்கும், செலவிற்கு பணம் தரவேண்டியிருக்கும் என்பது நந்தாவிற்கு புரிந்தேயிருந்தது.
அதிதீக்கும் தெரிந்தேயிருந்தது.
கிராமத்தில் தாய் தங்கியிருந்த வீடு சொந்தமானது. சாப்பாட்டிற்கும், மேற்படி செலவிற்கு மட்டுமே பணம் தேவை. காய்கறிகள் பெரும்பாலும் அங்கு விளைவதைக் கொண்டு சமாளித்துக் கொள்ளலாம் என நந்தா மனதில் ஒரு கணக்கு போட்டிருந்தான்.
இங்கானால் இருவரும் தங்கும் வீட்டிற்கு வாடகை தர வேண்டும். அதுதவிர தண்ணீர் முதல் அனைத்தையும் காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்கிற நிலையில் இருந்தனர்.
தினசரி சென்று வருவதால் உண்டாகும் பெட்ரோல் செலவு வேறு.
வெளியூர் சென்றுவிட்டால், அந்தச் செலவையும் இதே பணத்திற்குள் சமாளிக்க வேண்டும்.
என்ன செய்ய என்று புரியாத நிலை.
அதிதீ, இருளாயி சொன்னதை மனதில் வைத்து டியூசன் எடுப்பது பற்றி நந்தாவிடம் கேட்டாள்.
யோசித்தவன், “இல்லை வேணாம்”, என்றவன், “என்னால சமாளிக்க முடியும். பாத்துக்கலாம். நீ எதையும் போட்டு மனசக் குழப்பாத!”, என்றான்.
இரண்டு நாள் கழித்து, “பகல்ல வீட்ல போரடிக்குது. ஸ்கூல் எங்கனா வேலைக்கு போகவா?” என்றாள்
பெண்ணது கண்களை ஊடுருவிப் பார்த்தவன் பெண் கூறுவது பொய்தான் என்பதைக் கண்டு கொண்டாலும், “வீட்ல தனியா இருக்க கஷ்டம்னா போடீ. பணம், காசு பிரச்சனைன்னு நினைச்சு போக வேணாம்”, என்றிருந்தான்.
அடுத்து பெண்ணும் அருகே இருந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சென்று தனது ரெசியூம்மை கொடுத்துவிட்டு வந்தாள்.
தேவையிருக்கும் நிலையில் அழைப்பதாகக் கூறியிருந்தனர்.
வேலை கிடைக்கும்வரை, இருப்பதைக் கொண்டு சமாளிப்போம் என தைரியமாகவே இருந்தனர்.
அலுவலகத்திலிருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு நந்தா வெளியேற, அதே நேரம் ராஜேஷ், “அண்ணே”, என்றபடியே நேரில் வந்திருந்தான்.
கையிலிருந்ததிலிருந்து, ஐயாயிரத்தை எண்ணிக் கொடுக்கப் போகும் வேளையில், அதுவரை நந்தா பணத்தை எண்ணுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், “அம்மா, உங்கிட்ட எட்டாயிர ரூவா வாங்கிட்டு வரச் சொல்லுச்சுண்ணே”, என்றான்.
நந்தா என்ன செய்தான்?
அடுத்த அத்தியாயத்தில்…