VVP-2B

அத்தியாயம்-2(2)

சாம்பலின் சாயல்(4):

“கவுதம் மாதிரி நிறைய ஆண்கள் சமுதாயத்துல இருக்காங்க… குடும்பப்பாங்கான பொண்ணுங்க வேணும்ன்னு நினைக்கிறவங்க

“அந்த மாதிரி ஆண்கள் தான் வாழ்க்கை துணைவனா வேணும்ன்னு நினைக்கற பெண்களும் இருக்காங்க. அவங்களோட எதிர்பார்ப்பை நான் தப்புன்னு சொல்லல. ஆனா எனக்கு… என்னோட வாழ்க்கைக்கு செட் ஆகமாட்டாங்க” என்றவள்

சற்று நிறுத்தி மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டு “என்னப்பத்தி நான் அவர்கிட்ட சொன்னதுல ‘ஐம் நாட் எ விர்ஜின்’ன்னு சொன்னதுமட்டும் தான் உண்மை” என முகம் இறுகி சொல்ல “மேடம்” என்று மங்கை மற்றும் ஆதவன் இருவருமே ஒருசேர அதிர்ந்தனர்.

அவர்கள் அதிர்ந்தது புரிந்து தன் கதையை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள் மிதுலா.

———————

கவுதம் அவள் சென்றதையோ மணியயோ பார்க்கவேயில்லை. எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தானோ!

ஆனால் மிதுலா அவள் வீட்டிற்கு சென்றாள் எந்த விதமான உணர்ச்சியும் ஆட்கொள்ளாமல். சென்றவள், தனது வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

இருந்தாலும் கவுதம் பற்றி மனம் சில நிமிடங்கள் நினைத்தது. ‘என்னால உன்கிட்ட முழு உண்மையும் சொல்லமுடில. சொல்றதுக்கான தேவையும் வரல’

‘ஆனா உன்னோட, நீ எதிர்பார்க்கிற “குடும்பப்பாங்கான பொண்ணு அப்படிங்கற கேட்டகரில கண்டிப்பா நான் வர மாட்டேன். அதுனால தான் நான் உண்மைய சொல்லல’ என்று நினைத்தவள் சாமி படம் இருந்த இடத்தை பார்த்து

“அவனுக்கு ஏற்றாற்போல் ஒரு பெண்ணை அவன் கண்ணில் காட்டு. அவன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துவிட்டு தைக்க ஆரம்பித்தாள்.

வழக்கம் போல் அவள் வேலைகள், சிலநாட்கள் தடை படும் தூக்கம் அதனால் விளையும் பயம், தூக்கமின்மை என நாட்கள் நகர்ந்தது.

அவ்வப்போது அவனிடம் பேசிய ஹோட்டலை மட்டும் நோட்டம் விடுவாள். எங்கே அவன் இன்னுமும் தன்னை பார்த்துக்கொண்டு நிற்பானோ என்று.

அப்படி யோசித்தாலும், மனதில் ஒரு மூலையில் திடமாக நம்பினாள் ‘அவன் இனி தன்னை பார்க்க மாட்டான்’ என்று. அதுவே நடக்கவும் நடந்தது. அவள் கடந்து செல்லும்போது அவன் அங்கு இல்லவேயில்லை. மனதில் நிம்மதி பரவியது.

நாட்கள் இன்னமும் வேகமாக நகர, ஒரு நாள் அவள் கம்பெனியில் பொருட்களை வாங்கிக்கொண்டு வரும்போது, அந்த ஹோட்டலை கடக்க, ஏதோ ஒரு உந்துதல். யாரோ தன்னையே பார்ப்பதுபோல்.

முன்பெல்லாம் அப்படியாரேனும் பார்ப்பது நெருடலாக இருந்தால், பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து செல்வாள். ஆனால் கவுதம் பேசியபின், அதே ஹோட்டல், யாரோ பார்ப்பதுபோல் நெருடல்.

அவள் மனமோ ‘ஒருவேளை அவன் மறுபடியும் தன்னை பார்க்கிறானோ? வேறு முடிவு எடுத்திருப்பானோ? தன்னை விரும்புகிறேன் என்று மறுபடியும் சொல்வானோ? அவனிடம் உண்மையை சொல்லவேண்டிய கட்டாயம் வருமோ?’

என்றைக்கும் தெரியாத சஞ்சலம் அவள் முகத்தில் அன்று அப்பட்டமாக தெரிந்தது.

இறைவனிடம் பலகோரிக்கைகள் வைத்து மெதுவாக திரும்பிப் பார்த்தாள், அவனே தான். இவளையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அருவருப்பான ஒன்றை பார்ப்பதுபோல் ஒரு பார்வை.

ஆனால் அவளோ அவனின் அந்த பார்வையை பார்த்து நிம்மதியடைந்தாள்.

‘நீ இப்படி பார்க்கவில்லை என்றால் தான் அதிசயம்’ என நினைத்து அவனுக்கு ஒரு ஏளனப்பார்வையை உதிர்த்துவிட்டு, மறுபடியும் ஒரு உந்துதலில், அவன் பக்கத்தில் யாரோ தன்னை பார்ப்பது போல் இருக்க, ‘யார் அது’ என்பது போல் பார்த்தாள்.

கவுதம் பக்கத்தில் நின்றிருந்தவனின் பார்வையும், மிதுலாவின் பார்வையும் சந்தித்தது.

அவள் உதடுகள் தன்னை அறியாமல் “சக்தி… சக்திவேல்” என்றது. அவனோ புருவங்கள் முடிச்சிட்டு “மிதுலா” என்றான்.

நொடிப்பொழுதில்  சுதாரித்துக்கொண்டு அவசரமாக நடந்து வீடு வந்து சேர்ந்தாள்.

‘ஏன் அவனைப் பார்த்தோம்? தன்னை கண்டுகொண்டானோ? இருக்காது. இருந்தால்தான் என்ன? சமாளிப்போம்’ என்று தனக்குள் பேசிக்கொண்டு தைப்பதில் பிஸி ஆனாள். சிறிதுநேரத்தில் கதவு தட்டும் சத்தம். இதுவரை நடந்திடாத ஒன்று.

ஆம் அவளின் வீட்டிற்கு யாரும் வந்ததில்லை. வீட்டின் உரிமையாளரிடம் கூட ‘தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம். தான் வெளியே செல்லும் நேரத்தை சொல்லி, அப்போது பேசிக்கொள்ளலாம்’ என்றுவிட்டாள்.

அவரும் தன் ஒற்றை அறை வீட்டிற்கு, கேட்ட வாடகையை மறுக்காமல் தருவதால் தொந்தரவு செய்யமாட்டார்.

சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க, ‘அவனாக இருக்குமோ’ என்ற யோசனையுடன் கதவை திறந்தாள். அவனே தான்! சக்திவேல்!

“உள்ள வரலாமா?” என்று கேட்டுக்கொண்டே உள் நுழைந்தான் சக்தி.

கௌதமை தடுத்ததுபோல் அவள் தடுக்கவில்லை. அவன் வீட்டை சுற்றியும் பார்த்தான். பின் அவளிடம் பார்வை திரும்பியது.

‘எப்படி இருந்தவள். எதுபோன்ற இடத்தில் இருந்தவள். இப்போது?’ பல கேள்விகள் இருந்தாலும், அவன் முதலில் கேட்டது….

“எப்படி இருக்கன்னு கேட்க மாட்டேன் மிது. ஏன் கவுதம்கிட்ட பொய் சொன்ன?”  தீர்க்கமான பார்வையில் நேரடியாகக் கேட்டான்.

அவன் கேள்வியில், அவனின் ‘மிது’ என்ற அழைப்பில் அவள் முகத்தில் முதல் முறையாக பல நாட்கள் கழித்து? இல்லை மாதங்கள் கழித்து? இல்லை வருடங்கள் கழித்து? என்னவோ… முதல் முறை புன்னகைத்தாள்!!!

———————

“மேடம் சக்தி ஸார் நல்லவரா இல்ல எப்படிப்பட்டவர்ன்னு கேட்க மாட்டேன். அவர்னால தான் நீங்க முதல் தடவ சிரிச்சது. அதுவும் நீங்க பொய் சொன்னதை கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டாரே. கண்டிப்பா உங்க வாழ்க்கைல அவர் முக்கியமானவர்ன்னு நினைக்கறேன்” என்றாள் மங்கை மிதுலாவிடம்.

அவள் ஆம் என்பதுபோல் தலையசைத்தாள் புன்னகையுடன்!