VVP-9A

அத்தியாயம்-9(1)

நம்பகமான நீலம்(4):

எங்க உங்கள கூட்டிட்டு போனாரு மேடம்?” ஆதவன் ஆர்வத்துடன் கேட்க “மந்திரிக்கவா?” மங்கை குறுக்கிட்டாள் கேலியாக.

மிதுலா சிரித்துக்கொண்டு “உண்மைய சொல்லனும்னா, பேய் அடுச்ச மாதிரி இருந்த என்னோட வாழ்க்கைல, ஒரு பெரிய திருப்பமே அங்க தான் நடந்துச்சு” என்றவள் புன்னகை மாறாமல் பக்கங்களைத் திருப்பினாள்.

———————

அவன் சொன்னதை கேட்டு திட்ட வந்த மிதுலாவை, “போதும். இன்னிக்கி நிறைய திட்டியாச்சு. நாளைக்கு என்ன திட்டறதுன்னு தெரியாம போய்டும். சோ நாளைக்கி கன்டினியூ பண்ணு. இப்போ ரெஸ்ட் எடு” என்றான் இதழோரம் புன்னகையுடன்.

அவனின் செயல் கோவம் வந்தாலும், அவனின் இந்தப்பேச்சு அனைத்தையும் மறக்கவைத்தது மிதுலாவிற்கு. எதுவும் பேசாமல் வீடு வந்தனர்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு, அவன் வீட்டிற்கு சென்றவன், பின் ஹெட் போன்ஸ் எடுத்துவந்தான். தன் மொபைலை ப்ளூடூத்துடன் இணைக்கச்செய்து, படுக்கையில் உட்கார்ந்திருந்த அவளுக்கு போட்டு விட்டான்.

மொபைலில் ஒன்றை ஓடச்செய்ய, ஏதோ பேசவந்தவள், மௌனமானாள்.

சில நொடிகள், அப்படியே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள். கண்கள் தானாக மூடியது.

தன்னை சுற்றி பறவைகளின் கீச் என்ற ரீங்காரம் ஒருபுறம்… நீரோடையின் சத்தம் ஒரு புறம்… மனித அரவமற்ற இடத்தில், அந்த பறவைகளின் கீதத்தில், இயற்கையின் சத்தத்தில்ஒன்றியவள் உணர்ந்தது நிற்சலம், நிம்மதி…!!

உடலெங்கும், மனதெங்கும் பரவியது!!!! மூடிய கண்கள் முதலில் கண்ணீர் வடிந்த தடம்.

பின் அது உறக்கத்தைத் தழுவ, கனவிலும் அதே சத்தம். கனவோநினைவோ… மனது ஒருநிலைப்பட்டது. அலைப்பாயவில்லை… பல வருடங்கள் கழித்து எந்த ஒரு மனபாரமும் இல்லாமல் ஆழந்த உறக்கம்.

அவளின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கவனித்தான். அவள் மூடிய கண்களில் தெரிந்த அந்த நிறைவு அவனை நிம்மதியுறச்செய்தது.

அவள் ஆழந்த உறக்கத்தை எட்டும்வரை அவள் அருகில் இருந்தான். பின் அவளிடம் இருந்து ஹெட் போனஸ்ஸை எடுக்க, அவள் தூக்கம் துளியும் தடைப்படவில்லை.

அங்கேயே சற்று தள்ளி அவனும் உறங்கிவிட்டான்.

இரவு, தூக்கம் தடைப்படவில்லை. நன்றாக உறங்கினாள். காலையில் ஜன்னல் வழியே வந்த வெளிச்சத்தில் கண்விழித்தவள், என்றைக்கும் இல்லாத ஒரு மனநிறைவுடன், புத்துணர்ச்சியுடன் எழுந்தாள். அவளுக்கே அவள் புதிதாக தெரிந்தாள்.

இரவு என்ன நடந்தது என்று யோசிக்க, அவன் அவளிடம் கேட்க சொல்லி கொடுத்தது நினைவிற்கு வர, திரும்பிப்பார்த்தாள். அவன் தரையில் உறங்கிக்கொண்டிருந்தான். கண்ணிமைக்காமல் அவனையே பார்த்தாள்.

தன் வாழ்வை மாற்ற வந்தவனோ? தனக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்கிறானே… இத்தனை நாள் எங்கே இருந்தான்? முன்பு… ‘தன் தாய் தந்தை தனக்காக என்ன செய்தார்கள்? காப்பாற்ற முயற்சி கூட எடுக்கவில்லையே?’ என்ற கோவம் வரும்.

ஆனால் இப்போதுஅவர்கள் செய்த புண்ணியம், இவன் வடிவில் தன்னை காப்பதாக தோன்றியது. கண்டிப்பாக, தான் பழைய நிலைக்கு மாற முடியும் என்று நம்பினாள் முதல் முறையாக.

கண்கள் கலங்கின. கண்ணீர் வடிந்தது. ஆனால் கண்கள் அவனை விட்டு விலகவில்லை. அவனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். எத்தனை நேரம் அப்படியே? தெரியவில்லை…

அவன் விழித்தெழுந்தவுடன், அவள் தன்னையே அசைவின்றி பார்ப்பதை உணர்ந்து, பதட்டத்துடன் அவளை உலுக்க, தன்னிலைக்கு வந்தவள், கலங்கிய கண்களுடன் அவன் கண்களை பார்த்தாள்.

அதில் அவன் பார்த்தது என்ன? அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அதில் பல அர்த்தங்கள் இருந்தது.

என்னைவிட்டு போயிடமாட்டயே சக்தி?” கேட்டுக்கொண்டே அவன் மடியில் சாய்ந்துகொண்டாள். ஒரு தாயின் மடியை அடைந்த குழந்தை போல.

அவள் தலையை ஆதரவாக வருடியவன், “நீயே சொன்னாலும் போகமாட்டேன்உன்னைவிட்டு மிது” அவன் கண்களில் இருந்து வந்த கண்ணீர் அவள் கன்னத்தில் பட்டு அவள் கண்ணீருடன் கலந்தது!!!

சிறிதுநேரத்தில் அவனின் போன் அலற, அதைப் பார்த்தவன் “அச்சோ நேரமாச்சு. கிளம்பனும்” என்று மடியில் படுத்திருந்தவளை அவசரப்படுத்தினான்.

அவள் ஒன்றும் புரியாமல் எழ, “சீக்கரம் குளிச்சிட்டு ரெடி ஆகு மிது. வெளிய சாப்பிட்டு, முக்கியமான இடத்துக்கு போகணும்” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.

புரியாமல் அவனையே பார்க்க, அவள் முன் சொடுக்கிட்டு, அவளை தன்னிலைக்கு வரச்செய்தவன் “இன்னும் முப்பது நிமிஷம். சீக்கரம் ரெடி ஆயிடு” புன்னகையுடன் சொல்லிவிட்டு வெளியேறினான்.

பதில் எதுவும் சொல்லவில்லை, தயாரானாள். வீட்டை பூட்டிக்கொண்டு கீழே இறங்கிச்செல்ல, அவன் பைக் முன் நின்றான்.

பைக்ல தான் போணுமா?” நேற்று போல் கோவமில்லாமல் தயக்கமாக கேட்க, அவனுக்கே புரியவில்லை அவளின்  இந்த மாற்றம். அங்கே சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தினான். இருவரும் ஏறிக்கொண்டனர்.

பைக் எப்போ வாங்கின சக்தி? இப்போதான் வந்ததா சொன்ன?” சந்தேகத்தை அவனிடம் கேட்க “பாண்டிச்சேரில இருந்து வரவெச்சேன் மிது” என்றான்.

அவன் வழி சொல்ல, ஆட்டோகாரன் அவர்களை அழைத்துச்சென்றான். இடம் வந்ததும் இறங்கியவுடன், பெயர் பலகையை பார்த்து அவள் கண்கள் விரிந்தன.

Budding Buds Day Care and Pre-School என்றிருந்தது!

அவன் ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு திரும்ப, அவள் கண்கள் அந்த பலகையயே பார்த்திருந்தது.

மனது தன் சிறுவயது நாட்களை நினைவு கூர்ந்தது. அவன் அழைக்க அவனுடன் உள்ளே சென்றாள்.

எங்கும் குழந்தைகள். எந்த பக்கம் திரும்பினாலும் வாண்டுகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க, அவள் முகத்தில் பிரகாசம் அப்பட்டமாக தெரிந்தது.

சக்தியின் முகத்தில் சின்ன சந்தோஷம். அவளை, அதன் பொறுப்பாளர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றான். அவனைப் பார்த்ததும் அங்கிருந்த பெண்மணி புன்னகையுடன் எழுந்தாள்.

வாங்க சக்தி. வாங்க மிதுலா” என்றதும் மிதுலா, ‘எப்படி தெரியும்என்பது போல் பார்க்க, சக்தி மிதுலாவிடம் “இவங்க ப்ரியா. இந்த டேகேர் இன்ச்சார்ஜ்” என்று அறிமுகம் செய்ய, அவளும் ப்ரியாவை பார்த்து புன்னகைத்தாள்.

அப்போது ஒரு வாண்டு ப்ரியாவிடம் ஓடி வந்து ஏதோ கம்பளைண்ட் கொடுக்க, இவர்களிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

சக்தி மிதுலாவிடம் “மிதுநான் சொன்ன இன்னொரு விஷயம் இது” என்று அவன் சொல்லவரும்முன் “இதுக்கு தான் நீ மைதிலி மேம்’ட்ட மூணு வாரத்துக்கு வேல இல்லன்னு சொல்ல சொன்னயா சக்தி?” நேரடியாக கேட்டாள்.

அவன் அதிர்ந்து அவளைப் பார்க்க, “சோ எல்லாம் உன் பிளான். நீ சொல்றத நான் செய்யணும்ன்னு நினைக்கிறயா? அது எப்பவும் முடியாது சக்தி. நான் நானாவே இருக்கனும். நான் கிளம்பறேன்” என்று கோவமாக சொல்லிவிட்டு, அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை கேட்காமல் அவசரமாக அறையை விட்டு வெளியேறினாள்.

அப்போது, அங்கே ஒரு மழலை நடைபயின்று கொண்டிருக்க, நடக்கத் தெரியாமல் கீழே விழுந்தது. சரியாக அதேநேரம் வெளியே வந்த மிதுலா, குழந்தை விழுவதைப் பார்த்ததும் அங்கிருந்தவர் வருவதற்குள் ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.

அதன் கால்களை நன்றாக தேய்த்துவிட்டு, நீவிவிட, அது அழுகையை நிறுத்தியது. பின் கவனம் மிதுலாவின் முடிக்கு செல்ல, அதைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது.

ஏய் சுட்டி... முடியவிடு…” என்று செல்லமாக மிரட்ட, வாண்டுக்கு குஷி அதிகமாகி, அவள் இடையில் கால் வைத்து ஏறி முடியைக் கொத்தாக பிடித்து விளையாடியது.

அப்போது அங்கே வேலை பார்ப்பவர் அவளிடம் குழந்தையை வாங்க வர, “பேரென்ன?” என்று மிதுலா கேட்க, “ஹாஸினி” என்றார்.

ஹாஸினி குட்டிஆண்ட்டி முடிய விடுங்க” என்று கொஞ்சிக்கொண்டே பிஞ்சு கைகளை முடியில் இருந்து பிரிக்க, குழந்தை நன்றாக ஒட்டிக்கொண்டது மிதுலாவிடம்.

சக்தி இது அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கோவமாக சென்றதையும், பின் குழந்தையை தூக்கிக்கொண்டதயும்…

வேலை பார்ப்பவர் குழந்தையை வரச்சொல்லி கை நீட்ட, அது வருவேனா என்றது மிதுலாவிடமிருந்து. கோவம் சுத்தமாக மறைந்திருந்தது அவளிடம். “சரி கொஞ்ச நேரம் இருக்கட்டும் விடுங்க” என்று மிதுலா சொன்னதுதான் தாமதம்…

சக்தி நேராக அவளிடம் வந்து “வா மிது. போலாம்… உனக்கு இந்த இடம் பிடிக்கலஉனக்கு பிடிக்காததை நான் இன்சிஸ்ட் பண்ணல” பரபரப்பாக, அவசரமாக சொல்ல, அவனை முறைத்தாள்.

பின் அவனிடம்போதும் பில்டப். இதுதானே நீ எதிர்பார்த்த” முறைத்துக்கொண்டு சொல்ல, அந்த குழந்தை விடமாட்டேன் என்று மிதுலாவின் கழுத்தை நன்றாக கட்டிக்கொண்டது.

இங்க பாரு மிது… போதும். நீ தனியா அடஞ்சு கிடந்தது. அது நீ கிடையாது. நான் பாத்துருக்கேன் உனக்கு குழந்தைகளோட இருக்கறது எவளோ பிடிக்கும்ன்னு. ஸ்கூல் முடுஞ்சு அம்மாக்கூடவே இருப்பயே…

ஒரு த்ரீ வீக்ஸ் இங்க இருந்து பாரு. உனக்கு செட் ஆகலன்னாநானே உன்ன வீட்ல போட்டு பூட்டிடறேன். நீ வீட்டுக்குள்ளயே இருக்கலாம். வெளிய வரணும்ன்னு சொன்னாக்கூட திறக்க மாட்டேன்” என்றான் தோள்களைக் குலுக்கிக்கொண்டு தீவிரமாக.

இன்னமும் அவள் முறைக்க “முறைக்காத. பாப்பா பயந்துடப்போகுதுஆனாலும் உனக்கும் கொஞ்சம் மண்டைல மசாலா இருக்கு. இவளோ சீக்கரம் மைதிலி மேம் விஷயம் கண்டுபிடுச்சுட்டயே” திரும்பவும் அவளை சீண்ட

“ஓடிடு” என்றாள் கடுப்புடன் அதேநேரம் புன்னகையை ஏந்திக்கொண்டு!!!

———————

சூப்பர் மேடம். அப்போ உங்க ஃலைப் டெர்னிங் பாயிண்ட் அங்கதான்னு சொல்லுங்க” ஆர்வத்துடன் மங்கை கேட்க, புன்னகையுடன் ஆம் என்றாள் மிதுலா.