Yaaro avan 15

Yaaro avan 15

யாரோ அவன்? 15     

வெண்ணிலா, வெற்றி வேந்தன் தந்த முதல் அதிர்ச்சியில் தன் தலையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

“உன்னோட அக்கா புருசன், சுவாதியோட அப்பா, சுந்தரை கொலை செஞ்ச குற்றத்திற்காக! நிரபராதியான என் கரண் மாமா ஜெயில்ல இருக்காரு!” வெற்றி கடிபட்ட பற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பினான்.

அவன் அழுத்தம் திருத்தமாக சொல்ல, நிலாவின் தொண்டை அடைத்து கொண்டது. அன்று நடந்த சம்பவத்தை நினைத்து!

வெற்றி அவள் இருண்ட முகத்தை கவனித்து, “கிட்டத்தட்ட ஆறு மாசமா உன்ன தேடி அலைஞ்சு! போன மாசம் தான் திருச்சியில உன்னோட அட்ரஸ்ஸ எங்களால கண்டுபிடிக்க முடிஞ்சது!” என்று சொல்ல, நிலா அதிர்ந்து நிமிர்ந்தாள்.

“நீங்க என்னை எதுக்கு தேடணும்?”

“சுந்தர் கொலை செய்யப்பட்ட நேரத்தில நீ, அவன் ரூம்ல இருந்த காரணத்தால!” அவன் நேரடி தாக்குதலில், நிலாவின் கண்கள் தெறித்து விடுவன போல விரிந்தன.

“அந்த தேர்ட் கிளாஸ் லாட்ஜில, அவங்கூட உனக்கென்ன வேலை?”

“…!”

“சுந்தர் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்துல, உன் வேலைய கூட விட்டுட்டு சென்னைய விட்டு ஓடி போக என்ன காரணம்?”

“…!”

“சுந்தர், விமலாவோட குழந்தை தான் சுவாதி என்றதை மறைச்சு, உன் அடையாளத்தை மறைச்சு, சுவாதிய உன் குழந்தன்னு எல்லாரையும் நம்ப வச்சதுக்கு என்ன காரணம்?”

“அப்படியொரு மோசமானவனோட மகளா என் சுவாதிய மத்தவங்க பரிதாபமா பாக்கறத நான் விரும்பல,
அதனால தான்” என்றாள் அவள் குரல் தழுதழுக்க,

“சரி, ஒத்துக்கறேன். அப்ப, என் முதல் கேள்விக்கு பதில்?”

வெண்ணிலா சங்கடமாய் நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட, அவன் பார்வையில் சற்றும் இளக்கம் தென்படவில்லை.
அவளை ஆழ பார்த்த படி, கடுகடுத்து இருந்தது அவன் முகம்!

எப்போதுமே தன் நினைவுக்கு வரவே கூடாது என்று அவள் மனதின் அடியில் போட்டு புதைத்து கொண்ட விசயத்தை அவன் கிளற, வேறு வழியின்றி அவளும் சங்கடமாக சொல்ல தொடங்கினாள்.

#
#
#

கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு.

சென்னையில்,

கற்பகம் அலைபேசியில் சொன்ன தகவலை கேட்டு, வெண்ணிலா வேலையில் இருந்து அடித்து பிடித்து வீட்டிற்கு ஓடி வந்தாள்.

அங்கே, கற்பகமும் வேறு சிலரும் அழுது புலம்பி கொண்டிருக்க, நிலாவை பார்த்ததும் கற்பகம் அழுதே விட்டார்.

“வெளிய தான் குழந்த விளையாடிட்டு இருந்தா, கொஞ்ச நேரத்தில எங்க போனாள்னே தெரியல நிலா? நாங்க எல்லா இடத்திலயும் தேடி பார்த்தோம். ஆனா, நம்ம சுவாதி கிடைக்கவே இல்ல!” என்று சொல்லி விட்டு மேலும் அழ, நிலா துடிதுடித்து போனாள். அவளுக்குள் பயங்கரமான எண்ணங்கள் தோன்றி அவளை அச்சுருத்தின.

‘நிச்சயம் சுவாதி தனியா வெளியே போயிருக்க மாட்டாள். ஒருவேளை, குழந்தையை யாராவது?’ யோசிக்கும் போதே அவள் நெஞ்சம் பதறியது.

நிலா தாமதிக்காமல் காவல் நிலையத்திற்கு விரைந்தாள். அதை தவிர, அவளுக்கு வேறெந்த வழியும் தோன்றவில்லை.

சுவாதி காணாமல் போனதற்கான புகாரையும், சுவாதி பற்றிய மற்ற விவரங்களையும் தந்து விட்டு, பரிதவிப்போடு வெளியே வந்தவளின் அலைபேசி சிணுங்கியது.

புது எண்ணில் இருந்து அழைப்பு வர, பயத்துடன் எடுத்து காதில் ஒற்றினாள்.

“பெரிய ஜான்சி ராணின்னு நினப்பா உனக்கு? போய் முதல்ல கம்ளெய்ன்ட வாபஸ் வாங்கற, இல்லன்னா! சுவாதிய நீ உருப்படியா பாக்க முடியாது” என்று மறுமுனையில் ஆண் குரல் மிரட்டியது.

“என் சுவாதி! யா…யார் நீ?”

“ஓஹோ ரெண்டு வருசத்துல என் குரல் கூட உனக்கு மறந்து போச்சா! நான் சுந்தர் பேசறேன்!”

ஒரு நொடி நிலாவின் பார்வை இருண்டது. பிணமாய் பார்த்த விமலாவின் முகம் அவள் கண் முன் நிழலாடியது.

“அச்சோ, சுவாதிய ஒண்ணும் பண்ணாத, விட்டுடு!” என்று பதறி கெஞ்சினாள்.

“ஏஏய் சத்தம் போடாத, முதல்ல நான் சொன்னதை செய், மத்தத அப்புறம் பேசறேன்!” என்று இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சிறைக்குள் தண்டனை அனுபவித்து கொண்டிருக்க வேண்டிய சுந்தர்! எப்படி வெளியே வந்தான் என்பது அவளுக்கு புரியவில்லை!

அதைப்பற்றி மேலும் யோசிக்க, அவளின் பித்தான தாய் மனம் இடம் தரவில்லை.

சுவாதி கிடைத்து விட்டதாக ஏதோ போய் சொல்லி கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக் கொண்டு, அவன் கைபேசி அழைப்புக்காக பதைபதைப்புடன் காத்திருந்தாள்.

அவன் அழைப்பும் வந்தது.

“சுவாதிய விட்டுடு, பிளீஸ், சின்ன குழந்தை அவளுக்கு ஒண்ணும் தெரியாது. அவளை விட்டுடு!”
நிலா அவனிடம் கெஞ்சி கொண்டிருந்தாள் தன் தைரியத்தை முழுவதுமாக இழந்து.

“நீ என்ன பண்ற! உடனே, ஒரு பத்து! வேணா, அஞ்சு லட்சம் பணத்தை எடுத்துகிட்டு நான் சொல்ற இடத்துக்கு வர்ற!”

“என்னது? ப…பணமா?”

“எவ்ளோ சீக்கிரம் என் கைக்கு பணம் வருதோ? அவ்ளோ சீக்கிரம் உன் கைக்கு சுவாதி கிடைப்பா!”

கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கேவலம் பணத்துக்காக பெற்ற மகளை கடத்தி வைத்து மிரட்டும் அவன் கீழ் தரமான குணம் இவளை அருவெறுக்க செய்தது.

மேலும் எதைப்பற்றியும் யோசித்து கொண்டு தாமதிக்காமல், வங்கிக்கு விரைந்தோடி சென்று தன் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு, அவன் சொன்ன இடத்தை தேடி ஓடினாள் தனியாக!

அந்த லாட்ஜுக்குள் அவள் சங்கடத்துடன் தான் நுழைந்தாள்.

மாலை நெருங்கி கொண்டிருந்த அந்த நேரத்திலும் அங்கு, பாதி முகத்தை மறைத்துக் கொண்ட ஆண்களும் பெண்களுமாக நடமாடிக் கொண்டிருந்தனர்.

அது எத்தனை கீழ் தரமான இடம் என்பதை உணர்ந்து அவள் முகம் அஷ்ட கோணலாகியது.

எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை விரைவாக, இந்த பணத்தை அவன் முகத்தில் வீசிவிட்டு சுவாதியை அழைத்து கொண்டு வெளியேறிவிட வேண்டும் என்று நினைத்து கொண்டு அவன் சொன்ன அறை எண் கதவை தட்டினாள்.

கதவை திறந்து அவளை உள்ளே அழைத்து கொண்ட சுந்தர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின் விளக்கு ஒளிர்ந்தது. அவள் அத்தனை சீக்கிரம் பணத்துடன் வருவாளென அவன் நினைக்கவே இல்லை.

அந்த அறையை பார்வையால் துழாவிய வெண்ணிலா, சுவாதி கட்டிலில் கிடத்தப் பட்டிருப்பதைக் கண்டு பதறினாள்.

“பாவி, குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து இருக்கியா?”

“ப்ச் இல்ல, காஃப் சிரப் தான் கொஞ்சம் டோஸ் அதிகமா கொடுத்திருக்கேன்!” சுந்தர் அசட்டையாக சொல்ல,

“அய்யோ, எவ்வளவு டோஸ் கோடுத்து தொலச்ச? இவ்வளவு நேரமாகியும் குழந்த கண் முழிக்கவே இல்லையே!” என்று ஆதங்கமாய் படபடத்தாள்.

“இன்னும், கூட கொஞ்ச நேரம் அது தூங்கட்டும். அதுவரைக்கும் நீ என்கூட ஜாலியா இரு, வா!” என்று அவன் கோணல் சிரிப்போடு அவளை நெருங்க,

அருவெறுப்பிலும் ஆத்திரத்திலும் இவள் உடல் செந்தீயாக பற்றி கொண்டு எரிந்தது.

“ச்சே நீ எல்லாம் மிருகத்தில கூட சேர்த்தி இல்ல. த்தூ!” அவன் முகத்தில் உமிழ்ந்தவள்,

“இந்தா நீ கேட்ட பணம். என் குழந்தையை நான் தூக்கிட்டு போறேன்!” என்று பண பையை அவன் முன் தரையில் வீசிவிட்டு சுவாதியிடம் விரைந்தாள்.

அவன் வெறி கொண்டவனாக அவளை இழுத்து பிடித்து, “உன் அப்பனால தானடீ இப்ப எனக்கு இந்த நிலைம! அதுக்கு பலன நீ அனுபவிக்க வேணா!” என்று அவன் சாக்கடை புத்தியை காட்டினான்.

வெண்ணிலா ரௌத்திரம் ஆனாள்.

அவன் கையில் இருந்து திமிறி விலகி அவன் முகத்தில் அறைந்து தள்ளினாள்.

கையில் கிடைத்ததை எல்லாம் அவன் மேல் வீசிய பின்னரும், அவன் அடங்காத வெறியோடு முன்னேறி வர,
அவள் காலில் தட்டுப்பட்ட, காலி மது பாட்டிலை கையில் எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்தாள்.

அடித்த வேகத்தில் அந்த பாட்டில் உடைந்து அவன் தலையிலும் நெற்றியிலும் இரத்தம் வழிய, சுந்தர் தடுமாறி கீழே சரிந்தான்.

அப்போது, வெண்ணிலாவிற்கும் வெறி பிடித்து தான் இருந்தது! தன்னையும் தன் மகளையும் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்கின்ற சுதந்திர வெறி!

அவன் இரத்தம் வழிய வலியில் துடிப்பதை பார்த்தும், அவள் மனம் ஆறவில்லை!

சுவாதியை வாரி தூக்கி கொண்டு, காலில் தட்டுப்பட்ட தன் பண பையையும் எடுத்து கொண்டு வேகமாக வெளியேறினாள்.

அவளின் மூளை அப்போது அவளுக்கு ஒரேயொரு கட்டளையை மட்டுமே பிறப்பித்து கொண்டிருந்தது!

‘சுவாதியை சீக்கிரம் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று.

#
#
#

அன்றைய அருவெறுப்பான நிகழ்வை கோர்வையாய் சொல்லி முடித்த வெண்ணிலாவின் முகம் உணர்ச்சிகள் துடைத்து இறுகி போயிருந்தது.

அவள் சொல்வதை எல்லாம் அவளுக்கே தெரியாமல், வெற்றி குரல் பதிவு செய்து கொண்டிருந்தான்.

தேடல் நீளும்…

error: Content is protected !!