Yaaro avan 16

Yaaro avan 16

 

 

 

 

யாரோ அவன்? 16

அன்றைய அருவெறுப்பான நிகழ்வை கோர்வையாய் சொல்லி முடித்த வெண்ணிலாவின் முகம் உணர்ச்சிகள் துடைத்து இறுகி போயிருந்தது.

அவள் சொல்வதை எல்லாம் அவளுக்கே தெரியாமல் வெற்றி குரல் பதிவு செய்து கொண்டிருந்தான்.

“நீ சொன்னது எல்லாம் நிஜம் தான?”

“இனிமே பொய் சொல்ல என்ன இருக்கு!”

“இருக்கு, அந்த ரூம்ல இருந்த எந்த திங்க்ஸ்லயும் உன் கைரேகை கிடைக்கல! அதோட உடைஞ்ச பாட்டில்ல கூட எந்த கைரேகையும் பதியில!” வெற்றி கண்களை சுருக்கி கேட்க,

அவன் கேட்பதைப் புரிந்து கொள்ள நிலாவிற்கு சற்று நேரம் தேவைப்பட்டது. தன் நெற்றியை தேய்த்தபடி அன்றைய நினைவைப் புரட்ட முயற்சித்தாள்.

“உன்னோட மேஜிக் ஃப்ளாஷ்பேக் எல்லாம் முடிஞ்சது போல” என்று வெற்றி ஏளனமாய் பார்த்தான்.

சட்டென அவளுக்கு நினைவு வர, “இல்ல, அன்னைக்கு அவசரத்தில பதட்டத்தில நான் ஸ்கூட்டி டிரைவ் பண்ணிட்டு வந்த ஹேண்ட் கிளோஷ்ஸ ரிமூவ் பண்ணாமலே போயிட்டேன். அதால கூட என் கைரேகை பதியாம இருந்திருக்கலாம்” வெண்ணிலா விளக்கி சொல்ல, இவள் சொல்வதை எத்தனை தூரம் நம்புவதென புரியாமல் வெற்றி குழம்பினான்.

“அப்ப, சுந்தர கத்தியில குத்தினது நீ இல்லன்னு சொல்ல வர்ற?”

“கத்தியா? இல்ல, நான் அவன தலையில தான் அடிச்சேன்!”

“ஷிட், ஷட்அப் நிலா! என்கிட்ட எதையும் மறைக்கணும்னு நினைக்காத?”

“யூ ஷட்அப் வெற்றி! நீயா முடிவு செஞ்சுகிட்டு, என் லைஃப்ல நுழைஞ்சு, என்னை டார்கெட் பண்ணதால மட்டும் நான் கொலைகாரி ஆகிட முடியாது!”
நிலாவும் வீம்பாக அவனை எதிர்த்து பேசினாள்.

“தப்பு செய்யாதவ, எதுக்கு ஊரைவிட்டு ஓடி வரணும். ம்ம்?” வெற்றி அவளை விடுவதாக இல்லை.

“அய்யோ, சுந்தர் செத்து போனதே எனக்கு அப்ப தெரியாது வெற்றி ஏன்? அவன் பெயில்ல வெளிய வந்தது கூட எனக்கு தெரியாது!”
வெற்றி அவளை நம்பாத பார்வை பார்க்க,

“மறுபடியும் அவனால சுவாதிக்கோ, எனக்கோ, எங்க பேமிலிக்கோ வேற எந்த பிரச்சனையும் வந்திட கூடாதுன்னு தான் நல்ல வேலை, நல்ல ப்யூச்சர் எல்லாத்தையும் அங்க விட்டுட்டு இங்க ஓடி வந்தேன்.”

நிலா அன்றைய தன் நிலையை அவனுக்கு புரியவைக்க முயன்றாள்.

“அப்ப, ஏன்? நீ அங்க வந்ததை யாருக்கும் சொல்ல கூடாதுன்னு, அந்த லாட்ஜ் ரூம் பாய்க்கு பணம் கொடுத்த?”

“நானா? இல்ல, நான் அங்க யார்கிட்டேயும் பேசவுமில்ல! எந்த பணமும் கொடுக்கல! சுவாதிய  தூக்கிட்டு நேரா ஹாஸ்பிடல் தான் ஓடி போனேன்.”

வெண்ணிலா மறுத்து சொல்ல,
வெற்றி அவளை ஆழமாய் பார்த்தான்.

அவன் முகத்தில் கடுமை தளர்ந்து சற்று மென்மை மீண்டது.

அவள் கையை பற்றி இதமாய் அழுத்தியவன், “சாரி நிலா, உன் நிலைம எனக்கு புரியாம இல்ல! நீ சுவாதிக்காகவும் அம்மாவுக்காகவும் யோசிக்கிற!”

“…!”

“அம்மாவையும் சுவாதியையும் நான் பார்த்துப்பேன் நிலா! நீ உண்மைய ஒத்துக்கோ! பிளீஸ்!”
வெற்றி அவளுக்காக மனம் இறங்கி வந்து பேச, அவள் தன் கையை அவன் பிடியிலிருந்து இழுத்து கொண்டாள்.

“உனக்கு சொன்னா புரியாதா வெற்றி. நான் எந்த கொலையும் செய்யல” நிலா குரலை உயர்த்தினாள்.

“உன் மனசாட்சிய கேட்டு பாரு டி அது உண்மைய சொல்லும்! நீ செஞ்ச தப்புக்கு என் நித்யாவும் கரணும் பலியாகணுமா?” அவனும் ஆதங்கமாகவே கேட்டான்.

“ஐயோ, உன்ன நான் எப்படி நம்ப வைப்பேன்? என் சுவாதி மேல சத்தியமா, நான் எந்த கொலையும் செய்யல வெற்றி!” என்றாள் தவிப்பாக.
வெற்றி வேந்தனின் மனம் துணுக்குற்றது.

எந்த காரணத்திற்காகவும் சுவாதி மீது நிலா பொய் சத்தியம் செய்ய மாட்டாள் என்பதில் வெற்றி தெளிந்திருந்தான்.

ஆனால், ‘சுந்தரை கொலை செய்தது, வெண்ணிலாவும் இல்லை! கரணும் இல்லை! என்றால், வேறு யார்?’
இந்த கேள்வி அவனுக்கு முன் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று, அவனை திணற செய்தது.

இருவருமே இரு விதமான மனபோராட்டத்தில் உழன்றதால் மேலும் பேசி கொள்ளவில்லை.

சூடான தேநீரை பருகி முடித்து வெளியே வந்தனர்.

வெற்றி காருக்குள் அமர்ந்து அவளுக்காக மறுபக்க கதவை திறந்து விட, “நான் வரல” என்று வீம்பாக மறுத்தாள் நிலா.

அவன் எட்டி அவள் கையைப் பிடித்து காருக்குள் இழுத்து கொண்டான்.

இழுத்த வேகத்தில் அவள் எக்குத்தப்பாய் விழுந்து அவனை முறைக்க, “உன்மேல எந்த தப்பும் இல்லன்னு முதல்ல நிரூபிச்சிடு! அப்புறம் உன்ன விட்டுறேன்” என்று சொல்லி விட்டு வெற்றி காரை செலுத்தலானான்.

“இப்ப, என்னை எங்க கூட்டிட்டு போற?”

“சென்னைக்கு”

“அச்சோ, அம்மாகிட்ட சொல்லணுமே!”

“தேவையில்ல, சென்னையில இருக்க, என் அக்கா கிட்ட உன்ன அறிமுகப்படுத்த அழைச்சிட்டு போறதா சொல்லிதான் அம்மாகிட்ட பர்மிஷன் வாங்கினேன்” வெற்றி சாதாரணமாக சொல்ல, வெண்ணிலாவின் புருவங்கள் உயர்ந்தன.

“உனக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யுது! ஆனா, என்ன? தான்ற திமிர்ல அறிவு தான் மழுங்கி கிடக்கு”
வெண்ணிலா வாய்விட்டு முணுமுணுக்க, வெற்றி அவளை காரமாய் பார்த்தான்.

“வாய் ரொம்ப நீளுது டி உனக்கு!”
என்றான் கடுப்பாக.

“பின்ன, என்மேல சந்தேகம்னா நேரடியா வந்து விசாரிக்க வேண்டியது தான! அதை விட்டுட்டு காதல் கீதல்னு நடிச்சு, என்னையும் என் குடும்பத்தையும் ஏன் ஏமாத்தணும்?”
அவள் ஆதங்கமாக கேட்டு கொண்டே போக, அவன் கைகளில் காரின் வேகம் கூடிக்கொண்டே போனது.

“மனசுல பெரிய சிஐடி சக்கர்னு நினைப்பு” என்றவள் குத்திகாட்டி பேச, கார் ஒருமுறை குலுங்கி நின்றது.

காரை வேகமாக திருப்பி சாலை ஓரம் சடன் பிரேக் அடித்து நிறுத்தினான்.

வெண்ணிலா பதைத்து விழிக்க, வெற்றி அவளை காட்டமாய் பார்த்திருந்தான்.

“எப்படி? எப்படி? உங்ககிட்ட நாங்க வந்து விசாரிச்ச உடனே நீங்க எல்லா உண்மையும் சொல்லிடுவிங்க அப்படிதான!”

வெற்றியின் அமர்த்தலான கேள்வியில் நக்கல் விரவி தெரிந்தது.

“இந்த கேஸ் பத்தி விசாரிக்க வந்த சங்கர நீ என்ன கதி பண்ணேன்னு தான் எனக்கு நல்லா தெரியுமே!” அவன் கடுகடுப்பாய் பேச,

“யாரது சங்கர்?” என்று கேட்டாள்.

“ம்ம் எங்க ஜூனியர் லாயர் சிவசங்கர். போன மாசம் இந்த கேஸ் பத்தி உன்கிட்ட விசாரிக்க வந்தவரை, போயும் போயும் நீ ஈவ் டீசிங் கேஸ்லயா டீ புடுச்சி கொடுப்ப!”

“ஓஒ அது உங்க ஆளு தானா! என்கிட்ட வந்து வக்கீல்னு சொல்லிட்டு, என்னை பத்தி, ஃபேமிலி பத்தின்னு கேள்வி கேட்டுட்டே இருந்தானா! அதான், கடுப்பாகி அவன்கிட்ட பேச்சு கொடுத்துட்டே, போலிஸ் வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிட்டேன்.”
சொல்லிவிட்டு அவள் அசட்டையாக தொளை குலுக்க, வெற்றி தன் தலையில் அடித்து கொண்டான்.

“உன்னால அவருக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா? அதான், குறுக்கு வழியில பிளான் பண்ணி உன் வீட்டுக்குள்ள வந்தேன்!”

“…!”

“ஆனா, நான் எவ்வளவு தேடியும் உன் வீட்டில எந்த ஆதாரத்தையும் என்னால கண்டுபிடிக்க முடியல!”

“…!”

“அதுக்கு அப்புறம் தான், உன்ன லவ் பண்ண வச்சு உன் வாயாலேயே உண்மைய வரவைக்க ட்ரைப் பண்ணேன்.”

“…!”

“பரவால்ல, இந்த பிளான் சொதப்பாம ஒர்க் அவுட் ஆயிடுச்சு” என்று அவன் சொல்ல, வெண்ணிலாவிற்கு அப்படியே அவன் கழுத்தை நெரிக்க வேண்டும் போல ஆத்திரமாய் வந்தது.

“எந்த ஆதாரமும் இல்லாம நான் தான் குற்றவாளின்னு உனக்கு எந்த பட்சி வந்து சொல்லுச்சாம்?”

“சுந்தரோட செல்லுல உன் ஃபோன் நம்பர் இருந்தது”

“அந்த சிம்கார்ட நான் அப்பவே தூக்கி போட்டுட்டேனே!” அவள் சந்தேகமாக கேட்க,

“ம்ம் உன் நம்பர் ரீச்சாகலன்னு போலிஸ் அதை கண்டுக்கல! எங்களுக்கு வேறெந்த க்ளுவும் கிடைக்காததால அந்த நம்பரோட டீடெஸ்ல்ஸ் கலெட் பண்ணோம். அதில உன்னோட பேரும், உன் ஆதார் ஐடியும் கிடைச்சது. அந்த ஃபோட்டோவ பார்த்து தான் கரண் மாமா உன்ன லாட்ஜ்ல பார்த்ததா சொன்னாரு. அப்புறம் தான் தேடி அலைஞ்சு உன்ன கண்டுபிடிச்சோம்.”

வெற்றி விளக்கி சொல்ல, நிலா பதிலின்றி அவன் சொல்வதை எல்லாம் உள்வாங்கி கொள்ள முயற்சித்தாள்.

“ஆனாலும், சரியான கைகாரி டி நீ! உன்ன பத்தி எந்த விசயத்தையும் லீக் ஆக விடாம, அங்கிருந்து எஸ்கேப் ஆகி வந்துட்டே இல்ல?” வெற்றி அவளை மெச்சுகிறானா? இல்லை வைகிறானா? என்பது அவனுக்கே புரியவில்லை.

இப்போதும் வெண்ணிலா ஏதும் பதில் பேசவில்லை. அதற்கு, அவள் பட்ட கஷ்டம் அவளுக்கு தானே தெரியும். இனி, சுந்தரின் நிழல் கூட தங்கள் மீது படக்கூடாது என்று எதுவும் சொல்லாமல் ஓடி வந்திருந்தாள்.

அவனும் அமைதியாக காரை செலுத்தலானான்.

கொஞ்ச நேரத்தில், நினைவுகளின் சுழற்சியில் வெண்ணிலா உறங்கி போனாள்.

ஆனால், வெற்றியின் கண்களை தூக்கம் எட்டவில்லை. அவன் மூளைக்குள் கேள்விகள் நீண்டு கொண்டே இருந்தன. பதில்கள் தெளிவில்லாமல்.

அவர்கள் சென்னை வந்து சேர இரவு தாண்டி இருந்தது.

வெற்றி வேந்தனின் மனதில் கலங்கிய குட்டையாய் ஏதேதோ எண்ணங்கள், நினைவுகள் வந்து போய் கொண்டிருந்தன.

வெண்ணிலா உண்மையை சொல்லி விட்டால் போதும், இந்த வழக்கின் முடிச்சுகள் மொத்தமாய் அவிழ்ந்து விடும் என்ற அவனது எண்ணமெல்லாம் தவிடு பொடியாய்.

இந்த நிமிடம் வரை, அந்த கொலைக்கான மர்ம முடிச்சு பாதுகாப்பாய் ஒளிந்து கொண்டு இருக்கிறது.

அவன் நிழல் தேடல், இன்னும் நீண்டு கொண்டே போக, அவன் உள்ளம் சோர்ந்து போனது.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக, தூக்கமின்றி காரோட்டிக் கொண்டிருக்கிறான் அவன் உடலும் சோர்ந்து போயிருந்தது.

காரை நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு, கண்கள் மூடி அப்படியே முன்பக்கம் தலை கவிழ்ந்து படுத்து கொண்டான்.

அவன் விழித்திரைக்குள் கரண் குமார், நித்ய பாரதி திருமண நாளன்று அவர்களின் புன்னகையும் பூரிப்பும் நிறைந்த முகங்கள் வந்து போயின.

இப்போது, கரண் சிறைக்குள்ளே, தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நோயாளி போல நம்பிக்கை இழந்து கிடக்கிறான்!

எப்போதும் மென்னகையோடு வலம் வரும் நித்யா, கண்ணீரில் சோர்ந்து ஒளி மங்கி துவண்டு கிடக்கிறாள்!

இவர்களை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற முடியாத தன் இயலாமையை நினைத்து அவனுக்கே அவன் மீது கோபம் வந்தது.

நித்ய பாரதியும், வெற்றி வேந்தனும் சிறு வயதிலேயே பெற்றவர்களை ஒரு விபத்தில் பறிகொடுத்து விட்டு, தன் தந்தை வழி தாத்தா பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தவர்கள்.

ஓரளவு வசதி படைத்த குடும்பம் என்பதால் அவர்களின் பருவ காலம் எந்தவித குறைவும் இன்றி சந்தோசமாகவே கடந்தது.

அம்மா இல்லாத காரணத்தாலோ என்னவோ வெற்றிக்கு நித்யாவை அவ்வளவு பிடிக்கும்.

நித்யா மிகவும் மென்மையானவள்.  அவள் உதிர்க்கும் வார்த்தைகள் கூட அதிர்வதில்லை.

கோபத்தை கூட அமர்த்தலான பார்வையில் காட்டி விடுவாள்.  பாரபட்சமின்றி அனைவரிடமும் பரிவாக பழகும் குணம் கொண்டவள்.

வெளிநாட்டு வேலை தான், வெற்றியின் சிறு வயது கனவு.  அதேபோல நான்கு வருடங்களுக்கு முன்பு, கெனடாவில் வேலை கிடைத்து உற்சாகமாக அங்கே போய்விட்டான்.

இரண்டு வருடம் முன்பு நித்யா – கரண் காதல் திருமணத்திற்காக இந்தியா வந்தவன், மறுபடி இப்போதுதான் வந்திருந்தான்.  தீராமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த வழக்கு விசாரணைக்காக.

இந்த கொலை வழக்கில் கரண் கைது செய்யப்பட்ட போது, வெற்றி அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எப்படியும் கரண் மீது குற்றமில்லை என்று நிரூபித்து விடுபட்டு விடுவான் என்ற தைரியத்தில் இருந்து விட்டான்.

அதுவும், சென்னையில் புகழ் பெற்ற வழக்கறிஞர் சூரிய நாராயணன் வழக்கை ஏற்று நடத்தும் போது, தோல்விக்கு வாய்ப்பே இல்லையென்று நம்பியிருந்தான்.

அப்போது நித்யாவும் அதே நம்பிக்கையில் தைரியமாக தான் பேசினாள்.

ஆனால், வழக்கின் சாட்சிகள் அனைத்தும் கரணுக்கு பாதகமாகவே இருக்க, சூரிய நாராயணனும் வழக்கின் போக்கில் அதிருப்தி தெரிவிக்க, அடித்து பிடித்து கொண்டு இரண்டு மாத விடுமுறையில் இந்தியா பறந்து வந்திருந்தான் வெற்றி.

அவர்கள் சேகரித்த விவரங்கள் எல்லாமே வெண்ணிலாவை குற்றவாளியாக கைகாட்ட, வெற்றியும் நாராயணனும் அதையே நம்பினர்.

முதலில் வெண்ணிலாவிடம் முறைப்படி விசாரணை நடத்த தான் சிவசங்கரனை அனுப்பி வைத்தனர்.

அவளின் இப்படிபட்ட பதிலடியை யாருமே எதிர்பார்க்கவில்லை.  இதனால் அவள் மீது மேலும் சந்தேகம் வலுப்பெற தான் செய்தது.

அதன்பிறகு தான் வெற்றி நேரடியாக வெண்ணிலா விசயத்தை கையிலெடுத்து கொண்டது.  மறுபடி சென்று அவளிடம் மூக்கறுபட வேறு யாருக்கும் துணிவிருக்கவில்லை.

சிவசங்கரிடம் சிறிதும் மரியாதை இன்றி நிலா நடந்து கொண்ட விதம், முதலிலேயே அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பி இருந்தது.

அதுவும் அவள் ஆண்களை துச்சமாக பார்க்கும் அந்த திமிர் பார்வை, அவளின் அடாவடி பேச்சு எல்லாமே அவனுக்கு கோபத்தை மூட்டியது.

ஏனெனில், அவனும் ஆண் மகன் அல்லவா!

அவன் மனதில் ஆழமாக பதிந்திருந்த, நித்யாவின் மென்மையான குணத்திற்கு முற்றிலும் முரணான வெண்ணிலாவின் குணம் அவனுக்குள் முதலில் வெறுப்பை தான் வளர்த்தது.

அதனால், அவளிடம் முதலில் இருந்தே அடாவடியாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

ஆனால் நிலா, அவன் எந்த ஆட்டத்திற்கும் அடங்காத சண்டி குதிரையாக இருந்தாள்.

வெற்றி தன் எண்ண ஓட்டத்தை விடுத்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்.

வெண்ணிலா, மூடிய கார் கண்ணாடியில் தலை சாய்த்து, சிறு குழந்தைபோல உறங்கி கொண்டிருந்தாள்.

உறக்கத்தில் அவள் முகம் மென்மையாய், நிர்மலமாய் தெரிந்தது.

தேடல் நீளும்…

error: Content is protected !!