Yaaro Avan 18

Yaaro Avan 18

யாரோ அவன்? 18

கரண் குமார்… தைரியமும் தன்னம்பிக்கையும் இழந்து, திடகாத்திரமான அவன் உடல் தளர்ந்து  அவர்கள் முன்பு நின்றிருந்தான்.

பதட்டத்தில் அவசரபட்டு யோசிக்காமல் அவன் செய்த சின்ன தவறுக்கு, இப்போது கம்பிகளுக்கு பின்னால் குற்றவாளியாக கிடக்கிறான்.

அன்று, இரத்தம் வழிய உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுந்தரை பார்த்தவுடன், தன் நண்பனின் உயிரை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணம் தான் அவன் மனதில் முதலில் எழுந்தது.

அந்த வேகத்தில் தான் முட்டாள் தனமாக அவன் வயிற்றில் குத்திட்டு கிடந்த கத்தியை உருவ முயற்சித்தான்.

அதே சமயம் துடித்து கொண்டிருந்த சுந்தரின் உடல் அடங்கி விட, அந்த அதிர்ச்சியில் அவன் மூளையும் செயல்படாமல் மரத்து போனது.

‘ஐயோ… கொலை… கொல…!’ என்று யாரோ கத்தும் சத்தம் கேட்டு தான் அவனின் சுய உணர்வு மீண்டது.

அதன்பிறகு நடந்த எதையும் அவனால் தடுக்க முடியவில்லை.  எல்லோராலும் கரண் குமார் கொலைக் காரனாக தான் அடையாளப்படுத்த பட்டான்.

‘நான் சுந்தர கொலை பண்ணல!’ என்று சொல்லி சொல்லி, அவன் உடலளவிலும் மனதளவிலும் முழுவதுமாக களைத்து போய் விட்டான்.

கடவுள் மீதும், உண்மையின் மீதும் அவனுக்கு இருந்த அசையாத நம்பிக்கை இப்போது குறைந்து கொண்டே வந்தது.

“இந்த பொண்ண பத்தி உங்களுக்கு என்னென்ன தகவல் தெரியும்? நல்லா யோசிச்சு சொல்லு கரண் மாமா” வெற்றி தன் கைப்பேசியின் திரையில் ஷிவானியின் நிழலுருவத்தை காட்ட,

அதை உற்று பார்த்த கரண் குமார், “இது ஷிவானி, கொஞ்ச வருசத்துக்கு முன்ன எங்க கம்பெனி மாடலா இருந்தா. ரொம்ப திறமையான பொண்ணு” என்றான்.

“சுந்தருக்கும் ஷிவானிக்கும் என்ன பிரச்சனை?” சூரிய நாராயணன் கேள்வி எழுப்ப,

“பிரச்சனைன்னு பெருசா எதுவும் இல்ல சர். சுந்தர், ஷிவானிகிட்ட ரொம்ப நெருங்கி பழக ஆரம்பிச்சான்! ‘அவன் கல்யாணம் ஆனவன், அவங்கூட கொஞ்சம் டிஸ்டன்ஸா பழகு’ன்னு ஷிவானிக்கு ஒருமுறை அட்வைஸ் பண்ணேன். அதுக்கப்புறம் ஷிவானிய அதிகமா சுந்தர் கூட நான் பார்க்கல!”

“இப்ப ஷிவானி எங்க இருக்காங்கன்னு தெரியுமா கரண்?”

“சுந்தர் ஜெயிலுக்கு போனதுக்கு கொஞ்ச நாள் முன்னாடியே ஷிவானி நம்ம கம்பெனிய விட்டு போயிட்டா! அவளோட ஃபேமிலி பெங்களூர்ல இருந்ததா ஞாபகம்!” வெற்றியின் கேள்விக்கு கரண் தனக்கு தெரிந்த பதிலை சொன்னான்.

“எங்களுக்கு உடனே அந்த ஷிவானியோட அட்ரஸ் வேணுமே?” சூரிய நாராயணன் கேட்க,

“நம்ம கம்பெனி ரெக்கார்ட்ஸ்ல ஷிவானியோட பெங்களூர் அட்ரஸ், மத்த டீடெய்ல்ஸ் இருக்கும். நித்திகிட்ட கேளு வெற்றி உங்களுக்கு தேவையானதை அவ எடுத்து தருவா”
நித்யாவின் பேரை சொல்லும் போதே கரணின் முகம் கனிவதை வெற்றி மனதில் குறித்து கொண்டான்.

இவர்களின் துயரை சீக்கிரமே துடைத்தெறிய வேண்டும் என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டான்.

கரணிடம் நம்பிக்கையான வார்த்தைகளை கூறிவிட்டு, இருவரும் சென்றனர்.

நித்ய பாரதி வெகு சுலபமாக ஷிவானியின் பெங்களூர் முகவரியை எடுத்து தந்தாள்.

அந்த முகவரியைத் தேடி, வெற்றி வேந்தனும், பிரபாவதியும் அன்றே பெங்களூர் கிளம்பினர்.

பிரபா… தனியார் துப்பறியும் நிறுவனத்தின் திறமை வாய்ந்த துப்பறிவாளினி! அவள் பெங்களூரில் வளர்ந்தவள் என்பதால் வெற்றிக்கு அவளின் உதவி இன்றியமையாதது ஆனது.

பிரபாவின் மின்னல் வேக செயல்பாட்டினால், மறுநாள் ஷிவானியின் வீட்டை கண்டுபிடித்து விட்டனர்.

எனினும் அவர்களால் ஷிவானியை நெருங்க முடியவில்லை.

ஷிவானி திருமணம் முடிந்து, தன் கணவன், குழந்தையுடன் டில்லியில் வசிப்பதாக தகவல் கிடைத்தது.

என்ன காரணமோ, ஷிவானியின் பெற்றோர் அவளின் தற்போதைய முகவரியை தர, பிடிவாதமாக மறுத்து விட்டனர். எனவே ஷிவானியின் முகவரியை பெற, இவர்கள் வேறு வகையில் முயற்சிக்க வேண்டியதாய் போயிற்று.

“ஷிவானியோட காலேஜ் ஃப்ரண்ட்ஸ் யாரையாவது அனுப்பி, அட்ரஸ்ஸ தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலாமா?” வெற்றி, பிரபாவிடம் யோசனை சொல்ல,

“அது ஃபிளாப் ஆகவும் வாய்ப்பு இருக்கு சர். நாம ஷிவானியோட அட்ரஸ விசாரிச்ச உடனே, வேற ஃபிரண்ட்ஸ்னு வந்து அட்ரஸ் கேட்டா நமக்கே கூட சந்தேகம் வரத்தானே செய்யும்” அதிலிருக்கும் பாதகங்களையும் பிரபா அலசினாள்.

“வேறெப்படி கண்டுபிடிக்கறது? நம்ம நேரம் வீணாகிட்டே இருக்கு” வெற்றி கவலை தெரிவித்தான்.

“என்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு சர்!
அது கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறேன்”

“என்ன பிளான்?”

“எனக்கு தெரிஞ்ச ஃப்ரண்ட் ஒருத்தி, இங்க வந்திருக்கறதால அவங்ககிட்ட உதவி கேட்கலாம்னு நினைக்கிறேன் சர்” என்று பிரபா தன் திட்டத்தை விளக்க, வெற்றி வேந்தனின் புருவங்கள் உயர்ந்தன மெச்சுதலாய்.

# # #

“ஹாய் ஆன்ட்டி, ஹவ் ஆர் யூ?” பிரபல இந்தி சின்னத்திரை நாயகி, தன் வீட்டு வாசலில் வந்து துள்ளலாய் விசாரிக்க,

அந்த நடுத்தர வயது பெண்மணிக்கு சந்தோச ஆச்சரியத்தில், தலை கிறுகிறுத்து மயக்கமே வருவது போலானது.

“அஅஅஆப் பூர்வி எனா! ஓ மை காட்ட்ட்!” (நீங்க பூர்வி தான!) தன் கொழுத்த உடம்போடு துள்ளி குதிக்கவே செய்தார் அவர்.

“எஸ் ராக்கி ஆன்ட்டி, ஆப்கே பாரிமே ஷிவானி பகூத் போல்திதி, பர் ஆப்கோ மில்னேகா சான்ஸ் அபி மில் கெய், ஐ அம் சோ ஹேப்பி ஆன்ட்டி”(உங்களபத்தி ஷிவானி நிறைய சொல்லி இருக்கா! ஆனா, உங்கள சந்திக்கிற சான்ஸ் இப்ப தான் கிடைச்சிருக்கு!)
என்று ராக்கி தேவியை ஆர தழுவிக் கொண்டாள் பூர்வி.

ராக்கி தேவிக்கு பெருமை தாளவில்லை.  பின்னே, தினமும் தவறாமல் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் நடிகை திடீரென்று தனக்கு இத்தனை அருகாமையில் பார்த்து, அவர் திக்பிரமை பிடித்து போனார்.

“ஆப் பெஹலே அந்தர் ஆயியே பூர்வி ஜீ” (நீங்க முதல்ல உள்ளே வாங்க பூர்வி) என்று அவரை உற்சாகமாய் வரவேற்று பழச்சாறு பரிமாறினார்.

“ஆப் தோனோ இத்தினி அச்சி தோஸ்தே கியா? ஷிவானி ஆப்கி பாரிமே ஏக் பார் பீ நை பத்தாயா!?”
(நீங்க ரெண்டு பேரும் இவ்வளோ நல்ல ஃபிரண்ட்ஸா? ஷிவானி உங்கள பத்தி ஒரு முறை கூட சொல்லலையே!) ராக்கி சற்று ஆதங்கமாக வினவினாள்.

“பாப்ரே, ஆப்கி பேட்டி, மேரே பாரிமே ஏக் சப்த் பீ நை போலா கியா? தேக்லீஜியே ராக்கி ஆன்ட்டி, மேஹீ ஹூம் புராணா தோஷ்தி யாத் ரக்கே உன்கீ அட்ரஸ் டூட்டுகே ஆகைய்!” (கடவுளே, உங்க பொண்ணு, என்னை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையா? நீங்களே பாருங்க ராக்கி ஆன்ட்டி, நான் தான் பழைய ப்ரண்ட்ஷிப்ப ஞாபகம் வச்சு அவளை தேடி வந்திருக்கேன்!) என்று முகம் சுருக்கினாள் பூர்வி.

“கொய் பாத் நை ஆஃப் பீ மேரி பேட்டி ஜேசியே” (பரவால்ல விடும்மா, நீயும் எனக்கு பொண்ணு மாதிரி தான்) என்று சமாதானபடுத்தினாள்.

“ஐ மிஸ் சோ மச் ஷிவானி, ஓ அபி கேஸிஹே? கஹாங் ரெஹிதீஹே? உஷ்கோ தேக்னே கேலியே மேரி மன் தடப் தாஹ!” (அவ இப்ப எப்படி இருக்கா? எங்க இருக்கா? அவளை பார்க்கணும்னு என் மனசு அடிச்சுகிட்டே இருக்கு!)

பூர்வி முகம்வாடி உணர்ச்சி பூர்வமாக கேட்க, ராக்கி தேவியின் மனமும் இளகியது.

அவர் ஷிவானியின் நலத்தை தெரிவித்து, அவளின் புகுந்த வீட்டு முகவரியையும் தயக்கமின்றி தெரிவிக்க,

“தேங்க் யூ சோ மச் ராக்கி ஆன்ட்டி!” என்று பூர்வி அதே துள்ளலோடு விடைபெற்று தன் காரில் ஏறிக்கொண்டாள்.

ராக்கி பெருமை பொங்கி வழிந்த இதயத்துடன் தன் தோழியருக்கு ஃபோன் செய்ய விரைந்தார்.

காருக்குள் தன் அருகே அமர்ந்திருந்த, பிரபாவை பார்த்து பூர்வி, உற்சாகமாய்
தன் கட்டைவிரலை உயர்த்தி காட்டினாள்.

# # #

உலையில் இட்ட அரிசியை போல, கற்பகத்தின் உள்ளமும் கொதித்து வெந்து கொண்டிருந்தது.

வெற்றி வேந்தன் செய்த பச்சை நம்பிக்கை துரோகத்தை நினைத்து நினைத்து அவர் நெஞ்சுக்குள் குமுறி கொண்டிருந்தார்.

தன் மகளின் திருமண கோலத்தை காண வேண்டும் என்கின்ற, அவரின் பல நாள் ஆசை நிறைவேற போகும் சந்தோசத்தில் தான் வெண்ணிலாவை, வெற்றி வேந்தனுடன் வழியனுப்பி வைத்தார் அவர்.

ஆனால், வெண்ணிலா கசங்கிய முகத்துடன் தனியாக திரும்பி வர, என்னவென்று விசாரித்தார்.

நிலா எதையும் மறைக்காமல் உள்ளதை உடைத்து சொல்லி விட, அதைக்கேட்டு கற்பகம் அதிர்ந்து போனார்.

வெற்றி செய்த பொய் சத்தியத்தை நம்பி, அவனை தங்கள் வாழ்க்கைக்குள் விட்டது இவர் செய்த தவறு தானே!

தன் நிலாவிற்கு, தனக்கு பிறகு உற்ற துணையாக இருப்பான் என்று கற்பகம் வெற்றியை உளமார நம்பி இருந்தார்.

அவனை தன் பெறாத மகனாகவே நினைத்து கொண்டு, அன்பும் பாசமும் வைத்து உரிமையோடு பழகினார்.

இப்போது!

‘தன் மகளுக்கு விதிக்கப்பட்டது இந்த தனிமையும், வெறுமையும் தானா?’ என்று மனதுக்குள் வெதும்பி தவித்து போனார்.

ஏதோ இந்த உலகமே இருண்டு போனது போல, இடிந்து போயிருக்கும் தன் அம்மாவை நிலாவும் கவனித்து கொண்டு தான் இருந்தாள்.

தன் மடியில் உறங்கி போயிருந்த சுவாதியை தூக்கி கொண்டு, அறையின் கட்டிலில் படுக்கவைத்து போர்த்தி விட்டாள்.

தன் குட்டி மகள் உறங்கும் பேரழகை எப்போதும் போல நின்று ரசனையோடு கண்களில் நிரப்பி கொண்டு, அவளின் பட்டு கன்னத்தில் பட்டும் படாமல் முத்தமிட்டு வெளியே வந்தாள்.

கற்பகத்தின் கலக்கமான முகத்தை கவனித்த, வெண்ணிலாவின் மனமும் துவண்டு போக தான் செய்தது.

நிலாவை பொறுத்தவரை, சுவாதி சின்ன குழந்தை என்றால், கற்பகம் வளர்ந்த குழந்தை.

அவரின் உலகம் மிகச் சிறியது.  தன் கணவன், மகள்கள் என்பதை தாண்டிய எதுவும் அவருக்கு இரண்டாம் பட்சம் தான்.

விமலாவின் இழப்பிலேயே கற்பகம் பாதி உடைந்து போயிருந்தார்.  கொஞ்ச நாட்களில் கணவனும் பிரிந்து விட, அவர் வாழ்நாட்களில் வெறுமையும் வெறுப்பும் படர ஆரம்பித்து இருந்தது.

நிலாவும் சுவாதியும் மட்டும் இல்லை என்றால், அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவு விரக்தியின் பிடியில் இருந்தார்.

கற்பகத்தை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி மீட்டுவர, வெண்ணிலா தனி கவனம் எடுத்து கொள்ள வேண்டியதாக இருந்தது.

கற்பகம் இயல்பிலேயே புதியவர்களிடம் சட்டென பழகும் குணம் கொண்டவர் இல்லை.

வெற்றியுடன் தன் அம்மா அத்தனை சீக்கிரம் உரிமையோடு பேசி, பழகுவதை கண்டு முதலில் நிலா வியந்து தான் போனாள்.

கொஞ்ச நாட்களே ஆனாலும், அந்த மாயகாரனை மறப்பது தன் அம்மாவுக்கு கடினம் தான் என்று எண்ணிக் கொண்டாள்.

அவர் அருகில் அமர்ந்து ஆறுதலாக அவர் தோள் பற்றினாள்.

நிலாவை பார்த்து கற்பகத்தின் கண்கள் கலங்கின.

மகளை பற்றிய தாயின் கணிப்பு முழுவதும் பொய்யாக வாய்ப்பில்லை.

நிலாவின் மனம் வெற்றியின் பக்கம் சாய்ந்ததை கற்பகம் முன்பே உணர்ந்து இருந்தார்.

நிலாவின் பிடிவாத குணம் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், தாயாய் அவள் மனநிலை பற்றி ஓரளவு யூகித்து இருந்தார் அவர்.

ஆனால், இப்போது!

“நீ அவனை நம்பாதன்னு சொன்ன போதே நான் கேட்டிருக்கணும். அந்த ஏமாத்துகாரனை நம்பி, உன் வாழ்க்கையை பணயம் வச்சிட்டேனே நிலா” என்று தலையில் கைவைத்து கொண்டு புலம்பினார்.

கற்பகம், வெற்றியின் மீது கொண்ட அளவுக்கு அதிகமான பாசம், நம்பிக்கையின் விளைவு இது, என்பதை நிலாவும் உணர்ந்து தான் இருந்தாள்.

“நீ இப்படி புலம்பி தவிக்கிற அளவுக்கு நாம எதையும் பெருசா இழந்து போகலம்மா!” தாயை சமாதானம் செய்யும் கடமை இப்போது அவளுக்கானது.

“…!”

“நீ, நான், சுவாதி எப்பவும் போல நிம்மதியா இருக்கலாம்மா. நமக்கு நடுவுல வேற யாரும் வர வேண்டிய எந்த அவசியமும் இல்ல ம்மா” நிலா நிதானமாகவே கூறினாள்.

“அப்படி சொல்லாத நிலா, எனக்காகவும், சுவாதிக்காகவும் உனக்கான வாழ்க்கைய நீ வாழ மறுக்கிறதை, ஒரு அம்மாவா என்னால எப்பவுமே பொறுத்துக்க முடியாது” என்று நிலாவின் கைகளை அழுத்த பற்றி கொண்டார்.

“உங்கள விட்டுட்டு எனக்கான தனி வாழ்க்கையினு எதுவுமே இல்லம்மா” நிலா திடமாக மறுத்து பேசினாள்.

அவளின் சலனமற்ற முகத்தை பார்த்து, “நான் வேணும்னா வெற்றி கிட்ட பேசி பார்க்கட்டுமா?” கற்பகம் சின்ன நம்பிக்கையில் கெஞ்சலாகவே கேட்க,

“அவங்கிட்ட போய் நீ என்னன்னு கேப்பம்மா? புரிஞ்சிக்கம்மா நாம பாத்து, பழகன வெற்றி நிஜமானவன் கிடையாது! ஏன்? அவனோட நிஜ பேர் கூட வெற்றி இல்ல! தெரியுமா?”

“அப்ப, வெற்றி இனிமே நம்ம பார்க்க, வரவே மாட்டானா?” என்று கேட்ட அந்த தாயின் கண்களில் குழந்தை தனமான ஏக்கம் நிறைந்திருந்தது.

“ம்ஹூம் என்ன பெரிய வெற்றி வெற்றின்னு, அவன் என்னை கொலைகாரியா நினச்சிருக்கான் அதைப்பத்தி உனக்கு கவலை இல்ல,
ஏன்? அவன் இல்லாம நம்மால வாழ முடியாதா என்ன? யாரோ அவன்! வந்தான், போனான். சும்மா, அந்த ராஸ்கல பத்தியே புலம்பிட்டு இருந்த எனக்கு கெட்ட கோபம் வந்துடும்”
அமைதியான சமாதானம் வேலைக்கு ஆகாது என்று அவள் பாணியில் கற்பகத்திற்கு நிதர்சனத்தை புரிய வைக்க முயன்றாள் வெண்ணிலா.

“இல்ல நிலா, நம்ம சுவாதி, அப்பா ஏன் வரலன்னு கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு?” கற்பகம் கலக்கமாக நிறுத்த,

“அவளோட அப்பா, இனிமே எப்பவும் வர மாட்டார்னு சொல்லிடு!” நிலாவின் பதில் தடாலடியாய் வந்தது.

“எப்படி நிலா?”

“சொல்லித்தான் ம்மா ஆகணும்! எந்த பொய் சொல்லியும் என் சுவாதி மனசுல வீண் எதிர்பார்ப்ப கூட்ட, நான் விரும்பல” வெண்ணிலா உறுதியாக சொல்லிவிட்டு நகர, கற்பகம் பேச்சிழந்து நின்றார்.

தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிதர்சனத்தை வெண்ணிலா, கற்பகத்திற்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்று கொண்டிருந்த அதே நாளில்,

வெற்றி வேந்தன் நம் நாட்டின் தலைநகரில், அலைந்து திரிந்து ஷிவானி பற்றிய விவரங்களை சேகரித்து கொண்டிருந்தான்.

ஷிவானியின் முகவரியை கண்டுபிடித்து, அவள் நடமாட்டத்தை நோட்டம் விடவே அவர்களின் அடுத்த இரண்டு நாட்கள் கழிந்தன.

நீதிமன்றத்தில் சுந்தர் கொலைவழக்கு விசாரணையும் ஆரம்பித்து இருந்தது.

வாதம், பிரதிவாதம், சாட்சிகள் என வழக்கின் விசாரணை நீண்டு கொண்டிருக்க,

சூரிய நாராயணன், தங்களின் முக்கிய சாட்சியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, சிறிது கால அவகாசம் வேண்டி மனு செய்தார்.

அவரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடுத்த விசாரணை ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்டது.

சுந்தர், ஷிவானியின் பழைய பழக்கம், ஆனந்தனின் சாட்சி இவற்றை தவிர, ஷிவானி தான் குற்றவாளி என்பதற்கு வேறு ஆதாரம் எதுவும் இவர்களிடம் இப்போது இல்லை.

எனவே, “விக்டர், இதுவரைக்கும் நமக்கு வலுவான ஆதாரம்னு எதுவுமே கிடைக்கல! இது மாதிரி கேஸ்ல, குற்றவாளியே முன்வந்து தன் குற்றத்தை ஒத்துகிட்டா தான் உண்டு! சரியா யோசிச்சு ஏதாவது செய் விக்டர்” என்று சூரிய நாராயணன் வழக்கின் நிலையை அவனுக்கு புரியும் படி எடுத்து கூறினார்.

தேடல் நீளும்…

error: Content is protected !!