Yaaro Avan 19

Yaaro Avan 19

யாரோ அவன்? 19

அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலின் முன்னே, தன் காரை உரிய இடத்தில் லாவகமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினாள் அவள்.

சந்தனத்தையும் குங்குமத்தையும் குழைத்தெடுத்த வண்ணத்தில் மிளிர்ந்த பளிங்கு மேனி!

காண்பவரை கட்டி இழுக்கும் அகன்ற மையிட்ட கண்கள்!

மிதமாய் அவள் இதழோடு உறவாடும் வசீகர புன்னகை!

மொத்தத்தில் அவளை பார்க்கும் பெண்களே பொறாமை கொள்ளும் பேரழகாய் காட்சி தந்தாள் அவள்.

பர்ப்பிள் நிற லாங்க் டாப்பும், வெளீர் நீல நிற ஜீன்ஸும் அணிந்து பெரிதாய் அணிமணிகள் ஏதுமின்றியும், அவளை கடந்து செல்பவர்களை திரும்பி பார்க்க செய்தாள் அவள்.

காரின் மறுபக்க கதவை திறந்து, இரண்டு வயது ஆண் குழந்தையை தன் கைகளில் தூக்கி கொண்டு ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தாள்.

சரியாக ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு, ஒரு கையில் பெரிய பையை தூக்கியபடி அவள் வெளியே வர,

அவளின் மறுகையின் விரலை பிடித்து கொண்டு அந்த குழந்தையும் நடந்து வந்தான்.

வெண்ணெயில் தோய்த்தெடுத்த சின்ன கண்ணனைப் போல, அந்த குழந்தை தன் அம்மாவிடம் மழலையில் ஏதேதோ பிதற்றியபடி, தத்தி தத்தி நடந்து வந்தான்.

காரின் லாக்கை விடுவித்து, பின்பக்க கதவை திறந்து பையை உள்ளே வைத்து விட்டு திரும்ப, அவள் கண்முன்னே குழந்தை மாயமாகி போயிருந்தான்.

“காணா! கஹாங் ஹோ தும்?” (கண்ணா! எங்க இருக்க நீ?)
முகத்தில் பரவிய மென்னகையோடு, தன் மகன் அங்கே தான் ஒளிந்து இருப்பானென்று குரல் கொடுத்தபடியே சுற்றும்முற்றும் தேடினாள்.

குழந்தை அவள் பார்வையில் படாமல் போகவே, “ரிஷப்…! ஜல்தி ஆஜா பேட்டா, ஹம் கர் ஜானா ஹேனா”
(ரிஷப்… சீக்கிரம் வா கண்ணா. நாம வீட்டுக்கு போகணும் இல்ல)

தன் குழந்தையின் பதில் குரல் வராமல் போகவே, அவளின் தாயுள்ளம் பதற ஆரம்பித்தது.

“ரிஷப்…! ரிஷப்…! ரிஷப்ப்ப்ப்!” அங்கு வரிசையாய் நிறுத்தப்பட்டு இருந்த, ஒவ்வொரு காரின் இடைவெளியிலும் அவன் பெயரை கூவி அழைத்தபடி தேடினாள்.

“மேரா தோ சால்கா பச்சா தா, கிஸினே தேக்கா கியா?” (என்னோட ரெண்டு வயசு பையன, நீங்க யாராவது பார்த்தீங்களா?)

அங்கே அவள் கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் ஓடி ஓடி சென்று தன் மகனின் அடையாளத்தை கூறி விசாரிக்க, அவர்கள் தெரியாதென தலையசைத்து நகர்ந்தனர்.

அந்த ஷாப்பிங் மால் வாசலில் கண்ணீருடன் இங்கும் அங்கும் ஓடி அல்லாடி, தன் செல்வத்தை தேடி பதைபதைத்தாள் அவள்.

அவளின் செல்ல கண்ணன் கிடைக்கவே இல்லை.

ஒரு நிமிடம், அவளை சுற்றி இருக்கும் அனைத்தும் அவள் கண்முன்னே சுழற்வதை போல தெரிந்தது அவளுக்கு.

அது பொதுவிடம் என்பதை கூட மறந்து, “ரிஷப்…! ரிஷப்…! ரிஷப்…!” என்று கதறி அழுதாள் அவள்.

அங்கே எதிரே காருக்குள் இருந்தபடியே, அந்த தாயின் கண்ணீரையும் கதறலையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.

அவளின் கதறலை பார்த்து ஒரு சிலர் அவளருகே வந்து, போலிஸில் புகார் செய்யும்படி ஆலோசனை வழங்க, அவள் இன்னும் அதிகமாக உடைந்தழுதாள்.

அப்போது தான் அவளுக்கு யோசனை தோன்ற, தன் காரிடம் தட்டு தடுமாறி ஓடிச்சென்று அலைபேசியை கையில் எடுத்தாள்.

ஏதோ புது எண்ணிலிருந்து இருமுறை விடுபட்ட அழைப்பு வந்திருப்பதாக திரையில் காண்பித்தது.

அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.

அவசரமாக தன் கணவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

குறுக்கே, அதே புது எண்ணிலிருந்து அழைப்பு வர, அவளின் முதல் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

“ச்சே!” என்று அந்த புது எண்ணை பதட்டமாக துண்டித்து விட்டு, மறுபடி தன் கணவன் எண்ணுக்கு முயன்றாள்.

இப்போதும் அந்த புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது!

இவள் அந்த அழைப்பை துண்டித்து கொண்டே இருக்க, தொடர்ந்து அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

இவளின் மூளைக்குள் ஏதோ துணுக்குற, அவளின் மென் விரல்கள் நடுங்க, கைபேசியை உயிர்ப்பித்து காதில் ஒற்றினாள்.

“…!”

“ஹாய், ஷிவானி பேபி! எப்படி இருக்க?” இனிமையான ஆண் குரல் மறுமுனையில் கேட்டது.

“நி…நீங்க யாரு?”

“என்ன சில்லி கேள்வி இது! என் வாய்ஸ்ஸ நீ அதுக்குள்ள மறந்திட்டியா என்ன?”

அவன் பேச்சை வளர்த்து கொண்டு போக, “நான் இப்ப பிஸியா இருக்கேன். ஃபோனை வைங்க” என்று துண்டிக்க முற்பட்டவள்,

“நீ லைன கட் பண்ணாம இருந்தா தான், உன் பையன் உனக்கு கிடைப்பான்! ஷிவானி” என்ற அந்த குரலின் எச்சரிக்கையில் கைப்பேசியை அப்படியே தன் காதோடு ஒற்றிக் கொண்டாள்.

“எங்…எங்… என் குழந்தை எங்க?”

“ஹே கூல் பேபி! உன் பையன் சமத்தா இருக்கான்”

“உனக்கு என்ன வேணும்? ப்ளீஸ், என் குழந்தைய என்கிட்ட கொடுத்துடு”

“ப்ச் பார்த்தியா, யாரோ மாதிரி என்கிட்ட கெஞ்சிட்டு இருக்க, முதல்ல நான் யாருன்னு கண்டுபிடி பார்க்கலாம்?”

அந்த குரல் சிறிதும் இரக்கமின்றி அவளின் பலவீனத்தோடு விளையாடிக் கொண்டிருந்தது.

“இல்ல, நீ யாருன்னு எனக்கு தெரியல! நீ எவ்ளோ பணம் கேட்டாலும் கொடுத்துறேன். என் ரிஷப்ப விட்டுடு ப்ளீஸ்” அவள் கண்ணீரோடு மன்றாடினாள்.

“இப்பவும் நீ அழுதா என்னால தாங்க முடியல பேபி, ஐ லவ் யூ சோ மச் பியூட்டி!”

இந்த காதல் சொற்கள் அவளுக்கு வேறொரு கிறக்கமான குரலை நினைவுபடுத்த, அவள் கண்முன்னே காரிருள் படர்ந்தது.

“யார் யார் நீ?”

“சுந்தர்! உன்னோட சுந்தர்!”

“நோ! என்கிட்ட விளையாடாம உண்மைய சொல்லிடு! யார் நீ?”

“உன்னோட விளையாட எப்பவுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் பேபி. பட், இப்ப என் பேரோட நான் விளையாடல. நான் சுந்தர் தான் பேசறேன்.”

“இல்ல, நான் நம்ப மாட்டேன்! நீ சுந்தரா இருக்கவே முடியாது!” ஷிவானி அடுத்தடுத்த அதிர்ச்சிகளால்
மிகவும் பதற்றத்தின் வசப்பட்டு இருந்தாள்.

அந்த நேரத்தில், தன் மகனுக்கு என்ன நேர்ந்ததோ! என்ற தாய்மையின் ஏக்கத்தில் அவள் யோசிக்கும் திறனை முழுவதுமாக இழந்திருந்தாள்.

“என் மகனை மறைச்சு வச்சிகிட்டு, ஏன்? சுந்தர் பேர சொல்லி என்னை மிரட்டுற?”

“நான் சுந்தர் தான் பேசறேன் ஷிவானி!” அவன் அழுத்தமாக உச்சரித்தான்.

“இல்ல! நீ பொய் சொல்ற! நீ நிச்சயமா சுந்தரா இருக்கவே முடியாது!” அவள் வார்த்தைகள் வேகம் பிடித்தன.

“ஏன் பேபி? நான் சுந்தர்னு சொன்னா, நீ என்னை நம்பவே மாட்டேங்கற?”

“நீ எப்படி சுந்தரா இருக்க முடியும்? அவன் தான் எப்பவோ செத்து போயிட்டானே!”

“இல்ல ஷிவானி டியர், நான் இன்னும் உயிரோட இருக்குறதால தான் உன்கூட பேசிட்டு இருக்கேன்!”

“நீ உயிரோட வர வாய்ப்பே இல்ல! நான் தான என் கையால உன்ன குத்தி கொன்னேன்!” அவள் ஆவேசமாய் சொன்னாள்.

“…!”

கைபேசியின் மறுமுனை துண்டிக்கப்பட்டது.

ஷிவானிக்கு ஒன்றுமே புரியவில்லை.  அவள் கையில் இருந்து அலைபேசி கீழே நழுவியது.

“ரிஷப்…!” என்று குரல் கம்ம, இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி அழுதாள்.

“மம்மி! மம்மி!” என்ற அமுத குரல் கேட்டு, அவள் குனிந்து பார்க்க,

ரிஷப், அவளின் துணியை பிடித்து இழுத்தபடி அவளை அழைத்து கொண்டு இருந்தான்.

அந்த நொடியில், எல்லாவற்றையும் மறந்து தன் மகனை அள்ளி சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

தன் மகன் கிடைத்து விட்டான் என்ற எண்ணமே அவள் மனதை நிறைத்து விட்டது.

தன் அருகில் ஏதோ சலசலப்பை உணர்ந்து நிமிர்ந்தவள், அவளை சுற்றிலும் நான்கு பேர் நின்றிருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.

பிரபாவை தவிர மற்ற மூன்று பெண்களும் காக்கி சீருடையில் இருந்தனர்.

ஷிவானியின் தொண்டைக்குழி அடைத்து கொண்டது போலானது.

தன் குழந்தையை தோளோடு சேர்த்து இறுக்கி கொண்டு மிரள மிரள விழித்தாள் அவள்.

சற்று தூரத்தில், காரிலிருந்து இறங்கி வெற்றி வேந்தனும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒருவரும் அவளை நோக்கி வந்தனர்.

“சுந்தர கொலை செஞ்ச குற்றத்திற்காக உங்கள கைது செய்றேன்!” என்று துணை ஆய்வாளர் சொல்ல, அவள் மிரண்டு போய் நின்றாள்.

“இவ்வளவு நேரம் நீங்க ஃபோன்ல பேசினதெல்லாம் ரெக்கார்ட் பண்ணியாச்சு! இதுக்கு அப்புறம் நீங்க தப்பிக்க எந்த வழியும் இல்ல! ஷிவானி மேடம்!” வெற்றி வேந்தன் நிதானமாக சொன்னான்.

சற்று முன், தன்னை கைப்பேசியில் ஏய்த்த அதே குரல்! அவள் முன்னே ஒலிக்க,

ஷிவானியின் பார்வை இருண்டு, அவள் நினைவிழந்து அப்படியே கீழே சரிந்தாள்.

# # #

ஷிவானியை பின் தொடர்ந்த இரு நாட்களிலேயே வெற்றி வேந்தன் அவளை ஓரளவு சரியாகவே கணித்து விட்டிருந்தான்.

ஒரு சின்ன தடயம் கூட விடாமல், ஒருவனை கொடூரமாக கொன்று விட்டு, இங்கு வெகு இயல்பான குடும்ப தலைவியாக வலம் வந்து கொண்டிருந்தாள் அவள்.

அசாத்திய அழகு, திறமை மட்டுமல்ல, அவளுக்கு நுணுக்கமான புத்தி கூர்மையும் இருக்க வேண்டும்.

இல்லையேல், அவளால் இத்தனை இயல்பாக தன்னை காட்டிக் கொள்ள முடியாது என்று எண்ணமிட்டான்.

ஷிவானியை நேருக்கு நேராய் சந்தித்து உண்மையை அறிய முயற்சிப்பது நேர விரயம் என்று வெற்றி யோசிக்க, பிரபாவும் அதையே தான் சொன்னாள்.

ஷிவானியின் பலவீனத்தை அறிந்து கொண்டு, அதைக்கொண்டு அவளை வீழ்த்த வேண்டுமென திட்டமிட்டனர்.

ஒரு தாயாய் ஷிவானியின் பலவீனம்? அவளது செல்ல மகன்!

சுவாதியின் மீது வெண்ணிலா கொண்டிருக்கும் பாசத்தை கண்கூடாக உணர்ந்து இருந்ததால், வெற்றிக்கு இது சரியான யோசனையாக தோன்றியது.

பிரபாவின் முயற்சியால் அங்கிருந்த காவல்துறை உதவியை நாடினான்.

அவன் திட்டத்தை கேட்டு முதலில் அவர்கள் மறுத்தாலும், ஷிவானி குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை விளக்க, காவல்துறை உதவியும் அவனுக்கு கிட்டியது.

கரணிடம், சுந்தர், ஷிவானி இவர்களின் தனிப்பட்ட பழக்கத்தை பற்றி சில விவரங்களை கேட்க,

‘சுந்தர், பொதுவாக பெண்களிடம் பேபி, டியர் என்று தான் பேசுவானாம்! அதுவும் ஷிவானியை ‘பியூட்டி’ என்ற அடைமொழியோடு தான் அதிகமாய் அழைப்பான்’ என்று கரண் சொன்ன விவரங்கள் வெற்றிக்கு சாதகமாக இருந்தன.

“எக்ஸ்லண்ட், மிஸ்டர் விக்டர்! எத்தனை லாவகமா பேசி, அவங்க வாயாலேயே உண்மையை வரவச்சிட்டிங்க! நீங்க கொஞ்சம் பிசறி இருந்தாலும், இந்த பிளான் ப்ளாப் ஆக நிறைய சான்ஸஸ் இருந்தது” என்று காவல்துறை உதவி ஆய்வாளர் அவனை கைக்குலுக்கி பாராட்டி விட்டு சென்றார்.

எனினும் வெற்றி வேந்தன் முகத்தில் மகிழ்ச்சிக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

முன்பு, வெண்ணிலாவை குற்றம் செய்தவளாய் இவன் நினைத்திருந்த போதே, அவளின் குற்றம் நிரூபிக்கபட்டால் சுவாதி தன் அம்மாவின் அருகாமையை இழக்க நேரிடும் என்று மனதிற்குள் பரிதாபம் கொண்டிருந்தான்.

இப்பொழுதும் ஒரு குழந்தை தன் தாயின் அருகாமையை இழந்து போனது! அதன் காரணம் அவனேயாகி போனான்!

குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை என்பது விதிக்கப்பட்டது தான் என்றாலும், ஏனோ? ஷிவானியை வெறும் குற்றவாளியாக மட்டுமே அவனால் பார்க்க முடியவில்லை.

அவளை ஒரு சிறு குழந்தையின் தாயாக தான் எண்ண முடிந்தது அவனால்.

ஆனால், இந்த இரு ஜீவன்களுக்காக பாவம் பார்த்தால், அங்கே இவனுடைய இரு ஜீவன்கள் எந்த தவறும் செய்யாமலேயே மீளா துயரில் மடிந்து போகுமே.

கடமை வீரர்கள் எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்க கூடாது. அவனும் தன் மனதை ஒரே முனையில் வைத்து தன் கடமையை செய்து முடித்திருக்கிறான்.

அவனுடைய இத்தனை நாட்கள் நிழல் தேடலுக்கான நிஜத்தை இதோ கண்டுபிடித்து விட்டான்.

அவன் மனதின் ஓரம் சிறு கலக்கம் ஏற்பட்டு இருந்தாலும், கரண், நித்யாவின் சந்தோசமான வாழ்க்கை மீண்டு விடும் என்ற எண்ணமே அவனுக்கு பெரும் நிம்மதியை தந்தது.

# # #

ஷிவானி விசாரணை கைதியாக சென்னை கொண்டு வரபட்டாள்.

இப்போது, ஒரு தனி அறையில், காவல்துறை பெண் ஆய்வாளர் சங்கரி முன்பு அமர்த்தப்பட்டு இருந்தாள்.

அரைமணி நேரமாய் அவரின் எந்த கேள்விக்கும் இவளிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

கொலைக்காரி  என்ற பட்டத்தினால் அவள் இழந்துவிட்ட தன் கணவனின் அன்பையும், தன் செல்ல மகனின் பிரிவையும் தாங்கிக்கொள்ள முடியாமல், அந்த பேதை மனம் அலையில் சிக்குண்ட துகளாய் உழன்று கொண்டிருந்தது.

“ஷிவானி, ஒழுங்கா உண்மைய சொல்லிடு. இல்ல, நான் உன்ன விசாரிக்கிற விதம் வேற மாதிரி இருக்கும்” என்று அடிக்குரலில் சங்கரி மிரட்ட, நிமிர்ந்த ஷிவானியின் இதழில் இளப்பமான சிரிப்பு வந்து போனது.

“நீ என்ன காரணத்துக்காக சுந்தர கொலை பண்ண? அவனுக்கும் உனக்கும் ஏதாவது முன் விரோதம் இருந்ததா?”

“…”

“ம்ம் பதில் சொல்லு!”

“நான் எதுக்காக அவன உயிரோட விட்டிருக்கணும்?” ஷிவானியின் பதில் கேள்வி சீறிக்கொண்டு வந்தது.

“…!?”

“நான் செஞ்ச ஒரேயொரு தப்பு அவன் ‘என்னை நேசிக்கிறேன்’னு சொன்னதை நம்பினது மட்டும் தான்.
ஆனா? அதுக்காக கட்டின பொண்டாட்டிய கொலை செய்ற அளவுக்கு கொடூரமானவனா இருப்பான்னு எனக்கு தெரியாது! அவனுக்கு பயந்து என்னோட கெரியர், வேலை எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு, சென்னைய விட்டே ஓடி போயிட்டேன்!”

“அப்புறம்?”

“அப்பறம் தான், என்னோட அபிய சந்திச்சேன், ‘அபிஷேக்’ என் வீட்ல எனக்காக பார்த்த மாப்பிள்ளை. என்னோட வெளி தோற்றத்தை மட்டுமில்லாம, என் மனசையும் நேசிச்ச ஒரே ஒருத்தர் அவர் தான். எங்களோட சந்தோசமான வாழ்க்கைக்கான பெரிய வரமா, அடுத்த வருசமே ‘ரிஷப்’ எங்களுக்கு கிடைச்சான்” அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது.

“என் வாழ்க்கையில மறுபடியும் அந்த சுந்தர் வந்திருக்கவே கூடாது! வராமலேயே இருந்திருக்கலாம்!”

“அவன் என்ன பண்ணான் உன்ன?”

“அன்னைக்கு என் மெயிலுக்கு சில வீடியோ கிளீப்ஸ் வந்தது. நானும் சுந்தரும் சேர்ந்து இருக்க மாதிரி! கூடவே சுந்தரும் ஃபோன் பண்ணான்!

‘என் அப்பா செத்துட்டாரு ஹனி! நான் இப்ப பெயில்ல வெளியே இருக்கேன். உன்ன தொந்தரவு பண்ணனும்னு எந்த மோட்டிவ்வும் எனக்கு இல்ல. எனக்கு கொஞ்சம் பணம் தேவபடுது! ஒரு பத்து லட்சம் கொடுத்தன்னா இந்த வீடியோஸ் ஃபுல்லா நான் அழிச்சிறேன்!’

அவன் மிரட்டி இருந்தா கூட எனக்கு சந்தேகம் வந்திருக்கும். அவன் கெஞ்சி கேட்டதை முட்டாள் தனமா நம்பி, அவன் சொன்ன லாட்ஜிக்கு போனேன்!

அவங்கிட்ட நான் செக்க நீட்டும் போதே, ஏதோ ஸ்ப்ரேவ என் முகத்தில அடிச்சிட்டான்! எனக்கு நினைவு வந்தபோது என் கை, கால், வாய் எல்லாத்தையும் கட்டிவச்சிருந்தான் பாவி!

நான் அவனுக்கு செஞ்ச துரோகத்துக்கு
இப்ப, என்னை பழி தீர்த்துக்க போறதா சொல்லி…! சொல்லி…! என்கிட்ட ரொம்ப வல்கரா நடந்துகிட்டான்!”

“…!”

“யாரோ வராங்கன்னு என்னை அப்படியே வாஸ் ரூம்ல போட்டு அடைச்சு வச்சிட்டான்! வெளியே ஏதேதோ விழுந்து உடையற சத்தமெல்லாம் கேட்டது!

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், அவனே வந்து கதவை திறந்தான்.
அவன் தலையில அடிபட்டு ரத்தம் வழிஞ்சிட்டு இருந்தது!

அவனே, கத்தியால என் கட்டு எல்லாம் அறுத்து விட்டான்! நான் அவன உடனே ஹாஸ்பிடல் கூட்டி போகணும்னு திமிரா ஆர்டர் வேற போட்டான்!

அன்னிக்கு அவங்கிட்ட நான் அனுபவிச்ச சித்ரவதை, எனக்கேற்பட்ட அவமானம்! அப்ப எனக்கு வேற எதுவுமே தோணல! அவன் கையில இருந்த கத்திய பிடுங்கி, என் ஆத்திரம் தீர்ற வரைக்கும் அவன குத்தினேன்!

அவன் கீழ விழுந்த அப்பறம் தான், நான் ஒரு கொலை செஞ்சதை என்னால உணர முடிஞ்சது!

அந்த கேடுகெட்டவனை கொன்னதுக்காக நான் தண்டனை அனுபவிக்க விரும்பல!

முதல்ல, அவன் மொபைல் எடுத்து என்னோட விவரம் எல்லாத்தையும் அழிச்சிட்டேன்! என் கைரேகை எல்லாத்தையும் துடைச்சிட்டு, நான் அங்க வந்ததுக்கு அடையாளமா இருக்க, செக் உட்பட எல்லா பொருளையும் எடுத்துட்டு வந்துட்டேன்!”

“உன்ன நேர்ல பார்த்த ஒரே சாட்சி அந்த ரூம் பாய்கிட்ட பணத்தை கொடுத்து சரிகட்ட நினச்சிருக்க! உன்ன பிடிக்க எந்த கொம்பனாலையும் முடியாதுன்ற மிதப்புல இருந்திருக்க! இப்ப, உன் வாயாலேயே நீ மாட்டிகிட்ட!” சங்கரி மீதத்தையும் சொல்லி முடிக்க,

“அப்பவும் சரி, இப்பவும் சரி, அவன கொன்னதை நினச்சு எனக்கு எந்த வருத்தமும் இல்ல! என் இடத்தில வேற எந்த பொண்ணு இருந்தாலும் இதை தான் செஞ்சிருப்பா!” ஷிவானி நெஞ்சை நிமிர்த்தி சொன்னாள்.

இன்ஸ்பெக்டர் சங்கரி, ‘அந்த சுந்தர் எத்தனை பெண்களோட வாழ்க்கையில கீழ்தரமா விளையாடி இருக்கான்!’ என்று எண்ணி, அவரும் ஒரு பெண்ணாய் உள்ளம் கொதித்து போனார்.

தேடல் நீளும்…

error: Content is protected !!