Yaaro Avan 20

Yaaro Avan 20

யாரோ அவன்? 20

மூவரும் சற்று நிம்மதியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டனர்.

வெற்றி வேந்தன் காரை மிதமான வேகத்தில் செலுத்த அவனருகில் சூரிய நாராயணனும், பின் இறுக்கையில் பிரபாவதியும் அமர்ந்திருக்க, அவர்கள் இந்த வழக்கைப் பற்றி அலசி கொண்டு வந்தனர்.

“ஷிவானி, தான் தான் சுந்தர கொலை செஞ்சதா தெளிவான வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. இனிமே எந்த பிரச்சனையும் இல்ல. நாளைக்கு நடக்க போற வழக்கு விசாரணையில கரண் நிச்சயமா விடுதலை ஆயிடுவார். சாதிச்சிட்ட விக்டர் நீ” என்று சூரிய நாராயணன் உற்சாகமாய் பாராட்டி, பெருமையாய் அவன் தோளைத் தட்டி கொடுத்தார்.

வெற்றி சிறிய இதழ் விரிப்போடு நிம்மதியாக தலையசைத்தான்.

“அந்த சுந்தர் பெரிய பிளான் போட்டிருக்கான் சர்! அவன் அப்பா இறப்புகாக பெயில் கேட்டு வெளியே வந்தவன், கேஸ ஹை கோர்ட்டுக்கு எடுத்துட்டு போக டிரைப் பண்ணியிருக்கான்! அதுக்கு பணம் தேவைபட்டதால, பழைய காதலை வச்சு மிரட்டி ஷிவானியையும்! சுவாதிய கடத்தி வச்சு மிரட்டி வெண்ணிலாவையும்! பிஸ்னஸ் சீக்ரேட்ஸ்ஸ வெளிய லீக் பண்ணிடுவேன்னு மிரட்டி கரண் குமார் சாரையும்! பணம் கேட்டு பணிய வைக்க டிரைப் பண்ணியிருக்கான்!”
பிரபா சுந்தரின் திட்டத்தை அவர்களுக்கு விளக்கி சொன்னாள்.

“அவன் மிஸ் பண்ண ஒரே விசயம், அவன் வொய்ஃப் மாதிரியே மத்த பொண்ணுங்களும் கோழையா இருப்பாங்கன்னு நினச்சது தான்!
அந்த முட்டாளுக்கான பதிலை வெண்ணிலா சரியா கொடுத்திருக்காங்க!
அவன் செஞ்ச பாவத்துக்கு ஷிவானி கொடுத்த தண்டனையும் சரிதான்னு நான் சொல்லுவேன், சர்”

தானும் ஒரு பெண்ணாய் பிரபாவதி ஆவேசமாக பேச, இரு ஆண்களும் அவளை ஆமோதித்து மௌனமாய் தலையசைத்தனர்.

பிரபா இறங்க வேண்டிய இடம் வந்துவிட, காரை நிறுத்திய வெற்றி, “நாங்க இவ்வளவு சீக்கிரம் ஷிவானிய பிடிச்சதுக்கு உங்க வேகம் பிளஸ் விவேகமான செயல்பாடு தான் முக்கிய காரணம் பிரபா. இந்த கேஸ்ல எனக்கு உங்களோட சப்போட் கிடைச்சதை என்னோட லக்கா நினைக்கிறேன். தேங்க் யூ வெரி மச் பிரபா” என்று வெற்றி தன் நன்றியை தெரிவிக்க,

“நான் என்னோட தொழில் கடமைய தான் சர் செஞ்சேன். நாம எடுத்துகிட்ட கேஸ் வின் பண்ணதுல எனக்கு ரொம்ப சந்தோசம். பை சர்”
என்று பிரபாவதி தன்னடக்கமாக பதில் தந்து விடைபெற்று சென்றாள்.

பிரபாவை எண்ணி புருவம் உயர்த்தியவனாய் வெற்றி காரை செலுத்தலானான்.

“நாளையோட நித்யாவோட எல்லா பிரச்சனையும் தீர்ந்து போயிடும், சந்தோசம் தான” சூரிய நாராயணன் கேட்க,

நிஜ குற்றவாளி பிடிபட்டதை ஃபோனில் சொன்ன போதே நித்யாவின் குரலில் தெரிந்த நெகிழ்வையும் உயிர்ப்பையும் வெற்றி வேந்தன் தன் மனதில் ஓட்டிப் பார்த்தான்.

அதோடு வேறொன்றும் அவன் நினைவிற்கு வர, “சூரியா சர், நாளைக்கு கோர்ட்ல நிலாவோட சாட்சியும் தேவைப்படுமா! என்ன?” என்று வினவினான்.

“அவசியமில்லன்னு தான் நினைக்கிறேன் பார்க்கலாம்”

“இந்த கேஸ்ல நிலா பேரு அடிபடாம பாத்துக்கங்க சர்! ப்ளீஸ்”
வெற்றி கேட்டு கொள்ள, சூரிய நாராயணன் அவனை கேள்வியாக பார்த்தார்.

“அது, சுந்தரால சுவாதி கடத்தப்பட்டதையும் நிலாகிட்ட அவன் கீழ்தரமா நடந்துகிட்டதையும் அத்தனை பேருக்கு முன்னாடி கோர்ட்ல விளக்கி சொல்ல, நிலா சங்கடபடுவா, அதனால தான் சொல்றேன் சர்” வெற்றி விளக்கம் தர, அவரின் புருவங்கள் நெற்றி மேட்டுக்கு ஏறின.

“வெண்ணிலாவ எப்படியும் குற்றவாளி கூண்டில ஏத்தாம விடமாட்டேன்னு, முன்ன வீராவேசமா பேசிட்டு, இப்ப அவளை சாட்சி கூண்டுல ஏத்தக்கூட இவ்வ்வ்ளோ யோசிக்கிறியே விக்டர். ம்ம் என்ன விசயம்?” சூரிய நாராயணன் கிண்டலாகவே கேட்க,

வெற்றி, “இல்ல சர், முதல்லயே தேவையில்லாம நிலாவ ரோம்பவே டார்ச்சர் பண்ணிட்டேன். இனிமே என்னால அவளுக்கு எந்த தொந்தரவும் ஏற்பட வேணாம்னு நினைக்கிறேன். அதான்” என்றான் தயக்கமாய்.

அவனை ஆமோதித்து தலையசைத்தவர், “நாளைக்கு கோர்ட்ல சந்திக்கலாம்” என்று தன் வீட்டின் முன் இறங்கி, அவனிடம் விடைபெற்று சென்றார்.

வெற்றியின் எண்ணங்கள் இப்போது நிலாவிடம் இருந்து நாளைய வழக்கு விசாரணை பற்றிய யோசனைக்கு தாவியது.

# # #

மறுநாள் வழக்கு விசாரணை கரண் குமாருக்கு எல்லா வகையிலும் சாதகமாகவே முடிந்தது.

ஷிவானி, தன் குற்றத்தை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ள, அந்த கொலை வழக்கில் இருந்து கரண் குமார் எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டான்.

ஷிவானியின் மேற்கட்ட விசாரணை அடுத்த தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நீதிமன்ற வழக்கங்களை முடித்து விட்டு வெளியே வந்த கரண் குமார், தன் காரின் அருகே அவனுக்காக தவிப்போடு காத்து நின்ற தன்னவளை கவனித்து, விரைந்து வந்து அவளை இறுக அணைத்து கொண்டான்.
அது பொதுவிடம் என்பதையும் மறந்து, சுற்றி நின்றிருந்த மற்றவர்களையும் மறந்து, நித்யபாரதியும் தன் கணவனின் அருகாமையில் நிறைந்து போனாள்.

கிட்டத்தட்ட ஏழு மாதங்களான பிரிவு துயருக்கான ஆறுதலாய் இப்போதும் அவர்களின் நான்கு கண்களிலும் ஈரம் பரவ தான் செய்தது.

அவர்களை கவனித்து கொண்டிருந்த வெற்றியின் இதழில் சந்தோச புன்னகை பரவ, அவன் முகம் முழுவதும் மலர்ந்தது.

அவனருகில் வந்த சூரிய நாராயணன், “நம்ம போராட்டத்தை விட, அவங்களோட ஆழமான அன்பு தான் அவங்கள மறுபடியும் சேர்த்து வச்சிருக்கு விக்டர்” என்று கனிவாய் சொல்ல, வெற்றி வேந்தன் நெகிழ்வோடு மேலும் கீழும் தலையாட்டினான்.

அவரிடம் திரும்பியவன், “உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல சர். நீங்க எங்களுக்கு செஞ்சத அந்த மூணு எழுத்துக்குள்ள என்னால அடக்க முடியல” வெற்றி நன்றி நவில,

“நீ ரொம்ப நல்லாவே பேசற விக்டர். இதுக்காக எல்லாம் பீஸ்ல இருந்து ஒத்த ரூபா குறைக்க மாட்டேன் பார்த்துக்க” என்று அவர் புன்னகையோடு சொல்ல, வெற்றியும் அவருடன் சேர்ந்து சிரித்து விட்டான்.

அப்போது தான், அபிஷேக் தன் வக்கீலுடன் தீவிரமாக பேசி கொண்டிருப்பதை இருவரும் கவனித்தனர்.

“ஷிவானியோட ஹஸ்பண்ட் அவர்.
உண்மையிலேயே ரியல் ஹீரோப்பா! இந்த சூழ்நிலையிலும் தன் மனைவிய காப்பாத்த போராடிட்டு இருக்காரு!” சூரிய நாராயணன் பெருமையாய் சொல்ல,

“அவரோட போராட்டம் ஜெயிக்கணும் சர்!” வெற்றி வேண்டுதலாய் பதில் தந்தான்.

“நிச்சயமா விக்டர், ஷிவானி தன்னை காப்பாத்திக்க தான் வேறுவழி இல்லாம அந்த கொலைய செஞ்சிருக்காங்க. அதோட சுந்தர் முதல்லயே தண்டனைக்குட்பட்ட குற்றவாளியும் கூட. அதனால கருணை அடிப்படையில ஷிவானியோட தண்டனை காலம் குறைய நிறைய வாய்ப்பு இருக்கு!”
சூரிய நாராயணன் ஷிவானிக்கு சாதகமாக சொன்ன விசயங்கள் வெற்றி வேந்தன் மனதிற்கும் ஆறுதல் தருவதாய் இருந்தது.

வாழ தகுதியற்ற ஒருவனின் இழப்புக்காக ஒரு குடும்பத்தை குலைப்பதில் அவனுக்கு சற்றும் உடன்பாடு இல்லை.

நித்யா, கரணின் அருகில் சென்ற வெற்றி, சற்று உரக்க தொண்டையை செரும, “க்க்க்கும்ம்…” அவர்கள் இருவரும் சின்ன வெட்கத்துடன் விலகி நின்றனர்.

“என்ன மாம்ஸ், வீட்டுக்கு வர மாதிரி ஐடியா இருக்கா? இல்ல, இங்கயே!” வெற்றி வேண்டுமென்றே குறும்பாய் இழுத்து பேசி, நித்யாவின் கையால் இரண்டு செல்ல அடிகளை பரிசாய் பெற்றுக் கொண்டான்.

அவர்கள் மூவரின் முகங்களிலும் வார்த்தைகளில் அடங்காத அளவு சந்தோசமும் நெகிழ்ச்சியும் நிறைத்திருந்தது.

# # #

பெரும் புயலுக்கு பின் – இதழ் விரிக்கும் சிறு பூக்கள் பேரழகு!

பெரும் போராட்டத்திற்கு பின் – கை சேரும் காதல் நூறழகு!

இவர்களுடையதும் வாழ்வா? சாவா? போராட்டத்திற்கு பிறகு சேர்ந்த காதல் தான்.

கரண் குமார், தன் வாழ்க்கைக்கு தன்னால் திரும்பாமலேயே போய்விடுமோ! என்று அவனை அரித்து கொண்டிருந்த பயம் நீங்கி, மீண்டு வந்த தன் வாழ்வை முழு மகிழ்ச்சியாக அனுபவிக்க தொடங்கி இருந்தான்.

கரண் முன்பும் நித்யா மீது தீரா காதல் கொண்டவன் தான் என்றாலும், இப்போது அவளை ஒரு நொடி கூட பிரிய மனமில்லாமல் அவள் பின்னாலேயே சுற்றி வந்தான்.

அதை வெற்றி வேந்தன் நமட்டு சிரிப்புடன் கவனித்தும் கவனிக்காமல் விட்டு விட்டான்.

இத்தனைக்கும் கரண் குமாருக்கு தன் கம்பெனி வேலைகள் தலைக்கு மேலிருந்தன. தன் வாடிக்கையாளர்களுக்கு தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன்.

வெற்றியும் தன்னாலான உதவிகளை செய்து கொண்டு அவனுடன் தான் இருந்தான்.

எனினும், நிமிட இடைவெளியும் விடாமல், எந்த விசயமும் இன்றி, நித்யாவிடம் அலைபேசியில் தொடர்ந்து உருகி பேசிக்கொண்டு இருந்த கரணை பார்த்து, வெற்றி கேலியாக சிரித்து விட,

“போடா மாப்ள, என் கஷ்டம் எனக்கு தான் தெரியும். நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன் டா” என்றான் கரண் வெட்க புன்னகையோடு.

“என்ன முடிவு மாம்ஸ்?”

“இனிமே நித்தியையும் கம்பெனிக்கு என் கூடவே அழைச்சிட்டு வந்துட்டா, எனக்கு நிறைய உதவியா இருக்கும்னு நினைக்கிறேன் டா” என்று அவன் மேலும் யோசனை சொல்ல, வெற்றி, தன் வயிற்றை பிடித்துக் கொண்டு வாய்விட்டு சிரித்து விட்டான்.

நித்யா ஒருபுறம், தன் கணவன் மீண்டு வர வேண்டும் என்று வேண்டுதல் வைத்து இருந்த ஒவ்வொரு கோயிலாய் அவர்களை அழைத்து சென்று, தன் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தாள்.

மனிதன் வேண்டிக் கொள்ளும் அனைத்தையும் தெய்வம் தந்து விடுவதில்லை. அப்படி இருக்க, தன் வேண்டுதலை ஏற்று, தன் வாழ்வை மீட்டு கொடுத்ததற்காக அவள் நெகிழ்வோடு நன்றி தெரிவித்து கொண்டிருந்தாள்.

அதோடு, கரண் கேட்டு கொள்ள, அவனுடன் கம்பெனி வேலைகளையும் பார்க்க தொடங்கினாள் நித்ய பாரதி.

அவர்கள் இருவரின் மகிழ்ச்சியை கண்டு வெற்றியின் மனமும் நிறைந்து போனது.

அவர்களின் சந்தோச நாட்கள் ரெக்கை கட்டி பறக்க, வெற்றி வேந்தன் தன் விடுமுறை முடிந்து கனடா செல்ல வேண்டிய நாளும் நெருங்கி வந்தது.

நித்யாவிற்கு இதற்கு முன், குறும்புகள் செய்யும் செல்ல தம்பியாக இருந்த வெற்றி, இப்போது அவளுக்கு எல்லாமுமான தந்தையாகி போயிருந்தான்.

“வெற்றி, என் ஃப்ரண்ட் ரோஷினிய உனக்கு ஞாபகம் இருக்கா?” காலை உணவு பரிமாறிய படி நித்யா கேட்க,

“ம்ம்…! ஓஒ அந்த அல்டாப்பு வாயாடி தான” என்று சுடசுட இட்டலியை தேங்காய் சட்டினியில் தோய்த்து வாயிலிட்டபடியே, பதில் கேள்வி கேட்டான் இவன்.

தன் தோழியை கிண்டல் செய்ததற்காக அவன் தலையில் சின்ன கொட்டு வைத்தவள், “அவளோட தங்கை வைஷ்ணவிக்கு வரன் பார்க்கறாங்க டா” என்றாள் தகவலாய்.

“வைஷூ…!” என்று நெற்றி சுருக்கி யோசித்தவன் நினைவு வந்தவனாய், “இப்ப அவங்க ஏதோ யோகா சென்டர் நடத்தறாங்க இல்ல. சரிக்கா, என் ப்ரண்ட்ஸ் சர்க்கல்ல சொல்லி விடறேன்” என்று வெற்றியும் தகவலாய் பதில் தர, அவனருகில் சாப்பிட்டு கொண்டிருந்த கரண், வாய்விட்டு பக்கென சிரித்து விட்டான்.

“ட்டேய்ய், வைஷூவ நான் உனக்காக பார்த்து வச்சிருக்கேன் டா” நித்யா கலவரமாய் சொல்ல, வெற்றி மலங்க மலங்க விழித்தான்.

“என்ன மச்சான், இப்படி முழிக்கற? நீ தான உன் அக்கா மாதிரியே அழகா! அடக்கமா! திறமையும் இருக்கற பொண்ணு வேணும்னு கேட்டிருந்த, நித்தி, உனக்காக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த பொண்ணு தான் வைஷு” கரண் விளக்கி சொல்ல,
வெற்றி யோசனை கூட இன்றி ஏதோ துணுக்குற்று அமைதியாகவே இருந்தான்.

“வைஷு, நல்ல குணமான பொண்ணு டா, உனக்கு எல்லா விதத்திலயும் பொருத்தமா இருப்பான்னு எனக்கு தோணுது டா” நித்யா மேலும் சொல்ல,

“என்ன நித்தி நீ, இன்னும் ரெண்டு நாள்ல நான் கிளம்பணும். இப்ப எனக்கு டைம் இல்லப்பா. இன்னும் நான் பேக்கிங் கூட ஆரம்பிக்கல தெரியுமா?” என்றான் வெற்றி சற்று பதற்றமாய்.

“நாளைக்கு வைஷுவ பார்த்து பேசற, நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு ஒரு முடிவை சொல்றிங்க. அவ்வளவுதான்” நித்ய பாரதி கட்டளை போல சொல்லிவிட்டு, அந்த பேச்சை முடித்தாள்.

நாளை மறுநாள் காலை எட்டு மணி விமானத்தில் வெற்றி தாய்நாட்டில் இருந்து விடைப்பெற வேண்டும்.

தன் பயணத்திற்கு தேவையானவற்றை வாங்க வெளியே ஷாப்பிங் வந்திருந்தான் அவன்.

நித்ய பாரதி காலையில் சொன்னதில் இருந்து, வைஷ்ணவி பற்றிய யோசனையிலேயே உழன்று கொண்டிருந்தது அவன் மனது.

வைஷு, அவள் அக்கா ரோஷினியை போல இவள் அலட்டல் பேர்வழி இல்லை. முன்பு அவளை சில முறை சந்தித்து பேசி இருக்கிறான் தான்.
இப்போது யோசிக்க, அவளின் மென்கீற்றான புன்னகையும் மென்மையான குரலும் அவன் நினைவில் ஆடின.

அதோடு கூடவே, வெண்ணிலாவின் தீ உமிழும் பார்வையும் அவன் நினைவில் வந்து போக!

“ச்சே நான் எப்படி மறந்து போனேன்!” என்று சற்று பலமாகவே தன் தலையில் அடித்து கொண்டான்.

இந்த வழக்கு முடிந்தவுடன் வெண்ணிலா, அம்மாவிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணி இருந்தான் இவன்.
என்ன இருந்தாலும் அவன் செய்தது பெரிய தவறு என்பதை அவனும் உணர்ந்து தான் இருந்தான்.

ஆனாலும், அவன் மனதிலும் குடும்பத்திலும் நிறைந்திருந்த மகிழ்ச்சியில், அடுத்தடுத்த வேலைகளில் நிலாவையும் சுவாதியையும் முழுவதுமாக மறந்து போய் விட்டான்.

இனியும் தாமதித்து பயனில்லை என்று அவன் மனசாட்சி எச்சரிக்க, தன் பயணத்திற்கான வேலைகளை விரைவாக முடித்து கொண்டு கிளம்பினான்.

அன்று இரவே அவன் கார் திருச்சியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

# # #

இன்றைய விடியல் மிகவும் சோம்பலாய் விடிந்தது அவளுக்கு.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால், வழக்கத்தை விட தாமதமாக எழுந்து, குளித்து தயாரானாள் வெண்ணிலா.

அவளின் வாண்டு மகள் முன்பே எழுந்து அவள் பாட்டியிடம் கதையளக்க சென்றிருக்க வேண்டும் மெத்தை வெறிச்சோடி இருந்தது.

மேஜையின் மேல் துவைத்த துணிகள் குவிந்து கிடக்க, அவற்றை எல்லாம் அயர்ன் செய்து மடித்து வைப்பது நிலாவின் இன்றைய முதல் வேலையாகி போனது.

அனைத்தையும் முடித்து கப்போர்ட்டில் அடுக்கி வைக்க, அவள் கண்களை உறுத்தியது அந்த மேக வண்ண பட்டு சேலை!

பிரியதர்ஷினி திருமணத்திற்கு அவள் உடுத்தி சென்ற அதே சேலை!

அன்று தன்னை சேலையில் பார்த்து கிறங்கி நின்ற வெற்றியின் பார்வை மனதில் எழ, அவள் உள்ளம் தகித்தது.

‘அன்று அவன் எத்தனை குறும்புகள் செய்தான்! என்னென்னவோ உளரி கொட்டினான்! தனக்காக பாட கூட செய்தான்! எல்லாமே வெறும் நடிப்புக்காக மட்டுமே தானா?’
இந்த கேள்விக்கான பதில் அவள் மனதின் வலியை கூட்டுவதாய்.

ஒரு நாளில் அவளுக்குள் மொட்டு விட்ட காதல் மலரை முழுதாய் முகிழும் முன்னே, பறித்தெடுத்துப் போய்விட்டான்.

கடவுளைப் போலத்தான் அவனும்!
அவள் மனதில் காதலெனும் உணர்வை அவனே தந்து அதை அவனே அழித்து விட்டு மறைந்து விட்டான்.

தன் எண்ண ஓட்டத்தை நினைத்து நிலாவிற்கு சிரிக்க தான் தோன்றியது.

ஓர் ஆண்மகனிடம் தன் மனம் இத்தனை லயித்து போயிருக்கிறது என்பதை அவளால் நம்பவே முடியவில்லை இப்போதும்.

போயும் போயும் அந்த தில்லாலங்கடி ஏமாற்று பேர்வழியிடம்.

அவள் அவனை மறக்க முயற்சித்தாலும், யாராவது அவனை பற்றி அவளிடம் கேட்க தவறுவதில்லை.

அவளுடன் வேலை செய்பவர்கள் வெற்றியை பற்றி இயல்பாக விசாரிக்கும் ஒவ்வொரு முறையும்,
‘அப்படி ஒருத்தனே இல்ல’ என்று சத்தமாக கத்திவிட தோன்றும் நிலாவிற்கு.

ஆனால், முயன்று மெல்லிய புன்னகையை பதிலாக தந்துவிட்டு விலகி விடுவாள்.

அக்கம் பக்கம், அறிந்தவர் தெரிந்தவர் கேள்விகளுக்கும் இப்பொழுதெல்லாம் அவளின் பதில் இது மட்டும் தான்.

சென்ற வார பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில், சுவாதியின் ஆசிரியை சொன்னது இப்போதும் அவள் காதுகளில் எதிரொலித்து கொண்டிருந்தது.

“சுவாதியோட இன்ஷியல நீங்க ‘வி'(v)ன்னு கொடுத்தப்ப, அவ அப்பாவோட பேர நீங்க சொல்ல மறுத்திட்டிங்க!”

“…!”

“இப்ப சுவாதி சொன்னதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவளோட அப்பா பேரு வெற்றி வேந்தன்னு!” அவர் விரிந்த புன்னகையோடு சொல்ல, வெண்ணிலா வாயடைத்து போய் அமர்ந்திருந்தாள்.

என்னவென்று பதில் தருவாள் அவள்?

சுவாதிக்கு தான் மட்டுமே எல்லாம் என்ற எண்ணத்தில் தான், தன் பெயரை, ‘வெ’ என்று, அவளின் முதல் எழுத்தாக பதிவிட்டு இருந்தாள்.

அதே பெயரை முதல் எழுத்தாக கொண்டு, வேறொருவன் வந்து அவர்கள் வாழ்வில் விளையாடிவிட்டு போவானென்று அவளென்ன ஜோசியமா பார்த்தாள்.

நாட்கள் நகர நகர அவன் நினைவுகள் அவள் மனதை அதிகமாய் அழுத்தத்தான் செய்தன.

இப்போதெல்லாம், கடவுளிடம் அவள் வைக்கும் முதல் வேண்டுதலே, ‘மறுபடி வெற்றி தன் கண்ணில் படவே கூடாது!’ என்பது தான்.

இப்போது தான் கற்பகம் வெற்றியின் பெயரை சொல்லி புலம்புவதை குறைத்திருக்கிறார்.

‘அப்பா! அப்பா!’ என்று அடம்பிடித்த சுவாதியை மிரட்டி, விரட்டி, கெஞ்சி, கொஞ்சி சற்று சமாதானப்படுத்தி வைத்திருக்கிறாள்.

மறுபடி அவனை பார்க்க நேர்ந்தால்,
தன் தாயையும் சேயையும் சமாளிப்பது அவளுக்கு மறுபடி பெரும்பாடாகி விடும்.

இத்தனைக்கும், தன் மனநிலை என்ன? என்பதை அவளால் பிரித்தறிய முடியவே இல்லை.

அவள் வாழ்வில் மின்னலாய் வந்து, புயலாய் அவளை வீழ்த்தி விட்டு சென்றவன் அவன்!

வெளியே ஒலித்த காரின் ஹார்ன் சத்தம் அவள் எண்ணங்களை அறுக்க,
தயக்கமாய் ஒருவித பதற்றத்துடன் ஜன்னல் வழியே பார்த்தாள்.

அந்த காலை வேளையில் அவள் வீட்டு வாசலில், வெற்றி வேந்தன் தன் காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான்.

அவனை கண்டதும் தன் இதய கூட்டிற்குள் ஏதோ சிதறி உடைவதைப் போல் உணர்ந்தாள் அவள்!

தேடல் நீளும்…

error: Content is protected !!