Yaaro avan 21

Yaaro avan 21

யாரோ அவன்? 21

வெற்றி வேந்தன் அழைப்பு மணி பொத்தானை அழுத்திவிட்டு காத்து நிற்க, சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்து கதவைத் திறந்த கற்பகம், வெற்றியை அங்கு பார்த்ததும் கோபத்தில் முகம் சிவந்தார்.

“யார் நீ? இங்க எதுக்கு வந்த?”

அவர் மனதிற்குள் கொதித்தெழுந்த கோபம் அவரின் வார்த்தைகளிலும் எதிரொலிக்க, வெற்றியின் புருவங்கள் உயர்ந்து, அவனிதழில் மெல்லிய புன்னகை விரிந்தது.

“அச்சோ, என் செல்ல அம்மாக்கு, ஒழுங்கா கோப பட கூட தெரியலையே” என்று அவன் கொஞ்சலாய் பேச, அவரின் ஆத்திரம் இன்னும் அதிகமானது.

“ஆமா டா, நீ சொன்னதை எல்லாம் அப்படியே நம்பி ஏமாந்தேன் பாரு, என்னை பார்த்தா உனக்கு முட்டாளா தான் தோணும்.”

அவர் குறையாத வேகத்துடன் வார்த்தைகளை வீச, “ஏன் ம்மா? இப்படி எல்லாம் பேசறிங்க! உங்கள எப்பவும் நான் தப்பா நினச்சதே இல்ல ம்மா!”

வெற்றி அவரை சமாதானம் செய்ய முயல, “ஆமா ஆமா, என்னை கொலைகாரியோட அம்மாவா நினச்சிருப்ப இல்ல!” கற்பகம் ஆதங்கமாக கேட்டார்.

“உங்கள என்னோட அம்மாவா தான் நினைக்கிறேன். அப்பவும், இப்பவும், எப்பவும் ம்மா!” அவன் உருக்கமாய் சொல்ல,

“இப்படி பேசி பேசி தான முன்ன எங்கள ஏமாத்தின! இப்ப என்ன திட்டத்தோட மறுபடியும் வந்திருக்க?”
அவரின் மனக் குமுறல்களை எல்லாம் அவனிடம் அப்படியே கொட்டி தீர்த்தார்.

“நிலாவ நான் சந்தேகப்பட்டது தப்பு தான். ஆனா, அப்ப என்னோட நிலைமை அப்படி! அந்த சூழ்நிலையில எனக்கு வேற வழி தெரியல, என்னோட முட்டாள் தனத்தை மன்னிக்க மாட்டீங்களா ம்மா?”

“மன்னிப்பா! உனக்கா? ஏன்? கொஞ்ச நஞ்சம் மிஞ்சி இருக்க எங்க நிம்மதிய உன்கிட்ட பரிகொடுக்கவா!”
கற்பகத்தின் கோபமான எதிர் வாதத்தைக் கேட்டு, மாடி படிகளில் இறங்கி வந்த வெண்ணிலா அப்படியே தேங்கி நின்று விட்டாள்.

கற்பகம் மற்றவரிடம் இப்படி சண்டையிடும் குணம் கொண்டவர் இல்லை. ஆனால் இப்போது!?

“நான் தப்பானவனா இருந்திருந்தா, மறுபடியும் உங்கள தேடி இங்க வந்திருப்பேனா? கொஞ்சம் யோசிச்சு பாருங்க ம்மா!”

வெற்றி, தன்னை அவரிடம் புரிய வைக்க முயன்றான்.  ஆனால், அவர் சமாதானம் ஆவதாக இல்லை.

“உன்ன மறுபடியும் நம்பி ஏமாற சொல்றியா என்னை?”

“நான் மன்னிப்பு கேட்டும் உங்க கோபம் தீரலன்னா, வேற நான் என்ன செஞ்சா உங்க கோபம் தீரும்னு சொல்லுங்க, நான் செய்றேன்!” வெற்றி வீராப்பாக கேட்க,

“நான் என்ன சொன்னாலும் செய்வியா?” கற்பகம் யோசனையாக கேட்டார்.

கற்பகம் இறங்கி வந்ததே அவனுக்கு சந்தோஷமாக இருக்க, “நீங்க சொல்லி நான் மறுப்பேனா! சொல்லுங்கம்மா!” குருட்டு தைரியத்தில் உறுதி தந்தான்.

“அப்ப, நீ முன்ன சொன்ன மாதிரி நிலாவ…!”

“அம்மா!” கற்பகம் முழுதாய் சொல்லும் முன்னே வெண்ணிலா அவர் பேச்சை பாதியில் வெட்டினாள்.

என்ன இருந்தாலும் அவனிடம் கெஞ்சி கேட்டு வாழ்வை பெற, அவளின் சுய கௌரவம் இடம் தரவில்லை.

“சுவாதி எங்கம்மா?” நிலா அவனை கண்டுகொள்ளாமல் வினவினாள்.

“அது, நம்ம பார்கவி தான் அழைச்சிட்டு போயிருக்கா” என்று கற்பகம் பதில் தர, நிலாவின் மன பதற்றம் சற்று குறைந்தது.

“தேவை இல்லாம ஏன் மா? வீண் பேச்சை வளக்கற? நீ முதல்ல உள்ள வா ம்மா!” என்று அவர் கையை பிடித்து உள்ளே திரும்ப, வெற்றி உள்ளே புகுந்து அவர்கள் குறுக்கே நின்று கொண்டான்.

ஏனோ அப்போதும் இப்போதும் அதை வேற்றாள் வீடாக அவனால் கருதி எட்டி நிற்க தோன்றவில்லை அவனுக்கு.

“அம்மா, அவளை விடுங்க, நீங்க சொல்லுங்க, நான் அப்படி என்ன செஞ்சா நீங்க என்னை மன்னிப்பிங்க”
வெற்றியும் நிலாவை தவிர்த்து இவரிடம் பேசினான். அவளை சமாதானம் செய்வது குதிரைக்கு கொம்பு முளைக்க வைக்கும் வேலை என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அதனால், இப்போது கற்பகம் மனம் இறங்கினால், நிலாவின் திட்டோ? அடியோ? பொறுமையாக பெற்று கொள்ளலாம் என்று அவளிடம் வாய் கொடுக்காமல் இருந்தான்.

கற்பகம் தவிப்பாக தன் மகளின் முகத்தை பார்க்க, வெண்ணிலா வேண்டாம் என்று உறுதியாக தலையசைத்தவள்,

“அவனை முதல்ல இங்கிருந்து கிளம்ப சொல்லு ம்மா! சுவாதி இவனை பார்த்தா மறுபடியும் அழுது, அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவா!” நிலா நிதானமாகவே சொல்ல, இவனுக்கு சுர்ரென்று ஏறியது.

“நான் போக தான் போறேன்! நாளைக்கு காலைல எனக்கு ஃபிளைட். உங்க எல்லாரையும் பார்த்து சொல்லிட்டு போலாம்னு தான் இப்ப வந்திருக்கேன்” என்று வெற்றி பயண விவரம் தெரிவிக்க,

வெண்ணிலாவின் மனம் மட்டுமல்ல, கற்பகத்தின் மனமும் துவண்டு போனது.

“என்ன வெற்றி சொல்ற? அப்ப எப்ப திரும்பி வருவ?” கற்பகத்தின் மென்மையான தாய் மனம் பொறுக்க முடியாமல் கேட்டு விட,

“ம்ம் குறைஞ்சது ரெண்டு வருசம் ஆகும் ம்மா!” என்று சாதாரணமாய் அவன் பதில் தர, கற்பகம் வாயடைத்து போனார். இனி அவனிடம் அவர் என்னவென்று கேட்பது புரியவில்லை.

வெற்றியின் கரம் நீண்டு அவரின் பாதங்களை தொட்டு வணங்க, “நல்லா இருப்பா! பத்திரமா போயிட்டு வா!” அவரின் அனுமதி இன்றியே வார்த்தைகள் உதிர்ந்தன.

‘அப்பாடா! அம்மா எப்படியோ மன்னிச்சிட்டாங்க! இப்ப, இந்த ராட்சசி மனசு இறங்கணுமே! கடவுளே!’ என்று மனதுக்குள் வேண்டி கொண்டே அவளிடம் பேசினான்.

“சாரி நிலா, உன்ன தப்பா நினச்சு நானும் தப்பு தப்பா ஏதேதோ பண்ணிட்டேன். நீ இப்படி என்மேல கோபமாவே இருந்தா, என்னால அங்க போயும் நிம்மதியா இருக்க முடியாது, ப்ளீஸ்…!”

அவள் முன் அவன் பாவமான முகத்துடன் கெஞ்சி கேட்க, உணர்சியற்று நிமிர்ந்த வெண்ணிலா, “எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்ல! ஒருவேளை உன் இடத்தில நான் இருந்து இருந்தாலும் இப்படி தான் யூகிச்சு இருப்பேனோ! என்னவோ?” என்று நிதானமாகவே விட்டத்தியாக சொல்லி விட, அவனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

புரியாத மொழியை கேட்டது போல், திருதிருவென விழித்து நின்றான் அவன்.

இது நிஜமே நிஜமா! இல்லை, கனவா? தன்னையே ஒருமுறை கிள்ளி பார்க்க அவன் விரல்கள் பரபரத்தன.

வெற்றியின் முகம் முழுவதும் சட்டென மலர, “நீ என்னை இவ்வளோ சீக்கிரம் புரிஞ்சிப்பன்னு, நான் எதிர்பார்க்கவே இல்ல நிலா! தேங்க் யூ, தேங்க் யூ சோ மச்” அவன் மனதின் உறுத்தல் மறைய, அவன் உற்சாகமாய் நன்றி சொன்னான்.

நிலாவிற்கு அவன் முன் நிற்பது பெரும் அவஸ்தையாக தோன்றியது. அவன் சென்ற பிறகுதான் தன்னால் தன் சுயநிலைக்கு வர முடியும் என்று நினைத்தாள்.

“நிலா, சுவாதி குட்டிய ஒரேயொரு முறை பார்த்துட்டு போயிறேனே, அவளை மறுபடியும் பார்க்க எனக்கு சான்ஸ் கிடைக்குமான்னு தெரியாது. ப்ளீஸ்” வெற்றி ஏக்கமாய் கேட்க,

“இல்ல, வேணாம், அவ சின்ன குழந்தை, அவளால இப்ப எதையும் புரிஞ்சுக்க முடியாது. அவளை விட்டுடு. ப்ளீஸ்!” வெண்ணிலாவின் மென்குரல் கிட்டத்தட்ட அவனிடம் கெஞ்ச, வெற்றிக்கு என்னவோ போலானது.

வெண்ணிலா தன்மீது கோபபடுவாள்! திட்டி தீர்ப்பாள்! கத்தி கூச்சலிடுவாள்! தவறு தன்னிடம் இருப்பதால் அனைத்தையும் சமாளிக்க வேண்டியது தான், என்று எண்ணி வந்தவனுக்கு அவளின் கலங்கிய குரல் ஏதோ செய்தது.

முன்பு, அவளை இப்படி கலங்க வைக்க வேண்டும் என்றே எத்தனை திட்டங்கள் செய்தான்! ச்சே, அதை நினைக்க அவன்மீதே அவனுக்கு இப்போது வெறுப்பு வந்தது.

முன்பே, தான் கொஞ்சம் நிதானமாக யோசித்து செயல்பட்டிருக்கலாம்! என்ற காலம் சென்ற ஞானோதயம் இப்போது அவனுக்கு வந்தது.

மேலும் அவளை சங்கடபடுத்த மனமின்றி, “சரி, நான் போயிட்டு வரேன் ம்மா, பை நிலா” என்று விடைபெற்று திரும்பினான்.

நிலா தன்னை புரிந்து கொண்டு கொபம் தீர்ந்தாலே போதும் என்றே எண்ணி வந்தவனுக்கு, அவள் சமாதானமாக பேசிய பின்னரும் ஏதோ பாரம் ஏறி, அவன் மனதை அழுத்தும் காரணம் விளங்காமல் நடந்தான்.

வாசலில் வெற்றியின் காரை பார்த்து விட்டு, “ஐய்ய் அப்ப்ப்பா…!” என்று குதித்தோடி வந்தாள் சுவாதி.

“அப்பாஆ…” என்று துள்ளி ஓடி வந்த குழந்தையை தாவி பிடித்து தூக்கி கொண்டான் அவன்.

நிலாவும், கற்பகமும் மனதில் துணுக்குற, அவர்களை அமைதியாய் பார்த்து நின்றனர்.

அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.

# # #

“அப்பாஆஆஆ…!” என்று துள்ளி குதித்து ஓடிவந்த சுவாதியை, வெற்றி தாவி பிடித்து அணைத்து தூக்கி கொண்டான்.

அந்த சிறு மழலையின் கள்ளமில்லா அன்பிலும், அணைப்பிலும் அவன் நெகிழ்ந்து போனான்.

தன் அப்பாவை நீண்ட நாட்கள் கழித்து பார்த்து விட்ட குதூகலம் சுவாதிக்கு.

“ஏய், வாண்டு! எப்படி இருக்க?” வெற்றி பாசமாய் வினவ,

“போ ப்பா! நீ ஏன் என்னை பாக்கவே வரல?” அவள் சின்ன முகம் சுருக்கினாள்.

“சாரி டா செல்லம், எனக்கு நிறைய வேலை இருந்ததா, அதனால தான்.  என்னோட முயல்குட்டிய பார்க்க, என்னால வரவே முடியல!”

வெற்றி வேண்டுமென்றே அவளை போல நீட்டி, முழக்கி பேச, “எப்பமே, நீ இப்டி தான் சொல்ற, உன் பேச்சி கா!” என்று உர்ரென முகத்தை திருப்பி கொண்டாள். அவன் கைகளில் அமர்ந்த படியே.

“சாரி சாரி சாரிடா செல்லக்குட்டி நான் இனிமே அப்படி சொல்ல மாட்டேன், சரியா!” அவன் அவளின் செல்ல கோபத்தை ரசித்து கொண்டே, மன்னிப்பை வேண்டினான்.

“ம்ம் ஓகே, அப்பா ப்ராமிஸ், அப்பறம் நீ வரலன்னா நான் உன்னோட பேசமாட்டேன்” சுவாதி அழுத்தி சொன்னாள்.

“அச்சச்சோ என் சுவாதி குட்டி என்னோட பேசலன்னா, வேற யாருக்கு நான் இந்த சாக்லேட்ஸ தர்றது?” என்று தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து நான்கு பெரிய கேட்பெர்ரி சாக்லேட்டை எடுத்து அவள் முன் நீட்ட, சுவாதியின் குட்டி குட்டி கண்களும், செப்பு வாயும் ஒன்றாய் விரிந்தன.

“ஐஅய்ய் இவ்ளோ சாக்லேட்ஸ் எனக்கா!” என்று அவற்றை வாங்கி கொள்ள முயல, வெற்றி தன் கையை தூர இழுத்து கொண்டு, அவளிடம் தன் கன்னத்தை காட்டினான்.

சுவாதி, அவன் முரட்டு கன்னத்தில் தன் மொட்டு இதழ்களின் ஈரத்தை பதித்து விட்டு, அவன் தந்த சாக்லேட்டை வாங்கி கொண்டு கிளுக்கி சிரித்தாள்.
வெண்ணிலா, அவர்களை விழி விரிய பார்த்து நின்றாள்.

‘இவன் இப்படி கொஞ்சி பழகுறதால தான், அவ இவன ‘அப்பா’ன்னு உயிர விடுறா!’ என்று எண்ணி பெருமூச்செறிந்தாள்.

பின்னே, இவன் ஒருநாள் கூத்திற்கு, இவள் தன் மகளை எத்தனை நாட்கள் சமாதானம் செய்ய வேண்டுமோ!?

சுவாதியை கீழே இறக்கி விட்டு, அவள் உயரத்திற்கு ஒரு காலூன்றி, மறுகால் குத்திட்டு அமர்ந்த வெற்றி, “சுவாதி குட்டிமா, நான் நாளைக்கு ஊருக்கு போறேன் டா!” என்றான் மெதுவாய்.

“ம்ம் ஊருக்கா, அது எங்க இருக்கு ப்பா?” என்று கேள்வி தொடுத்தாள் அவள், அலாதியான சாக்லேட் இனிப்பு சுவையை ருசித்தபடியே.

“அது! ரொம்ம்ம்ப தூரமா இருக்கு, நான் ஃப்ளைட்ல தான் போகணும்!”
குழந்தையிடம் விளையாட்டாகவே சொல்லி விடைபெற முயன்றான் வெற்றி.

“ஃபிளைட்லயா!” என்று விழிகள் விரித்தாள் அவள்.

“ம்ம் ஆமா சுவாதி, நான் திரும்பி வர, ரொம்ப நாளாகிடும். அதனால, நீங்க அடம்பிடிக்காம, சமத்தா, இருக்கணும் சரியா?” என்று அவன் நிதானமாக எடுத்து சொல்ல, சுவாதியின் பிஞ்சு முகம் வாடிப் போனது.

“அப்படின்னா, நீ அங்க போகாதப்பா” என்று மறுத்து தலையாட்டினாள்.

“அச்சச்சோ நான் அங்க தான வேலை செய்றேன், போய் தான் ஆகணும்!”

“ம்ஹூம் நீ இங்கயே இருந்துடுப்பா. சாந்தினியோட அப்பாவும் அம்மாவும் அவகூட ஒரே வீட்ல தான் இருக்காங்களாம்! நீ மட்டும் ஏன் என்னை விட்டுட்டு போற?” சுவாதி விடாமல் அவனிடம் கேட்க, வெற்றி அவள் கேள்வியில் அயர்ந்து தான் போனான்.

முன்பின் யோசனையின்றி அவன் நிலாவுக்காக பின்னி விட்டிருந்த மாய வலையில் மெல்ல அவனே சிக்கி கொண்டிருந்தான்.

“இல்ல டா செல்லம், எப்படி இருந்தாலும் நான் வேலைக்கு போகணுமே! புரிஞ்சிக்க டா! ப்ளீஸ்!”
அந்த ஆறடி ஆண்மகன், இந்த அரையடி சிறு பெண்ணிடம் கெஞ்சி கொண்டிருந்தான்.

“நீ ஒண்ணும் வேலைக்கல்லாம் போக வேணாம் ப்பா!” அவள் அதிகாரமாய் ஆணையிட,

“நான் வேலைக்கு போனா தான, என் சுவாதிக்கு புதுப்புது டிரஸ், நிறைய டாய்ஸ் எல்லாம் வாங்கி தர முடியும்” என்று அவள் கவனத்தை திருப்ப முயற்சித்தான்.

“எனக்கு புது டிரஸ் வேணா, டாய்ஸும் வேணாம், நீ என்னைவிட்டு போகாதப்பா!” அவளின் பனிமலர் கண்கள் கலங்கின.

எங்கே தன் அப்பா மறுபடியும் தன்னை விட்டு போய் விடுவாரோ! என்ற எண்ணமே அந்த குழந்தையை பயமுறுத்தியது.

“அழ கூடாது பட்டு குட்டி, நான் உனக்கு நிறைய சாக்லேட், ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி தருவேணாம்” என்று ஆசை காட்டினான்.

“எனக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் எதுவும் வேணாம், நீ தான் வேணும்” என்று தன் கையிலிருந்த சாக்லேட்டை கீழே வீசினாள்.

அந்த குழந்தையின் பிடிவாதம் ஏனோ வெற்றியை கலவரப்படுத்தியது.

அவள் முன் அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து விட்டான்.

ஒரு சின்ன குழந்தையை சமாதானப்படுத்துவது, அத்தனை சுலபமான காரியமல்ல என்பது, பாவம் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தெனாலிராமனே திணறி போன கதையை அவன் அறியவில்லை போலும்!

வெற்றி தயக்கமாக கற்பகத்தையும், வெண்ணிலாவையும் பார்க்க,

கற்பகம் தோய்ந்து போய் இருக்கையில் அமர்ந்து விட்டிருந்தார்.

சுவாதியின் மீது விலகாமல் பதிந்திருந்த நிலாவின் பார்வையில் வலி தான் தெரிந்தது.

தன் மகளின் தந்தை ஏக்கத்தை உணர்ந்து அந்த தாயின் மனம் தவித்து கொண்டிருந்தது.

சுவாதியின் முகம் அழுவதற்கு தயாராக இருக்க, வெற்றி அவளை அப்படியே தூக்கி கொண்டு, சோஃபாவில் அமர்ந்து, அவளை தன் மடியில் அமர்த்தி கொண்டான்.

“என் சுவாதி குட் கேர்ள் தான, எப்பவும் அழகா சிரிச்சிட்டு இருப்பிங்க, இப்ப ஏன் அழற?” என்று கொஞ்சினான். எப்படியாவது அவளை சமாதானம் செய்ய வேண்டுமே!

“உனக்கு என்னை பிடிக்கலயா ப்பா? அதான் என்னைவிட்டு போறயா?” அவள் தேம்பி கொண்டே கேட்க,

“என் செல்லத்தை யாருக்காவது பிடிக்காம போகுமா என்ன? எனக்கு சுவாதி குட்டிய மட்டும் தான் ரொம்ப பிடிக்கும்”

“பொய் சொல்ற. அப்ப, ஏன் முன்னாடியே என்ன பாக்க வரல?”

“…!?”

“நீ இப்பல்லாம் ஸ்கூல்ல கூட என்னை பாக்க வர்றதே இல்ல”

“…!”

“அம்மாவும் பாட்டியும் நீ வரவேமாட்டன்னு சொன்னாங்க. தெரியுமா?”

“…!”

சுவாதியின் அடுத்தடுத்த கேள்விகளில் திணறி போனான் அவன்!

“இனிமே உன் அப்பா உன்கூட விளையாடல்லாம் வரமாட்டார்ன்னு, அந்த முட்ட கண்ணு ராகேஸ் கூட சொன்னான்!”

அந்த கிண்டர் கார்டன் பிள்ளைகளின் போட்டி அரசியல் புரியாமல் திருதிருவென விழித்தான் வெற்றி வேந்தன்.

பரிதவிப்போடு அவன் நிலாவை பார்க்க, “சுவாதி, சீக்கிரம் ரெடியாகு. இன்னைக்கு சர்க்கஸ் போகணும்னு சொன்ன இல்ல, நாம கிளம்பலாம்” என்று மகளை திசை திருப்ப முயன்றாள்.

சுவாதி வெற்றியின் முகத்தை எதிர்பார்ப்போடு ஏறிட, அவன் தயங்கிய மௌனத்தில் குழந்தை துவண்டு போனாள்.

தன் பாட்டியை பார்த்து, “அப்பாவ போக வேண்டாம்னு சொல்லேன் பாட்டி” என்று அழுகை குரலில் கெஞ்ச,
வெற்றியின் மனதிற்குள் ஏதோ மோதி தகர்ந்து உடைந்தது.

பேத்திக்கு பதில் சொல்ல தெரியாமல் கற்பகம் தயங்க, வெற்றி சுவாதியை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டு, “சாரி சுவாதி, என்னை மன்னிச்சிடு டா, நான் என் தேவைக்காக உன் ஃபீளிங்க்ஸ யூஸ் பண்ணியிருக்க கூடாது!” என்று கண் கலங்கினான்.

அவனின் தானென்ற திமிரும், ஆணென்ற கர்வமும் செல்ல மகளின் முன் நொறுங்கி போனது.

“போ ப்பா!” என்று அவனிடமிருந்து விலகி கொண்டவள், “நீ மட்டும் என்னை விட்டுட்டு போன, நான் எப்பமே உங்கூட பேசவே மாட்டேன்!”
என்று மிரட்டலாய் சொல்லிவிட்டு, கோபமாக மாடிப்படி ஏறி சென்றாள்.

வெற்றிக்கு அடி வாங்கிய உணர்வு!

எப்போதும் எதிலும் தோல்வியை விரும்பாதவன் இப்போது ஒரு சிறு குழந்தையின் உதாசினத்தில், தோல்வியை தழுவி நின்றான்.

சுவாதி அவனை திரும்பி கூட பார்க்காமல், இறுகிய முகத்துடன் மாடி படிகளில் தத்தி தத்தி ஏறி அறைக்குள் புகுந்து கொண்டாள்.

வெற்றியை குற்றம் சாட்டும் பார்வை பார்த்துவிட்டு, நிலா மகளிடம் நகர்ந்தாள்.

சுவாதிக்கு சிறு வயதிலிருந்தே இதுவொரு பழக்கம். அவளுக்கு கோபமென்று வந்துவிட்டால் அழுது, அடம்பிடிக்க மாட்டாள், தனியாக சென்று உம்மென்று உட்கார்ந்து கொள்வாள்.

அவளை இயல்புக்கு கொண்டு வருவதற்குள் நிலாவுக்கு தான் போதுமென்று ஆகிவிடும்.

‘இப்ப இவன இங்க வரச்சொல்லி யாரு அழுதது?!’ என்று மனதுக்குள் வெற்றியை கரித்து கொட்டிக் கொண்டே சென்றாள் நிலா.

வெற்றியின் மனம் புயலில் சிக்கிக் கொண்ட இலையாய் சுழன்றடிக்க, அவன் முகம் இருண்டு, தலைகவிழ்ந்து வெளியே நடந்தான்.

தேடல் நீளும்…

error: Content is protected !!