Yaaro Avan 22

Yaaro Avan 22

யாரோ அவன்? 22

வெண்ணிலாவிற்கு தன்னால் மேலும் எந்தவித தொந்தரவும் ஏற்பட கூடாது என்ற அவன் ஆழ் மனதின் கட்டளைக்காகவே, சுவாதியிடம் தன் பிரிவை சொல்லி, புரியவைக்க முயன்றான் அவன்.

இதுவரை வெற்றி சொன்ன எதற்கும் சுவாதி மறுப்பு சொன்னதே இல்லை.  அவன் என்ன சொன்னாலும் அவளின் பதில் சரி மட்டும் தான்.

அன்று முதன் முதலாய், சுவாதியை பள்ளியில் பார்த்து, ‘நான் உன் அப்பா டா!’ என்று அவன் சொன்னதை அவள் முழுதாக நம்பி வெற்றியை அப்படியே கட்டிக் கொண்டாள்.

அந்த மழலைக்கு எந்தவித ஆதாரமும் தேவைப்படவில்லை. ‘அப்பா’ என்ற ஒரு சொல்லே வேதமாகி போயிருந்தது அவளுக்கு.

சுவாதி, தான் சொன்னால் எதையும் மறுக்காமல் ஏற்று கொள்வாள் என்ற தைரியத்தில் தான் அவளிடம் தன் பிரிவை வெளிப்படுத்தினான். பிறகு தன்னை கேட்டு நிலாவிடம் அடம்பிடிக்க மாட்டாள் என்று நினைத்தான்.

ஆனால், சுவாதி அவன்மீது கொண்ட பாசமும், பிடிவாதமும் அவனுக்கு சரியான பதிலடியாக கிடைத்தது.

ஏனோ இப்போது, தண்ணீருக்குள் மூச்சு காற்றுக்காக தவிப்பதைப் போல துடித்து கொண்டிருந்தான் அவன்.

தனக்கு என்ன நேர்கிறது? ஏன் இந்த மரண அவஸ்தை? என்ற அவன் கேள்விகளுக்கு அவன் கணினி மூளையில் பதில் கிடைக்கவில்லை.

சோர்ந்து போய் வந்து தன் முன் அமர்ந்தவனை ராதிகா, யோசனையாக பார்த்தாள்.

“என்னாச்சு வெற்றி? ஏதாவது புது பிரச்சனையா?” அவன் இல்லையென்று தலையசைக்க, அவளுக்கு குழப்பமாக இருந்தது.

நாளைக்கு அவன் கிளம்பும் நெருக்கடி வேளையில் இன்று விடியற்காலையில் இங்கு வந்ததே பெரிய ஆச்சரியமாய்
தோன்றியது ராதிகாவுக்கு.

உடனே முக்கிய வேலை என்று தயாராகி சாப்பிடாமல் கூட வெளியே ஓடினான்.

திரும்பி வந்த அவன் கலங்கிய தோற்றம் அவளையும் கலவரப்படுத்த, அவனுக்கு சூடாய் காஃபி எடுத்து வந்து கொடுத்தாள்.

அதை பருகாமல் ஏதோ தவிப்புடன் அவனிருக்க, “என்னாச்சு டா, வார்த்தைக்கு வார்த்தை அக்கா அக்கான்னு சொல்லுவ இல்ல, என்கிட்ட சொல்லு டா” மனம் பொறுக்காமல் ராதிகா கேட்டாள்.

வெண்ணிலா வீட்டில் நடந்ததை அப்படியே அவளிடம் ஒப்புவித்தவன், “எனக்கே ஒண்ணும் புரியலக்கா, ஏதோ தப்பா நினச்சு செஞ்சுட்டேன் தான். அதுக்கு மன்னிப்பும் கேட்டுடேன். ஆனாலும் ஏதோ! நெருடற மாதிரியே இருக்கு. இதுல சுவாதி குட்டி வேற, கஷ்டமா இருக்குக்கா” அவன் கெத்தைவிட்டு கலக்கமாக சொன்னான்.

தன் உயிர்த்தோழி நேத்ராவின் தம்பி, இந்த கொஞ்ச நாட்கள் பழக்கத்தில் இவளுக்கும் உடன்பிறவா சகோதரன் ஆகி இருந்தான்.

இன்றுவரை வெற்றி இத்தனை வெளிப்படையாக உடைந்து போய் அவள் பார்த்ததே இல்லை.

அவளால் ஒன்றை மட்டும் சரியாக யூகிக்க முடிந்தது. அவனை பார்த்து, “முட்டாள் டா நீ!” என்று திட்ட, வெற்றி நிமிர்ந்து பார்த்தான்.

“ஏதோ பொய் சொல்லி தான் அந்த ஃபேமிலிக்குள்ள போன சரி, அவங்க கூட பழகும்போது கூட போய்யா தான் பழகினயா?”

வெற்றி இல்லையென்று தலையசைத்தான். நிலாவை தவிர, கற்பகத்திடமும் சுவாதியிடமும் அவன் அவனாகவே தான் இருந்தான்.

“அம்மா, சுவாதிய நாங்க சந்தேக படல. நிலாகிட்ட மட்டும் தான் நான்…!” அவனால் முழுதாக பதில் பேச வரவில்லை.
‘நான் ஏன் இத்தனை தடுமாறுகிறேன்’ என்ற காரணம் அவனுக்கே புரியவில்லை.

காரணம் சரியாகவே ராதிகாவுக்கு புரிந்தது.  “நீ ஒருவேளை வெண்ணிலாவ உண்மையாவே நேசிக்க ஆரம்பிச்சிட்டன்னு எனக்கு தோணுது டா” என்றாள்.

“ப்ச் போக்கா, சான்ஸே இல்ல”
என்றான் அவன் விட்டத்தியாய்.

“ம்ம் பிடிக்காத ஒருத்திகாக ஏன் டா ராத்திரி பூரா டிரைவ் பண்ணி இங்க வந்த?” ராதிகா அவனை முறைத்தபடி கேட்டாள்.

“நான் பண்ணது தப்புக்கா, மன்னிப்பு கேட்காம போனா, என் மனசு ஆறாது.”

“நீ உன் ஃபீலிங்கஸ குற்றவுணர்வுன்னு தப்பா நினக்கிறியோ?”

“அப்படி எல்லாம் இல்ல” அவன் மறுத்து சொல்ல,

“என்னவோ பெரிய கொலை கேஸோட மர்மத்தை கண்டுபிடிச்சி கரண் அண்ணாவ காப்பாத்தி வெளிய கொண்டு வந்திருக்க, உன்ன பெரிய புத்திசாலின்னு நினைச்சேன். இப்படி உன் மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்க முடியாத முட்டாளா இருப்பன்னு நான் நினைக்கல டா”

“…!?”

“சரி விடு, உன்ன பொறுத்தவரைக்கும் அவங்க யாரோ தான, எதுக்கு வீணா டென்ஷன் ஏத்திக்கற? டிஃபன் சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பற வழிய பாரு, நித்தி நாலு தடவை ஃபோன் பண்ணிட்டா”

அவனே உணராத ஒன்றை தன்னால் எப்படி புரிய வைக்க முடியும் என்ற எண்ணத்தில் ராதிகா மேலும் அதைப்பற்றி பேசாமல் அவனுக்கு காலை உணவு பரிமாறினாள்.

தன் அறைக்குள் வந்து படுத்த வெற்றிக்கு உடலும் மனமும் சோர்ந்து இருந்ததே தவிர தூக்கம் வருவதாக இல்லை.

இரவில் விழித்து வண்டி ஓட்டி வந்ததால் சற்று தூங்கினால் அவன் மனதும் அமைதியடையும் என முயற்சித்தான்.

இறுக மூடிய அவன் இமைகளுக்குள் நிலாவின் வெறுமை படர்ந்த முகம் தான் வந்து போனது.
அதோடு வேறொரு எண்ணமும் தோன்ற திடுக்கிட்டு எழுந்தான்.

நிலா எப்போதும் அவன் கண்களை பார்த்து தான் பேசுவாள் ஆனால் இன்று!
வெற்றியை அவள் நேருக்கு நேராய் நிமிர்ந்து பார்க்கவே இல்லை!

ஏன்? அவனுக்குள் கேள்வி எழ, பதிலும் அவனிடமே இருந்தது.

‘நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன் வெற்றி’
அன்று அவள் குரலில் இருந்த நெகிழ்ச்சி! இவன் மனதில் உண்டான எல்லையை கடந்த சந்தோசம்! இப்போதும் அவன் நினைவில் எழுந்தது.

இத்தனை நாட்கள் யோசிக்க மறந்த ஒன்றை இப்போது அலச ஆரம்பித்தது அவன் மூளை.

முன்பு, எப்போதும் அவன் எண்ணம் முழுவதும் கொலை வழக்கைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் மற்றதை பற்றி அவன் யோசிக்க மறந்தான்.

நிலாவின் அருகாமையில் சில தருணங்களில் அவன் கிறங்கி போயிருந்தாலும் பிறகு அதைப் பற்றி யோசிக்க அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை.

இந்த நான்கு வருட மேனாட்டு வாழ்க்கை முறையில் பெண்களிடம் பழகுவதில் அவன் ஒன்றும் பெரிதாய் எல்லைகளை வகுத்து கொள்ளவில்லை.
எனவே காதல் என்ற உணர்வின் ஆழத்தை அவன் உணர்ந்து இருக்கவும் இல்லை.

இப்போது அவன் மனம் அடித்து சொன்னது இது காதலென்று!

குற்றவாளி என்ற எண்ணத்தை தாண்டியும் நிலா மீது தனக்கு ஏற்பட்ட கரிசனத்து காரணம்?

நிலாவின் உதாசீதனத்தை தாங்க முடியாமல் சீறிய தன் ரோஷத்தின் காரணம்?

நிலாவின் நம்பிக்கையை பெற்ற போது தனக்குள் ஏற்பட்ட நிறைவு!

நிலா காதலை வெளிப்படுத்தியவுடன் தன்னுள் எழுந்த களிப்பு!

நிலா கொலை செய்யவில்லை என்று அறிந்ததும் தன்னுள் ஏற்பட்ட நிம்மதிக்கு காரணம்!

சட்டென, வெற்றி வேந்தனின் கண்கட்டு கிழிந்து போனது. ஒற்றை கையால் தன் முகத்தை மூடிக் கொண்டவன் அசடு வழிய சிரித்து விட்டான்.

வெண்ணிலாவின் குடும்பத்தின் மீது வலுக்கட்டாயமாக அவன் எடுத்து கொண்ட உரிமை நினைவுக்கு வர,
‘அவளையும் அவ குடும்பத்தையும் எப்ப எனக்கானதா  நினைக்க ஆரம்பிச்சேன்?’ அவன் மனதின் கேள்விக்கு அவன் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

வெற்றியின் கைப்பேசி சிணுங்க, எடுத்து காதில் ஒற்றினான்.

“நித்தி நானே உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்” என்றான் குழைவான குரலில்.

“விடிஞ்சா ஃபிளைட் டா, இன்னும் என்ன பண்ற அங்க?” நித்ய பாரதி ஆதங்கமாகவே கேட்க,

“உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்”

“நீ முதல்ல கிளம்பி வா, அப்புறம் மத்த விசயம் எல்லாம்”

“ம்ஹூம் இப்ப என்னால வரமுடியாது. நீங்க ரெண்டு பேரும் உடனே இங்க கிளம்பி வாங்க.”

“என்ன வெற்றி, விளையாடற?”

“இல்லயே” என்ற வெற்றி தன் முக்கியமான விசயத்தை தமக்கையிடம் விளக்க, நித்யா முதலில் அதிர்ந்து தான் போனாள்.

“அடா பாவி…!”

“மாம்ஸ கூட்டிட்டு உடனே கிளம்பி வர வழிய பாருக்கா” என்று முகம் கொள்ளா சிரிப்போடு ஆணையிட்டு வைத்தான்.

தன் காதலை உணர்ந்துவிட்ட சந்தோசத்தில், அவன் மனம் பட்டாம்பூச்சி கூட்டத்தை கண்டுவிட்ட சிறு குழந்தையாய் துள்ளி குதித்து கொண்டு இருந்தது.

தான் வேலை பார்க்கும் கம்பனிக்கு உடனே மெயில் அனுப்பினான்.
‘தன் திருமணம் உறுதியான காரணத்தால் தன் விடுமுறை நாட்களை அதிகமாக்கும் படி!’

# # #

இந்த கும்மிருட்டு வேலையில், அவளின் மனம் கரடு முரடான பாதையில் ஓடும் நதியை போல சலசலத்து கொண்டிருந்தது.
அவளருகில் சுவாதி, கற்பகத்தை ஒட்டிக் கொண்டு உறங்கி போயிருந்தாள்.

இன்று காலை வெற்றி வேந்தன் வந்து போன நிகழ்வே, வெண்ணிலாவின் நினைவலையில் மோதிக் கொண்டிருந்தது.

‘ஏன் வந்தான்?’ ‘ஏன் போனான்?’

விடையில்லை அவளிடம். விடை காண வேண்டிய தேவையுமில்லை அவளுக்கு.

எழுந்து பால்கனியில் வந்து நின்றாள்.

இரவு வானம் முழுக்க உதிர்ந்து கிடந்தன நட்சத்திர வெண் பூக்கள்!
வான் நிலாவின் விடுமுறை நாளின்று!

அவன் தந்து சென்ற காயத்தில் ரத்தக் கசிவில்லை. இருந்தாலும் வலிக்க தான் செய்தது!

அவன் தன் வாழ்வில் வருவதற்கு முன்பு தன் மனம் இருந்த அமைதி நிலையை வேண்டி நின்றாள் அவள்!

இன்று சுவாதியின் கோபம் தீர வெகு நேரமானது. நிலாவின் எந்த சமாதானத்தையும் அவள் ஏற்கவில்லை.

‘அப்பா, என்னைவிட்டு போக மாட்டாரு தான?’
இந்த ஒரே கேள்வியைத் தான் திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்தாள்.

ஏதேதோ சொல்லி, அவளை பூங்காவிற்கு அழைத்து சென்றனர்.  சர்க்கஸ் செல்லும் மனநிலை அவர்களில் யாருக்கும் இருக்கவில்லை.

‘எப்படியோ இந்த நாள் கழிந்தது!’ என்று எண்ணி அவள் மனம் அமைதியடைய,

‘இனி, அவன் இல்லாத ஒவ்வொரு நாட்களையும் இப்படித்தான் எண்ணி எண்ணி கழிக்க போகிறாயா?’
என்ற புத்தியின் கேள்வி அவளை துணுக்குற செய்தது.

# # #

பரபரப்பான திங்கள் காலையில், அந்த வீடு மட்டும் மந்த நிலையில் இருந்தது.

வழக்கமான காலை காஃபியின் சுகமான மணம் அங்கு பரவவில்லை.

குளித்து முடித்து கீழே வந்த வெண்ணிலா, பால் காய்ச்சபடாமலே இருக்க, காலையிலேயே கவலையோடு அமர்ந்திருந்த கற்பகத்தை கவனித்தாள்.

தானே காஃபியை கலந்து தன் அம்மாவிடம் கொடுத்து விட்டு, தானும் பருகினாள்.

“நான் இன்னைக்கு சமையலை பார்த்துக்கிறேன். நீ போய் சுவாதிய ரெடி பண்ணும்மா. அப்புறம் ஸ்கூலுக்கு நேரமாயிட போகுது” என்று பேத்தியிடம் அவரை துரத்திவிட்டாள்.

இட்லி, தேங்காய் சட்னி, மதிய வேளைக்கு கலவை சாதம் என்று செய்து முடித்துவிட்டு மேலே வர, பாட்டியும் பேத்தியும் கட்டிலில் முகத்தை தொங்க போட்டு கொண்டு அமர்ந்திருந்தனர்.

அதுவும் சுவாதி சம்மணமிட்டு கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து இருந்த தோரணை கண்டு, நிலாவிற்கு சிரிக்க கூட தோன்றியது.

“இப்ப எதுக்காக ரெண்டு பேரும் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?” நிலா அவர்களை முறைத்த படி கேட்க,
இருவரும் நிமிர்ந்து பார்த்துவிட்டு, மறுபடி பார்வையை தாழ்த்தி கொண்டனர்.

“ரெண்டு பேரும் எழுந்து சீக்கிரம் ரெடியாகி கீழ வரணும் இல்ல…” நிலா எச்சரித்த பின்பும் அவர்கள் அசைவதாய் இல்லை.

“இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு?”

“அப்பா, ஃப்ளைட்ல போயிருப்பாரு இல்லம்மா”

சுவாதி சிறு குரலாய் கேட்க, நிலாவின் பார்வை நேரத்தை பார்த்தது.  கடிகார முள் எட்டை தாண்டி நகர்ந்து கொண்டிருக்க,

“அவன் எக்கேடு கெட்டு போனா உனக்கென்ன? வந்து ஒழுங்கா ஸ்கூலுக்கு ரெடியாகுற வழிய பாரு”
என்று குழந்தையை இழுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

கற்பகம் ஓர் ஆயாச பெருமூச்சோடு, கீழே வந்து காலை உணவை எடுத்து வைத்தார்.

அழைப்பு மணியோசை கேட்டு, அவர் வந்து கதவை திறக்க, எதிரே நின்ற தம்பதியை கேள்வியோடு பார்த்தார்.

“யாருங்க வேணும்?”

“வெண்ணிலாவ பார்க்கணும் ம்மா”
என்க, அவர்களை யோசனையோடு உள்ளே அழைத்தார்.

“இதோ நானும் வந்துட்டேன்” என்று வெற்றி வேந்தன் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, கற்பகம் புரியாமல் விழித்தார்.

அவரிடம் வந்தவன், “என்மேல கோபமெல்லாம் சரி, அதுக்காக என் ஃபோன கூட எடுக்க கூடாதா? எத்தனை முறை உங்களுக்கும் உங்க பொண்ணுக்கு கால் பண்ணறது”
பழைய வெற்றியாக உற்சாகமாக பேசியவனை மலங்க மலங்க பார்த்து நின்றார் அவர்.

“இது என்னோட அக்கா, இவர் எங்க மாமா. என் அம்மாவுக்கு நான் கொடுத்த முதல் சத்தியத்தை நிறைவேத்த வந்திருக்கேன். இப்பவாவது உள்ள விடுங்களேன் ம்மா” வெற்றி விளக்கி சொல்ல, பனிமூட்டம் விலகிய சூரினாக அவர் முகம் பிரகாசமானது.

அவன் தோளில் ஆதங்கமாக ஓர் அடி வைத்தவர், “இதை நேத்தே சொல்றதுக்கு என்னடா? நான் எவ்வளோ பயந்து போயிட்டேன் தெரியுமா?” என்றார்.

“ம்ம் நேத்து இங்கிருந்து போனதுக்கு அப்பறம் தான் என் தம்பிக்கு போதி மரத்தடியில ஞானம் கிடைச்சிருக்கும்மா, அதான்” வெற்றியை காரமாய் முறைத்துக் கொண்டே நித்ய பாரதி பதில் தந்தாள்.

நேற்று வெண்ணிலாவை பற்றி சொன்னதில் இருந்து வெற்றி அவளிடம் திட்டை மட்டுமே பாரபட்சமின்றி பெற்று கொண்டிருக்கிறான்.  இப்போதும் தன் அக்காவை பாவமாய் பார்த்து வைத்தான் அவன்.

கற்பகத்திற்கு வேறெந்த விளக்கமும் தேவைப்படவில்லை.  அவரின் வேண்டுதல் நிறைவேறிவிட்டது. மனம் நிறைந்து போக அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தார்.

வெற்றியின் பார்வை தன் நிலாவையும் சுவாதியையும் தேட, கரண் குமார் பேச்சை தொடங்கினான்.

“வெற்றிக்கு லீவ் அதிகமில்ல, அதனால, நீங்க சம்மதிச்சிங்கன்னா, சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சிடலாம். அப்பதான் உங்க எல்லாருக்கும் சீக்கிரம் விசா ஏற்பாடு பண்ண முடியும்.”

“எல்லாருக்குமா?” கற்பகம் வினவ,

“ஆமாம்மா, நீங்க வராம எப்படிம்மா? இனிமே, நீங்க, நிலா, சுவாதி எல்லாரும் என் பொறுப்பு” வெற்றி வேந்தன் உறுதியாக சொன்னான்.

“என்ன வெற்றி உளர்ற, நான் எப்படி?” அவர் தயங்கினார்.

“நான் சொன்னா சொன்னது தான் ம்மா, வர்ற வெள்ளிகிழமை கோயில்ல சிம்பிளா கல்யாணம் முடிச்சிக்கலாம். அன்னைக்கே மேரேஜ் ரிஜிஸ்டரேஷனும் பண்ணிடலாம் ஓகே வா!” அவன் ஜெட் வேகத்தில் சொல்ல, கற்பகத்தின் தலை லேசாய் கிறுகிறுக்க தான் செய்தது.

கீழே வெற்றியின் குரல் கேட்டு, வெண்ணிலா திடுக்கிட, சுவாதியின் முகம் மலர்ந்தது.

“ஐய்ய் அம்மா, அப்பா வந்தாச்சு” என்று குதித்தோடினாள்.

“அப்ப்ப்பா…! அப்ப்ப்பா…!” என்று அழைத்தபடி மேலிருந்து வந்த குழந்தையை வெற்றி, இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி தூக்கி கொண்டான்.

“என் சுவாதி குட்டிக்கு கோபம் போயிடுச்சா?” என்று கேட்க,

“ம்ம் இனிமே என்னை விட்டு போக மாட்ட தானப்பா?”

“ம்ஹூம் எங்க போனாலும் சுவாதி குட்டிய தூக்கிட்டு தான் ஓடி போவேன்” என்று சொல்லி அவன் சிரிக்க, சுவாதியும் கிளுக்கி சிரித்தாள்.

சுவாதியை பார்த்த நித்ய பாரதி, கரண் குமார் இருவரின் முகமும் கனிந்தது.

“இங்க பாரு வாண்டு, இது உன் அத்தை, அது உன் மாமா, சரியா” என்று வெற்றி, சுவாதிக்கு இருவரையும் அறிமுகப்படுத்தி கொண்டிருக்க,
அவர்களை கவனித்தப்படி வெண்ணிலா இறங்கி வந்தாள்.  வேலைக்கு செல்வதற்கு தயாராய் தன் தோளில் மாட்டிய கைப்பையோடு.

“நீ ரொம்ப அவசரபடற வெற்றி! நாலு நாள்ல எப்படி கல்யாணம்?” கற்பகம் பதைப்பதைப்பாக கேட்க,

“நான் என்னம்மா பண்ணட்டும்! அதுக்கு முன்னாடி எந்த முகூர்த்தமும் இல்லையாம்!” வெற்றி சலிப்பாக பதில் தர, கற்பகம் சட்டென சிரித்து விட்டார்.

“யாருக்கு கல்யாணம்?” நிலாவின் கேள்வியில் அனைவரின் பார்வையும் அவள் மீது விழுந்தது.

நித்ய பாரதியின் பார்வை அவளை அளவெடுக்க, வெற்றி வேந்தன் சற்று எச்சரிக்கையோடு அவளிடம் வந்தான்.

“நமக்கு தான் நிலா!” என்றான் மென்மையாய்.

நிலாவின் முகம் கடுகடுத்து.
“உனக்கு கொஞ்ச கூட அறிவே கிடையாதா? என்னை கேட்காம என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவியா நீ?” என்று ஆத்திரமாக கேட்டாள்.

“ஏன் நிலா? உனக்கு என்னை பிடிக்கலையா?”

“இல்ல, சுத்தமா பிடிக்கல, மறுபடி எந்த சீனும் கிரேட் பண்ணாம முதல்ல இங்கிருந்து கிளம்பு” நிலா அழுத்தமாய் சொல்ல, வெற்றி விக்கித்து தான் போனான்.

வெண்ணிலாவின் இந்த தடாலடி பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.

“என்ன நிலா இது? பெரியவங்க முன்னாடி இப்படி தான் மரியாதை இல்லாம பேசறதா?” கற்பகம் தன் மகளை கண்டிக்க,

“சாரி, எனக்கு வேலைக்கு நேரமாச்சு நான் கிளம்பணும்” என்று அவர்களிடம் மன்னிப்பு கோரியவள், “சுவாதி வா, ஸ்கூல் போகணுமில்ல” என்றழைத்தாள்.

“அம்மா, இன்னைக்கு அப்பா கூட” என்று சுவாதி வெற்றியின் காலை கட்டிக்கொள்ள, அதற்கும் சேர்த்து அவனை தீப்பார்வை பார்த்து விட்டு, சமையலறைக்குள் சென்றாள் தனக்கான மதிய உணவை எடுத்து வைக்க.

வெற்றியோடு சேர்ந்து அங்கு அனைவரின் முகமும் அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்த, நித்ய பாரதியின் இதழில் மட்டும் மெச்சுதலான புன்னகை வந்து போனது.

தேடல் நீளும்…

error: Content is protected !!