யாரோ அவன்? 22 (ஈற்றயல் பதிவு)
“என்ன நினச்சிட்டு இருக்கான் மனசுல இவன்? பெரிய மன்மதன்னு நினப்போ? சரியான இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருந்துகிட்டு!
அவன் மூஞ்சையும் முகறையும்!”
வெண்ணிலா வாயில் வந்த வார்த்தைகளை முணுமுணுத்து கொண்டு, மதியத்திற்கான உணவை மேலும் கீழும் சிந்திட டப்பாவில் போட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் நெஞ்சம் உலை கலம் போல கொதித்து கொண்டிருந்தது.
“என்னை பார்த்தா அவனுக்கு எப்படி இருக்கு? என்னை பத்தி என்ன நினச்சிருக்கான் அவன்? வெணுன்னா லவ் யூ ன்னு சொல்வானாம்! இல்லனா சாரி கேட்டு இளிச்சிட்டு போவானாம்!
இப்ப என்ன? கல்யாணம்னு புது டிராமா பண்ண வந்திருக்கான்?
லூசு! மென்டல்! அரை கிறுக்கு!
பொறுக்கி! ராஸ்கல்! இடியட்!
தில்லாலங்கடி! திருட்டு பையன்!
…! …! …!”
அவளின் திட்டுகள் அவனை கிழித்து கொண்டிருக்க,
“இப்படி இன்னும் எவ்வளவு நேரம் என்னை திட்டினா, உன்னோட கோபம் குறையும் நிலா?”
வெற்றி சமையல் நடை வாயிலில் கைகட்டி நின்று கொண்டு, அவளிடம் நிதானமாகவே கேட்டான்.
‘வேறு வழி?’
வெண்ணிலா அவனை முறைத்து பார்த்து, “ஏன் டா? உனக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமே கிடையாதா? மறுபடியும் எந்த தைரியத்தில என் முன்னாடி வந்து நிக்கற?”
“ம்ம் உன்ன கல்யாணம் பண்ணனும்னே முடிவு எடுத்துருக்கேன். இதுக்கு மேல என் தைரியத்துக்கு என்னடி சாட்சி வேணும்?”
“நீ மட்டும் முடிவு பண்ணா போதுமா? எல்லாம் அப்படியே நடந்துடுமா? திமிரு, தான்ற திமிரு டா உனக்கு.”
“நீ எப்படி வேணுன்னா வச்சுக்கோ, முதல்ல வந்து கல்யாணத்துக்கு ஓகே சொல்லுடி. அப்புறம் பொறுமையா நாம சண்ட போட்டுக்கலாம்!”
“ச்சே போடா, உன்ன எல்லாம் திருத்தவே முடியாது.”
“நிலா, அக்காவும் மாமாவும் உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க. திஸிஸ் த லிமிட்”
என்று அவன் பொறுமை இழந்து எச்சரிக்க,
“என் லிமிட்ட நீ டிசைட் பண்ணாத, இந்த கல்யாணத்துக்கு என்னால சம்மதிக்க முடியாது போடா” அவளும் அழுத்தமாக மறுத்து பேசினாள்.
“ம்ஹும் இது வேலைக்கு ஆகாது” என்று அவன் விரைவாக அவளை நெருங்க, வழக்கம் போல காய் அரியும் கத்தியை கையில் எடுத்து கொண்டவள்,
“பக்கத்தில வந்த மவனே, எக்குதப்பா கிழிச்சிடுவேன் ஜாக்கிரதை” என்று மிரட்டினாள்.
தன் பழைய நிலா அவன் முன் வந்து நிற்க, அவனிதழில் மென்னகை விரிந்தது ரசனையோடு,
“ஏய் போதும் டீ, நான் ஏடாகூடமா ஏதாவது செஞ்சிட போறேன்” என்று அவன் கண்ணடிக்க,
“அந்த கண்ண அப்படியே நோண்டி கைல கொடுத்துடுவேன், பாத்துக்க” அவனின் எந்த ஜாலத்திற்கும், அவள் இறங்கி வருவதாய் இல்லை.
“ம்ம் அப்பறம் என்னை, என்னவெல்லாம் பண்ணுவ நிலா?” அவன் ஆவலாய் கேட்க,
கையிலிருந்த கத்தியை கீழே வீசியவள், “நமக்குள்ள எப்பவும் ஒத்து வராது. என்னை இன்னும் கோப படுத்தாம, இங்கிருந்து போயிடு” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.
“சரி, உனக்கு என்மேல இருக்க கோபம் தீரல. அதுக்காக சுவாதியும் அம்மாவையும் கஷ்டபடுத்துவியா? நாம பிரிஞ்சா அவங்களால தாங்க முடியுமா? நீயே யோசிச்சு சொல்லு”
வெற்றி சரியான இடத்தில் அவளுக்கு கொக்கி போட்டான்.
அவள் பதிலின்றி நிற்க, “ஏய், நாம சண்ட போட்டு தீர்த்துக்க, லைஃப் லாங் இருக்கு டி. இப்ப வந்து சம்மதம் சொல்லு டி” என்று கொஞ்சலாய் சொன்னான்.
“உன்னோட பொருந்தி வாழ முடியும்னு எனக்கு தோணல!” நிலா இப்போதும் பிடிவாதமாக பதில் தர,
“என் அழகு ராட்சசி, நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் மறுக்காம ஏத்துக்கிறேன் டி, ஓகே மட்டும் சொல்லுடி, ப்ளீஸ்” வேறுவழியின்றி வெற்றி தன் கெத்தைவிட்டு கெஞ்சலானான்.
வெண்ணிலா தீவிரமாய் யோசிக்க, வெற்றி ‘அவள் என்ன சொல்வாளோ?!’ என்று பார்த்து நின்றான்.
“ம்ம் சரி, சுவாதிக்காக தான இந்த கல்யாணம், அதனால, நமக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் நீ எதிர்பார்க்க கூடாது. அப்படின்னா எனக்கு சம்மதம்” வெண்ணிலா சாதாரணமாக சொல்ல விட,
“ப்போ போடீ, நீயும் உன் கல்யாணமும்” வெற்றி பற்களை கடித்து கொண்டு சொன்னான்.
“இந்த கண்டிஷன் ஓகேன்னா கல்யாணம். இல்லன்னா போடா”
அவளும் பிடிவாதமாக நின்றாள்.
“ப்போடி போடீ, உன்னவிட்டா உலகத்தில வேற பொண்ணே இல்லன்னு நினச்சியா?” என்று திரும்பி நடந்தவன்,
“நான் என் சுவாதி குட்டிக்கு உன்னவிட சூப்பர் அம்மாவா ரெடி பண்ண்… ஏய்ய்ய்!” அவன் சொல்லி முடிக்கும் முன்னே, அவனை நோக்கி ஒரு கரண்டி பரந்து வர, சட்டென விலகினான். அது அவனை தாண்டி கீழே விழுந்தது.
வெற்றி அதிர்ந்து திரும்ப, ஆத்திரமாக அவள் கையில் கிடைத்த பாத்திரங்கள் எல்லாம் அவனை குறி வைத்து வீச பட்டன.
“ஏய்ய்ய்! இதெல்லாம் ரொம்ப ஓவர் டீஈஈஈ!” என்று அவள் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தடுக்க முயன்று கொண்டிருந்தான் அவன்.
பாத்திரங்கள் விழுந்து உருளும் கலகல சத்தம், கூடத்தில் இருந்த மூவருக்கும் கேட்க, முதலில் மிரண்டவர்கள், பின்னர் அடக்கமுடியாமல் வாய்விட்டு சிரித்து விட்டனர்.
கற்பகமும் சிரித்து விட்டார் தான் இருந்தாலும், “தப்பா எடுத்துக்காதீங்க, நிலாவுக்கு கொஞ்சம் வெற்றி மேல கோபம். அதான், மத்தபடி அவ நல்ல பொண்ணு தான்” என்று தயக்கமாக அவர்களிடம் சொன்னார்.
“இல்லம்மா, அவனுக்கு நல்லா வேணும். என்ன கொழுப்பு இருந்தா உங்க லைஃப்ல விளையாடி இருப்பான்” நித்ய பாரதி ஆதங்கமாகவே பதில் சொன்னாள்.
“ஷிவானி குழந்தையை கடத்தி வச்சு மிரட்டினான்னு தெரிஞ்சப்பவே, நான் அவன்மேல கோபபட்டேன். உண்மைய ஒத்துக்க வைக்க வேற வழி தெரியலன்னு சொன்னதால தான் விட்டேன்.”
“இங்க என்னடான்னா உங்க எல்லார்கிட்டையும் நடிச்சு ஏமாத்தி இருக்கான். நான் அவனை அடிச்சு வளர்க்கல. எல்லாத்துக்கும் சேர்த்து ஒண்ணா வாங்கட்டும் அப்ப தான் அவனுக்கும் புத்தி வரும்!” என்று சொல்ல கரணும் அவர்களுடன் சேர்ந்து சத்தமாக சிரித்தான்.
இத்தனை தில்லாலங்கடி வேலையெல்லாம் தனக்காக தான் செய்திருக்கிறான் என்பது நன்றாகவே புரிந்தும் கூட அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தன் அப்பா, அம்மாவின் சண்டையை பார்க்க ஆவலாய் சென்ற சுவாதியை, நித்யா தூக்கி கொண்டு அவளிடம் பேச தொடங்கினாள்.
சமையலறை முழுதும் பாத்திரங்கள் இறைந்து கிடந்தன. ஆனாலும் வெண்ணிலாவின் ஆத்திரம் தீரவில்லை, அவனை பார்வையால் எரித்து கொண்டு நின்றாள்.
“எம்மா! பரதேவதை! கொஞ்சம் மலை இறங்கி வாம்மா! சும்மா பேச்சுக்கு சொன்னதுக்கு இத்தனை கலவரமா?” என்று அவனும் ஆயாச மூச்சு வாங்கினான்.
“வேணா, அப்புறம் நான்!” நிலா அவன் முன் ஒற்றை விரல் காட்டி மிரட்ட, அவள் விரலை பிடித்து கொண்டு, “போதும் நிலா, எல்லாரும் இருக்காங்க வெளியே, ப்ளீஸ், புரிஞ்சிக்க டி!”
வெற்றி கெஞ்ச, நிலாவிற்கும் தன் செயல் சிறு பிள்ளை தனமாய் தோன்றியது.
எப்போதும் போல இப்போதும், அவன் முன் தன்னால் நிதானமாக எதையும் யோசிக்க முடியாமல், அலப்பறை செய்து விட்டது புரிய, அவள் பார்வை தாழ்ந்தது.
“கடவுளே, இப்பவாவது சமாதானம் ஆச்சா, தப்பிச்சேன்!” என்றான்.
“ரொம்ப சந்தோச படாத, முதல்ல உன் நிஜ பேர் என்னன்னு சொல்லு?”
என்று நிலா மேலும் கடுப்படிக்க, அவன் விளங்காமல் விழித்தான்.
“என்ன?”
“ம்ம் உன் பேரு வெற்றியா? இல்ல, விக்டரா?”
இத்தனை நாட்கள் அவள் மனதை அரித்து கொண்டிருந்த கேள்வியை கேட்டாள்.
தன் மனம் நேசிக்கும் அவனின் உண்மை பெயர் கூட தெரியாத நிலை, அவளை உள்ளுக்குள் கலங்க வைத்திருந்தது.
“ஏய், ரெண்டும் தான்!” அவன் மென்னகையோடு பதில் தர,
“ஒழுங்கா சொல்லி தொலை டா!” என்று அவன் மார்பில் இடது கையால் ஒரு குத்து வைத்தாள்.
“அவ்ஃப், வீட்ல வச்ச பேரு ‘வெற்றி வேந்தன்’ ஃபாரின் ஜாப்காக ‘விக்டர்’ன்னு மாத்திகிட்டேன் டி! பர்ஸ்னலா தெரிஞ்சவங்க என்னை ‘வெற்றி’ன்னு கூப்புடுவாங்க! அஃபிஷியலா தெரிஞ்சவங்க என்னை ‘விக்டர்’ன்னு கூப்பிடுவாங்க” வலித்த தன் மார்பை தேய்த்து கொண்டே அவன் விளக்கம் தர,
நிலா, “பேர கூட குழப்பற மாதிரியே வச்சிருப்பியா டா நீ?” என்றாள் சலிப்பாய்.
அவன் பற்றி இருந்த, அவளின் ஒற்றை காந்தல் மலர் விரல் நுனியில் முத்தமிட்டவன், “லவ் யூ டி, இப்ப கல்யாணம் பண்ணிக்கலாமா, பொண்டாட்டி” அவன் முகம் முழுவதும் காதலின் பரவசத்தில் மலர்ந்திருக்க கேட்டான்.
வெண்ணிலாவின் நிலா முகத்திலும் மென்மை பரவியது.
இதழ்களை மடித்து கொண்டு, இமைகளும் மூடி இருக்க, மிளிர்ந்த நாணத்தோடு மெல்ல தலையசைத்து, மௌன சம்மதம் தந்தாள் அவள்.
இது போதுமே அவனுக்கு.
வெற்றி வேந்தன் அவன் குறித்த அதே முகூர்த்தில் திருமணத்தை முடித்து, அன்றே திருமண பதிவையும் செய்து விட்டான்.
அன்று மாலையே அவர்கள் திருமண வரவேற்பு விமர்சியாக நடந்து முடிய, தன் குடும்பத்தை தன்னோடு நாடு கடத்தி செல்ல வேண்டுமென முழு முயற்சியில் ஈடுபட்டிருந்தான் அவன்.
‘ச்சே, என் மர மண்டைல முதல்லயே இது தோனியிருந்தா, இந்நேரம் விசா கிடைச்சிருக்கும்’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டு,
தன் காதல் மனைவியையும், ஆசை மகளையும், அன்பு அம்மாவையும் பிரிந்து, மனமே இல்லாமல் தன் வேலைக்காக பறந்து சென்றான் வெற்றி வேந்தன்.
அவன் விடுமுறை நாள் நாளையோடு முடிவடைகிறது!
தேடல் நீளும்…