Yaaro Avan 23 final

Yaaro Avan 23 final

யாரோ அவன்?(நிறைவு)

வெற்றி வேந்தனின் மார்பை மெத்தையாக்கி, அதன் மேல் உறங்கி போயிருந்தாள் சுவாதி.

பால் டம்ளருடன் அறைக்குள் நுழைந்த வெண்ணிலா, அப்பாவும் மகளும் உறங்கும் அழகை சின்ன சலிப்புடன் பார்த்தாள்.

“என்ன வெற்றி இது! எத்தனை முறை சொல்லி இருக்கேன், சுவாதியை இப்படி தூங்க வைக்க கூடாதுன்னு!” நிலா சொல்ல, அவன் மெலிதாய் புன்னகைத்தான்.

“ப்ச் அப்புறம் அவளுக்கு இதே பழக்கம் வந்திடும்! நீங்க இல்லன்னா தூக்கம் வரலன்னு அடம்பிடிப்பா!” நிலா அழுத்தமாய் சொல்ல,

“கதை சொல்லிட்டு இருந்தேன், அப்படியே தூங்கிட்டா! சரி, இனிமே இப்படி பழக்க படுத்தல முறைக்காதடி!” என்று மனைவியின் பேச்சை அப்படியே ஒத்துக் கொண்டான்.

நிலா பால் டம்ளரை மேசை மேல் வைத்துவிட்டு, அவன் மேலிருந்த சுவாதியை தூக்கி கொண்டு திரும்ப,

“ஏய், குழந்தையை எங்க தூக்கிட்டு போற?” என்று வினவினான்.

நிலா திரும்பி நெற்றி சுருக்கி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு  வெளியேறினாள்.

கற்பகத்தின் அறையில் சுவாதியை கிடத்தி விட்டு, அம்மாவிற்கும் பெண்ணிற்கும் கன போர்வை போர்த்தி விட்டு குழந்தையின் நெற்றி வருடி, இரவு முத்தம் வைத்து விட்டு வந்தாள்.

இதோ இவர்கள் கனடா வந்து பத்து மாதங்கள் சென்றிருந்தன.

புது நாடு, புதிய பழக்கவழக்கங்கள், புதுவிதமான உணவுமுறை, முற்றிலும் முரண்பாடான காலநிலை, நேர மாற்றம்! இத்தனையும் கொஞ்ச கொஞ்சமாய் பழகி, இப்போதுதான் சற்று அங்கு போருந்தி இருக்கின்றனர்.

இந்த நாட்டின் பிரம்மாண்டம், பரபரப்பு எல்லாமே இப்போது சற்று வழக்கமானதாக தோன்றி இருந்தது.

வெற்றியின் டபுள் பேட் ரூம் ஃப்ளாட் இருபத்து மூன்றாவது மாடியில் உள்ளது என அவன் சொன்னபோது நிலாவின் கண்களும் வாயும் ஒன்றாய் விரிந்தன.

இந்த உயரம் முதலில் அசௌகர்யமாக இருந்தாலும், போக போக பழகி போய் விட்டது.

அதுவும் இப்படி கண்ணாடி சன்னல் வழியாக வெகு தூரம் வரை இரவில் வண்ணமயமாய் மினுமினுக்கும் மின்மீன்களை ரசிப்பது தனி அலாதி தான்.

கூடத்தின் விளக்கை அணைத்து விட்டு, சன்னல் திரையை விலக்கி, கண்முன் விரிந்த காட்சியில் லயித்து நின்றாள் வெண்ணிலா.

இங்கு வந்த பிறகு முதன் முதலாய் வெற்றி, அவள் கண்களை மூடி, சன்னல் திரையை விலக்கி, அந்நாட்டின் இரவு நேர பிரம்மாண்ட அழகை காட்டி அவளை பிரமிக்க வைத்தான்.

அப்போதிருந்து உறங்குவதற்கு முன்பு சிறிது நேரம் சன்னல் வழியே இரவை ரசிப்பது வெண்ணிலாவிற்கு வழக்கமாகி போயிருந்ததது.

திண்மையான கைகள் அவளின் மெல்லிடையை பின்னிருந்து அணைக்க, தன்னவனின் அருகாமையில் அவள் இமைகள் மெல்ல மயங்கின.

“நிஜமாவே முடிஞ்சுடுச்சா!” வெற்றியின் குரல் அவள் காதருகே கிசுகிசுத்தது.

“இதை கூட கணக்கு வச்சிக்கலையா நீ! போடா!” அவள் செல்ல கோபம் காட்ட,

“ப்ச் நான் என்னடி பண்ணட்டும்! எவ்வளோ கஷ்டமான கணக்கானாலும் டேலி பண்ணிறேன்! ஆனா, இந்த மூணு நாள் கணக்கை மட்டும் விட்டுறேனே!” என்று வெற்றி அவள் விரிந்த கூந்தலுக்குள் முகம் புதைக்க,

“ம்ம் நிஜமாகவே பொண்டாட்டி மேல ஆசை இருந்தா எப்படி மறக்கும்?” வெண்ணிலா அவனை நொடித்து கொண்டாள்.

அவளை தன் பக்கம் திருப்பியவன், “எனக்கா டீ உன்மேல ஆசையில்ல! வாடி, உம்மேல எவ்ளோ ஆசை வச்சிருக்கேன்னு இப்ப காட்டறேன் உனக்கு!” என்று அவளை அப்படியே தூக்கி தோளில் இட்டு கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

“டேய், பொறுக்கி மாதிரி பிஹேவ் பண்ணாத இறக்கி விட்றா என்னை!”
என்று அவள் திமிர, அவன் கட்டிலில் அவளை பொத்தென்று போட்டான்.

விழுந்த வேகத்தில் அவள் முகம் சுருங்கி முறைக்க, அதை பார்த்து வெற்றி வாய்விட்டு சிரித்து விட்டான்.

“ஷ்ஷு சத்தம் கேட்டு சுவாதி முழுச்சிகிட்டா நீ தான் பொறுப்பு!” நிலா எச்சரிக்க, அவன் கப்பென்று வாய் மூடிக் கொண்டான்.

பூனை போல நடந்து சென்று கதவை சாற்றி தாழிட்டவன், நல்ல பிள்ளையாய் வந்து தன்னவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

“வர வர நீ கூட சுவாதி மாதிரி குழந்தை தனமா நடந்துக்க ஆரம்பிச்சிட்ட வெற்றி!” என்றாள் அவன் கேசத்தை விரல்களால் அலைந்தபடி,

அவன், “ம்ம்!” என்று அவள் மணி வயிற்றில் முகம் புதைக்க, “படவா!” என்று அவன் தலையில் தட்டினாள்.

தலை உயர்த்தி அவள் முகத்தை பார்த்தவன், “நிலா, இங்க பாப்பா வந்தா உன் குட்டி வயிறு பெருசா ஆகிடும் இல்ல!” என்று அவள் வயிற்றை முட்டி சிறு பிள்ளை தனமாக வெற்றி கேட்க, வெண்ணிலா அவனை வினோதமாய் பார்த்தாள்.

“என்ன சாருக்கு குழந்தை ஏக்கம் வந்திடுச்சோ? அதான் நமக்கு சுவாதி இருக்கா, இல்லடா, பின்ன என்ன?”
நிலா வினவ,

“அச்சோ நிலா, நான் கேட்டதே சுவாதி குட்டிக்காக தான்!” என்று நேராய் எழுந்து அமர்ந்து கொண்டான்.

“என்ன!”

“ம்ம் அவளோட ஃப்ரண்ட் ஜெனிக்கு குட்டி தம்பி பாப்பா இருக்கானாம்! ‘எனக்கு எப்ப ப்பா தம்பி பாப்பா வருவான்னு’ எங்கிட்ட கேக்குறா!”
வெற்றி சொல்லிவிட்டு உதட்டை பிதுக்கினான்.

வெண்ணிலாவிற்கு சிரிப்பு தான் வந்தது.  கண்களை மூடிக்கொண்டு சிரித்து விட்டவள், “ஆமா வெற்றி, அம்மா கூட சொன்னாங்க, தினமும் சாமி படத்துக்கு முன்னாடி போய் நின்னுகிட்டு, ‘எனக்கு சீக்கிரம் தம்பி பாப்பா வரணும்’னு வேட்டிட்டு இருக்களாம்!” என்று சொல்லி மேலும் சிரிக்க, வெற்றியும் அவளுடன் சேர்ந்து சிரித்து விட்டான்.

முதல் முதலில் வெண்ணிலா உடன் சுவாதியை அவன் கோயிலில் பார்த்த போது, அவள் சின்ன கைகள் கூப்பி, கடவுளிடம் தனக்கு ‘அப்பா’ வேண்டும் என முணுமுணுப்பாக வேண்டிக் கொண்டது! இப்போதும் அவன் நினைவில் பசுமையாய் வந்து போக அவன் முகம் கனிந்தது.

“சுவாதி முன்ன கூட, ‘அப்பா’ வேணும்னு வேண்டிகிட்டா இல்ல”
வெற்றி நினைவு கூற, நிலாவும் நெகிழ்ச்சியாய் ஆமோதித்து தலையசைத்தாள்.

அவள் செல்ல மகளின் அன்றைய வேண்டுதல் நிறைவேறி விட்டது அல்லவா.

வெண்ணிலா நிறைவோடு தன்னவனின் மார்பில் அடைக்கலமானாள்.

அவளை தன்னோடு சேர்த்து மென்மையாய் அணைத்துக் கொண்டவன், “சின்ன வயசுல இருந்தே, ஒரு முழு குடும்பமா வாழற இந்த சந்தோசம் எனக்கு கிடைச்சதே இல்ல நிலா!” வெற்றி இயல்பாய் பகிர்ந்து கொண்டான்.

“நீ, சுவாதி, அம்மா எல்லாரும் வந்து  என்னோட அரைகுறை வாழ்க்கைய முழுமை ஆக்கிட்டிங்க” வெற்றி மேலும் நெகிழ்வோடு சொன்னான்.

“ம்ம் அப்பறம்” நிலாவும் சுவாதியைப் போல அவனிடம் கதை கேட்க, அவள் நெற்றியில் செல்லமாக முட்டினான்.

அவனின் ஓயாத வேலை நேர மன அழுத்தத்தை போக்கும் அருமருந்து தன் காதல் மனைவியின் அருகாமை மட்டும் தான் அவனுக்கு.

முன்பெல்லாம் சின்ன வருத்தம் என்றாலும், பெரிய சந்தோசம் என்றாலும் கூட அவன் நாடிச் சென்றது மது போதையைத்தான்! இப்போதெல்லாம் அதன் நினைவு கூட வருவதில்லை அவனுக்கு.

தன் ஆசை மனைவியின் காதல் கணவனாய்! தன் குட்டி மகளின் கண்ணியமான தந்தையாய்! தன் அம்மாவின் பாசமான மகனாய் அவன் தன்னை வகுத்து கொண்டிருந்தான்.

“எல்லாருக்கும் தப்பு, தவறு செஞ்சா தண்டனை தான்டி கிடைக்கும்! ஆனா, எனக்கு மட்டும், வரமா நீ கிடைச்சிருக்க நிலா, லவ் யூ டீ” என்ற தன் கணவனின் இறுக்கமான காதல் அணைப்பில் அவள் கட்டுண்டு போயிருந்தாள்.

மறுநாள் காலை, பள்ளி செல்லும் வேளையில், சுவாதி முதல் வேலையாக சாமி படத்தின் எதிரே நின்று, குட்டி கைகள் கூப்பி, இறுக கண்கள் மூடி, அவள் ரகசியமாய் வேண்டிக் கொள்வதை மூவருமே ரசனையும் சிரிப்புமாக கவனித்தனர்.

அப்போதே வெற்றி நிலாவை குறும்பாய் பார்த்து வைக்க, என்ன முயன்றும் முடியாமல் அவள் முகத்தில் வெட்க திரை படர்ந்தது.

முற்றும்

error: Content is protected !!